Wednesday, December 31, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள் -5 The Tin Drum

சில திரைப்படங்கள் காணும் போது உங்களை வெறும் நெகிழ்வுக்குள் ஆழ்த்தி விட்டு வேறெந்த கேள்விகளையும் கிளப்பாமல் சும்மா இருந்துவிடும், சில படங்கள் புதிய புதிய கதவுகளை திறந்துகொண்டே இருக்கும். சில படங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் கதையைச் சொல்கிறேன் என்று கிளம்பி அவர்களை கழிவிறக்கத்துக்குள்ளான மனிதர்களாய் சித்தரிப்பதோடு முடிந்து விடும். இல்லை நகைச்சுவையாக்கி பழி வாங்கி இருக்கும். 

ஆனால் சில படங்கள் மட்டும்தான் விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வுகளை நமக்கு உணர்த்துவதோடு சமுதாயத்தின் மீதான மதிப்பீட்டின் மீது நாம் கட்டி வைத்திருக்கும் பிம்பங்களை கேள்விக்குள்ளாக்கி அதன் மேல் தன் தாக்கத்தையும் விட்டுவிட்டுப் போகும். அப்படியான ஒரு படம்தான் இது.

The Tin Drum (1979)


இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் டான்சிங் (Danzing) என்னும் நகரத்தில் நடக்கிறது கதை, ஆஸ்கார் என்னும் சிறுவன்  முதலில் போலந்தில் இருந்து வந்து ஜெர்மானியர்களால் தேடப்பட்டு தன் பாட்டியை தாத்தா மணந்து கொண்ட கதையைச் சொல்லி பின் தன் தாயின்  (அக்னெஸ்) இரண்டு பேர் (ஜான் ப்ரொன்ஸ்கி, ஆல்ஃபிரட் மாட்செரத்)  மீதான காதலையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது வயிற்றில்தான் இருக்கிறான் . 

ஆஸ்காரின் மூன்றாவது வயதில் தன் தந்தைகளுள் ஒருவரான (?)  ஜான் ப்ரொன்ஸ்கி (ஆம் ஆஸ்காரின் தந்தை யார் என்பது கடைசி வரை சொல்லப் படவே இல்லை. ஆஸ்காரின் தாய் இரண்டுபேரையுமே காதலிக்கிறாள்.ஆனால் ஆல்ஃபிரட் மாட்செரத்தை மணம் முடிக்கிறாள் ) ஆஸ்காருக்கு ஒரு ட்ரம்மை பரிசாகக் கொடுக்கிறார். ஆஸ்காரின் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தன்னைச் சுற்றி நடக்கும் முறை தவறிய பெரிய மனிதர்களின் நடவடிக்கைகளால் மனம் வெறுத்த ஆஸ்கார் தான் பெரிய மனிதனாகவே ஆகக் கூடாதென்ற முடிவை எடுக்கிறான்.

பெரியவனாகவே ஆகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நிலவரை ஒயின் செல்லரை கீழே தள்ளி விட்டு தானும் விழுகிறான் அதுவும் அந்த ட்ரம்மை மிகப் பத்திரமாக வைத்துவிட்டு. பின்னர் மருத்துவர்களால் காப்பாற்றப் பட்டாலும் தன் வளர்ச்சியை அவன் உடல் நிறுத்திவிடுகிறது. (Dwarf). 

பின்னர் அவனின் உலகமே அந்த ட்ரம் மட்டும்தான். தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை பெரிய மனிதர்களின் சின்னத்தனங்களை காணும் போதெல்லாம் பறையடிப்பது போல தன் எதிர்ப்பை அந்த டரம்மின் மூலமாகவே தெரிவித்துக் கொண்டிருக்கிறான். ஆஸ்காரின் ட்ரம்மைப் பிடுங்க முயற்சி செய்யும் போது அவனிடம் இருந்து வெளிப்படும் உச்ச சத்தம் கண்ணாடிகளை உடைக்கும் வலுக் கொண்டது என்று ஒரு நாள் தெரிய வருகிறது.

ஆஸ்காருக்கு வயதாகிக் கொண்டே போனாலும் அவன் வளர்சியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்காரின் தாய் தன் இன்னொரு காதலனை (ஜான் ப்ரொன்ஸ்கி) காண்பதற்காக போலந்தின் (?) ஒரு நகருக்கு ஆஸ்காருடன் போய் அங்கே இருங்கும் ஒரு பொம்மைக் கடையில் விட்டுவிட்டு போகும் போது தன் தாயின் இன்னொரு காதலை தெரிந்துகொள்ளும் ஆஸ்கார் மணிக்கூண்டின் உச்சியில் இருந்து ட்ரம்மை ஒலிக்கச் செய்து தன் எதிர்ப்பை தெரிவிக்கிறான்.

இதன் பின் தான் கற்பம் ஆனதால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்றோ இல்லை தன் காதல்களால் விளைந்த மோசங்களாலோ ஆஸ்காரின் தாய் வெறும் பச்சை மீன்களை தொடர்சியாகச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள ஆஸ்காரின் தந்தை(?)  தன் உறவுக்கார பெண்ணான மரியாவைக் கொண்டு வந்து தன்னோடு வைத்துக் கொள்கிறார். ஆனால் ஆஸ்காருக்கும் அந்தப் பெண்ணுக்கும் , ஆஸ்காரின் தந்தைக்குமே ஒரு காதல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே மரியாவுடன் ( வேறு வேறு நேரத்தில் ) உடலுறவு கொள்ள அதன் பின் மரியா கர்பமாக குழந்தைக்கு யார் தந்தை என்ற குழப்பம் வேறு. 

இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் போரில் பங்கெடுக்க இயலாத குள்ளர்களின் சர்கஸ் கூடாரத்தில் தான் முன்பே பார்த்த ஆட்களோடு சேர்ந்து போர் முனைக்குச் சென்று வீரர்களை மகிழ்வாக்கும் வேலை செய்யப் போகும் ஆஸ்கார் அங்கே தன்னைப் போல ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பிக்கிறான்.  அந்தக் காதலும் போரின் முடிவில் புட்டுக் கொண்டு போகிறது குண்டு வீச்சில் கொல்லப் பட்டுகிறாள் அந்த பெண்.

போர் என்பதும் அதன் பின்னால் ஆன தோல்விக்குப் பின்னரும் தன் தந்தைகளுள் ஒரு ஆளான ஜான் ப்ரோன்ஸ்கியின் தபால் ஆஃபீஸில் சண்டைகளுக்கு நடுவே தன் இருப்பை நிலை நிறுத்த போராடுகிறான் ஆஸ்கார்.

தனக்குப்( ? ) பிறந்த மரியாவின் குழந்தைக்கு மூன்று வயதில் நானும் ஒரு ட்ரம் கொடுப்பேன் அதன் பின் வளராமல் இருக்க வேண்டிய ரகசியமும் சொல்லிக் கொடுப்பேன் என்று சொல்லும் ஆஸ்கார் (?)ஆல்ஃபிரட்டின் (?) குழந்தை குர்ட்ஸ் வீசிய கல்லில் மரணமடைந்த ஜான் ப்ரோன்ஸ்கியின் சவக் குழியில்   மூன்று வயதில் தொட்ட ட்ரம்மை வீசி வளர விரும்பி ஆஸ்கார் வளர ஆரம்பிப்பதோடு முடிகிறது படம்.

இதில் நெகிழ என்றோ அழுகைக்கு என்றோ எந்த காட்சியும் இல்லை ஆனால் எல்லா காட்சிகளிலும் தன் இருப்பை வெளிப்படுத்தவென்றே ஒரு ட்ரம் இருக்கிறது. பறை என்றோ முரசு என்றோ சொல்லிக் கொள்வோம் ஆனால் 2007ல் இந்த படம் பார்க்கும் போது உலகப் படங்கள் மேல் இத்தனை ஆர்வம் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ இத்தனை பாதிக்கவில்லை இப்படம்.

இந்த தொடரை ஆரம்பித்த பின்னால் எந்த படங்களை எல்லாம் நான் கண்டு நெகிழ்ந்து அழுது கிடந்திருக்கிறேன் என்று பார்கையில் இந்தப் படமும் வந்தது நினைவில்.  மீண்டும் பார்க்கும் போது ஆஸ்காரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் பின்னால் இருக்கும் சமூக அவலங்களின் மேலான பறை அறிவித்தல் எல்லா சமூக விளிம்பு மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறதது.  உடல் ரீதியாக ஒடுக்கப் பட்ட குள்ளர்கள், ஜெர்மனியை சுத்தம் செய்கிறோம்  என்று கொன்றொழிக்கப் பட்ட இன சுத்திகரிப்பின்  பெயரால் நாட்ஜிக்களின் வரலாறில் இடம் பெறாமல்  போன பல்லாயிரம் பேர்களின் ஒற்றை சாட்சியாக படம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஆஸ்காரின் டின் ட்ரம்.















Monday, December 29, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள் -4 The Boy in the Striped Pajamas


ஜெர்மனியை ஹிட்லர் ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் காலத்தில் நடக்கிற கதை.

The Boy in the Striped Pajamas (2008)




சீக்ரட் சர்வீசஸ் அல்லது சுருக்கமாக எஸ்.எஸ் என அழைக்கப் பட்ட ஹிட்லரின் நாட்ஜி ராணுவத்தில் கமாண்டராக இருக்கும் தன் தந்தையின் பணி உயர்வின் காரணமாக தன் தாய் , சகோதரி, வேலைக்காரி சகிதமாக  யூதர்களை இன ஒழிப்பு செய்யவென்றே உண்டாக்கப் பட்ட கான்ஸன்ட்ரேஷன் கேம்புகளுக்கு அருகிலேயே ராணுவம் ஒதுக்கித் தந்த ஒரு வீட்டில் குடியேறுகிறான் எட்டு வயது சிறுவன் (ப்ரூனோ). கேம்பில்  தன் வேலை என்னவென்று குடும்பத்தில் யாரும் அறிந்து விடாமல் ரகசியம் காக்கிறார் தந்தை,

கேம்பில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் போது ப்ரூனோ சும்மா சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் கேம்பில் இருக்கும் ஒரு யூதச் சிறுவனோடு (ஷ்யூல்ட்ஸ்)  யாருக்கும் தெரியாமலேயே நட்பு கொண்டு விடுகிறான். நடுவில் இரண்டு பேரையும் பிரித்து வைத்திருக்கும் மின் வேலியின் அர்த்தம் தெரியாமலேயே. தினசரி வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ப்ரூனோ வீட்டுக்குத் தெரியாமல் தின்பண்டங்கள் கொண்டு வந்து கொடுக்கிறான்.

இதனிடையே ப்ரூனோவின் தாய் தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு லெப்டினென்ட் மூலம் கேம்பில் இருந்து வரும் புகையும் அதன் துர் நாற்றம் குறித்தும் கேட்கப் போய் அங்கே நடைபெற்று வரும் படுகொலைகளை குறித்து தெரிந்து கொண்டு தன் கணவனோடு சண்டை பிடிக்கிறாள். இதை சொன்னதற்காக லெப்டினென்ட் போர் முனைக்கு அனுப்பப் படுகிறான். லெப்டினென்ட்டுக்கும் ப்ரூனோவின் அக்காவுக்கும் ஒரு ரகசிய காதல் வேறு ஓடுகிறது.

போர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் ப்ரூனோவின் தாத்தாவும் பாட்டியும் குண்டுவீச்சில் இறந்து விட குடும்பத்தோடு அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட முடிவு செய்கிறார் தந்தை. கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள் யூதச் சிறுவனின் தந்தை கேம்பில் காணாமல் போய்விட நானும் நாளை வந்து உன்னோடு தேடுகிறேன் என்று சொல்லும் ப்ரூனோ கிளம்பும் நாளில் கேம்புக்குள் யூதர்களின் உடை அணிந்துகொண்டு யூதச் சிறுவனின் தந்தையை கண்டு பிடிக்க உதவுவதற்க்காக கேம்புக்குள் செல்லும் இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக விஷ வாயுக் குளியலில் மரணமடைந்துவிடுவதோடு படம் முடிகிறது.

ஜெர்மனியின் நாட்ஜிக்களுக்கு, யூதர்களின் மேல் இருந்த வெறுப்பை எந்த காட்சிப் படுத்துதலும் இன்றி வசனங்கள் மூலமே சொல்லியிருப்பது படத்தின் பெரும் பலம். சிறுவன் ப்ரூனோ பள்ளிக் கூடத்தில் இருந்து மகிழ்ச்சியோடு வெளிப்பட்டு நண்பர்களோடு ஓடி வரும் போது சடக்கென தன் வீட்டைக் கண்டதும் சோகமே உருப்பெற்று படக்கென முகம் சோர்வதாக இருக்கட்டும், புதிதாகப் போன இடத்தில் வீட்டு வேலை, தோட்ட வேலை  செய்யும் முன்னாள் டாக்டரான யூதக் கிழவர் பாவெலைப் பார்த்து வருத்தப் படுவதாக இருக்கட்டும் ,  கேம்பின் உள்ளே இருக்கும் ஷ்யூல்ட்ஸ்சை கண்டதும் சந்தோசப் படுவதாகட்டும் ப்ரூனோவாக நடித்திருக்கும் ஆஷா பட்டர்ஃபீல்டு அட்டகாசம் செய்கிறான்.

கேம்பில் இருக்கும் சிறுவன் ஷ்யூல்ட்ஸ் ஆக நடித்திருக்கும் பெல்லா ஃபெச்ட்ஸ்பம்க்கு   மிக அழுத்தமான பாத்திரம், எளிதில் உணர்வுகளைக் காட்டாத முகம் என்று ஒரு யூதச் சிறுவனாகவே மாறியிருக்கிறான் லெப்டினன்டால் முகத்தில் அடிபட்டு ப்ரூனோவை பார்க்காமலேயே தலை கவிழ்ந்து பேசும் இடங்கள் அற்புதமான நடிப்பு. உண்மையில் இந்த யூதச் சிறுவன் தான் படத்தின் கதாநாயகன்.

படம் முழுக்கவே மிகச் சில கதாபாத்திரங்களே என்றாலும் படத்தின் காட்சிகளும் வசனங்களும் இசையும் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. ஜெர்மனியின் யூத வெறுப்பை முன்பே புரிந்து கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு படத்தின் சில இடங்கள் நுணுக்கமாக புரியும் உதாரணமாக கேம்பின் புகைக் கூண்டில் இருந்து புகை வரும் போது ஏன் துர் நாற்றம் வருகிறது என்று ப்ரூனோ தன் தந்தையிடம் கேட்கும் போதும் , துர் நாற்றம் குறித்து லெப்டினன்ட் ப்ரூனோவின் தாயிடம் சொல்லும் போதும் வரலாற்றின் காலகட்டம் தண்டியும் நாம்  ஒரு இன ஒழிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விடுகிறோம்.

இரண்டு சிறுவர்களுக்குள் இருக்கும் அன்பும் நட்பும், வளர்ந்த மனிதர்களிடையே சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை எள்ளி நகையாடும் விதமாக குழந்தைகளின் இன்னொரு உலகத்தை நமக்குள் கொண்டு வருகிறது.

படம் முடிகையில் இரண்டு சிறுவர்களுமே கேம்பின் உள்ளே மாட்டிக் கொண்டு உயிர் விடப் போகும் நேரத்தில் கைகளை ஒன்று சேர்த்துக் கொள்கிற இடம் ஒரு கவிதை. கடைசியில் வழக்கமான சினிமாக்களில் காட்டுவது போல் இறந்தவர்களின் உடல்களைக் காட்டாமல் வரிசையாக தொங்கிக் கொண்டும் இறைந்தும் கிடக்கும் கோடிட்ட நீல நிற பைஜாமாக்களை காட்டியதற்காகவே, ஜான் பாயினின் நாவலை படமாக்கிய இயக்குனர் மார்க் ஹெர்மனுக்கு ஒரு பூங்கொத்து.

மேல்ஜாதிகளால் கீழ் ஜாதிகள் ஒடுக்கப் படுவதன் வலி உணர்ந்த, இனத்தின் பெயரால் கொத்துக் கொத்துக்களாக கொல்லப்பட்ட மனிதர்களை கண்டுணர்ந்த அதற்காக வருத்தப் படும் எல்லாருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்.

படம் குறித்த தகவல்களுக்கு 

முழு படத்தையும் காண 

Friday, December 26, 2014

கோட்சேவின் பெயரால் விருது கொடுப்போம் !

நாதுராம் வினாயக் கோட்சேவை தெரியாதவர்கள் காந்தியைக் கொன்ற இந்து மகா சபை உறுப்பினர் என்றால் உலகுக்கே தெரியும். காந்தியைக் கொன்றதன் மூலம் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டும் விதமாக தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டது தொடங்கி சாவர்கர், மாளவியாக்களின் அங்கீகரிக்கப் பட்ட பிரதிநிதி அல்லவா கோட்சே.



பாஜகவின் ஆட்சியை இந்து மத வெறியர்களின் ஆட்சி, பஜகோவிந்தங்களின் ஆட்சி, காவிகளின் ஆட்சி என்று விமர்சித்தால் நம்மை ஏதோ தாலிபான்களின் அளவுக்கு வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் இந்த இடைச்சாதி இந்துக்கள். அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாக எழுதுபவனின் அறிவைச் சோதிக்கும் விதமாக சில நண்பர்கள் அறிவாளித்தனமாக நம்மை சொறிய ஆரம்பித்து விடுகிறார்கள்.

கோட்சே பற்றியோ மாளவியா பற்றியோ வாஜ்பாய் பற்றியோ அத்வானி பற்றியோ ஏன் மோடியைப் பற்றியோ சொல்ல ஒன்றுமே இல்லை. பாபர் மசூதி இடிக்க முக்கிய காரணமான அத்வானி, வெள்ளைக்கார துரைகளுக்கு உளவு வேலை பார்த்த வாஜ்பாய், குஜராத் கலவரங்களின் பிதா மகன் மோடி, பூரண இந்துத்துவ நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று முழங்கிய மாளவியா குறித்து நல்லவிதமாக எதாவது இருந்தால் அல்லவா இவர்கள் நம் எழுத்தை விமர்சிக்க முடியும்?

கோட்சேவுக்கு கோவில் கட்டுகிறார்கள் காந்தியின் நினைவு நாளில் திறக்கப் போகிறார்களாம், கூடவே, இந்திராவைக் கொன்ற சீக்கியருக்கும், அதற்கு காரணமான பிந்தரன் வாலேவுக்கும், ராஜீவைக் கொன்ற தனுவுக்கும் சிவராசனுக்கும், பிரபாகரனுக்கும் சிலைவைக்கப் போகிறோம் என்று யாராவது கிளம்பினால் என்ன ஆகும் என்று நினைக்கும் போதே பயந்து வருகிறது.

வாஜ்பாயிக்கும் , மாளவியாவுக்கும் பாரத ரத்னா கொடுக்கிறார்களாம் கொடுக்கட்டும் இன்னும் இருக்கும் மிச்ச சொச்ச ஆட்சியின் சொற்ப நாட்களிலும் அமித் ஷாவுக்கும் , கலைஞரின் தலைக்கு விலைவைத்த ராம்விலாஸ் வேதாந்திக்கும் இன்னபிற பார்பனீய, இந்து வெறி எதிர்ப்பாளர்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கும் எச்ச ராஜாக்களுக்கும் கொடுத்துக் கொள்ளட்டும்.

காவிகளின் வேர் ஆழ ஊன்றிக் கிடக்கும் இந்நாட்டில் இன்னும் ஆயிரம் ஆயிரம் கூத்துக்களும் அரங்கேறப் பார்ப்பதென்னவோ உண்மைதான் ஆனால் இவர்களின் கையில் ஆட்சி கிடைத்த பின் ஊடகங்களால் ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட ஶ்ரீமான் மோடியின் தர்பார் என்னவோ காத்தாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

நாட்டை வளப்படுத்தும் பொருளாதார மேதைகள் இல்லாத சுகாதாரத்துக்கான செலவில் கூட 6000 கோடிகளை குறித்து வல்லபாய் பட்டேலுக்கு பல்லாயிரம் கோடிகளில் சிலை வைக்கத் துடிக்கும் ஆட்களின் கைய்யில் அல்லவா ஆட்சி இருக்கிறது.? பாவம் அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் முன்னர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட புத்திசாலிகள் அல்லவா?

காஷ்மீரிலும் ஜார்கண்டிலும் வெற்றி பெற்று விட்டோம் என்றூ கொக்கரிக்கிறார்கள் ஆனால் காஷ்மீரில் வென்ற தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் டெப்பாசிட் கூட பறிபோன விஷயத்தை மூடி மறைக்கிறார்கள்.

