Friday, May 30, 2008

நாயகன் பெரியார் 13

நான் சாதாரணமானவன். என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்றுகூறவில்லை.ஏற்கக்கூடிய கருத்தை உங்கள் அறிவைக்கொண்டுஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளிவிடுங்கள்!

-பெரியார்18 ஆண்டுகளுக்குப் பின், திராவிட முன்னேற்றக் கழகம் 1967&ல் ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் வெற்றி பெற்றதும், புதிதாகப் பதவி ஏற்கப்போகும் தனது அமைச்சரவையின் முக்கிய சகாக்களுடன் திருச்சிக்குச் சென்று, தன் ஆசானைச் சந்தித்தார் அண்ணா.அண்ணாவின் வருகை பெரியாருக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. காரணம், முந்தைய இரு தேர்தல்களிலும், பச்சைத் தமிழன் என்ற காரணத்தால், காங்கிரஸ்காரர் என்றும் பாராமல் காமராஜரை முதலமைச்சர் பதவியில் அமரவைக்க முடிவு செய்து, பெரியார் தி.மு.க&வை எதிர்த்துக் கடுமையான பிரசாரம் மேற்கொண்டிருந்தார். ராஜாஜி யின் சுதந்திரா கட்சியோடு தி.மு.க கூட்டு வைத்திருந்ததும்கூட பெரியாரின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.

பெரியாரின் தீவிர ஆதரவினால், 1962 தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவி ஏற்ற காமராஜர், 1967 தேர்தலில் தி.மு.க&விடம் படுதோல்வி அடைந் தார். இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறியிருந்ததற்கு தி.மு.க&வின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம் போன்றவை மிக முக்கியக் காரணங்களாக இருந் தன. தேர்தல் முடிவு காமராஜ ரைப் போலவே பெரியாருக்கும் அதிர்ச்சியூட்டியது. காங்கிரஸின் தோல்வி தனது தோல்வியே என பெரியார் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

இந்தத் தர்மசங்கடமான சூழலில், முதல்வராகப் பதவியேற் கும் முன் அண்ணா தன்னைத் தேடி வந்திருக்கும் சேதியைக் கேட்டதும் பெரியாரின் உள்ளம் நெகிழ்ச்சியால் நிலைகுலைந்தது. 'அண்ணா மணமகனைப் போல வந்தார். நான் மணமகளைப் போல வெட்கித் தலைகுனிந்தேன்' எனப் பெருந்தன்மையுடன், தம் சீடரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் பெரியார்.

ஆனால், அண்ணாவுக்குத் தெரியும்... அன்று அவருக்கும் அவரது கழகத்தாருக்கும் கிடைத்த வெற்றியின் மூல வித்தே, திராவிட எழுச்சிக்காகத் தன்னலம் பாராமல், கடந்த 40 ஆண்டு காலமா கப் பெரியார் சிந்திய வியர்வைத் துளிகள்தான் என்பது!அதன் காரணமாகத்தான், திருச்சியில் நடைபெற்ற பெரியாரின் 89&வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட அண்ணா, ''இரு நூற்றாண்டுகளில் ஏற்பட வேண்டிய சமூகமாற்றத்தை இருபதே ஆண்டுகளில் மாற்றிக்காட்டியவர் நம் அய்யா!'' எனப் புகழ்ந்துரைத்தார்.

ஒரு குருவுக்கும் சீடனுக்குமான உறவு, ஆழமான உணர்ச்சி களால் நிரம்பியது. அந்த உணர்ச்சிக்கு விளக்கம் சொல்வது போல் வந்தது, 1969 பிப்ரவரி 2&ம் தேதி. அண்ணாவின் திடீர் மறைவு! நள்ளிரவில் தகவல் கேள்விப்பட்டதும், தள்ளாத வயதிலும் கைகளால் சுவரை மாறி மாறி அறைந்தபடி பெரியார் அழுத காட்சி, அண்ணாவின் மேல் அவருக்கு இருந்த அன்புக் கான சாட்சி!

அதே போலத்தான் தன்னை ஆக்கியவரும், அரசியல் எதிரியும், ஆருயிர் நண்பருமான ராஜகோபா லாச்சாரியார் 72&ல் இறந்தபோது, அவரது சிதையின் முன் நின்று, உடல் குலுங்க தேம்பித்தேம்பி ஒரு குழந்தையைப் போல அழுது தீர்த்தார் பெரியார்.

மாற்றுக் கருத்துடையோரை அவர் மதிக்கும் பண்பு, பொது வாழ்வில் ஈடுபடுவோர் ஒவ்வொரு வரும் கற்க வேண்டிய பாடம். திரு.வி.க&வுக்காக விபூதி பூசிக்கொண்டபோதும், தன் வீட்டில் தங்க நேர்ந்த சுத்தானந்த பாரதிக் காக அவரது வழக்கப்படி மந்தி ரம் ஓதி பூஜை செய்ய அனும தித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தபோதும், தனது நண்பரான ரசிகமணி டி.கே.சி& யின் 60&ம் கல்யாணத்துக்காக முருகன் கோயிலுக்குள் வந்த போதும்... என, ஒரு தலைசிறந்த பண்பாளருக்கான வரலாற்று உதாரணங்களை நிகழ்த்திக் காட்டியவர் பெரியார்.பெரியாரின் சிக்கனம் உலகப் பிரசித்தம். அடிப்படையில் அவர் திறமையான வியாபாரியாக இருந்ததால், பணத்தைச் சேர்ப்ப திலும் செலவழிப்பதிலும் தீவிர மானதொரு கவனம் அவரிடம் எப்போதும் இருந்தது. தன்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள, கையெழுத்து வாங்க விரும்புகிற வர்களுக்கு அதற்கென ஒரு தொகை நிர்ணயித்து, கட்சிக்கு நிதி சேர்ப்பார். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இந்த நிபந்தனை இல்லை.பெரியார் ஒரு சிறந்த எழுத் தாளரும்கூட! தனது சுயசரிதையில் அவர் கையாண்ட நடை தமிழின் எல்லா சிறந்த எழுத்தாளர்களோடு எல்லாம் ஒப்பிடக்கூடிய சிறப்பு வாய்ந்தது.பெரியாரின் பகுத்தறிவுப் பிரசாரம் என்பது, வெறுமனே சாதிய எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. அறிவியலின்பால் அவருக்கிருந்த ஈர்ப்பும் ஒரு காரணம். 1942& லேயே 'இனி வரும் காலம்' எனும் தலைப்பில், இந்த உலகம் சந்திக்க இருக்கும் அறிவியல் மாற்றங்களை முன்கூட்டியே உலகுக்குத் தெரிவித்த தீர்க்கதரிசி அவர். அறிவியல் உலகம் பிற்பாடு கண்டுபிடித்த சோதனைக்குழாய் கருவுறுதல் முறையை அப்போதே படம் போட்டு விளக்கிக் காட்டி னார் பெரியார். அவரது அறிவின் தீட்சண்யத்தை உணர்ந்த யுனெஸ்கோ நிறுவனம் 1970&ல் 'புதிய உலகின் தொலை நோக் காளர், தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என புகழ்ந்து, விருது அளித்து கௌரவித்தது.

94 வருடங்கள், 3 மாதங்கள், 7 நாட்கள் என இந்தப் பூமியில் பெருவாழ்வு வாழ்ந்த பெரியார், தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட மொத்தம் 10,700 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மொத்தம் 8,20,000 மைல்கள் மக்கள் பணிக்காகப் பயணித்திருக்கிறார். கிட்டத்தட்ட 33 முறை உலகைச் சுற்றி வருவதற்கும், மூன்று முறை பூமியிலிருந்து நிலவுக்குச் சென்றுவருவதற்கும் ஒப்பான தொலைவு இது!

தமிழ்நாட்டில் அவர் கால் படாத மண்ணே இல்லை எனும் அளவுக்கு இடைவிடாத பிரசாரத்தைத் தள்ளாத வயதிலும் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக வெளியில் எங்கு சென்றாலும் மூத்திரச்சட்டியைக் கையில் தாங்கி யபடியே செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டானபோதும், பொதுவாழ்வில் ஒருவன் சொந்த கௌரவங்களைப் பார்க்கக் கூடாது எனும் தனது கூற்றுக்கு ஏற்ப மேடைகளிலேயே மூத்திரச் சட்டியுடன் ஏறி அமர்வார்.

தமிழகத்தின் ஈடு இணையற்ற துருவ நட்சத்திரமாகப் பிரகாசித்து, வாழ்ந்த கடைசிக் கணம் வரை தொண்டு செய்தே பழுத்த பழமான பெரியார், தன் 95&ம் வயதின் இறுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டார். சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் எதிரே நடந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய தீரமிக்க உரையினூடே இரண்டு முறை குடலிறக்க நோயினால் அவரது பேச்சு தடைப்பட்டது. அதையும் மீறி அம்மா, அம்மா என வலியால் முனகியபடியே, தன் இறுதி நிமிடத்தையும் மக்களுக்காக நல்லது சொல்லும் பணியில் வலிந்து தன்னை உட்படுத்திக்கொண்டார். உடல்நலம் கெட, மறுநாள் அவசரமாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

24-12-1973-ல் பெரியார் தன் உடலுக்கு முழுவதுமாக ஓய்வு கொடுத்தார். அவரது உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, ராஜாஜி ஹாலில் வைக்கப் பட்டது. அன்றைய முதல்வரான மு.கருணாநிதி, முன்னாள் முதல் வர் காமராஜர், பின்னாள் முதல் வரான எம்.ஜி.ஆர். போன்றவர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அரசாங்கத்தின் சிறுசுவடுகூடக் கண்டிராத பெரியாருக்கு முழு அரசு மரி யாதையுடன் கூடிய அடக்கத் துக்கு உத்தரவிட்டார் கருணாநிதி.

இன்றும்கூட இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும்தான் சாதிப் பெயரை பின்னால் போட்டுக்கொள்வது அவமானகரமான காரியமாக இருந்து வருகிறது. அந்தப் பெருமைக்கு முழு முதற் காரணம் பெரியார் மட்டுமே!

இன்றைய நவீன உலகில், சாலைகளில் நறுவிசான ஆடைகளுடனும், முகம் நிறைய களிப்புடனும் உற்சாகமாக நடந்து செல்லும் ஒவ்வொரு தமிழனின், தமிழச்சியின் களிப்பூறும் முகங் களுக்குப் பின்னால் அந்தச் சாமான்யரது வியர்வையின் ஈரம் படிந்துகிடப்பதை தமிழ் வானும் மண்ணும் அறியும். இதோ, இந்தக் கடைசி வரியை வசிக்கும் இந்தத் தருணத்திலும் ஏதோ ஒருவிதத்தில் பெரியார் உங்களைத் தொட்டுக்கொண்டு இருப்பதைச் சற்று யோசித்தால் உணர முடியும். ஏனென்றால், 'பெரியார்' & சரித்திரத்தில் ஒரு தொடர் நிகழ்வு; தொடர் செயல். அதில் முற்றுப்புள்ளிகளுக்கே இடமில்லை!

நாயகன் பெரியார் 12

ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்!

-பெரியார்1944 ஜூலை 29. அன்றைய தினம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தென் ஆற்காடு மாவட்ட திராவிட மாநாடு. விழா நடப்பதற்கு ஒரு நாள் முன்ன தாகவே கடலூர் களைகட்டத் துவங்கியிருந்தது. மாநாட்டைத் துவக்கிவைக்க வரும் பெரியாரை வரவேற்கும்விதமாக பந்தல் அமைப்பதிலும், கொடிகள் கட்டு வதிலும் எண்ணிலடங்கா தொண் டர்கள் பலர் சுறுசுறுப்பாக ஈடுபட் டுக்கொண்டு இருந்தனர். அவர்களினூடே 11 வயதே ஆன ஒரு சிறுவனும் அங்குமிங்குமாக ஓடி ஆடி வேலை செய்துகொண்டு இருந்தான். அங்கிருந்த எவரும் அந்தச் சிறுவனை ஒருபொருட்டாக மதிக்கவில்லை. மறுநாள், மாநாட்டில் மைக்கைப் பிடித்து அவன் பேசிய பேச்சைக் கண்டு பெரியார், அண்ணா உட்பட அனைவரும் வியந்தனர். ''இவன் கழுத்தில் மட்டும் ருத்திராட்சம் இருந்திருந்தால், ஒருவேளை இவனையும் ஞானசம்பந்தன் ஆக்கியிருப்பார்கள். ஆனால், இந்தச் சிறுவன் ஞானப்பால் உண்ணவில்லை. இவன் உண்டது பகுத்தறிவுப் பால். அதனை ஊட்டியவர் நம் பெரியார்'' என அந்தச் சிறுவனின் திறமையை வியந்து பேசினார் அண்ணா. அந்த நிமிடம் முதல் தன் வாழ்க்கையைப் பெரியாரின் கொள்கைகளுக்காகவே அர்ப்பணித்துக்கொண்ட அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... பிற்பாடு கழகத்தின் முக்கியத் தொண்டராகவும் பேச்சாளராகவும் படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஒருகட்டத்தில் பெரியாரின் நம்பிக்கைக்குரிய நபர்களுள் ஒருவராக மாறி, அவரது மறைவுக்குப் பின்பு இன்றுவரை திராவிடர் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்து வரும் கி.வீரமணிதான்!

அக் காலகட்டங்களில் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் எண்ணற்ற கலைஞர்கள் அணி வகுத்து நின்றனர். அக்காலத்திய சினிமாக்களில் புகழ்பெற்ற நட்சத் திரங்களான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் போன்ற கலைஞர்கள் பெரியாரைத் தங்கள் இதயங்களில் ஏந்தினர். நடிகவேள் எம்.ஆர்.ராதா பெரியாரின் சீரிய தொண்டராக, அவரது கருத்துக்களுக்காக தனது கலைப்பயணத்தை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து பல நாடகங்களை மேடையேற்றி தனித்தன்மையுடன் வெற்றி வாகை சூடி வலம் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரது குழுவில் இருந்த ஓர் இளைஞனுக்கு வசீகரமான முகத் தோற்றம். கூடவே, அபார நடிப்பாற்றல்! வசன உச்சரிப்பு களில் வாள் வீச்சு. ஈரோட்டுக்கு நாடக நிமித்தமாக எம்.ஆர்.ராதா தனது குழுவுடன் வந்தபோது, அங்கே பெரியாரின் வீட்டிலிருந்த அண்ணாவின் பார்வையை அந்த இளைஞனின் திறமைகள் சுண்டி இழுத்தன. பிற்பாடு 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' எனும் தலைப்பில் அண்ணா ஒரு நாடகம் நடத்தத் திட்டமிட்ட போது, அதில் சிவாஜியாக நடிக்க அந்த இளைஞனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. அதில் 'காகபட்டர்' எனும் வேடத்தை தான் ஏற்றார். கணேசன் எனும் அந்த இளைஞனின் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த் தியது. சென்னையில் ஒருமுறை அந்த நாடகம் நடத்தப்பட்டபோது விழாவுக்குத் தலைமையேற்றிருந்த பெரியார், சிவாஜியாக நடித்த கணேசன் எனும் அந்த இளை ஞனின் அற்புதமான நடிப்பில் மயங்கி, 'சிவாஜி' எனும் பெய ரையே அவருக்கு நிரந்தரமாகச் சூட்டி, தமிழர்களின் அடுத்த தலை முறைக்கான மகத்தான கலைஞனையும் தேர்வு செய்தார்.

1945களில் தமிழகம் முழுவ துமே பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது போல, எங்கு பார்த்தாலும் திராவிட எழுச்சி கொடிகட்டிப் பறந்தது. குறிப்பாக, சென்னை முதற்கொண்டு குமரி வரை ஓர் அலை போல இளைஞர் களிடமும் மாணவர்களிடமும் அது புத்துணர்ச்சியை உருவாக்கி யிருந்தது. ஏற்கெனவே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள் போக, அண்ணா வின் வசீகரத் தமிழால் கழகத்தில் புதிய கூட்டம் களைகட்டத் துவங்கியது. இந்த இரண்டு தலை முறைகளுக்கு இடையிலான இடைவெளிகள் கழகத்தின் கட்டுக்கோப்புக்கு ஊறு விளை விப்பதை பெரியார் உணர்ந்தார்.உண்மையில், பெரியாரின் மேல் அண்ணா வைத்திருந்த பற்றுக்கு இணையாக எதையும் ஒப்பிட முடியாது. கூப்பிட்ட மறு நொடி யில் ஏன், எதற்கு என்ற கேள்விகள் ஏதுமில்லாமல், பெரியாரின் அழைப்பை ஏற்று, ஈரோட்டில் அவரது வீட்டின் பின்பகுதியில் ஒரு சிறு ஓட்டு வீட்டில் தன் மனைவியுடன் தங்கி, மாதா மாதம் பெரியார் தந்த 60 ரூபாய் சம்பளத்துக்காக அண்ணா தன் வாழ்க்கையையே அர்ப்பணித் திருந்தார். இத்தனைக்கும், ஒரு முறை ஈரோடு வந்த பெரும் செல் வந்தரான ஜி.டி.நாயுடு, அண்ணா வைத் தமது நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் பணிபுரிய வருமாறு அழைத்தபோது அதனை மறுத்ததோடு, 'பெரியார் எனும் மகத்தான தலைவருக்குப் பின்னால் நின்று அவரது தொண்டோடு இரண்டறக் கலப்பது என் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறு! அதனை ஒருக்காலும் இழக்க மாட்டேன்' என உறுதிபடக் கூறிவிட்டார். அந்த அளவுக்கு பெரியாரின் மேல் அன்பும் பிணைப்பும் கொண்டிருந்தார் அண்ணா. என்றாலும் சில விஷயங்களில் பெரியாருடன் கருத்து வேறுபாடுகளையும் கொண்டிருந்தார். குறிப்பாக, பெரியார் குடிஅரசு இதழில் கொண்டு வந்த எழுத்துச் சீர்திருத் தத்தை அண்ணா, தான் ஆசிரிய ராக பொறுப்பேற்றிருந்த திராவிட நாடு நாளேட்டில் கடைப்பிடிக்கவில்லை. ஆனாலும், பெரியார் பெருந்தன்மையுடன் அண்ணாவின் கொள்கைச் சுதந்திரத்தை அனுமதித்தார். இக்காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம், தொண்டர்கள் மத்தியில் சில சலசலப்புகளை உருவாக்கியது. அது ஒரு திருமண நிகழ்வு.

கழகத்தின் துடிப்புமிக்க இளைஞரும், பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகனுமான ஈ.வெ.கி.சம்பத் மற்றும் சுலோச்சனாவின் திருமணம் 1946 செப்டம்பர் 15ம் தேதி திருப்பத்தூர் மீனாட்சி தியேட்ட ரில், பெரியார் தலைமையில் நடந்தது. வாழ்த்துரையின்போது பெரியார் பெண்களின் நகைப்பித்து குறித்தும், அதனால் ஏற்படும் அடிமைத்தனம் குறித்தும் பேசி னார். இச்சம்பவம் குறித்து அண்ணா, திராவிட நாடு இதழில் நகைச்சுவையாக, 'பெரியார் நகைப்பித்து குறித்துப் பேசும் போது அவரது வலதுகை விரலில் இருந்த பச்சைக்கல் மோதிரத் தையே மணமகள் குறும்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார்' என எழுத, அது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியது. வெளிப்படையாக இல்லா விட்டாலும் இச்சம்பவம் உள்ளூர கழகம் இரு அணிகளாகப் பிரிய வழிவகைகளை உருவாக்கியிருந் தது. தொடர்ந்து கறுப்புச் சட்டை அணிவதிலும் அண்ணாவுக்குச் சில மாறுபாடான அபிப்ராயங்கள் தோன்றவே, பெரியார் வெளிப் படையாக பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்து தனது நிலையை தீர்மானமாக வெளிப்படுத்தினார். 'கொள்கைக்கு கட்டுப்பட்டவர்கள் மட்டும் கட்சியில் இருந்தால் போதும்; அல்லாமல், கட்சிக் குள்ளேயே இருந்துகொண்டே குதர்க்கம் செய்வது வீண்வேலை' என அவர் கூறியது அண்ணாவுக் காகத்தான் என்பது வெளிப்படை யாகத் தெரிந்தது. இதனிடையே 1947 ஆகஸ்ட் 15 வந்தது. ''நம் முதுகில் அமர்ந்து இன்னும் வட நாட்டான் சவாரி செய்துகொண்டிருப்பதால், சுதந்திரம் நமக்குச் சுமைதான். இதனை வெளிப்படுத் தும் வகையில் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண் டும்'' என்று பெரியார் கூற, அதை அண்ணா மறுத்து, ''நமக்கு இப்போது பாதி சுதந்திரமாவது கிடைத்துள்ளது. அதனால் வெள் ளைச் சட்டை அணிவோம்'' எனக் கூறியது இருவருக்கும் இடையி லான பிரிவை உறுதிப்படுத்தியது.இருந்தபோதிலும், அண்ணாவின் மேல் தான் இன்னமும் கொண்டு இருக்கும் மதிப்பை வெளிப்படுத்தும்விதமாக, அடுத்து வந்த ஈரோட்டு மாநாட்டின் ஊர்வலத்தில் அண்ணாவை மட்டும் நடு நாயகமாக சாரட் வண்டியில் நிற்கவைத்து, தள்ளாத வயதிலும் தொண்டர்கள் புடை சூழ படை வீரனாக தரையில் நடந்து வந்து ஆச்சர்யப்படுத்தினார் பெரியார்.ஆனாலும், இருவருக்கும் இடை யிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்தது.கழகத்தில் ஏற்பட்ட இந்த பிளவுகளுக்கெல்லாம் மிக முக்கியக் காரணம் தேர்தல் அரசியல் தான். 'நமக்கு முழு பலமும் இருக்கும்போது, ஏன் நாம் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிக்கக் கூடாது' என்ற எண்ணம் அண்ணாவை முழுவதுமாக ஆட்கொண்டு இருந்தது. பெரியாருடன் இருந்தால் இந்த எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. அவர் தேர்தல் அரசியலை வெறுப்பவர் என்ற காரணத்தால், அண்ணா தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்துத் தனியாகப் பிரிந்து கட்சி துவக்கி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என திட்டமிட்டிருந்தார். உண்மையில் அவரது இந்த எண்ணம்தான் பெரியாரோடு அவர் கொண்ட முரண்பாடுகள் அனைத்துக்கும் காரணம். அவரது இந்த எண்ணத்துக்குத் தோதாக ஓர் அதிர்ச்சி யூட்டும் சேதியும் வந்தது.

1949 ஜூன் 9ம் தேதி, சென்னை தியாகராயநகரில் செ.தெ.நாயகம் இல்லத்தில், பெரியார் தனது 72ம் வயதில் தன் உதவியாளராக இருந்த 32 வயது மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்துகொண்ட சேதி அது. உண்மையில் பெரியாரின் இத் திருமணம், தன் இறப்புக்குப் பின்னால், கட்சியையும் அதன் சொத்துக்களையும் தன் கருத்துக் களோடு முழுமையாக உடன் பட்ட ஒருவரிடத்தில் கைமாற்றிக் கொடுப்பதற்கான ஒப்பந்தமின்றி வேறில்லை. அதுவும்கூட கட்சி யில் வெளிப்படையிலான பிளவு கள் ஏற்படக் காரணமாக அமைந் தது. இது நிமித்தமாகப் பெரியார் தன் அரசியல் வழிகாட்டியும், எதிரியும், ஆருயிர் நண்பருமான ராஜாஜியிடம் தனது இந்த முடிவு குறித்து ஆலோசனை கேட்ட போது, அவரும் இதனை ஏற்க மறுத்திருந்தார். ஆனால், மணியம் மையார் பெரியாரின் ஒரு மாற்று ஊன்றுகோலாக விளங்கி, அவரை முழுமையாகத் தாங்கிய காலம் அது. அதனால் தீர யோசித்த பின்பே பெரியார் அந்த முடிவுக்கு வந்தார். மக்களும் தொண்டர் களும் தன்னைப் புரிந்துகொள் ளாததால் தனக்குக் கிடைக்கப் போகும் அவப்பெயரைக் காட் டிலும், வருங்காலத்தில் தனது கொள்கைகளும் கருத்துக்களும் தழைத்து நிற்பதும், பாதுகாப்பு ஏற்படுத்துவதும்தான் அவசியம் எனக் கருதி, எதிர்ப்புகளை அலட் சியம் செய்து, மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார்.

விளைவு... கழகம் இரண்டாக உடைந்தது. அறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத். க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மு.கருணா நிதி, கே.ஏ.மதியழகன், என்.வி.நட ராஜன் போன்ற கழகத்தின் முக்கிய பேச்சாளர்கள் தனியாக அணி திரண்டனர். 1949 செப் டம்பர் 17... தமிழ்நாட்டின் அரசியலில் மற்றுமொரு முக்கிய மான நாள்! கருத்து வேற்றுமையில் பிரிந்தாலும், கொள்கையில் என்றும் பெரியார் வழியைப் பின்பற்றுவோம் எனக் கூறி, அண்ணா தலைமையில் அன்று புதிய கட்சி உதயமானது. திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரும் அதற்குச் சூட்டப்பட்டது. கழகம் பிளவுபட்டது குறித்துப் பெரியார் கவலை கொள்ளவில்லை. அவரோடு இன்னமும் பெரும் படையென பல தொண்டர்களும் தலைவர்களும் அவர் பக்கம் நெஞ்சுறுதியோடு நின்றனர். என்றாலும், தான் தூக்கி வளர்த்த தனது அண்ணன் மகனான சம்பத்தே மாற்று அணியில் சேர்ந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் வாழ்வில் எப்போதும் கண்டிராத வேதனையையும் நெருக்கடியையும் அந்த 72 வயதில் பெரியார் எதிர்கொண்டார்.-சரித்திரம் தொடரும்

நாயகன் பெரியார் 11

இனி வரும் காலங்களில் உருவத்தைத் தந்தியில்
அனுப்பும்படியான சாதனம் மலிந்து ஆளுக்கு ஆள் உருவம்
காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்!

-1943-ல் பெரியார்

சரித்திரம் கண்ட முதலாவது மொழிப் போர் தமிழகத்தில் அநேக மாறுதல்களை உருவாக்கிவிட்டுக் கடந்தது. இனி பெரியாரால் மட்டுமே தமிழகத்துக்கு விடிவுக்காலம் என்கிற உண்மை நீதிக் கட்சியினருக்குத் தெளிவாகப் புரிந்தது.விளைவு... 1938 டிசம்பரில், சென்னையில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 14வது மாநாட்டில் அப்போதைய தலைவரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ''இன்று முதல் நீதிக் கட்சி பெரியார் வசம் முழுமையாக ஒப்படைக் கப்படுகிறது. இக்கட்சிக்கு இனி அவரே தலைவராகச் செயல் படுவார்'' என அறிவிக்க, தொண்டர்கள் எழுப்பிய கரவொலியால் மாநாட்டின் பந்தல் கூரையே படபடத்தது. முன்னமே பெரியாரிடம் இதற்கு ஒப்புதலும் பெற்றிருந்த பன்னீர்செல்வம், பெரியார் கைப்பட எழுதிய எழுச்சிமிகு உரையை வாசித்து, கூட்டத் தினரை உணர்ச்சி அலைகளால் கொந்தளிக்கச் செய்தார். எங்கோ கண்காணாத தொலை வில் சிறையில் இருக்கும் ஒரு தலைவனுக்கு தமிழகத்தில் நடந்த இந்த மகத்தான மரியாதையைக் கேள்விப்பட்ட தேசத் தலைவர்களின் பார்வை பெரியாரை நோக்கித் திரும்பி யது. அப்படிப்பட்ட தலைவர் களில் ஒருவர்... டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை வடிவமைத்த பெருமைமிகு தலைவர். தென்னாட்டில் பெரியார் என்றால், வடநாட்டில் அம்பேத்கர்.அதுவரை இந்த இரண்டு சூரியன்களும் நேரில் சந்தித்ததில்லை. அதற்கான வாய்ப்பு, முகம்மது அலி ஜின்னா மூலம் உருவானது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து விவாதிக்கும் பொருட்டு, ஜின்னா தேநீர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அழைப்பை ஏற்று, மகாராஷ்டிராவுக்குப் புறப் பட்ட பெரியாரின் ரயில் பயணத் தில், அவருடன் அறிஞர் அண்ணா வும் இருந்தார்.

மகாராஷ்டிராவில் பெரியாரைக் கண்டதும் அம்பேத்கர் கட்டிஅணைத்து வரவேற்றார். காங்கிர ஸின் சனாதன தர்மத்துக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அந்தச் சந்திப்பு, வரலாற் றின் முக்கிய பதிவேடு. அடுத்தடுத்த ஆண்டுகளில், பெரியாரும் அண்ணாவும் தொடர்ந்து வடநாடுகளுக்குப் பயணித்துப் பல அதிர்வுகளை உரு வாக்கிவிட்டுத் தமிழகம் திரும்பினர்.

இங்கே தமிழகத்தில், திராவிடப் புயல் முழுவீச்சில் இருந்தது. கல்வி அறிவு பெற்ற இடைநிலைச் சாதி மக்களின் முதல் தலைமுறைக்கு பெரியாரும் அண்ணாவும் இதய நாயகர்களாக மாறினர். எண்ணற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச் சாளர்கள், மேடை நாடகக் கலைஞர் கள், திரைப்பட நடிகர்கள் எனப் பலரும் திராவிட எழுச்சிக்காக மேடைகளில் அணி திரண்டனர். பிற்பாடு திராவிட இலக்கியம் எனத் தனியாக அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதப்பட்டன. அதே சமயம், பெரியாரின் மனம் கொண்டி ருந்த வேகத்துக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. அடிக்கடி மருத்துவமனையில் சேர வேண்டிய அவசியம் நேர்ந்தது.

முதுமையில் எல்லா மனித ரும் மீண்டும் குழந்தைகளாகிவிடுகின்றனர். கிட்டத்தட்ட 70 வயதை நெருங்கிவிட்டிருந்த பெரியாரும் இயற்கையின் விதிகளில் இருந்து தப்ப முடிய வில்லை. உற்ற ஒரே துணையாக இருந்த நாகம்மையாரும் இறந்த சூழலில் தன்னைத்தானே நிர்வ கித்துக்கொள்ள முடியாமல் தவித்தார். அவரை அருகிலி ருந்து கவனித்துக்கொள்ளவும், தேவையான நேரத்தில் உணவு மற்றும் மருந்து கொடுத்துப் பராமரிக்கவும் தாயுள்ளம் கொண்ட ஒரு தாதியின் சேவை தேவையாக இருந்தது.

அந்தத் தேவையைத் தக்க சமயத்தில் தீர்த்தார் அண்ணல் தங்கோ. சுயமரியாதைப் படை யின் மற்றுமொரு சிங்கம்.அவரால் அறிமுகப்படுத்தப் பட்ட இளம் பெண்ணுக்கு, அரசியல் ஆர்வமும் தொண் டுள்ளமும் இருந்தது ஆச்சர்ய மான ஒத்திசைவு.காந்திமதி என்ற அந்தப் பெண், வேலூரில் விறகுத் தொட்டி நடத்திவந்த கனக சபை என்பவரின் மகள். இயக்கப் பற்று காரணமாக, தன் பெயரை அரசியல் மணி எனத் திருத்திக்கொண்டார். எவரிடமும் அத்தனைச் சீக்கிரம் பொறுப்புகளை ஒப்படைக்காத பெரியாரிடமே குறுகிய காலத் தில் நன்மதிப்பைப் பெற்றவர் அரசியல் மணி. கூட்டங்களில் புத்தகம் விற்ற காசை கணக்குச் சுத்தமாகத் திரும்ப ஒப்படைக்கும் அவரது நேர்மை, பெரியாருக்குப் பிடித்திருந்தது. இதன் காரணமாக பெரியாரே கூட்டங்களில் மணி யம்மையார் என மதிப்புடன் அழைக்கத் துவங்க, அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தது.

அதுவரை தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வந்த நீதிக் கட்சி, பெரியாரின் தலைமைக்குக் கீழ் வந்த பிறகு, பல மாறுதல்களைச் சந்தித்தது. இந்த மாறுதல்களை நீதிக் கட்சியில் இருந்த சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. பதவி, பணபலம், ஆட்சி, அதிகாரம் எனத் தேர்தல் அரசியலால் பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த அந்தக் கூட்டம், பெரியா ருக்கு எதிராகச் சதிகள் செய்யத் துவங்க, அதை முளையிலேயே கிள்ளியெறியும் பொறுப்பை அண்ணாவிடம் ஒப்படைத்தார் பெரியார்.

1944, ஆகஸ்ட் 27 அன்று சேலத்தில் நடந்த மாநாட்டில் அண்ணா வாசித்த தீர்மானம் வரலாற்றை மாற்றி எழுதியது. 'இதுவரை, பணக்காரர்களுக் கெனவே இயங்கி வந்த நீதிக் கட்சி, இனி 'திராவிடர் கழகம்' எனும் பெயரில் பாட்டாளி மக்க ளுக்காகவும் ஏழை எளியவர்க ளுக்காகவும் மட்டுமே பாடுபடும்!' என அண்ணா தனது எழுச்சி உரையை வாசித்தார். பின்னாட் களில் பல நூறு கட்சிகளின் தலைக்காவிரியாக விளங்கி இன்றுவரை எண்ணற்ற தொண்டர் களுடன் பகுத்தறிவுப் பிரசாரத்தில் ஈடுபடும் திராவிடர் கழகம் உதயமானது.

கட்சியின் பெயர் மாற்றப்பட்ட கையோடு, அதுவரையிலான நீதிக் கட்சியின் கொடி குறித்தும் ஆட்சேபங்கள் எழுந்தன. கட்சித் தொண்டரும் பெரியாரின் சகோதரருமான ஈ.வெ.கிருஷ்ண சாமி அவர்களின் மூத்த மகள் மிராண்டா கஜேந்திரன் முதன் முதலாக தராசு சின்னம் பொறித்த நீதிக் கட்சியின் கொடி குறித்துக் கேள்விகளை எழுப்பினார். 'தராசு, நமது சின்னமல்ல! அதில் புரட்சி யும் இல்லை; எந்த எதிர்ப்பும் இல்லை. நமது கொடி, நமது உணர்வைப் பிரதிபலிக்க வேண்டு மானால், முதலில் இந்தத் தராசு கொடிக்கு முடிவுகட்டிவிட்டு, புதிய கொடியை வடிவமைக்க வேண்டும்' என திருச்சி மாநாட்டில் முழங்கினார். புதிய கொடியை உருவாக்கப் பலரும் முனைந்தனர். கறுப்பு சிவப்பு இரண்டு வண்ணங்களில் கொடி அமைக்கப்பட வேண்டும் என்பது ஏகமனதாகத் தீர்மானம் செய்யப்பட்டது. கறுப்பு என்பது தமிழரின் இழிநிலை என்றும், அதை வேர றுக்கும் புரட்சியைச் சிவப்பு நிற வட்டமாகவும் கருத்தில்கொண்டு ஷண்முக வேலாயுதம் என்பவர் கொடியை வடிவமைத்தார்.

ஈரோடு குருகுலத்தில் கூடியிருந்த தொண்டர்களின் மத்தியில் கொடியை வடிவமைத்துப் பார்க்கும் ஆவல் எழுந்தது. கறுப்பு மை கொண்டு கொடியின் சதுர வடிவம் உருவாக்கப்பட, சட்டென அங்கு சிவப்பு மை கிடைக்காமல் தொண்டர்கள் தடுமாறினர். ஆளுக்கொரு பக்க மாகச் சிவப்பு மை தேடிய போது, குடியரசில் உதவியாளராக இருந்த ஒரு தொண்டர் குண்டூசி யால் தனது கட்டை விரலைக் குத்திக்கொண்டார். ரத்தம் துளிர்த்த விரலை கறுப்பு மையின் மேல் தடவ, உதிரத்தால் உருவானது சிவப்பு வட்டம். அந்தத் தொண்டர் கலைஞர் மு.கருணாநிதி!

திருவாரூரில் முரசொலி எனும் சிற்றேட்டைத் துவக்கி, பெரி யாரின் கொள்கைகளை எழுதி வந்த கருணாநிதி, அப்போது அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு இதழிலும் தொடர்ந்து கதை, கவிதைகளை எழுதி அண்ணாவின் கவனத்தை ஈர்த் தார். தனது இதழில் பணிபுரியும் பொருட்டு, ஈரோட்டுக்கு அண்ணாவால் வரவழைக்கப்பட் டார். பெரியாரின் கைகள் எப்படி அண்ணாவின் தோளில் வீழ்ந்ததோ, அப்படியே அண்ணா வின் கைகளைக் கருணாநிதியின் தோள் தாங்கியது.

திராவிடக் கொள்கை சார்ந்த கவிதைகளாலும், திரைப்பட வசனங்களாலும், அலங்கார மொழிநடையுடன் கூடிய மேடைப் பேச்சாலும் மக்களின் இதயங்களில் தனக்கெனத் தனி இடம் தேடிக்கொண்ட கருணாநிதியின் ஆட்சியில்தான் பெரியாரின் கொள்கைகள் பல சட்டமாக இயற்றப்பட்டன!-சரித்திரம் தொடரும்

நாயகன் பெரியார் 10

'உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும்,
பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம்
தேடிக்கொள்!'

-பெரியார்சில சமயங்களில் இயற்கை, மனிதனைக் காட்டிலும் அட்டகாசமான கவிதைகளை, யாருமே எதிர்பாராத வகையில் எழுதிவிடும். அப்படி அது எழுதிய ஒரு கவிதைதான், வெண்ணிறச் சிங்கமெனத் தாடியும் மீசையுமான கோலத்துடன்கூடிய ஈ.வெ.ராமசாமியாரின் பழுத்த சிந்தனையாளனுக்குரிய தோற்றம்.

ஏற்கெனவே பல் துலக்குவது, குளிப்பது போன்ற அன்றாடக் காரியங்களை எல்லாம் தன் சிந்தனையைத் தடை செய்யும் முக்கிய எதிரிகளாகக் கருதி, கூடுமானவரை அவற்றைத் தவிர்த்துவந்தவர், மலேயா பயணத்தின்போது நேரமின்மை காரணமாக முகம் மழிப்பதையும் முடி வெட்டுவதையும் தேவையற்ற தொந்தரவுகளாகக் கருதி நிறுத்திக்கொண்டார். 'கழுதை அதுபாட்டுக்கு வளரட்டும்.

நேரத்துக்கு நேரம், துட்டுக்கு துட்டுன்னு ரெண்டும் மிச்சம்' என்பது அவர் கணக்கு.மலேயா பயணம் முடிந்து இந்தியா திரும்பும் பயணத்தில், கப்பல் நாகைத் துறைமுகத்தை வந்தடைந்தது. ராமசாமியார் கப்ப லிலிருந்து வெளிப்பட்டபோது கூடியிருந்த தொண்டர்கள் அதிசயித்தனர். அலை கடலென அவரது தலைக்குப் பின்னால் புரளும் வெண்ணிற முடியும், அருவியென முகத்தில் சரிந்து தொங்கும் தும்பை நிற மீசையும் தாடியும் அவரது தோற்றத்தை முழுவதுமாக மாற்றியிருந்தன. தாங்கள் புகைப்படங்களில் கண்டும் கேட்டும் அறிந்த உலகச் சிந்தனையாளர்களின் முகத் தோற்றத்தைப் போல அவரது முகம் மாறியிருப்பதைக் கண்டு தொண்டர்கள் வியந்தனர்.

மலேயா பயணம் எப்படி அவரது உருவத்தை மாற்றியிருந்ததோ, அது போல அடுத்த வருடமே அவர் மேற்கொண்ட ரஷ்யப் பயணம், அவரது உள்ளத்தை மாற்றியது. அங்கே வீசிய சோஷலிசக் காற்று அவருக்குள்ளிருந்த சமதர்மக் கொடியை மேலும் பட்டொளி வீசிப் படபடக்கவைத்தது. நவம்பர் 8, 1932ல் ரஷ்யாவிலிருந்து கப்பலில் திரும்பிய அவர், தூத்துக்குடி துறைமுகத்தில் கால் வைத்த அன்றே, அங்கு நடந்த வரவேற்புக் கூட்டத்தில், இனி தன்னை அனைவரும் தோழர் என விளிக்கும்படி உத்தரவிட்டார். தனது சகாக்களும் கம்யூனிச சிந்தாந்தத்தில் பற்றுக்கொண்டவர்களுமான தோழர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரை குடியரசு வார ஏட்டில் தொடர்ந்து பொதுவுடைமைக் கருத்துக்களை எழுதும்படி சொன்னார்.

அக்காலத்தில், ஆங்கில அரசாங்கத்துக்கு கம்யூனிஸ்ட் என யாராவது வாய் தவறிச் சொன்னாலே, கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். இந்தச் சூழலில் பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் கர்ப்பப்பையாகக் கருதக்கூடிய கம்யூனிஸ்ட் அறிக்கையை முதன் முதலாக தமிழில் வெளியிட்டார் தோழர் ராமசாமி. அடுத்ததாக அவர்கள் வெளியிட்ட புத்தகத் தின் பெயர், 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்?'எழுதியவர் பகத்சிங்.

விளைவு, ஒரு நாள் தடதடவென அச்சகத்தினுள் நுழைந்த போலீஸார், ராமசாமியாரின் சகோதரரும் அச்சக உரிமையாளருமான ஈ.வெ.கிருஷ்ணசாமியையும், அந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த தோழர் ஜீவானந்தத்தையும் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். பின்னர் மன் னிப்புக் கடிதம் தரக்கோரி நிர்பந்திக்கப்பட்டு இருவரும் விடுவிக்கப்பட்டனர்.குண்டு... தன் மனைவி நாகம்மையைத் தோழர் ராமசாமி செல்லமாக அழைப்பது இப்படித்தான். ஈரோட்டில் குடியரசு ஊழியர்களுக்குத் தனது கையாலேயே நாகம்மை மதிய உணவு பரிமாறும்போது, தன் கணவரை அங்கே அனுமதிப்பதில்லை. காரணம், அவர் அங்கே வந்தால், ''ஏய் குண்டு... எதுக்கு இத்தனை காய் போட்டுச் சமைக்கிறே? கொஞ்சம் சிக்கனமா கறி இல்லாம சமைக்க வேண்டியதுதான?'' என்று கணக்கு பார்க்கத் துவங்கிவிடுவார். ஆனாலும், நாகம்மை அதை ஒருபோதும் பொருட்படுத்தாமல் தொண்டர்களுக்கு தன் அன்பையும் சேர்த்துப் பரிமாறுவார். அதனால், நாகம்மை யாரின் திடீர் மரணம் தொண் டர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒருமுறை பொதுக்கூட்டம் ஒன்றில் நாகம்மையார் பேசத் துவங்கியபோது, ராமசாமியார் தன்னைத் 'தோழர் ராமசாமி' என அழைக்கச் சொல்லி வற்புறுத்த, அம்மையாரோ கூச்சப்பட்டு மறுத்தார். ஆனால், ராமசாமியார் விடவில்லை. இறுதியில் தன் மனைவி தன்னை 'தோழர் ராமசாமி அவர்களே' என அழைப் பதைக் கேட்டு நெகிழ்ந்தார்.

இப்படியாக எந்தச் சமரசமும் இல்லாமல் பொதுவாழ்வில் தன்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட தன் மனைவி இறந்துகிடக்கும் நிலையிலும் சலனம் இல்லாமல் இருந்தார் ராமசாமியார். கையில் தடியை ஊன்றியபடி வாசலில் நின்றுகொண்டு, ஒப்பாரி பாடி அழுதபடி வந்த பெண்களிடம், ''இங்கே பாருங்கள்... உள்ளே போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடாது. அப்படிப் பண்ணுவதாக அபிப்ராயம் இருந் தால், இப்படியே திரும்பிச் செல்லுங்கள்'' என்றார் திட்ட வட்டமாக. மேலும் அன்று இரவே புறப்பட்டு, திருச்சிக்குச் சென்று மறுநாள் தடை உத்தரவை மீறி ஒரு கிறிஸ்துவத் திருமணத்தை நடத்திவைத்தார்.

தனது தாயாரான சின்னத்தாயம்மாள் இறந்தபோதும் தன் மேல் கவிய வந்த துக்கத்தை ஈயை விரட்டுவது போல விரட்டியடித்தார். கதியற்றுக்கிடக்கும் கோடிக்கணக்கான மனிதர்களின் துயரங்களைத் துடைக்கும் பொறுப்பு தன் முன் இருக்க, தனது சொந்த உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தருவது அயோக்கியத்தனமானது என்பதுதான் அவரது செயல்களுக்குப் பின் னால் இருந்த ஒரே காரணம்.

இப்படியான இரண்டு இழப்பு களுக்கிடையே அவரது வாழ்வில் முக்கியமானதொரு வரவும் நிகழ்ந்தது. திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் மாநாட்டுக்குச் சென்றபோது, முதல்முறையாக ஓர் இளைஞரைப் பார்த்தார். உலகம் அதுவரைகேட்டிராத புதிய தமிழ், அந்தஇளைஞரிடமிருந்து அருவியாகக் கொட்டியது. பார்த்த, கேட்ட கணத்தி லேயே தன் சுயமரியாதை இயக்கப் பயணத்தில் அந்தஇளை ஞரைச் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்தார். உண்மையில் அப்போது, மேடையில் உரைநிகழ்த்திக்கொண்டு இருந்த அந்த இளைஞனுக்கே... தனது வாழ்க்கை மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்கால வரலாறே அந்த மேடையில் தீர்மானிக்கப்படுகிற ரகசியம் தெரியாது. அந்த இளைஞர்... தமிழக மக்களால் பிற்பாடு அன்புடன் 'அறிஞர் அண்ணா' என அழைக் கப்பட்ட சி.என்.அண்ணாதுரை.

அண்ணாவின் வரவு, சுயமரியாதை இயக்கத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. தகிக்கும் வெப்பக் காட்டாறாக ஒருபுறம் ராமசாமியார் தன் சிந்தனைச் செறிவால் மக்களின் மூடத்தனங் களுக்குச் சாட்டையடி கொடுக்க, இன்னொருபுறம் குளிர்ந்த தென்றலாய் அண்ணா தன் தமிழால் கேட்போர் நெஞ்சங்களைச் சுண்டி இழுத்து வசப்படுத்திவந்தார். அதுவரை சம்ஸ்கிருதக் கலப்பு காரணமாக மக்களின் மனங்களிலே மரத்துக்கிடந்த மொழி உணர்வு, தன் புதிய நீரோட்டத்தை அண்ணாவின் துள்ளு தமிழ்ப் பேச்சில் கண்டுபிடித்தது. தமிழில் புலமையும் ஆற்றலும் மிக்க புதிய இளைஞர் கூட்டம்ஒன்று ஆர்த்தெழுந்து ராம சாமியாரின் சுயமரியாதை இயக்கப் படையில் அணி வகுத்து நின்றது. மொழி காரணமாக, தமிழரிடத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சி தோன்றியிருந்தது. மறைமலை அடிகளும் திரு.வி.கவும் முன்பே பாதை போட்டுக் கொடுத்திருந்தாலும், இந்தக் காலகட்டத்தில்தான் அது முழுமையான அளவில் படித்த மக்களின் மனதிலே உணர்வாக உருத்திரண்டது.

1937ல் நடைபெற்ற தேர் தலில் வெற்றிபெற்று காங் கிரஸ் சார்பில் முதல் அமைச் சராகப் பதவி ஏற்றதும், முதல் காரியமாகப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடத் திட்டமாக்க ஒரு சட்டம் கொண்டு வந்தார் ராஜாஜி. ராஜாஜியின் இந்தத் திட்டத்துக்குப் பின் உள்ள சதியை உணர்ந்துகொண்ட ராமசாமியார், துடித்து எழுந்தார்.

1938 செப்டம்பரில் சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கானோர் கூடினர். 'தமிழ்நாடு, தமிழருக்கே!' என இச்சமயத்தில்தான் முதன் முறையாக அறைகூவல் விடுத்தார். தமிழ்நாடு முழுக்க இந்தித் திணிப்புக்கு எதிராகக் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன. அரசாங்கம் அடக்குமுறையை ஏவிவிட்டது. பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டனர். ராமசாமியார் கைது செய்யப்பட்டு இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, முதலில் சென்னைச் சிறையிலும் பின்னர் பெல்லாரி சிறைக்குமாக மாற்றப்பட்டார்.

சென்னையில் அதே வருடம் நவம்பர் மாதம் மறைமலை அடிகளின் மகளான நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்ற தமிழகப் பெண்கள் மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்படி தோழர் ராமசாமியாருக்கு ஒரு புதுப் பெயர் சூட்டப்பட்டது.

அன்று அவர்கள் வழங்கிய 'பெரியார்' எனும் சொல், காலத்தில் நிலைத்து நின்று தனக்கெனத் தனிப் புகழைத் தேடிக்கொண்டது!-சரித்திரம் தொடரும்

நாயகன் பெரியார் 9

நான் பேச்சாளனுமில்லை, எழுத்தாளனுமில்லை.
உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் கருத்தாளன்!

-பெரியார்

மாநாட்டின் அத்தனை கண்களும் ஈ.வெ.ராமசாமியார் மீதே நிலைகுத்தி நின்றன!

தனது கனவாக இருந்த வகுப்புவாரித் தீர்மானம், சூழ்ச்சியாலும் பகையாலும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட துரோகம், ராமசாமி யாரின் நாடி நரம்புகள் அனைத்தையும் புடைத்தெழச் செய்தது. மேடையில், மாநாட்டின் தலைவராக வீற்றிருந்த திரு.வி.க, ராமசாமியாரின் திடீர் ஆவேசம் கண்டு திகைத்து நின்றார். மூன்று முறை தனது கைத்தடியால் நிலம் அதிரச் செய்த ராமசாமியார், தனது மஞ்சள் சால்வையை இழுத்துத் தோளில் போட்டபடி திரு.வி.கவைப் பார்த்து, ''முதலியார் அவர்களே! காங்கிரஸால் இனி என்னைப் போன்ற பிராமணர் அல்லாதாருக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் காங்கிரஸைவிட்டு இப்போதே வெளியேறுகிறேன். இனி தமிழ்நாட்டில் சாதியையும், அதைத் தாங்கிப் பிடிக்கும் வர்ணாசிரமதர்மத்தையும், அதனை ஆதரிக்கும் காங்கிரஸையும் ஒழித்துக்கட்டுவதுதான் என் முதல் வேலை!'' எனக் கர்ஜித்தபடி மாநாட்டுப் பந்தலைவிட்டுப் பெருங்கூட்டத்தினர் புடைசூழ விறுவிறுவென வெளியேறினார். புயல் கடந்த பூமி யாக மாநாட்டுப் பந்தல் வெறுமைகொண்டது.ராமசாமியார் அன்று எடுத்த முடிவு, சாதியம் எனும் மனித குல விரோதியின் தலைக்கு அவர் முதன்முதலாக இறக்கிய பேரிடி! உலக வரைபடத்தில் தமிழர்கள் தங்களை எவற்றோடும் பொருந்தாத தனி இனமாக அடையாளம் காணுமளவுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் முதல் படி!

வரலாற்றில் இதுவரை நடந்த அனைத்து மாற்றங்களுக்கும் புரட்சிகளுக்கும் இரண்டு பேர் அடிப் படைக் காரணங்களாக இருந்து வந்திருக்கின்றனர். ஒருவர் சிந்தனையாளர்; இன்னொருவர் செயல்படுத்துபவர். சொல்லப்போனால் சிந்தனையாளர் பிறந்து எத்தனையோ ஆண்டுகள் கழித்துதான் அதனைச் செயல்படுத்துபவர் பிறப்பார். ரூஸோவுக்கும் பிரெஞ்சுப் புரட்சிக்கும், மார்க்சுக்கும் லெனினுக்கும் இடையில் உள்ள கால வித்தியாசங்கள் அதனை நமக்கு மெய்ப்பிக்கின்றன. ஆனால், வரலாற்றில் வேறெங்கும் இல்லாத அதிசயமாக, ஒரு சிந்த னையாளரே செயல் வீரராகக் களத்தில் இறங்கிப் போராடி வாகை சூடிய கதைகள் அபூர்வத்திலும் அபூர்வம்! அன்று மாநாட்டுப் பந்தலைவிட்டு ராமசாமியார் ஆவேசத்துடன் வெளியேறியது அந்தப் போராட்டத்தின் முதல் பொறி!

ஒரு வேகத்தில் வார்த்தைகளை வீசி வெளியே வந்துவிட்டாரே தவிர, காங்கிரஸ் எனும் பிரமாண்ட விருட்சத்துக்கு எதிரே தான் ஒரு தனி ஆளாக நிற்பதாகவே உணர்ந்தார். தன்னால் வளர்க்கப்பட்ட அதே விருட்சத்தை இப்போது தானே வெட்டி வீழ்த்த வேண்டிய நெருக்கடியும் கட்டாயமும் அவருக்கு. நினைப்பதற்கே மலைப்பாக இருந்த அந்த விருட்சத்தை நான்கே வருடங்களில் அவர் வெட்டி வீழ்த்தி வரலாறு படைத்ததுதான் ராமசாமியாரின் ஈடு இணையற்ற சாதனை! அந்தச் சாதனையை அவருக்கு ஈட்டிக்கொடுத்தது ஒரு கோடரி. அந்தக் கோடரியின் பெயர்... சுயமரியாதை இயக்கம்.

காங்கிரஸைவிட்டு வெளியேறினாலும், காந்தியையும் கதரையும் ராமசாமியாரால் அவரது உள்ளத்திலிருந்து முழுவதுமாகத் தூக்கி வீசியெறிய முடியவில்லை. ஆனாலும், 'முதலில் இந்தச் சாதியை ஒழிக்காமல் தேச விடுதலைக்குப் போராடுவது என்பது, கோழி முட்டைக்கு மயிர் நீக்கும் வேலை' என்பதில் உறுதியாக இருந்தார். மதத்தையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்காமல், சாதிய ஒழிப்பு என்பது ஆகாத காரியம் என்பதையும் அறிந்திருந்தார். மதம், யாரை உயர்ந்த குலத்தவராக அடையாளம் காட்டியதோ, அவர் கள் தொடர்ந்து எல்லா வகைகளிலும் உயர்ந்துகொண்டே இருக்க, மதம் கீழானவர்களாகச் சித்திரித்தவர்களெல்லாம் மேலும் கீழான நிலைக்கே சென்றுகொண்டு இருப்பதுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஆணிவேர் என்பதில் தெளிவாக இருந்தார். இந்த நிலை மாறி, அனைவரும் சாதி எனும் மேலாதிக்கம் இல்லாதவர்களாக, எந்த அதிகாரத்துக்கும் கட்டுப்படாதவர்களாகச் சம நிலையில் வாழ வேண்டுமானால், முதலில் அந்த வரிசையை உருவாக்கிய வர்ணாசிரமதர்மத்தையும் அதற்குக் காரணமான மத நம்பிக்கைகளையும் ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்த அடிமைத்தனத்திலிருந்து மக்கள் முழுமையாக விடுதலை பெற வேண்டுமானால் முதலில் தேவை, அனைத்தையும் ஏன், எதற்கு என காரணகாரியங்களை அலசி ஆராயும் பகுத்தறிவு. அடுத்து, 'நாமும் மனிதன்; மற்றவர்களும் மனிதர்; பின் என்ன காரணத்துக்காக ஒருவரைக் கண்டதும் பயப்பட்டுக் குனிந்து கூழைக் கும்பிடு போட வேண்டும்?' எனத் தனக்குள் கேள்வி கேட்கும் தன்மான உணர்ச்சி. இந்த இரண்டையும் மக்களின் உள்ளத்தில், பேச்சாலும் எழுத்தாலும் ஊட்டினால் போதும்... இந்தச் சாதிய அடுக்கு நிலையில் ஓரளவு மாற்றம் நிகழும். பிராமணரல்லாத இதர சாதியினரும் கல்வியும் அறிவும் பெற்று, அவர்க ளுக்கு ஈடாக வாழ்க்கையில் உயர்ந்த நிலைகளை அடைய முடியும் என நம்பினார். நாளைய சமூகம் புத்தொளியும், அறிவெழுச்சியும், சமநீதியும் கொண்ட புதிய சமூகமாக மலரும் எனப் புறப்பட்டார் ராமசாமியார்.

எழுத்திலும், பேச்சிலுமாக ராமசாமியார் வீறுகொண்டு எழுந்து தமிழகம் முழுக்கச் செய்த பிரசாரங்கள், காங்கிரஸ் கூடாரத்தையே ஆட்டம் காணவைத்தன. ராமசாமியாரின் கூட்டங்களுக்கு மக்கள் அலையெனத் திரண்டுவந்தது, உயர் சாதியினருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. மேடைகளில் அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது செருப்புகள் பறந்தன. அழுகின முட்டைகள், சாணி உருண்டைகள், கற்கள் பறந்தன. தண்ணீர்ப் பாம்பு விட்டுக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த எதிர்ப்புகள் அனைத்தையும் கண்டு கலங்காமல், ராமசாமியார் நெருப்புச் சூறாவளியாக நிமிர்ந்து நின்றார். தன் கருத்துக்களால் மக்களின் முதுகில் சம்மட்டி கொண்டு அடித்து எழுப்பினார். சாதி, சம்பிரதாயம், பெண் அடிமை, தேவதாசி முறை என எதையும் விட்டுவைக்காமல் அனைத்துக்கும் அதிரடியாக வேட்டுவைத்தார்.

ஈரோட்டில் அவர் துவக்கியிருந்த 'குடியரசு' எனும் பத்திரிகை அவரது சுயமரியாதைக் கருத்துக்களை நாடு முழுக்க எடுத்துச் செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டது. விளைவு, 1928ல் எஸ்.முத்தையா முதலியார் போன்றவர்களின் பெரும் முயற்சியால், அப்போதிருந்த ஆங்கிலேயே அரசாங்கம் வகுப்புவாரி உரிமையை நடைமுறைக்குக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வு தொண்டர்களிடையேயும் மக்களிடையேயும் பெரும் உணர்ச்சி அலைகளைத் தோற்றுவிக்க, 1929 பிப்ரவரி மாதத்தில் 18, 19, தேதிகளில் செங்கல்பட்டு ராட்டினங்கிணறு அருகே முதலா வது சுயமரியாதை மாநாடு நடந்தது.

தமிழகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இனி, அனைவரும் தங்களது சாதிப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்பது மாநாட்டின் முக்கியத் தீர்மானமாக அனைவராலும் வரவேற்கப்பட்டது. அறிவுரீதியாக இந்தியாவின் இதர மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் பெற்ற முதல் பெருமை மிக்க விடுதலை இது!

