
ஆங்கிலேயப்பிரபுவின் அரண்மனை நோக்கி
நடந்துபோகிறான் எட்டப்பன்
அவன் காலடியில் கொட்டுகின்றன
தங்க நாணயங்கள்
ஆனால் அதன்பால் ஓடிய இரத்தஆறு
பின்னர் வரலாறு
பண்டாரவன்னியனின் பரணிபாடும்
வன்னிக்காடுகளின் மரப்பட்டைகளுக்குள்
இன்னும் காக்கைவன்னியன் ஒளிந்திருக்கிறான்
வரலாற்றை மெல்லத்தடவிப் பார்க்கிறேன்
அதன் நியாயத்தராசு இன்றுவரை
ஏனோ சரியாய் இருந்ததில்லை
சரித்திரத்தில் ஒரு மாவீரனை
பிரசவிக்கும் வரலாறு
பின்பக்கமாய் ஒரு புழுவையும் துப்பிவிடுகிறது
அதன் வலி துளித்துளியாய் சிதறிக்கிடக்கிறது.
இது காலக்காகிதத்தில்
ஆங்காங்கே தெறித்திருக்கும் கறுப்பு மை
ஒரு இன முரண்பாட்டின்மேல் திணிக்கப்பட்ட
மைய இழை
வரலாற்றின் வீதிவழியே
மெல்ல சுவாசித்தால்;
காலம் புரிந்த பலாத்காரத்தின் வடு புரியும்
துரோகத்தனங்கள் நெருஞ்சிகளாய்
துருத்திக்கொண்டிருப்பது
தெரியும்
யார் இவர்கள்
இழிதொழில்தொங்கும் மரங்காய்ச்சிகள்
மரணக்காற்றோடு கைகோர்த்து நகர்வலம் வருவார்கள்
இரத்தக்கறைகளிலிருந்து வெள்ளிக்காசை எண்ணுகிறார்கள்
தமிழ் பக்கங்கள் ஒவ்வொன்றிலும்
ஒரு சிவப்புச்சாயம் பூசப்பட்டிருக்கிறது
இந்த மொழி விபச்சாரர்களின் கைகளினால்
பூமி சிதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது
இதோ
இந்த நூற்றாண்டின் துரோகம்
அந்தத் தீவிற்குள் மெல்ல நுழைகிறது
கூடு அறுக்கப்பட்டது
அடுத்தடுத்து நடந்தவை காலத்தின் கண்ணாடி
மரபறுந்த அணுக்களுடன் வரலாறு புணரும்போது
இந்த நீலிகள் ஜனிக்கிறார்கள்
அதனால் பிறப்பு வேரறுந்துபோகிறது
வரலாற்றுப் புத்தகத்தில் பின்நோக்கி மெல்ல நடக்கிறேன்
சதைகளும் பிணங்களுமே பக்கங்களில் கிடக்கிறது
போர் முழக்கம் இல்லாத காற்றழுத்தம் இல்லையங்கே
காலப்பூதத்தின் மார்பை
என் கூரிய நகங்களால் கிழித்தெறிந்தபடி நடக்கிறேன்
வரலாறே
நீ படைப்பதை நிறுத்திவிடு
இல்லையேல் சரித்திரத்தை அழித்துவிடு
-சாமிசுரேஷ்