கல்வி, மருத்துவம், சுகாதாரம், உள் கட்டமைப்பு என்று எந்த ஒரு அரசு, மக்கள் நலம்  சார்ந்த கொள்கைகளும் இல்லாமல் , வாஜ்பாயி , அத்வானி மோடி அமித்ஷா என்ற பிம்பங்களின் தயவில் ஆட்சிக்கு வந்தவர்களிடம் கோட்சேவுக்கும் மாளவியாவுக்கும் வாழ்த்துக்களும் வீர வணக்கங்களும் தவிற வேறென்ன எதிர்பார்க்க முடியும். பஜகோவிந்தங்களின் ஆட்சி என்பது இன்னும் கொஞ்ச நாட்களின் முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்கப் போகிறது என்பதை கருப்புப் பண விவகாரம், பெட்ரோல் விலை, ஊழல் எதிர்ப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்று எல்லாவற்றிலும் பார்த்துவிட்டொம்.

கூட இருந்தே கோஷ்டி காணம் பாடி என்னவோ திமுகவும் காங்கிரசும் மட்டும்தான் ஊழலின் வித்து, ஈழத்தின் எதிரி என்பதாய் பரப்புரைகளை வெளியிட்டு வஞ்சம் தீர்த்துக் கொண்ட செவ்வாழைகள், கொஞ்சம் கொஞ்சமாய் புளி மூட்டைக்குள் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்
விளக்கத்துக்கு வினவின் கட்டுரை படியுங்கள்.

திராவிடம் என்றாலே உச்சா போய்க்கொண்டு ஆர் எஸ் எஸ்ஸின் பெயரைக்கூட தமிழகத்தில் உச்சரிக்க பயந்துகொண்டிருந்த எச்ச. ராஜாக்கள் எல்லாம் இன்று ரங்கராஜ் பாண்டேக்களின் தயவால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் கோட்சே புகழ் பாடிக் கொண்டிருக்கிறார்கள். கூடவே கொங்கு ஈஸ்வரன் என்ற ஜால்ராவும்.

அத்வானிக்கு கோவையில் குண்டு வைத்தார்கள் என்று உண்மைக் குற்றவாளிகள் என்று யாராவது கிடைத்தால் அவர்களுக்கும் சிலைவைப்போம் என்று கிளம்பினால் அப்போதும் இந்த மகா சபைகள் மவுனம் காத்து வரவேற்கும் என்று நம்புவோமாக.

பாஜக என்னும் ஆட்சியில் இருக்கும் ஒரு முகத்தை வைத்துக் கொண்டு காவிகள் தங்களின் எல்லா ஆசைகளையும் இந்த ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றிக் கொள்ள துடிப்பது என்பது பொன் முட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுப்பதற்குச் சமம் என்பதை யாராவது சோக்களோ, இல்லை பத்ரிக்களோ அவர்களிடம் சொன்னால் பரவாயில்லை. பொன்முட்டை கிடைக்காவிட்டால் அவர்களுக்கு நஷ்டம் இல்லை, நம் உயிரல்லவா போகிறது.

சிறுபான்மை மக்களின் நலனுக்கு எதிராகவே எப்போதும் நடக்கும் பாஜக சங் பரிவாரங்களின் சங்கறுக்கும் வேலை தொடங்கும் முன் விழித்துக் கொள்வோம் இல்லாவிட்டால் வரலாற்றை திரித்து எழுதும் பஜகோவிந்த பன்னாடைகள் கோட்சே பெயரில் ஒரு விருதை உண்டாக்கி காந்திக்கு கொடுத்து விடுவார்கள்.



Monday, December 22, 2014

நீங்கள் இந்துவா இல்லை இந்தியனா?

இந்த காவிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியாயிற்று, தமிழ் தேசியம் பேசுவோரின் இனத் தூய்மையை விட இந்து தேசியம் பேசும் தொகாடியாக்களின் பேச்சு ஆயிரம் மடங்கு அதிகம் வன்மம் கக்குவதாக மாறிக் கொண்டே போவது  மத்திய கிழக்கின் இசிஸ், இசில், தாலிபான், அல்கொய்தாக்களின் வளர்ச்சி போல ஒரு புற்று நோய் போல உலக சமூகத்தை அச்சத்துக்குள் தள்ள ஆரம்பித்திருக்கிறது.

இன்று கூட December 22, 2014 இந்தியாவில் இந்து மக்கள் தொகையை 100 சதவீதம் ஆக்குவோம் என்று வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா கொக்கரித்திருக்கிறார். இவர்கள் சொல்லும் இந்து நாடென்பது முதலில் யாரையெல்லாம் உள்ளடக்காது என்பதற்கு ஏகப்பட்ட ஆவணங்கள் உண்டு, சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒட்டு மொத்த சிறுபான்மையினர் அல்லாத இந்துக்களின் தேசமாக ஆக்கப் போகிறார்களாம்.

கூடவே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வரப் போகிறார்களாம். நாசூக்காக "கட்டாய" என்றை சொல்லைச் சேர்த்துக் கொண்டுவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் எந்த சிறுபான்மை ஆட்கள் மேல் வேண்டுமானலும் என்னை இவர் "கட்டாயப்" படுத்தி மதம் மாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்ட ஏதுவாக. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த ஜெயலலிதா இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து பின்வாங்கினார் என்பதெல்லாம் மோடி மஸ்தான்கள் அறிவார்களோ இல்லையோ?

இதைத்தானே மத்திய கிழக்கில் இஸ்லாமியத்தின் பெயரால் செய்கிறார்கள்? சிங்கள பவுத்தத்தின் பெயரால் இலங்கை இனவாத அரசாங்கம் செய்கிறது? பங்களாதேஷ், பர்மா, ஆப்பிரிக்க நாடுகள் சூடான் இஸ்ரேல் எல்லாம் இதைத்தானே செய்தன? ஜெர்மனி இதைத்தானே செய்தது? பிறகென்ன வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவுக்கு?

அப்படி என்ன செய்துவிட்டார்கள் என்று வாதம் செய்ய வரவேண்டாம் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தவர்கள் ஆட்சியும் அதிகாரமும் மிருக பலத்தோடு கிடைத்தவுடன் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள். இனி மீதம் ஒன்றும் இல்லை 

செய்ய வேண்டியது மட்டுமே பாக்கி. 

இனத் தூய்மைவாதம், மதத் தூய்மைவாதம் எல்லாம் போய் வரலாற்றை திரித்தும் எழுத ஆரம்பித்திருக்கிறது காவிகளின் கூடாரம். காந்தியும் தேசபக்தர், காந்தியைக் கொன்ற கோட்சேவும் தேச பக்தர் என்று! இவர்களிடம் இருந்து வேறென்ன வார்த்தைகள் வரும்? கீதையை இந்தியாவின் தேசிய நூலாக்குவோம் என்று முழங்கியவர்கள் தானே?.

நமக்கு வாய்த்த பிரதமர் பற்றி சொல்லவே தேவையில்லை. எப்படியும் ஐந்தாண்டுகளுக்குள் தன் கால் படாத தேசமே உலகில் இருக்கக் கூடாதென்ற முன் முடிவோடு பறந்துகொண்டே இருக்கிறார். அவருக்கு அதானிகளும் அம்பானிகளும்தானே முக்கியம்?. அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் நிலக்கரி கிடைக்கும் என்றால் அதானி குழுமத்தோடு அங்கும் போய் ஒரு ஒப்பந்தம் போடுவார் என்று நம்புவோம்.

