'கட்சி மாறுகிறவன் அயோக்கியன், அயோக்கியன்,
மகா அயோக்கியன்!'
-பெரியார்
'இனி, ராமசாமியைத் திருத்த முடியாது. படிப்பு கால் வீசைக்கும் ஏறாது!' எனப் பள்ளிக்கு முழுக்குப் போடவைக்க வெங்கட்ட நாயக்கரும் சின்னத் தாயம்மாளும் முடிவெடுத்தனர்.
ராமசாமியின் எடக்குமடக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை என ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்.
''இந்த நாயக்கருக்கு என்ன ஆச்சு! பள்ளிக்கோடம் போய்க்கிட்டிருந்த பயலைக் கூட்டியாந்து கடையில கணக்கெழுத உட்கார வெச்சிருக்காரே! சின்ன புள்ளைக்கு என்ன விவரம் இருக்கப்போவுது!'' என்று பலரும் பலவிதமாகத் தங்களது வியாபார பேட்டைக்குள் புதிதாக முளைத்திருக்கும் சிறுவனைப் பார்த்துக் கேலி பேசியதற்கு ஒரு காரணம் இருந்தது. வெங்கட்ட நாயக்கரின் மண்டிதான் ஈரோடு பஜாரிலேயே பெரிய மண்டி. மிளகாய், தனியா, மஞ்சள், வெல்லம், கருப்பட்டி போன்ற மளிகைச் சாமான்களை மூட்டை மூட்டையாக வாங்கிச்செல்ல வியாபாரிகளும் வண்டிக்காரர்களும் எப்போதும் கூட்டம் கூட்டமாக மண்டி முன் கூடி யிருப்பர்.
காலையிலேயே ஏலம் ஆரம்பித்துவிடும். கூடியிருக்கும் வியாபாரிகள் மத்தியில், கையில் மணியை ஆட்டிக்கொண்டே உரக்கக் கூவி ஏலம் விடுவதில் தொடங்கி, மூட்டைகளில் விலாசம் எழுதி, குறிப்பிட்ட வாடிக்கை யாளர்களிடம் சாமான் சேர்ந்து விட்டதா என்பது வரை கவனித் துக்கொள்ள வேண்டும். இத்தனை பெரிய பொறுப்பை இந்தச் சிறுவன் தாங்குவானா என்ற எண்ணம் அனைவருக்கும்!
ஆனால், நடந்ததோ வேறு! மண்டியில் கால்வைத்த சில நாட்களிலேயே வியாபாரத்தில் வெளுத்து வாங்கினான் சிறுவன் ராமசாமி. கையில் மணியைப் பிடித்துக்கொண்டு வியாபாரிகள் முன் அவன் நின்றால், பஜாரே களைகட்டும். காரணம், ராமசாமி ஏலத்தினூடே அடிக்கும் கிண்டலும் கேலியுமான பேச்சுகள்தான். பேச்சோடு பேச்சாக, விலையையும் சாமர்த்தியமாகக் கூட்டிவைத்து, வியாபாரத்தில் வெங்கட்டாவையே மிஞ்சிவிட்டார் ராமசாமி. மகனது திறமைகளைப் பார்த்து, நாயக்கருக்கு எக்கச்சக்க பூரிப்பு!
வியாபாரம் இல்லாத நேரங்களிலும், கடை முன் எப்போதும் கூட்டம் இருக்கும். பெரும்பாலும் வண்டியோட்டிகளும் சுமை தூக்கும் தொழிலாளிகளும்தான். நாயக்கர் மகன் என்ற மரியாதை காரணமாக, ராமசாமி எதைச் சொன்னாலும் அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்களைப் பொறுத்தவரை ராமசாமி ஒரு கதாநாயகன். அவர்களைத் தொடர்ந்து சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கடைக்கு வரும் மதவாதிகளையும், பிராமணர்களையும், இன்ன பிற பெரிய மனிதர்களையும் வம்புக்கு இழுப்பார் ராமசாமி.
''என்ன சாமி... உங்க ராமாயணத்துல ராமர் ஒரு மகாவீரர்தானுங்களே?''
''ஆமாம்! அதுக்கென்ன இப்போ?''
''அப்புறம் எதுக்காக அவர் வாலியை மறைஞ்சிருந்து தாக்கணும்?''
''அது வந்து... வாலி ஒரு அசுரன்! அவன் யாரைப் பார்த்தாலும் அவங்க பலத்துல பாதி பலம் அவனுக்கு வந்துடும்!''
''அப்படின்னா, ராமனைவிட வாலி பலசாலின்னு ஒப்புக்கறீங்க. அப்படித்தானே?''
''அது வந்து... புராணத்துல என்ன சொல்றதுன்னா..?''
''அதெல்லாம் எனக்கு வேணாம் சாமி! ஒரு அவதாரமா இருந்தும், ராமரால வாலியை ஜெயிக்க முடியலைன்னா, அப்ப வாலிதானே உண்மையான பல சாலி? நீங்க அவரைத்தானே கும்புடணும்? அதை விட்டுட்டு எதுக்காக ஒரு பயந்தாங்குள்ளியைக் கடவுளா மாத்துறீங்க?''
இப்படியான எடக்குமடக்குக் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் எதிரே நிற்பவர் திணறுவதைப் பார்த்து, சுற்றிலும் அமர்ந்திருக்கும் வண்டியோட்டிகள் மத்தியில் பலத்த சிரிப்புச் சத்தமும் கைத்தட்டல்களும் எழும். கேள்வியால் திணறியவரும் சுதாரித்து, ''என்ன நாயக்கரே! உங்க பையன் பலே புத்திசாலியா இருப்பான் போலிருக்கே! என்னையே கேள்வி கேட்டு மடக்கிப்பிட்டான்!'' எனச் சமாளித்துச் சிரித்தபடியே அந்த இடத்திலிருந்து நழுவிச் செல்வார்.
காலங்கள் உருண்டன. இப்போது வெங்கட்ட நாயக்கர் ஈரோடு முனிசிபல் சேர்மன். இந்த நிலையில், இளைய மகன் ராமசாமி பற்றிச் சமீபகாலமாக அவர் கேள்விப்படும் தகவல் எதுவும் அவ்வளவாகச் சரியாக இல்லை. பையனுக்கு வயதோ இருபது ஆகிவிட்டது; இனியும் தாமதித்தால், நாடகக்காரிகளுக்கே மொத்தச் சொத்தையும் எழுதிக் கொடுத்துவிடுவான் ராமசாமி என்று பயந்தார் வெங்கட்ட நாயக்கர். ''சொந்தத்துல ஏதாவது பொண்ணு இருந்தா, உடனே பாரு! சட்டுபுட்டுனு ஒரு கால்கட்டு போட்டுடலாம். நம்ம ராமசாமிக்கு வயசாகுதுல்ல!'' என மனைவியிடம் அறிவுறுத்தினார்.
சேலம் தாதம்பட்டியில், உற வில் ஒரு பெண் இருப்பது நினை வுக்கு வந்தது. பெயர்கூட நாகம் மாளோ, என்னவோ. வயது பதின்மூன்று இருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் அப்பா ரங்கசாமி, ஒரு ஹெட்கான்ஸ்டபிள். இப்போதிருக்கும் தங்களது மிராசு, ஜமீன் போன்ற அந்தஸ்துக்கு முன் அவர்களின் குடும்பம் ஏணி வைத்தால்கூட எட்டாது என முடிவெடுத்தனர். ஆனால், தன் மகனின் உள்ளத்தில் அந்த நாகம்மாள் ஏற்கெனவே குடியேறி, சிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டாள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
பிற்பாடு விஷயம் தெரிய வந்து, மகனின் எண்ணத்தை மாற்ற என்னென்னவோ செய்து பார்த்தார். எதுவும் பலிக்கவில்லை. இறுதியாக, நாகம்மாள் எனும் அந்த அற்புதப் பெண்மணி, தமிழர்களின் வாழ்விலும் வரலாற்றிலும் அடியெடுத்து வைக்கும்விதமாக, தன் மனதுக்குப் பிடித்த ராமசாமியோடு மாலை மாற்றிக்கொண்டார்.
கல்யாணம் ஆன அடுத்த நாளே, சின்னத்தாயம்மாள் தன் மகனின் சுபாவங்களை விலாவாரியாக எடுத்துக் கூறி, ''அவனைப் பக்திமானாகவும் ஒழுக்கமான குடும்பத் தலைவனாகவும் மாற்ற வேண்டியது உன் பொறுப்பு!'' என்று கட்டளை இட்டார்.
ராமசாமியோ, தன் மனைவியை எப்படியாவது அம்மாவின் பூஜை கோஷ்டியிலிருந்து பிரித்து, தன்னைப் போல முற்போக்கான சிந்தனைகொண்டவளாக மாற்றிவிட வேண்டும் எனும் முனைப்பில் இருந்தார்.
அதன் முதல்கட்டமாக மனைவியும் அம்மாவும் என்றைக்கெல்லாம் விரதம் மேற்கொள்கிறார்களோ, அன்று பார்த்துத் தனக்கு அசைவ உணவு சமைக்க வேண்டுமென அடம்பிடிப்பார். மனைவியின் தாலியைக் கழற்றித் தன் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, தாலி இல்லாமல் வாழ அறிவுறுத்துவார். நாகம்மை எப்படியும் தன் மகனைத் திருத்தி வழிக்குக் கொண்டுவந்துவிடுவாள் என எண்ணியிருந்த சின்னத்தாயம்மாள், மெள்ள மெள்ள நாகம்மையே சீர்திருத்தப் பெண்மணியாக மாறிவருவதைக் கண்டு, ''அவளாச்சு, அவ புருஷனாச்சு!'' எனும் முடிவுக்கு வந்தார்.
இப்படியாக, புதுமையும் குதூகலமுமாக நாகம்மாளும் ராமசாமியும் சந்தோஷ மண வாழ்க்கையில் நீச்சலடித்துக்கொண்டு இருந்தபோது, அவர்கள் வாழ்வில் யாரும் எதிர்பாராத விதத்தில் துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. நாகம்மைக்கும் ராமசாமிக்கும் பிறந்த பெண் குழந்தை ஒன்று ஐந்தே மாதத்தில் இறந்து, குடும்பத்தினரைப் பெரும் சோகக்கடலில் ஆழ்த்தியது!
-(சரித்திரம் தொடரும்)
thanks to vikatan.com ajayan bala
No comments:
Post a Comment