எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்று நெப்போலியன் வரை நடிகர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் ஏழாம் பொருத்தம்தான். நடிகர்கள் என்று மட்டும் இல்லை எந்த கொள்கைகளும் அற்ற பதவிக்காகவும், புகழுக்காகவும் மட்டுமே திமுகவோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்து விட்டு சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று தனிக்கடை போட்டு திமுகவின் ஓட்டு வங்கியில் சேதாரம் செய்தவர்களால் திமுகவின் கொள்கைகளை சேதப் படுத்த முடியாது என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
கட்சியின் பொருளாளராக இருந்து கொண்டே பொதுக் கூட்ட மேடையில் கட்சியின் கணக்கு வழக்குகளை கேட்ட எம்ஜிஆர் ஆகட்டும், ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒரு பதவியை அடைந்து விட மாட்டோமா என்று தன்னைத் தானே கழகத்தில் முன்னிலைப் படுத்திக் கொள்ள முயன்ற கண்ணதாசன் ஆகட்டும், ஏன் எஸ் எஸ் ஆர் முதல் ராதாரவி, சரத்குமார், ஏன் இன்றைய குஷ்பு வரை ஏதாவது ஒரு விதத்தில் கட்சியை விட்டு விலகும் போதோ அல்லது அங்கிருந்துகொண்டோ கலகச் செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.முக முத்து முதல் முக அழகிரி வரை கலைஞரின் குடும்பத்துக்குள்ளேயே சிலர் இந்த வேலையை செய்யத் துணியும் போது மற்றவர்களை குறைகூறிப் பயணில்லை.
எந்த விதத்திலும் கட்சியின் கொள்கைகளான சமத்துவம் சமூக நீதி ஜனநாயகம் சாதி ஒழிப்பு திராவிட சித்தாந்தங்கள் அற்றவர்களை ஏதாவது ஒரு வகையில் மக்கள் அறிந்த முகம் என்பதனாலேயே கட்சியில் முன்னிலைப் படுத்தியதன் விளைவுகளை திமுக இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஆரம்பகாலத்தில் எம்ஜிஆர் என்ற பிம்பம் கட்சியை உடைத்ததும் அதனால் ஏற்பட்ட இழப்புகளால் ஏற்பட்ட பயமும் கூட கட்சித் தலைமையை இப்படி முடிவுகளை எடுக்க வைத்திருக்கலாம். இது ஒன்றும் அதிமுக பாஜக போல பிரபலமான முகங்களால் மட்டும் வளர்ந்த கட்சி இல்லை.
கொள்கைகளால் புடம் போடப் பட்டு பெரியார் அண்ணா கலைஞர் பேராசிரியர் என்று வழிவந்த ஒரு இயக்கம் தேர்தல் தோல்விகள் என்பது கலைஞருக்கோ இல்லை கழகத்துக்கோ இழப்பு இல்லை ஆனால் சமூகநீதிக்கு, சமத்துவத்துக்கு ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கும் இழப்பு என்பதை திமுக ஆட்சியில் இல்லாத காலங்களில் எல்லாம் கண்டே வந்திருக்கிறோம்.
திராவிடக் கொள்கைகளில் பற்றில்லாதவர்கள் கழகத்தில் இணைவதும் அவர்களை கட்சியே முன்னிலைப் படுத்துவதும் அவர்கள் பின்னர் கழண்டுகொண்டு புழுதி வாரி தூற்றுவதும் என்பது கட்சியின் அடிமட்டத் தொண்டனை அயர்வுக்குள்ளாக்குகிறது.
தீவிர காங்கிரஸ் ஆளான எம்ஜிஆர் கழகத்துக்குள் வந்து பிரிந்த போது கணிசமான வாக்காளர்களை தன் பின்னாலேயே இழுத்துக் கொண்டு போனார், பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துக் கொண்டு கருமாரி அம்மன் வழிபாட்டை பகிரங்கமாகச் செய்து பின்னர் தன் மறைவுக்குப் பின்னரான தலைமையை அடையும் அளவுக்கு முழுக்க முழுக்க திராவிடத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரான நிலைப்பாட்டையே எடுக்கும் அளவுக்கு தீவிர இந்துத்துவ வாதியான ஜெயலலிதாவை வளர்த்துவிட்டதைத் தவிர வேறெந்த புரட்சியையும் இந்த இரண்டு சினிமா புரட்சிகளுமே செய்துவிடவில்லை.
கட்சியில் இருந்து ஒதுங்கிய கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினார், டி ராஜேந்தர் பயங்கர பக்திமான் சோதிடரும் கூடவாம். நேறைய நெப்போலியன் கூட பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார், அடடே என்ன ஒரு கொள்கைப் பிடிப்பு? இவர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் ஒரு பங்கையாவது குமரிமுத்து, வாகை சந்திரசேகர் போன்றவர்களுக்கு கொடுத்திருந்தால் இன்னும் இன்னும் என்று தமிழகத்தில் புயலாகச் சுழன்றிருக்க மாட்டார்களா?
விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து என்றதற்கு பின்னர் வந்த மறுப்பை படித்துவிட்டு கலைஞர் வீட்டிலேயே இந்த கூத்துக்கள் எல்லாம் நடக்கும் போது என்னடா பெரிய கொள்கை பேச வந்துட்டீங்க என்று மாற்றுக் கட்சியினர் கேட்கும் போது தலையை கவட்டியில் வைத்துக் கொள்ளும் அவமானம் என்பது எல்லா திமுக ஆட்களுக்கும் வழக்கமாகிப் போனது.
அதுதான் அப்படியென்றால் திராவிடக் கொள்கையென்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஆட்கள் எல்லாம் கட்சியின் முக்கியப் பதவிகளுக்கு முன்னிருத்தினால் அவர்கள் தங்களின் சாதியை வளர்த்துவிட்டு முடிவில் தனிக் கட்சி தொடங்க ஆரம்பித்து விடுகிறார்கள். சரத்குமார் உதாரணம்.
முறசொலி மாறனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக வளர்த்துவிட்டு ஊடக ஜாம்பவானான அண்ணனின் துணைகொண்டு ஆ. ராசா என்ற கொள்கை பிழம்பின் அரசியல் முடிவுக்கே வித்திடும் அளவுக்கு 2ஜி அலைக்கற்றை விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கியதில் தயாநிதி மாறனின் பங்கு என்ன என்பதை நாடே அறியும். திமுகவின் படுதோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப் படுகிறது.
இப்படி வழக்கமான ஜனநாயகத்தில் இருந்து கொள்கைகளை அறவே மறந்த ஆட்களை எல்லாம் திமுகவில் வளர்த்துவிட்டதன் விளைவு இன்று பாஜக அடுத்த முதல்வரை தமிழகத்தில் களமிறக்குவோம் என்று குட்டை குழப்புகிறது. 2016 தேர்தலில் திமுகவோடு சேர்த்து முதல்வர் பதவிக்கு போட்டியிடும் கட்சிகளின் எண்ணிக்கையே ஒரு டஜனைத் தாண்டுகிறது.
திமுக ஒன்றும் சங்கர மடமில்லை என்று அடிக்கடி நாமே சொல்லிக் கொண்டு நம்மை ஏமாற்றிக் கொள்கிறோமா என்ற பயம் வரத்தான் செய்கிறது. ஆனாலும் இன்றளவும் கொஞ்சமாவது ஜனநாயகமும் கொள்கையும், அடிப்படை தொண்டன் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்கும் தலைமையும் இருக்கும் ஒரே கட்சி என்ற வகையில் திமுக தொண்டனாக பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
திமுக ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனைக்கும் பின்னால் அதிமுகவில் ஏற்படுத்தியிருக்க வேண்டிய வெற்றிடத்தை யார் யாரோ பயன்படுத்திக் கொள்ள வேடிக்கப் பார்த்தபடி கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் தான் இன்றளவும் ஒரு டம்மி முதல்வரை பெயருக்கு வைத்துக் கொண்டு மம்மி ஆட்சியில் இருப்பது போன்ற பிம்பத்தை ஊடகங்கள் மூலம் மக்கள் முதல்வர் என்ற பெயரால் இன்னும் இன்னும் ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது அதிமுக.
பாஜக ஆர் எஸ் எஸ் சங் பரிவார் அமைப்புகள் எல்லாம் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொண்டாலும் ஒரு சிக்கல் அடுத்தவர்களால் என்று வரும் போது ஒன்றாய் கூடி கூட்டுச் சதி செய்கிற ஆட்கள் ஆனால் திமுக இன்று அப்படி இல்லை , தங்களுக்குள் குழுக்களை அமைத்துக் கொள்ளும் பெருந்தலைகள் திமுகவுக்கு ஒரு சேதாரம் என்றால் ஆஹா நான் இதைத்தான் ஆசைப் பட்டேன் என்று உள்ளுக்குள் கொட்டமடிப்பதை எல்லா சமீபகால தேர்தல்களிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதெல்லாம் வெளியில் இருந்து வந்தவர்களால் அல்ல.
மதுரையில் அழகிரி கொடுத்த தைரியம், இன்று கட்சியில் இருந்தும் ஒட்டு மொத்த மாக நீக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டிருந்தாலும், திமுகவில் அவரை இத்தனை தூர வளர்த்துவிடுவதற்க்கு காட்டிய முனைப்பில் ஸ்டாலினுக்கு ஒரு பாதியாவது கட்சியில் முக்கியத்துவம் அப்போதிருந்தே கொடுத்திருந்தால் இன்று அடுத்த முதல்வர் யார் என்று அமீத் ஷாகளும் ராமதாசும், விஜயகாந்தும் போட்டிக்கு வந்து பேட்டிகள் கொடுத்திருக்க மாட்டார்கள்.
கொள்கைக் குன்றுகளும், கழகமே உயிர் என்று நினைத்தும் பலபேர் இருக்க கொழுத்த ஆட்கள் என்று கட்சியில் சிலரை முன்னிலைப் படுத்தியதன் விளைவே இன்றைய பிரபலங்கள் எல்லாம் கட்சியை விட்டு கழட்டிக் கொண்டு போவதும் ,
போனவை போகட்டும் என்று கலைஞர் கத்தியை எடுக்க வேண்டிய நேரம் இது. ஊளைச் சதைகள் அதிகம் இருப்பது உடலுக்கும் நல்லதல்ல கட்சிக்கும் நல்லதல்ல என்பது அரசியலையே சுவாசித்து உயிர் வாழும் கலைஞருக்கு தெரியாதது அல்ல. இளைத்தாலும் பரவாயில்லை என்று சிகிச்சையை தொடங்குங்கள் கலைஞரே.
ஏனென்றால் கலைஞர் மட்டுமே கழகத்தின் முகம் என்பது கட்சித் தொண்டனுக்கு தெரியாமல் இல்லை.
5 comments:
Arumai
Arumai
Arumai
நல்ல கட்டுரை... தொடர்ந்து ப்ளாக்ல எழுதுங்க...!
MGR என்ற சினிமா நடிகனின் குண்டடிபட்ட போஸ்டரை காட்டிதான் அன்னாதுரையே ஆட்சியைபிடித்தார் என்பதுதான் வரலாறு.
Post a Comment