அரசாங்கத்தை வழி நடத்தவும், மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் எந்த கொள்கையும் அற்ற கட்சிகள் வெறும் மதம், தன் கட்சி சார்ந்த கொள்கைகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துகொள்ளலாம் என்றிருந்த இந்திய மக்கள் ஆறே மாதங்களுக்குள் கசப்பு மருந்தை சுவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

உண்மையில் காவி கட்சிகளின் கொள்கைதான் என்ன என்று கேட்டால் எல்லோரும் அது, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி,சிவசேனா, பாஜக, இந்து முன்னனி என்று எவனைக் கேட்டாலும்  . ராமர் கோவில், சேது சமுத்திரத்தை காப்பாற்றுவது, படேல்களுக்கும், சாவார்கர் களுக்கும் சிலை வைப்பது உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமையை நேபாளிடம் இருந்து பிடுங்கிக் கொள்வது என்று பதில் இப்படித்தான் இருக்கிது. ஆட்சியாளர்கள் வெறும் போட்டோஷாப் உத்திகளைக் கொண்டே குஜராத்தை ஜப்பான் ஆக்கிக் காட்டி இந்தியாவை வென்றவர்கள் ஆயிற்றே இன்னும் சில நாட்களின் ராமர் கோவிலை அயோத்தியில் கட்டியேவிட்டதாகக் கூட காட்டுவார்கள் படம்.

பாஜகவும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் எப்படியெல்லாம் பிற்போக்குத் தனமாக சிந்திப்பவர்கள் என்பதற்கு இந்தியர்கள் எல்லாம் ராமனின் பிள்ளைகள் என்று உளரிக் கொட்டிய சாத்வி நிரஞ்சன் ஜோதி ஒருவரே போதும் இப்பேர்பட்ட ஆட்களை எல்லாம் மத்திய அமைச்சர் ஆக்கி அழகு பார்க்கும் பெருமை பாஜகவுக்கு மட்டுமே சேரும், சொல்லி வைத்தார் போல சட்ட சபைகளில் ஆபாசப் படங்கள் பார்ப்பது என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு , பெண்களை தெய்வமாகக் கொண்டாடுவோம் என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு.

குஜராத்தில் திட்டம் போட்டு கலவரங்கள் நடத்திவிட்டு அதை ஒரு விபத்து என்றும் ஒரு நாய் தான் செல்லும் வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டால் வருந்துவேன் என்று சொன்ன ஒரு ஆளைத்தானே நாம் பிரதமராக்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்?.

கோத்ரா முதல் உத்திரப் பிரதேச கலவரங்கள் வரை தன் ரத்தக் கறைகளை கழுவாமல் அதையே ஆதாரங்களாக வைத்து ஒரு ஆளும் தேசிய கட்சியின் தலைவராக அமித் ஷா வரமுடியும் என்கிறபோது பாபா ராம்தேவ்களும் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து தொலைக்கப் போகிறார்களோ என்று பயமாய் இருக்கிறது. 

அத்வானி போகும் இடமெல்லாம் குண்டு வெடித்துக் கொண்டிருந்தது, நல்லவேளையாக தேர்தலில் ஜெயித்துவிட்டு அத்வானியும் ஓரங்கட்டப் பட்டுவிட்டதால் இனி அப்படி நடக்காது என்று நம்புவோம். மோடியின் கூட்டங்களில் இனி குண்டுகள் வெடிக்குமோ என்னமோ எல்லாம் அந்த அமித் ஷாக்களுக்கே வெளிச்சம். 

காவி பயங்கரவாதம் என்பதென்னவோ வடநாட்டுக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டு இங்கிருக்கும் திரவிடக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வாக்கு கிடைத்தால் போதும் என்பதற்காகவும் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து பதவியைச் சுவைத்தால் போதும் என்பதற்காகவும் ஒரு கூட்டணியை அமைக்குமேயானால் அந்த பிழையை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. காரியம் ஆனபின்னால் காலை வாரி விடும் கயவர்கள் நிறைந்த இடம் என்பதை சு,சாமி தன் ஒவ்வொரு டிவீட்டிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார், மான ரோஷம் இல்லாமல் இன்னும் பாஜகவில் ஒட்டிக்கொண்டிருக்கும், ராமதாஸ்களும், விஜயகாந்த் களும் விரைவில் அரசு உப்பை ஓருபிடி தனியே தின்றாவது உணர்ச்சி பெறட்டும்.

சமூகநீதி சமத்துவம் என்று வாய்கிழியப் பேசும் ராமதாஸ் பாஜகவின் கொள்கையை தன் கொள்கையாக மாற்றி நாட்கள் பல ஆயின என்றாலும் திராவிட மண்ணில் காவி பயங்கரவாதம் இடம் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதே எல்லாருடைய ஆவலும், அதற்குள் அன்புமணிக்கு ஏதும் மந்திரிப் பதவி கொடுத்து காரியத்தை பாஜக கெடுத்துவிடாது என்று நம்புவோம்.  

எங்கெல்லாம் மத பயங்கரவாதம் தலைதூக்குகிறதோ அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவார்கள் என்பதற்கு உதாரணமாக ஏகப் பட்ட நாடுகளைச் சொல்லலாம்.நாமும் அப்படி நாசமாய்த்தான் போகவேண்டுமா என்பதை இந்தியர்கள் சிந்திக்கவேண்டும். 

திராவிடம் பேசும் ஆட்களுக்கு இந்தியர்கள் மேல் என்ன அக்கரை என்று கேட்கும் ஆட்களுக்கு நாங்கள் திராவிடர்கள் அதனால்தான் இந்துக்களின் முகமூடிகளை கழட்ட முயற்சி செய்கிறோம். 

நீங்கள் இந்துவாக இருக்கவேண்டுமா இல்லை இந்தியனாக இருக்க வேண்டுமா? 

Sunday, December 21, 2014

திமுகவின் ஊளைச் சதைகள்.

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்று நெப்போலியன் வரை நடிகர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் ஏழாம் பொருத்தம்தான். நடிகர்கள் என்று மட்டும் இல்லை எந்த கொள்கைகளும் அற்ற பதவிக்காகவும், புகழுக்காகவும் மட்டுமே திமுகவோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்து விட்டு சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று தனிக்கடை போட்டு திமுகவின் ஓட்டு வங்கியில் சேதாரம் செய்தவர்களால் திமுகவின் கொள்கைகளை சேதப் படுத்த முடியாது என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.

கட்சியின் பொருளாளராக இருந்து கொண்டே பொதுக் கூட்ட மேடையில் கட்சியின் கணக்கு வழக்குகளை கேட்ட எம்ஜிஆர் ஆகட்டும், ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒரு பதவியை அடைந்து விட மாட்டோமா என்று தன்னைத் தானே கழகத்தில் முன்னிலைப் படுத்திக் கொள்ள முயன்ற கண்ணதாசன் ஆகட்டும், ஏன் எஸ் எஸ் ஆர் முதல் ராதாரவி, சரத்குமார், ஏன் இன்றைய குஷ்பு வரை ஏதாவது ஒரு விதத்தில் கட்சியை விட்டு விலகும் போதோ அல்லது அங்கிருந்துகொண்டோ கலகச் செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.முக முத்து முதல் முக அழகிரி வரை கலைஞரின் குடும்பத்துக்குள்ளேயே சிலர் இந்த வேலையை செய்யத் துணியும் போது மற்றவர்களை குறைகூறிப் பயணில்லை.

எந்த விதத்திலும் கட்சியின் கொள்கைகளான சமத்துவம் சமூக நீதி ஜனநாயகம் சாதி ஒழிப்பு திராவிட சித்தாந்தங்கள் அற்றவர்களை ஏதாவது ஒரு வகையில் மக்கள் அறிந்த முகம் என்பதனாலேயே கட்சியில் முன்னிலைப் படுத்தியதன் விளைவுகளை திமுக இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது.  இதெல்லாம் ஆரம்பகாலத்தில் எம்ஜிஆர் என்ற பிம்பம் கட்சியை உடைத்ததும் அதனால் ஏற்பட்ட இழப்புகளால் ஏற்பட்ட பயமும் கூட கட்சித் தலைமையை இப்படி முடிவுகளை எடுக்க வைத்திருக்கலாம். இது ஒன்றும் அதிமுக பாஜக போல பிரபலமான முகங்களால் மட்டும் வளர்ந்த கட்சி இல்லை. 

கொள்கைகளால் புடம் போடப் பட்டு பெரியார் அண்ணா கலைஞர்  பேராசிரியர் என்று வழிவந்த ஒரு இயக்கம் தேர்தல் தோல்விகள் என்பது கலைஞருக்கோ இல்லை கழகத்துக்கோ இழப்பு இல்லை ஆனால் சமூகநீதிக்கு, சமத்துவத்துக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் இழப்பு என்பதை திமுக ஆட்சியில் இல்லாத காலங்களில் எல்லாம் கண்டே வந்திருக்கிறோம்.
திராவிடக் கொள்கைகளில் பற்றில்லாதவர்கள் கழகத்தில் இணைவதும் அவர்களை கட்சியே முன்னிலைப் படுத்துவதும் அவர்கள் பின்னர் கழண்டுகொண்டு புழுதி வாரி தூற்றுவதும் என்பது கட்சியின் அடிமட்டத் தொண்டனை அயர்வுக்குள்ளாக்குகிறது.

தீவிர காங்கிரஸ் ஆளான எம்ஜிஆர் கழகத்துக்குள் வந்து பிரிந்த போது கணிசமான வாக்காளர்களை தன் பின்னாலேயே இழுத்துக் கொண்டு போனார், பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துக் கொண்டு கருமாரி அம்மன் வழிபாட்டை பகிரங்கமாகச் செய்து பின்னர் தன் மறைவுக்குப் பின்னரான தலைமையை அடையும் அளவுக்கு முழுக்க முழுக்க திராவிடத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரான நிலைப்பாட்டையே எடுக்கும் அளவுக்கு தீவிர இந்துத்துவ வாதியான ஜெயலலிதாவை வளர்த்துவிட்டதைத் தவிர வேறெந்த புரட்சியையும் இந்த இரண்டு சினிமா புரட்சிகளுமே செய்துவிடவில்லை.

கட்சியில் இருந்து ஒதுங்கிய கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார், டி ராஜேந்தர் பயங்கர பக்திமான் சோதிடரும் கூடவாம். நேறைய நெப்போலியன் கூட பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார், அடடே என்ன ஒரு கொள்கைப் பிடிப்பு? இவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு பங்கையாவது குமரிமுத்து, வாகை சந்திரசேகர் போன்றவர்களுக்கு கொடுத்திருந்தால் இன்னும் இன்னும் என்று தமிழகத்தில் புயலாகச் சுழன்றிருக்க மாட்டார்களா?

 விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து என்றதற்கு பின்னர் வந்த மறுப்பை படித்துவிட்டு கலைஞர் வீட்டிலேயே இந்த கூத்துக்கள் எல்லாம் நடக்கும் போது என்னடா பெரிய கொள்கை பேச வந்துட்டீங்க என்று மாற்றுக் கட்சியினர் கேட்கும் போது தலையை கவட்டியில் வைத்துக் கொள்ளும் அவமானம் என்பது எல்லா திமுக ஆட்களுக்கும் வழக்கமாகிப் போனது.

அதுதான் அப்படியென்றால் திராவிடக் கொள்கையென்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆட்கள் எல்லாம் கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு முன்னிருத்தினால் அவர்கள் தங்களின் சாதியை வளர்த்துவிட்டு முடிவில் தனிக் கட்சி தொடங்க ஆரம்பித்து விடுகிறார்கள். சரத்குமார் உதாரணம்.

முறசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக வளர்த்துவிட்டு ஊடக ஜாம்பவானான அண்ணனின் துணைகொண்டு ஆ. ராசா என்ற கொள்கை பிழம்பின் அரசியல் முடிவுக்கே வித்திடும் அளவுக்கு 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கியதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதை நாடே அறியும். திமுகவின் படுதோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப் படுகிறது. 

இப்படி வழக்கமான ஜனநாயகத்தில் இருந்து கொள்கைகளை அறவே மறந்த ஆட்களை எல்லாம் திமுகவில் வளர்த்துவிட்டதன் விளைவு இன்று பாஜக அடுத்த முதல்வரை தமிழகத்தில் களமிறக்குவோம் என்று குட்டை குழப்புகிறது. 2016 தேர்தலில் திமுகவோடு சேர்த்து முதல்வர் பதவிக்கு போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கையே ஒரு டஜனைத் தாண்டுகிறது.

திமுக ஒன்றும் சங்கர மடமில்லை என்று அடிக்கடி நாமே சொல்லிக் கொண்டு நம்மை ஏமாற்றிக் கொள்கிறோமா என்ற பயம் வரத்தான் செய்கிறது. ஆனாலும் இன்றளவும் கொஞ்சமாவது ஜனநாயகமும் கொள்கையும், அடிப்படை தொண்டன் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்கும் தலைமையும் இருக்கும் ஒரே கட்சி என்ற வகையில் திமுக தொண்டனாக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

திமுக ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனைக்கும் பின்னால் அதிமுகவில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய வெற்றிடத்தை யார் யாரோ பயன்படுத்திக் கொள்ள வேடிக்கப் பார்த்தபடி கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இன்றளவும் ஒரு டம்மி முதல்வரை பெயருக்கு வைத்துக் கொண்டு மம்மி ஆட்சியில் இருப்பது போன்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் முதல்வர் என்ற பெயரால் இன்னும் இன்னும் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது அதிமுக.

பாஜக ஆர் எஸ் எஸ் சங் பரிவார் அமைப்புகள் எல்லாம் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொண்டாலும் ஒரு சிக்கல் அடுத்தவர்களால் என்று வரும் போது ஒன்றாய் கூடி கூட்டுச் சதி செய்கிற ஆட்கள் ஆனால் திமுக இன்று அப்படி இல்லை , தங்களுக்குள் குழுக்களை அமைத்துக் கொள்ளும் பெருந்தலைகள் திமுகவுக்கு ஒரு சேதாரம் என்றால் ஆஹா நான் இதைத்தான் ஆசைப் பட்டேன் என்று உள்ளுக்குள் கொட்டமடிப்பதை எல்லா சமீபகால தேர்தல்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் வெளியில் இருந்து வந்தவர்களால் அல்ல.

மதுரையில் அழகிரி கொடுத்த தைரியம், இன்று கட்சியில் இருந்தும் ஒட்டு மொத்த மாக நீக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், திமுகவில் அவரை இத்தனை தூர வளர்த்துவிடுவதற்க்கு காட்டிய முனைப்பில் ஸ்டாலினுக்கு ஒரு பாதியாவது கட்சியில் முக்கியத்துவம் அப்போதிருந்தே கொடுத்திருந்தால் இன்று அடுத்த முதல்வர் யார் என்று அமீத் ஷாகளும் ராமதாசும், விஜயகாந்தும் போட்டிக்கு வந்து பேட்டிகள் கொடுத்திருக்க மாட்டார்கள்.

கொள்கைக் குன்றுகளும், கழகமே உயிர் என்று நினைத்தும் பலபேர் இருக்க கொழுத்த ஆட்கள் என்று கட்சியில் சிலரை முன்னிலைப் படுத்தியதன் விளைவே இன்றைய பிரபலங்கள் எல்லாம் கட்சியை விட்டு கழட்டிக் கொண்டு போவதும் , 

போனவை போகட்டும் என்று கலைஞர் கத்தியை எடுக்க வேண்டிய நேரம் இது. ஊளைச் சதைகள் அதிகம் இருப்பது உடலுக்கும் நல்லதல்ல கட்சிக்கும் நல்லதல்ல என்பது அரசியலையே சுவாசித்து உயிர் வாழும் கலைஞருக்கு தெரியாதது அல்ல. இளைத்தாலும் பரவாயில்லை என்று சிகிச்சையை தொடங்குங்கள் கலைஞரே. 

ஏனென்றால் கலைஞர் மட்டுமே கழகத்தின் முகம் என்பது கட்சித் தொண்டனுக்கு தெரியாமல் இல்லை.




















Wednesday, December 17, 2014

வினையூக்கி சிறுகதைகள்- ஆண்களின் மறைக்கப் படாத உலகம்.

செல்வகுமார் ராமச்சந்திரன் என்கிற செல்வகுமார் வினையூக்கிக்கும் எனக்கும் அத்தனை ஒன்றும் பூர்வஜென்ம பந்தம் இல்லை, இரண்டு பேரும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து கொஞ்சமாவது இந்த இணைய கடலில் ஒரு சிறு கல்லையாவது வீசி, சிற்றலைகளை உண்டாக்கிவிட முடியாதா என்ற பல ஆயிரம் பேர்களின் கனவுகளின் பிரதிநிதிகளாக எங்களை நாங்களே முன்னிறுத்திக் கொள்ள முயன்றதைத் தவிர.

சமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, பெரியார், திராவிடம் என்று கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இணைக்கப் பட்ட இணைய உலகம் எங்களுக்கானது என்று இருவரும், தனித் தனியே தங்களின் பாதையை வகுத்துக் கொண்டு இரண்டு பேருமே பத்தாண்டுகளில் என்ன என்னவோ செய்து தொலைத்திருக்கிறோம். அவரும் நானும் ஒரே பாதையில் பயணப் பட்டவர்கள் என்பதை தவிற அதிகம் நான் ப்ளாகுகளில் எல்லாம் உரையாடிக் கொண்டது கூடக் கிடையாது.

செல்வாவின் கதைகள் எல்லாம் கார்த்திக், அம்மு, அஞ்சலி பாப்பா என்கிற மூன்று பேருக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஒவ்வொரு கதையும் படிக்கும் போதும் நாம் கார்த்திக்கையும் அம்முவையும் வேறு வேறு கார்த்திக் அம்மு அஞ்சலிகளியும் பார்க்கிறோம். அது வெறோனிக்கா ஆகட்டும் இல்லை வேறெந்த ஐரோப்பிய பெண்ணாகட்டும் எல்லாமே அம்முதான். தனித் தனி சிறுகதைகளை எல்லாம் ஒரு நாவல் போலவே படிக்க முடிவதற்கு காரணம் இதுதான் வேறு வேறு ஆட்கள் பெயர்கள் மட்டும் ஒன்றே.

இடையிடையே சில விஞ்ஞானக் கதைகளும் உண்டு. போகிற போக்கில் அப்பாவி கணேசனை அத்தனை எளிதாக கடந்து செல்ல கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் வேண்டும், ஆனால் ஒட்டு மொத்த கதைகளையும் படிக்கையில் கார்த்திக் மேல் பொறாமையே வரும் அளவுக்கு திகட்டத் திகட்ட பெண்கள், காதல் , காதல். பிரிதல் என்ற ஒன்றைக்கூட வெகு எளிதாக கடந்து வந்த என் போன்ற ஆட்களுக்குள் இருக்கும் கார்த்திக்குகளை நிச்சயம் படிக்கிற எல்லோருக்கும் பிடிக்காமல் இருக்காது.

ஆண்கள் எல்லாம் உத்தமர்களாகவோ இல்லை கேடு கெட்ட பொறுக்கிகளாகவோ மட்டும் கதை செய்யத் தெரிந்த ஆட்களுக்கு நடுவே ஆண்களின் இன்னொரு உலகத்தை ஒவ்வொரு கதையிலும் ஜன்னல் ஜன்னலாக திறந்து கொண்டே போகிறார். சமூக நீதி பேசும் இடங்களில் எல்லாம் கிளிமூக்கு அரக்கனும் எட்டிப் பார்க்கிறார். விஞ்ஞானக் கதைகளில் வினையூக்கி எட்டிப் பார்க்கிறார். இப்படி ஆங்காங்கே கதாசிரியர் தன் முகத்தை காட்டிக் கொண்டே இருப்பதால் படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

நிறைய பயணங்களும் அதில் சந்திக்கும் பெண்களும் என்று சில இடங்கள் இழுவை போட்டாலும் ஐரோப்பிய அம்முகளுக்காகவே படிக்கத் தூண்டும் கதைகள் பக்கம் பக்கமாய் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் கடவுளை காணும் கதை இன்னொரு அன்பே சிவம்.

ஒவ்வொரு கதையுமே ஒரு குறும்படத்துக்குண்டான நிகழ்வுகளை கொண்டவை, யாராவது குறும்பட இயக்குனர் இதைப் படித்தால் செல்வாவிடம் முன் அனுமதி பெற்று படமாக்க முயலலாம்.

"தேவதைகளை பெற்றெடுத்தவுடன் மனைவிகள் பிசாசுகள் ஆகி விடுகின்றனர், தேவதைகளுக்காகவே பிசாசுகளை பொறுத்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது"

இது போல ஏகப்பட்ட சுவாரஸ்யம் மிகுந்த வரிகள் நூல் முழுதும் காணக் கிடைக்கிறது.

பிடிஎஃப் கோப்பாக முழு நூலையும் தரவிறக்கம் செய்ய
http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/







Monday, December 01, 2014

பா.ஜ.க எனும் பாசிச நச்சு.

ஆர்.எஸ்.எஸ், பாஜக என்னும் பாசிஸ்டுகள் ஆட்சியில் அமரும் போதெல்லாம் இந்தியா என்ற துண்டுகளால் ஒருங்கமைக்கப் பட்ட தேசம் மத, சாதி விரோதங்களால் அழிவையும், நிலையற்ற தன்மையும் சந்தித்தே வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்றும் சிவ சேனா என்றும் பாஜக என்றும் பெயர்கள் மட்டும்தான் வேறு வேறு மற்றபடி இவர்களின் கொள்கை எல்லாம் இந்தியாவை ஒரு இந்துக்களின் நாடாக, பாகிஸ்தான் முஸ்லிம்களின் நாடாக ஆனது போல மத்திய கிழக்கு நாடுகளில் மதத்தின் பெயரால் துண்டாடப் பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வன்முறை வெறியாட்டங்களால் மக்கள் ஒரு அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது போல இந்தியாவையும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நிலையில் இருந்து ஒற்றுமை என்கிற பெயரால் வேற்றுமை விரோதங்களால் துண்டாடிவிட வேண்டும் என்பதே.

ஆர் எஸ் எஸ் காலத்திலேயே தொடங்கப் பட்ட இவர்களின் செயல் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களுக்குள் ஒற்றுமை எனும் ஒரே முழக்கத்தோடு திட்டம் போட்டு தங்கள் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற ஆரம்பித்த பின் முழு வீச்சில் இப்போது செயல் படுத்த தொடங்கி விட்டனர். பாபர் மசூதி இடிப்பு தொடங்கி சேது சமுத்திர திட்டத்தை முடக்கியது வரை, இவர்கள் மதத்தாலும் தேச நலனாலும் தங்களுக்கு, தங்கள் மதத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதையே இப்படி புதுப் புது திட்டங்களாலும் அறிக்கைகளாலும் மிரட்டல்களாலும் செயல் படுத்த துணிகின்றனர்.

சமஸ்கிருத தினிப்பு, பள்ளியில் சரஸ்வதி வணக்கம், எங்கே  சென்றாலும் ஹிந்தியில் உரையாற்றும் பிரதமர், என்று தங்களின் பாசிச கொள்கைகளை தினிக்க ஆரம்பித்து விட்டனர். பெரும்பான்மை இல்லாத காலங்களில் அடுத்தவர் தயவில் ஆட்சியை ஓட்டிய காலங்களில் கொஞ்சமாவது கூட்டணி கட்சிகளின் தயவு வேண்டும் என்பதற்காக கடிவாளம் இட்ட குதிரையாக இருந்த இவர்கள் இப்போது  மிருக பலத்தோடு எதிர்கட்சிகளே இல்லாத நிலையை அடைந்ததும் தங்கள் முகமூடிகளை எல்லாம் கழட்டி தூர வைத்துவிட்டு கோர முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

ஆட்சியில் அமரும் முன்னர் வானளாவி மோடி புராணம் பாடிய ஊடகங்கள் இன்னும் மயக்கத்தில் இருந்து விடுபடவில்லை.  இதற்கெல்லாம் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதுதான் ஹெச்.ராஜா என்னும் பாஜக போர்வையில் பதுங்கிக் கொண்டு பகிரங்க மிரட்டல்களை கூட்டணிக் கட்சியின் தலைவர்களுக்கே விடுக்கும் அரசியல் ரவுடி. எந்த இன ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தது என்ற ஒரு காரணத்துக்காக ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு நின்றதோ அதை ஒட்டு மொத்தமாக நடத்திய ராஜபக்‌ஷே மீண்டும் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்து சொல்லும் ஊடகங்களால் ஊதிப் பெருத்த ஊர்சுற்றி அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கும் மிஸ்டர் 56 அங்குல மோடி என்று தங்களின் காவி அடையாளத்தை காட்டத் தொடங்கி விட்டனர்.



முன்னரே ஒரு முறை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று ஹெச்.ராஜா கூறியபோதும் சரி இப்போது வைகோவுக்கு பகிரங்க மிரட்டல் விடும் போதும் சரி, பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மாறிப் போன சுப்பிரமணியன் ஸ்வாமி ஒட்டுமொத்த தமிழர்களையும் எலிகள் பொறுக்கிகள் என்று திட்டி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருக்கும் போதும் சரி ஊடகங்களோ, எதிர்கட்சிகளோ அப்படி ஒன்றும் பெரிய எதிர் விணை ஆற்றிடவில்லை என்பதுதான் உண்மை. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஹெச்.ராஜா சு.ஸ்வாமியின் பேச்சுக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் அரசியல் நாகரீகம் குறித்தும் வைகோ ராமதாஸ் போன்றவர்கள் அடக்கமாக இருப்பது நல்லது என்று பாடம் எடுக்கிறார்.

முன்பே வைகோ, ராமதாஸ்  போன்றவர்களை சு.ஸ்வாமி கூட்டணி கட்சியென்றும் பாராமல் டிவிட்டரில் திட்டிய போதே தங்களின் கண்டனத்தை தெரிவித்திருந்தாலாவது கொஞ்சம் அடக்கி இருக்கலாம். ஆனால் இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு இன்று ஹெச் ராஜா வைகோவுக்கு மிரட்டல் விடுப்பதும், ஸ்வாமி கூட்டணியை விட்டு அவர்களே வெளியேறி விடுவது நல்லது என்றும் கூறும் அளவுக்கு வளர்ந்து போய் இருக்கிறது.

பாசிசம் என்பது படுகொலைகளால் மட்டும் வளர்வதில்லை. மதத்தின் பெயரால் மட்டுமே மக்களை ஒன்று திரட்டி இனக் குழுக்களின் அரசியலை அதிகாரத்தை, அவர்களின் கைகளில் இருந்து பிடுங்கி ஒரு பெரும்பாண்மை மக்களின் கைய்யில் கொடுத்தால் அவர்களே தங்களின் அதிகாரங்களை நிறுவிக் கொண்டு சட்டத்தையும் மனித நேயத்தையும் கால்களில் போட்டு மிதிப்பார்கள் என்பதற்கு ஜெர்மனியின் ஹிட்லர், உகாண்டாவின் இடி அமீன், ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள், குஜராத்தில் மோடி, இலங்கையின் ராஜபக்‌ஷே என்று வரலாற்றின் அடுக்கு தோறும் சாட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன.

நாம்தான் வரலாற்றை அதன் மகிழ்வான பக்கங்களை மதிப்பெண்களுக்காக மட்டுமே படித்துவிட்டு மறந்தும் போகிறோமே? அதனால்தான் அம்பேத்கரும் பெரியாரும் சிங்காரவேலரும் வாழ்ந்த மண்ணில் காவிக் கொடியும் பறக்க அனுமதித்துவிட்டு இன்று அரசியல் மிரட்டல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேம்.

இந்த காவிக் களைகளை இப்போதே ஒழிக்கும் பணிகளை தொடங்காவிட்டால் இந்தியாவில் இருந்து எங்களை நாங்களே துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை குறைந்த பட்ச அரசியல், மத நல்லிணக்கம் விரும்பும் கட்சிகள் மக்களுக்கு தெரிவித்து காவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தங்களின் செயல்பாட்டை தொடங்காவிட்டால் எதிர்காலத்தில் வரலாறு உங்களை மன்னிக்கப் போவதில்லை.

முடிவு நம் கையில்.