Saturday, September 04, 2010

கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கராக பொது வாழ்வில் நுழைந்து, அனைவராலும் வேறுபாடின்றி 'பெரியார்' என்று ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு அவர் உயர்ந்தது ஓரிரவில் நடந்த மாயம் அல்ல.

ஆதிக்க சாதியை சேர்ந்ததாக அறியப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆணாகப் பிறந்து தன் நேர்மையான பார்வையாலும் சுயசிந்தனையாலும் சாதி ஆதிக்கத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக இறுதி வரை அவர் உறுதியாக நின்று போராடினார் எனில் அவர் கடந்து வந்த பாதை நிச்சயம் அத்தனை எளிமையானதாக இருந்திருக்க முடியாது. இன்றைய சமூகத்தில் எளிதாக உள்வாங்கப்படுகிற எத்தனையோ முற்போக்கான செயல்களுக்கு வித்திட்டவர் அவரே. இன்றளவிலும் சமூகத்தால் சகித்துக் கொள்ள முடியாத முற்போக்கான சிந்தனைகளை ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே பழமையில் ஊறிப் போன அன்றைய சமூகத்தின் முன் துணிச்சலுடன் வைத்தவரும் அவரே.

பெரியார் ஒரு சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; இன்று இச்சமூகம் ஓரளவேனும் சுயசிந்தனையும் சுயமரியாதையும் உள்ள ஒரு சமூகமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது எனில் அதற்கு அவரது அயராத உழைப்பே முக்கிய காரணம்.

தனது சிந்தனைகளை அவர் பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.

பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. இதுவும் பெரியாரின் வாழ்க்கை வரலாறுதான். ஆனால் சம்பவ‌ங்களால் கோர்க்கப்பட்ட வரலாறு அல்ல; கருத்துக்களால் கோர்க்கப்பட்ட வரலாறு.

அந்த வரலாற்றைத் தொகுத்து 1925 முதல் 1938 வரையிலான குடி அரசு இதழ்களை 27 தொகுதிகளாக வெளியிட்டு ஒரு பெரும் பணியை பெரியார் திராவிடர் கழகம் செவ்வனே செய்து முடித்து விட்டது. அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணி பெரியார் திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உரியதல்ல. அந்தப் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில் பெரியார் மக்களுக்கு உரியவரே அன்றி எந்த ஒரு தனி கட்சிக்கு மட்டும் உரியவரல்ல. இதனை வலியுறுத்தியே பெரியார் திராவிடர் கழகம் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி இந்நூல்களை வெளிக் கொணர்ந்துள்ளது.

வெறும் நோக்கு நூலாகவோ, அலங்காரமாக அடுக்கி வைக்கவோ அல்லது இதன் மூலம் பணம் சம்பாதிக்கவோ இந்நூல்கள் வெளியிடப்படவில்லை. இன்றைய சமூகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள சாதி, மத இழிவுகளை ஒழிக்க மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்ற பேருண்மையை உணர்ந்து இன்றைய தலைமுறையினருக்கு அவரை, அவரது கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன; இலவசமாக இணையத்தில் தரப்பட்டுள்ளன.

10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க பலருக்கு மலைப்பாகத் தோன்றக் கூடும். அந்த பணியை எளிதாக்கவே கீற்று 'பெரியாருடன் ஒரு பயணம்' நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து தோழர்கள் நம்மை பெரியாருடன் பயணிக்க வைக்க இருக்கின்றனர். சாதி, மதம், பாலினம், வறுமை என அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாருடனான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக அந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகத்தின் தோழர்களே வருகின்றனர்.

தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையும் குழந்தை போல நேசித்த அந்த கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

பெரியாருடன் ஒரு பயணம்
(1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே)

நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: பாஸ்கர், கீற்று ஆசிரியர் குழு

குடிஅரசு இதழ் தொகுப்பு:

1925 -‍ 1926: ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
1927 ‍- 1929: எழுத்தாளர் ஓவியா
1930 - 1932: எழுத்தாளர் அழகிய பெரியவன்
1933 - 1935: எழுத்தாளர் பூங்குழலி
1936 - 1938: பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ரிவோல்ட் ஆங்கில இதழ் தொகுப்பு: விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்புரை: கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றியுரை: பிரபாகரன், கீற்று ஆசிரியர் குழு

அனைவரும் வருக!!

தொடர்புக்கு: பாஸ்கர் - 9884499357