Tuesday, October 14, 2014

தமிழ் பாஸ்போர்ட் !!!

என் அறை நண்பர்கள் ஈழத் தமிழர்கள். ஒருவர் மட்டக் களப்பு, மற்றொருவர் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு நண்பர் எனக்கு ஒரு எட்டாண்டுகளாய் தெரியும் அரசியல் , ஈழவிடுதலை, கருணாநிதி, ராமச்சந்திரன், ஜெயலலிதா, பிரபாகரனை விமர்சனம் செய்வது என்பதில் எனக்கும் அவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் எலிக்கும் பூனைக்கும் இருக்கும் ஒற்றுமை என்பது என்னைச் சுற்றி இருக்கும் நிறைய பேருக்கு தெரியும். எங்கள் இருவரையும் நட்பைத் தவிற வேறெதுவும் இணைக்கவில்லை.

சென்ற வாரத்தில் என் அறையில் தங்கியிருக்கும் யாழ் நண்பர் அவருக்கு தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா என்பது தொடங்கி பிரபாகரன் வரை பயங்கர அரசியல் பூகோள அறிவு ஆனாலும் அறியாமையில் இருக்கும்ஆட்கள் தமிழ் நாட்டுக்கு மட்டுமே சொந்தமா என்ன? ஆனாலும் அவர் என் அறையில் இருக்கும் இன்னொரு மலையாள நண்பரைக் காட்டிலும் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

மலையாளிகளின் அரசியல் என்பதுதான் சுயநல அரசியலையும் தாண்டி சுய சொரிதலுக்கான அரசியல் என்பது உலகப் பிரசித்தம். பிரபாகரனே மலையாளி என்பவர்கள் ஆயிற்றே அதோடு மாடுமல்ல உலகில் முதலில் நடக்கும் எல்லாம் மலையாளிகளால் தான் என்று இன்றும் ஐய்யப்பன் மேல் சத்தியம் செய்கிறார்கள். ஒருபக்கம் அச்சுவையும் உம்மன் சாண்டியையும் கடவுளுக்கு(?) நிகராக தூக்கிச் சுமப்பார்கள் பாஜகவின் ராஜகோபால் தோற்றுப் போன காரணத்துக்காகவே சசி தரூரை கேவலமாக்குவார்கள். அதெல்லாம் கிடக்கட்டும்.

நான் சொல்ல வந்ததே அது அல்ல. அந்த மலையாள நண்பரின் பாஸ்போர்ட்டை எதற்க்காகவோ பார்த்த யாழ் நண்பர் கேட்டாரே ஒரு கேள்வி "உங்கட பாஸ்போர்ட்டில மலையாளம் காணக் கிடைக்குதில்லயே இது மலையாளமா என்ன ? " என்று ஹிந்தியைக் காட்டி. குண்டு அங்கேதான் வெடித்தது. மலையாளர் (எல்லாம் ஒரு மரியாதைதான்) அவருக்கும் ஒரு நண்பர் வேலைதேடி வழக்கம் போல எங்கள் அறையில் இருப்பவர் ( எங்களின் அறைக் கதைகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால் அது ஜெயமோகனின் வெண்முரசை விட பெரிதாகக் கூடிய அபாயம் இருப்பதால் இங்கேயே அதற்கொரு தடா போடுவோம்). அவரும் சொன்னார்கள் "ஹிந்தி ராஷ்ட்ர பாஷை " அதுகொண்டு தன்னெ இந்தியன் பாஸ்பொர்டிலே ஹிந்தியும் இங்கிலீசும் மத்துறாமுண்டு"

நமக்குத்தான் மலையாளிகளை பேசிக்காகவே பிடிக்காது ஹிந்தியை அடிப்படையில் இருந்தே பிடிக்காது, ( என்ன ஒரு மொழி அறிவு என்று நீங்கள் சிரிப்பது என்னைப் பார்த்து அல்ல மக்களே நன்றாக சிந்தித்து பாருங்கள் பேருந்து நிறுத்தத்துக்கு வழி கேட்டால் பஸ் ஸ்டாப்புக்கு வழி சொல்லி இன்னொரு சக ஜீவியை பேந்த பேந்த அலைய விட்டவர்கள் தானே நீங்கள் ? ) இன்னொன்று இந்த இணையத்தில் புழங்க ஆரம்பித்த பிறகு தெரிந்தோ தெரியாமலோ தென்னிந்திய திராவிட அரசியலை படித்து படித்து ஒரு துளியாவது பருகி இருக்கிறேன், அதன் தாக்கம் என் செயல்களில் என் பேச்சுக்களில் தெரிக்கும், அது கேட்டு தெரித்தவர்கள் அதிகம் என்றாலும் அதிலெல்லாம் பார்வை செலுத்தாமல் நான் என் பாட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறேன்.

நான் அந்த  சரித்திர முக்கியத்துவமான வசனத்தை என் எட்டாண்டு கால இரண்டாண்டு இரண்டு மாத இரண்டு நாள் நண்பர்களிடம் சொன்னேன் " என்ன ஹிந்தி தேசிய மொழியா ? எவன்டா சொன்னான் இந்தியாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட மொழிதான் உண்டே தவிற அலுவல் மொழி எதும் இல்லைய்யான்னு   குஜராத்தில் கோர்ட்டில் சொல்லப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பைச் சொல்லி இந்திய அரசியல் மொழி அரசியல் பூகோள அரசியல் இன்ன பிற இன அரசியல் எல்லாம் விளக்கி சொன்ன பின்னரும் அந்த ஈழ நண்பர்கள் கேட்டார்கள் ஏன் அண்ணா இந்திய பாஸ்போர்ட்டில் அந்த அங்கீகரிக்கப் பட்ட மொழி கூட இல்லை? என்று!

நியாயமான கேள்விதான் ! இலங்கை பாஸ்போர்ட்டில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் மூன்று மொழிகளும் உண்டு ஆனால் எல்லா விவரணைகளும் ஆங்கிலத்தில்தான் இருக்கும் என்பது  உலக வல்லாதிக்க சக்திகளின் சதி என்பது உலக அறிவு கொண்டவர்களின் பால பாடம். ஆனாலும் கூட ஒவ்வொரு நாட்டின் குடி மகனுக்கும் தான் வைத்திருக்கும் குடிஉரிமை அட்டையில் என்னதான் அப்படி எழுதி வைத்து தொலைத்திருக்கிறார்கள் என்பதை அறிய அடிப்படை உரிமை உண்டே அது கூடத் தெரியாமல் இந்தியாவெங்கும் இருக்கும் பல நூறாயிரம் மக்கள் ஆங்கிலமும் ஹிந்தியும் தெரியாமல் அடிப்படையில் தாங்கள் தங்களை அடையாளப் படுத்துவதற்காக வைத்திருக்கும் அந்த குடிஉரிமைச் சீட்டு யாரைக் கேட்டு இப்படி ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் மட்டும் தாங்கி தொங்கிக்கொண்டு இருக்கிறது?

சட்டபூர்வமாக ஹிந்தி தேசிய மொழி அல்ல ஆனால் அதைத்தான் நம் எல்லோர் தலையிலும் ஏற்றி இந்தியாவை ஹிந்தியா ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்

நிலவியல் , பன் மொழிக் கொள்கை, நேருவின் ஹிந்தி தினியாமை, காக்கைதான் தேசிய பறவையா என்ற எல்லா உதா "ரணங்களையும்" தாண்டி நாம் இன்னும் சிந்திக்க வேண்டிய செயல்கள் பல கோடி உண்டு!

என் கேள்வி எல்லாம் ஏன் இந்த பரந்த பல நாடுகள் ஒருங்கிணைந்த இந்தியாவில் பண் மொழி பேசும் இடத்தில் எவன் எந்த மொழி பேசும் இடத்தில் இருந்தோ அல்லது அந்த மாநில மொழிகளை விருப்ப மொழிகளாக பேசும், விரும்பும், அல்லது எனக்கு இந்த மொழியில்தான் குடியுரிமை வேண்டும் என்று கேட்பவர்காளுக்கு அவர்கள் விரும்பும் விருப்ப மொழியில் குறைந்த அளவுக்கு குடி உரிமையாவது கொடுக்கக் கூடாது?

இந்தியாவுக்கென்று அலுவல் மொழி என்பது ஹிந்தி அல்ல என்பது நிறுவப் பட்டுள்ளது என்பதை எல்லாம் வெளி நாட்டில் பாரத் பாஸ்போர்ட்டில் இருந்துகொண்டு ஜாங்கிரி ஜிலேபி இன்ன பிற கை முறுக்குகளை எங்களின் குடி உரிமை, கடவுச் சீட்டுகளில் தாங்கிப் போகும்  எங்களை பேசிக் கிழித்த எங்களை தூக்கித் தோரணமாய் தொங்கவிட்ட அந்த அறியாத யாழ் நண்பர் வாழ்க!!

No comments: