இந்த படம் என்னை மட்டுமல்ல பார்க்கும் யாரையும் இளகவைக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை 2002ல் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு இவ்வளவு ஆச்சரியம் இல்லை ஆனால் இப்போது இருக்கிறது, காரணம் 2002க்கு பிறகுதான் வெறிபிடித்தது போல உலக சினிமாக்களை தேடித் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 2 TB கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கில் முழுக்க முழுக்க உலக சினிமாக்கள் ஆங்கில சினிமாக்கள் என்று வகை வாரியாக 3000 படங்களுக்கும் மேல் சேமித்து வைத்திருக்கிறேன். இன்னும் டவுன்லோடிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் டோரண்ட்ஸ் தந்த வரம்.
Dancer in the Dark.
பொதுவாகவே வசனங்கள் நிறைந்த சினிமாக்களை ரசிப்பவன் நான். அதிலும் Lars van Trier படங்களை சொல்லவே வேண்டியதில்லை, நிம்போமேனியாக் ஆகட்டும் ஆன்ட்டி கிரிஸ்ட் ஆகட்டும் மனுஷன் பின்னி இருப்பார். இந்த படத்தை பொருத்தவரையில் இசையும் பாடல்களும் வசனங்களும் என்று எந்த ஒரு இரும்பு இதயத்தையும் கொள்ளை கொள்ளுகிறது. அதிலும் முக்கியமாக வழக்கம் போல ட்ரையர் இந்த படத்தையும் கதாநாயகியை முன்னிலைப் படுத்தியே எடுத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக காதாநாயகி பட்டுமே படத்தை தூக்கி சுமந்திருக்கிறார் அதுவும் ஜோர்க்குக்கு சொல்லவா வேண்டும் படத்தை சுண்டு விரலில் சுமந்திருக்கிறார்.
கதை இதுதான் கதையின் நாயகி சல்மா தன் மகனுடன் செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர், சல்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை பறிபோய்க்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தன் மகனுக்கும் அதே குறைபாடு என்பதால் மகனுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வந்தவர். வந்த இடத்தில் , ஒரு ஸ்டீல் பேக்டரி, ஒரு வீட்டில் இருந்தே செய்யும் சிறு வேலைகள், மற்றும் டான்ஸ் பாடல் என்று உண்மையில் ஒரு குருவி சேர்ப்பது போலவே கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக காவல் துறையிலிருக்கும் நண்பனும், அவர் மனைவியும் தங்கள் இடத்தை சல்மாவுக்கு வாடகைக்கு விட்டும் சல்மாவின் மகனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் ஏற்றிருக்கின்றனர், சல்மாவை தன் காதலியாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஒருவர், சல்மாவுக்கு பேக்டரியில் ஒரு தோழி. கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து வைத்திருக்கும் சல்மா தன் மகனுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு முன்பே கண் பார்வை முற்றிலும் போய்விடுகிறது அதன் பின் அவருக்கு எல்லா சத்தங்களும் இசைதான் அவருக்கு. பேக்டரியில் சத்தம் இசை, ரயில் சத்தம் இசை, என்று.
முற்றிலும் பார்வை பறிபோன பின்னர் ஒரு நாள் தான் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக அந்த போலீஸ் நண்பன் சல்மாவின் பணத்தை திருடி விடுகிறான். அதைக் கேட்கப் போன இடத்தில் நடக்கும் தள்ளு முள்ளுகளில் போலீஸ்காரன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு விட கொலைப் பழி , திருட்டுப் பழி எல்லாம் சல்மாவின் மேல் விழுகிறது.
சிறைச்சாலையில் விசாரணைக்குப் பின் சல்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் படுகிறது. இதுதான் கதை.
சல்மாவாக நடித்திருக்கும் ஜோர்க் (Bjork)க்கைத் தவிற வேறு யாராலும் இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்க முடியுமா என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். பேக்டரியில் வேலை செய்வதாக இருக்கட்டும் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளிப்பதாகட்டும் தன் காதலை ஏற்கச் சொல்லி வரும் ஜெஃப் இடம் (Peter Stomare) மறுக்கும் இடம் ஆகட்டும், தன் பார்வைக் குறைபாட்டை போலீஸ் கார நண்பன் பில்லிடம் (David Morse) சொல்லும் போதாகட்டும் இப்படி எல்லாக் காட்சிகளிலும் ஜோர்க் வாழ்ந்திருக்கிறார்.
படம் முழுக்க நெகிழத்தான் வைக்கிறது ஆனாலும் குறிப்பிட்டுச் சொல்லும் இடங்கள் என்றால் பேக்டரியில் வேலை செய்து முடிந்த பின் ஜெஃப் தன் வண்டியில் வரும்படி அழைக்க சல்மா தனக்கு இப்போது ஒரு ஆண்துனை தேவையில்லை என்றும் அப்படி ஒரு வேளை தேவைப்பட்டால் உன்னைத்தான் தேர்ந்தெடுப்பேன் ஜெஃப் என்று சொல்லும் காட்சி ஒரு கவிதை என்றால் தனியே தண்டவாளத்தில் நடந்து போகையில் ஜெஃப்பும் சல்மாவும் பாடும் I have seen it all பாடல் ஒரு காவியம். பாடல், இசை, நடனம், என்று எல்லாம் ஒட்டுமொத்தமாய் மயங்க வைக்கிறது
பணம் காணாமல் போனபின் பில்லிடம் போய் பணம் கேட்கும் போது ஒரு அடிபட்ட பறவையைப் பார்ப்பது போல் உணர்ந்தேன் ஆனால் கொலைக்குப் பின்னால் வரும் அந்த பாடல் நம்மை கொலைக்குப் பின்னாலான அதிர்வுகளில் இருந்து மீட்டு விடுகிறது. படத்தின் எல்லாப் பாடல்களும் மேஜிகல் ரியலிசங்கள்தான் கொஞ்சம் கூட தொய்வடைய வைக்காத கதை, சிறையில் இருக்கும் போதும் ஒரு பாடல் வருகிறது,
தனக்கு மரண தண்டனை என்று தெரிந்த பின் சிறையில் தன் பேக்டரி தோழியுடன் தொலை பேசியில் பேசிக் கொண்டே என் மகனுக்கு பார்வை முக்கியம் எனக்காக வக்கீல் வேண்டாம் என்று கதறும் காட்சி கண்களை குளமாக்குகிறது. முடிவில் தூக்கு தண்டனையின் போது எனக்கு தூக்கு வேண்டாம் பயமாய் இருக்கிறது என்று கதறுவதை பார்க்கும் போது என்னை அறியாமல் விம்மி வெடித்திருக்கிறேன் கல்நெஞ்சம் கொண்ட நானா இப்படி என்றெல்லாம் நினைத்தாலும் அதுதான் இந்த படத்தின் வெற்றி.
முடிவாக தூக்கிற்கு முன் கொடுக்கப் படும் கொஞ்ச அவகாசத்தில் சல்மா பாடிக் கொண்டிருக்கும் போதே அடிப்பலகை நகர்ந்து கொள்ள பாடல் பாதியில் துண்டிக்கப்பட தூக்கில் தொங்கும் கணத்தில் கண்களை மூடிக் கொண்டேன். ஒரு பத்து தடவைகளுக்கு மேல் பார்த்த இந்த படத்தில் நான் அந்த ஒரு செகண்டை மட்டும் கண்களை மூடிக் கொண்டுதான் கழித்திருக்கிறேன் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். ஒட்டு மொத்தமாக என்னை நெகிழச் செய்த படங்களின் உச்சத்தில் எப்போதும் இருக்கும் படம் இது.
No comments:
Post a Comment