Wednesday, June 01, 2011
நாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை.
நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப் பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். அதே நிலைமை இன்றும் இருக்குமானால் நாம் கண்டிப்பாகப் பதவிகளை வெறுத்தே ஆக வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். (விடுதலை 23.8.1940)
பதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழை களாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல வேண்டும். ஆதலால் நம் எதிரிகள் பதவியில் இருக்கும் போது நாம் கட்டுப்பாடும் மான உணர்ச்சியும் கொண்டு வீரர்களாக, தன்னலமற்றவர்களாக இருப்போமானால் எதிரிகளை வீழ்த்துவது வெகு எளிதான காரியமாகும். (விடுதலை 19.1.1946)
நாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை. வேறு கட்சி முளைக்கவும் இடம் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவை எல்லாம் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் கொண்டவைகளாகவே மக்களை ஏய்க்கப் பல பெயர்களால் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கித் தின்று வயிறு வளர்க்க வேண்டும்; பதவி வேட்டையாடிப் பெரு வாழ்வு வாழ வேண்டும் - இவை இரண்டும்தான் கொள்கையும் நோக்கமுமாக இருந்து வருகின்றன. அரசியல் சடடத்தையோ ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போய்விட்டது. இது மாத்திர மல்லாமல் நடப்புத் திட்டத்தைக் குறை கூறக்கூட நம் நாட்டில் கட்சிகள் கிடையாது. இதனால் அரசாங்கம் எதேச் சாதிகார அரசாங்கமாக இருக்க நேரிட்டுவிட்டது. (விடுதலை 15.9.1957)
முன்பெல்லாம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களைக் கொல்லத் தேவர்கள், பார்ப்பனர் களுக்கு ஆபத்து என்றால் உடனே மோகினியை விடுவார்கள். அதே மோகினிகள்தான் எம்.எல்.ஏ., எம்.பி. பதவியும் பர்மிட் வழங்கும் அதிகாரமும்; வேறொன்றுமே இல்லை. (விடுதலை 4.10.1958)
யார் ஒருவன் நல்லவன் ஒழுக்கசீலன் யோக்கியன் என்று போற்றப்படுகிறானோ, அவனை அயோக்கியனாக்க வேண்டுமென்றால் அவனைச் சட்டசபைக்கு அல்லது லோக்சபைக்கு அனுப்பினால் போதும். அவன் எப்பேர்ப்பட்ட அறிவாளியாகவோ புத்திசாலியாகவோ யோக்கியனாகவோ இருந்தாலும் தேர்தலில் பிரவேசித்தவுடனேயே அவன் அயோக்கியத்தனங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. தேர்தல் ஆசை வந்து விட்டால் அன்று முதல் அவன் பித்தலாட்டத்தைக் கற்றுக் கொள்கிறான். போக்கிரித்தனம், மகாபித்தலாட்டம் இவைகளைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நம் நாட்டு அரசாங்க முறை அப்படி அமைந்து விட்டது. (விடுதலை, 25.12.1955)
அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிரத் தனித்தனி விசயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். (குடிஅரசு 29.12.1935)
இந்தியாவின் அரசியல் கொள்கை சரியானபடி வளராதிருப்பதற்கு மூலக் காரணம் சமுதாயத்திலிருந்து வரும் கோளாறு என்றே கூறுவோம். சமுதாயத்திலிருந்து வரும் தாரதன்மை, வித்தியாசம் ஒழியாதவரை இந்நாட்டில் எத்தகைய அரசியல் கொள்கையும் நிலைத்திருக்க முடியாது. (குடிஅரசு 8.8.1937)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment