Monday, December 07, 2009

முதல்வருக்கு கோவணாண்டி உசுப்பல் கேள்வி...


தமிழகத்தின் தன்னிகரற்ற ஒரே தலைவர், நிரந்தர அரசியல் சாணக்கியர், தமிழக முதல்வர், கலைஞரய்யாவுக்கு... மறுபடியும் வணக்கம் போடுறான், இந்த கோவணாண்டி!

'என்னடா இவன், போன தடவைதான் சுத்திச்சுத்தி அடிச்சான். மறுபடியும் நம்மளையே சுத்தறானேனு கோவப்படாதீங்க. அதுக்கான அவசியத்தை உண்டாக்கினதே நீங்கதான். எங்க கோவணாண்டிக பாஷையில சொல்றதுனா... 'வினையை விதைச்சவன் வினையை அறுக்கணும், தினையை விதைச்சவன் தினையை அறுக்கணும்'.

'எங்க பொழப்பு பொசுங்கப் போகுது, காப்பாத்துங்க... காப்பாத்துங்க'னு ஆரம்பத்துல இருந்தே கதறுனோம். அப்பயெல்லாம் கண்டுக்காம இருந்துட்டு, கடைசியில கருமாதிக்கு வந்து மவுனமா அழுகுற கதையா... 'கேரள முதல்வர் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை'னு முல்லை-பெரியாறு விஷயத்துல அற்புதமா ஒரு அறிக்கை விட்டிருக்கீங்க பாருங்க... அங்கதாங்கய்யா... நீங்க நிக்கறீங்க... அடச்சே, உக்கார்ந்திருக்கீங்க (என்ன சரியா?).


'அணையோட நீர்மட்டத்தை உயர்த்தச் சொல்லி, உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், அதை நிறைவேற்றாம... சட்டசபையைக் கூட்டி ஒரு சட்டத்தைப் போட்டிருக்கார் கேரள முதல்வர்'ங்கறதுதானே அவரோட தைரியம்னு நீங்க சொல்றது?

அவரும் ஒங்கள மாதிரி மனுஷன்தானே... ஒங்கள மாதிரி ஒரு முதல்வர்தானே... அவருக்கு மட்டும் எங்கிருந்துங்கய்யா வந்துச்சு.. அத்தனை தைரியம்? அது ஏன்... இங்க மட்டும் இல்லாம போச்சு?

இத்தனைக்கும் கூட்டணி ஆட்சிங்கற பேருல பல வருஷமா மாத்தி மாத்தி காங்கிரஸ§ம் கம்யூனிஸ்டும் ஆண்டுக்கிட்டிருக்கற மாநிலம்தான் கேரளா. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்கிற மாதிரி, ஒரு எம்.எல்.ஏ. ஸீட் இருந்தாலே அங்கெல்லாம் பெரிய ஆளு. ஒடனே அமைச்சராயிடலாம். அந்த அளவுக்கு கோஷ்டி கானம் நிறைஞ்ச ஊரு. ஆனா, ஒரு பிரச்னைனு வந்துட்டா... அதெல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு, 'எண்ட தேசம், கேரள தேசம்'னு ஒரே குரல்ல கூவ ஆரம்பிச்சுடறாங்க.

ஆனா, இங்க என்ன நிலைமை?

'இலங்கைத் தமிழனுங்களுக்காக பதவியை ராஜினாமா பண்ணுவோம்... பாம் போடுவோம்... பட்டையைக் கிளப்புவோம்...'னு சொல்லிக்கிட்டே இருந்தோமே ஒழிய... ஒரு நாளும் துணிச்சலான நடவடிக்கையில இறங்கல.

''காவிரித் தண்ணிக்காக கர்நாடகாவை ரெண்டுல ஒண்ணு பார்ப்போம்...''

''முல்லை- பெரியாறு விஷயத்துல கேரளவுக்கு மரண அடி கொடுப்போம்''

இப்படி மூலைக்கொருத்தரா கூவிக்கிட்டிருக்கீங்களே தவிர, ஒரு நாளாச்சும் இங்க இருக்கற அரசியல் கட்சிங்கள்லாம் ஏதாவது ஒரு பிரச்னையில ஒண்ணா நின்னிருக்கோம்னு நெஞ்சுல கையை வெச்சு சொல்லுங்க பார்ப்போம்.

சமீபத்துல வந்த பார்லிமென்ட் எலக்ஷனப்ப... 'தமிழ்நாடு ஒட்டுமொத்தமா தேர்தல புறக்கணிப்போம். அதன் மூலமா நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவோம். அதுக்குப் பயந்து இலங்கைத் தமிழர்களை மத்திய அரசு காப்பாத்தும்'னு அருமையா ஒரு யோசனை வெச்சாரே 'கறுப்பு எம்.ஜி.ஆர்.' விஜயகாந்த். அதுக்கு காது கொடுத்திருந்தா... இன்னிக்கு இலங்கையில இப்படியரு ரத்த ஆறு ஓடியிருக்குமா?

ஆனா, பதவி ஆசையில ஆளாளுக்கு ஓடியாடி, கடைசியில இலங்கைத் தமிழனுங்களுக்கு சாவு மணி அடிச்சுட்டீங்க எல்லாருமா சேர்ந்து!

கிட்டத்தட்ட அதே கதைதான் இப்பவும். ஏற்கெனவே காவிரிப் பிரச்னையில எல்லாமே காலியாகிடுச்சு. இந்த முல்லை-பெரியாறு விஷயத்துலயாவது எல்லாரும் கைகோத்து நிப்பீங்னு பார்த்தா... ஆளாளுக்கு தெற்கயும் வடக்கயும் அரசியல் பண்ணிக்கிட்டு நிக்கறீங்க.

இப்படிப்பட்ட கேவலமான அரசியலையே பார்த்துப் பார்த்து வளர்ந்ததால சூடு-சொரணை, மானம்-மரியாதை இதையெல்லாம் எப்பவோமூட்டைக்கட்டி வெச்சுட்டான் தமிழ்நாட்டுக் குடிமகன். கறிக்கும்-பிரியாணிக்கும், காசுக்கும்-சரக்குக்கும் எதையும் விக்க துணிஞ்சுட்டான். ஒரு கன்னத்துல அறைஞ்சா, மறு கன்னத்தை மட்டுமில்ல... ஒடம்பு மொத்தத்தையும் காட்டிக்கிட்டு நிக்கறான்!

இவங்களையெல்லாம் இப்படி மாத்துனது யாரு? மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க. அந்தப் புண்ணியத்துல உங்களுக்கும் கணிசமான பங்கு இருக்கு.

முல்லை-பெரியாறு அணையை அழிக்குறதுக்கு திட்டம் போடுறாங்க மலையாளிகனு தெக்க இருக்க சனங்க, சம்சாரிக, அரசியல் கட்சிக, பொதுநல அமைப்புக அறிக்கை, ஆர்ப்பாட்டம்னு அலறுனதை மௌனமா பாத்துகிட்டிருந்தீங்க. முப்பது வருஷ போராட்டத்தை உச்ச நீதிமன்றத்தோட ஒரே உத்தரவு மறுபடியும் ஆரம்ப நிலைக்கே கொண்டு வந்தப்பவும் மௌனமாத்தான் இருந்தீங்க.

செய்றதெல்லாம் செஞ்சுட்டு, 'ஜனநாயக நாட்டுல உச்ச நீதிமன்றம்தான் பெருசு. அதோட தீர்ப்பைத் தடுத்து தடைச் சட்டம் போட்டு தண்ணிய தடுக்கறாரு அச்சுதானந்தன். நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பாக்குது. கண்டிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் மௌனம் சாதிக்குது. இனி யாருகிட்ட போயி முறையிடுறதுன்னே தெரியலை'னு உடன்பிறப்புக்கு உருக்கமா கண்ணீர் வுடுறீங்க.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா..? அதைப்படிச்சுட்டு ஒங்க ஒடம்பிறப்புகளே நக்கலா சிரிச்சு, சிரிச்சு வயிறே புண்ணாப்போச்சாம்.

'கேரள அரசு புதுசா சட்டம் போட்டதைக் கண்டிக்காம, பிரச்னையை அஞ்சு நீதிபதிங்க விசாரிச்சு முடிவெடுப்பாங்க'னு சொல்லிடுச்சே உச்ச நீதிமன்றம்னு கொதிச்சு போய் சொல்லியிருக்கீங்க. ஆனா, நவம்பர் 10-ம் தேதியன்னிக்கு உச்ச நீதிமன்றத்துல இப்படியரு உத்தரவு கொடுக்குறதுக்கு முன்ன, தமிழ்நாடு அரசு சார்பா வாதாடுன வக்கீல் பராசரன்கிட்ட, 'இந்த உத்தரவுக்கு ஒப்புக்கிறீங்களா’னு நீதிபதிக கேட்டிருக்காங்க. அவரு மறுத்திருக்காரு. இடையில எங்கிருந்து உத்தரவு வந்துச்சோ தெரியல... மத்தியானம் நீதிமன்றம் கூடுனதும் 'ஒப்புக்குறோம்'னு சொல்லி, முல்லை-பெரியாறு விஷயத்துக்கு மங்களம் பாடியிருக்காங்க நம்ம ஆளுங்க. காலையில, 'ஒப்புக்க மாட்டேன்'னு சொன்னவரு, மதியம் எப்படி ஒப்புக்கிட்டாரு?

இப்ப இவ்வளவு வேதனைப்பட்டு முழம் நீளத்துக்கு அறிக்கையை விட்டுக்கிட்டிருக்கற நீங்க, அன்னிக்கே 'ஒப்புக்க முடியாது'னு சொல்லியிருக்க வேண்டியதுதானே..? அதைவிட்டுட்டு, இப்ப அழுது புலம்புறது யாரை ஏமாத்த..?

'விட்டு கொடுத்தவங்க, கெட்டுப் போறதில்லை’னு சொலவடை சொல்வாங்க. ஆனா, விட்டுக் கொடுத்ததால கெட்டுப் போன வரலாறுதான் தமிழகத்தோட வரலாறு. 1956- ல தமிழ்நாட்டுக்கு முதலமைச்சரா இருந்த காமராஜர் இந்திய தேசியம் பேசிகிட்டிருந்ததால தமிழ்நாட்டுல இருந்த தேவிகுளம், பீர்மேடு இதெல்லாம் நம்மை விட்டு போயிடுச்சு. இப்படி கைவிட்டு போன பகுதியில மட்டும் சின்னதும், பெருசுமா இருபதுக்கும் மேல வற்றாத ஆறுக இருக்கு. இப்ப இந்த தண்ணி முழுசும் வீணா அரபிக் கடலுக்குத்தான் போகுது.

1980-ல முதலமைச்சராயிருந்தா எம்.ஜி.ஆர்., தமிழ்நாட்டு போலீஸ்கிட்டயிருந்த முல்லை-பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை, கேரள போலீஸ§க்கு தாரை வார்த்தாரு. இப்ப என்னாச்சு..? நம்ம இன்ஜினீயரையே அணைக்குள்ள நுழைய விடாம துரத்தியடிக்குது கேரளா.

உச்ச நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் அணையோட மட்டத்தை உயர்த்தறதுக்குண்டான வேலைகளைப் பார்க்காம, தேர்தல்ல ஜரூரா இருந்தாங்க கொடநாட்டு அம்மா. இப்ப என்னடான்னா... 'எல்லாத்துக்கும் காரணம் கருணாநிதிதான்' விடிஞ்சா, பொழுதுபோனா கூப்பாடு போடுறாங்க.

'பிறக்கும் குழந்தை இறந்து பிறந்தால், அதை வாளால் கீறி புதைக்கும் வீரம் செறிந்தது தமிழர்களின் வரலாறு’’னு சொல்லுவாங்க. அந்தத் தமிழர்களோட தலைமகன்னு சொல்லிக்கறீங்க... ஆனா, கேரளாவுக்கு இருக்குற துணிச்சல்ல கால்வாசிக்கூட இல்லாம, வாளெடுக்கறதுக்கு பதிலா தாள்ல புலம்புறீங்களே... இதுதான் தமிழனோட வீரமா..?

இப்படி எல்லா அரசியல்வாதிகளாலயும் இருக்கற ஒவ்வொண்ணையும் இழந்துகிட்டே இருக்கறதுதான் எங்களோட புதிய வரலாறு.

'வந்தாரை வாழவைக்கும் தமிழனமே... நீ சொந்த நாட்டானையே சுரண்ட ஆரம்பித்தது எப்போது'னு சினிமா வசனம் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்படித்தான் இப்ப எல்லா அரசியல்வாதிகளையும் பார்த்து கதற ஆரம்பிச்சுருக்கான் அப்பாவி தமிழன். அவனோட வயித்தெரிச்சலும், விவசாயிகளோட வேதனையும் இதுக்குக் காரணமானவங்களை நிச்சயம் சும்மா விடாது. வரலாற்றுல 'கருப்புப் பக்கங்கள்'லதான் ஒங்க எல்லாரையும் குறிக்கப்போகுது காலம்.

ஆனா... 'வந்தவனும் சரியில்ல... வாய்ச்சவனும் சரியில்ல'னு சொல்ற மாதிரி எதுவுமே சரியில்லாத நாட்டுல நாதியத்த விவசாயிக... யாருகிட்ட போயி முறையிடுறதுனுதான் தெரியல.

இப்படிக்கு
கோவணாண்டி