Friday, January 30, 2015

நெகிழ வைத்த திரைப்படங்கள் -7 Der Untergang (Downfall)

பொதுவாகவே சரித்திரங்கள், இரண்டாம் உலகப் போர், உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட திரைப்படங்கள் எப்போதும் என்னைக் கவருபவை. சில படங்கள் படு அயோக்கியத் தனமாக உண்மையைக் கொலைசெய்து வரலாற்றுத் திரிப்பில்  ஈடுபட்டாலும் சில முத்துக்களும் ஆங்காங்கே கிடைக்கத்தான் செய்கின்றன அப்படியான முத்துக்களில் ஒன்றுதான் இந்த Downfall (Der Untergang- German, 2004). நிறைய வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலும் நேரடி சாட்சிகளின் அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டும் உருவான இப் படம் நம்மை இரண்டாம் உலகப் போரின் கடைசி தினங்களுக்கு கொண்டு செல்கிறது.

Downfall.
இரண்டாம் உலகப் போருக்கு முன்னாலிருந்து  ஹிட்லரின் தற்கொலை வரை ஹிட்லரிடம் அந்தரங்க உதவியாளராக இருந்த ஃப்ராடி ஜங் (Traudi Jung (1920-2002) தான் இளம் வயதில் ஹிட்லரிடம் உதவியாளராகச் சேர்ந்ததை நம்மோடு சொல்ல ஆரம்பிக்கிறது கதை. படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஃப்ராடி ஜங் தோன்றியிருக்கிறார்.

ஹிட்லரின் பிறந்த நாள் 1945 ஏப்ரல் 20ம் தேதி  நள்ளிரவில் தங்களுக்கு மிகச் சமீபத்தில் குண்டு வெடிப்பதைக் கேட்ட  ஃப்ராடி ஜங்கும் அவரின் உடன் பணிபுரிவோரும் எழுந்துகொள்ள ஹிட்லரும் விழித்துக் கொண்டு ஆர்ட்டிலரி தாக்குதல்கள் எங்கு எப்படி எவ்வளவு தூரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று கேட்க ஆரம்பிக்கிறார். ஜெனரல் பர்ஹ்டாஃப் பெர்லினில் இருந்து 12 கிலோமீட்டர்களுக்கு அப்பால் ரஷ்யாவின் படை வந்துகொண்டிருப்பதையும் தெரிவிக்கிறார்.

பிறந்தநாள் நிகழ்வின் போது ஹிட்லரின் எஸ்.எஸ் ஆர்மியின் ஜெனரலான ஹென்ரிச் ஹிம்லரும் ஹெர்மன் ஃபாக்லீனும் சீக்கிரமே பெர்லின் மேற்குக் கூட்டணிப் படைகளிடம் விழுந்துவிடும் என்றும் அதற்கு முன் ஹிட்லர் பெர்லினை விட்டு வெளியேறிவிடுவது நல்லது என்றும் தெரிவிக்கிறார்கள். ஆனால் பெர்லினுக்குள் நுழையும் வேளையில் ரஷ்யப் படைகள் அழிக்கப் படும் என்றும் இல்லாவிட்டால் பெர்லின் என்னோடு சேர்ந்தே விழும் என்றும் கூறி வெளியேற மறுத்துவிடுகிறார் ஹிட்லர். இதற்குப் பின்னால் ஹிட்லருக்குத் தெரியாமல் ஜெர்மனி சரணாகதி அடைவது பற்றி கூட்டணிப் படைகளுக்கு தகவல் அனுப்பி வைக்கிறார் ஹிம்லர்.

ஹிட்லரின் எஸ்.எஸ் படையில் மருத்துவராக பணியாற்றும் டாக்டர் எர்ன்ஸ்ட்டுக்கு மற்றுமொரு போர்முனைக்கு போகும் படி கட்டளை வருகிறது ஆனால் பெர்லினின் மைய்யப் பகுதியில் இருக்கும் மக்களுக்கும் போர் வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் மருத்து விடுகிறார். பின்னர் ஹிட்லரின் மறைவிடத்துக்கு அருகிலேயே இருக்கும் ஒரு மறைவிட மருத்துவமணையில் உள்ள காயமடைந்தவர்களுக்கு மருத்துவம் தொடர்கிறார்.

ஹிட்லரின் அமைச்சர்களும், ஈவா ப்ரானும் பெர்லினை விட்டு வெளியேறிவிடவும் வேறெங்காவது ஒரு மறைவிடத்தில் இருந்து அரசியலைத் தொடரலாம் என்றும் தெரிவிப்பதையும் மறுத்து விடுகிறார் ஹிட்லர். மேலும் போரின் அடுத்த நகர்வாக 9ம் படையையும் 12ம் டிவிஷனையும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போரைத் தொடங்கும்படியும் அதன் மூலம் பெர்லின் செம்படையின் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் நம்புகிறார்.

அடுத்தநாளே ஹிட்லரின் படைத் தலைவர்களுல் ஒருவரான ஹார்மஸ் கெர்ப்ஸ் வந்து 9 மற்றும் 12ம் படை அணிகளின் எண்ணிக்கை குறித்தும் அவை எந்தப் பக்கத்திலும் நகர முடியாதபடி சூழப் பட்டுள்ளதையும் தெரிவிக்கிறார்கள். பின்னர் தன் படைத் தலைவர்கள் அமைச்சர்கள் முன்னிலையின் எல்லோரையும் துரோகிகள் என்றும் மோசடிப் பேர்வழிகள் என்றும் திட்டித் தீர்க்கிறார். அதன் பின் பெர்லினை விட்டு வெளியேறவேண்டும் என்ற மற்ற அனைவரின் கோரிக்கையையும் நிராகரித்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார் ஹிட்லர்.

ஹிட்லரின் கொள்கைப்பரப்பு அமைச்சர் ஜோஸப் கோயபல்ஸ் போர்க்களத்தில் இருந்து வெளியேரும் பொதுமக்களைக் கொல்லும் படி ஆணையிடுவதை ஜெனரல் மொன்க்ஃஹே எதிர்க்கிறார். போர்க்களத்தில் இறக்கும் பொதுமக்களைப் பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தெரிவிக்கிறார் கோயபல்ஸ். (நமக்கு போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் ஞாபகம் வருகிறது.)

போரில் ஜெர்மன் தோல்வி நிச்சயம் ஆனதும் ஹிட்லர், ஈவா, இருவரும் தங்களின் கடைசி கடிதத்தை தயாரிக்கிறார்கள். போர் வீரர்களைத் தவிர்த்து தங்களோடு இருப்பவர்கள் இருக்கலாம் போக விரும்புவோர்கள் போகலாம் என்றும் ஹிட்லர் அறிவிக்கிறார்.  ஃப்ராடி ஜங்குக்கு ஒரு சயனைடு பேழையைத் கொடுக்கிறார். ஈவாவை பெர்லினை விட்டு வெளியேரச் சொல்லும் ஈவாவின் தங்கைக் கணவன் பெர்லினைவிட்டு தப்பிச் செல்கையில் பிடிபட்டு மரணதண்டனைக்குள்ளாகிறான்.

போரின் கடைசி நாட்களில் தன் நிதானம் இழக்கும் ஹிட்லர் ஹெர்மன் கோரிங் ஹிட்லருக்குப் பின்னால் தனக்கு போர் நடத்த அனுமதி வேண்டும் என்று கேட்டு ஒரு தகவல் அனுப்ப அதைக் கண்டு கொதிக்கும் ஹிட்லர் ஹெர்மனைக் கைது செய்ய உத்தரவிடுகிறார்.  ராபர்ட் ரிட்டர் வான் க்ரிம்மை அழைத்து லுட்வாஃபேவின் கமாண்ட்டர் இன் சீஃப் ஆக நியமிக்கிறார் ஹிட்லர்.
அதன் பின்னர் தன் குடும்பத்தோடு வெளியேர வேண்டி அனுமதி கேட்கும் டாக்டர் எர்னஸ்டுக்கு ஹிட்ட்லர் அனுமதி மறுக்க எர்னஸ்ட் தன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறார்.

ஹிட்லரின் மறைவிடத்தில் இருந்து 400 மீட்டர் தூரம் வரை கூட்டணிப் படைகள் முன்னேறி விட்டதை அறிந்த ஹிட்லர் ஈவா ப்ரானை திருமணம் செய்து கொள்ளும் முன்னர் ஃப்ராட்டியிடம் தன் கடைசி கடிதத்தை எழுதச் சொல்கிறார். பின்னர் கோயபல்ஸையும் அவரின் குடும்பத்தையும் பெர்லினை விட்டு வெளியேறிப் போய்விடும் படியும் கேட்டுக் கொள்கிறார் ஆனால் கோயபல்ஸ் மறுத்துவ்விடுகிறார். ஈவா ப்ரானும் ஹிட்லரும் திருமணத்துக்குப் பிறகான விருந்து முடிந்ததும் தன் அந்தரங்க பணியாளர்கள் அனைவரிடமும் தங்களின் கடைசி வணக்கத்தையும் வாழ்த்தையும் கூறி விடைபெற்றுக் கொண்டு அறைக்குள் சென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். 

பின்னர் இருவரின் உடலும் ஹிட்லரின் விருப்பப் படி மெய்க் காவலர்களால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப் படுகிறது. அதன் பின்னர் கோயபல்ஸும் மனைவியும் குழந்தைகளுக்கு சயனைடு கொடுத்து கொன்றுவிடுகிறார்கள். கோயபல்ஸ் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறார்.   பெர்லின் ரஷ்ய கூட்டணிப் படையிடம் தோல்வி அட்டைந்ததை அறிந்த பல ராணுவ அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஃப்ராடி கடைசி நேரத்தில் பெர்லினை விட்டு வெளியேறிச் செல்வது என்ற முடிவெடுத்து வெளியேறிவிடுகிறார்.

1945ல் போரின் கடைசி நாட்களை மட்டுமே படம் விவரிக்கிறது. மாபெரும் படை பலத்துடனும், மக்களின் முன்னால் உரையாற்றியும் கர்ஜித்த ஹிட்லரின் கடைசி காலம் அத்தனை வேதனையும் வலியும் நிரம்பியதாக இருந்திருக்கிறது. ஹிட்லரின் பின்னால் அணிவகுத்து நின்றவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே விசுவாசத்தின் அடையாளமாக தோன்றுகிறார்கள்.

பல்லாயிரம் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லருக்குள் இருக்கும் கடைசிக் கால நெருக்கடிகளும், அவரின் வேதனையும் அவரைச் சுற்றி கோபத்தை மறைத்தபடி  இருந்தவர்களின் இயலாமையையும் அப்படியே நமக்கு உணர்த்துவதில் இயக்குனரும் நடிகர்களும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஹிட்லரின் உதவியாளர்கள், ஜெனரல்கள், சமையல்காரர்கள் என எல்லோருக்கும் ஹிட்லரின் மேல் இருக்கும் அன்பு கடைசி வரை மாறுவதே இல்லை.  ஒரு மாபெரும் இனப் படுகொலையாளனாக உலகுக்குத் தெரிந்த ஹிட்லரின் மறுபக்கம் இப்படி ஒருவருக்குமே தெரியாமல் போகக் காரணம் ஹிட்லரோடு சேர்ந்தே அவர்களும் மரணமடைந்ததுதான் போலும். 

குறிப்பாக ஹிட்லரின் மரணத்துக்கு முன்னால் ஈவா ப்ரான் மகிழ்ச்சியோடு கொண்டாட்டங்களில் ஈடுபடுவதும், எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் முகத்தின் ஒரு பக்கம் ஒரு மறைமுகச் சோகம் ததும்புவதும் நமக்குள் என்னவோ செய்கிறது. ஹிட்லர் தன் பணியாளர்களோடு கடைசி விடைபெரும் போது அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அவர்களுக்குள் என்ன மாதிரியான அன்பு இருக்கிறது என்பதை எல்லாம் அற்புதமாக காட்சிப் படுத்தி இருக்கிறார்கள்.

ஹிட்லரின் மரணத்துக் பின்னால் கோயபல்ஸின் மனைவி தன் ஆறு குழந்தைகளுக்கும் தூக்க மருந்தைக் கொடுத்து பின்னர் அவர்கள் தூங்கிய பின்னர் ஒவ்வொருவர் வாயிலும் சயனைடு குப்பிகளை வைத்து உடைத்து மரணத்தின் வாசலுக்குள் தள்ளிவிடும் காட்சியும் ஒரு நிமிடம் இந்தக் குழந்தைகள் என்ன செய்தன? என்ற கேள்வியை விதைக்கின்றது. பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப் பட்ட யூதக் குழந்தைகளும் கூடவே.

இத்தாலியின் முசோலினி போரில் தோல்வியை நெருங்கிக் கொண்டிருந்தபோது தப்பிக்க முயற்சிசெய்து பிடிபட்டு கொலை செய்யப் பட்டார் அது போல் ஏன் ஹிட்லருக்கு நடக்கவில்லை என்பதற்கெல்லாம் இப் படத்தில் பதில் இருக்கிறது. போரில் கடைசி காலத்தில் ஹிட்லர் இல்லாத ஜெர்மனியை யாரும் நினைக்கக் கூட இல்லை. எல்லாம் ஹிட்லர், விசுவாசம் இனப் பாசம், ஹிட்லர் முசோலினியைப் போல பெர்லினை விட்டுப் போகவும் இல்லை,  

ஹிட்லரின் கடைசி தினங்களுக்குள் நீங்களும் கொஞ்சம் வாழ விரும்பலாம், எத்தனை பெரிய கொடுங்கோலனுக்கும் வாழ்கை என்பது கடைசி காலங்களில் ஒரே மாதிரியாகவும் தனிமையிலும் கழியும் அது எப்படி என்பதைப் பார்க்க ஆவல் இருக்காதா என்ன?




 

Wednesday, January 14, 2015

பதவிக்காக..


சுஜாதாவின் பதவிக்காக நாவலை ஒரே மூச்சில் இரண்டாவது முறையாக இன்று படித்து முடித்தேன். தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த அரசியல் நாவல்களுள் ஒன்றான இது எத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை..

தன்ராஜின் இடைத்தேர்தல் வெற்றியிலும் சின்னப்பனின் தோல்வியிலும் தொடங்கும் நாவல் எத்தனை சித்துவிளையாட்டுகள், சாதுர்யங்கள், சதிகள், திடீர் திருப்பங்கள் அரசியலில் சாத்தியமோ அத்தனையும் தொட்டுச் செல்கிறது. 1987-88 அரசியல் காலத்தைக் கொண்டு பார்கையில் இது அப்போதைக்கு ஒரு துணிச்சலான நாவலாக இருந்திருக்கலாம்.

நாவலில் எங்குமே தன்ராஜின் வேகம் குறையவில்லை. மாறாக ஆறுமுகனாருக்கும் அரங்கராமானுஜத்துக்கும் நடக்கும் பதவிப் போட்டியில் பலிகடா ஆக்கப் படாமல் சாதுர்யமான வழி நகர்த்தல்கள்,

திலகவதியோடு திருமணம், ஜமுனாவோடு இன்னொரு வாழ்கை என்று கதைதான் ஆனால் சுஜாதாவின் எல்லா நாவல்களின் கதாநாயகன்களிலும் , அவன் கொலைத் தொழில் திருட்டுத் தொழில் செய்பவனாக இருந்தால் கூட (உதா: என்றாவது ஒரு நாள், மேகத்தை துரத்தினவன்) இருக்கும் அதே ஒரு துளி நேர்மை ஒட்டிக் கொண்டிருக்கும் காதாநாயகன் நம் தன்ராஜ்.

காவல்துறையின் அசுர பலம் அரசாங்கத்தின் உளவுக் கண்கள், மத்திய அரசு மாநில அரசின் மேல் செலுத்தும் அழுத்தம், வெறுப்பு விருப்புகளுக்காக மட்டுமே மாநிலத்தில் அரசியல் தலையீடு அதற்கு வர்மா என்ற ஒரு புத்திசாலித்தனமான குள்ளநரி கவர்னர் என்று கதை எல்லா தளங்களிலும் தட தடக்கிறது. சென்னையிலும் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் பதவிக்கு வரத் துடிக்கும் அரசியலை அழுத்தமாக பதிவு செய்கிறது நாவல்.

பாலியல் தொழிலாளி கம் நடிகை கௌரியின் கொலையில் ஒரு சாட்சியாக நுழையும் சாவித்திரி, ஐபிஎஸ் கோகுல் போலீஸின் நேர்மை அநியாயங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாக கூடவே வருகிறது. சாவித்திரியின் சக பத்திரிகையாளனின் செல்லக் காதல் இளமை , நட்புக்கு ஒரு சாட்சி.

ஒரு மாநில அரசை மத்திய அரசு என்னவெல்லாம் செய்யலாம் ஒரு முதல்வர் , மாநிலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்று அதன் உச்சம் வரை சென்று பார்க்கிறது நாவல். கவர்னர்கள் நினைத்தால் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசின் துணைகொண்டு ஆட்டிப் படைக்கலாம் என்பதை விரிவாகவும் தெளிவாகவும் சொல்கிறது நாவல். நமக்கும்தான் வந்து வாய்க்கிறார்களே ஆட்டுக்குத் தாடி போன்ற கவர்னர்கள் என்று நமக்குத் தோன்றுவதை தவிற்க முடியவில்லை.

இதெல்லாவற்றையும் விட ஜமுனாவின் கணவனாக வரும் கோவிந்தராவ்..... எமகாதகன். சாருவின் வார்த்தைகளில் சொன்னால் பெட்டிஷ் பெட்டிஷ். ஜமுனாவுக்கும் தன்ராஜுக்கும் இடையில் இருக்கும் காதலை கண்டு கொண்ட பின்னரும் அதை மனதுக்குள் வைத்துக்கொண்டே ஒன்றுமே தெரியாதவன் போல ஜமுனாவை அன்பாலேயே அடித்து துவைத்து கொல்லும் கிராதகன். அவன் செய்வதை அவன் அளவில் அது நியாயமாகத்தான் படுகிறது. 

ஜமுனாவும் பிறந்து இருபதே நிமிடத்தில் இறந்த குழந்தையும் பொட்டில் அறைய தன்ராஜ் விரக்தியின் உச்சியில் முதல்வர் பதவி வேண்டாம் என்க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத அரங்கராரும், ஆட்சிக்கு வந்த ஆறுமுகமும் அதையும் காப்பாற்ற முடியாத நிலையில் தேர்தலுக்குள் தள்ளி விடுகிறார் கவர்னர்.

இதை அப்போது நாவலாக இல்லாமல் தொடராக படித்தவர்களுக்கு வாரா வாரம் கண்டிப்பாக காத்திருப்பது ஒரு தண்டனை போல் இருந்திருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் தடக் படக்கென்று நகர்வதை படிக்கும் போது உணரமுடிகிறது. 

ஒரு அரசியல் சினிமா ஆவதற்க்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கும் நாவலை இதுவரை யாரும் சினிமாவாக்காமல் இருப்பதற்க்காக பல கோடி நன்றிகள், இதில் இருந்து கொஞ்சமாய் எடுத்து முதல்வன் ஆக்கியிருக்கிறார் ஷங்கர். அந்த யாருக்கும் அடங்காத ஒரு நாள் முதல்வர். ஒரு கருதான். 

சந்தேகமே இல்லாமல் எந்த இலக்கிய தகுதிகளையும் விட்டுவிட்டுப் பார்த்தால், சுஜாதா ஜனரஞ்சக எழுத்தாளர்களில் முதலிடம் பெற வேண்டிய ஆள்தான்.

Tuesday, January 13, 2015

மாதொருபாகனுக்கு முன் மஹாபாரதத்தை கொளுத்துவோம்.!

பெருமாள் முருகன்  நான்காண்டுகளுக்கு முன்னால் எழுதி காலச் சுவடு பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட மாதொருபாகன் நாவலைக் கொளுத்தியதில் ஆரம்பித்த சர்ச்சை இன்று பெருமாள் முருகனின் வாயாலேயே இனி நான் எழுத மாட்டேன் என்று சொல்லவைத்து இந்து சனாதனம் காக்கும் கோழைகள் தங்கள் கோர முகத்தை காண்பித்திருக்கிறார்கள். இந்த கட்டுரை பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலைப் பற்றியதும் இல்லை.

படைப்பை அதன் தளத்தில் இருந்து உணராமல் அதில் இருக்கும் வார்த்தைகளை பிடித்து தொங்கிக்கொண்டே கலைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் பழமைவாதிகள் இந்து மதத்தில் மட்டும் இல்லை என்பது எத்தனையோ முறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.

தங்கள் கடவுள்களை மத நம்பிக்கைகளை கொச்சைப் படுத்துவதாகக் கூறி கிருஸ்துவர்கள் டாவின்ஸி கோடு திரைப்படத்தையும், முஸ்லிம்கள் விஸ்வரூபம் படத்தையும் தடைசெய்தது எல்லாம் மறந்து போகக் கூடியவை இல்லை.  புனைவுகளின் வழியே கதை சொல்லுதல் என்பது மனிதனின் கலாச்சார மரபுகளில் ஊறிப்போன ஒன்று.  கீதை, மகாபாரதம் ராமாயணம் என்று எழுதப் பட்ட எல்லாவற்றிலும் இவர்கள் இன்று எதிர்ப்பு தெரிவிக்கும் மாதொருபாகனை விடவும் ஆபாசம் நிறைந்த , பிறன் மனைவி கலத்தல், முறையற்ற உறவுகள், பல தார மணம் என்று இந்தியப் பழமைவாதிகள் கொண்டாடிக் கொன்டிருக்கும் பல படைப்புக்கள் இன்று மதங்களின் வேதங்களாக ஏற்றுக்கொண்டவர்கள்தான் நாம்.

மனுதர்மத்தை ஏற்றுக் கொண்டு அதன்படிதான் காலம் காலமாய் ஆட்சியும் அதிகாரமும் ஆளுக்கொரு நீதி, குலத்துக்கொரு நீதி என்று நடக்கும் இந்த நாட்டில் கருத்துரிமையை எதிர்பார்ப்பதெல்லாம் நமது முட்டாள்தனம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. மகாபாரத பாஞ்சாலி முதல் ராமாயணத்து தசரதன் வரை புனைவுகள் எல்லாம் ஆபாசம்தானே?  இவர்கள் ஆபாசம், கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கக் கூடியவை என்றால் முதலில் மஹாபாரதத்தையும் ராமாயணத்தையும் அல்லவா கொளுத்தியிருக்கவேண்டும். எனக்கு ஆபாசமாகத் தெரியும் புத்தகம் அவர்களுக்கு புனித நூலாகத் தெரிவதில் தான் இருக்கிறது சூட்சுமம்,

கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் தன் சகிப்புத் தன்மையை இழந்துவருவதன் வெளிப்பாடுகள்தான் புத்தகங்களை, நாடகங்களை, கலையை, தன் கவைக்கு உதவாத கலாச்சார கோட்பாடுகளைக் கொண்டு எதிர்ப்பதும், தடைகோருவதும் என்பவை எல்லாம் நமக்கு வெளிப்படுத்தும் செய்திகள். இலக்கியம் முதல் ஈழம் வரை இன்று எதை எழுதினாலும் ஒரு கும்பல் தங்களின் கலாச்சாரக் கேடயங்களை தூக்கிக் கொண்டு சண்டைக்கு வந்து விடுகிறார்கள். யாருக்குத்தான் இல்லை கலாச்சாரம்?



ஒவ்வொரு மனிதனும் தன் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அடிப்படை மனித உரிமை என்று நம் அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் நமக்கு நாமே கொண்டாடிக் கொள்கிறோம்.  ஆம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது ஆனால் யாருக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அது ஆட்சியில், அதிகாரத்தில், மக்கள் பலத்தில் ஆதிக்கம் உள்ளவர்களுக்கே ஆதரவாக இருக்கிறது என்பது உலகம் எங்கும் நடைபெறுகிற ஒன்று.

பழமைவாதிகள் இப்படி காலம் காலமாய் கொலைமிரட்டல், வியாபார மிரட்டல், கருத்துச் சுதந்திர அச்சுறுத்தல் என தங்களை ஆதிக்கசக்திகளாக்கிக் கொண்டே போகையில் இவற்றை எல்லாம் கண்டு முகம் சுளிக்க வேண்டிய முற்போக்காளர்கள், பத்திரிகையாளர்களில் பலர், திராவிட இயக்கங்கள் வெற்று அறிக்கைகளை மட்டும் கொடுத்துவிட்டு நமக்கென்ன வேலை முடிந்தது என்று முகம் திருப்பிக் கொண்டிருப்பது சமூகத்துக்கும் , பின் வரும் புது படைப்பாளிகளுக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் நல்லதல்ல. யார் கண்டது பிற் காலங்களில் வரப்போகும் முற்போக்கு படைப்பாளிகள் பிற்போக்குத் தனங்களுக்கு ஆதரவாகக் கூட எழுதித் தள்ளலாம்.

அரசியல் அமைப்பைக் காக்கவேண்டிய அரசாங்கமே இதில் எல்லாம் தலையிட வேண்டும் என்றாலும் ஆளும் அரசாங்கத்தின் சில அங்கத்தினர்களே இத்தனை சிக்கல்களையும், படைப்பாளிகளுக்கு எதிரான கருத்தையும் உருவாக்குகிற ஆட்களாகவும் இருக்கிறார்கள்.

பாஜக எம்பிக்கள் இந்தியாவின் எம்பிக்கள் என்ற நிலையெல்லாம் தாண்டி இந்து எம்பிக்கள் என்று இந்துப் பெண்கள், 4,குழந்தைகள், 5 குழந்தைகள் என்று பெற்றுக் கொள்ளுங்கள் கோமியத்தை பினாயிலுக்கு பதிலாக பயன்படுத்துங்கள், சமஸ்கிருதத்தை தேவ பாஷை ஆக்குங்கள் என்று தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு குழந்தைகள் போதும் என்று கருத்தடை செய்துகொண்ட கணவன் மனைவிக்கு  3 வதாக குழந்தை பிறந்தால் சந்தேகப்பட மாட்டானா என்று கேட்கிறார் அப்பாவி நண்பர் ஒருவர். இதை விட பயங்கரமாக ஒரு பதில் சொன்னேன் "முதலில் மோடியை பொண்டாட்டியோடு இருந்து வாழச் சொல்லுங்கள் பின்னர் குழந்தை குட்டியெல்லாம் பற்றி யோசிக்கலாம்".  என் கருத்துக்கான விளக்கம் என்னிடம் கேட்கலாம், இல்லை எதிர்த்து எழுதலாம் ஆனால் இதெல்லாம் நீ சொல்லக் கூடாது ஊரில் இருக்கக் கூடாது இனி சாப்பிடுவதைத் தவிற வேறெதற்கும் வாயே திறக்கக்கூடாது என்பது அரசியல் சட்டம் நமக்குத் தந்திருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

பாலியல் பலாத்காரக் கொலைகள், முறை தவறிய உறவுகளால் நடைபெறும் கொலைகள், என்பதெல்லாம் என்னவோ நம் கலாச்சாரத்திலேயே ஊறிப்போனவை போல தினசரி செய்திகள் வெளியாகும் நாட்டில்தான் புத்தகத்தில் எழுதப் படும் புனைவுகளுக்காக போராட்டம் நடக்கிறது. பாரிஸில் பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப் பட்ட கொலைகளை கண்டிக்கும் மக்கள்தான் பெருமாள் சல்மான் ருஷ்டி, தாஸ்லிமா நஸ் ரீன், பெருமாள் முருகன், எழுதியதையும் அவற்றை தடைசெய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுப்பதும் உச்சகட்ட நகை முரண்.

பாலியல் கொலைகளுக்காக கடற்கரையோரம் ஒன்றாகக் கூடி மெழுகுவர்த்திகளைக் கொளுத்தி பலியான உயிருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் . ஆனால் பாலியல் குற்றங்களுக்கு எதிராக இதுவரை எந்த ஒரு அமைப்பும், இயக்கமும் மக்கள் விழிப்புணர்வை உண்டாக்கும் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை, அப்படி எடுப்பவர்கள் கூட அரங்கச் செயல்பாடுகள் கட்டுரைகள் என்பவற்றோடு முடித்துக் கொள்கிறோம்.

பழமைவாதிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை  நிறைய இருக்கிறன. வீதிக்கு இறங்கிப் போராடி மிரட்டல் விடுத்து இல்லை ஏதாவது செய்தாவாது மாற்றுக் கருத்தாளார்களை அடக்கும் நாட்டில், மாற்றுக் கருத்துக்களை தொடர்ந்து எழுதியும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் வளர்க்கும் விதமாக படைப்புக்களை தொடர்ந்து எழுதியும் வெளியிடுவதையும் தவிற வேறு வழியில்லை. இல்லையென்றால் ஊர் பெயரை, தெருப்பெயரை, ஆட்கள் பெயரையெல்லாம்,

" அந்த ஊரில் அந்த தெருவில், அவனும் அவளும் அவர்களுக்கு அவன் அவள் என்று ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள், அவர்களுக்கு பக்கத்துவீட்டில் அவன் இருந்தான் அவனுக்கு ஒரு அவள் காதலியாய் இருந்தாள் " 

என்று படிக்கவே முடியாத கதைகளை எழுதி சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

எழுத்தும் பேச்சும் நமது உரிமைகள்!





Monday, January 12, 2015

நெகிழ வைத்த திரைப்படங்கள் -6 The Stoning of Soraya M

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்களின் சமூகத்தாலும், ஆண்களின் பொய்களாலும், அவர்களின் கடவுள்களாலும், மதத்தின் பெயராலும், கற்பு என்ற பெயராலும் அடக்குதலுக்கும் அச்சுறுத்தல்களும் உள்ளாக்கப் பட்டுக்கொண்டிருக்கும்  கோடிக் கணக்கான பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கும் திரைப்படம்தான் இந்த . The Stoning of Soraya M 1986ல் ஈரானில் நடந்த உண்மைச் சம்பவம் புத்தகமாக வெளிவந்து பின்னர் திரைப்படமாக்கப் பட்டது.

The Stoning of Soraya M.


தனது கார் ஈரானின் உள்ளடங்கிய கிராமமான குபையாஹ் வில் நின்று போய்விட அதை சரிசெய்யப் போகும் ஈரானிய-ப்ரெஞ்ச்சு பத்திரிகையாளரான ஃப்ரொடொன் ஸ்பாஜெமை சந்திக்கும் சாரா என்னும் பெண் தன் உறவுக்கார பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து உண்மைகளை சொல்வதுதான் படத்தின் மொத்தக் கதையும்.

ஸொரயாவுக்கு இளம் வயதிலேயே அலி என்பவனோடு திருமணம ஆகி இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன, அலி ஈரானின் சிறையில் கண்காணிப்பளாராக ஒரு உயர்ந்த பதவி , வகிக்கும் கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்குள்ள ஆள், சிறையில் மரண தண்டனை பெற்ற ஒரு டாக்டரின் விடுதலைக்காக லஞ்சமாக மெஹ்ரா என்ற டாக்டரின் 14 வயது மகள்  அலிக்கு பேரம் பேசப்படுகிறாள். ஸொராயாவை மிரட்டியும் அடித்தும் தன் இரண்டு மகன்களை தாய்க்கு எதிராகவே திருப்பி விட்டும் விவாகரத்து கேட்கிறான் அலி. ஆனால் தன் மகள்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஸொராயா மறுத்து விடுகிறாள்.

இந்த விவாகரத்து விஷயத்தில் கிராமத்தின் முல்லாவும் அலிக்கு எப்படியாவது உதவி செய்தே ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறார். காரணம் முல்லா முல்லா ஆவதற்கு முன்பு ஈராணிய ஷா ஆட்சிகாலத்தில் மனித உரிமை மீறல்களை செய்த ஒரு ஆள் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அலி முல்லாவை மிரட்டுகிறான். வேறு வழியில்லாத முல்லா ஸொராயாவிடம் சென்று எல்லா பஞ்சாயத்துப் பண்ணும் மத குருமார்களைப் போலவே அவனை விட்டுவிடு எனக்கு ஆசை நாயகியாக இரு என்று சொல்லி பேசிக் கொண்டு இருக்கும் போது அங்கே வரும் சாராவுக்கும் முல்லாவுக்கும் பிரச்சினை ஆகி விடுகிறது.

இதற்கிடையே ஸொரயா கோபித்துக்கொண்டு சாராவின் வீட்டில் இருக்கும்போது அதே ஊரில் கார் மெக்கானிக்காக இருக்கும் ஹஷீமின் மனைவி இறந்து போக ஹஷீமுக்கு வீட்டு வேலைக்காரியாக ஸொரயாவை ஊர் வழக்கப் படி மேயரும், முல்லாவுமே பணிக்கு அமர்த்துகிறார்கள். ஏற்கனவே ஸொராயாவை விவாகரத்து செய்ய முடியாத கோபத்தில் இருக்கும் அலி தன் மனைவிக்கும் ஹஷீமுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக குற்றம் சாட்டி அதற்கு சாட்சியாக ஹஷீமையே மகனை அனாதை ஆக்கிவிடுவேன் என்று மிரட்டி  திருப்புகிறான்.  கிராமத்தின் மேயரான இப்ராகிமும் இதற்கு துணை போகிறார்.

இந்த திட்டங்கள் எல்லாம் தெரிந்த சாரா ஸொராயாவுக்கு ஆதரவாக எவ்வளவோ போராடிப் பார்த்தும் அந்த ஊரின் தீர்ப்பின் படி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் படும் ஸொராயா கல்லால் அடித்துக் கொலைசெய்யப் படுகிறாள். அலிக்கும் மெஹ்ராவுக்கும் திருமணம் நடக்கவில்லை, காரணம் சிறையில் இருக்கும் டாக்டர் கொலை செய்யப் படுகிறார். 

படம் முழுக்கவே ஆண்களின் உலகம் எத்தனை கொடூரமானதாகவும், சுயநலத்தோடும், பெண்களை எப்படியெல்லாம் வஞ்சித்துக் கொண்டும் இருக்கிறது என்பதற்கு  ஒட்டு மொத்த வெளிப்பாடாக இருக்கிறது. தன் தாய்க்கு எதிராகவே கையை ஓங்கிக் கொண்டு வரும் மகனை ஆதரவோடு பார்க்கும் தந்தையும், மகன் அடிக்க வருவதை பார்த்து கலங்கிப் போய் இருக்கும் ஸொராயாவுமே காலம் காலமாய் பெண் என்பதால் மட்டுமே ஒடுக்கப் பட்டும் அடக்கப் பட்டும் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களின் கதையைச் சொல்லிவிடுகிறது.

ஒட்டுமொத்த ஆண்களின் ஒற்றை சாட்சியாக அலியும், பெண்களின் ஒடுக்கப் பட்ட குரலாக ஸொராயாவும் படம் முடியும் வரை பயணிக்கிறார்கள். மதத்தின் பெயரால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த  ஆண் குலத்தாலும் அடங்கிக் கொண்டும் கொலையாகிக் கொண்டும், தற்கொலை செய்து கொண்டும் பாலியல் வன் கொடுமைமைக்கு ஆளாகிக் கொண்டும் இருக்கும் எல்லா பெண்களுமே ஸொராயாக்கள்தான். தங்கள் சுயநலத்துக்காகவும் மதத்துக்காகவும் பெண்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கும் ஆண்கள் எல்லாமே அலிகள் தான்.

படத்தின் உயிர் நாடியாக கதையைச் சொல்லும் சாரா ஆங்காங்கே அடக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பெண்களின் வலிகளை உலகமெங்கும் உரக்கச் சொல்லும் குரலாக படம் முழுக்கவே ஒலித்துக் கொண்டிருக்கிறார்.  கொஞ்சமே கொஞ்சம் மனசாட்சி இருக்கும் ஆண்கள் என்று படத்தில் யாருமே இல்லை, அது உண்மையும் கூட. பெண்களுக்காக குரல் கொடுக்கும் எல்லா ஆண்களுக்கும் பின்னால் ஏதாவது ஒரு சுயநலம் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு படத்தில் வரும் மேயர் இப்ராகிமும், ஹஷீமுமே சாட்சி. 

ஸொராயாவாக நடித்திருக்கும்  Mozhan Marno  வின் கண்களே படத்தில் பாதி பாரத்தை சுமக்கின்றன, அந்த பேரழகான கண்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சோகமும் வலியும் உலகப் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் அநீதியின் குரலாக காலமெங்கும் ஒலிக்கும்.

படத்தின் கொலைக் காட்சியீன் போது ஒலிக்கும் அல்லாஹ்ஹூ அக்பர் என்ற ஒலியைத் தவிற்த்துவிட்டுப் பார்த்தால் இது மத்திய கிழக்குகளில் மதத்தின் பெயரால் நடக்கும் அநீதி என்பதை தாண்டியும் படத்தை இன்னொரு பரிமாணத்துக்கு கொண்டு செல்கிறது.

எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் தண்டனை அளிக்கப் படுவதற்கு முன்னால் ஸொராயா கூடியிருக்கும் ஆட்களை பார்த்து 

" எனக்கு ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? உங்களால் எப்படி முடிகிறது, நான் உங்களில் ஒருத்தி இல்லையா? உங்களுக்கு தாய் அல்லவா நான், நான் மகள் இல்லையா? நான் உங்கள் மனைவி இல்லையா, உங்கள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேனே?, உங்கள் பக்கத்து வீட்டுக் காரிதானே நான்? "

என்று கேட்பது அந்த கூட்டத்திடம் மட்டும் அல்ல , படம் பார்க்கும் எல்லோரிடத்திலும்தான், கடைசியில் ஸொராயாமேல் எறியப்படும் கற்கள் எல்லாம் பார்வையாளர்களான நம் மேலேயே வந்து விழுகிறது. படம் முடிகையில் ஒட்டு மொத்த படுகொலையையும் வன் கொடுமைகளையிம் வேடிக்கை பார்க்கும் உலகச் சமுதாயம் போல வேடிக்கை காட்டவரும் கோமாளிகள் கூட்டம் ஒன்று வேடிக்கை பார்ப்பதோடு ஸொராயா கொல்லப் படுவதுதான் நிஜம்.  

இந்த உலகம், அலிகளுகாகவும், ஹஷீம்களுக்காகவும், முல்லாக்களுக்காகவும் படைக்கப் பட்டது, அங்கே ஸொராயாக்களுக்கும், சாராக்களுக்கும் இடமில்லை. என்னும் உண்மை உங்களை படம் முடிந்து பல நாட்களுக்கு துரத்திக் கொண்டே இருக்கும்.

தமிழ் சினிமாக்களில் எல்லாம் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அந்நிய நாட்டிடம் மண்ணு அடிமையாய்க் கிடக்கே என்ற ஒற்றை வரி வசனத்தால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாகவே கிடக்கும் பெண்களின் வலியை கடந்து அதை நியாயமும் செய்யும்  ஜெயமோகன்கள்  ஆகச் சிறந்த ஆட்களாக இருப்பது நம் திரை மொழியின் சாபக் கேடு"




























Wednesday, January 07, 2015

ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் !

இரண்டு நாட்களுக்கு முன்னால் வாஷிங்டன் போஸ்டில் " இந்தியர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்னே விமானங்கள் கண்டுபிடித்துவிட்ட்டார்கள்" என்று அறிவியல் காங்கிரஸில் பேசிய ஆட்களை மேற் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டார்கள் அதன் பின்னூட்டங்களில் இத்தனை ஆண்டுகளாய் கொஞ்சமாய் கொடி கட்டிப் பறந்த இந்துத்துவ வாந்திகளின் மானத்தை காற்றுக்கு மேலே கிரகங்கள் தாண்டியெல்லாம் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சர்வதேசத்தினர்.



 ஏற்கனவே நாசா எடுத்த மணல் திட்டை ராமனின் பாலம் என்று பாஜக ஆட்சியிலும் அதன் பின்னரான காங்கிரஸ் ஆட்சியிலும் ஊதி ஊதியே தமிழகத்தின் வளத்தை குறுக்கியும் அதன் பின்னர் அமைந்த தற்போதைய ஆட்சியில் சிங்கள இனவாத அரசுக்கு உதவிசெய்யும் விதமாக பல்லாயிரம் கோடிகள் கொட்டிக் கொடுக்கும் வருமான வழியை அடைக்கவேண்டாம் என்ற நல் எண்ணத்தாலும் சுப்பிரமணியன் ஸ்வாமி போன்ற நாசகார சக்திகள் மூலம் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்த பாஜக இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கூட தன் முட்டாள்தனங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது.

7000 ஆண்டுகளுக்கு முன்னர் விமானம் அதுவும் கிரகம் விட்டுக் கிரகம் ( காலக் கிரகமடா) போகும் எந்திரங்கள் கொண்டிருந்த ஆட்கள் என்ன டேஷுக்காக ராமரின் வானரப் படையும் அந்த மூன்று கோட்டு அணிலும் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்? சரி கட்டியதுதான் கட்டினீர்கள் எங்கள் கரிகாலன் கட்டிய அணையைப் போல கொஞ்சம் திடமாகவாவது கட்டித் தொலைத்திருக்கக் கூடாதா என்றால் அதுவும் இல்லை. கடல் அழிப்பில் ஒழிந்து போனதாம் . எந்த எஞ்சினியரிங் காலேஜில் ராமர் பட்டித்தாரோ யாருக்குத் தெரியும்? 

உங்கள் அறிவியல் ஞானமெல்லாம் என்ன லட்சணம் என்பது உலகுக்கே தெரிந்த ஒன்று. பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இன்று வரை ஆறு மாதங்களுக்கு மேலாக ஒரு டேஷையும் பிடுங்காமல் இப்படி இந்துத்துவ கொடிகளை மட்டுமே தூக்கிக் கொண்டு திரிந்தால் உலகம் காரித் துப்பாதா? துப்பத்தான் செய்யும் செய்கிறதுதான். 

7000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே விமானம் கண்டுபிடித்தோம் என்பதெல்லாம் உங்களின் கற்பனையாக கிடந்துவிட்டுப் போகட்டும் ஆனால் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் இங்கே இல்லவே இல்லை என்றுதானே சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்? 

சிந்துச் சமவெளி நாகரீகம் முதல் , ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் வரை இதைத்தானே சொல்கிறார்கள்? உங்களுக்கு மட்டும் எங்கிருந்தய்யா வந்தது 7000 ஆண்டு பாரம்பரியம் எங்களின் நாட்டில்?.  இந்த லட்சணத்தில் நீங்கள் இதை இந்துக்களின் தேசம் என்கிறீர்கள்? 60000 மனைவிகளைக் கொண்ட தசரதனுக்கு நாளைக்கு ஒன்றென்றால் கூட கூடி வாழ பல்லாண்டுகள் ஆகுமே சாமி என்ற என் தாத்தன் பெரியாரின் கேள்விக்கே இன்று வரை உங்களால் பதில் சொல்ல முடியவில்லையே?

ரோம், எகிப்து, சீனா, சிந்து, திராவிட, நாகரிங்கள் எல்லாம் ஒற்றை ஆவணங்களையாவது கொண்டு எங்களின் இருப்பை நாங்கள் யார் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறதே உங்களுக்கு அப்படி ஏனய்யா ஒன்றுமே கிடைக்கவில்லை? ராவணன் கட்டிய கோவில் , அசோகவனம் என்ற சிதிலங்களை காட்டவாவது இலங்கையில் கொஞ்சம் கிட்டி இருக்கிறது என்கிறார்கள் வரலாற்றாளர்கள், திராவிட நாகரீகம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை, கல்வெட்டுக்களாகவும், அகழ்வாய்வின் மிச்சங்களாகவும் ,சங்க இலக்கியங்களாகவும் எங்களிடம் ஏகப் பட்ட பாடல்கள் உண்டு, ஆதாரபூர்வமாகவே. உங்களிடம் கீதையும், ராமாயணத்தையும் விட்டால் கோவணத் துணிகூட மிஞ்சவில்லையே? 

திப்புசுல்தான் தான் ராக்கெட் விட்ட முதல் இந்தியன் என்கிறது 1000 ஆண்டுகளுக்குள் ஆன வரலாறு, வெடி மருந்தைக் கண்டுபிடித்தது சீனா என்று உலகமே ஏற்றுக் கொள்கிறது. 7000 ஆண்டுகளுக்கு முன் ஏரோப்ளேன் கண்டு பிடித்தது நாங்கள்தான் என்று நீங்கள் சொல்லும் போதே உலகம் தன் சகல துவாரங்களையும் திறந்து சிரிக்க ஆரம்பித்து விடுகிறதே ஏன் என்று கொஞ்சமாவது சிந்தித்தீர்களா? 

உங்கள் இலக்கியம் வரலாறு எல்லாமே எங்கள் மேல் செலுத்தவென்றே உங்களால் உங்கள் சனாதன பயமுறுத்தல்களால் எங்கள் மேல் தினிக்கப் பட்டு மக்கள் மாக்களாய் இருந்ததால் கடவுள்களின் பேரைச் சொல்லி இதிகாசங்கள் புராணங்களைச் சொல்லி வயிறு வளர்த்த ஆட்களால் உண்டானது என்று எங்களுக்கு தெரிந்து பல்லாண்டுகள் ஆயின ஆனலும் ஆட்சியும் அதிகாரமும் எதையும் சொல்லி ஏமாற்றும் திறனும் உங்களிடம் இருக்கிறது என்பதாலேயே ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்களிடம் ஏரோப்பிளேன் இருந்ததென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்!!

குஜராத்தின் கடல் எல்லையில் துவாரகா என்ற இடம்தான் துவாரகை என்ற மகாபாரத வரலாற்றின் இடம் என்று சொல்லி ஒரு கடலாய்வு செய்தீர்களே என்ன ஆயிற்று என்ற சர்வதேசத்தின் கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதிலே இல்லை. மாட்டை புனிதமாக்கியது போல நாட்டை புனிதமாக்கும் உங்கள் செயலால் மானம் கப்பல் ஏறிக் கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தைத் தாண் ஆண்டுகொண்டீர்கள் அறிவியலைக் கொஞ்சம் மிச்சம் வைய்யுங்கள்.

இப்படியே போனால் உங்கள் அமைச்சர்களில் யாராவது ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் என்று சொன்னாலும் சொல்வார்கள்!!


Tuesday, January 06, 2015

வெட்கமாக இல்லையா திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களே?

ஆராயப் படாமலேயே  மக்கள் முதல்வர் என்ற பெயரில் ஒரு அசிங்கம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று குற்றவாளி என தீர்ப்பும் சொல்லப் பட்டு தன் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியேற முடியாத  சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இழந்த ஒரு கட்சியின் தலைமை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அரசாங்க நடவடிக்கைகளில் பங்கு கொள்வதும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் சுயமரியாதைப் பேரொளிகளில் ஒருவராக இருந்த பன்னீர்செல்வத்தின் பெயரைத் தாங்கி நிற்பவருமான பினாமி முதல்வர் இன்று வரை கூட மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலுக்கு இனங்க என்று அறிவிப்புகள் செய்வதும் தமிழகம் இதுவரை காணாத கேலிக் கூத்து.

இந்தியத் தலை நகரில் முதல்வர்களின் கூட்டம் அங்கே செல்லும் பினாமி முதல்வர் கூடவே தன் துணைக்கென்று ஜெயலலிதாவின் புகைப் படம் அடங்கிய கோப்பை கொண்டு செல்கிறார். எல்லா ஊடகங்களிலும் வெளியாகிறது இந்தப் படம். ஒரு தலை முறைக்கு முன்னால் திராவிட இயக்கங்கள் என்றாலே கோவனத்தை அவிழ்க்காமலே மூத்திரம் போன ஆட்கள் எல்லாம் தமிழகம் என்றாலே நகைக்கிறார்கள்.

இன்று வரை நீங்கள் முதல்வர் அறையில் அமர்ந்ததில்லை, உங்கள் வீட்டுக்கு முன்னால் முதல்வர் என்ற பெயர்ப் பலகை இல்லை, உங்கள் படம் தாங்கிய அரசாங்க காலண்டர், நாட்குறிப்பு இல்லை, உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன் யார் நீங்கள்?

அம்மா என்ற பெயருக்கு ஏதும் தடையில்லை ஆனால் இரட்டை இலைக்கு , இயற்கை காட்சிக்கு தடை என்றதும் நாடளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மறைத்த ஸ்டிக்கர்கள் இன்று இல்லை. சுய உதவிக் குழுக்களை முடக்கும் மோடியின் அரசாங்கத்துக்கு எதிராக பினாமி முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். நாடாளும் மன்றத்தில் மோடி. கூடவே சுத்திக் கொண்டிருக்கும் செவ்வாழைகள் பதில் சொல்லும் வேளையில் அடுத்த பயணம் அண்டார்டிகாவா ஆர்டிக்கா என்ற சிந்தனையில். மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரும் இந்துத்துவ தீவிரவாதிகள்  கூடவே மோடி பீரங்கியை களம் இறக்குகிறார்கள்.



மாண்புமிகு முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களே!!

கோட்சேவுக்கு சிலை, கோவால்கருக்கு மணி மண்டபம், என்று திராவிட இயக்கத்தின்  முக்கிய கொள்கையான சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனீய பனியாக்களின் ஆதிக்கங்களை ஒரு வார்த்தை கூடச் சொல்ல முடியாமல் ஏற்றுக் கொண்டு குனிந்த தலை கவிழாமல் ஆட்சியை அதிகாரத்தை யாருக்காகவோ ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் பன்னீர் செல்வம் அவர்களே?

எங்கெல்லாம் அமைதியும் அடங்கிப் போகும் அடிமைப் புத்தியும் இருக்குமோ அங்கெல்லாம் பார்ப்பனீயம் தன் அகன்ற அலகுகளால் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிடும். உங்கள் அடிமைத் தனம் என்பது உங்களோடு மட்டும் அல்ல உங்கள் தலைமையை தேர்வு செய்த என்னை அடங்காத கோடிக் கணக்கான தமிழர்களையும் சேரும் முதல்வர் பதவி என்பது வேண்டுமானால் உங்கள் கட்சித் தலைமை கொடுத்த ஒன்றாக இருக்கலாம் சட்ட மன்ற உறுப்பினர் என்பது மக்களின் தேர்வு.

ஒரு டீக்கடைக் காரர் என்று உங்களை கிண்டல் செய்த ஆட்களுக்கு மத்தியில் உங்களின் விசுவாசத்தை போற்றிக் கொண்டிருந்த ஆட்களுள் நானும் ஒருவன். ஆனால் உங்களின் விசுவாசம் என்பது வெறும் கட்சியின் தலைமைக்காக என்பதைக் காணும் போது கண்கள் கலங்கிடத்தான் செய்கிறது. உங்களுக்கு இப்போதிருக்கும் பதவி என்பது யாரோ எவரோ பிச்சை போட்டதல்ல என்பதை உணருங்கள். மக்களின் தேர்வால் சட்டமன்ற உறுப்பினர் ஆன ஒருவரை முதல்வராக்குவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்த உரிமை.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான பேரைக் கொன்ற விவகாரத்தில் தன் கறைகளைக் கழுவத் துணியாத மோடி இன்று முதல்வர், பிரதமர் என்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டே தன் இந்து பாசிச வெறியை தேசமெங்கும் பரப்ப பர பர பயணத்துக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டே அத்வாணி வாஜ்பாய் போன்ற ஜாம்பவான்களை கண்காணாத இடத்துக்கு பின் தள்ளிக் கொண்டிருக்கும் வேளையில் கேவலம் விசுவாசத்துக்காக ஜெயலலிதாவின் பின்னால் போய் வரலாற்றை எழுதும் ஆட்களுக்கு கூச்சம் ஏற்படுத்தாதீர்கள்.

உங்களின் மேல் யாருக்கும் விருப்போ வெறுப்போ இல்லை என்பதுதான் உங்களின் பலம், பலவீனம், ஆனால் உங்களிடம் விசுவாசத்தை தவிற வேறொன்றும் இல்லை என்பதை அறியத் தெரிகையில் வெறும் அயற்சிதான் எஞ்சுகிறது. முதலில் உங்கள் கட்சி ஆபிமானங்களை எல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு மக்கள் பணியாற்ற வாருங்கள்.

கொஞ்சமாவது உங்கள் கட்சியில் ஒட்டிக் கொண்டிருக்கும் திராவிட என்ற பெயருக்கு முழு அர்த்தம் தெரியுமானால், அந்த திராவிடச் சொல்லுக்கும் முந்தைய நீதிக் கட்சியின் வரலாறு தெரியுமானால் நீதிக் கட்சியின் முழு அர்த்தமான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டங்களை அறிவீர்கள் என்றால்  நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் மக்களின் முதல்வரின் பினாமியாக இல்லாமல் உண்மையில் மக்களின் முதல்வராக எஞ்சி இருக்கும் உங்களின் ஆட்சிக் காலத்தையாவது கழிக்கப் பாருங்கள்.

பயணக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கல்விக் கடன் கிடைக்காத அவலம், மின் வெட்டு, நில அபகரிப்பு, காணாமல் போன மலைகள், சட்டம் ஒழுங்கு
, உள் கட்டுமானம், மத தீவிரவாதங்கள் என  நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் ஏகப் பட்டவை கிடக்கின்றன உங்கள் முன்னால். ஜெயலலிதாவின் வழக்கை அவர் பார்த்துக் கொள்வார், கட்சியும் கூட அவரின் கட்டுப் பாட்டில்தான் இருக்கும்.

உங்களுக்கு தமிழக முதல்வர் என்னும் மிகப் பெரிய பணி காத்துக் கிடக்கிறது.

நான் சொல்ல வந்ததில் நூற்றில் ஒரு பங்கையாவது சொல்லியிருக்கிறேன் என்ற மகிழ்வோடு.

வாழ்த்துக்கள் திரு. பன்னீர் செல்வம் அவர்களே!!