Tuesday, November 04, 2008

கலைஞர் கையாலாகாதவரா இல்லையா ?



சென்னை: ராஜீவ் காந்தியை கொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டிவிட்டதே ஜெயலலிதாதான் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி உருவாகும் போதெல்லாம் காலம் முடிவதற்குள்ளாகவே `கலைக்க வேண்டும்' `கலைக்க வேண்டும்' என்று ஒப்பாரி வைப்பது ஜெயலலிதாவிற்கு கைவந்த கலை.

அந்த ஒப்பாரியால் இரண்டு முறை அரசியல் லாபம் அடைந்த ஜெயலலிதா மீண்டும் `கலைக்க வேண்டும்' என்ற ஒப்பாரி ராகத்தை துவக்கியிருக்கிறார்.

ஏதோ விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவு என்பது போல புரளியைக் கிளப்பி காங்கிரசிற்கும் திமுகவிற்கும் மோதலை உருவாக்க முட்டிப் பார்க்கிறார்.

முதல்வர் கருணாநிதி சட்டமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி ஈழத்தமிழர் போராட்டத்தில் ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்- ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின் என்று பகுத்துப் பார்த்து தான் ஈழத்தில் வாடும் அப்பாவித் தமிழருக்காக குரல் கொடுக்கிறோம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.

இருந்தாலும் ஜெயலலிதா தன் பழைய பல்லவியை விடுவதில்லை.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் உண்மை புரியும். ராஜீவ் காந்தியை கொலை செய்ய விடுதலைப் புலிகளைத் தூண்டியதே ஜெயலலிதாதான் என்பது நாடறிந்த உண்மை.

இதற்கு ஒரு முக்கியமான எடுத்துக்காட்டு- ஒரு கூட்டணித் தலைவரான ராஜீவ் காந்தி திருபெரும்புதூருக்கு வரும்போது அதில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து கிருஷ்ணகிரி சென்றுவிட்டு அங்கிருந்து படபடப்போடு சென்னையில் என்ன நடந்தது என போன் மூலம் ஜெயலலிதா விசாரித்தார் என்பதும்,

ராஜிவ் காந்தியின் விமான நிலைய வரவேற்புக்கு ஜெயலலிதா மட்டுமல்ல, அவர் கட்சியைச் சேர்ந்த யாருமே செல்லவில்லை என்பதும் அன்றைய பத்திரிக்கைச் செய்திகள்.

கருணாநிதி 1980ல் இந்திரா அம்மையாரோடு கூட்டணி வைத்தபோது அவரோடு மூன்று நாட்கள் தமிழகம் முழுவதும் அவர் காரிலேயே பிரச்சாரத்திற்கு சென்றதை நாடறியும்.

ஆனால் ஜெயலலிதா ராஜீவோடு இல்லாமல் கிருஷ்ணகிரி சென்றது ஏன் என்ற கேள்விக்கு இன்றுவரை பதிலில்லை.

கருணாநிதி பெரியார் வழியில், அண்ணா வழியில் தன்னுடைய 14 வயதில் 1938ல் பள்ளிக்கூடப் பருவத்திலேயே தமிழுணர்வோடும், இன உணர்வோடும், சமுதாய உணர்வோடும் போராட்ட களத்தில் குதித்து இன்றுவரை அந்த உணர்வுகளைக் கட்டிக் காத்து வருபவர்.

ஆனால் ஜெயலலிதாவோ 7 வயதிலே இளநீர் விற்பவராக திரைப் படத்தில் நுழைந்து `விபத்து அரசியலால்' தலைமைக்கு வந்தவர் என்பதை மறந்து அறிக்கை விடுகிறார்.

தமிழக அரசால் வழங்கப்படும் பொருள்கள் ஐ.நா. மூலமாக அனுப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்ததற்குப் பிறகும் கலைஞர் செய்யும் வசூல் `விடுதலைப் புலிகளுக்கே' என்று அறிக்கை விடுகிறாரே ஜெயலலிதா.

சிறிதாவது அரசியல் நாகரீகமோ. தமிழர்களின் மீது பற்றோ இருந்தால் இப்படி பேசுவாரா? `நான் அடிப்பதைப் போல் அடிப்பேன்- நீ அழுவது போல் அழ வேண்டும்' என்று விடுதலைப் புலிகளின் மீதுள்ள பயத்தால் வைகோ மூலம் விடுதலைப் புலிகளுக்கு இன்றளவும் ஜெயா செய்யும் மறைமுக உதவிகள் விரைவில் வெளிவரும்.

வைகோவுடன் கை கோர்த்துக்கொண்டு தன்னை விடுதலைப் புலிகளின் எதிரியைப் போல நாடகமாடும் தந்திரம் மக்களுக்குப் புரியும்.

மராட்டியத்தில் ஒரே ஒரு பீகார்காரர் கொலை செய்யப்பட்டார் என கேள்விப்பட்டவுடன் தங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து லல்லு பிரசாத், நிதிஷ் குமார், பஸ்வான் எல்லாம் கை கோர்க்கிறார்கள். இதைப் பார்த்தாவது ஜெயலலிதாவிற்கு ரோஷம் வராதா?. வரும்.... ஓடுவது சுத்தமான தமிழ் ரத்தமாக இருந்தால்.

அதிமுக பொதுச் செயலாளர் நரகல் நடை நாயகி, அவருக்கே உரிய பாணியில் இன்று ஓர் அறிக்கை தலைவர் கலைஞரின் குடும்பத்திற்காகவே ஒதுக்கியிருக்கிறார்.

அந்த அறிக்கை முழுவதிலும் முதல்வரையும் அவரது மனைவிகள், மகன்கள், மகள்களையும் திட்டித் தீர்த்திருக்கிறார். கருணாநிதி குடும்பத்துடன் இருக்கிறார், ஜெயலலிதா குடும்பம் இல்லாமல் இருக்கிறார்.

அதற்கு கருணாநிதி என்ன செய்வார்?. கலைஞரின் குடும்பத்தினரைக் கண்டு ஜெயலலிதா எதற்காக வயிறு எரிகிறார் என்று தெரியவில்லை. அந்த அறிக்கையிலே 86 வயதான கலைஞரை - இந்த வயதிலும் ஊருக்காக உழைத்துக் கொண்டிருப்பவரை கையாலாகாதவன் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.

கலைஞர் கையாலாகாதவரா இல்லையா என்பதற்குச் சாட்சியாகத் தான் ஜெயலலிதா அறிக்கையிலே குறிப்பிட்ட மனைவிகள், மகன்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்று பதில் சொல்ல எத்தனை நேரமாகும்?

இலங்கையிலே அப்பாவி தமிழ் மக்கள் படும் சிரமத்தைக் குறைப்பதற்காக நிவாரண நிதி திரட்டுவதைக் குறிப்பிட்டு குறை கூறுகிறார். சுயநலத்தோடு செய்யப்படுகின்ற காரியம் தான் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டுகின்ற செயலாம்!.

அந்த வகையில் முதலில் கனிமொழியை முன்னிலைப்படுத்தினார் கருணாநிதி என்கிறார். அதிலே கனிமொழியை கலைஞர் என்ன முன்னிலைப்படுத்தினார்?.

மேலும் ஜெயலலிதா தன் அறிக்கையில் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு என்று பேசும் கருணாநிதி; இலங்கைத் தமிழர்களுக்காக வேட்டி, சேலை ஆகியவற்றைக் கொடுப்பதற்குப் பதிலாக, தமிழ்ப் பண்பாட்டைச் சீர் குலைக்கும் ஆடைகளை அதாவது 'நைட்டி'களை கனிமொழி வழங்கியதாகக் கூறுகிறார்.

வேட்டி, சேலைக் கொடுப்பதற்குப்பதிலாக வெறும் 'நைட்டிகளை' மட்டும் கனிமொழி கொடுக்கவில்லை.
ஜெயலலிதாவே அவரது அறிக்கையில் அடுத்த வாக்கியத்தில் "சக்கர நாற்காலியில் கருணாநிதி அமர்ந்திருக்க, பக்கத்தில் துணைவி ராஜாத்தி நிற்க, அருகில் கனிமொழி நின்று கொண்டு அரிசி மூட்டைகள், சேலைகள், லுங்கிகள் மற்றும் நைட்டிகள் வழங்கியதாக'' என்று குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சேலைகள், லுங்கிகள் வழங்கியதைப் புரிந்து கொள்ளலாம்.

'நைட்டிகள்' வழங்கியிருப்பது பற்றி "தமிழ் மொழியின் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் கருணாநிதிக்கு உள்ள அக்கறை இது தான்'' என்று ஜெயலலிதா எழுதியிருக்கிறார்.

பதவி இல்லாமல் இருப்பதால் அம்மையாருக்கு ஏதாவது ஆகி விட்டதா என்ன?. 'நைட்டிகள்' அணிவதை தமிழ்ப் பண்பாட்டிற்கு விரோதமானது, அதை எப்படி கொடுக்கலாம் என்று கேட்கிறாரா?.

அல்லது "வைரம்'' திரைப்படத்திலே ஜெயலலிதா உடுத்தியிருந்த ஆடைகளைப் போல வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று பரிந்துரை செய்கிறாரா?.

தமிழகத்திலே உள்ள யாரும் நைட்டிகளை அணிவதில்லையா? இலங்கைத் தமிழர்கள் அணியக் கூடிய ஒன்றைக் கொடுப்பது குற்றமா? நைட்டி என்று சொல்வதைக் குறை கூறுகிறாரா?. அதுவும் அந்த வார்த்தையை அண்ணன் கலைஞர் பயன்படுத்தவில்லையே?

அடுத்து கலைஞர் தன் துணைவியார் தயாளு அம்மாளை முன்னிலைப்படுத்தியதாக ஜெயலலிதா கூறுகிறார். இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக தயாளு அம்மாள் ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை அளித்ததைத் தான் முன்னிலைப்படுத்தியதாகக் கூறுகிறார்.

அரசு சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட, தமிழ் ரத்தம் ஓடுகின்ற- தமிழ் உணர் வுள்ள மக்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு உதவி செய்வது ஜெயலலிதா மொழியிலே குற்றமா?.

"கருணாநிதியின் மனைவிக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கக் கூடிய அளவிற்கு பணம் எங்கிருந்து வந்தது அவருக்கு எந்த வழியில் வருமானம் வருகிறது கருணாநிதியின் மனைவி வருமான வரி செலுத்துகிறாரா? என்பதையெல்லாம் கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்'' என்கிறார் ஜெயலலிதா.

தயாளு அம்மாள் அவர்கள் சன் தொலைக்காட்சியில் பங்கு தாரராக இருந்து; சில ஆண்டுகளுக்கு முன்பு- அவர் அதிலிருந்து விலகிய போது அவருக்குக் கிடைத்த நூறு கோடி ரூபாயில் குடும்பத்தாருக்குப் பிரித்துக் கொடுத்தது போக மீதமிருந்த ஒன்பதரை கோடி ரூபாயினை வங்கியிலே தன் பெயரில் டெபாசிட் செய்துள்ளார்.

அதற்கு மாதந்தோறும் வட்டியும் கிடைக்கிறது. அவருக்குக் கிடைத்த தொகைக்கு அவர் முறையாக வருமான வரி கட்டியிருக்கிறார். தற்போது மாதந்தோறும் கிடைத்து வரும் வட்டித் தொகைக்கும் ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி வருமான வரி கட்டி வருகிறார்.

இது தான் கணக்கே தவிர, அவர் ஜெயலலிதாவைப் போல வருமான வரி முறையாகக் கட்டாமல் வழக்குகளிலே சிக்கிக் கொண்டு ஆண்டுக்கணக்கிலே நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளிலே ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர் அல்ல.

தன்னுடைய வருமான வரி கணக்கைச் சரிக் கட்டுவதற்காக மத்தியிலே அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்கா அவர்களை வீட்டிற்கே விருந்துக்கு அழைத்து, அவர் புறப்படும்போது அவர் கையிலே வருமான வரி வழக்கிலிருந்து விடுபட பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்து அனுப்பிய விவரம் தமிழ்நாட்டு மக்களுக்கு மறந்தா விட்டது?.

வெளிநாட்டிலேயிருந்து யாரோ எனக்குத் தெரியாமல் என் பெயருக்கு பணம் அனுப்பினார்கள், யார் அனுப்பியது என்று தெரியாமலே அதனை என் பெயரிலே டெபாசிட் செய்து கொண்டேன் என்று ஜெயலலிதா ஊருக்கு கணக்கு காட்டினாரே அது போன்றதல்ல தயாளு அம்மாவின் கணக்கு!.

எந்தவிதமான முதலீடும் இல்லாமல் 66 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து, அதற்கான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று ஆண்டுக் கணக்கிலே இன்னும் நாறிக் கொண்டிருக்கிறதே, அது போன்றதல்ல தயாளு அம்மாவின் கணக்கு!.

உதகையிலே கோடைநாடு எஸ்டேட் தனக்கு வேண்டியவருடையது என்று முதலில் கூறி, பின்னர் உடன்பிறவா சகோதரியின் சகோதரிக்கு உரியது என்று மாற்றப்பட்டதே, அதுபோன்றது அல்ல தயாளு அம்மாவின் கணக்கு!.

"கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டு''மென்றாரே, நானே அந்தக் கணக்கு விவரங்களை விளக்கி விட்டேன்.

ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு என்ன? மற்றவர்களின் கணக்கைப் பற்றிக் கேட்க அருகதை வேண்டாமா? தன் மேல் ஆயிரம் குற்றங்களைச் சுமந்து கொண்டு மற்றவர்கள் மீது குற்றம் சுமத்த நினைப்பது என்ன நியாயம்?

"கருணாநிதி ஒரு திட்டத்தை அறிவிக்கிறார் என்றாலே அதிலே சுய நலம் இருக்கும்'' என்று ஜெயலலிதா சொல்கிறார் எந்தத் திட்டத்திலே சுய நலம் ஏழை மகளிர் திருமண நிதி உதவி திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவித் திட்டம், விவசாயிகளுக்கு கடன் நிவாரணத் திட்டம், ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம், குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள் வழங்கும் திட்டம் என்று எந்தத் திட்டத்தை சுயநலத் திட்டம் என்கிறார் ஜெயலலிதா?.

அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை கொள்ளையடித்து தன் பெயருக்கு குறைந்த விலையில் வாங்கிக் கொண்டு உச்சநீதிமன்றமே திருப்பிக் கொடுக்கச் சொன்னதே அதற்குப் பெயர் தான் ஜெயாவின் சுயநலம்.

ஏழைத்தாய்மார்கள் பொழுது போக்க அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்து டெண்டர் போட்டு வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகளை வழங்குவது இந்த ஆட்சி.

ஆனால் உங்கள் ஆட்சியிலே வெளி மார்க்கெட் விலையை விட அதிக விலை கொடுத்து- உள்ளாட்சி மன்றங்களுக்கான தொலைக் காட்சி பெட்டிகளை வாங்கி ஊழலிலே மாட்டிக் கொண்டது உங்கள் ஆட்சி.

ஸ்பிக் வங்கியிலே அதன் பங்குகளை வாங்கியதிலே நடைபெற்ற ஊழல் கதை தெரியாதா? அந்த ஊழலுக்கு கையெழுத்து போட மறுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு கிடைத்த பரிசு தெரியாதா? ஆம்னி பேருந்துகளுக்கு வரியைக் குறைத்து நடத்திய ஊழல் சுயநலத்திற்காக செய்யப்பட்டது தானே?

நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற ஊழல், கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டலுக்கு அனுமதி வழங்கியதிலே நடைபெற்ற ஊழல் என்று புகழ் பெற்ற ஜெயலலிதா சுய நலத்தைப்பற்றி பேசலாமா?

இலங்கைத் தமிழர்களின் இன்னல் போக்க நிவாரண நிதி திரட்டினால் அதனை சுயநலம் என்று கூறுவதா?.

பள்ளி மாணவிகள் தங்கள் பாக்கெட் மணியை தொகையினைச் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தார்களே, அவர்களுக்குள்ள உணர்வாவது ஜெயலலிதாவுக்கு இருக்க வேண்டாமா?.

அம்மையாரின் குணம் புரிந்து தான் நிவாரண நிதி வழங்குவோர் யாராக இருந்தாலும் அவர்கள் காசோலை மூலமாகத் தான் வழங்க வேண்டுமென்று சொல்லப்பட்டு - வழங்குகின்ற ஒவ்வொருவருடைய பெயரும் எழுதப்பட்டு அது வெளியிடப்பட்டு வருகிறது. அதிலே கட்டாய வசூல் என்ற பேச்சுக்கெல்லாம் இடமே கிடையாது.

அதற்காக அம்மையார் தன் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறாராம். வெட்கம்! வெட்கம்!.

அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படுகின்ற இந்த நிதி விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சென்று விடுமோ என்று மக்கள் சந்தேகப்படுகிறார்களாம். ஜெயலலிதா அளந்திருக்கிறார்.

இருபதாண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர்களின் பிறந்த நாளையொட்டி உண்டியலிலே போடப்பட்ட தொகையைப் பிரித்து அனைத்து இலங்கைப் போராளிகளுக்கும் பங்கிட்டு வழங்கியபோது, அப்போது அதிமுக ஆட்சியிலே இருந்த காரணத்தால் அவர்களுக்கு கோபம் வந்து விடுமோ என்ற எண்ணத்தோடு திமுக சார்பிலே கொடுக்கப்பட்ட நிதி உதவியைப் பெற மறுத்தவர்கள் விடுதலைப் புலிகள்.

"அந்த விடுதலைப் புலிகளுக்கு எம்ஜிஆர் செய்த உதவியைப் போல கருணாநிதி எதுவும் செய்யவில்லை'' என்று ஆங்கில நாளிதழ்களுக்கு பேட்டியளித்தவர் தான் இந்த ஜெயலலிதா.

அந்த விடுதலைப் புலிகளுக்கு இப்போதும் நேரடியாக ஆதரவு தெரிவித்தும், தனி நாடே கேட்போம் என்ற அளவிற்கும் துணிந்து பேசக் கூடிய மதிமுகவை இன்றைக்கும் தோழமை கட்சியாக ஜெயலலிதா வைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்தக் கட்சியினரும் நாங்கள் விடுதலைப் புலிகளை அழிக்க நினைக்கும் அதிமுகவோடு தான் உறவாக இருப்போம் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில், அரசின் சார்பில் திரட்டப்படுகின்ற நிவாரண நிதித் தொகை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சென்று விடுமோ என்று தமிழக மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என்று அறிக்கை விடுகிறார் என்றால், யாரை ஏமாற்ற இந்த நாடகம்?.

தமிழ் மக்கள் யாருக்கும் ஜெயலலிதா போல அந்தச் சந்தேகம் கிடையாது.

அதனால் தான் அவர்கள் தாராளமாக முன் வந்து மூன்றே நாட்களில் ஐந்து கோடி ரூபாய் அளவிற்கு தாங்களாகவே நிதியினை வழங்கியிருக்கிறார்கள். இந்த பொது நிதிக்கு ஒரு ரூபாய் கூட வழங்காத ஜெயலலிதார் அதிலே கோணல், இதிலே கோணல் என்று பம்மாத்து காட்டுகிறார்.

இது போன்ற காரியங்களில் அரசிலே இருப்போர் யார் என்று பார்க்க கூடாது. இதே ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது சுனாமி ஏற்பட்டு தமிழர்கள் பாதிக்கப்பட்ட போது யார் ஆட்சியிலே இருக்கிறார்கள் என்று பார்க்காமல் திரைப்படம் எழுதி தனக்குக் கிடைத்த 21 லட்சம் ரூபாயை தன் மகன் மு.க. ஸ்டாலின் மூலமாக இதே ஜெயலலிதாவிடம் கொண்டு போய் கொடுக்கச் சொன்னவர் தான் கலைஞர்.

அப்படிப்பட்ட தலைவர் எங்கே? இன்றும் உயிரை விட்டுக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழனுக்காக திரட்டப்படுகின்ற நிதிக்கு சுயநலம் என்று அறிக்கை விடும் ஜெயலலிதா எங்கே? தமிழ்நாட்டு மக்களே புரிந்து கொள்ளுங்கள்!

"தமிழக மக்களின் உதி ரத்தை உறிஞ்சி உலகப் பணக்காரர்களின் வரிசையிலே இடம் பிடித்தவர் இந்தக் கருணாநிதி'' என்கிறார் ஜெயலலிதா. யாருடைய உதிரத்தை யார் உறிஞ்சியது அதனால் உலகப் பணக்காரர்களாக மாறியது யார்?.

அவர்களுக்கு எங்கெங்கே எஸ்டேட்டுகள், தோட்டங்கள், மாளிகைகள் என்பதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

இந்த அறிக்கையை வெளியிட நிச்சயமாக நான் காரணமல்ல, ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை தான் காரணம் என்பதையும் அவருடைய அறிக்கையை படிக்கும் ஒவ்வொரு தமிழனின் உணர்வு தான் இந்த அறிக்கை என்பதையும் கூறி- தமிழ் மக்கள் என்னை மன்னிக்க வேண்டிக் கொண்டு இதனை வெளியிடுகின்றேன்.

இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்

Monday, October 27, 2008

ஜெயலலிதா, சோ ராமசாமி, இந்து ராம் மற்றும் சில பூனைகள்

குண்டுகள் ஆலங்கட்டி மழை போல் பொழிந்தாலும்
நாங்கள் பாசிஸ்டுகளுக்கு ஒரு அடி நிலத்தைக் கூட கொடுக்க மாட்டோம்.
எங்களது தோழர்கள், ஆதரவாளர்களும் எங்களுக்குப் பின் நிற்கின்றனர்.
எங்களுக்குப் பின்வாங்குதல் என்பது கிடையவே கிடையாது.

நான் வானத்தைப் பார்த்தேன்...
அது எனது கண்களை வசியம் செயதது...
நாங்கள் அனைவரும் சிற்பபாக சுடக் கூடியவர்கள், சுதந்திரமானவர்கள்...
எங்களது ஒவ்வொரு தோட்டாவும் எதிரியை எழ விடாமல் செய்தது..

(ஜப்பானுக்கு எதிரான சீனப் புரட்சியின் போது கனேடிய புரட்சியாளரும் மருத்துவருமான தோழர் நார்மன் பெத்யூன் குழுவினரின் பாடல்கள்)

‘‘தமிழ்நாட்ல ஏன் சார் இப்படி’’

‘‘இன்னும் ரெண்டு கிலோமீட்டர்ல அவங்களை பிடிச்சுருவாங்களாமே? அவங்க கதை முடிஞ்சிடுமா?" வட இந்திய ஊடக நண்பரின் குரலில் கலந்திருந்த பதட்டமும் சந்தோஷம் கலந்த எதிர்பார்ப்பும் எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை.

நான் இப்படி அவருக்குப் பதில் சொன்னேன்.

‘‘நீங்கள் பல முறை அவர்களை காட்டிக் கொடுத்து விட்டீர்கள். சில முறை அவர்களை களவாடியிருக்கிறீர்கள். உங்கள் விருப்பங்கள் பல முறை உங்களால் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் ஒன்றை மறந்து விடுகிறீர்கள். உங்களின் நண்பர்கள் பல முறை அவர்களை வென்று விட்டதாகச் சொன்ன கதைகளை தமிழகமே கதைகள் என்று நிரூபித்தது. இனியும் நிரூபிக்கும்.’’ என்றேன்.

வட இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்துக்குள்ளும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றினால் சிங்களர்கள் கொண்டாடுவார்களோ இல்லையோ காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் இவர்கள் கொண்டாடி விடுவார்கள் போல. சரி கிடக்கட்டும். காலம் இவர்கள் கிழித்த எத்தனையோ கோடுகளை அழித்துப் போட்டிருக்கிறது.

கடந்த 14ஆம் தேதி ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசின் இனவெறிப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரும்படியான கோரிக்கையோடு தமிழக முதல்வர் கலைஞரின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கடந்த பத்தாண்டுகளில் இப்படியான ஒருங்கிணைந்த அரசியல் கட்சிகளின் கூட்டம் தமிழகத்தில் நடைபெறுவதால் இந்தியாவின் ஒட்டு மொத்த மீடீயாக்களும் தமிழகத்தின் அந்த முடிவுக்காக காத்திருந்தன. பல நேரலை ஒளிபரப்பு வாகனங்கள் தமிழகத்தின் போராட்ட மேடைகள் தோறும் வலம் வர இந்தியா முழுக்க கவனம் பெற்றது தமிழகத்தின் கொந்தளிப்பு.

கடந்த பத்தாண்டுகளில் குழந்தைகளும், பெண்களும், ஆண்களுமாய் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட போதெல்லாம் தமிழக தமிழர்கள் கொதிப்பை மனதுக்குள் பூட்டியே வைத்திருந்தார்கள். தொடர்ந்து கட்டப்பட்ட புலிவேஷம் மத்திய மாநில அரசுகளுக்கு பொருந்தியே வந்தது. ஈழம், புலிகள், தமிழ்ச்செல்வன் என எதைப் பேசினாலும் அடக்குமுறைச் சட்டங்களால் காட்டிய பூச்சாண்டிப் புலி வேஷம் பல நேரங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கவும் பயன்படுத்தப்பட்டது.

பொடா சட்டம், தடா சட்டம் போன்ற கொடிய ஆள்தூக்கிச் சட்டங்கள் பலதையும் கடந்து வந்த தமிழகம் அதனூடாக இந்தியாவுக்கே சில கோரிக்கைகளை முன்வைத்தது. இந்திய அளவிலான மனித உரிமை ஆர்வலர்கள் தங்களின் மனித உரிமைக் குரல்களை சென்னையில் இருந்து ஒலிக்கவும் துவங்கவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது அந்தக் கொடிய சட்டங்கள். புலி வேடம் போட்டவர்களின் தடாவும் பொடாவும் இன்று இல்லை. பயங்கரவாதத்தின் பெயரால் இதை விடக் கொடிய சட்டங்கள் நாளை வரலாம் புலி வேஷத்தோடு.

அதற்குள், மொத்த தமிழகமும் இன்று ஈழத்தமிழருக்காய் திரண்டிருக்கும் சூழலை ஆதிக்கத்தின் மேல் விழுந்த உடைப்பு எனலாம். இந்த கட்டுரைக்கு உடைப்பு என்று பெயர் வைத்தால் கூட அது பொருத்தமானதாகத் தானிருக்கும். இந்த உடைப்பு அதிகப்படியான தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியையும் வழக்கம் போல சிலருக்கு கொதிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வ கட்சிக் கூட்டம் நடந்த அன்று காலை வெளிவந்த ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி என்ற ஒரு பத்திரிகையாளர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். The dangers of tamil chauvinism என்கிற தலைப்பில் வெளிவந்த அந்தக் கட்டுரை திட்டமிட்டு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் அன்று இந்து பத்திரிகையால் வெளிக் கொணரப்பட்டது. சரி ஆங்கில அறிவாளிகள் அல்லவா? ஏதாவது விஷயம் இருக்கும் என நினைத்து வாங்கிப் பார்த்தால் அந்தக் கட்டுரை ஈழத்தமிழர் தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பு தொடர்பாக ஹிந்து பத்திரிகைக்கும் அதன் ஆசிரியர் ராம் அவர்களுக்கும் எழுந்துள்ள கொதிப்பை உணர்த்தியது. அந்தக் கொதிப்பில் உள்ள நியாயத்தை பார்ப்பதற்கு முன் வெங்காயத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

# ஈழம் தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் ஒரு புதிய டிரெண்டை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்தில் எழுந்துள்ள இந்த அச்சுறுத்தல் இந்திய சமூகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. தீவீரவாதமாக உருப்பெறும் தன்மை இந்த திரட்சிக்கு உண்டு. தெருவுக்குத் தெரு இது (ஈழ ஆதரவு) வளர்ந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியும், மதிமுகவும் இதை உச்ச கட்ட நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

# வட இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கு (தமிழகத்தில்) கேம்பெய்ன் மாதிரி நடத்துகிறார்கள். எல்லோரையும் திரட்டி விட்டார்கள். ஆனால் இலங்கை ராணுவம் புலிகளின் தலைமையகத்தை பிடிக்க இன்னும் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே இருக்கிறது. இலங்கை ராணுவம் இது வரை இப்படி ஒரு வெற்றியை அடைந்ததில்லை. வேலுப்பிள்ளை பிரபாகரனை பிடித்து விடுவார்கள். இவர் யார் என்றால் பாரதப் பிரதமரை படுகொலை செய்ய மூளையாகச் செயல்பட்டவர்.

# தமிழக அரசியல்வாதிகள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் இங்கிருந்து கொண்டு காஷ்மீரிகளையும் ஜிகாதிகளையும் ஆதரிப்பதற்கு சமமாக இருப்பதுபோல் இருக்கிறது.

# இதை(ஈழத்தை) ஆதரித்தால் அதை (காஷ்மீரை) ஆதரிக்கத்தானே வேண்டும். இதையும்( ஈழத்தையும்) அதையும் (காஷ்மீரையும்) ஒன்றாக வைக்க முடியுமா?

# புலிகள்தான் தென்கிழக்காசியாவில் தீவீரவாதத்தை துவங்கியது. அவர்களால்தான் அகதிகளாக தமிழர்கள் தமிழகம் வருகிறார்கள். அவர்களின் பிரச்சனையில் இங்குள்ளவர்களை இன்வால்வ் ஆக்குகிறார்கள்.

# இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு 83லிருந்து வெறும் இருபது வருட வரலாறே தெரியும்.

# இவர்கள் புலிகளின் மாஸ்டர் மைன்டாக செயல்படுகிறார்கள். ஒரே இரவில் இவர்கள் விழித்துக் கொண்டார்கள்.

# இந்திய மத்திய அரசு கடந்த பத்து வருடமாக சக்ஸசாக போய்க் கொண்டிருக்கிறது. (ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது போல புரிந்து கொள்ளவும்) இந்நிலையில் இந்த மாஸ்டர் மைன்டுகளை வளரவிட்டால் அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்து.

என்றெல்லாம் இந்திய உபகண்ட உலக வரலாறு தெரிந்த மாலினி பார்த்தசாரதி எழுதியிருக்கிறார்.

தோழர்களே - நீங்கள் கற்றுக் கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் அப்படி எந்த புதிய கள்ளும் இந்த பழைய மொந்தையில் இல்லையாதலால் நீங்கள் அவர் எழுதிய கட்டுரையை படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தக் கட்டுரைக்கு எவ்விதத்திலும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு அந்தக் கட்டுரையின் தரம் இருந்தாலும் விடுதலைப்புலிகள் தீவீரவாதிகள் ஆக வேண்டும் என்று வேண்டி விரும்பி ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு கள முனைக்கு வரவில்லை என்பதை உணர்த்த சில வரிகளில் சிங்கள இன வெறி வரலாற்றை நினைவுறுத்த வேண்டியிருக்கிறது....

# வாளை செங்குத்தாக ஏந்திப் பிடித்திருக்கும் சிங்கக் கொடியோடு 1948 பிப்ரவரியில் சிங்களம் ஆட்சிக்கு வந்தபோது டான் ஸ்டீபன் சேனநாயகா அதன் முதல் பிரதமராக பதவியேற்றார். பதவியேற்ற ஒரு வருடத்துக்குள் அவர் ‘பிரஜா உரிமைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அடர்ந்த காடுகளைத் திருத்தி காப்பியும் தேயிலையும் பயிர் செய்த மலையக மக்கள் சிங்கள் இன வெறிக்கு முதல் பலியானார்கள். 1840லிருந்து 1850 வரை கிட்டத்தட்ட பத்து இலட்சம் கூலி அடிமைகள் தமிழகத்தின் தென் ஆற்காடு, வட ஆற்காடு, திருச்சி, மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடியுறிமை மறுக்கப்பட்ட அவர்களைத்தான் இன்று வரை மலையகத் தமிழர்கள் என்றும், இந்திய வம்சாவளிகள் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது.

# 1956ல் பண்டாரநாயகா பதவிக்கு வந்த ஜூன் மாதத்தில் தனிச் சிங்களம் சட்டம் கொண்டு வரப்பட்டது. இலங்கை அரசின் கல்வித்துறையில் இருந்து ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களும் புறக்கணிக்கப்பட்டார்கள்.

# இவ் வேறுபாட்டின் கொடுமைகளை அன்றே அனுபவித்த தந்தை செல்வா அதை ஜனநாயக வழிகளில் அவர் நம்பிய அஹிம்சா கொள்கைகள் வழியே தீர்க்கலாம் என நம்பினார். அதனாலேயே சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவை வழங்கினார். சேனநாயகா, பண்டாரநாயகா, ஜெயவர்த்தனா என்று சிங்கள வெறியர்களோடு அவர் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் யாவும் பௌத்த பிக்குகளாலும் சிங்கள அடிப்படைவாதிகளாலும் கிளித்தெறியப்பட்டது. அஹிம்சா போராளிகள் மீது வன்முறை ஏவிவிடப்பட்டது.

# 1981ல் யாழ்நூலகம் எரிக்கப்பட்டது. தமிழர்களின் வரலாற்று மூலமான 90,000 நூல்கள் எரிந்து சாம்பலாயின

# தேடுதல் வேட்டையினால் பல நூறு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். அவர்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். 1983 ஜூலை 25 ஆம் தேதி சிங்கள கைதிகள் அரசின் ஆதரவோடு மிகப்பெரிய வன்முறையில் இறங்கினர். 34 கைதிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஜெகன், தங்கத்துரை, குட்டிமணி என ஏராளமான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு நாள் கழித்து மேலும் 18 பேர் கொல்லப்பட, தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் எங்கும் பரவியது. கிட்டத்தட்ட 3,000 தமிழர்கள் கோரமாக கொல்லப்பட்டனர். உலகின் கறுப்பு வரலாற்றில் இந்த இன வெறித்தாக்குதலை ஜூலை கலவரம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

# குமுதினி, செம்மணி, செஞ்சோலை என சிங்கள இனவெறி வரலாற்றில் கோரமாக கொல்லப்பட்ட தமிழ் மக்களின் கதைகளை நாம் குறைவாகவே பதிவு செய்திருக்கிறோம். அது போல 1956, 1958, 1961, 1974, 1981, 1983 என்று வரலாற்றின் மிக நீண்ட தக்குதல்களால் ஈழத்தமிழர்கள் உயிரையும் உடமைகளையும் இழந்திருக்கிறார்கள். 83 ஜூலை கலவரங்களுக்கு பிறகு ஆயுதம் தாங்கிய இளைஞர்களின் எழுச்சி ஏற்பட்ட பிறகுதான் சிங்களர்கள் தமிழர்களை படுகொலைகள் செய்வதை நிறுத்தினர். ஆனால் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்ததை இப்போது இலங்கை அரசு செய்து கொண்டிருக்கிறது. இன வெறி அன்றும் இன்றும் அரசு பயங்கரவாதமாக இலங்கையில் இருக்கிறது.

வெறும் இருபது வருடங்களுக்குள் அடங்காத பாசிசத்தின் கோரமுகம் இப்போதும் பல்லிளிக்கிறது அதே கோரத்தோடு.

‘‘இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே சொந்தமானது தமிழர்கள் இருந்து கொள்ளலாம் இங்கே’’ என்று இலங்கை ராணுவத்தளபதி சரத்பொன்சேகா சொல்லும் போது இன வெறிப் பாசிசத்தின் இறுகிய வடிவமான அந்த வார்த்தைகள் இந்தியா வகுத்துக் கொடுக்கும் இலக்கணத்தின் படியே சொல்லப்படுகிறது. இன்று நூற்றுக்கணக்கான சிங்கள ராணுவத்தினர் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுதப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பயிற்சி எடுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கு ஊக்கத் தொகையும் கொடுத்து உற்சாகப்படுத்துகிறது இந்தியா. இது அவரை உற்சாகப்படுத்துவதாய் சரத் பொன்சேகா சொல்கிறார். இது இன்றைய கதை.

அன்று, அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி ஆயிரக்கணக்கான ஈழ மக்களை கொன்று குவித்தது.

# திலீபனின் உயிரைக் காவு வாங்கியது

# குமரப்பா புலேந்திரன் உடபட 17 பிரதானப் போராளிகளை சிங்களனிடம் காட்டிக் கொடுத்தது இந்தியா.

# கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானது.

இதற்கெல்லாம் இன்று இந்தியாவிடம் பதில் இல்லை. மௌனம் மட்டுமே பதில். அந்த மௌனம்தான் இன்று யுத்த தந்திரமாக ஈழத்தில் தமிழர்களை கொன்று குவிக்கிறது. ஆனாலும் இன்று தமிழகம் கொந்தளித்த பிறகு முதன் முதலாக வாய் திறந்திருக்கிறது இந்தியா. ‘‘இந்தியாவின் பிராந்திய நலனும் இந்து மகாசமுத்திரத்தில் வேறு எந்த நாடும் ஆதிக்கம் செய்வதை இந்தியா விரும்பவில்லை. ஆகவே இலங்கைக்கு ஆயுத உதவி செய்கிறோம்’’ என்கிறது. இந்துமாக்கடல் பிராந்தியத்தை அமெரிக்காவும், சீனாவும், பாகிஸ்தானும் பங்கு போட்டிருக்கிறது. திருகோணமலை துறைமுகத்தை தன் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க நினைக்கிறது அமெரிக்கா.

எண்பதுகளில் போராளிக் குழுக்களுக்கெல்லாம் ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து வளர்த்த இந்தியா அவர்களை தனது செல்லப் பிள்ளைகளாக்க நினைத்தது. தூண்டிலில் வைத்த இறை மீனுக்கு உணவு என்று நம்பி இந்தியாவிடம் ஏமாந்தவர்கள் இன்று இலங்கை அரசின் ஆதரவோடு இயங்குகிறார்கள். 1989ல் மாலத்தீவில் இந்தியாவின் ரா அமைப்பு நிகழ்த்திய போலிக் கிளர்ச்சிக்கு பயன்பட்டவர்களை காரியம் முடிந்ததும் கழட்டி விட்டார்கள். சில ஆயுதக்குழுக்களை போராளிகள் என்று உருவாக்கியது இந்தியா. அதன் விளைவைத்தான் முப்பதாண்டுகாலமாய் நீண்டு கொண்டிருக்கும் ஈழப் போர் வலி நிறைந்த கதைகளோடு உலகுக்கு உணர்த்துகிறது. உண்மையான போராளிகள் போரிட்டார்கள். அன்று போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்த இந்தியா இன்று சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கிறது.

2004ம் ஆண்டு தெற்காசியாவின் கடலோரங்களை காவு கொண்ட சுனாமி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. கிட்டதட்ட பத்தாயிரம் தமிழர்கள் தமிழகத்தின் நாகையிலும் குமரியிலும் சுனாமிக்கு பலியானார்கள். இந்திய அரசின் உதவிகள் கிடைக்க நான்கு நாட்கள் ஆனது. ஆனால் சுனாமி வந்த மறுநாளே இந்தியாவின் விமானங்கள் இலங்கையையும் மாலத்தீவையும் சென்றடைந்தது. சொந்தக் குடிகள் ஆயிரக்கணக்கில் மடிந்தபோது வராத விமானமும், கப்பலும் மாலத்தீவுக்கும் இலங்கைக்கும் செல்கிற நோக்கத்தின் ரகசியம் இந்து மகாசமுத்திரத்தில் பொதிந்திருக்கிறது. ஆனால் நீங்கள் எந்த கடலைக் காரணம் காட்டி இலங்கைக்கு ஆயுதம் கொடுக்கிறீர்களோ அந்தக் கடலில்தான் இன்று சீனா தனது கண்காணிப்பை தீவீரப்படுத்தி இருக்கிறது. தென்னகத்தில் உள்ள உங்களின் அனல் மின் நிலையங்களையும் ரஷ்யாவின் உதவியோடு இந்தியா நிறுவிக் கொண்டிருக்கும் கூடங்குளம் அணு மின் நிலையத்தையும் அது தீவீரமாக கண்காணிக்கிறது. அது இந்துமாக்கடலையும் தாண்டி வங்காள விரிகுடா, அரபிக்கடல் என தன் ராணுவக் கண்காணிப்பை இலங்கையின் உதவியோடு தீவீரப்படுத்தி இருக்கிறது.

அது போல அகதிகளாக ஈழத்தமிழர்கள் இங்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் வேறு எங்குதான் போவார்கள். இந்தியாவின் கையாலாகத்தனத்தால்தான் ஈழப்பிரச்சனை ஐய்ரோப்பிய நாடுகளை நோக்கி திரும்பியது. ஈழ அகதிகளுக்கு நீங்கள் செய்து கொண்டிருப்பது துரோகம், பெருந்துரோகம். காரணம் சீனாவோடு முரண்பட்டு இந்தியாவுக்கு வருகிற திபெத்தியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கர்நாடகாவின் கூக்ளியில் பல நூறு ஏக்கர் பசுமைப் பள்ளத்தாக்கை திபெத்திய அகதிகளின் சுய சார் பொருளாதரத்திற்கு கொடுத்து உதவியது இந்தியா. இன்று அவர்கள் பொருளாதார ரீதியில் வலுவான சக்திகளாக வளர்ந்து வரும் சூழலில் எங்கள் மக்கள் மட்டும் இன்னும் அகதி முகாம் என்னும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைந்து கிடந்து சாகத்தான் வேண்டுமா?

இந்தக் கேள்விகள் நீண்ட காலங்களாகவே எங்களால் கேட்கப்பட்டுக் கொண்டுதான் வருகிறது. இன்றைய கொந்தளிப்புகள் இந்தியாவின் நாடகங்களைப் புரிந்து கொண்டு எதிர் உணார்வால் எழுந்தது. ஆக இந்த எதிர்ப்பு எப்படி இலங்கை அரசுக்கு எதிரானதோ அது போல இந்திய அரசுக்கு எதிரானதும் கூட, தமிழகத்தின் பெரும் பங்கு மக்கள் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்வதாக நம்புகிறார்கள். அதை பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

முதலில் இந்திரா காலத்தில் எண்பதுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு, பின்னர் அமைதிப்படை இலங்கையிலே நிகழ்த்திய மனித உரிமைகளுக்கு எதிரான கொந்தளிப்பு, பின்னர் போருக்கு எதிராக இப்போது ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு என தொடர்ந்து கொண்டிருக்கிறது ஈழத்துக்கும் தமிழகத்துக்குமான உறவு. ஆனால் இந்த உடைப்புகளில் இருந்து கொந்தளிப்புகளிலிருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள். ஈழமும் தமிழகமும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பிரிக்க முடியாத கலாசாரப் பின்னணியைக் கொண்ட இரு வேறு நாடுகள். அதாவது ஒரு கடல் இரு கரைகள் (நன்றி சா.பாலமுருகன்) அவ்வளவுதான்.

கடந்த பத்து ஆண்டுகளாக வெள்ளம் பாத்தியில் ததும்பிக் கொண்டிருந்தது. இப்போது அது உடைந்து ஓடிக் கொண்டிருக்கிறது.... காலம் கிழித்து விட்ட இந்த பத்தாண்டுகள் இடைவெளியில் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்; நாங்கள் நாங்களாகவே இருக்கிறோம் என்பதைக் காலம் இன்னுமொரு முறை நீரூபித்திருக்கிறது.

நீங்கள் இது வரை காட்டிய புலிப்பூச்சாண்டியையே மீண்டும் காட்டுகிறீர்கள். ஜெயலலிதா, ‘சோ’ ராமசாமி, இந்து ராம், சுப்ரமணியன் ஸ்வாமி நீங்களெல்லாம் யார்? யாரின் நலனுக்காக இப்படி வரிந்து கட்டிக் கொண்டு தமிழர்கள் மீது உங்கள் கொதிப்பைக் கொட்டுகிறீர்கள்? இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலையிடும் வரை கலைஞர் பட்டும் படாமலுமே இருந்தார். காரணம் இரண்டு முறை அநியாயமாக அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. எவ்வித சம்பந்தமும் இல்லாமல் திமுக பெரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. ஆனாலும் இன்று மீண்டும் தன் முழு சக்தியையும் செலவழிக்க கலைஞர் வீதிக்கு வந்திருக்கிறார். தன் அதிகாரத்தை இன்னொரு முறை ஈழ மக்களுக்காக துறக்க கலைஞர் உணர்வுப்பூர்வமாய் வந்திருக்கிறார்.

கம்யூனிஸ்டுகளின் உண்ணாவிரதத்துக்கு திமுக அழைக்கப்படாத சூழலில் அழைத்து, வருவதாக ஒப்புக் கொண்ட ஜெயலலிதா கடைசி நேரத்தில் காலை வாரினார். ‘‘ஈழத்தமிழர் படுகொலைக்கு மத்திய அரசே மௌன சாட்சி’’ என்று ஈழ மக்கள் மீது பரிவு காட்டினார். ஆனால் ஒரு இரவுக்குள் காட்சி மாறியது. மறுநாள் போய்ஸ்கார்டனில் நடந்தது அந்தச் சந்திப்பு. சோ ராமசாமியும் ‘ஜெ’வும் போயஸ் கார்டனில் சந்தித்துக் கொண்டனர். மறுநாளே ஜெயலலிதாவின் குரல் மாறுகிறது. கருணாநிதி பதவி விலக வேண்டும். மத்திய ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று அம்மா சாமியாடியது.

தொடர்ந்து 14ஆம் தேதி சர்வக் கட்சிக் கூட்டத்தை அறிவிக்கிறார் கலைஞர். அன்று காலையில்தான் இந்து பத்திரிகை தன் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாலினியின் கட்டுரையை வெளியிடுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜ்யசாபா உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்றார் கலைஞர். வைகோ தான் எங்கே ஈழ விவகாரத்தில் தனிமைப்பட்டு விடுவோமோ என்று பயந்து தனது எம்பிக்களும் பதவி விலகுவார்கள் என்று அறிவிக்கிறார்.

மத்திய அரசுக்கு தமிழகம் என்ன நெருக்கடியைக் கொடுக்க முடியுமோ அந்த நெருக்கடியை கொடுக்கிறார் கலைஞர். உடனே ஜெயலலிதா சொல்கிறார். ‘‘இலங்கை அரசை போரை நிறுத்தச் சொல்லி இந்திய அரசு உத்தரவிட முடியாது. அது புலிகளுக்கு ஆதாயமாகப் போய் முடியும்’’ என்கிறார். முந்தின நாள் ஈழ மக்களுக்கு எதிரானதாகத் தெரிந்த போர் ஒரு இரவுக்குள் புலிகளுக்கு எதிராக திரும்புகிற வித்தையை நாம் போயஸ்கார்டனில் மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். சந்திப்புகள் போரை தங்கள் சுயலாபத்துக்கு மாற்றுகிறது.

ஹிந்து பத்திரிகை மாலினி பார்த்தசாரதியின் கட்டுரையும் ஜெயலலிதாவின் இந்த அறிக்கைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன. அந்தப் புள்ளி பார்ப்பனீயம் என்னும் இந்திய தத்துவ மரபில் இருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் சந்திரிகா அம்மையார் அடிக்கடி சென்னைக்கு வருவார். இருவரும் சந்தித்துப் பேசுவார்கள். இலங்கை அதிபரான சந்திரிகாவுக்கு பல முறை போயஸ்கார்டனில் விருந்து சமைக்கப்பட்டிருக்கிறது.

சந்திரிகாவின் கணவர் ஹிந்து ராமுக்கு நண்பர். சந்திரிகாவை போயஸ் கார்டனுக்கு அழைத்துப் போனது ஹிந்து ராம். அன்றிலிருந்துதான் தமிழகத்தின் பிரதான திட்டமான சேதுக் கால்வாய் திட்டத்தை தடுக்கப் போராடினார் ஜெயலலிதா. இதே சேதுக் கால்வாயை சந்திரிகா அம்மையாரும் எதிர்த்தார். ஜெயலலிதாவும் சந்திரிகாவும் நட்புக்கூட்டணி போட்ட காலத்தில்தான் (2006ல்) ஹிந்து ராமிற்கு இலங்கை அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘சிங்கள கேல்’ விருது சந்திரிகா அம்மையாரால் வழங்கப்பட்டது. அதற்கு நன்றிக் கடனகாக இந்து தன் பார்ப்பன பாசிசத்தை வெளிப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்வதில் நமக்கு சிரமம் ஒன்றும் இல்லை.

உண்மையில் தமிழகத்தின் நாற்பது எம்பிக்களும் பதவி விலக வேண்டும் என்பது அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவு. ஆனால் ‘ஜெ’ கலைஞரை தனிமைப்படுத்தி தாக்க முயற்சிக்கிறார். இவர்கள் அனைவரும் ஒன்றிணையும் புள்ளி பார்ப்பன பாசிசம் அல்லாமல் வேறென்ன தோழர்களே? தமிழக எம்பிக்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் என்ன நடக்கும். மத்தியில் ஆட்சி கவிழும் அல்லது திமுக மத்திய அரசில் இருந்து ஒதுங்கிக் கொள்ளும். இந்த இரண்டில் ஏதோ ஒன்று நடக்கும். ஈழத்தமிழர் பிரச்சனையில் என்ன நடக்கும்?

எதுவும் நடக்காது.

உலகிலேயே இன்று பாசிச அரசாக திகழும் ராஜபக்ஷே அரசு இந்தியாவை தூக்கி எறிந்து விட்டு சீனாவின் பக்கமும் பாகிஸ்தான் பக்கமும் சாய்வது ஒரு பக்கம் இருந்தாலும் உதைக்கிற தம்பியை அண்ணன் எப்படி அணுகிறான் எனப் பார்ப்போம்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்கிறோம். இலங்கையை அது சிங்கள மக்கள் தமிழ் மக்கள் வாழும் பகுதியாக இருந்தாலும் போரற்ற பகுதியாக மாற்ற வேண்டும். ஈழத் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்படும் போரை இலங்கை அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்கிறோம். ஆக்ரமிக்கப்பட்டு சிங்கள சிப்பாய்களின் பூட்ஸ் கால்களில் மிதிபடும் எமது விவசாய நிலங்களில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்கிறோம். அதுதான் இந்தியாவுக்கு தமிழகம் வைக்கும் நிபந்தனை அல்லது வேண்டுகோள்.

ஆனால் இந்தியா இலங்கையுடன் கெஞ்சுகிறது, எப்படி தெரியுமா? ‘‘யுத்தத்தால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. போரில் மக்கள் எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. மக்களுக்கு பாதகம் இல்லாமல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும்’’ என மீண்டும் மீண்டும் கெஞ்சுகிறது இந்தியா.

சரத்பொன்சேகா சொல்கிற ஒன்றுபட்ட இலங்கை சிங்கள மக்களுக்கே சொந்தமாக இருக்கும்போது தமிழ் மக்கள் தங்களுக்கான ஒரு சுதந்திர ஈழத்தைக் கோருவதில் என்ன தவறு? ஒன்று அதைக் கண்டிக்கிற அரசியல் நேர்மை இருக்க வேண்டும் இல்லை என்றால் ‘‘போரை நிறுத்துங்கள் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும்’’ இந்த இரண்டு அரசியல் நேர்மையும் அற்ற இந்தியா இலங்கையில் தலையிட மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே ஆயுதங்கள் கொடுக்கிறபோது தெற்காசியாவில் பாசிசத்துக்கு நீங்கள் துணை போகிறீர்கள் என்றுதானே அர்த்தம்.

உங்களின் அடுத்த கவலை, தனி ஈழத்தை ஆதரித்தால் காஷ்மீரையும் ஆதரிக்க வேண்டுமே..... என்பது. ஆனால் என்ன செய்ய? ஈழத்தில் நாம் தனி ஈழத்தை ஆதரிக்கிறோமோ இல்லையோ காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்பதில் ஜனநாயகத்தை பேணக் கோருகிறோம். காஷ்மீரை ஆக்ரமித்திருக்கும் பாகிஸ்தானும் இந்தியாவும் அங்கிருந்து வெளியேற வேண்டும். ஏற்கனவே கொடுக்கப்பட்ட நேரு காலத்திய வாக்குறுதிகளின்படி காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இருக்க விரும்புகிறார்களா? இந்தியாவுடன் இருக்க விரும்புகிறார்களா? இல்லை இந்த இருவரிலிருந்தும் விலகி தனியாக இருக்க விரும்புகிறார்களா? என்று வாக்கெடுப்பு நடத்தி அதை அந்த மக்களின் முடிவுக்கே விட வேண்டும்.

அது போலத்தான் ஈழமும். அங்கு போர் நிறுத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் கோரிக்கையே தவிர அது சுதந்திர தமிழீழமா? இல்லை ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரம் பெற்ற ஈழமா? என்பதை முடிவு செய்ய வேண்டிய உரிமையும் பொறுப்பும் ஈழ மக்களுக்கு மட்டுமே உண்டு. எந்த மூன்றாவது நாடும் அதைத் தீர்மானிக்க முடியாது. இந்தியாவுக்கும் அந்த உரிமை இல்லை. இதைச் சொன்னால் நம்மையும் ஜிகாதிகளின் பட்டியலில் சேர்த்து விடுகிறார்கள்.

1987ல் தீர்வைச் சொல்கிறேன் என்று அதிகப்பிரசங்கித்தனமாக இலங்கை விவாகரத்தில் ஒரு தலைப்பட்சமாக தலையிட்டது இந்தியா. ஈழ மக்களை சதுரங்கக் காய்களாக்கி இந்தியாவும் இலங்கையும் ஆடிய விளையாட்டில் பலியானதென்னவோ ஈழ மக்களும் இந்திய சிவிலியன்களும்தான். ஈழ மக்களுக்காய் போராடிக் கொண்டிருந்த புலிகளோ அதை வேடிக்கை பார்க்கும்படியாயிற்று. கடைசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீர்களை இழந்து, அமரிக்கா வியட்நாமில் சந்தித்ததை இந்தியா ஈழத்தில் சந்தித்தது. சர்வதேச சமூகத்தின் முன்னால் தோல்வி முகத்தோடு நாடு திரும்பும்படியாயிற்று. இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது வெறும் அரசியல் ரீதியிலான ராணுவ ரீதியிலான தோல்வி மட்டுமல்ல நமது ராஜதந்திரத்தின் மீது விழுந்த அசிங்கமான அடியாகும்.

வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்திய அந்த ஒப்பந்தத்தின் சாரமே இன்று இலங்கை அரசால் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரித்து அதில் கிழக்கை துரோகக் குழுவான கருணா, பிள்ளையான் குழுவிடம் ஒப்படைத்திருக்கிறது இலங்கை அரசு. (இப்போது பிள்ளையானும் கருணாவுமே ஒருவரை ஒருவர் கொல்லத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தனிக்கதை)

உலகெங்கிலும் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டங்களை உண்மையாக இந்தியா ஆதரித்த காலம் ஒன்று உண்டு. பாலஸ்தீனத்துக்கு தார்மீக ஆதரவைக் கொடுத்த காலம் உண்டு. மத்திய கிழக்கோடு உறவு வைத்த காலங்களும் உண்டு. எப்போதெல்லாம் இந்தியாவை அண்டி நடக்கும் இன விடுதலைப் போரை அது ஆதரித்தது வந்ததோ அப்போதெல்லாம் இந்தியாவின் இறைமை காக்கப்பட்டதும் உண்டு. ஆனால் பாலஸ்தீனத்தை ஆதரித்தவர்கள் இப்போது இஸ்ரேலின் டெக்சார் ஏவுகணையை சிறிகரிகோட்டாவில் இருந்து ஏவிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே பாலஸ்தீனத்திற்கு 100 கோடி ரூபாய் உதவியும் செய்கிறார்கள். அப்படியானால் இந்தியாவின் வெளியிறவுக் கொள்கைதான் என்ன? அணிசேராக் கொள்கை என்னவானது?

சரி ஈழத்தை ஆதரித்தால் இந்தியாவின் வட கிழக்கில், காஷ்மீரில், தமிழகத்தில் கொந்தளிப்புகள் உருவாகும் என்பதெல்லாம் கடந்த முப்பதாண்டுகளக சொல்லப்பட்டு வந்த புனைவாகும். காஷ்மீரின் சுயாட்சிக் கோரிக்கையும், வடகிழக்கின் கொந்தளிப்புகளையும் புரிந்து கொண்டு பார்த்தால் இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பவர்கள் பார்ப்பன இந்துப் பாசிஸ்டுகளே அன்றி உழைக்கும் மக்கள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தண்ணீருக்கான நமது உரிமையை மறுத்தாலும் பெங்களூரில், மும்பையில் தமிழர்கள் தாக்கப்பட்டாலும் பிற இன மக்களுடன் சேர்ந்து வாழும் சாத்தியக் கூறுகள் இந்தியாவில் அறுந்து போகவில்லை. மாறாக தேசியம் என்பது இங்கு தரகு முதலாளித்துவம் சார்ந்ததாகவும், சாதியத்தைப் பேணுவதாகவும் பெண்ணடிமைத்தனத்தைப் போற்றுவதாகவும் இருக்கிறது. இது தங்கள் இன மக்களை தாங்களே சுரண்டும் உரிமை கோரும் முறையாக இருப்பதால் இனவாரி தேசியத்தை இன்று ஏற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கிறது.

இந்தியாவின் பன்மைத்தன்மையில் சாதி இழிவு, சுரண்டல் பொருளாதாரம், பார்ப்பன பாசிசம், இவைகளைத் தவிற பல்லின உழைக்கும் மக்களிடம் கொண்டாடவும் உறவு கொள்ளவும் எவ்வளவோ கலாசார அம்சங்கள் இருக்கிறது. தவிரவும் பிற இன உழைக்கும் மக்கள் எப்போதும் இன்னொரு இன மக்களிடம் துவேசம் காட்டியதில்லை என்பதே என் கருத்து. ஆனால் இந்தியாவின் இந்த பன்மைத் தன்மையை சிதைத்தவர்கள் யார்? பாபர் மசூதியை உடைத்தவர்கள் யார்? தேவாலயங்களைத் தாக்கி கிறிஸ்தவர்களைக் கொன்றவர்கள் யார்? ஈழத்தில் இன்று வரை படுகொலைகளை செய்தது யார்? ஈழப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பவர்கள் யார் என்றால் இன்று ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கு பல்லக்கு தூக்குபவர்கள் யாரோ அவர்கள்தான் இன்று பார்ப்பனர்களின் மாஸ்டர் மைன்டாக செயல்பட்டு இதை செய்கிறார்கள். அவர்களே இந்த நாட்டை இந்துப் பாசிசமாக மாற்றுகிறார்கள். இலங்கையில் சிங்களப் பாசிசத்துக்கு உதவி புரிகிறார்கள்.

தோழர்களே! நமக்கெல்லாம் இந்த நாட்டில் பூர்வீக இடமொன்று உண்டு. மலையாளிக்கும், தெலுங்கர்களுக்கும், கன்னட மக்களுக்கும், கூர்க்காக்களுக்கும், தமிழர்களுக்கும் ஓர் இடம் உண்டு. கலாசார ஓர்மைகளுடன் வாழவும் மொழியைப் பேணவும் ஒரு மாநில அமைப்புக்குள் முரண்பாடுகளோடு இருந்து கொண்டே இந்த தேச நலனில் அக்கறை பேணுகிறோம். ஆனால் இந்த நாட்டில் பார்ப்பனர்களுக்கான இடம் எது? எந்த மாநிலம் உங்கள் மாநிலம்? உங்கள் மொழி எந்த மாநிலத்தில் பெருமளவு மக்களால் பேசப்படுகிறது? என்றால் இந்த கேள்விகளுக்கு விடையாகத்தான் நீங்கள் இந்துப் பாசிச கலாசார தேசியத்தை கட்டமைக்கிறீர்கள். அதற்குத் தோதாக தேசிய இனங்களின் சிறைச்சாலையான இந்தியா உங்களுக்கு வாய்த்திருக்கிறது. சிறைகள் உடைவது இயல்பு வெலிக்கடை சிறையைப் போல....

அப்படி ஒரு வேளை இந்தியா சிதறுமானால் அழிந்து போவது பார்ப்பனர்கள் மட்டுமே... இப்போது உங்களுக்குப் புரிகிறதா, ‘ஜெ’ ஏன் மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வந்தார் என்பதும், காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதும். இந்து ராம் ஏன் ஈழத்துக்கும் காஷ்மீருக்கும் முடிச்சுப் போடுகிறார் என்பதும் என்ன காரணத்திற்காய் அவருக்கு சந்திரிகாவின் தலைமையிலான அரசு விருது கொடுத்தது என்பதும். அக்டோபர் 14ஆம் தேதி மாலினி பார்த்தசாரதிக்கு ஏன் கொதிப்பு வருகிறது என்பதும் உங்களுக்குப் புரிகிறதுதானே?

ஈழத்தமிழர்களுக்காக எழுந்திருக்கும் இந்தக் கொந்தளிப்புகள் தேர்தல் நேர ஸ்டன்ட் என்றிருக்கிறார்கள் சிங்களத் தலைவர்கள். ஜெயலலிதாவும், வைகோவும் வேறு வேறு நிலைப்பாடுகளை எடுத்திருப்பதாக பத்திரிகையாளர்களிடம் சந்தோசமாகச் சொல்கிறார்கள் சிங்களத் தலைவர்கள். அவர்கள் அப்படி சொல்லும் நிலையில்தான் வைகோவின் அரசியலும் இருக்கிறது என்பது வேறு கதை. ஆனால் இப்போது நம்முன்னால் திரண்டிருக்கும் கேள்விகள் இரண்டு.

ஒன்று இந்த கொந்தளிப்புகள் உண்மையிலேயே தேர்தல் நேர ஸ்டண்ட் மட்டும்தானா?
இரண்டு இந்த கொந்தளிப்புகளை எத்தனை காலத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம்.

இவைகள் சிக்கலான கேள்விகள். ஆனால் விடை கண்டாக வேண்டிய கேள்விகள். மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகள் (அமெரிக்காவின் ராணுவக் கொள்கைதான் இன்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை) கூட இன்று நேரடியாக மாநில அரசுகளைப் பாதிக்கும் சூழலில் தமிழக அரசு மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போன்ற எளிய மக்களை பாதிக்கும் சிக்கல் சுழலில் சிக்கியிருக்கிறது. அது மக்களையும் பாதிக்கிறது. ஆனால் இதற்கு முழுக்க முழுக்க மாநில அரசு மட்டுமே பொறுப்பேற்க முடியாது. மக்கள் விரோத காங்கிரஸ் அரசுதான் இந்த விலைவாசி உயர்வுகளுக்கு காரணம். தமிழகத்தில் கொண்டு குவிக்கப்படும் அந்நிய முதலீடு மக்களை ஏற்றத் தாழ்வு என்னும் வகிடில் நின்று இரண்டாகப் பிரிக்கிறது என்பதை கலைஞர் அரசு உணர வேண்டும்.

அதே சமயம், மீண்டும் தமிழக அரசியலில் ஜெயலலிதா என்கிற பார்ப்பன பாசிஸ்ட் ஆட்சிக்கு வருவார் என்றால் இதே விலைவாசியையும், மின்வெட்டையும் தமிழ் மக்கள் சந்திக்க நேரிடுவதோடு மக்கள் விரோத ஜனநாயகமற்ற ஒரு பாதையில் தமிழகம் இன்னொரு முறை பயணிக்க நேரிடும். ஏனென்றால் கருத்துரிமை, பேச்சுரிமை, வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட காலங்களை ஜெயலலிதாவின் கடந்த ஆட்சி வரை நாம் காண முடியும். திரட்சியான மக்கள் போராட்டங்களின் போது, மக்களுக்கு எதிரான தவறான திட்டங்களை தன்னுடைய ஆட்சியில் கலைஞர் ஒத்திப் போட்டே வந்திருக்கிறார்.

ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் இவைகள் எதுவும் மறுக்கபட்டு ஜனநாயகமற்ற ஏதேச்சதிகாரமான நடைமுறைகளை மட்டுமே நாம் அனுபவிக்க நேர்ந்தது. காலமும் சூழலும் கனிந்துள்ள இந்த வேளையில் நாம் கலைஞரின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக.இல்லை என்றால் நாம் அழிந்துதான் போவோம். முதலில் அவர்கள் பின்னர் நாம்.

- பொன்னிலா

Tuesday, August 12, 2008

'காலக் கெரகமும்' சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தும்

தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கலைத் தாகத்தைத் தீர்த்து வைக்கும் முகமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'குசேலன்' தமிழ்த் திரைப்படம் தமிழகம், புதுவை, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பிரச்சனைகள் ஏதுமின்றி வெளியாகி விட்டது.

கர்நாடகத்தில்,

'அன்பும் பாசமும் மிக்க கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் அவர்களுக்கு, வணக்கம்! ஒகனேக்கல் பிரச்சனையின் போது, தமிழகத்தில் திரைப்பட நடிகர் - நடிகையர் உண்ணாவிரதம் இருந்தனர். அந்தக் கூட்டத்தில் நான் பேசியது, கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

யாரையும் புண்படுத்துவது எனக்குப் பிடிக்காது. அதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோளும் கூட. ஒரு கலைஞன் நாடு, மொழி, இனங்களுக்கு அப்பாற்பட்டவன். எல்லோருக்கும் பொதுவானவன். நான் நடித்துள்ள திரைப்படங்களை கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல்,
கன்னடியர்களும் பிற மொழியினரும் பார்க்கிறார்கள்.

எனவே, யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் 'குசேலன்' படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிட கன்னட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க அன்புடன்,
ரஜினிகாந்த்.'

என்று, கிட்டத்தட்ட அவர் மன்னிப்புக் கேட்டு / வருத்தப்பட்டு எழுதிய 'சாதுர்ய பல்டி'க் கடிதத்தின் அடிப்படையில் தான், அங்கே திரையைத் தொட முடிந்திருக்கிறது. திரைப்படத்தில் கதாநாயகியைக் காப்பாற்ற அவர் அடிக்கும் அந்தர் பல்டிகளையும் தாண்டி, இப்போது சாத்வீகமாக அடித்திருக்கும் இந்தக் கடித பல்டியின் அவசியமென்ன எனும் கேள்விக்கான பதில், எல்லோருக்குமே தெரிந்தது தான்!

இதன் மூலம், சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்தின் உண்மை முகம் வெளிப்பட்டு இருக்கிறது! ஒரு சூப்பர் ஸ்டார், படங்களுக்கு வெளியேயும் நடித்து வந்திருக்கிறார் என்பதை அவராகவே தெளிவுபடுத்தியிருக்கிறார்! மேலே சொன்ன மாநிலங்களைத் தவிர, அமொ¢க்காவிலும், ஜப்பானிலுமாக ஆக மொத்தம் உலகம் முழுவதும் 900 திரையரங்குகளில் நட்பைப் போற்றும் அப்படம், காட்சிகளாகத் தெரியத் தொடங்கியிருக்கிறது.

படம் வெளியாகும் முன்பே, அப்படம் வெற்றியடைய மதுரை ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட பக்தி மயம். அடுத்த படமான ரோபோவுக்கு பறவைக்காவடி எடுப்போம் என்று இப்போதே கங்கணம் கட்டிக் கொண்ட நேர்த்திக் கடன். திரையரங்குகளின் கட்டிட உயரத்துக்கும் மேலாக, ஒட்டுகள் போட்டு உயர்த்தப்பட்ட ரஜினிகாந்தின் முழு உருவப்படங்கள் வைத்தது போன்ற பில்ட் - அப்புகள். நாளிதழ்களிலும்., ஒரு சில உள்ளூர் சேனல்களிலும் தினம் தினம் இதே செய்தி தான். படத்திற்கான முன்னோட்ட விளம்பரங்கள் தான், இவை!

இங்கே மட்டுமல்ல, அமொ¢க்காவிலும் நடந்தது இந்தக் கூத்து. ஜப்பானில் நடந்தது பற்றியத் தகவல்களைத் திரட்ட முடியவில்லை!

வறுமைக்கும் தா¢த்திரத்திற்கும் அடையாளமாக்கப்பட்டு, வர்க்க ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையில் நட்பாக ஆச்சரியப்படுத்தப்பட்டு புராணக் கதையில் உலவி வரும் பொருளாதார வக்கற்ற சுதாமா என்ற 'குசேலன்' பெயா¢ல், பெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கிறது, இப்படம். சுதாமாவுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால் தன்னைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய ஏழை நிறுவனமான கவிதாலயா, தனது ஏழை நண்பர்களில் ஒருவரான விஜயகுமார் ஆகிய குசேலர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கிருஷ்ணா¢ன் வடிவமாக அவதானித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகவே இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்!

"கதைப்படி, அவர் பத்து நிமிடங்கள் தான் படத்தில் வருவதாக முதலில் இருந்தது. இது, சூப்பர் ஸ்டார் படமல்லவா? ரஜினிகாந்த்தின் குறைநேரப் பிரவேசத்தை எப்படி ரசிகர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியும்? அவரவர் வீட்டில் அடுத்த நேரத்திற்கு அடுப்பு எரியாதே! தமிழ்நாடே பட்டினிக் கிடந்து... சோமாலியா போல் தமிழ்நாட்டு மக்கள் எலும்பும் தோலுமாக ஆகிவிட்டால்... நயன்தாரா போன்ற கொழு கொழு நடிகைகளுடன் சூப்பர் ஸ்டார் ஆடிப் பாடி நம்மை மகிழ்விக்கும் காட்சிகள் பயனில்லாமல் போய் விடுமே? அப்படியாகி விடலாமா? அதன் பின்பு நாமெல்லாம் தமிழர்களா? என்ற கேள்வி எழுந்து, ஐ.நா. சபையில் விவாதிக்கத் தொடங்கி விடுவார்களே எனும் ஐயப்பாட்டில் தான், பத்து நிமிடங்களை அறுபது நிமிட நேரமாக அதிகா¢த்து, தமிழ் நாட்டு மக்களின் நெஞ்சில் மட்டுமன்றி உலகத் தமிழர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளேன். குறிப்பாக, கன்னட தமிழ் ரசிகர்களின் நெஞ்சையும் குறிவைத்தே பால் வார்த்துள்ளேன்'' என்று அப்படத்தின் இயக்குநர் அம்மா - தாலி சென்டிமென்ட் புகழ் பி. வாசு சொல்லி, நம்மையெல்லாம் ஆசுவாசப் படுத்தியிருக்கிறார்.

இல்லையென்றால்... இந்நேரம் தசாவதாரம் படத்தின் கடைசிக் காட்சியில் ஏற்படும் பிரளயம் போல் ஏதாவது ஏற்பட்டு, தமிழர்களெல்லாம் அழிந்து போய்விட்டிருப்பார்கள். நல்லவேளை... அவரது நாசூக்கான விளம்பரப் பேட்டி, நம்மையெல்லாம் காத்துவிட்டிருக்கிறது.

அப்பப்பா... குசேலனுக்குத் தான் எத்தனையெத்தனை விளம்பரங்கள்? கோயமுத்தூர் ஏர்டெல்லிலிருந்து அம்பானி மைந்தர்களின் பிக் மியூஸிக் வரை. அத்தனையும் விளம்பரங்கள் தான்! அது சரி...விளம்பரங்கள் தானே ஒரு படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. அது, சூப்பர் ஸ்டார் படமாகவே இருந்தாலும்! விளம்பரங்களால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்திவிட முடியுமா?

அதற்கு பதில் இங்கே இருக்கிறது!

"தொழில் நுட்பத்திலேயும், நவீன சாதனங்களிலேயும் நிறைய முன்னேறியிருக்கு. ஆனா... 'சப்ஜெக்ட்' தான் 'அட்வான்ஸ்' ஆகல்லே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி, படத்தை ஓட்டப் பாக்கறாங்க. என்னங்க வெட்கக் கேடு இது? இதுவா முன்னேற்றம்?"

நாடக மேடையையும் நடிப்புக் கலையையும் சமூக சீர்திருத்தங்களுக்கும், நாத்திகப் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தி வெற்றி கண்டவர், பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா. 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனுக்கு அளித்த ரகளைப் பேட்டியில், "தமிழ்ச் சினிமா இந்த முப்பது வருஷத்திலே முன்னேறி இருக்கா?" என்று கேட்கப்பட்டக் கேள்விக்கு, அவர் சொன்ன பதிலின் ஒருபகுதிதான், இது!

ஆம்... 1964-ம் ஆண்டின் நிலைமையிலிருந்து (அதற்கு முன் என்ன வாழ்ந்தது என்று கேள்வியும் எழுப்பலாம்) 2008-ம் ஆண்டு வரையிலும் கூட தமிழ்ச் சினிமா மாறவில்லையென்பது, காலத்தின் கொடுமையும் ரசிகர்களின் மாறாத மனோபாவமுமே ஆகும். அதுவே திரையுலகின் வெற்றியாகவும் இருந்து வருகிறது!

நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இருபெரும் திலக துருவங்களுக்குப் பின், தமிழ்த் திரையுலகில் ரஜினிகாந்த் என்ற சிவாஜிராவ் கெய்க்வாட் நடித்து வருகிறார். பிற நடிகர்களுக்கு வழங்கப்பட்டது போலவே அவருக்கும் ஒரு பட்டம் அளிக்கப்பட்டது. அதுதான் சூப்பர் ஸ்டார் எனும் பட்டம். அந்த சூப்பர் ஸ்டார் பட்டம், கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, ரஜினிகாந்த் என்ற பெயருக்கு மாற்றாக திரையுலகின் உள்ளேயும் வெளியேயும் அழைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு நான்கு படங்கள் வரை, தனது ஸ்டைலைப் போலவே வேகவேகமாகக் கொடுத்து வந்த சூப்பர் ஸ்டார், பாட்ஷா படத்தின் வெற்றிக்குப் பின், நிலை நிறுத்திக் கொள்ளும் வாழ்வியலின் தத்துவத்திற்கேற்ப நிதானத்திற்கு வந்தவராக இருக்கிறார். அவரது படம் வெளியாகும் தினம், மற்றெல்லா நாட்களைப் போல இல்லாமல், அது ஓர் உன்னத தினமாக அவரது ரசிகர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்களுக்கு அந்த தினம் தான் தீபாவளி, பொங்கல், சுதந்திர தினம், ஏன் கதிமோட்சமும் கூட!

சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் நடித்தத் திரைப்படம் வெளிவராத தீபாவளியை, ரசிகர்கள் துக்க தீபாவளியாக அனுஷ்டித்தக் 'காலக் கெரகமும்' நடக்கவே செய்தது. ஆண்டாண்டு காலமாய்த் திரைப்படங்களை குதிரை ரேஸைப் போலவும், மஞ்சுவிரட்டு போலவும் ஆர்வமுடன் ஓடவிட்டு கலெக்ஷனைக் 'கல்லா'க்கட்டி வந்த போட்டியிலிருந்து, அவரது படங்கள் தற்போது சுயமாகவே விலகிக் கொண்டுள்ளன. கால இடைவெளி அல்லது நீண்ட நாள் தயாரிப்புக்கு இலக்காகி, தனித்த ஓட்டங்களுக்கு அவை தயார்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பிற ரசிகர்களின் பார்வையிலும் அந்தத் திரைப்படங்கள் கவனம் பெற்று வசூலில் பின்னியெடுக்கின்றன. இது, ஒருவித யுக்திதான்!

அந்த நிலையிலும், சூப்பர் ஸ்டாரின் பாபாவும் சிவாஜியும் வசூலை அள்ளிக் குவிக்கவில்லை என்பதன் காரணம், நடிகவேள் எம்.ஆர். ராதாவின் பதிலிலேயே இருக்கிறது! ஆனாலும், பொதுமையிலிருந்து விலகி, அவரது படங்கள் வெளியாகும் நாட்கள், தனித்த பூகம்ப நாட்களாக மாறிவருவதை பூடகமாகவே கருத வேண்டியுள்ளது.

சூப்பர் ஸ்டாரின் திரைப் பா¢மாணத்தின் மூலமான பொதுமையை, கி.பி., கி.மு., போல, பாட்ஷா படத்துக்கு முன்பு, பாட்ஷா படத்துக்கு பின்பு என்றே கணக்கிட முடிகிறது. அதற்கு முன்பான அவரது படங்களில், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும் போன்ற படங்களில் தான், அவர் அப்படங்களின் இயக்குநர்களின் உதவியால் நடிப்பு வேலையை திறம்படச் செய்திருந்தார். அதனால் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதும் வாய்ப்பு உள்ளது. பிற படங்களில் அவர், 'யாரடி நீ மோகினி?' படப்பாடலுக்கு உத்தமபுத்திரனாக விரைத்துக் கொண்டு நடித்த சிவாஜி கணேசனின் பாணியைத்தான், சற்றே மாற்றி வேகநடையில் செய்து வந்திருக்கிறார். இதனாலேயும் கூட அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டிருக்கும் சாத்தியங்களும் உண்டு. எப்படியாயினும் தமிழ்த் திரையுலகின் அழிக்க முடியாத சாகச சாதனைப் பட்டியலில், அவரது பெயர் சூப்பர் ஸ்டாராகவே பிளாட்டின எழுத்துக்களால் பொதியப்பட்டுவிட்டது.

தமிழ்த் திரையுலகின் மன்னாதி மன்னனாக - எம்.ஜி.ஆர். இல்லை - சூப்பர் ஸ்டார் மாறிவிட்ட பின்பு, அவரது வாய்ஸ்க்கு மதிப்பு இருப்பதாக நம்பப்பட்டு வருவது, தமிழ்நாட்டின் கேடுகளில் மிக முக்கியமானக் கேடாகும். 1996 மற்றும் அதற்குப் பின்பானத் தேர்தல்களில் தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் காரணியாக அவர் வரையறுக்கப்பட்டு வருவது, வேறூன்றி கிளைபரப்பிய அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் கட்சியின் மீதும் தங்களின் மீதுமன்றி, மக்களின் மீதும் நம்பிக்கையின்மையைத் தான் வெளிப்படுத்துகிறது. புள்ளி விவரக் கணக்கில் சாதுர்யம் மிகுந்த தலைவர் கூட வாய்ஸ்க்காக ஏங்குவது கேலிக்கூத்துதான்!

அப்போதும் கூட, கூட்டணிக் கட்சிகளின் வாக்கு சதவீதங்கள் தான் முத்திரைகளாகப் பதியப்பட்டன என்பது தெரிந்திருந்தும், வாய்ஸ் தேடி ஓடும் கொடுமை அரசியல் கட்சிகளிடம் இன்னும் இருக்கவே செய்கிறது.

காவிரிப் பிரச்சனைக்கு, ஒட்டு மொத்தமாக நெய்வேலியில் திரண்ட நடிகர்களுக்கு எதிர்ப்பாக, மறுநாள் சென்னையில் மேடைபோட்டு தனித்து உட்கார்ந்து, பட்டினி வேஷம் கட்டி, தன்னைத் தமிழகத்தின் விடிவெள்ளியாக பிரகடனப்படுத்திக் கொண்டது; நதி நீர்ப் பிரச்சனையைத் தீர்க்க, தனது சொந்தப் பணத்தில் ஒருகோடி தருவதாக அறிவித்தது; அதை இதுவரைக்கும் தராமல், 'அஸ்க்கு... புஸ்க்கு' காட்டுவது; புலி வருது புலியாக பன்னெடுங் காலமாக அரசியலில் குதித்து, மக்களின் நல்வாழ்வைக் கெடுப்பேன் என்று தவணை முறையில் பயமுறுத்துவது; அதைச் சொல்லிச் சொல்லியே தனது ரசிகர்களை உசுப்பேற்றிவைத்திருப்பது தான், அவரது சூப்பர் ஸ்டார்த்தனம்!

அவரது வாய்ஸ்க்கு, மக்கள் செவி சாய்க்கிறார்களா எனும் கேள்வி தான் அவரை இத்தனைக் காலமும் யோசிக்க வைத்து, அவ்வப்போது மலையேறச் செய்து வருகிறது. அந்த மலையேறலை நிதர்சனப்படுத்த அவர் எடுத்த பாபா, கல்லா கட்டும் அருள் தராமல் மலையிறங்கிப் போய்விட்ட சம்பவம், தான் கடந்து வந்த பெரும்பான்மை வழியைத் தேடி சூப்பர் ஸ்டாரை மறுபடியும் ஓட வைத்தது.

என்ற போதும், அவர் தான் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார். அதன் பின்பு வெளியான படையப்பாக்களும் சந்திரமுகிக்களும் சிவாஜிக்களும் அதன் வெளிப்பாடுதான்! அகத்தியனின் 20 + வயதுடைய மகள் விஜயலட்சுமியுடன் ஜோடி கட்டப் போகும் 60 வயதைத் தொட்டு விட்ட, நாட்டில் அதிகமாகச் சம்பளம் பெறும் மூத்த நடிகர் அவர். குசேலனுக்கு முன்பாக நடித்த சிவாஜி படத்துக்கு, அவர் வாங்கிய சம்பளம் கொஞ்சம் தான். சுமார் ரூபாய் 15 கோடியாம்!

இதுதான் தமிழனின்... தமிழ்நாட்டின்... வக்கு!

கஞ்சி குடிக்காமல், உழைத்தக் களைப்பைப் போக்க டாஸ்மாக் போகாமல், தமிழக மக்கள் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்ததில் தானே அவருக்கு இவ்வளவு சம்பளம் தயாரிப்பாளர்களால் கொடுக்க முடிகிறது? அதை அவர் நன்றியுடன் வைரமுத்துவின் வா¢களால் எப்படிப் பாடுகிறார் தெரியுமா? "வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா... ஆயிரம் தடைக்கல்லும் படிக்கல்லப்பா...!"

அப்படி அவர் படிக்கல்லில் ஏறச் சிந்தும் ஒவ்வொரு வேர்வைத் துளியும் தமிழக மக்களின் இளிச்சவாய்த்தனத்தாலே தங்கக்காசு ஆனதை, அவர் மறைக்கவே இல்லை. அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன்(?) பட்டுள்ளதாக கூறிக் கொள்ளும் அவர், ஒகனேக்கல் பிரச்சனையில், பேசியப் பேச்சை நினைவுபடுத்திக் கொள்ள, திரைப்படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சி போல, நாம் சற்று சுற்றிச் சுற்றிச் சுற்றி... பின்னுக்குப் போக வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பாக, கர்நாடகத்தில் இயங்கிவரும் அத்தனை சாதிய அமைப்புகளும் அங்குள்ள மாநில மற்றும் தேசிய கட்சிகளும் ஒட்டு மொத்தமாய்க் குரல் கொடுத்தன. அதைக் கண்டித்து சென்னையில் தமிழ்த் திரைப்படத் துறையினர் உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் தமிழ் மண்ணில் முத்தெடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'கர்நாடக - தமிழக மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனால் சிலர் இந்த ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் தூண்டி விடுகின்றனர். குடிக்கிறத் தண்ணியிலே பிரச்சனைக் கிளப்புறவங்களை உதைக்க வேண்டாமா?' என்று ஆவேசமாகப் பேசினார்.

இந்தப் பேச்சைக் கேட்டு, தமிழ் மக்கள் புளகாங்கிதப்பட்டு, "சூப்பர் ஸ்டாரு... சூப்பர் ஸ்டாரு தான்..." என்று பேக்ரவுண்ட் மியூசிக் இல்லாமல் பாடியதென்னவோ உண்மை தான்! 'கர்நாடகத்து ஆளா இருந்தாலும், பொழைக்க வந்த மண்ணுக்கு ஏத்துக்கிட்டுப் பேசறாரே!' என்று அகமகிழ்ந்து போனதும் உண்மை தான்! அதே வேளையில், 'அங்கே உக்காந்துக்கிட்டு டமாரம் வாசிக்கிறியா!... வாடி, ஒம்படம் இங்கே வரணும்ல்ல?' என்று அப்போதே கர்நாடக அமைப்புகள் அறைகூவல் விட்டன. கர்நாடக அமைப்புகளுக்கு, அறைகூவலை செயல்படுத்துவதற்கான நேரம், இது!

மோசமான நடவடிக்கைளில் ஈடுபடும் அவை, குசேலனை திரையிட விடாமல் ரகளை செய்யவும் தயாராகவே இருந்தன. இந்நிலையில் தான், சூப்பர் ஸ்டார் கர்நாடகத் திரைப்பட வர்த்தக சபைக்கு மேலே சொன்ன கடிதத்தை எழுதியிருக்கிறார்.

கடிதம் எழுதுவதற்கு அப்படியென்ன அவசியம் வந்துவிட்டது? தமிழக மக்களுக்கு ஆதரவாகப் பேசிவிட்டால், அதன் பின்னால் கர்நாடகத்தில் தன் படங்களை ஓட்ட முடியாது என்று தெரியாத அப்பாவி விரல் சூப்பியா நம் சூப்பர் ஸ்டார்?. எல்லாம் அவருக்குத் தெரியும். இருந்தும், ஏன் பேசினார்? கர்நாடக மக்கள் மறந்து விடுவார்கள் என்றா? இல்லை, படம் முடியும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றா?

இல்லவே இல்லை... எல்லாமே தொழில் தந்திரம்!

அந்தத் தந்திரம் தான், கடிதம் கொடுத்துப் படத்தை ஓட்டுங்கள் என்று சொல்ல வைக்கிறது. 'பாடம் கற்றுக்கொண்டேன்' என்று தன் பொய் முகத்துக்கு ஒப்பனை போட்டுக் கொள்கிறது. பாடம் கற்றுக்கொண்டேன் என்றால் யாரிடமிருந்து? சோறு போடும் தமிழ் ரசிகனிடமும் தமிழ் நாட்டிலிருந்துமா? இல்லை, தொழில் முடங்கிப்போய்விடும் பயத்தை உருவாக்கிய கன்னட வெறியர்களிடமிருந்தா?

சொல்லுங்கள்... சூப்பர் 'பல்டி' ஸ்டார்... மன்னிக்கவும்... சூப்பர் ஸ்டார் அவர்களே!

இங்கே தமிழர்களுக்கு ஆதரவாக உணர்ச்சிப் பொங்க பேசிவிட்டு, இப்போது அடித்திருக்கும் பல்டி, தமிழ்நாட்டிலுள்ள அத்தனை பேரும் 'கேனைக் கிறுக்கன்' என்று அவர் நினைத்திருப்பதால் தானே! வாழும் இடத்தில் காலூன்றிக் கொள்ள அவர் அப்போது பேசியதும், தான் பிறந்த மண்ணில் தனது படம் ஓட அவர் மன்னிப்புக் கேட்பதும் நிச்சயம் பெருந்தன்மையினால் அல்ல என்பது, இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அவரது நிஜ முகம் வெளிப்பட்டிருக்கிறது. அவர் போர்த்தியிருந்த பசுந்தோல் பொருந்தாமல், கோர முகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

கர்நாடகத்தில் அவர் படம் திரையிடப்படவில்லையென்றால்... இந்திய அரசியலில் கம்யூனிஸ்ட்டுகளும் பாரதிய ஜனதா கட்சியினரும் காங்கிரஸ¥ம் ஒண்ணும் மண்ணுமாக கைக் கோர்த்துக் கொள்வார்களோ? இல்லை... இலங்கையில் சிங்கள இனவாத அரசு வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சமரசமாகிப் போய் விடுமோ...? இல்லை... புஷ்தான், பின்லேடனுடன் கை கோர்த்துக் கொண்டு மியாமி பீச்சில் காற்று வாங்கப் போய்விடுவாரோ?

தமிழ் மக்கள் மீது பற்று கொண்ட சூப்பர் ஸ்டார், 'கர்நாடகால என் படத்தைத் திரையிட விடாட்டிப் போங்க!' என்று சொல்லியிருந்தால்...'சபாஷ், சூப்பர் ஸ்டார்!' என்று விசில் அடித்திருக்கலாம். ஆனால் மண் பாசத்தில், அவர் பல்டியல்லவா அடித்திருக்கிறார்? பிரச்சனைக்கு முன்பே விநியோகஸ்தர் நியமிக்கப்பட்டு விட்டிருந்தால், நஷ்ட ஈடு கொடுத்து சரிக் கட்டியிருக்கலாமே! திரையிட்ட தோல்விப் படங்களுக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தவர் தானே...இந்த சூப்பர் ஸ்டார்!

அவரது பல்டியை அதே திரையுலகில் இருக்கும் சத்யராஜ், 'எனது படத்துக்கு இந்த நெருக்கடி வந்திருந்தால்... விநியோகஸ்தருக்கு நஷ்டஈடு தந்திருப்பேன். ஆனால் ஒகனேக்கல் விஷயத்தில் உடும்புப் பிடியாக இருப்பேன்!' என்றதற்கு, அவர் பச்சைத் தமிழன் என்பதும் ஒரு காரணமாகும்! ஆனால் இவர் வியர்வை சிந்தி, அதைத் தங்கக் காசுகளாக மாற்றிக் கொள்ள வந்தவர் தானே?

இதைத் தவிர, இந்த சந்தடியில் வேறு பல கூத்துகளும் தமிழ்கூறும் நல்லுலகில் நிகழ்ந்து தொலைக்கின்றன. தமிழுக்கும் சுயமா¢யாதைக்கும் நேற்று சாயங்காலம் வரைக்கும் முட்டுக் கொடுத்து வந்த இயக்குநர் சீமான் போன்றவர்கள், 'இது தொழில். அதை மனசுல வைச்சு நிதானமா யோசிச்சுப் பாக்கணும்!' என்று புதுசாக ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது அவர்களையே கேலி செய்து கொள்வது போலத் தான் இருக்கிறது. பாவம், அவர்களும் என்ன செய்வார்கள்? சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்து ஒரு படம் செய்யக் காத்துக் கிடப்பவர்கள் தானே!

கவலைப்படாதீர்கள் சூப்பர் ஸ்டார் அவர்களே... சொரணை கெட்ட தமிழர்கள் தான் நாங்கள். இந்த விளம்பரச் சந்தடியில் குசேலன் வெற்றிப் படமாகியிருக்கும். உங்களது அடுத்தப் படம், ரோபோவாக இருந்தாலும் சரி கீபோவாக இருந்தாலும் சரி... நீங்கள் தங்கக்காசுகளை அள்ளிக் கொள்ள, அதையும் வெற்றிப் படமாக்கித்தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

"ஒண்ணு சொல்றேன் கேளுங்க... நானும் சர்வீஸ் ஆன இன்னும் நாலஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாத்தான் தமிழ்ப் பட உலகம் உருப்படும். அப்போ தான் முதலாளிங்க புது ஆசாமிகளாப் போட்டு நல்ல கதைங்களா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க பணமும் குறையும். எத்தனை நாள் தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்?" பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதா, 1964-ம் ஆண்டில் ஆனந்த விகடனுக்கு அளித்த அதே ரகளைப் பேட்டியில் அதே கேள்விக்குச் சொன்ன பதிலின் பிற்பகுதி தான், இது!

இன்றைக்கு மட்டுமல்ல... அடுத்த தலைமுறைக்கும் பொருந்தும் பதிலாகவே அது, இருக்கிறது!

ரஜினிகாந்த் என்ன பாடம் கற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை. அவரும் அதைச் சொல்லவில்லை. ஆனால் தமிழர்களாகிற நாம், தொடர்ந்து பாடம் கற்றுக் கொண்டே வருகிறோம். ஏனென்றால், அந்த அளவுக்கு மக்குகள் நாம்!

நன்றி: கீற்று டாட் காம்

Monday, June 30, 2008

கமல்ஹாஸனும் மணிரத்தினமும்

அமெரிக்க ‘ஆஸ்கார்’ கனவுகளும், பிரெஞ்சு ‘கேனஸ்’ கனவுகளும் கோடம்பாக்கத்தின் தெருக்களில் நிரம்பிவழிந்து கொண்டிருக்கிறது. கமல்ஹாஸனும் மணிரத்தினமும் லாஸ் ஏஞ்ஜல்ஸ் மலைகளின் மயக்கம் தெளிந்து நிர்நதரமாகக் கீழே இறங்கிவிட்டார்கள் எனத் தெரிகிறது. அமெரிக்க மாதிரிகளை, கோடம்பாக்கத்திலேயே தமிழ்ச்சாயலுடன் தம்மால் உருவாக்கிவிட முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். மணிரத்தினத்தின் ‘ஆயுத பூஜை‘க்குப் பின்னாடி ‘அமரோஸ் பெரோசு’ம், வேட்டையாடு விளையாடுவுக்குப் பின்னாடி ‘டீரெயில்டும்’ சங்கரின் ‘வெயிலு’க்குப் பின்னாடி ‘சினிமா பாரடைஸே’வும் இருக்கிறது என்கிற நிஜத்தைக் கூட நாணயமாகச் சொல்லாதவர்கள்தான் தமிழ் சூழலில் புதிய சினிமாவைப் படைப்பவர்கள் என அறியப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்னொரு மகத்தான சோகம்.

சினிமாப் படைப்பாளிகள் தான் இப்படி என்றால், உலக சினிமா அல்லது அயல் சினிமா அல்லது இலத்தீனமெரிக்க சினிமா என எழுதும் பெத்தாம் பெரிய விமர்சகர்கள் அல்லது சினிமா வரலாற்றாசிரியர்கள் அல்லது வசனகர்த்தாக்கள் என அறியப்பட்ட எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் சாருநிவேதிதா போன்றவர்களின் போக்கு இதனை விடவும் கேவலமானதாகவும், போலித்தனம் மிகுந்ததாகவும், சினிமாச் சான்சுக்கு அலைகிற கூலிச்சிந்தனாவாதிகளின் நிலைமையிலும் இருக்கிறது.

வசந்தபாலனின் ‘வெயில்’ எனும் திரைப்படம் கேனஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றது குறித்த ஆரவாரங்களிருந்தும், தங்கர்பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் திரைப்படவிழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்படாமல் போன துயரத்திலிருந்தும் பிரச்சினையைப் பேசத்துவங்கலாம். முன்பாக, ‘வெயில்’ திரையிடப்பட்ட அதே ‘கேனஸ்’ திரைப்படவிழாவுக்கு மணிரத்தினத்தின் ‘குரு’ சஞ்சய்தத்தின் ‘ராகே முன்னா பாய்’ என இரண்டு வணிகத்தனமான இந்தியத் திரைப்படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியா சார்பாக அங்கு திரையிடப்பட்டது என்பதனையும் சேர்த்து நாம் தெரிந்துகொள்வோம். மேலாக, வெயிலும், குருவும், ராகே முன்னாபாயும், கேனஸ் திரைப்படவிழா போட்டிப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுத் திரையிடப்பட்ட திரைப்படங்கள் அல்ல என்பதனையும் தெரிந்துகொள்வோம்.

போட்டிப்பிரிவு அல்லாத, போட்டிக்கு வெளியிலான, அந்தந்த தேசிய அரசுகளின் அதிகாரபூர்வத் திரைப்பட அமைப்புகள் தேர்ந்தெடுத்துத் தரும் திரைப்படங்களிலிருந்து, கேனஸ் திரைப்படவிழாக் குழுவினால் வடிகட்டப்பட்ட படங்கள்தான் அங்கு திரையிடப்பட்டன. இங்கு தேசியத் தேர்வுக் கமிட்டியின் ரசனை, தேர்வுக் குழுவினரிடம் அதிகாரம் செலுத்தக் கூடிய நபர்களின் தகைமை போன்றனவும், படத்தேர்வு தொடர்பான விவாதங்களில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகையில் உன்னதமான இத்தாலியப் படமான ‘சினிமா பாரடைஸோ’வின் பாதிப்பில் உருவான ‘வெயில்’ படம் தொடர்பான ஆரவாரங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்பது சொல்லாமலேயே விளங்கக் கூடியதாகும். அதே அளவில் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் அங்கே திரையிடப்படாமல் போனதும் அதிகம் கவலைப்பட்டுக்கொள்ளக் கூடிய விசயமும் இல்லை.

முக்கியமாக, கலக அரசியல் அலையடித்த அறுபதுகளின் உலகத் திரைப்பட விழாக் கலாச்சாரத்தின் பின்னிருந்த கலை மதிப்பீடுகளும், உலகமயமாதலின் சந்தையென விரிந்திருக்கும் இன்றைய திரைப்பட விழாக் கலாச்சாரத்தின் பின்னிருக்கும் கலை மதிப்பீடுகளையும் ஒருவர் கறாராக வித்தியாசப்படுத்திப் பார்க்க வேண்டும்.

கேன், ரோட்டர்டாம், வெனிஸ் போன்ற அன்றைய மேற்கத்தியத் திரைப்பட விழாக்களில் கலக அரசியலை முன்னிறுத்திய கோஸ்டா காவ்ராஸ், ஜில்லோ பொன்டகார்வோ, ழான் ழுக் கோதார்த், பெலின்னி, ரெனுவார், கிளாபர் ரோச்சா, அகிரா குரஸோவா, செம்பேன் ஒஸ்மான், தோமஸ் கிதராஸ் அலியா, ஸத்யஜித்ரே, மிருணாள் சென், பெர்ட்டுலூஸி, அந்தோனியோனி, டிஸீகா, ஆந்த்ரே வாட்ஜா, தியோ ஆஞ்ஜல பெலோஸ், ரித்விக் கடக், கென் லோச் போன்றவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். சோசலிசம், தேசியம், இனவிடுதலை போன்ற பிரச்சினைகளையும் அதனது நெருக்கடிகளையும் இந்தப் படைப்பாளிகள் பேசினார்கள். சோசலிசத்தின் நெருக்கடி, மூன்றாமுலக சமூகங்களின் மனிதம் போன்றவற்றை எழுபதுகளிலும் எண்பதுகளிலும் வந்த படைப்பாளிகளான ஸாங் இமு, கியரோஸ்தாமி, கீஸ்லாவஸ்க்கி, நிஹ்லானி, ஸியாம்பெனிகல், கொப்பாலோ போன்றவர்கள் பேசினார்கள்.

திரைப்படத்தைக் கலையாகவும், சமூகமாற்ற நடவடிக்கையின் கடப்பாடு கொண்ட தொழில்நுட்ப வடிவமாகவும் புரிந்துகொண்ட மகத்தான கலை ஆளுமைகள் இவர்கள். இவர்களின்றி தொண்ணூறுகளில் சிக்கலாகி வரும் மனித உறவுகள் குறித்தும், விளிம்பு நிலை மாந்தர்கள் குறித்தும் பேசிய சீரிய திரைப்பட இயக்குனர்களும் தோன்றினார்கள். நன்னி மொராட்டி, ஆட்டம் இகோயன், ஆலிவர் ஸ்டோன், வாங் கார் வாய், அல்மதோவர், ஜோன் காம்பியான், ஸ்கோர்ஸிஸே, வான் ட்ரையர் போன்ற படைப்பாளிகளும் தோன்றினார்கள்.

இவ்வாறு திரைப்படைத்தைத் தீவிரமான கலையாகக் கொண்டாடியவர்கள் பெரும்பாலும் மேற்கத்தியக் கலைஞர்களாகவும், மூன்றாம் உலகின் கலைஞர்களாகவுமே இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலான படைப்பாளிகளை ஆகர்ஷித்த தனித்ததொரு கருத்தியலாக மார்க்சியமே திகழ்ந்தது. இத்தகையை கலைஞர்களில் அமெரிக்க சினிமாவைச் சேர்ந்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்களே என்பது பதியப்பட வேண்டிய மிகமுக்கியமான தரவாகும்.

மேற்கத்திய சினிமாக் கலை ஆளுமைகளினதும், மூன்றாமுலகின் கலை ஆளுமைகளினதும் பாதிப்பு, அமெரிக்காவின் விரல்விட்டு எண்ணத்தக்க திரைப்பட இயக்குனர்களிடம், குறிப்பாக ஸ்பீல்பர்க் மற்றும் லுகாக்ஸின் மீது அகிரா குரஸோவா, ஸ்கோர்ஸிஸேயின் மீது தியோ ஆஞ்ஜலபெலோஸ் மற்றும் ரே, குவன்டின் டரோன்டினோவின் மீது கோதார்த் மற்றும் குரஸோவா போன்றவர்களின் பாதிப்பு இருக்கிறதேயல்லாது, அமெரிக்க சினிமாவின் பாதிப்பு என்பது அறுபதுகள் முதல் தொண்ணூறுகள் வரையிலான காலகட்டத்தில் மேற்கத்திய மற்றும் மூன்றாமுலகின் கலை ஆளுமைகள் மீது இருக்கவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மையாகும்.

தொண்ணூறுகளிலும், இருபத்தியோராம் ஆண்டின் ஆரம்பத்திலும், அமெரிக்க சினிமாவிலும் உலக சினிமாவிலும், வியாபாரமயமான இசை ஆல்பங்களிலும் ஒரு புதுவிதமான போக்கு தோன்றியது. அறுபதுகள் வரை தொண்ணூறுகள் வரையிலுமான கலக சினிமாவின் அரசியலோடும், படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வையோடும் இரண்டறக் கலந்த கதை சொல்லல் முறைகளை வெறுமனே கதை சொல்லும் உத்தியாக அல்லது தொழில்நுட்பத் தரவாக மட்டுமே புரிந்துகொண்ட தொழில்நுட்பத் தேர்ச்சி கொண்ட சினிமாக்காரர்கள் உருவானார்கள். இவர்களில் பெரும்பாலுமானவர்கள் அமெரிக்க சினிமாக்காரர்கள்.

‘பல்ப் பிக்ஸன்’, ‘ரிசர்வயர் டாக்’, ‘கில்பில்’ போன்ற படங்களை உருவாக்கிய குவின்டன் டரான்டினோ இவர்களில் முக்கியமானவர். குரஸோவாவின் வாள் வீச்சின் லாவகத்தையும் வேகத்தையம், கோதார்த்தின் நேர்க்கோட்டுக் கதைசொல்லல் அல்லாத ‘நான் லீனியர்’ பாணியையும் தனது திரைக்கதை சொல்லலில் கச்சிதமாகப் பாவித்தவர் டிரான்டினோ. டிரான்டினோவின் கதை சொல்லலில் தவறும் விசயங்கள் இதுதான்: குரஸோவாவின் அறச்சீற்றம் இவரிடம் இல்லை. கோதார்த்தின் அரசியல் அந்நியமாதலும் கடப்பாடு கொள்தலும் இவரிடம் இல்லை.

இதைப் போலவே லார்ஸ் வான்டரையரின் ஹாலிவுட்டுக்கு எதிரான ‘டாக்மா திரைப்படக் கோட்பாடு’ - செயற்கையான செட்டுகள் தவிர்த்து, கையில் அலைவுரும் கமெராவுடன், ஒப்பனைகள் தவிர்த்த பாத்திரங்களைத் தொடரும் முறை - அமெரிக்கரான சோடர் பர்க்கிடம் அவரது ‘டிராபிக்’ படத்திலும், அமெரிக்க குற்றத் தொலைக் காட்சித் தொடரான ‘என்.வொய்.பி.டி’.யிலும் பாவனையாகிறது. புனைவுகளுக்கு அப்பால் நிஜங்களைத் தேடுவதற்காக ட்ரையர் தேரந்தெடுத்த கலகவடிவம், இப்போது புனைவுகளை நிஜம் போல முன்வைக்கும் வெற்றுத் தொழில்நுட்பமாக ஆகிறது.

நிஜமும், தனது அரசியல் கனவும் முயங்கப் பெற்ற மூன்றாவது யதார்த்தமாக, கலை யதார்த்தமாக, கலையின் இயங்கியல் பண்பாக, செர்ஜி ஐஸன்ஸ்டைன் முன்வைத்த ‘மோன்டேஜ்’ இன்று பரபரப்பையும், அலையும் பிம்பங்களை நுற்றுக்கணக்கில் அடுக்கி நமக்கு வேடிக்கை காட்டும் தொழில்நுட்பமாகவே எஞ்சி நிற்கிறது. ஹாலிவுட்டின் ‘ஸ்பீடு’ படத்திலிருந்து, இங்கிலாந்தின் ‘ஸ்பைஸ் கேர்ள்சி’ன் இசை ஆல்பங்கள் ஈராக, ‘கில்லி’ படம் வரையிலுமான படத்தொகுப்புகள் இப்படித்தான் நமக்கு கிச்சுக்கிச்சு மூட்டிக் கொண்டிருக்கிறது.

இதே வகையில்தான் கீஸ்லாவ்ஸ்க்கியின் ‘பிளைன்ட சான்ஸ்’ முன்வைக்கும் முக்கால உணர்வும், போலந்தின் அரசியல் சாத்தியங்களும் பற்றியதான தத்துவ நோக்கு, ‘ஸ்லைடிங் டோர’ எனும் ஆங்கிலப் படத்திலும், தமிழில் அதனை அடியொற்றி வந்த ‘12-பி’ படத்திலும் வெறும் தொழில்நுடபமாகச் சீரழிந்து விடுகிறது. இந்த மாற்றங்கள் அனைத்தும் தற்போது உலகெங்கிலும் நடைபெற்று வரும் திரைப்பட விழாக்களிலும் எதிரொலிக்கிறது.

உலகில் இன்று நடைபெற்ற வரும் சில திரைப்பட விழாக்கள் முற்றிலும் வியாபார நோக்கத்திற்கானது. ஹாலிவுட் மற்றும் இந்தியக் கமர்சியல் சினிமாவை உலக அளவில் விற்பதற்கானது. இன்னும் சில திரைப்படவிழாக்கள் நாடுகளுக்கு இடையிலான அரசியல் மற்றும் பொருளியல் இலாபங்களை அடிப்படையாகக் கொண்டது. தமது நாட்டின் திரைப்படங்களுக்கு பிறிதொரு நாட்டில் சந்தையைத் தேடும் நோக்கம் கொண்டது. ஒரு நாட்டின் சார்பாகப் பிறிதொரு நாட்டில் அதிகாரபூர்வமாக நடத்தப் பெறும் இத்தகைய திரைப்படவிழாக்களில், விமர்சனபூர்வமான கலைஞர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதில்லை. உதாரணமாகச் சென்னயில் நடைபெற்ற இலங்கைத் திரைப்பட விழாவில், அந்த நாட்டின் அற்புதமான திரைப்பட இயக்குனர்களான பிரசன்ன விதாநகே மற்றும் ஹந்தஹம போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை என்பதனை நாம் கவனம் கொள்ள வேண்டும்.

மத்தியக்கிழக்கு நாடுகளிலும், மேற்கத்திய நகரங்களிலும் அமெரிக்க நகரங்களிலும் நடைபெற்று வரும் அமிதாப்பச்சன் மற்றும் அட்லாப் முன்னின்று நடத்தும், இந்தியத் திரைப்படவிழாக்கள் முற்றிலும் வியாபாரத்திற்கானதேயொழிய இதில் தரம் என்பதோ, கலை என்பதோ சுத்தமாக இல்லை. இதே விதமாகத்தான் கேனஸ் திரைப்பட விழாவும் சமீப ஆண்டுகளில் அதிகமான அளவில் அமெரிக்கமயமாகி வருவது போலவே, ஓரு திறந்த சந்தைக்கான களமாகியும் வருகிறது.

அறுபதுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களுக்கும், இன்றைய திரைப்பட விழாக்களுக்கும் இருக்கும் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்றுண்டு. அறுபதுகளில், திரைப்படத்தினை ஒரு கலையாகப் புரிந்து கொண்ட கடப்பாடு கொண்ட ஆளுமைகளின் கூடுமிடமாக திரைப்பட விழாக்கள் இருந்தன. இன்றைய திரைப்படவிழாக்கள், சமகாலத்தில் வெறும் சந்தையை நோக்கமாகக் கொண்டவர்களும், திரைப்படத்தினை வெறும் தொழில்நுட்பக் கொண்டாட்டமாகக் கொண்டவர்கள் கூடுமிடமாகவும், திரைப்படத்தினைக் கலையாகவும், கடப்பாடு கொண்ட சமூகமாற்ற வடிவமாகவும் கொண்டவர்கள் கூடுமிடமாகவும் இருக்கிறது. இந்தக் காரணத்தால்தான் ஐஸ்வர்யா ராயும், குவின்டன் டரான்டினோவும், வான் ட்ரையரும் குழுமும் ஒரு இடமாக கேனஸ் ஆகி வருகிறது. இதே காரணம் கருதித்தான், கிளாபர் ரோச்சாவின் புரட்சிகரப்படம் திரையிடப்படும் அதே கேரளத் திரைப்பட விழாவில், கேளிக்கை நடிகர் விஜய்யின் ‘போக்கிரி’ படமும் திரையிடப்படுகிறது.

திரைப்படவிழாக்கள், உலகத் திரைப்படங்கள் குறித்த வித்தியாசப்படுத்தல்கள் இல்லாமல், இன்று ஒருவர் உலக சினிமா, அயல் சினிமா, திரைப்பட விழாக்கள் போன்றவற்றை, ஒரு திரைப்படம் இவற்றோடு சம்பந்தப்பட்டிருப்பதே ஒரு தகுதி எனும் அளவில் பேசிக் கொண்டிருப்பது முற்றிலும் அபத்தமாகும்.

உலக சினிமா என்று இன்று ஒருவர் பேசும் போது, அவர் பேசுவது எந்த வகையான உலக சினிமா என்பதைத் தெளிவு படுத்திவிட்டுப் பேச வேண்டும். இன்று நடைபெறும் திரைப்பட விழாக்களின் தன்மைகளும் வேறுபட்டிருக்கிறது. அதைப் போலவே உலக அளவில் இன்று வெளியாகும் திரைப்படங்களின் தன்மைகளும் வேறுபட்டிருக்கிறது. திரைப்படச் சந்தையை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள் இந்த வித்தியாசங்களை அழிக்க நினைக்கிறார்கள். இது ஒரு வகையான வர்க்கநீக்க, சாதிய நீக்க, கருத்தியல் நீக்க, நடுநிலையெனும் போர்வையில் வரும் ஆதிக்க சினிமாக் கருத்தியல் என்பதனை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமா வரலாறு மற்றும் தமிழ் சினிமா விமர்சனம், பொதுவாகச் சினிமா அழகியல் குறித்தச் செயல்பாடுகளை, இடதுசாரிகள் எந்த அளவில் மேற்கொண்டு வந்தார்கள் என்று பதிவதும் இன்றைய தேவையாக இருக்கிறது.

எந்தவிதமான முறையான கல்லூரிப் படிப்பும், வாழ்க்கை வசதிகளும், அரசுசார் பதவிகளும் அதிகாரமும் இல்லாத தோழர் அறந்தை நாராயணன்தான் தமிழ் சினிமாவின் கதையை எழுதிய முன்னோடி மனிதர். தமிழ் சினிமாவில் அழகியல்-அரசியல்-இசை-வரலாறு-இலக்கியம் போன்றன பெரும் இடத்தினைக் குறித்து மிக விரிவாக எழுதியவரும் அவர்தான். அவரிடம் கல்வித்துறை சார்ந்த முறையியல் இல்லை. ஆயினும், ஒரு நடவடிக்கையாளராக அவரிடம் தமிழ் சினிமாவை அணுகுவதற்கான வரலாற்று அணுகுமுறையும் மார்க்சியக் கருத்தியல் சார்பும் அவருக்கு இருந்தது. கட்சி சார்பு, அவரது கறாரான விமர்சன அணுகுமுறையைக் கலைத்துவிட முடியவில்லை. ஏவி.எம்.நிறுவனமும் இராம.நாரயாணனும இணைந்து ‘சிவப்புமல்லி’ படத்தினை வெளியிட்டபோது, அந்தப்படம் வியாபார நோக்கம் கொண்ட மசாலா சாகசப் படம் எனக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.

அவரது செயல்பாடு என்பது தமிழ் சினிமா வரலாற்றைப் பதிவது என்பதோடு நின்றுவிடவில்லை. ஒரு விமர்சகராகவும் ஒரு சினிமாச் செயல்பாட்டாளராகவும் ‘கல்பனா’ எனும் சினிமா பத்திரிக்கையையும் மிகுந்த பொருட்சிரமத்திற்கு இடையில் அவர் நடத்தினார். பாலச்சந்தர் போன்ற அன்றைய ஜாம்பவான்கள் குறித்த மிகக் கடுமையான விமர்சனப் பார்வை கொண்ட கட்டுரைகளை ‘கல்பனா’ வெளியிட்டது. அவர் தமிழ் சினிமா வரலாற்றாசிரியர் மட்டுமல்ல. ஒரு மிகச்சிறந்த விமர்சகர். எல்லாவற்றையும் விட சினிமாவை அவலமான நிலைமையில் இருந்து மீட்பதற்காகச் சகல தளங்களிலும் போராடிய மனிதர் அவர்.

சினிமா குறித்த புனைவு இலக்கியம் என்றால், நமது இலக்கிய மேதைகள் உதிர்க்கிற இரண்டு நாவல்களில் ஒன்று சுஜாதா எழுதிய ‘கனவுத் தொழிற்சாலை’, பிறிதொன்று அசோகமித்திரனின் ‘விழா’ எனும் குறுநாவல். அறந்தை நாரயாணன் சினிமா உலகின் விளிம்பு நிலையாளர்களான துணைநடிகையர் பற்றியும், நடிகையரின் குறுகிய கால நட்சத்திர வாழ்வு பற்றியதாகவும் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். சேறும் சகதியும் கவிச்சையும் சாராய நாற்றமும், போராடும் உணர்வும் கொண்ட சினிமாவின் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய அந்த நாவல்கள், ‘வாரந்தோறும் வயசாகிறது’ மற்றும் ‘ஜக்கா’ என்பனவாகும். இதில் ‘வாரந்தோறும் வயசாகிறது’ நாவல் நடிகை சாவித்திரியின் துயரவாழ்வு குறித்ததாகும்.

வெறுமனே வரலாறு எழுதியவனோ அல்லது விமர்சனம் எழுதித் திரிந்தவனோ அல்லது அவர்களது வாழ்வை வைத்து புனைந்து கொண்டு திரிந்தவனோ அல்ல அறந்தை நாரயணனன், துணைநடிகர் நடிகையரின் மற்றும் சினிமாவில் பல்வேறு துறை சார் தொழில்களில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கான உரிமை கேட்கும் அமைப்புகளையும் கட்டியவர் அறந்தை நாராயணன்.

இதில் அவருக்கு முன்னோடியாக இருந்தவர் இசைக்கலைஞன் எம்.பி.சீனிவாசன். ‘கூட்டிசை’யை ஒரு வெகுமக்கள் இயக்கமாக எடுத்துச் சென்ற கலைஞன்தான் எம்.பி.சீனிவாசன். இவர்கள் இருவரும் இந்தியக் கம்யூனிஸ்ட கட்சியில் செயல்பட்டவர்களாக இருந்தார்கள்.

உலக சினிமா குறித்தும், சினிமா அழகியல் குறித்தும் முன்னோடியாகத் தமிழில் கணிசமான சினிமாப் புத்தகங்களைப் பதிப்பித்தவர்கள் ‘சென்னை புக்ஸ்’ நிறுவனத்தினர் மற்றும் ‘சென்னை பிலிம் கிளப்’ அமைப்பினர். ஹரிஹரன், யூகி சேது, சிவக்குமார் போன்றவர்கள் இந்த அமைப்பில் பங்கு பெற்றார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு நிலையும் இவர்களுக்கு இருந்தது. ரித்விக் கடக்கிலிருந்து கோதார்த் வரையிலான இந்திய உலக சினிமா மேதைகளை இவர்கள்தான் தமிழக்குத் தந்தார்கள். பேல பெலாஸின் ‘சினிமா கோட்பாடு’ எனும் அதியற்புதமான நூலை இவர்கள்தான் தமிழுக்கு வழங்கினார்கள். ‘சலனம்’ எனும் காத்திரமான சினிமா பத்திரிக்கையையும் இவர்கள்தான் கொண்டு வந்தார்கள். உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா எனக் காத்திரமான விமர்சனக் கட்டுரைகள் இந்தச் சினிமா சஞ்சிகையில் வெளியாகின.

ருத்ரய்யாவின் ‘அவள் அப்படித்தான்’, யூகி சேதுவின் ‘கவிதைபாட நேரமில்லை’ ஹரிஹரனின் ‘ஏழாவது மனிதன்’ போன்ற திரைப்படங்கள் வெளியான காலமும் இதுதான். வர்க்கம், சூழலியல் அழிவு, வேலையின்மை, வன்முறை அரசியல், பெண்ணிய விழிப்புணர்வு போன்றவற்றைப் பேசிய படங்களாக இவைகள் இருந்தன.

பிற்பாடு துவங்குகிறது ‘தாமரைச்செல்வி பதிப்பகம்’ மற்றும் ‘நிழல்’ போன்ற பதிப்பகங்களின் சினிமாப் புத்தக வெளியீடுகள். மக்களுக்கான சினிமா, அரசியல் சினிமா, ஆப்ரிக்க சினிமா, புகலிடத் தமிழ் சினிமா, ஈரானிய சினிமா, தமிழ் சினிமாவின் பரிமாணங்கள், ஆவணப்பட குறும்பட வரலாறு, ஜான் ஆப்ரஹாம் பற்றிய கலகக்காரனின் கதை, போதம்கின் திரைக்கதை என அதியுன்னதமான சினிமா நூல்களை ப.திருநாவுக்கரசு கொணர்ந்தார். காத்திரமான சினிமா சஞ்சிகையாக நிழல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கிறது. சினிமாவின் சகல அழகியல்-அரசியல் கூறுகள் குறித்தும் ‘நிழல்’ கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த இடதுசாரி மரபில் இன்னுமொரு பரிமாணம் முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், கலை இலக்கியப் பெருமன்றமும் நிழல் அமைப்பும் இணைந்து குறும்பட விவரணப்படப் பட்டறையை தமிழகமெங்கும் நடத்தி வருவதாகும். இன்று அதிகம் பேசப்பட்டுவரும் தமிழ் மாற்றுச் சினிமா குறித்த செயல்போக்கில் இது ஒரு மாபெரும் பாய்ச்சலாகும். சாதிய, வர்க்க, பாலியல் ஒடுக்குமுறைக்கு எதிராக விளம்பு நிலையாளர்கள் கையில் இதன் மூலம் காமெரா வந்து அடைந்திருக்கிறது. இன்னும் இரு சஞ்சிகைகளை ‘காஞ்சனை’ சீனிவாசனும், விஸ்வாமித்திரனும் கொண்டு வருகிறார்கள். ‘காஞ்சனை ரீல்’ மற்றும் ‘செவ்வகம’ என்பன அந்த இரு சஞ்சிகைகள். காத்திரமான காலனிய எதிர்ப்பு மற்றும் மூன்றாமுலக எழுச்சிகர சினிமாக் கட்டுரைகளை இந்த இரண்டு இதழ்களும் வெளியிட்டன.

இதனோடு ஒரு தனிநபராக, இந்திய உலக சினிமாக்கள் குறித்து சினிமா விமர்சனங்கள் மேற்கொள்வதோடு, சினிமாப் பட்டறைகளை நடத்தி வருவதோடு, தனது ‘கனவு’ இதழ் மூலம் கணிசமான தமிழ் சினிமா விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டவர் சுப்ரபாரதிமணியன். தங்கர்பச்சானின் ‘செம்புலம்’ பதிப்பகம் தமிழ் சினிமா இயக்குனர்கள் குறித்து மிக முக்கியமான நூலொன்றினைக் கொண்டுவந்திருக்கிறது. கோவையிலிருந்து நண்பர் விசுவநாதன் தனது பதிவுகள் பதிப்பகத்தின் மூலம், என்னுடைய ‘தமிழில் மாற்றுச் சினிமா’ என இரு தொகுதி நூல்களைக் கொண்டு வந்திருக்கிறார். இவ்வாறு உலக சினிமா குறித்தும் தமிழ் சினிமா குறித்தும் தமிழ் மொழியிலேயே இடதுசாரிகள் கணிசமான நூல்களைக் கொணடுவந்திருக்கிறார்கள்.

இதுவன்றி இயக்குனர் ஸ்ரீதர், இயக்குனர் மகேந்திரன் போன்றவர்களும் தமது அனுபவங்களை எழுதியிருக்கிறார்கள். அம்சன்குமாரின் ‘சினிமா ரசனை’ வெளியானபோது சினிமா அழகியல் குறித்த ஒரு முன்னோடி நூலாக அது இருந்தது. ஆக கல்வித்துறை சார் அதிகாரமும் வசதிகளும் கொண்ட எம்.எஸ்.எஸ்.பாண்டியன், ராஜன் குறை, வெங்கடேஷ் சக்கரவரத்தி, தியாடோர் பாஸ்கரன் போன்றவர்கள் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்பாகவே, உலக சினிமா குறித்தும் தமிழ் சினிமா குறித்தும், பிறர் தமிழ் மொழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள்.

தமிழ் சினிமா விமர்சனச் சூழல் தனது அடிப்படையான தப்படியைக் கூட இன்னும் முன் வைக்கவில்லை. தமிழ் சினிமா விமர்சனம் மிக நேர்மையாக உருவாகாததற்கான பிரதான காரணங்கள் மூன்று. முதலாவதாக தமிழ் சினிமாவின் காத்திரமான விமர்சகர்கள் என அறிப்பட்டவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் சார்பாளர்கள். எம்.எஸ்.எஸ். பாண்டியன் மற்றும் வெங்கடேஷ் சக்கரவரத்தி என இவர்களைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக, எந்தவிதமான கருத்தியல் சார்பும் விமர்சனக் கோட்பாட்டுத் தேடலும் அற்ற வரலாற்றாசிரியர்கள். இவ்வகைக்கு உதாரணம் தியோடார் பாஸ்கரன் மற்றும் அ.ராமசாமி.

கருத்தியல் அடிப்படையில் பிராமணியத்தையும், இடதுசாரி வெறுப்புணர்வையும் கொண்ட அழகியல் விற்பன்னர்கள், நடந்து வந்திருக்கும் இடதுசாரி விமர்சனச் செயல்பாட்டை மறுப்பதற்காக இவர்களையே பிரதான சினிமா விமர்சகர்களாகத் தொடர்ந்து கொண்டாடுகிறார்கள். இடதுசாரிகள் மீதான வெறுப்பையும், தலித் பிராமணிய கூட்டமைப்பையும் வலியுறுத்தும் காலச்சுவடு பத்திரிக்கையின் ஆஸ்தான சினிமா விமர்சன ஆளுமைகள் இவர்கள்தான்.

மூன்றாவதாகப் பொது நீரோட்ட வியாபார சினிமாவுக்கு வசனமெழுதப் போக வேண்டும் எனும் தமது சொந்த ஆசைகளின் பொருட்டு, சினிமாவைப் பற்றிய அபத்தமான கருத்துக்களைத் தொடர்ந்து பேசிவரும் எழுத்தாளர்கள். எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்றவர்கள் இவர்கள்.

இவர்கள் அல்லாமல், அழகியல் நோக்கில் தொடர்ந்து விமர்சனங்கள் அல்லது தகவல்கள் அல்லது மனத் தோய்வுகள் என எழுதிக் கொண்டிருப்பவர்கள் அம்ஷன்குமார், விட்டல்ராவ், சுப்ரபாரதி மணியன் போன்றவர்கள். இன்று சினிமா குறித்து எழுதிக் கொண்டிருப்பவர்களில் கடப்பாட்டு உணர்வுடன் எழுதிக் கொண்டிருப்பவர்கள் மூவர். காஞ்சனை சீனிவாசன், ப.திருநாவுக்கரசு மற்றும் விஸ்வாமித்திரன் போன்றவர்களே அவர்கள். இன்றும் இயங்கிக் கொண்டிருப்பவர்கள் குறித்து மட்டுமே நான் அவதானித்திருக்கிறேன். இதுவன்றி கடந்த காலத்தில் சினிமாவைத் தீவிரமாக அணுகிய விமர்சகர்கள் என அறந்தை நாராயணன், பசுமைக்குமார், ரவீந்திரதாஸ் போன்றவர்களை என்னால் குறிப்பிட முடியும். நான் பிற்பாடாகக் குறிப்பிட்ட ஆறு பேரும் இடதுசாரிச் சார்புநிலை கொண்டவர்கள் என்பதனை இங்கு பதிய விரும்புகிறேன்.

எம்.எஸ் எஸ் பாண்டியனின் எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்த நூல், வரலாறும் தனிமனித ஆளுமையும் முயங்கும் இடத்தில் சினிமா நட்சத்திரம் எனும் ஆளுமைகள் தோன்றுகிறார்கள் எனும் இயங்கியல் அடிப்படையைத் தவறவிட்ட, எம்.ஜி.ராமச்சந்திரன் மீது வெறுப்புக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் பார்வையாகத்தான் எஞ்சி நிற்கிறது. மணிரத்தினத்தின் திரைப்படங்களில் யதார்த்தம் குறித்துக் கேள்வியெழுப்பும் வெங்கடேஷ் சக்கரவரத்தி, கலைஞர் மு.கருணாநிதி உள்பட திராவிட இயக்கத்தினர் உருவாக்கிய திரைப்படங்களில் யதார்த்தம் பற்றிக் கேள்வியெழுப்பியது இல்லை. அதைப் போலவே பெண்வெறுப்பும் பெண்ணைப் பாலியல் பண்டமாகவும் ஆக்கிய திராவிட முன்னேற்றக் கழகப் படங்கள் பற்றியும் இவர்கள் கேள்வி எழுப்பியது இல்லை.

ஈரானிய சினிமா தொடர்பான கட்டுரையில் யதார்த்தவாதத்தின் நெருக்கடி குறித்துத் தீவிரமாகப் பேசிய சக்கரவரத்தி, திராவிட இயக்கப் படங்களில் புனைவும் யதார்த்தமும் மனோரதியமும் பற்றிப் பேசியதில்லை.

தியோடர் பாஸ்கரன் எந்த விதமான விமர்சனக் கோட்பாட்டையும் முயன்று பார்த்தவர் இல்லை. படைப்பில் வடிவம், அழகியல் அமைதி போன்ற செவ்வியல் விமர்சன அளவுகோல்களையே அவர் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு விமர்சகன் ஒரு படத்தின் கதையைத் திரும்பச் சொல்வதில் அவருக்கு மிகச் சலிப்பாக இருக்கிறது. திரைப்படம் எடுக்கப்பட்ட முறை பற்றித்தான் அவருக்கு அக்கறை. ஆனால் பிரதி குறித்த அதிபிரக்ஞையும், திரைச் சட்டகம் குறித்த குறியியல் வாசிப்பும் வந்த பிறகு, அரசியல் பிரக்ஞை கொண்ட ஒரு விமர்சகன், திரைப்பிரதி சொல்லாத பிறிதொரு கதையைத் தான் திரும்பவுமான கதை சொல்லில் சொல்ல வருகிறான் என்கிற தேடல்களுக்கு எல்லாம் அவர் போவதில்லை. வெறுமனே வரலாற்றுத் தகவல்கள் தருகிறவராக மட்டுமே அவர் எஞ்சி நிற்கிறார். அவரது அரசியல் பரிமாணமற்ற சூழலியல் கட்டுரைகளின் அதே சாயலில்தான் அவரது சினிமா தொடர்பான எழுத்துக்களும் அமைந்திருக்கின்றன.

அ.ராமசாமியின் எழுத்துக்கள் பேசப்படும் நபரைப் பொறுத்து, நபர் சார்ந்த பரிமாணத்தை எய்தும். சம்பந்தா சம்பந்தமில்லாமல் பெரியாரிய எதிர்ப்பை பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ திரைப்பிரதியில் காண்கிற அவர், அதே அணுகுமுறையை சுராவின் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’யிலும், ஜெயமோகனின் ‘கொற்றவை’யிலும் காண்பதில்லை. அவரது கருத்தியல் மயக்கங்கள் எல்லாம் அப்போது சொல்லிக் கொள்ளாமல் நழுவிப் போய்விடும். பிரதி ஆய்வு எனும் பட்சத்தில் அதற்கேயான சிறப்பான வித்தியாசங்களுடன், ஒரே அடிப்படையில் திரைப்பிரதி இலக்கியப்பிரதி இரண்டினையும் பார்க்கவியலும்.

அ.ராமசாமியிடம் அந்த அடிப்படைகளெல்லாம் செயல்படுவதில்லை. நீக்குப் போக்கான சொற்களில் விமர்சனங்களை மேற்கொள்கிற அ.ராமசாமியின் அணுகுமுறைக்கான மிகச்சரியான உதாரணம், மணிரத்தினத்தின் குரு படம் குறித்தான அவரது எழுத்துக்கள். ‘கருத்தியலைக் கலையாக்கும் படைப்பாளி’ என அவர் மணிரத்னத்தைக் குறிப்பிடுகிறார். மணிரத்தினத்திற்கு அரசியல் இருக்கிறது. கருத்தியல் இருக்கிறதா? கருத்தியல் அவரிடம் கலையாகிறதா? கருத்தியலைக் கலையாக்கும் படைப்பாளியாக அவர் இருக்கிறாரா? தலைப்பிலேயே எவ்வளவு அபத்தம் பாருங்கள்.

சமகாலத்தில் தமிழ் சினிமா குறித்து எழுதுகிறவர்களிலேயே மிக மிக ஆபத்தானவர்கள் என நான் கருதுவது எஸ்.ராமகிருஷ்ணனையும் சாரு நிவேதிதாவையும்தான். ஒரே சமயத்தில் இலத்தீனமெரிக்க இலக்கியம், போர்ஹே, மார்க்யூஸ், மிசல்பூக்கோ, ஒரான் பாமுக் என்று பேசிக் கொண்டிருக்கிற இவர்கள்தான், அதே நாவுடன் ரஜினியின் ‘பாபா’ பற்றியும், மணிரத்தினத்தின் ‘குரு’ பற்றியும், கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ பற்றியும், ரஜினிகாந்த் பற்றியும், லிங்குசாமி பற்றியும் அதே பாராட்டுணர்வுடன் எழுதுகிறார்கள்.

‘பாபா’வுக்கும் ‘சண்டக்கோழி’க்கும் வசனம் எழுதும் ஒருவர்தான் ரே பற்றியும், பெலின்னி பற்றியும் பேசுகிறார். பின்வரும் சினிமா விசிறி ஒருவர், ஸத்யஜித் ரேயும் பெலின்னியும், பாபா மாதிரியும் சண்டக் கோழி மாதிரியும்தான் படமெடுத்தார்கள் என நினைத்துவிடுகிற ஆபத்து இதில் உண்டு. ஏனெனில், ரஜினி ரசிகர் ஒருவர், எஸ்.ரா. வசனமெழுதிய ‘பாபா’ படத்தில் இருக்கிற வியாபார சமாச்சாரங்களை நீக்கிவிட்டால் ‘பாபா படம் இன்னொரு உபபாண்டவம் ஆகிவிடும்’ என எழுதியிருக்கிறார்.

சாருநிவேதிதாவும் எஸ்.ராவும் ஒரு ‘பின்நவீனத்துவக் குழப்பத்தை’ தங்கள் தங்கள் வழியில் மேலும் குழப்புகிறார்கள். வெகுஜனக் கலாச்சாரத்திற்கும் உயர் கலாச்சாரத்திற்கும் இடையிலான இடைவெளி தகர்ந்து வருகிறது என அவதானிப்பது ஒரு பின்நவீனத்துவ நிலைபாடு. வெகுமக்கள் ஈடுபாடு காட்டுகிற வெகுஜனக் கலைகளின் பால் மரியாதையோடான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம், வெகுமக்களோடு உரையாடுவதன் வழி அவர்களை அதி உயர்ந்த பிரக்ஞை நோக்கியும், செயல்பாடு நோக்கியும் உந்தமுடியும் என்கிற நம்பிக்கைதான், வெகுஜனக் கலைகளின் பாலான விமர்சகனது அக்கறைக்குக் காரணமாகிறது.

கிராம்ஸி, இதனை மேலான்மைக்கு எதிரான பார்வை எனும் அரத்தத்தில், அனைத்து வெளிப்பாட்டு வடிவங்களின் மீதும், அந்தந்த நிலைமையிலேயே வைத்து அவதானித்து, விடுதலை நோக்கிய எதிர்நிலைபாட்டைத் தொடரவேண்டும் என்கிறார். ‘வெகுஜனக் கலைகளினூடே விமர்சனச் செயல்பாடு’ என்பதுதான், வெகுஜனக் கலைகளின்பால் புத்தியுள்ளவன் மேற்கொள்ள வேண்டிய நிலைபாடு.

மாறாக, வெகுஜனக் கலைகளை இருக்கிறவாறே கொண்டாடிக் கொண்டிருப்பதல்ல. பாபா பற்றிய அல்லது சண்டக்கோழி பற்றிய எஸ்ராவின் பார்வையும், குரு பற்றியதான அதன் பன்னாட்டு மூலதனப் பொருளியலுக்கு ஆதரவான பார்வையை மறுதளித்த, அதே வேளை படத்தில் முறைசாரா உறவைக் கண்டுபிடிக்கிற, சாருநிவேதிதாவின் பார்வையும், நிர்மூடத்தனமாக இருப்பதை அப்படியே விமர்சனமின்றி ஆராதிக்கும் பார்வையாகும்.

சாரு நிவேதிதாவின் பம்மாத்திற்கு இன்னொரு உதாரணம் அமீரின் பருத்திவீரன் படத்தை இலத்தினமெரிக்க புரட்சிகர இயக்குனர் சாஞ்சினோசின் படத்துடன் ஒப்பிட்டது. சாஞ்சினோஸ் மூன்றாவது சினிமாக் கோட்பாட்டாளர். தனது மக்கள்மீதான மேற்கத்திய மற்றும் அமெரிக்கர்களின் அத்துமீறல்களை ‘கான்டோர் ஆப் பிளட்’ எனப் படம் எடுத்தவர். வாழ்நாள் முழுக்க காலனியாதிக்கத்திற்கெதிராகவும், விளிம்புநிலை மலைவாழ் மக்களுக்கு ஆதரவாகவும் பேசியவர். அவர்களது கலைவாழ்வை வெகுநுட்பமாகப் பதிவு செய்தவர். சாருநிவேதிதா நேர்மையாகச் செய்ய வேண்டியதெல்லாம், சாஞ்சினோசின் எந்தப்படத்தின் எந்தக்காட்சி மாதிரி, பருத்தி வீரன் தன்னை ஆகர்சித்தது என்று விவரித்து எழுதியிருக்க வேண்டும். கொடுமையிலும் கொடுமை, சம்பந்தா சம்பந்தமில்லாமல் ‘ராம்’ என்று மிக மோசமாக ஒரு இந்துத்துவாப் படமெடுத்த அமீரை சாஞ்ஜினோசோடு ஒப்பிடுவதெல்லாம் அயோக்கியத்தனம்.

எஸ்.ரா. தன்னுடைய சொந்த சினிமா ஆசைகளுக்காக அனைத்தையும் திரிக்கிறவர். அச்சு இதழில் வராத ஜான் பாபுராஜ் உடனான அவருடைய ஒரு இணைய நேர்முகம் (‘தமிழ்மணம்’ தொகுப்பில் தேடினால் கிடைக்கிறது) ஒன்று அவரது நகல் போலி சினிமாவைத் தெளிவாக முன்வைக்கிறது. எஸ்ரா சொல்கிறார்: என் வரையில் இரண்டே வகையான திரைப்படங்கள்தான் இருக்கின்றன. ஒன்று, பொழுதுபோக்கு திரைப்படங்கள் மற்றது கலைப்படங்கள். பொழுதுபோக்கு திரைப்படம் அதிகமும் பார்வையாளர்களோட விருப்பு வெறுப்பை முதன்மைப்படுத்தி உருவாக்கப்படுது. கலைப்படங்களுக்கு அந்த கட்டுப்பாடு இல்லை. கலைப்படங்கள் எப்போதுமே வாழ்வை ஆவணப்படுத்துற அரிய கலை முயற்சியில் ஈடுபடுகின்றன. தமிழில் அந்தமாதிரியான முயற்சிகள் குறைவு.

சினிமாவில் தீவிர எழுத்தாளர்கள் பணியாற்றுவது உலகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வர்ற ஒரு செயல்தான். இலக்கிய ஆசான்களாக நாம் கொண்டாடுற வில்லியம் பாக்னர், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் புயண்டஸ், ஹெமிங்வே, வைக்கம் முகமது பஷீர், சதத் ஹசன் மண்டோ, யுகியோ மிஷிமானு பலர் அவங்க மொழியின் ஜனரஞ்சகமான படங்களில் பணிபுரிந்தவர்கள்தான். போர்ஹே மாதிரியான பின் நவீனத்துவத்தின் பிதாமகர் கூட சாகசப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்”.

மேலே கண்ட மேற்கோளில் பல மயக்கங்களும் குழப்பமான சொல்லாட்சிகளும் இருக்கின்றன. கலைப்படம், பொழுது போக்குப்படம், ஜனரஞ்சகப் படம் என அவர் சொற்களை வீசுகிறார். பொதுவாக ‘சினிமா’வில் தீவிர எழுத்தாளர்கள் பங்கு பெறுகிறார்கள் என ஒரு பட்டியல் தருகிறார். அதே பாராவின் இரண்டாம் வாக்கியத்தில் ‘ஜனரஞ்சக சினிமா’வில் அவர்கள் பணிபுரிந்தவர்கள்தான் என்கிறார். ‘ஜனரஞ்சக சினிமா’ என்பதை அவர் பொழுதுபோக்குப் படங்கள்’ எனவும் சமப்படுத்துகிறார். பொழுது போக்குப் படம், கலைப்படம் என இருபிரிவுகள்தான் தன்னைப் பொறுத்து இருக்கிறது என்கிறார். கலைப்படங்கள்தான் வாழ்வை ஆவணப்படுத்துகின்றன என்கிறார்.

சரி, இவர் ஏன் பொழுதுபோக்குப் படங்களில் செயல்படுகிறார்?: அவர் மறுபடியும் சொல்கிறார்: “ஆபாசமில்லாத, வக்கிரங்களைத் தூண்டாத, தரமான பொழுதுபோக்கினைத் தர உதவ முடியும். இன்னும் ஒரு படிமேலே போய் வாழ்க்கை யதார்த்தங்களை திரையில் பிரதிபலிக்கச் செய்ய முடியும்.

கமர்ஷியல் சினிமா வெகுமக்களோட கலை வடிவமாக இருப்பதால் அதைப் புறக்கணிப்பது ஒரு வகையில் வெகுமக்களை புரிந்து கொள்ளாமல் புறக்கணிப்பது மாதிரிதான். இதைப் புரிஞ்சுகிட்டு செயல்பட்டால் கமர்ஷியல் சினிமா வழியாக மாற்றங்களை உருவாக்க முடியும்னுதான் தோணுது. அந்த வகையில் நான் எம்.டி. வாசுதேவன் நாயரையும், ராஜேந்தர்சிங் பேதியையும், பத்மராஜனையுமே எனது முன்னோடிகளாகக் கருதுகிறேன்.”

நிறைய இந்திய இயக்குனர்களது பெயர்களையும், உலக எழுத்தாளர்களது பெயர்களையும் உதிர்த்திருக்கிறார். நல்லது. தான் செயல்படும் ‘பாபா’, ‘ஆல்பம்’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட படங்களில் செயல்படுவதற்காக ஒரு பாதுகாப்பு வளையத்தை அவர் உருவாக்குகிறார் என்பது இதில் தெளிவாக நமக்குப் புலப்படுகிறது. அது அவர் தேர்வு. அவரே சொல்கிற மாதிரி: “இலக்கியவாதிகள் அரசு அலுவலகத்தில் வேலை செய்யலாம், பெட்டிக்கடை வச்சிருக்கலாம், புரோக்கர் தொழில் செய்யலாம், வட்டிக்கு விடலாம், வங்கியில் பணியாற்றலாம். அப்போதெல்லாம் அவங்க தனித்துவம் இழக்கிறதில்லை. சினிமாவுக்கு வந்தவுடன் மட்டும் தங்களோட தனித்துவத்தை இழந்துடறாங்கனு சொல்றீங்களா? இலக்கியவாதிகளை சுற்றி இப்படி பூசப்படும் புனிதங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை”.

புரோக்கர் தொழில், வட்டிக்குவிடுதல் மாதிரி, சினிமாவுக்கு வருவதையும் இலக்கியவாதிகள் செய்யலாம் என்கிறார். அதுவும் நல்லது. அதுவும் அவரது தேர்வு. நம்முடைய பிரச்சினைலெல்லாம், அவர் தேர்ந்துகொண்ட ஒரு நிலைபாட்டுக்காக மிகச்சிறந்த ஆளுமைகளையெல்லாம் கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான். அவர்களது சினிமா பங்குபற்றலையும் கொச்சைப்படுத்துகிறார் என்பதுதான். முதலாவதாக பொழுபோக்கு சினிமா, ஜனரஞ்சக சினிமா, கமர்சியில் சினிமா, வெகுமக்களின் சினிமா என்பது அடிப்படையில் வேறு வேறான கருத்தாக்கங்கள். இவை அனைத்தையும் எஸ்ரா தனது நிலைபாட்டுக்காக ஒரே அர்த்தத்தில் பாவிக்கிறார். பொழுதுபோக்கு சினிமாவும் கமர்சியல் சினிமாவும் வேறு, ஜனரஞ்சக சினிமாவும் வெகுமக்கள் சினிமாவும் வேறு. பொழுதுபோக்கு சினிமாவும் கமர்சியல் சினிமாவும், சமதளத்தில் எந்த தீவிரமான அக்கறையும் அற்ற வெறுமனே பொருளியல் நோக்கத்திற்காகச் செய்யப்படுபவை. வால்ட்டர் பெஞ்ஜமின் சொல்கிற மாதிரி ‘இயந்திரகதியில்’ உருவாகிற ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் ‘தொழிற்சாலைப் பண்டங்கள்’ இவைகள்.

ஆனால், ஜனரஞ்சகம் எனபதும் வெகுமக்கள் சினிமா என்பதும் வெகுமக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்கள். வெகுமக்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்கள், அவர்களது அனுபவங்கள் மற்றும் நினைவுகளை (நன்மை-தீமை, மூடத்தனம்-எதிர்நலை) முன்வைப்பவைகளாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களால் விரும்பி உள்வாங்கப்படும். வெகுமக்கள் சினிமாவும் ஜனரஞ்சகப் படங்களும் கலைப்படங்களாகவும் இருக்க முடியும். பொருளியல் ரீதியில் வெற்றிபெற்ற படங்களாகவும் இருக்க முடியும். கறாராக ஒரு விஷயத்தை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ‘பொழது போக்குப்படங்கள்’ என்பது நிச்சயமாக மக்களின் விருப்பு வெறுப்பை முன்வைத்து உருவாக்கப்படுதில்லை மாறாக அவர்கள் மீது ‘இதுதான் ரசனை’ எனத் திணிக்கப்பபடுகிறது. பொழுதுபோக்குப் படம் தொடர்பான வெகுஜன ரசனையை யார் உருவாக்குகிறார்கள் என்பது இங்கு மிக முக்கியமான கேள்வியாக ஆகிறது.

எஸ்.ராவின் குழப்பம் எங்கு நிலை கொண்டிருக்கிறது? அவர் சினிமாவை இரண்டாக மட்டுமெ பிரப்பதில் கலைப்படம், பொழுது போக்குப்படம், எனப் பிரிப்பதில் நிலைகொண்டிருக்கிறது. நன்மை- தீமை, அடிமைத்தனம்-விடுதலை, சமரசம்-எதிரப்பு, போன்ற மனித அறம் சார்ந்து திரைப்படங்களை பிரிக்க வேணடிய யுகத்தில் நாம் இருக்கிறோம். கலை வாழ்வைப் பற்றியது என்பதால், சமவேளையில் ஒரு வலதுசாரிக் கலைஞனும் இடதுசாரிக் கலைஞனும் வாழ்வை உக்கிரமாக ஆவணப்படுத்த முடியும். அதைப்போலவே, வெகுமக்கள் படம் என்பதனையும் சரி, பொழுது போக்குப் படம் என்பதனையும் சரி, நாம் நன்மை –தீமை எனும் அறத்தின் அடிப்படையில் பிரித்துப் பாரக்க முடியும்.

நிலைமை கொஞ்சம் சிக்கலானதுதான். கலை எனும் அளவில் திரைப்படத்தில் செர்ஜி ஐஸன்ஸ்டைனது ‘போர்க்கப்பல் போதம்கின்’ எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே அளவு பாசிசக் கலைஞரான லெனி ரீப்செந்தாலினது ‘பரேடு’ படமும் முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டும் வேறு வேறு வகைகளில் வாழ்வை ஆழமாகச் சென்று பார்த்திருக்கிறது. இரண்டும் கலை ஆவணங்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், ஒன்று தீமையின் கலை. மற்றது அதற்கு எதிரான விடுதலையின் கலை. இதைப்போலவே தான் அது கமரிசியல் ஆனாலும், பொழுதுபோக்கு ஆனாலும் வெகுமக்கள் சினிமா ஆனாலும், அவற்றிலும் பல்வேறு நிலைகளில், நன்மை- தீமை மற்றும் அடிமைத்தனம்-விடுதலை என செய்திகளை வெளியிடும் படைப்புகள் இருக்கின்றன.

சினிமாவையும் சரி, பொதுவாகப் பல்வேறு படைப்பு நிலைகளையும் சரி, கலைப் படைப்புக்கள் பொழுது போக்குப் படைப்புகள் என வரையறை செய்த காலம் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. சினிமா வரலாற்றை நாம் எடுத்துக் கொண்டால், கலை சார்ந்தவை வாழ்வுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பது ஒரு காலகட்டம் வரை உண்மைதான். கலைஞர்கள் அன்று அறம் குறித்துப் பேசுகிறவர்களாகவும், பிரபஞ்ச மதிப்பீடுகளை முன்வைப்பவர்களாகவும், மனித உரிமைகள் குறித்தப் பேசுபவர்களாகவும் இருந்தார்கள். இவர்களது திரைப்படங்கள் ஆன்ம தரிசனத்தடன் கடப்பாட்டுணர்வுடன் இருந்தன. இந்தக் காரணத்தினால் இவர்கள் எடுத்த திரைப்படங்கள் தீமைக்கு எதிராகவும் வாழ்வுக்கு அருகிலும் இருந்தன.

ஆனால், இன்று பாசிசக் கலையும் இருக்கிறது விடுதலைக் கலையும் இருக்கிறது. வலதுசாரிகளின் கலையும் இருக்கிறது. இடதுசாரிகளின் கலையும் இருக்கிறது. அது போலவே, சகலவிதமான பொழுதுபோக்கு வடிவங்களிலும் வலதுசாரிப் பொழுது போக்கும் இருக்கிறது இடதுசாரிப் பொழது போக்கும் இருக்கிறது. பொருளியல் ரீதியில் வெற்றிப் படங்கள் அனைத்தும் பொழுதுபோக்குப் படங்கள் அல்லது கமர்சியல் படங்கள் அல்லது வாழ்வை விட்டு விலகிய படங்கள் எனச் சொல்ல முடியாது. கிரேக்க மார்க்சிஸ்ட் இயக்குனர் தியோ ஆஞ்ஜல பெலோஸின் ‘தி டிராவலிங் பிளேயர்ஸ்’ திரைப்படம், கிரீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்ற, வசூலை அள்ளிக்குவித்த படம். அதி அற்புதமான கலைப்படைப்பாக அது இருக்கிறது. நிஹ்லானியின் ‘1084 ஆம் எண்ணின் அன்னை’யிலிருந்து அவரது பெரும்பாலுமான படங்கள் பொருளாதார ரீதியில் வெற்றி ஈட்டிய படங்கள்தான்.

மேலாக, குரஸோவாவின் ‘செவன் ஸமுராயை’ எந்த வகையில் நாம் வைக்க முடியும்? கலைப்படம் என்றா கமர்சியல் படம் என்றா? சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தை நாம் எங்கு வைப்பது? அது கலைப்படமா அல்லது கமர்சியல் படமா? தங்கர்பச்சானின் ‘அழகி’யை எங்கு வைப்பது? கலை மற்றும் கமர்சியல் என்று நிர்ணயிப்பது என்பது அபத்தமாகவே இருக்கும்.

இன்று நல்ல படங்கள் அல்லது கெட்ட படங்கள் என்ற இரு பிரிவுகள்தான் உண்டு. வாழ்வின் அடிப்படையிலும் அறத்தின் அடிப்படையிலும்தான் இன்று படங்களைப் பிரிவினை செய்ய வேண்டுமேயொழிய, வெறும் கலை அனுபவம் எனும் வழியில் மட்டும் பிரிவினை செய்வது ஒரு வகையில் அப்பட்டமான மோசடிப் பார்வையாகவே இருக்கும். ஆதிக்கமும் விடுதலையும் குறித்த அவதானங்களை இல்லாததாக்குவதாகவே இந்நிலைபாடு இருக்கும்.

மேலாக, எஸ்ரா பட்டியலிடுகிற எழுத்தாளர்கள் மார்க்வசிலிருந்து போர்ஹே வரை எந்தக் காலத்தில் என்ன மாதிரியான ஜனரஞ்சகப் படங்களை அல்லது பொழுது போக்குப் படங்களை சாகசப் படங்களை எடுத்தார்கள் என்பதையும் அவர் நாணயமாக நிறுவிக் காட்ட வேண்டும். மார்க்வஸின் கதைகளை அடிப்படையாக் கொண்ட படங்கள், ‘எரிந்திரா’விலிருந்து ‘எ குரோனிக்கல் ஆப் டெத் போர் டோல்டு’ வரை, அவரது அனைத்துப் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். எஸ்.ரா சொல்கிற மாதிரியான கமர்சியல் படங்கள் அல்ல அவை. இலத்தீனமெரிக்க தொலைக்காட்சிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட ‘லோ பட்ஜெட்’ படங்கள்் அவை. ரஜினிகாந்தின் படங்களும் விஜயின் படங்களும் சாகசப் படங்களாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கும் ஒரு சூழலில், போர்ஹே பற்றி சாசகப்படம் எடுத்தார் என, எஸ்.ரா இப்படிப் பேசுவது படு அபத்தமும் மோசடித்தனமானதுமாகும்.

அனைத்துக்கும் மேலாக, எஸ்.ரா ஆதாரமாகக் காட்டுகிற எந்தப் படைப்பாளியும் எழுத்தாளனும் இயக்கிய அல்லது பங்கு பெற்ற படங்களில் ஒன்று போலாவது இதுவரை எஸ்ரா வசனம் எழுதிய படங்கள் இல்லை. அளவுக்குத் தைக்கிற தையற்காரனின் நிலைதான் வசனங்களை எழுதுகிற எஸ்.ராவின் அல்லது ஜெயமோகனின் நிலையாக இருக்கிறது. இந்நிலையில் தனது கமர்சியில் சினிமா நிலைபாட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் அவர் இவ்வாறு கொச்சைப்படுத்துவது கொஞ்சம் அதிகம்தான் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

சர்வதேச அளவில் நமது சினிமா செல்லாததற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு எஸ்.ரா பதில் சொல்கிறார் பாருங்கள்: “இதுவரை உலக சினிமாங்கிறது திரைப்பட சங்கங்களுக்கு மட்டும்தான் அறிமுகமாகியிருந்தது. தமிழின் முக்கிய இயக்குனர்களில் பலர் உலக சினிமா பரிட்சயம் இல்லாமதான் இருந்திருக்காங்க. அத்தோடு சினிமாங்கிறது ஒரு வணிகம் என்கிற அளவில் மட்டுமே இங்க பிராதனப்படுத்தப்பட்டிருக்கு. அதுக்கு வெளியே உள்ள திரைப்பட விழாக்கள் பற்றியோ, வெளிநாட்டு விநியோகம் பற்றியோ நாம் அதிகம் யோசிக்கலை. ஒரு வருஷம் வெளியாகிற தமிழ்படங்களில் ஒன்று ரெண்டு கூட வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்பதில்லை.

இன்னொரு பக்கம் சர்வதேச சினிமாவுக்கு கொண்டு செல்வதற்கான உந்துதலும் பொருளாதார உதவிகளும் கிடைக்கிறதில்லை. டி.வி.டி. வந்தபிறகு இப்போதுதான் உலக சினிமா பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருக்கு. இவ்வளவு ஏன், உலகப்பட விழாக்கள் நடத்தப்படுவதே சென்ற இரண்டு வருஷமாகத் தான் நடக்கிறது. திரைப்படத்துறை குறித்த முறையான கல்வி நிலையங்கள், ஆய்வுகள், பயிலரங்கங்கள், தீவிரமான திரைப்பட இதழ்கள் இல்லாததும் குறையென்றே சொல்வேன். தமிழில் ஆயிரக்கணக்கில் திரைப்படங்கள் வெளியாகியிருக்கு. ஆனால், அதற்கென்று தனியான ஆவணக் காப்பகம் கிடையாது. முதலில் அதையாவது செய்ய நாம் முயற்சி எடுக்கணும்.”

எஸ்.ரா வேற்றுக் கிரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மாதிரி இங்கு பேசுகிறார். உலக சினிமாக்கள் என்று எதை எஸ்.ரா சொல்கிறார். ஈரானியப் படம் என்பது தெருக்களில் ஓடுவதை அப்படியே படமெடுப்பது என்று தான் தமிழ் சினிமா இயக்குனர் புரிந்திருக்கிறார். கானாப் பாட்டு போட்டுவிட்டால் அது விளம்புநிலை மக்கள் படம் என இன்னொரு இயக்குனர் நினைக்கிறார். உலக சினிமா என்றால் அதில் ஹாலிவுட் சினிமா, ஐரோப்பிய சினிமா, மூன்றாமுலக சினிமா என நிறைய வகையினங்கள் இருக்கிறது. இந்தப் படங்களில் எதனது பாதிப்பில் எந்த இயக்குனர் உருப்படியாக ஒரு யதார்த்தமான படம் கொடுத்திருக்கிறார்? எஸ்.ரா. செய்து கொண்டிருக்கிற இன்னுமொரு மிகப்பெரிய மோசடி இதுதான். இங்கு சினிமா இதழ்கள் இல்லை என்கிறார். பட்டறைகள் இல்லை என்கிறார். ஆய்வுகள் இல்லை என்கிறார்.

பச்சைப்பொய்கள். இவரும் சரி, தியோடார் பாஸ்கரனும் சரி, தங்களுக்கு வெளியில் எதுவும் நிகழவில்லை என்பதை ஸ்தாபித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். தீவிரமான சினிமா நூல்களென தமிழில் நூற்றுக்கும் மேலான நூல்கள் இருக்கின்றன. திரைப்பட இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. இப்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று பெரும்பாலுமான கல்லூரிகளில் திரைப்படம் ஒரு துறையாக இருக்கிறது. திரைப்படத்திற்கென தனியார் கல்லூரிகளும் தோன்றியிருக்கிறது. இடதுசாரிகளால் திரைப்படப் பட்டறைகள் தமிழகத்தின் ஊர்தோறும் நடத்தப்படுகிறது. 3000 தமிழ் குறும்படங்கள் விவரணப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் எதுவுமே நடைபெறாத மாதிரியான ஒரு பாவலாவை எஸ்.ராவும் தியோடார் பாஸ்கரனும் முன்வைக்கிறார்கள்.

இவர்கள் இவ்வாறு முன்வைப்பதற்கான காரணம்தான் என்ன? இவர்களது பிரதான நீரோட்ட அல்லது அதிகார மைய அல்லது கல்வித்துறைசார் மட்டங்களுக்கு வெளியில் இந்த முயற்சிகளும் செயல்பாடுகளும் நடந்து வருகிறன. இந்த நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் மேலேடுத்துச் செல்பவர்கள் விளம்புநிலையாளர்கள், இடதுசாரிகள் மற்றும் தலித்துகள். இந்தக் காரணங்களால்தான் இவர்கள், இவ்வாறான ஒரு போக்கு மிக வேகமாக வளர்ந்து வருவதை பரந்துபட்ட தங்கள் மட்டத்தில் முன்வைப்பதில்லை.

சர்வதேச திரைப்பட விழாக்கள் குறித்த விழிப்புணர்வு தமிழில் உருவாகி வருவதாக சொன்னீர்கள். அதற்கான உதாரணம் ஏதேனும் சொல்ல முடியுமா? எனும் கேள்விக்கு அவர் பதில் சொல்கிறார்: “போன வருஷம் மணிரத்னம், பாலா, பாலாஜி சக்திவேல், அமீர் என்று தமிழின் முக்கிய இயக்குனர்களோட படங்கள் பல்வேறு உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்றிருக்கு. தற்போது ஹிந்தி படங்களுக்கு உலக அளவிலான ஒரு சந்தை உருவாகியிருக்கு. அதுவெறும் வணிகரீதியான சந்தை மட்டுமல்ல. திரைப்பட தயாரிப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரை அதனால் எவ்வளவோ சாதிக்க முடியும். அதேமாதிரி ஒரு நிலை தமிழ் சினிமாவில் உருவாக தனிநபர்களைவிட மொத்த திரைப்படத் துறையும் துணை நிற்கவேண்டிய அவசியமிருக்கிறது.”

இன்றைய திரைப்பட விழாக்களின் தகைமை பற்றி ஏற்கனவே நிறையச் சொல்லிவிட்டோம். உலக சினிமாவின் மேதைகள் என்று சொல்லப்படுபவர்கள் யதார்த்தவாத சினிமாவை வழங்கிய மேதைகள்தான். தீமைக்கு எதிரான விடுதலை நோக்கிய உலகைப் படைத்தவர்கள் தான் அவர்கள். வாழ்வுக்கு அருகில் திரைப்படத்தை எடுத்துச் சென்றவர்கள் அவர்கள். இவர்கள் படங்களோடு எஸ்.ரா குறிப்பிடுகிறவர்களின் படங்களை ஒப்பிட முடியாது. இன்னும் ஜெயகாந்தன், ருத்ரய்யா, ஹரிஹரன், மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்களின் தளங்களைக் கூட, எஸ்.ரா குறிப்பிடுபவர்களின் படங்கள் தாண்டவில்லை. ஒரு வகையிலான மனோரதியமான படங்கள்தான் இவை. யதார்த்தத்தின் கூறுகள் இப்படங்களில் இருக்கின்றன. அதற்காக இவைகள் உலகத்தரமான படங்கள் எனச் சொல்ல முடியாது.

இந்திப் படங்களுக்கு உருவாகியிருக்கும் சந்தை இரண்டு வகையிலானது. புலம் பெயர்ந்த இந்தியர்களைக் கதாபாத்திரமாகக் கொண்டு, புலம்பெயர்நாடுகளில் வாழ்கிற இந்தியர்களையும் அவர்களது பொருளாதாரத்தையும் இலக்கு வைத்துக்கொண்ட ஒரு வகைப்படங்கள் தற்போது உருவாகி வருகின்றன. அமு முதல் ஸ்வதேஸ், லகான் முதலிய படங்களோடு, நாகேஸ் குக்குனூர், ராம் கோபால்வர்மாவின் ‘நிசப்த்’ உள்பட்ட படங்கள் இந்த மாதிரிப் படங்கள்தான். பிறிதொரு வகையிலான இந்திப் படங்களின் ஏற்றுமதியை அம்பானியின் ‘அட்லாப்’பும் அமிதமாப்பச்சனும் செய்கிறார்கள். முற்றிலும் வியாபார நோக்கங்கள் கொண்ட, எந்தவிதமான கலை நோக்கங்களும் அற்றது இவர்களது திரைப்பட விழாக்கள்.

மேலாக, எஸ்.ரா. உலக சினிமா என ஒரு நூல் கொண்டு வந்திருக்கிறார். நூலின் முகப்பில் தனது பெயரைப் போட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒரு பதிப்புத்துறை மோசடி என்றே சொல்ல வேண்டும். பல்வேறு நபர்களின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் பங்களிப்புகளும் கொண்ட தொகுப்பு நூல் அது. பெரும்பாலும் அவர் இணையத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அந்த நூல் எஸ்.ரா. எனும் தனிப்பட்ட ஆளுமையின் நூல் அல்ல. அவர் தொகுப்பாளராக இருந்திருக்கிற ஒரு நூல். அந்தத் தகுதி மட்டுமே அவருக்கு உண்டு. மாறாக, அவர் உலக சினிமா பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிற மாதிரியான ஒரு தோற்றத்தினை ஏற்படுத்தியிருக்கிறார். இது ஒரு மிக மோசமான முன்னதாரணம் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.

சினிமா விமர்சனம் என்பது தியோடார் பாஸ்கரனைப் பொறுத்த அளவில் இன்னும் ஐம்பதுகளிலேயே இருக்கிறது. சினிமா என்பது இன்று ஐரோப்பிய ஹாலிவுட் சினிமா மட்டுமல்ல, மூன்றாமுலகிலிருந்து அற்புதமான திரைப்படங்களை உன்னதமான இயக்குனர்கள் கொடுத்து வருகிறார்கள். நிலவிய திரைப்படக் கோட்பாடுகளை அவர்கள் தலைகீழாகக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலாக தியோடார் பாஸ்கரன், தான் ஒரு விமர்சகர் அல்ல என்பதையும் அவர் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு விமர்சகனுக்கு இன்று கருத்தியல் தேர்வும் அரசியல் கடப்பாடும், தேர்ந்தெடுத்துக் கொண்ட ஒரு முறையியலும் வேண்டும். ‘எமர்ஜென்ஸி’ என்ற வார்த்தையைக் கேட்டே கிலி கொண்ட தியோடார் பாஸ்கரன் போன்றவர்கள் விமர்சனம் பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதுதான் நல்லது.

அம்ஸன்குமார் ‘தமிழில் மாற்றுச் சினிமா: நம்பிக்கைளும் பிரமைகளும்’ எனும் எனது நூலுக்கு ‘நிழலில்’ மதிப்புரை எழுதியவர். தியோடர் பாஸ்கரன் என்னுடைய மணிரத்தினத்தின் சினிமா நாலுக்கு ‘இந்தியா டுடேயில்’ மதிப்புரை எழுதியவர். ஏறக்குறைய 500 பக்கங்கள் தமிழ் சினிமா பற்றிய கட்டுரைகள் கொண்ட, ஐம்பதாண்டு கால தமிழ்சினிமா குறித்த இரு நூல்களை இருவரும்தான் மதிப்பீடு செய்திருக்கிறார்கள். அவரும் பங்கு கொள்ளும் தியோடார் பாஸ்கரனுடனான ‘காலச்சுவடு’ நேர்முகத்தின் கேள்வி பதில் கீழ்வருமாறு இருக்கிறது.

கேள்வி: உலக சினிமா குறித்துத் தமிழில் பல புத்தகங்கள் வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகம்கூட வரவில்லை. இது குறித்து நீங்கள் எந்த அளவு யோசித்திருக்கிறீர்கள்?

தியோடர்: தமிழ் சினிமாவைக் குறித்துப் பேசுவதற்கான கலைச் சொற்களே இங்கு இல்லையே. ஒரு துறை சார்ந்து ஆழமான பரிசீலனைகள் நிகழ வேண்டுமானால் அதற்கான வளமான சொல்லாடல்கள் அந்த மொழியில் இருக்க வேண்டும். இலக்கியம் குறித்து நடந்துவரும் விவாதங்களிலிருந்து உருப்பெற்றிருக்கும் சொற்கள்தாம் அது குறித்த ஆழமான விவாதங்களுக்குப் பாதை அமைத்துக்கொடுத்திருக்கின்றன. தமிழ் சினிமா குறித்துப் பேசுபவர்கள் கதை, பாட்டு என்று மிக மேலோட்டமான விஷயங்களுடன் தேங்கிவிடுகிறார்கள். தமிழ் சினிமா குறித்து விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது என்னும் மனோபாவம் அறிவுத் துறையினரிடம் இருக்கிறது. ஆழமான விவாதங்களை உருவாக்காமல் செறிவான சொல்லாடல்களை உருவாக்க முடியாது. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயம்.

தமிழ் சினிமா பற்றிப் பல நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆங்கிலத்தில் வந்திருக்கின்றன. முக்கியமான ஆங்கில நூல் ஒன்று சிட்னியில் இலங்கைத் தமிழர் வேலாயுதத்தைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு உருவாகிக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற ரௌட்லெட்ஜ் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இதில் வெங்கடேஷ் சக்ரவர்த்தி, ராஜன் குறை போன்ற ஆய்வாளர்கள் இடம்பெறுகிறார்கள். வாஷிங்டனில் சினிமா போதிக்கும் லலிதா கோபாலன் இந்திய சினிமா பற்றி 24 Frames என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். 24 இயல்கள் கொண்ட இந்த நூலில் மூன்று இயல்கள் தமிழ் சினிமா பற்றியன.

எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஒரு இயல் எழுதியுள்ளார். தமிழ் சினிமா பற்றிய நூல்கள் தமிழில் குறைவுதான். அறந்தை நாராயணன், புலவர் கோவிந்தன் இவர்களுடைய நூல்கள் முக்கியமானவை. இங்கு தமிழில் ஒரு சொல்லாடலே உருவாகவில்லை. அதற்கு அடிப்படையான கலைச்சொற்களும் உருவாக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக, develop (the film) என்ற சொல்லுக்கு என்ன தமிழ்ச் சொல்? அரசு விளம்பரங்களில் 'பதனிடுதல்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தோலைத்தான் பதனிடுவார்கள். பழைய பத்திரிகைகளில், நிழற்படம் பற்றிய கட்டுரைகளில் 'உருத்துலக்கல்' என்கிறார்கள். பொருத்தமான சொல்.

தமிழ் சொல்வளம் மிகுந்த மொழி. ஆகவே நாம் துறைச் சொற்களை உருவாக்க முடியும். ஆங்கில மொழியில் இந்தப் பிரச்சினையை, பிரெஞ்சு சொற்களை அப்படியே பயன்படுத்திச் சமாளித்தார்கள், Montage, mise en scene, film noir, cinema verite என. ஏன் பிரெஞ்சு மொழி? சினிமா பிறந்த பிரான்ஸில் தொடக்கத்திலேயே சினிமா ஒரு கலை வடிவமாகப் படித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது குறித்த துறைச் சொற்கள் உருவாயின. சீரிய சொல்லாடல் மௌன சகாப்தத்திலேயே உருவானது. வரலாற்றில் இடம்பெற்ற Abel Gance, Napoleon (1927) போன்ற படங்கள் மவுனப் படங்கள் தாம்.

தமிழில் சினிமா பற்றிய கலைச் சொற்கள், சினிமா சார்ந்த கருதுகோள்களைக் குறிக்கும் சொற்றொடர்கள் இல்லாதது இதைப் பற்றிய சீரிய சொல்லாடல் உருவாகாததற்கும் நூல்கள் வெளிவராததற்கும் முக்கியக் காரணம். சில பத்திரிகைகளில் சினிமா பற்றிய கட்டுரைகள் இப்போது வர ஆரம்பித்துள்ளது நல்ல அறிகுறி. ஆயினும் துறைச் சொற்கள் புழக்கத்தில் வராதது பெரும் குறை. துறைச் சொற்கள் இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தோடு சிலம்பமாடுவது போன்றது.

தமிழ் சினிமா பற்றிப் பல M.phil., Ph.D., ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 'திரைப்பாடல்களில் ஜாதி', 'தமிழ் சினிமாவில் பெண்ணியம்' என. இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது. இந்த ஆய்வுகளும் தமிழ்த் துறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பாட்டுப் புத்தகத்தையும் வசனத்தையும் வைத்துச் செய்யப்படும் ஆய்வுகள் இவை.”

தமிழ் சினிமா குறித்து ஒரு புத்தகமும் வரவில்லை என்கிறார்கள் கேள்வியாளர்கள். தமிழ் சினிமா பற்றி முதலில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிய தியோடார் பாஸ்கரன் பதில் என்ன? எம்.எஸ்.பாண்டியன், ராஜன்குறை, வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்றோர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள், அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவினரால் தொகுத்து ‘ரூட்லெஜ்’ பதிப்பகம் வெளியிடும் புத்தகம் என அழுத்தம் கொடுத்துப் பேசுகிறார். ஓன்று அவர் எழுதியிருக்கிறார் மற்றது ஆங்கிலத்தில் வரவிருக்கிறது. போனால் போகிறது என்று அறந்தை நாராயணனுக்கு ஒரு சான்றிதழ் தருகிறார். பா.திருநாவுக்கரசு, விட்டல்ராவ், செம்புலம் தங்கர்பச்சான், யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதியிருப்பதெல்லாம் என்ன? புண்ணாக்கு பற்றிய கணக்கு வழக்குகள் என அம்ஸன்குமாரும் தியோடார் பாஸ்கரனும் கருதினார்கள் போலும். அரசுப் பதவியில் இருந்தவர்களும் பல்கலைக்கழகங்களும் வெளியிட்டால்தான் அது ஆவணங்கள் ஆகும் போலும். இது ஒரு வரலாற்று மோசடி என்பதைப் பணிவுடன் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

தமிழ் சினிமா ஆய்வுகள் பற்றி நக்கல் பண்ணுவதற்காக பாஸ்கரன் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புக்களைப் பாருங்கள். “திரைப்பாடல்களில் ஜாதி”, “தமிழ் சினிமாவில் பெண்ணியம்” என இவைகளைப் படித்தீர்களேயானால் அவை இலக்கிய ஆய்வுகள் என்பது புலப்படும். அவற்றில் சினிமா ஒரு துளியும் இருக்காது” என்கிறார் பாஸ்கரன். சரி. இப்போது பெண்ணியம் குறித்தும் சாதியம் குறித்தும் விவரணப்படங்களும் குறும்படங்களும் ஆயிரக்கணக்கில் தமிழில் உருவாகியிருக்கிறது. அது பற்றி தியோடார் பாஸ்கரனோ அல்லது எஸ்.ராமகிருண்ணனோ ஏன் மூச்சக்காட்டுவதில்லை? இவர்களைத் தாண்டிய ஒரு சினிமாவும், சினிமா விமர்சனமும், வரலாறு எழுதுதலும் தமிழில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் பதிய வேண்டும் எனும் கோபம் காரணமாகவே சொற்களும் கோபமாக வந்து விழவேண்டியிருக்கிறது.

அரசியல் என்று சொல்வதே ஏதோ கட்சி அரசியல் போலவும், கருத்தியல் என்று சொன்னால் ஏதோ நிலவிய ஸ்டாலினிய வகைப்பட்ட சோசலிசம் போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு, நாம் முன்வைக்கிற ‘அரசியலையும் கருத்தியலையும்’ உள்வாங்குவது கொஞ்சம் கடினம்தான். நாம் பேசுகிற அரசியல் ¿¼ìÌõ «ì¸¢ÃÁí¸ÙìÌ-தீமைக்கு எதிரானது குறித்த அரசியல். விமர்சன மார்க்சிய அரசியல். நாம் பேசுகிற கருத்தியல் அறம் சார்ந்த கருத்தியல். தெரிதா பேசும் எதிர்கால அறம் சார்ந்த கருத்தியல். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போரில் நாம் தீமைக்கு எதிராக நிற்கிறோம். அறத்திற்கும் துவேசத்திற்கும் இடையில் நாம் அறத்தின் பக்கம் நிற்கிறோம். .

குறிப்பாகச் சொல்வதானால், அதிகாரத்திற்கு எதிராக விடுதலையின் பக்கம் நாம் நிற்கிறோம். ஆகவேதான், ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படமெடுத்த இத்தாலியரான ஜில்லோ பொன்டகார்வோ தனது இறுதி நாட்களில் ‘முதலாளித்துவத்திற்கு எதிரான இயக்கத்திற்கு’ ஆவணப்படம் எடுத்தவராக இருந்தார். போலந்தில் ஸ்டாலினியத்தை விமர்சித்து அரசியல் படங்களை உருவாக்கிய கீஸ்லாவஸ்க்கி இதே காரணத்திற்காகத்தான், அயர்லாந்து விடுதலை பற்றிப் பேசும் கென்லோச்சடன் சேர்ந்து படம் எடுப்பதுதான் தனது கனவு எனச் சொன்னார். அறுபதுகளில் எத்தனை மேதைமையோடு மாவோயிஸட்டுகள் குறித்து கோதார்த் படமெடுத்தாரோ அதே மேதைமையுடன்தான், இன்றும் கோதாரத் இஸ்ரேலினது ஒடுக்குமுறை குறித்த, பொஸ்னிய மனித உரிமை மீறல் குறித்த படமெடுக்கிறார்.

இயக்குனர் மேதைகள் அல்லது ‘மாஸ்டர் பிலிம்மேக்கர்ஸ்’ என்று சொல்லப்படுகிற எல்லா திரைப்பட மேதைகளும் யதார்த்தவாதத்தை முன்வைத்த திரைப்பட மேதைகள்தான். பின்நவீனத்துவம், அந்தத்துவம், இந்தத்துவம் என்று எவர் பேசினாலும், கலை என்பது வாழ்வை மிக அருகில் சென்று, பூச்சுக்கள் அகற்றிப் பார்ப்பதும், தரிசனங்ளை யதார்த்தத்திலிருந்து மக்கள் முன் படைப்பதும் என்றுதான் பேசவேண்டியிருக்கிறது.

இன்று உலகமயமாதல் போக்கிலும், கணிணிமயமான இணைய உலகிலும் அனைத்தும் காரியவாதமாகவும் காசு பார்க்கும் வேலையாகவும் ஆகியிருக்கிறது. அறிவையும் கலைமுயற்சிகளையும் கூட ஒருவர் தனது நிலைபாட்டுக்குச் சாதுரியமாக வளைத்துவிட முடியும். இவர்கள் வெகுஜன ஊடகங்களிலும், அதிகாரமிக்க இடங்களிலும், கல்வித்துறை சார்ந்த இடங்களிலும் இருப்பதன் மூலம் கீழ்மட்ட சமூகத்தில் நடக்கிற அல்லது தமது விருப்பார்வம் இல்லாத தளங்களில் நடக்கிற அனைத்தையம் இல்லாமல் செய்கிற காரியங்களையும் ஆற்ற முடியும். தமிழ் சினிமா விமர்சனச் சூழல் இவ்வாறுதான் இருக்கிறது. பன்முக உலக சினிமா குறித்த அறிவு இல்லாத நிலையிலும் சினிமாக் கோட்பாடுகளினிடையிலான மோதல்களை அறியாத நிலையிலும், வெறுமனே குறிப்பிட்ட வரலாறு மட்டுமே தெரிந்த ஒருவர் இங்கு தன்னை அதிகாரப்பூர்வ விமர்சகர் ஸ்தானத்தில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடியும். பிறரது உழைப்பினைத் தன்பெயரில் போட்டுக்கொள்கிறவர்கள் இங்கு மிகப்பெரிய சினிமா அறிஞர்களாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்ள முடியும்.

இவர்களது எழுத்துக்களில் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் நடந்து வந்திருக்கும் மாற்றுச் சினிமா முயற்சிகளின் முக்கியமான வகையினமான விவரணப்படம் மற்றும் குறும்படத் தளத்தில் நடந்திருக்கும் மாற்றங்களைப் பதிவு செய்ததைப் பார்க்கவே முடியாது. கோதார்த் சொன்னமாதிரி, காகிதமும் பேனாவும் போல காமெரா எனும் கருவி இன்று ஆகியிருக்கும் சூழலில், சமூக நடவடிக்கையின் அங்கமாக ஆகியிருக்கும் சினிமாவை அங்கீகரிப்பதில் இவர்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருக்கிறது. அரசியல் சாரா அறிவுஜீவிகளாகவும், அரசியல் கடந்த கலை விற்பன்னர்களாகவும், அழகியல் மேதைகளாகவும் தம்மை முன்னிறுத்தி, இவர்கள் கட்டமைக்கிற தம்மைக் குறித்த பிம்பங்கள், இவர்கள் பற்றி முழுமையாக அறிய வருகிறபோது தகர்ந்து போகும்.

ஆகவேதான், இவர்கள் தமக்கு வெளியில் நடந்து கொண்டிருக்கிற எவை பற்றியும் கருத்துச் சொல்லவோ, அங்கீகரிக்கவோ தயக்கம் காட்டுகிறார்கள். காலகாலமாக இவர்கள் மாதிரியான கலா மேதைகள் அடிநிலையிலிருந்து அடிக்கிற சூறைக்காற்றில் அள்ளுண்டுதான் போவார்கள். திட்டமிட்டு திரும்பத் திரும்பச் சில பெயர்களையே உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் விமர்சன மேதாவிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களின் முகவரியும் இவ்வாறான நிலையைத் தான் எட்டும் என்பது மட்டும் உறுதி. ஆனால் என்ன, உலக சினிமா, திரைப்படவிழா, விமர்சன அழகியல், வெகுஜனக் கலை, பொழுது போக்குக்கலை பற்றியெல்லாம் நாம் மறுபடி மறுபடி விழிப்பு நிலையுடன் மறுவரையறை செய்து கொண்டே இருக்க வேண்டும். பிரெடரிக் ஜேம்ஸன் சொன்ன மாதிரி ‘அறுதிப் பகுப்பாய்வில் அனைத்தும் அரசியல்தான்’ என்பதை நாம் சதா ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பதுதான் இன்று முக்கியமானது.


-யமுனா ராஜேந்திரன்