எனக்கு, ‘ஏதாவது எழுதலாமா’ என்ற உணர்ச்சி வந்தது. உடனே,‘என்ன எழுதலாம்?’ என்று யோசித்தேன். காகிதம், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன்.“ ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?” என்பது பற்றி எழுதத் தோன்றிற்று.
“ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?” என்று எழுதுகின்ற நான், ‘நான், ஏன் காங்கிரசில் சேர்ந்தேன்?’ என்பதைத் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். அதற்குமுன், எனது சரித்திரத்தையும் ஒரு சிறிது எடுத்துக்காட்டுவது அவசியமாகும்.
நான் 1879-இல் பிறந்தவன். 1887 வரையில், நான் ஒரு வீட்டுக்கு குழந்தைப் பருவத்திலேயே சுவீகாரமாய், வாய்ப் பேச்சில் கொடுக்கப்பட்டு, அங்கு வளர்ந்து வந்தவன். காரணம் என்னவென்றால், என் தமையனார் பெரியவர்; அவர் காயலாக் குழந்தை; தபசு செய்து வரம் இருந்து பெற்ற பிள்ளை; அதைக் காப்பாற்ற, என்னைக் கொடுத்துவிட்டார்கள். என்னை சுவீகாரம் பெற்றவள், என் தகப்பனாருக்கு - சிறிய தகப்பனார் மனைவி; சிறிது பூமியும், ஒரு வீடும், கொஞ்சம் பணமும் உடையவள்; அன்றியும், அவள் ஒரு விதவை. அந்தஅம்மாள் என்னை வெகு செல்லமாய் வளர்த்து வந்தாள்.
நான், சிறிது ‘சுறுசுறுப்பான சுபாவமுள்ள’ சிறுவன்; அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்; மற்றொன்று, மானாவமானமில்லாமல் சங்கதிகளை கீழ்த்தரத்தில் பேசுவதில் சிரிக்க நேருவது மற்றொரு விதம். நான்அதிகமாக, வேடிக்கைக் குறும்புத்தனமாய் சங்கதி பேசுவது வழக்கம். ஆதலால், அது இரண்டாம் தரத்தைச் சேர்ந்தது. வெகு தாராளமாக, கொச்சையாக சங்கதிகளை, பச்சையாகப் பிரயோகம் செய்யும் பழக்கம் என்னிடம் உண்டு. இதை ரசிக்கிறவர்களே கூட்டமாக என் சுவீகார வீட்டில் காணப்படுவார்கள்.
சுவீகாரத் தாய் என்னை அடக்கினாலும், மற்றவர்கள், ‘சிறு குழந்தைகள், அப்படித்தான் இருக்கும்; அடிக்காதே’ என்பார்கள். நான் செல்லமாக வளர்க்கப்படுகிறேன். ஆதலால், அதிகமாக அடிக்கமாட்டார்கள். என்னைப் பார்க்க என் தகப்பனார் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவரிடம் இதைச் சொல்லுவார்கள். அவருக்கு கோபமும், சிரிப்பும் வரும். ஏனென்றால், என் பேச்சு ஆபாசமாயிருந்தாலும், அதில் சிறிது அதிசயம், அர்த்தபுஷ்டி என்பதும் இருக்குமாம். அதனால், உள்ளே சிரித்துக்கொண்டே என்னைக் கண்டித்துவிட்டுப் போய்விடுவார்.
இந்த நிலையில் என்னை படிக்கப் போட்ட பள்ளிக்கூடம், ஒரு ஓலைச்சாலைக் குடிசு. 16 அடி நீளம், 8 அடிஅகலம் இருக்கும். அதில் சுமார் 50 பிள்ளைகள் படிப்பார்கள். 5 வயது முதல் 13 வயதுவரை வயதுள்ளவர்கள். வீட்டில் காலித்தனம், தெருவில்வம்பளப்பு - கலகம், பள்ளியில் சுட்டித்தனம், வளர்ப்பில் செல்லம் (செல்வம்) இவைகளால் நான் கற்றது, வாயாடித் தனம்தான் என்று சொல்வார்கள். இந்த வாயாடித்தனம், வெட்கமில்லாமல் - பயம் இல்லாமல் - செல்ல வழி கிடைத்துவிட்டால், அது எங்கு போய் நிற்கும். . . ? சொல்ல வேண்டுமா. . . ? என் தமையனார் நல்ல வளப்பம் பெற்று, உடல் நலம் அடைந்த உடன் என் தாயார் பிடிவாதத்தால், என் சுவீகாரம் ரத்தாக்கப்பட்டு, நான் தகப்பனார் வீட்டிற்கே அழைத்துக்கொள்ளப்பட்டு - அங்கு சென்றதும் இரண்டொரு வருடம் முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டு - அங்கும் வாத்தியாரால் என்னை வைத்து சமாளிக்க முடியாமல் - நாலாவது வகுப்பு ‘ப்ரைமரி பரீட்சை’ அதாவது, ஒரு ரூபாய் பணம் கட்டி, அம்மை குத்திக்கொண்டு பரீட்சை எழுதுவது, பெரிதும் சிலேட்டிலேயே, பரீட்சை எழுதிக் காட்டவேண்டும். இந்த பரீட்சை பாசானால் கணக்கு மணியம், அட்டெண்டர் முதலிய வேலைக்குப் போகலாம்.
நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் அங்கு எனக்கு செவுடிப் (தமிழ்க் கணக்கு) பாடமிருந்தாலும் முனிசிபாலிடி பள்ளியில் 4-வது பரீட்சை பாசாகி (என் பேர், செயிண்ட் ஜார்ஜ் கெஜட்டில் வந்து) விட்டதாலும், வாத்தியாருக்கு என்னைப் பள்ளியில் வைத்து சமாளிக்க முடியாமற் போனதாலும், என் தகப்பனாருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க முடியாமல், ‘இதுவே போதும்’ என்று கருதி எனது 10 அல்லது 11-வது வயதில் பள்ளியை நிறுத்தி, தன் மண்டிக் கடைக்கு - மூட்டைகளுக்கு விலாசம் போடவும், வண்டிச் சரக்குகளுக்கு விலை ஏலம் கூறவுமான வேலையில் போட்டுவிட்டார்கள்.
எங்கள் கடைக்கு, அந்தக் காலத்தில் “குறைந்தது தினம் 50 வண்டி சரக்குகளுக்குக் குறையாமல் 100 வண்டி வரையில் மஞ்சள், மிளகாய், தானியப்பயிர் வகைகள், எண்ணெய், கைராட்டை நூல், வெல்லம், கருப்புக்கட்டி (பனை வெல்லம்) முதலியவைகள் வரும். இந்த வண்டிகளுக்கு வண்டிக்கு இரண்டு பேருக்குக் குறையாமல் வருவார்கள். வியாபாரத்திற்கு, வாங்குவதற்கும் பலர் வருவார்கள். எனக்கு இந்த வெளியூரிலிருந்து வருகிறவர்களிடம் பேசுவதும், அவர்களுக்கு வேண்டிய சில்லரைச் சவுகரியம் செய்து கொடுப்பதும் எனது வேலையாக இருந்தது.
‘நான் மண்டி முதலாளி மகன்’ ஆகிவிட்டதால், என்னிடம் அவர்களுக்கு ஒரு பற்றுதல் ஏற்படுவது இயற்கை; ஆதலால், நேரப்போக்காகவும் இருந்ததால் அங்கும் பேச்சு வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. இந்தப் பேச்சு வளர்ச்சியடைய, அடைய, தர்க்கவாதமும் கூடவே வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. ‘இயற்கை வாயாடிக்கு சிறிது சட்ட ஞானமும் இருந்தால், அவன்தான் கெட்டிக்கார வக்கீல்’ என்று சொல்லப்படுவது வழக்கம். அதிலும், கொஞ்சம் பகுத்தறிவு உணர்ச்சியிருந்தால், உண்மையிலேயே கெட்டிக்காரனாவான். யோக்கியமானவனா, அயோக்கியமானவனா என்பது வேறு விஷயம்; அவன் நிச்சயமாக கெட்டிக்காரப் பேச்சாளியாவான். எனக்கு, எப்படியோ பேசுவதில் ஆசை ஏற்பட்டு, இந்தப்படி கெட்டிக்காரப் பேச்சாளியாக நான் ஆகவேண்டுமென்பதற்காக, ‘வேண்டுமென்றே’ குயுக்தி, தர்க்கம், மனதறிந்து எதிர்ப்பு பேசுவது இந்த மாதிரியாக பேச ஆரம்பித்து, பிறகு இப்படிப் பேசுவது என்பது எனக்குச் சுபாவமாக ஆகிவிட்டது.
எங்கள் கடையில் நான் இப்படிப் பேசுவது தவிர, எங்கள் வீடு அந்தக் காலத்தில் அதாவது 1890-இல் சிறிது பணக்கார வீடு என்று ஆகி இருந்ததால், வைணவ மத விஸ்வாசமுள்ள பாகவதர் வீடாகவும் இருந்ததால், கோயில், உற்சவம் முதலியவைகளில் சிறிது சிரத்தை எடுத்து செலவு செய்யும் வீடாகவும் இருந்ததால், சதா சந்நியாசிகள், மத பக்தர்கள், பாகவதர்கள், புராணீகர்கள், வித்வான்கள், சொந்தமாக வந்து பயன்பெற்றுப்போகவும், 4 நாள், 8 நாள் தங்கிப் போகவுமான வீடாகவும் ஆகிவிட்டதால், இவர்களிடமும் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல் ஆகிய வசதி அதிகமாகிவிட்டது. எனவே, கடையில் கிராமத்தாரிடமும், சந்தை வியாபாரிகளிடமும் பேசுவது மாத்திரமல்லாமல், வீட்டில் மத பக்தர்கள், வித்வான்களிடமும் பேசுவதுமாக நேரிட்டுவிட்டதால் பின்கண்ட இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது. இதுவே, என்னை ஜாதி, மதம், கடவுள் என்கின்ற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படி செய்துவிட்டது.
இதன் காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனர் உயர் வாழ்வில் எனக்கொரு பொறாமையும் ஏற்பட்டுவிட்டது; என்றாலும், பார்ப்பனருடன் நெருங்கிப் பழகுவதில் சிறிதும் எனக்கு அசவுகர்யமோ, பார்ப்பனர் என்னைப்பற்றி தவறாக நினைக்கும் தன்மையோ ஏற்பட்டதில்லை என்றே சொல்வேன்.
சாதாரணமாக எனக்கு 1900 - த்திலேயே ‘பார்ப்பனர் - தமிழர்’ என்ற உணர்ச்சியுண்டு. பேசும்போது, இந்தப் பிரிவு எனக்கு அடிக்கடி ஏற்படும்; என்றாலும், நான் பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாகவே இருந்தேன். என் தகப்பனார், பார்ப்பனருக்கு ரொம்பவும் தர்மம் செய்வார்; அடிக்கடி சமாராதனை செய்வார். இது எனக்கு வருத்தமாக இருக்குமென்றாலும், பார்ப்பனர்கள் நான் பேசுவதைக் குற்றமாக எண்ணமாட்டார்கள்.
----------------
நூல்:- ”தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை” பக்கம் 1-4
அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா
No comments:
Post a Comment