Wednesday, July 16, 2014

ஓடு காலியும் ஓடு காலியும்.

சட்டமன்ற கூட்டத் தொடரில் ஒரு அசிங்கம் அரங்கேறியுள்ளது. அசிங்கங்களே ஆட்சியில் இருக்கும் நாட்டில் இது என்ன ஒரு பெரிய அதிசயம் என்று கேட்டுவிடாதீர்கள் ஆனால் அந்த அசிங்கத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் இலக்கியச் சுவை வேறெந்த இலக்கியவாதிகளாலும் புரிந்துகொள்ள முடியாதது.

ஓடுகாலி என்று எதிர்கட்சியை பார்த்து ஆளுங்கட்சியின் ஜிங் ஜக் மேஜை தட்டும் மங்குனிப் பாண்டியன்கள் சொல்கிறார்கள், வானளாவிய அதிகாரம் கொண்ட பதவியில் இருப்பவரும் அந்த ஓடு காலி வார்த்தை ஒன்றும் அப்படி ஒரு கெட்ட வார்த்தை அல்ல என்று சபைக் குறிப்பில் அனுமதிக்கிறார், இதைக் கேட்ட வானளாவிய அதிகாரம் கொண்டவரின் அதிகாரத்தை நள்ளிரவில் கூட குட்டி  எழுப்பி தட்டிப் பறிக்கும் வல்லமை கொண்ட மாண்பு மிகு அதிகாரம் கொண்டவரும் 'குலுங்கி, குலுங்கி" சிரிக்கிறார்.

(இதுவே கலைஞராய் இருந்திருந்தால் நாங்கள் சொன்னது கஜானாவை , அதிமுக ஆட்சியை விட்டுப் போகும் போது ஓடு காலியாகத்தான் இருந்தது என்று நச் பஞ்ச் அடித்திருப்பார். அதெல்லாம் இவர்களுக்கு கலைஞரிடம் வாங்கிக் குடித்தாலும் வராது.)

சட்டமன்றம் முற்றாய் சந்தைக் கடையாய் மாறிப் போகிறது. இது ஜனநாயக நாடய்யா அப்படித்தான் இருக்கும் என்று வாதிடவேண்டாம் நண்பர்களே உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். அப்படி ஒரு வஸ்து இங்கே இருக்கிறதா என்ன?

ஜனநாயகத்தின் தூண்கள் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் இந்த நாட்டின் முதுகெலும்பில்லாத விளம்பர வருவாயைக் கொண்டே வயிறு வளர்க்க வெறும் வாயைக் கூட மென்று கொண்டே இருக்கும் எந்த மானமுள்ள பத்திரிகையும் இது பற்றி வாயே திறக்கவில்லை என்பது தற்செயலானதா என்ன?

நயன் தாரா யாரோடு லவ்வுகிறார், விஷால் திருட்டு விசிடியை தட்டிக் கேட்டார், என்று விளக்கு பிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் சரியாய் இருக்கிறது. இந்த லட்சனத்தில் மவுலி வாக்கம் கட்டிட விபத்து வேறு 61 பேர்தானே போனார்கள் நல்லவேளை என்று எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பத்திரிகைகள் அடைந்துவிட்டன.

எங்கோ பெயர்தெரியாத நிர்பயாவுக்கு ஒன்றென்றதும் மாதக் கணக்கில் மைக்கில் புலம்பிய பாண்டேக்கள் ஒரு நாளாவது தமிழ்நாட்டில் தினம் நடக்கும் இதுபோன்ற செயல்களை வாய் திறந்து பேசுகிறார்களா?

இந்த லட்சணத்தில் இருக்கும் ஊடகங்கள் எதைத்தான் மக்களுக்கு சொல்ல வருகின்றன என்பதை விட எதற்க்காக எவர்களால் நடத்தப் படுகின்றன?
அதுவும் சரிதான் வாரம் ஒருமுறை உங்களை சந்திப்பேன் என்றவரிடம் ஏனம்மா எங்களை மாதம் ஒரு முறைக் கூட சந்திக்கவில்லை என்று கேட்க திராணியற்ற வீராதி வீரர்கள் தானே .

டிஆர்பி ரேட்டிங்கில் முன்னுக்கு வந்தால் விளம்பரத்தை கூட்டி வருமானம் பார்க்கலாம் அவ்வளவுதான் நமக்கான  ஊடகங்களாக நம்மை நாமே மாற்றிக் கொள்ளாத வரை ஆண்ட கட்சியின் ஆளும் கட்சியின் சொந்த ஊடகங்களும் அவற்றின் சொம்பு ஊடகங்களும் விளம்பர வருவாய் டிஆர்பி ரேட்டிங் மட்டும் குறிக்கோளாய் கொண்டு  நம் வாயில் தொடர்ந்து பாலூற்றிக் கொண்டே இருக்கும் நாம் லட்ஷ்மிமேனன் பத்தாவது பாஸாம்ல ? நஸ்ரியாவுக்கு கல்யாணமாம்ல என்று வலைத் தளங்களில் மொக்கை போட்டுக் கொண்டிருப்போம்.

பின் குறிப்பு: மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்திருக்கிறேன் இனி இங்குதான் இருப்பேன்.



1 comment:

கும்மாச்சி said...

மிக நியாயமான வாதம். ஊடகங்கள் இந்த மாதிரி விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெகு நாட்களாகிறது. அவர்களுக்கு நயன்தாரா இப்பொழுது யாரிடம் இருக்கிறார் என்பதே முக்கியம், இந்த மாதிரி விஷயங்களை எத்ரிப்பர்க்கும் வெகுஜனங்களுக்கும் தான்.