Friday, January 08, 2010
புரட்சியின் நிறம் கறுப்பு
'சீர்திருத்தம் என்பது ஓட்டை, உடைசலை அடைக்கிற வேலை. எல்லாவற்றையுமே தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் உண்மையான புரட்சி!'- புரட்சியின் நிறம் சிவப்பு என்பதைக் கறுப்பு என்று மாற்றிக் காட்டிய கலகப் பேராசான் பெரியாரின் வார்த்தைகள் இவை. சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, சமத்துவப் பொதுவுடமைச் சமுதாயம் ஆகியவைதான் பெரியாரின் செயல்பாட்டு அடிப்படைகள். இந்தியாவில் எத்தனையோ பேர் இந்த அநீதியான சாதி அமைப்புக்கு எதிராகப் போராடினார்கள் என்றபோதிலும், முதன்முதலாக பெயருக்குப் பின்னால் சாதி போட்டுக்கொள்ளும் பழக்கத்தை ஒழித்த பெருமிதத்தை தமிழ்நாட்டுக்கு உருவாக்கித் தந்தவர் பெரியார். இன்று திருமணப் பத்திரிகைகள் தவிர, பொதுவெளியில் சாதிப் பெயர்கள் இல்லை என்றால், அதற்குக் காரணம் பெரியார்.
சுய மரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அழைப்பிதழே புரட்சிகரமாக இருந்தது. 'தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபசாரிகள் என்று தங்களைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார். திருமணம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதால், 'திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும்' என்றார். 'தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்' என்றவர், கிராப் வெட்டிக்கொள்கிற பெண்களுக்குப் பரிசு வழங்கு வதாகவும் அறிவித்தார்.
ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பொதுவான பெயர் இட வேண்டும். கற்பு என்பது எவ்வளவு அயோக்கியத்தனமோ அதேபோல் விபசாரம் என்பதும் அயோக்கியத்தனம் என்றெல்லாம் எழுதியதும் பேசியதும் அவருக்கே மட்டுமான தைரியம். கலகத்தின் உச்சிக்கே போனவர், 'பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை. அவர்களுடைய கர்ப்பப் பைகளை அகற்ற வேண்டும்' என்றார். தன் முதல் மனைவி நாகம்மாள் இறந்தபோது வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், 'நாகம்மை தான் நம்பிய ஆணாதிக்கத்துக்கு 100 சதவிகிதம் உண்மையாக இருந்தார். ஆனால், நான் பேசிய முற்போக்குக்கு அந்தளவு உண்மையாக இருந்ததில்லை' என்று தன்னை வெளிப்படையாகத் தமிழ்ச் சமூகத்தின் முன் விமர்சனத்துக்காகக் கிடத்தினார்.
சாதி, மதம், கடவுள், காதல், திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு, ஒழுக்கம், தேசியம், மொழிப்பற்று என இதுவரை கட்டியமைக்கப்பட்ட புனிதங்கள் அனைத்தையும் போட்டு உடைத்தார். தேசியக் கொடி, அரசியல் சட்டம், காந்தி சிலை, பிள்ளையார் சிலை, ராமன் படம் என யாரும் கைவைக்கத் தயங்குகிற புனிதங்களைக் கொளுத்தினார், செருப்பால் அடித்தார். 'நமது மொழி, சாதி காப்பாற்றும் மொழி'யாக இருக்கிறது என்று சொன்ன பெரியார், அதனாலேயே 'தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி' என்றார். 'அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்' என கடுமையாக விமர்சித்தார்.
இறுதிக் காலத்தில் உடல்நிலை வாட்டியபோதும் மூத்திரப் பையுடன் தமிழனின் சூத்திர இழிவுபோக்க தமிழ்நாடு முழுக்கச் சுற்றிவந்தார். 'இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈ.வே.ராமசாமி என்னும் பிற்போக்குக்காரன் இருந்தான் என்று உலகம் பேசும். ஏனெனில், உலகம் அந்த அளவுக்கு முற்போக்காகச் செல்லும்' என்றார். ஆனால், அந்தக் கலகக்காரருக்கு முன்னும் பின்னும் அப்படியானதொரு நெருப்பு கிளர்ந்தெழவே இல்லை. பெரியார் ஆசைப்பட்டபடி, பெரியாரைத் தாண்டிச் செல்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும்!
- ரீ.சிவக்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment