மாணவர்களுக்குப் படிப்பும் பரீட்சையும் முடிந்து கோடை கால விடுமுறை கிடைத்திருக்கிறது. இவ் விடுமுறையில் திராவிட மாணவர்கள் மகத்தான இன எழுச்சி சேவை செய்ய வேண்டியிருக்கிறது. படிக்கும் வேளையில் அரசியல் விவகாரங்களில் தலையிட்டு, தீவிரமாகக் கலந்து தொண்டாற்றுவதென்பது மாணவர்களின் உடனடியான லட்சியமாகிய தேர்வு என்பதைப் பாதிக்குமாதலால், கல்லூரியிலுள்ள காலத்தில் நம் மாணவர்கள் படிப்பிலேயே கவனமாயிருந்து வந்தனர். அவ்வப்போது ஓய்வு கிடைத்த சமயங்களில் சமுதாய வளர்ச்சிக்கான சிறுசிறு சேவைகளை மட்டுமே சிலர் செய்துவந்தனர்.
இப்போது பல மாணவர்களுக்கு மூன்று மாத ஓய்வும், பலருக்கு இரண்டு மாத ஓய்வும் கிடைத்திருக்கிறது. இந்த ஒய்வை நமது திராவிட சமுதாயத்தின் உரிமைப் போராட்டக் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.
கோடை விடுமுறையின்போது தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் மட்டும் பல ஊர்களுக்குப் பிரசாரத்திற்காக அனுப்பப்படுவர். ஆனால் இவர்களே எல்லாக் கிராமங்களிலும் சென்று பிரசாரம் செய்து விட முடியாதாகையால், இதர திராவிட மாணவர்கள் அவரவர் ஊர்களைச் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று நம் இயக்கத்தின் லட்சியங்களையும், சமுதாயத்தில் நமக்குள்ள சீர்கேடான நிலையையும் விளக்கிக் கூற வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். அத்துடன் இயக்கப் பத்திரிகைகளையும், வெளியீடு களையும் ஒவ்வொரு கிராமத்திலும் பரப்ப வேண்டியது இன்றியமையாத வேலையாகும்.
இறுதிக் கட்டத்தையடைந்திருக்கும் ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, இனி எக்காலத்திற்குமே நம்மை நசுக்கக்கூடிய மற்றொரு ஆபத்தான அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்வதும், நம் நேஷனுக்கு உரிய பரம்பரைப் பெருமையையும் சுயேச்சையையும் இழப்பதுமே நம் கதியானால், மாணவர்களாகிய உங்களுடைய கல்வியும், பட்டங்களும் என்ன பலனைத் தரப் போகின்றன?
இது 10ஆம் தேதி நடைபெற்ற லாகூர் இஸ்லாமியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது இடைக்கால சுகாதார இலாகா மந்திரியான தோழர் கஜ்னாபர் அலிகான் கூறியிருப்பது.
இவ்வார்த்தைகளை திராவிட மாணவர்களும் தங்களுக்குப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளலாம். இதே கேள்வியை நம் மாணவர்களும் தம்மைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.
நம் இனம் எல்லாத் துறைகளிலும் பின்னணியில் கிடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்கின்றோம்; நாள்தோறும் அனுபவிக்கின்றோம்; சங்கடப்படுகின்றோம். பணச் செருக்கினாலும், அறிவு விளக்கமில்லாத காரணத்தினாலும், சுய நலத்தினாலும், நம்மவர்களில் ஒரு சிலர் இந்த இழி நிலையை உணராமலிருக்கலாம். அவர்கள் கிடக்கட்டும்; நாளடைவில் உணர்வார்கள்; உணருமாறு செய்வோம்.
பின்னணியிலுள்ள நம் இனம் முன்னேறாவிட்டால் அதன் விளைவுகளுக்குத் தலை கொடுக்க வேண்டியவர்கள் யார்? வயது சென்ற வைதீகர்களல்லர். ஏட்டிக்குப் போட்டி பேசி பொழுது போக்கும் சுகவாசிகளல்லர். பிற்காலக் குடிமக்களான, இப்போதைய மாணவர்களே யாவர். நம் எதிர்ப்பு சக்திகளோ பலம் பொருந்தியவை. பழைமை, வழக்கம், கடவுள், சாஸ்திரம், ஜாதி ஆசாரம், புண்ணியம், ஆகிய உயர்ந்த மதில் சுவர்களைத் தற்காப்புக் கோட்டைகளாகக் கொண்டவை. நம் இழிவை நீக்கிக் கொள்ளும் முயற்சியில் இக்கோட்டைகளைத் தாண்டியோ, தகர்த்தெறிந்தோ செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த வேலைக்கு ஏற்ற கல்வி, அறிவு, துணிவு, சுயநலமின்மை, மாசற்ற மனம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவர்கள்தாம், மாணவர்கள். எனவே, இப்போது கிடைக்கும் கோடை விடுமுறையை வீணாக் காமல் திராவிட மாணவர்கள் கிராமந்தோறும் அணி அணியாகச் சென்று, நம் கழகக் கொள்கைகளை அமைதியான முறையில் விளக்கிக்கூறி, ஒவ்வொரு பெரிய கிராமத்திலும், ஒரு கழகத்தை நிறுவுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.
மாணவர்கள் படித்துத் தெரிந்து கொண்ட சரித்திரம், விஞ்ஞானம், பொருள் நூல், தத்துவம் ஆகிய எல்லாம் தங்கள் பிறப்புரிமையைப் பெறுவதற்குக் கூட துணை செய்யாவிடில், அவைகளைக் சுற்றதனால் ஆய பயன் என்ன?
நம் கழகத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான புதிய கிளைச் சங்கங்களை அமைக்க வேண்டும். திக்கெட்டும் நமது சீரிய கொள்கைகள் தூவப்பட வேண்டும். பல்வேறு இயக்கங்களில் சிதறிக் கிடக்கும் திராவிட சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். ஹிந்து மதம் என்ற ஆரிய இருட்டறைக்குள் தடுமாறிக் கொண்டு கிடக்கும் பாமர மக்களை, ஜாதி - மத, உணர்வற்ற வெறும் மனிதனான திராவிடன் என்ற சூரிய வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். இக்காரியங்களைச் செய்வதில் திராவிட மாணவர்கள் தாம் சோர்வோ, அலட்சியமோ, மன வெறுப்போ இல்லாமல் தொண்டாற்ற முடியும். இவைகளைச் செய்வது, தம் தம் குடும்பத்திற்காகவே என்ற உண்மையை உணர வேண்டும்.
நம் முன்பு உள்ள வேலைகளையோ, எழுத்தால், பேச்சால், அளவிட்டுக் கூற முடியாது. நமக்குள்ள பிரசார இயந்திரமோ, மிக மிகச் சிறிது. நமது பொறுப்பும் லட்சியமுமோ மிகப் பெரிது. ஆதலால் திராவிட மாணவர்கள் இந்த 2-3 மாதங்களுக்குச் செய்யும் சிறு சேவைகூட நல்ல பலனைத் தரும் என்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு.
--------------------------- தந்தை பெரியார் - "விடுதலை" 15.4.1947
No comments:
Post a Comment