Friday, April 18, 2008

-பெரியார் 6

பொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாராவது தன் கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுத்திக்கொள்பவரே ஆவார்!

-பெரியார்

இருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியல் வரலாற்றில் நட்பு எனும் அத்தியாயத்தை எழுதப்போனால், உலகின் தலைசிறந்த நாவல்களும் தோற்றுப்போகும்! கோப் பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு போல, பெரியார் ராஜாஜியின் நட்பும் ஆழமானது!

அன்று, சேலம் நகர மன்றத் தலைவராக இருந்த ராஜ கோபாலாச்சாரியார் என்றழைக்கப்பட்ட ராஜாஜி, ஈரோடு வந்து ராமசாமியாரைச் சந்தித்தது ஆரம்பம். தொடர் சந்திப்புகளில், காங்கிரஸில் சேருமாறு அழைப்பு விடுத்தார் ராஜாஜி. ராமசாமியாரும் அதனை ஏற்றுக்கொண்டு காங்கிரஸில் சேர்ந்து தமிழக அரசியலில் அடியெடுத்துவைத்தார். தமிழ்நாட்டில் அப்போது நிலவிவந்த அரசியல் சூழ்நிலையைத் தெரிந்துகொண்டால்தான், ராமசாமியாரின் அரசியல் வருகை யில் உள்ள முக்கியத்துவத்தை நம்மால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.

முந்தைய பகுதிகள்

சென்ற இதழ்...







1914 உலக வரலாற்றில் பல மாறுதல்களை ஏற்படுத்திய ஆண்டு. முதல் உலகப் போர், ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோஷலி சத்தின் எழுச்சி, தென் ஆப்பிரிக் காவிலிருந்து காந்தியின் இந்திய வருகை எனப் பல முக்கிய நிகழ் வுகள் அந்த ஆண்டில்தான் நிகழ்ந் தன. தமிழ்நாட்டிலும் அதிசயிக்கத் தக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. படித்த இளைஞர்கள் சிலர் அந்த ஆண்டு சென்னை, திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளி யில் கூடி விவாதித்தனர். அவர் களது பேச்சில் உணர்ச்சியும் உஷ் ணமும் அதிகம் இருந்தன. அவர் களின் கோபத்துக்குக் காரணம், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிமட்டு மல்ல; அதன் அரசாங்கப் பதவி களும்கூட!



சப் கலெக்டர், ஜட்ஜ், தாசில் தார், வக்கீல், ரெவென்யூ இன்ஸ் பெக்டர் போன்ற உயர் பதவிகள் பலவற்றில் பிராமண சமூகத்தினரே பரவலாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். டெபுடிகலெக் டர்கள், சப் ஜட்ஜுகள், மாவட்ட முன்சீப்கள் என அரசாங்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் அவர் களே அதிக எண்ணிக்கையில் பதவியில் இருந்தனர். மற்ற சாதி களில் இருந்த படித்த இளைஞர் கள் அரசாங்கப் பதவிகளுக்கு வருவதற்கு இது பெரும் தடையாக இருந்தது. இதுதான், அன்றுகூடிப் பேசிய இளைஞர்களின் விவாதத் தின் சாராம்சம். விளைவு, 1916 நவம்பர் 20ல், சென்னை பூந்த மல்லி நெடுஞ்சாலையில் வக்கீல் எத்திராஜ் என்பவர் வீட்டில் டாக்டர் நடேசன், சர்.பி.டி.தியா கராயர், டி.எம்.நாயர், பனகல் அரசர் போன்றோர் தலைமையில் சுமார் 30 பேர் ஒன்று கூடினர். புதிய இயக்கம் ஒன்று உதயமானது. 'தென்னிந்திய உரிமை நலச் சங்கம்' என்ற பெயரில் அன்று உருவான அந்த இயக்கம், தனது அடுத்தடுத்த மாநாடுகளால் தென்னிந்தியா முழுக்கப் பெரும் எழுச்சியையும் அலையையும் மக்கள் மத்தியில் உண்டாக்கி யது. அவர்கள் தங்களைத் 'திரா விடர்' என அடையாளப்படுத்திக் கொண்டனர்.

அரசாங்கப் பதவிகளில் பிராமணர் அல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் வகுப்புவாரி முறையில் பிரநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாநாடுகள் தோறும் முழங்கினர். இதையட்டி தங்களது கருத்துக்களை மக்களிடத்தில் கொண்டுசெல்லும்விதமாகப் பத்திரிகைகளையும் துவக்கினர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் அவை மக்களிடையே பரபரப்பாக விற்பனையாகி, கட்சிக்குப் புதிய அந்தஸ்தையும் கௌரவத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் நடத்திய 'ஜஸ்டிஸ்' எனும் ஆங்கிலப் பத்திரிகையின் பெயரே நாளடைவில் மக்களிடையில் அதிகமாகப் புழங்கத் துவங்கி, பிற்பாடு அக்கட்சியின் பெயரையும் மக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்றே அழைத்தனர். இந்த 'ஜஸ்டிஸ்'தான் தமிழில் 'நீதி'யாகி பின்னர் 'நீதிக்கட்சி' என்ற பெயருடன் அரசியல் வரலாற்றில் தன் னைப்பதிந்துகொண்டது.



இந்தச் சூழலில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம், முதல் உலகப் போரில் தனக்கு ஒத்துழைத்த இந்தியாவுக்குத் தனது நன்றியைக் காட்டும் விதத்தில், மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்துகொள்ளப் பயிற்சி அளிக்கும் விதமாக மாகாணங்களில் சுய ஆட்சி வழங்கத் திட்டமிட்டது.

1919ல் சென்னையில் நடந்த முதல் மாநகராட்சித் தேர்தலில் 'நீதிக் கட்சி' பெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. நீதிக் கட்சியின் தலைவரான சர்.பி.டி.தியாகராயர் சென்னை மாநகராட்சியின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் மற்றொரு பிரிவான அன்னிபெசன்ட் அம்மையார் தலைமையிலான சுயராஜ்யக் கட்சி படுதோல்வி அடைந்தது.

இத்தனைக்கும் வட நாட்டில் காட்டுத் தீயென தேச பக்தி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த நேரம் அது. காந்தி மகான் மக்களிடையே புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்திருந் தார். அங்கு காங்கிரஸ், மக்கள் போற்றும் மகத்தான கட்சியாக மாறி இருந்தது. ஆனால், தென் னாட்டில் காங்கிரசுக்கு மக்க ளிடத்தில் போதிய செல்வாக்கு இல்லை என்பதைத் தேர்தல் நிரூபித்துவிட்டது.

காந்திக்கு இந்த விஷயம் தெரிந்து, தென்னாட்டில் காங்கிரஸைப் பலப்படுத்துவது குறித்து தீவிரமாக யோசிக்கத் துவங்கினார். இது சம்பந்தமாக அப்போதைய காங்கிரஸ் பேரியக்கத்தின் தென்னாட்டுத் தலைவர்களில் ஒருவரான ராஜாஜியிடம் அவர் தெளிவாக ஒரு விஷயத்தை எடுத்துரைத்தார். இனி, தென்னாட்டில் காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்க்க வேண்டுமானால், அதைப் பிராமணரல்லாத ஒருவரை வைத்துதான் செய்ய முடியும்; நல்ல பேச்சு வன்மையும் தேச பக்தியும்கொண்ட தலைவராக இருந்தால், நீதிக் கட்சியை முழுவதுமாக ஓரங்கட்டிவிடலாம் என்பதே அது!

இச்சமயத்தில்தான் ராஜாஜிக்கு ஈரோட்டில் ராமசாமி எனும் தலைவரின் சாகசங்களும் அருமை பெருமைகளும் தெரிய வந்தன. ராமசாமியாருக்கு காங்கிரஸ் மீது, எப்போதும் ஒரு அபிமானம் உண்டு. ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதுமே துடித்துப்போன ராமசாமியார், வ.உ.சி. உட்பட 50க்கும் மேற்பட்டவர்களை ரயிலில் அழைத்துச்சென்று அந்த இடத்தில் கண்ணீர் மல்க நின்றிருக்கிறார். தன்னைத் தேடி வரும் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் பொருளுதவியும் பலமுறை செய்திருக்கிறார். என்றாலும், அப்போதெல்லாம் காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர் பதவியைக்கூட அவர் ஏற்றிருக்கவில்லை. எனினும் ராஜாஜியின் மீது கொண்டிருந்த நட்பால், அவரது அழைப்புக்கு உடனே ஒப்புக்கொண்டார். தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, விதவைத் திருமணம், கதராடை இயக்கம் என இந்த நான்கு கொள்கைகளையும் கேட்ட மாத்திரத்திலேயே ராமசாமி அவர்களுக்கு காந்தியின் மேல் அளவற்ற மதிப்பும் மரியாதையும் உண்டாகிவிட்டது.

''இனி கண நேரமும் நாம் தாமதிக்கக் கூடாது. இந்தத் தேசத்தை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க, காந்தியின் கரத்தை வலுப்படுத்த இதுவே சரியான தருணம். உங்களது நகராட்சி மன்றப் பதவியை ராஜினாமா செய்யுங்கள். நானும் சேலம் நகர மன்றத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன்'' என ராஜாஜி துரிதப்படுத்த, ராமசாமியார் முழு மனமின்றித் தயங்கினார்.

''நாயக்கரே! உங்களுக்கு என்னதயக்கம் இருந்தாலும் வெளிப்படையாகக் கேளுங்கோ!''

''இல்லை... தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் காங்கிரஸ் கட்சின்னாலே அது உங்க சாதிக்காரங்க கட்சியாதான் இருக்குது.''

''அதனாலதான் உங்களைக் கூப்பிடறேன். நீங்க வந்து அந்த அவப் பேரை மாத்திடுங்கோ!''

''அது போதாது! எனக்கு நீங்க ஓர் உத்தரவாதம் தரணும். கட்சி யிலேயும் உத்தியோகத்திலேயும் உங்க சாதிக்காரங்க இல்லாத மத்த சாதிக்காரங்களுக்கு 50 சதவிகிதம் நீங்க விட்டுக்கொடுத்து டணும். அதுக்குச் சம்மதம்னா சொல்லுங்க, இப்பவே காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்துடறேன். அதுக் கப்புறம் வெள்ளைக்காரனுக்கு பூட்ஸ் துடைக்கிற ஜஸ்டிஸ்கார னுங்களை உண்டு இல்லைன்னு பண்ணிப்புடலாம்!''

ராஜாஜி தயங்கவும், ''யோசிக்கிறீங்க பாத்தீங்களா! உங்களால அது முடியாது!'' என்றார் ராமசாமி.

''அதில்லை நாயக்கரே! நான் மட்டும் எடுக்கிற முடிவில்லை அது. சரி, கவலையை விடுங்க. அடுத்து நடக்கப்போற திருப்பூர் மாநாட்டுல நானே இதுக்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேத்துறேன். கையைக் கொடுங்கோ, இதைப் போய்ப் பெரிசா எடுத்துக்கிட்டு...'' நண் பர்கள் கைக் குலுக்கிக்கொண் டனர்.

அந்த வாக்குறுதியை நிறை வேற்றுவது அத்தனை எளிதல்ல என்பது ராஜாஜிக்கு நன்றாகத் தெரியும். அப்போதைக்கு வேறு வழி தெரியாமல் வெறுமனே ஒப் புக்குத் தலையை ஆட்டிவிட்டார். பின்னால் பிரச்னை வரும்போது எப்படியாவது பேசி நாயக்கரைச் சமாளித்துவிடலாம் என்பது ஆச்சாரியாரின் கணக்கு.

ஆனால், அது தப்புக் கணக்கு என்பது ஆறு வருடங்களுக்கு பிறகுதான் அவருக்கு உறைத்தது.



-சரித்திரம் தொடரும்

No comments: