Saturday, May 28, 2011

மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்


தற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?

நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான்.

வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.

ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில்பெரியார் பேசியது

No comments: