Thursday, July 17, 2014

நாத்திகம், பகுத்தறிவு பேசாமல் சமூக நீதி சாத்தியமாகுமா?

சில வாரங்களாகவே முகநூலெங்கும் தோழர்கள் குறிப்பாக திமுக உடன்பிறப்புகள் உட் கட்சி மோதலோ என்னவோ என்று நினைக்கும் அளவுக்கு நாத்திகம், பகுத்தறிவு,சமத்துவம், சமூக நீதி என்ற தளத்தில் தொடர்ச்சியாக ஒரு விவாதத்தில் ஈடுபட்டுக் கொள்ளுகின்றனர்.
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அடிப்படை சமூக நீதிகள் மறுக்கப்பட்டு அதற்கெதிராக கிளர்ந்தெழுந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக திராவிடர் கழகமும், கேட்கும் இடத்தில் இல்லாமல் சமூக நீதியை கொடுக்கும் இடத்தில் இருந்தால் தான் எதுவும் எளிதில் சாத்தியமாகும் என்ற அண்ணாவின் ஏற்பாட்டுக்கு இணங்க ஆரம்பிக்கப் பட்ட திமுக என்று இது ஒரு சமூக நீதிக்கான தொடர்ச்சி மட்டுமே.
சமூக நீதி சமத்துவம் எல்லாம் ஏன் மறுக்கப் பட்டன ? அவற்றுக்கான தீர்வு என்ன என்று தேடித்தேடி தேய்ந்த சமூக சமத்துவ முன்னோர்களான டி.எம்.நாயர், பி.டி தியாகராயர், முனுசாமி நாயுடு, போன்றவர்களும் அவர்களின் தொடர்ச்சியான தந்தை பெரியாரும் வளர்த்தெடுத்த தத்துவார்த்தமான சிந்தனைகளே திராவிடச் சிந்தனைகளானது. பின்னர் திராவிடர் கழகமான பின் தேர்தல் அரசியலில் இருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்ட தி.க சமத்துவம் சமூக நீதி ஆகியவற்றை வெல்ல வேண்டுமானால் முதலில் இவற்றுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் சாதிய கட்டுப் பாடுகளையும் அதை மிகக் கவனமான ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து மனு தர்ம ஆட்சியை நிலை நாட்டும் பார்ப்பனீயத்தையும் ஒழிப்பதே ஆகும் என்றனர். இதே கொள்கைகளை சமூக நீதியை கொள்கை அளவில் காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதை ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே அடிமக்களுக்கும் படிப்பறிவு என்ற ஒற்றைக் காரணத்தாலே மட்டுமே பெரியாரால் காமராஜ் கொண்டாடப் பட்டார்.
கருத்து வேறுபாடுகளால் பிரிந்தாலும் , சமத்துவம் சமூகநீதிக் கொள்கை அளவில் ஒன்றாகவே இருந்த திமுக ஆட்சிக்கு வந்ததும் அண்ணா திராவிடக் கொள்கைகளையே ஆட்சி அதிகாரங்களில் செயல் படுத்தினார். அதன் நீட்சியாக வந்த கருணாநிதியும் பெரியார் அண்ணா வழியில் நின்றே அதனை செயல்படுத்த முனைந்தார்.
"சாதி மதப் பித்து என்னும் சனி தொலைந்தால்தான் சமத்துவம் எனும் ஞாயிறு பிறக்கும் " என்ற கலைஞரின் தொண்டர்களான நாம் இன்றும் அதனை கடைபிடிக்கிறோமா?
எனக்கென்னவோ இல்லை என்றே தோன்றுகிறது.
சமூக நீதி கிடைக்காமல் போனதன் அடிப்படையே சாதியும் மதமும்தான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது அந்த சாதியும் மதமும் இன்றும் கட்டிக் காக்கப் படுவது கடவுளின் பெயரால் சமத்துவமாக இல்லாத சாமிகளால் என்ன சமூக நீதியை படைத்துவிட முடியும் ?, இந்த சாமிகளின் பெயரால் சாதிகளையும் அதன் வழிபாட்டு நெறிகளையும் ஒரு கட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனீயம் என்று இது ஒரு விஷ வலைப் பின்னல். 
சமூக நீதியை நிலை நாட்டவே திமுக, பகுத்தறிவு பேச்சால் மட்டுமே தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு இயக்கம் அதற்க்காக போராடியே ஆட்சியை அடைந்த கழகம்,

//என் உடல் நிலைமை மிக மோசமாகி விட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். கண், காது சரியாக இல்லை. கால்கள், நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம். இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்.காரணம் என்னவென்றால், இதன் முன்னர் இருந்த ஆட்சியின் யோக்கியதைகளை அவைகளால் நாட்டுக்கு சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக் கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்; என்ன கொள்கை மேற்கொண்டார்கள் என்பவைகளைச் சிந்தித்தால் தெரிய வரும்.
ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப்போதைய இந்த தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சிவரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது. // பெரியார் -1972 விடுதலை மலரில்.
ஆக சமூக மாற்றங்களுக்காகவும் சமத்துவ நீதிக்காகவும் உண்டான ஒரு இயக்கத்தின் தொண்டர்கள் நாத்திகம் பேசுவதையும் சாதி மத வேறுபாடுகளை பேசுவதையும் ஊக்குவிக்கத்தான் வேண்டுமே ஒழிய இவற்றால் நாம் ஓட்டு வங்கியை இழக்கிறோம் என்பதோ இல்லை இதனால் ஆட்சியை இழக்கிறோம் என்பதோ அறிவானதல்ல.
யாருக்கும் சுயமரியாதை கிடைக்க பாடுபடுவதே திமுகவின் அடிப்படைக் கொள்கை என்பதை உணரவேண்டுமே ஒழிய பகுத்தறிவு பேசாதே என்பது அல்ல. நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் எந்த நீதியும் சாதியின் கட்டுப்பாட்டால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் சாத்தியம் இல்லை. 
நாத்திகம் பேசாதே என்பதை விட கடவுள் நம்பிக்கை உள்ள திமுக ஆத்திகவாதிகள் ஏன் கலைஞரின் அணைவருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமைக்காகவும், கருவறை நுழைவுக்கான உரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்க்காகவும், ஆத்திகவாதிகளால் மக்களை மூட நம்பிக்கைக்களுக்குள் தள்ளப் படும் கொடுமைகளைப் பற்றியும் பேசக் கூடாது? பகுத்தறிவை பேச நாத்திகவாதியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாத்திகம் பேச கடும் பகுத்தறிவு வாதம் தேவைப் படுகிறது.
தேர்தல் அரசியலை மீறி அதில் அடையும் வெற்றி தோல்விகளை தாண்டி திமுக என்னும் கட்சியை அதன் கொள்கைகள் மட்டுமே இந்திய அளவில் மாறுபடுத்துகின்றது. அது நாத்திகமா பகுத்தறிவா என்பதெல்லாம் அவர் அவர் சிக்கல். ஆனால் நாத்திகமும் பகுத்தறிவும் பேசாமல் , சமத்துவம் சமூக நீதிக்கான பெண்ணுரிமைக்கான எந்தக் கல்லையும் புரட்டிவிட முடியாது. அடிப்படைத் தத்துவங்கள் இல்லாமல் போனால் திமுக ஒரு அதிமுகவாக ஆகிவிடும் அபாயம் இருப்பதை உணர வேண்டும். அதை விட பாஜக கொள்கைகளே மேல்.
அதற்க்காக சிலை உடைப்பு போராட்டம் நடத்த வேண்டாம், அந்த சிலைகளை வழிபடும், அர்ச்சிக்கும் உரிமைகளை பேசுவோம்.


Wednesday, July 16, 2014

ஓடு காலியும் ஓடு காலியும்.

சட்டமன்ற கூட்டத் தொடரில் ஒரு அசிங்கம் அரங்கேறியுள்ளது. அசிங்கங்களே ஆட்சியில் இருக்கும் நாட்டில் இது என்ன ஒரு பெரிய அதிசயம் என்று கேட்டுவிடாதீர்கள் ஆனால் அந்த அசிங்கத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் இலக்கியச் சுவை வேறெந்த இலக்கியவாதிகளாலும் புரிந்துகொள்ள முடியாதது.

ஓடுகாலி என்று எதிர்கட்சியை பார்த்து ஆளுங்கட்சியின் ஜிங் ஜக் மேஜை தட்டும் மங்குனிப் பாண்டியன்கள் சொல்கிறார்கள், வானளாவிய அதிகாரம் கொண்ட பதவியில் இருப்பவரும் அந்த ஓடு காலி வார்த்தை ஒன்றும் அப்படி ஒரு கெட்ட வார்த்தை அல்ல என்று சபைக் குறிப்பில் அனுமதிக்கிறார், இதைக் கேட்ட வானளாவிய அதிகாரம் கொண்டவரின் அதிகாரத்தை நள்ளிரவில் கூட குட்டி  எழுப்பி தட்டிப் பறிக்கும் வல்லமை கொண்ட மாண்பு மிகு அதிகாரம் கொண்டவரும் 'குலுங்கி, குலுங்கி" சிரிக்கிறார்.

(இதுவே கலைஞராய் இருந்திருந்தால் நாங்கள் சொன்னது கஜானாவை , அதிமுக ஆட்சியை விட்டுப் போகும் போது ஓடு காலியாகத்தான் இருந்தது என்று நச் பஞ்ச் அடித்திருப்பார். அதெல்லாம் இவர்களுக்கு கலைஞரிடம் வாங்கிக் குடித்தாலும் வராது.)

சட்டமன்றம் முற்றாய் சந்தைக் கடையாய் மாறிப் போகிறது. இது ஜனநாயக நாடய்யா அப்படித்தான் இருக்கும் என்று வாதிடவேண்டாம் நண்பர்களே உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். அப்படி ஒரு வஸ்து இங்கே இருக்கிறதா என்ன?

ஜனநாயகத்தின் தூண்கள் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் இந்த நாட்டின் முதுகெலும்பில்லாத விளம்பர வருவாயைக் கொண்டே வயிறு வளர்க்க வெறும் வாயைக் கூட மென்று கொண்டே இருக்கும் எந்த மானமுள்ள பத்திரிகையும் இது பற்றி வாயே திறக்கவில்லை என்பது தற்செயலானதா என்ன?

நயன் தாரா யாரோடு லவ்வுகிறார், விஷால் திருட்டு விசிடியை தட்டிக் கேட்டார், என்று விளக்கு பிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாய் இருக்கிறது. இந்த லட்சனத்தில் மவுலி வாக்கம் கட்டிட விபத்து வேறு 61 பேர்தானே போனார்கள் நல்லவேளை என்று எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பத்திரிகைகள் அடைந்துவிட்டன.

எங்கோ பெயர்தெரியாத நிர்பயாவுக்கு ஒன்றென்றதும் மாதக் கணக்கில் மைக்கில் புலம்பிய பாண்டேக்கள் ஒரு நாளாவது தமிழ்நாட்டில் தினம் நடக்கும் இதுபோன்ற செயல்களை வாய் திறந்து பேசுகிறார்களா?

இந்த லட்சணத்தில் இருக்கும் ஊடகங்கள் எதைத்தான் மக்களுக்கு சொல்ல வருகின்றன என்பதை விட எதற்க்காக எவர்களால் நடத்தப் படுகின்றன?
அதுவும் சரிதான் வாரம் ஒருமுறை உங்களை சந்திப்பேன் என்றவரிடம் ஏனம்மா எங்களை மாதம் ஒரு முறைக் கூட சந்திக்கவில்லை என்று கேட்க திராணியற்ற வீராதி வீரர்கள் தானே .

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னுக்கு வந்தால் விளம்பரத்தை கூட்டி வருமானம் பார்க்கலாம் அவ்வளவுதான் நமக்கான  ஊடகங்களாக நம்மை நாமே மாற்றிக் கொள்ளாத வரை ஆண்ட கட்சியின் ஆளும் கட்சியின் சொந்த ஊடகங்களும் அவற்றின் சொம்பு ஊடகங்களும் விளம்பர வருவாய் டிஆர்பி ரேட்டிங் மட்டும் குறிக்கோளாய் கொண்டு  நம் வாயில் தொடர்ந்து பாலூற்றிக் கொண்டே இருக்கும் நாம் லட்ஷ்மிமேனன் பத்தாவது பாஸாம்ல ? நஸ்ரியாவுக்கு கல்யாணமாம்ல என்று வலைத் தளங்களில் மொக்கை போட்டுக் கொண்டிருப்போம்.

பின் குறிப்பு: மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கிறேன் இனி இங்குதான் இருப்பேன்.Saturday, June 16, 2012

கிழிந்து தொங்கும் தமிழ் தேசிய முகமூடிகளும் அதை ஒட்டித் தையல் போட முயலும் அண்ணனின் தம்பியின் தம்பிகளும்

புரட்சி என்பது போராட்டம், இதை சொன்ன பெருமகனார் இறந்து போனாலும் அந்த புரட்சிக்கான காரணமும், தேவையும் இன்னும் இருக்கிறது, இருக்கும். நாளைக்காலை ஏழு முப்பத்தைந்துக்கு புரட்சி சிற்றுந்தேறி வந்து நம் கதவைத் தட்டப் போகிறது என்றுதான் சில ஆண்டுகளாய் அண்ணனின் தம்பியின் தம்பிகள் காத்திருக்கிறார்கள்.

கருப்பு உடையும் கையுயர்த்திய பேச்சும் ஒலிபெருக்கியின் ஓசை மீறிய குரலுமாய் பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட அண்ணனின் தம்பியாய் வன்னி பிரதேசத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களூடே புரட்சி பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த புரட்சி இப்படியொரு அரசியல் புரட்டை சில நாட்களில் ஆரம்பிக்கப் போகிறதென்று.

என் அன்பு மக்களே என பேச்சை தொடங்கிய போதெல்லாம் ஒவ்வொரு தமிழனும் உள்ளம் குளிர்ந்து நரம்புகளும் மயிர்க்கால்களும் முருக்கேற ஒரு உண்மத்த நிலையில் அந்த பேச்சை கேட்ட போதெல்லாம் நான் எள்ளிநகையாடினாலும் ஒரு சந்தேகம் எனக்கிருந்தது, "ஒரு வேளை நமக்கு மட்டும்தான் இது நகைச்சுவையோ" உண்மையிலேயே ஆள் தமிழுணர்வாளரோ என்று.

கடந்த சட்ட மன்ற தேர்தலுக்கு முன்பு வரை, தோழர் வைகோ, பழ.நெடுமாறன், அவரை ஊட்டி வளர்த்ததாக அவரே இன்றுவரை சொல்லிககொள்ளும் திருமாவளவன் எல்லோரும் நல்ல ஒற்றுமையோடுதான் இருந்தனர். ஈழத்தாய்க்கு ஆதரவாகவும் காங்கிரசையும் திமுகவையும் ஒழிப்பதே தனது குறிக்கோள் என முழங்கும் வரை.

ஓட்டுப் பொருக்கி அரசியல் எமக்கு வேண்டாம் இது மற்றுமொரு அரசியல் கட்சியல்ல மாற்று அரசியல் என சினிமா பட பெயருக்கு பின்னாலோ அல்லது சிறிய எழுத்துக்களிலோ "கேப்சன்" போட்டு போட்டே பழக்கப்பட்ட திரப்பட இயக்குனரின் புத்திசாலித் தனம் அவரின் எல்லா மேடைகளிலும் முழக்கமிட்ட போதும், நான் பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி என்றபோதும் , கண்டிப்பாக நாளைக் காலை புரட்சி வெடித்துவிடும் என நம்பிய ஆயிரக் கணக்கான அண்ணனின் தம்பியின் தம்பிகள் எனக்கு பக்கத்து வீட்டில்
அதுவரை இருக்கத்தான் செய்தார்கள்,

சில நாட்களுக்கு முன்னாள் வரை,

நாம் தமிழர் இயக்கப் பெயரே கடன் வாங்கிய பெயரென்று தெரியாத தம்பிகள் மட்டுமே அவரின் பலம், கொள்கை கிலோ என்ன விலை என்பதும் மீனவனைத் தாக்கினால் மாணவனை அடி என்னும் ஒரு பெரிய புரட்சித் தத்துவமும் மட்டுமே தனது பலமாகவும் கொண்ட அண்ணனின் தம்பி சீமானுக்கு தம்பி என்ற புரட்சிப் படம் இயக்கிய மாபெரும் "களமாடிய" அனுபம் இருப்பதால் அரசியல் கட்சியாக தன் இயக்கத்தை மாற்றிக் கொள்ள அதுவே போதுமானதாகவும் இருந்தது.

வன்னிக் காட்டில் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், தன் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு வேலுப் பிள்ளை என பெயர் வைத்ததும் மட்டுமே தனக்கு போராளி என்ற பட்டத்தையும் ஒரு இயக்கத்துக்கு தன்னை ஒரு தலைவனகாவும் முன்னிலைப் படுத்துவதற்கு போதுமான தகுதிகள் என்ற மிக உச்ச பட்ச கொள்கைகளுடன் இயக்கம் ஆரம்பித்து எல்லோரிடமும் ஒரு உச்சகட்ட வெறுப்புணர்வு தமிழக அப்போதைய ஆட்சியாளர்களிடம் வாக்காளர்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை தனக்கான உழைப்பின் கூலியாய் நினைத்து கனவுகளில் மிதந்துகொண்டு ஒரு இயக்கத்தின் கொள்கைகளை கடந்த மாதம் வெளியிடும் வரை கூட அவர் ஒரு சாதாரண புரட்சியாளராக தன்னை நிலைநிருத்திக் கொள்ள பெரியாரும் சேகுவேராவும் தனது உடைகளாக அணிந்துகொண்டு, எம்ஜிஆர் என்னும் பிம்பத்தை தனது முகமூடிகளில் ஒன்றாக அணிந்து கொண்ட சாதாரண தொண்டர்தான்.

ஈழ விடுதலை என்னும் அட்சய பாத்திரம் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற தமிழக அரசியல் கட்சிகளின் எல்லா முகமும் அவரிடம் இருந்து வெளிப்பட்டது திமுக எப்போதும் ஆதரித்து வரும் ஈழ ஆதரவு நிலை என்னமோ நேற்று மாலைதான் கலைஞர் டெசோவை ஆரம்பித்தார் என்பதும் அது தனக்கு மாற்றாக "வளர்ந்து" தனது இருத்தலியம் பிழைப்புவாதம் ஒடுக்கப் படும் என்ற ஒரு சந்தேகம் வந்த பின்னால்தான்.

அவரின் உட்சபட்ச கொள்கை என்பதே ஈழ விடுதலை என்பதால் ஈழத் தாயோடு உறவாடி"இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" என டைமிங்காக ரைமிங் பேசிய போதெல்லாம் நமக்கு "சீனப் படையெடுப்பின் போது பெரியார் சொன்ன , என் மக்களின் சூத்திரப் பட்டம் சீனாக்காரன் வருகைக்குப் பிறகு ஒழிந்து போகுமென்றால் நான் சீனாவை ஆதரிப்பேன்" என்ற ஒடுக்கப் பட்ட எல்லோர் மேலும் அன்பை மட்டுமே பாராட்டிய ஆசான் பெரியாரின் உண்மையான கொள்கைப் பேரன் இவர்தான் என்பதில் பேருவகை கொண்ட கோடிக்கணக்கான வாக்காளர்களின் உணர்வை மதித்துக் கிடந்த பலர் என் நண்பர்களாய் இருந்தனர், ஈழத்தை வென்றெடுக்க அம்மையாரோடு கூட அன்பு பாராட்டி ஈழத் தாய் என்ற பாராட்டுக் கூட்டம் நடத்தி காங்கிரசை ஒழிப்பேன் என்ற பெரியாரின் கொள்கைகளை வென்றெடுத்ததாக பேசிய செந்தமிழன் சீமான், சில நாட்களாக வாய்மூடி மவுனமாய் இருப்பதும் வாயைத் திறந்தால் திராவிட இயக்கங்களை அதன் தலைவர்களை மட்டுமே வசவுச் சொற்களாலும், விமர்சன அம்புகளாலும் துளைத்தெடுப்பதன் காரணம் ஒன்றும் சிதம்பர ரகசியமில்லை.

ஆதிகாலம் தொட்டு பயங்கர வாதி பிரபாகரன் என்பதில் கிஞ்சித்தும் மனதளவில் கூட மாற்றமில்லாத ஜெயலலிதாவோடு உறவாட தன் தலைவனாக அண்ணனாக பிரபாகரணைக் கொண்ட அண்ணனின் தம்பிக்கு மனம் வரும் போது கருணாநிதி டெசோவை ஆரம்பிக்கும் போது மட்டும் போதும் கலைஞரே உங்கள் உதவி எங்களுக்கு தேவையில்லை என்பதில் இருப்பது தன் இருத்தலியம் குறித்த கேள்விக் குறியே தவிற வேரென்னவாக இருக்க முடியும்.?

பெரியார் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல என்ற ஒரே பெரியாரின் கொள்கையை மட்டும் பற்றிக் கொண்டு அதையே தனது வேதவாக்காக எடுத்துக் கொண்டு தனது நிஜமுகத்தை காட்டும் ஆணவமாகவே நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தை பார்க்கவேண்டியிருக்கிறது.

//இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகியனவற்றில் உண்மையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்தக் கட்சி உறுதி ஏற்கிறது//

இந்திய அரசியல் சாசனத்தை கொளுத்துவோம் என முழங்கிய பெரியார் கடைசி வரை தனது இயக்கத்தை அரசியல் சார்ந்த மக்கள் இயக்கமாகவே அவர் வளர்த்தெடுத்தார், ஒரு அடிமைத் தனத்துக்குள் சிக்கிக் கொண்டு அதனை கேள்விகேட்கும் எந்த உரிமையையும் அவர் விட்டுத் தர தயாராக இல்லை. அதனால்தான் அவர் சீமானே முன்னர் முழங்கியது போல ஓட்டுப் பொருக்கி அரசியல் எமக்கு வேண்டாம் என்றார்.

சீமானும் ஓட்டுப் பொருக்கி அரசியலுக்கு வந்ததற்கு எமது வாழ்த்துக்கள் ஆயினும் மாற்று அரசியல் என்னும் போர்வையில் வரலாற்றின் திரிபுகளான பக்கங்களை மட்டும் எழுதிச் செல்வதென்பதான தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாத வரை, நாம் தமிழர்கள் ஒரு இயக்கமாகவோ கட்சியாகவோ இல்லை ஒரு கூட்டமாகவோ கூட இருந்திட லாயக்கற்றவர்களாகிறார்கள்.

ஆன்றோர் அவையினரால் உருவாக்கப் பட்ட ஆவணம் தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ளும் என்ற ஒரு வரி இருப்பதிலேயே அதன் உண்மைத் தன்மை கேள்விக்குள்ளாக்கப் படாவிடினும். " ஒரு கடிதம் எழுதி அதன் கடைசி வரியில் தவறுகள் இருப்பின் மன்னித் தருள்க என்பது " எனக்கு என் மகன் எழுதும் கடிதத்தில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளப் படலாமே தவிர லட்சோப லட்சம் அண்ணனின் தம்பிகள் ஒரு தவறான அரசியலைப் படித்து, தவறான வாக்கு வாதங்களில் படக் கூடாத இடத்தில் எல்லாம் அடிபட காரணமாய் இருக்குமே என்பதை அந்த ஆன்றோர் பேரவை சிந்தித்ததா என்பதை அப் புத்தகத்தின் எந்த வரியிலிருந்தும் நாம் அறியக் கிடைக்கவில்லை.

"இந்திய அரசியலை எதிர்த்து இந்திய இறையான்மைக்கு உட்பட்டு இந்தியர்கள் மட்டுமே இணைந்து போராடி ஈழத்துக்கு விடுதலை வாங்கித்தருவோம் " என்ற ஒற்றை வரிக் கொள்கைக்காய் பல ஆன்றோர்களும் சொல்விளக்க அதிகாரமும், கொண்டு விளக்கு விளக்கென்று வெளக்குவதையும், திராவிட இயக்கம் இல்லாவிட்டால் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும்  குன்றில் இட்ட விளக்கு போல் பளீரென்ற ஒளியோடு பார் போற்றும் தேசமாகி இன்று எல்லோரும் இன்புற்று இருப்போம் என்றும் அப்படி இல்லாமல் போன காரணத்தால் எமது :"இந்த கொள்கையால் மட்டுமே குன்றத்தில் விளக்கேற்றி வைத்திட முடிம்" என்ற முழக்கத்தை பக்கம் பக்கமாக வெவ்வேறு வார்த்தைகளில் நீட்டி முழக்குவதைத் தவிற ஒரு......மண்ணும் அவர்களில் ஆவணப் புத்தகத்தில் இல்லை.

என்னமோ அவர்களின் கொள்கை ராம்ராஜ் வேட்டி என்றும் அதை திராவிடத் தோழர்கள் கிழித்துவிட்டதால் அண்ணனின் தம்பியின் த்ம்பிகள் ஒட்டுத் தையல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஆவேசத்தோடு படிக்க ஆரம்பித்த எனக்கு முடிவில் அவர்களின் ஆவணத்தில் இருந்து சில வரிகளைக் கூட மேற்கோள் காட்டி அதை மறுதலிக்கும் பேறு கிடைக்காத அளவிலேயே கம்பெனியின் தரம் இருப்பதால் இப்போதைக்கு ஒரே வரி விமர்சணம்.

"இது தயாரிப்புக் கோளாறு ( மானுஃபாக்சரிங் டிஃபெக்ட்) சரிசெய்யவெல்லாம் முடியாது முடிந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.

ஆவணத்தை குறித்த எந்த குறிப்புகளும் கொடுத்தெல்லாம் அவர்களின் கொள்கைகளை, மறுக்கும் அளவுக்கு அங்கே ஒன்னுமில்லை என்பதே என் புரிதல்.


Tuesday, May 29, 2012

திராவிடச் சோலை.

சோலை. திராவிட இயக்கம் பெற்றெடுத்த பிள்ளை. திராவிட இயக்கத்தின் தாக்கம் கொண்டு ஊக்கமுடன் உழைத்திட்ட பிள்ளை. அய்யா சின்னக் குத்தூசிக்குப் பிறகு நக்கீரனில் தனது இடையறா உழைப்பால் சுமமரியாதைக் கொள்கைகளை தனது பேனா முனையால் வடித்திட்ட சிற்பி. எம்ஜிஆரோடு மட்டுமல்ல கலைஞரோடும் நட்பு பாராட்டிய எழுத்தாளர். இடிப்பவை இடித்தும் எடுப்பவை எடுத்தும் எழுதிய, எடுப்பார் கைப்பிள்ளையாகா எழுத்தச்சன். காங்கிரசின் போலி முக...ங்களை, அதிமுகவின் அராசகத்தை, திமுகவின் தகிடுதத்தங்களை எந்தக் காரணம் கொண்டும் விமர்சிக்கத் தயங்கா எழுத்துப் போராளி. அவரது இழப்பு எல்லா அரசியல் விமர்சன மேதைகளுக்கும், வாசகர்களுக்கும் பேரிழப்பு. சோலை அவர்களே ஒரு முறை சொன்னது போல " இங்கே நிரந்தரமானது எதுவும் இல்லை உண்மையைப் போல, சுயமரியாதையைப் போல, எழுத்தாளனை நேசிக்கும் வாசகனைப் போல" . சோலை எழுத்தாளர் மட்டுமல்ல. நல்ல வாசகரும் கூட " உண்மையான தனித்துவம் கொண்ட அரசியலின் வாசகர்" அதனால்தான் அவர் வாசித்த நல்ல அரசியலை நமக்கு அறிமுகம் செய்தார். எனக்கு என்ன சொல்லி என்னை நான் தேற்றிக் கொள்வேன் தெரியாது. வாழ்க அவர் எழுத்துக்கள்!

Thursday, May 03, 2012

தங்க முலாம் பூசப்பட்ட டம்ளர்களும் போலி ஈழப் போராட்ட பாசமும்

தமிழகத்தில் எழுதப் படாத ஒரு அரசியல் விதி இருக்கிறது. அது உணர்ச்சி வசப்பட்டு பேசி கூட்டத்தைக் கூட்டி பின்னர் ஒன்னுமில்லாமல் போவது. அதற்கு முதல் உதராணம் திரு.வைகோ அவர்கள், இரண்டாவது உதாரணம் திரைப்பட இயக்குனர் சீமான் அவர்கள்.

வைகோ மேடைகளில் பேசும்போது உலக அரசியலை சுமார் இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பித்து பேச ஆரம்பித்ததும் கூட்டம் கொட்டாவி விட்டு இரண்டாம் காட்சி மொக்கை படத்துக்குப் போன இளவட்டமாய் ஆகிவிடுகிறது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் அந்த மயக்கும் பேச்சும் அவரது படிப்பறிவும் பாழாய் போய்க்கொண்டிருக்கிறதே என யாராவது அவரிடம் சொல்வார்களா?

ஜூனியர் விகடனில் ஆயிரத்தெட்டு கேள்விகளோடே கலைஞரைப் பார்த்து கேள்வி கேட்ட வைகோ அவர்கள் சுமத்தும் பெரும்பாலான குற்றச் சாட்டுக்கள் என்னை தேச துரோக குற்றத்தில் கைது செய்தார் என்பது. கருணாநிதிக்கும் கொஞ்சம் அல்ல வைகோவைப் போலவே நிறையவே ஈழ மக்கள் மேல் அக்கரை இருந்தது,, இல்லையேல் அம்மாவின் ஆட்டுக்கல்லாக வைகோ மாறும் முன்னர் பொடாவில் சிறையில் இருந்த வைகோவை வெளியே கொண்டுவர பாடுபட்டிருக்க மாட்டார் " விட்டது சனியன்" என இருந்திருப்பார் வெளியே உங்களை கொண்டுவந்த பின்னர் கேவல சீட்டுக்களுக்காக" அல்லது " மக்கள் அப்போது பேசிக் கொண்டது போல் நோட்டுக்காக தாவியது வைகோவின் நன்றிகலந்த செயல்களுள் ஒன்று.

தேர்தலைச் சந்திக்க விடாமலேயே மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைகோவை உலகறியச் செய்தவர் கலைஞர். அத்ற்க்காக நன்றிசொல்ல வேண்டாம் அவதூறுகளைப் பரப்பாமல் இருந்தால் போதும்.

அப்போ ஒன்னும் செய்யலை இப்போ செய்யவேண்டாம் என்பது எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் அங்கே நாந்தான் பினமாக இருப்பேன் என்பதைப் போலன்றி வேறென்னவாக இருக்க முடியும்? அப்படி கொல்லப்பட்ட போது கலைஞரின் ஒரே பலவீனம் ஆட்சியில் இருந்தது. இன்று தமிழகத்தை மத்திய அரசு மதிப்பதில்லை என எதற்கெடுத்தாலும் புலம்பித்தள்ளும் வைகோவின் நண்பர் பழ. நெடுமாறன் அவர்கள் விளக்குவாரா? அப்போது மட்டுமென்ன திமுக அரசாங்கத்தை தங்கத் தட்டிலா தாங்கினார்கள்.

ஈழம் ஈழம் என முழக்கமிடும் வைகோ ஒன்றறை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அவர்களின் உரிமைக்காக பாடுபடவும் வைகோவுக்கு இருக்கும் அதே உரிமை ஏன் கருணாநிதிக்கு இருக்கக் கூடாது?

ஜெயலலிதா ஆதரித்தால் ஏற்றுக் கொள்ளுவீர்கள். அவர் உளமாற அதை செய்வாரா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லை. ஏன் அவர் மனம் மாறி விட்டதாகக் கூட சீமான் போன்றவர்களும் சொன்னார்கள் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று . ஒரு கவைக்குதவாத சட்ட மன்ற தீர்மானம் இயற்றி ஈழத்தாய் பட்டம் கொடுத்தார்கள்.  இலையும் மலர்ந்தது. ஈழம் இருக்கும் பக்கம் கூட அம்மையார் திரும்பிப் பார்க்கவில்லை. ஏன் அவர்களால் முடியாது என்பது மட்டுமில்லை.விருப்பமும் இல்லை என்பதாலேயே.

இப்போது அம்மையாரின் மனம் புண்பட்டுவிடுமோ பொடாவிலோ தடாவிலோ உள்ளே போக நேரிடுமோ என வாயையும் இன்னொன்றையும் அம்மையாருக்கு எதிராக மூடிக்கொண்டு கடந்த கால வரலாற்றை பற்றிப் பேசி கருணாநிதிக்கு எதிராக மட்டுமே மக்களைத் திரட்டுவதால் என்ன பயன் சீமானுக்கும் வைகோவுக்கும் பழ.நெடுமாறனுக்கும் கிடைக்கப் போகிறது என்ப்து அந்த ராஜபக்‌ஷேவுக்கே வெளிச்சம்.

உண்மையிலேயே சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களுக்கு ஈழத்தின் மேல் அக்கரை இருப்பின் இப்போதாவது கருணாநிதி நமக்கு ஆதரவாக வருகிறாரே என மகிழ்ச்சியல்லவா அடைந்திருக்க வேண்டும்? இல்லை உனக்கு அந்த தகுதியில்லை என்று கூறி கொச்சைப் படுத்துவதில் இருந்தே தெரிகிறது அவர்களின் நோக்கம் தனி ஈழமல்ல, தனி ஈழத்தைக் கொண்டு தாங்கள் நடத்திவரும் நாடகத்தில் கருணாநிதிக்கு முக்கியப் பாத்திரம் கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மட்டுமே.

டெசோவை கருணாநிதி ஆரம்பித்தால் நாளை மதியமே அங்கே தனி ஈழம் மலரும் எனச் சொல்லும் அளவுக்கெல்லாம் நான் புத்திசாலி இல்லை. ஆனால் ஒருங்கினைக்கப்படாத் ஒரு இயக்கம் எப்படி ஒழுங்கமைவதாக இருக்காதோ அதே போல யார் சொன்னால் எவர் சொன்னால் ஒரு கவணத்துக்கு அந்த விஷயம் வருமோ அவர்களின் பின்னால் நீங்கள் போகவெல்லாம் வேண்டாம் சும்மா பொத்திக்கொண்டாவது இருக்கலாமே என் அன்பு மக்களே!

வைகோவும் சீமானும் நெடுமாறனும் தமிழக மக்களை\உணர்ச்சி வயப்பட வைத்து பதினான்கு பேருடைய மரணத்துக்கு காரணமாய் இருந்ததைத் தவிற வேறு ஒன்னையும் செய்துவிடவில்லை. தங்களை யாராவது மைக் செட் போட்டு வாடகைக்கு மண்டபம் பார்த்து. மக்களைத் திரட்டி ஈழம் பற்றி எச்சில் தெரிக்க பேசக் கூப்பிடுவதைத் தவிற.

உங்களின் ஈழப் போராட்டத்தில் எங்களுக்கு இதுவரை எந்த சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால் நீ போராடாதே என கருணாநிதியை சொல்லும் போதுதான் உங்கள் வேஷம் கலைந்து சுயம் வெளிப்பட்டுவிட்டது.

Wednesday, May 02, 2012

நான் மீண்டு(ம்) வந்த பாதை

2006 மே மாதம் நான் முதன் முதலாக இனையத்தை படிக்க மட்டுமின்றி அவற்றை பகிர்ந்து கொள்ளவும் தொடங்கிய ஆண்டு முற்றாக இரண்டு ஆண்டுகள் ப்ளாகரே கதிஎன்று கிடந்தபோது பணி நிமித்தமாக பல இடங்களுக்கு மாற்றலும் இந்தியாவில் ஒரு ஆண்டு கழித்ததும் என்று கொஞ்சமல்ல மிக நீண்டதொரு இடைவெளியே ஏற்பட்டது. ஆயினும் கடந்த ஒரு ஆண்டாக ஃபேஸ்புக் என்னும் அரக்கனின் கையில் அகப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன அங்கேயும் தமிழ் வலைப்பதிவுகள் போலவே ஆரியம் திராவிடம் கலைஞர் ஈழம் என நித்தம் போர்க்களம்தான் என்ன பேஸ் புக்கில் இருப்பவர்கள் தனிமடலில் வந்தெல்லாம் நம் குடும்பப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதில்லை என்பதைத் தவிற.

இடையில் நான் தமிழ் வலைப் பக்கங்களில் எழுதாத போது என்னைப் பற்றி அவதூறாக செய்திகள் வெளியிட்ட நண்பர்களின்!! பதிவுகளை சிறு புன்னகையுடன் நான் படித்துக் கொண்டிருந்ததை இங்கே தெரிவிக்க வேண்டும்..

தொடர்ந்து இயங்கிய காலங்களில் வளைகுடாவில் நண்பர்களாக இருந்த குசும்பன்,முத்துக்குமரன்,சென்ஷி,அபிஅப்பா,அய்யனார்,துபாய் ராஜா, போன்றோர் என்னோடு தற்போது முற்று முழுதாக விலகியிருப்பதன் காரணம் தொடர்பு எண்கள் தொலைக்கப் பட்டதாலா என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். மீண்டும் தொடர்புகொள்ள 00971554736076 என்ற எண்ணில் என்னை  தொடர்புகொள்ளலாம்.

சிங்கைப் பதிவர் கோவி.கண்ணன் மட்டுமே இப்போதும் எப்போதும் என்னோடு தொடர்பில் இருப்பவர். நான் ஊருக்கு போகும் போதெல்லாம் சந்திக்க முயன்று அதுவும் அவர் வீட்டு புதுமணை புகுவிழாவில் சந்தித்தேன். நான் லக்கிலுக்கையும் அங்கேதான் சந்திக்க நேர்ந்தது.

அதே சமயம் நான் கிழுமத்தூரில் விடுமுறைக்காக சென்றபோது என் தொலைபேசி எண்ணை இணையத்தில் கண்டவுடன் பாசத்தோடு தொலைபேசிய செந்தழல் ரவியும் நானும் என்ன பேசிக் கொண்டோம் என்பது எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் :)

மீண்டும் வளைகுடா வாழ்க்கை. இணையத் தொடர்பில் இருந்தும் பேஸ்புக் மட்டுமே கதியெனக் கிடந்து கொஞ்சம் சோர்வடையும் நேரத்தில்தான் எனக்கும் ஒரு வலைப்பதிவு இருப்பதே நினைவுக்கு வந்து தொலைத்தது. 

தொடங்கியாகிவிட்டது அடுத்த இன்னிங்க்ஸ்.... அல்லக் கையே வருக என பின்னூட்டப் பெட்டியில் பின்னூடம் போடும் முன்பு ஒரு முக்கிய அறிவிப்பு நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளுங்கள்... என் மனசாட்சிக்கு விரோதமாகவோ அல்லது அடுத்தவர் மனம் நோகும் விதமாகவோ ... அடுத்தவர் பற்றி ஆபாசம்.. அவதூறாகவோ ஒரு பதிவும் எழுதவில்லை என்பதே உண்மை.  அது என் மேல் பழிசுமத்தியவர்களுக்கும் தெரியும்.

என் சூழல் காரணமாக மட்டுமே நான் தொடர்ந்து எழுதவில்லையே தவிற. என்மேல் சுமத்தப் பட்ட அவதூறுகளுக்கு பயந்து ஒதுங்கிவிட்டதாக எண்ணியிருந்தால் சாரி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

Sunday, June 26, 2011

அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு அடக்கப்பட்டு, தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும்.

தி.மு.க. தோன்றுவதற்கான வரலாறு

அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் திராவிடர் என்ற சொல் சூத்திரர் என்ற சொல்லுக்குப் பிரதிச் சொல்லாகக் கருதப்படும் சொல்லாக இருப்பதாய்க் கருதப்பட்டு வந்ததால், அப்பெயரைக் கழகத்திற்கு வைக்க ஆந்திரர்கள் ஆட்சேபித்ததால் அக்கழகத்திற்கு தென் இந்தியர் விடுதலைக் கழகம் என்பதாகப் பெயரிட்டுத் (South Indian Liberal Federation) துவக்கினார்கள்.

என்றாலும், துவக்க காலத்தில் ஜமீன்தார்கள், செல்வவான்கள், படித்த கூட்டத்தினர் ஆகியவர்களே முன்னின்று முக்கியமானவர்களாக இருந்து துவக்கப்பட்டதால் இம்மூன்று குழுவினர்களின் நலனே அதற்கு முக்கியக் கொள்கையாக இருக்கவேண்டி வந்தது. ஆட்சியையும், பதவியையும் கைப்பற்றுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தாயிற்று.

ஆரம்பத்திலேயே பார்ப்பனர்களின் தொல்லை

இந்த முயற்சி பார்ப்பானுக்குப் பெருங்கேடாய் முடியக்கூடியதாயிருந்ததால் இம்முயற்சிக்குப் பார்ப்பனர்கள் கூண்டோடு எதிரிகளாய் இருந்து இந்த ஸ்தாபனம் வெற்றிகரமாய்த் தொண்டாற்ற முடியாமல் தொல்லைக்குள்ளாக் கப்பட்டு தக்கபலன் ஏற்படச் செய்யாமல் தடுக்கப்பட்டு வந்தது.

என்றாலும், இந்த ஸ்தாபனம் ஏற்பட்டதன் பயனாய் பார்ப்பனர் வேறு நாம் வேறு என்பதையும், பார்ப்பனர் தென்னிந்தியர்களுக்கு, திராவிடர்களுக்கு அரசியல், சமுதாய நல்வாழ்வுத் துறைக்கு பரம்பரை எதிரிகளும், தடங்கல்களுமாவார்கள் என்பதையும் திராவிட மக்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கும்படிச் செய்துவிட்டது.

திராவிடர்களின் நிலை

ஆனால் திராவிடர்கள் பாமரர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும், 100க்கு 100 பேரும் இருந்து வந்ததால் தாங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியாமல் இருக்கும்படி ஆரியர்களின் கடவுள், மதம் சாஸ்திரம் பாரத ராமாயணப் பற்று, முதலியவைகள் செய்துவிட்டபடியால் வெறும் பதவி உத்தியோகம், தனிப்பெருமை ஆகியவற்றி லேயே பற்றுக்கொண்டு சமுதாய வளர்ச்சியை முக்கியமாய்க் கருதாமல் போய்விட்டது.

அண்ணாவின் தலைமை

பிறகு அந்த ஸ்தாபனம் அரசியலில் பெருந்தோல்வியுற்றதன் பயனாய் சமுதாயத் தொண்டுக்கு என்றே துவக்கி நல்ல நிலையில் நடந்துவந்த சுயமரியாதை இயக்கத்துடன் அந்த ஸ்தாபனம் இணையும்படியான நிலைக்கு வந்ததன் பயனாய் தென்னிந்தியர் விடுதலை ஸ்தாபனம் என்கின்ற பெயர் மாற்றமடைந்து திராவிடர் கழகம் என்கின்ற பெயருடன் நடந்து வந்தது. இதில் பிளவு ஏற்பட்டதன் காரணமாய் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரால் மேற்சொன்ன தென்இந்தியர் விடுதலை ஸ்தாபனம் (ஜஸ்டிஸ் கட்சி) அண்ணாவின் தலைமையில் சுமார் 18 ஆண்டு பொறுத்து தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றி சமுதாயத்தின் முன்னேற்றத் தொண்டையே முக்கியமாய்க் கொண்டு இன்று தமிழர்களுக்கு ஆரியர் - பார்ப்பனர் அல்லாத தமிழர் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது.

தி.மு.கழகத்தின் அரும்பெரும் சிறப்பு

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலேயே பார்ப்பனர் தவிர்த்த மற்ற திராவிடர் சமுதாயத்திற்கு, சிறப்பாக சமூகத் துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும்படியான நிலையில் இருந்து வருகிறது.

இதன் தொண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இரண்டாவது, அரசியல் பதவிகளில் எல்லாவற்றிலும் தமிழர்கள் (விகிதாசாரம் பெறாவிட்டாலும்) அமரும் நிலை ஏற்பட்டது.

மூன்றாவதாக, கல்வித்துறையில் கல்வி பெற்ற மக்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

நாலாவது, இன்றைய ஆட்சி தனித்தமிழர் - திராவிடர் ஆட்சி என்று சொல்லும்படி இருப்பது.

அய்ந்தாவது பார்ப்பனன் என்றால் நமக்கு, தமிழனுக்கு சமமான பிறவியே அல்லாமல் எந்த விதத்திலும் உயர்ந்த பிறவி அல்ல என்பதை தமிழனின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் விளங்கி இருப்பது முதலியவைகளாகும்.

அடிப்படைக் கொள்கையில் வெற்றி

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகத்தைப் போலவே சமுதாயத்துறையில், அதன் அடிப்படைக் கொள்கையில் வெற்றிப்பாதையில் மாபெரும் வெற்றிப் பாதையில் செல்லுகிறது என்று சொல்லத்தக்க வண்ணம் இருந்து வருகிறது.

ஆகவே, திராவிடர் கழகமோ, திராவிடர் முன்னேற்றக் கழகமோ தனது இலட்சியத்தை - கொள்கையைச் சிறிதும் குற்றம் குறையின்றி வெற்றி வழியில் பின்பற்றித் தொண்டாற்றி வருகிறது.

இதை உலகிற்கு ஒரு புதுமை என்றுதான் சொல்லவேண்டும்.

உலகில், குறிப்பாக இந்தியாவில் - சமுதாயத் துறையில் இதுபோல் தொண்டாற்றிய - தொண்டாற்றும் வெற்றி ஸ்தாபனம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக இந்த ஸ்தாபனத்தின் தொண்டால் தமிழர்கள் பார்ப்பனர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்றும் சொல்லலாம்.

------------------------ தந்தை பெரியார் - "விடுதலை" - 11.03.1971