மாநாட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க பெரும் எழுச்சி ஏற்பட்டது. ஆர்.கே.சண்முகம், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் போன்ற நீதிக் கட்சித் தலைவர்கள் சுயமரியாதைக் கூட்டங்களில் நாடு முழுக்கக் கலந்துகொண்டு கொள்கைப் பிரசாரம் செய்தனர். பின்னாட்களில் குத்தூசி என அழைக்கப்பட்ட குருசாமி, சாமி சிதம்பரனார், சிங்காரவேலர், ஜீவா, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், பொன்னம்பலானார், கோவை சி.அய்யாமுத்து எனப் பெரும் படையே பிரசாரப் பீரங்கிகளாக சுயமரியாதைக் கருத்துக்களை மக்களிடையே கொண்டுசென்றனர். புரட்சி என்பது வார்த்தையாக இல்லாமல், நாடு முழுக்கத் தொண்டர்கள் பலர் சுயமரியாதைத் திருமணங் களை ராமசாமியாரின் தலைமையில் நடத்தினர். அதுவரை பிராமணர்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டு வந்த தமிழகத்தின் கலை, இலக்கியம், சிந்தனை, வரலாறு, மொழி போன்றவை மறு பரீசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.

தமிழகம் முழுக்க ஏற்பட்ட இந்தத் திடீர் எழுச்சியும் மாறுதல்களும் உலகின் இதர தமிழர்களின் காதுகளில் தேனெனப் பாய்ந்தது. இந்த மாறுதல்களுக்குத் தலைவரான ராமசாமியாரைக் காணவும் அவரது கருத்து மழையில் நனையவும் விரும்பி தங்களது நாடுகளுக்கு வருமாறு அழைத்தனர். 1929 டிசம்பரில் நாகப்பட்டினம் துறைமுகத் திலிருந்து மலேயாவுக் குப் புறப்பட்ட கப்ப லில், ராமசாமியார் தன் மனைவி நாகம்மையாருடன் ஏறினார்.

1930 ஜனவரியில் அவர் தமிழ்நாடு திரும்பியபோது, அவரை வரவேற்க ஆவலுடன் சென்ற தொண்டர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது!-சரித்திரம் தொடரும்

நாயகன் பெரியார் 8


பொதுவுடைமை என்பதன் தத்துவமே, மனிதன்
கவலையற்று வாழ்வதுதான். சொந்த உடைமை என்பது
கவலை சூழ்ந்த வாழ்வேயாகும்!

-பெரியார்

1922, திருப்பூர் மாநாடு... காங்கிரஸின் சமீபத்திய எழுச்சி காரணமாக கடந்த மாநாடுகளைக் காட்டிலும் இம்முறை கூட்டம் களைகட்டியிருந்தது. மாநாட்டில் வெடிக்கப்போகும் பிரச்னை குறித்து தொண்டர்களிடம் பதற்ற மும் எதிர்பார்ப்பும் கூடியிருந்தது.

ராமசாமியார் வகுப்புவாரி தீர்மானத்தை முன்மொழிந்த போது, கூட்டத்தில் பெரும்பான்மையினராக இருந்த பிராமண சமூகத்தினர் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, கடும் ஆட்சேபக் குரலெழுப்பி, அவரைப் பேசவிடாமல் தடுத்தனர். ராஜாஜியும், 'இம்முறை எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்த மாநாட்டில் பார்த்துக்கொள்ளலாம்' எனக் கைவிரித்துவிட, ராமசாமியாரின் உள்ளத்து உணர்வுகள் கொதிநிலையின் உச்சத்தை அடைந்தன. 'இப்போது கோபப்பட்டு ஏதேனும் முடிவெடுத்தால், தொண்டர்கள் மத்தியில் தேவை இல்லாமல் கலவரம் ஏற்பட்டுவிடும்' என சேலம் விஜயராகவாச்சாரி, திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவரது இதயமோ குமுறிக்கொண்டு இருந்தது. அவரது முறை வந்தபோது, மேடையில் ஏறினார்.எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறும் நெருப்புத் துண்டங்களாக வார்த்தைகள் தெறித்தன. மாநாட்டுப் பந்தலில் பெரும் சூறாவளி நுழைந்தது போல், அவரது உணர்ச்சி மிக்க உரை கூட்டத்தை அதிரவைத்தது. 'இந்தச் சாதி ஒழிய வேணுமானால், முதலில் சாதியத்தை இறுக்கப் பற்றிக்கொண்டு இருக்கும் வருணாசிரம தர்மத்தின் இரண்டு முக்கிய தூண்களான ராமாயணம், மனுதர்ம சாஸ்திரம் இரண்டையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் உருப்படும்!' என ஆவேசத்துடன் தன் எதிர்ப்பை எதிரிகளுக்கு அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தினார்.

காங்கிரஸைவிட்டு அப்போதே வெளியேற அவரது மனம் துடித்தாலும், மகாத்மா காந்தியும் அவரது கொள்கைகளும் அவரைக் கட்டிப்போட்டன. இனி, தேச விடுதலையைக் காட்டிலும் சாதிய விடுதலையில்தான் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டார் அதற்கேற்றாற்போல், மதுரையில் சுற்றுப் பயணம் செய்துகொண்டு இருந்தபோது ஒரு கடிதம் வந்தது. அடுத்த நொடியே தன் வயிற்றுவலி யைக்கூடப் பொருட்படுத்தாமல், திட்டமிட்டு இருந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டுக் கேரளாவுக்குப் புறப்பட்டார்.வைக்கம்... கேரளத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அழகிய நகரம். ஆனால், அங்கிருந்த உயர்சாதி மனிதர்களின் மனங்களிலோ அழுக்கு நிறைந்திருந்தது. அவர்கள், குறிப்பிட்ட கோயில் வீதிகளில் நடந்து செல்ல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராட் டத்தில் இறங்க, சமஸ்தானத்துக் காவலர்கள் அவர்களைச் சிறையில் அடைத்தனர். இந்தச் சமயத்தில்தான் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் போன்றோர் ராமசாமியாருக்குத் தகவல் கொடுக்க, வரலாறு வைக்கம் நகரத்தை நோக்கி மையம்கொண்டது. ராமசாமியாருடன் அவரின் மனைவி நாகம்மை, தங்கை கண்ணம்மாள், கோவை அய்யா முத்து, மாயூரம் ராமநாதன் ஆகியோரும் போராட்டத்தில் குதித்தனர்.

திருவிதாங்கூர் ராஜாவுக்கு பெரும் தலைவலி! ஈரோட்டுக்குச் சென்றபோதெல்லாம் தனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கும் ராமசாமியை உபசரிக்க அரண்மனையிலிருந்து ஆட்களை அனுப்பினார். ''நான் விருந்தாளி இல்லை, போராளி! என் மேல் மதிப்பிருந்தால் தடையை விலக் கித் தீண்டாமைக்கு முடிவு கட்டுங்கள். இல்லாவிட்டால், என் னைச் சிறையில் அடையுங்கள்'' என்றார் ராமசாமியார். காவலர்கள் அவரைச் சிறைப்பிடித்தனர். ஆறு மாதத் தண்டனையாக திருவனந் தபுரம் அருவிகுத்திச் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், மன்னர் நினைத்தது போல் போராட்டம் ஓயவில்லை. நாகம்மையும் கண்ணம்மாளும் திருவிதாங்கூர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். மக்களின் எழுச்சி, மன்னரை அசைத்தது.

இந்தச் சூழலில் வேடிக்கையான ஒரு சம்பவமும் நிகழ்ந்தது. அருவி குத்திச் சிறையில் சில நம்பூதிரி களால் 'சத்ரு சம்ஹார யாகம்' என்ற யாகம் நடத்தப்பட்டது. அவர்களது எதிரியான பெரியா ரைத் தீர்த்துக்கட்டுவதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். ஆனால், மறுநாள் சிறைக்கு வந்த செய்தியோ தலைகீழாக இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் திருநாடு அடைந்துவிட்டார் என்பதுதான் அந்தச் செய்தி! மன்னர் மரணம்அடைந்ததை மரியாதையாக அப்படிக் குறிப்பிடுவது வழக்கம். இந்தச் செய்தி, நம்பூதிரிகளின் வயிற்றைப் புரட்டியது. மன்னரின் மரணம் காரணமாக, சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட, ராமசாமியாரும் சகாக்களும் கூட விடுதலையாகினர். ராணி ஒரு வழியாகத் தடையை விலக்கிக் கொள்ள முடிவெடுத்தார். எனினும், ராமசாமியாருக்குக் கடிதம் எழுதப் பிடிக்காமல் காந்திக்கு எழுதினார். காந்தி நேரடியாகப் புறப்பட்டு வைக்கம் வந்து ராணியுடனும் ராமசாமியாருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றது.

ஆனால், வட நாட்டுப் பத்திரிகை ஒன்றில் இந்த வைக்கம் போராட்டம் குறித்து மகாத்மா காந்தி எழுதிய எந்தக் குறிப்பிலும் ராமசாமியாரின் பெயர் இடம்பெறவில்லை. தன் இதயத் தில் வைத்து வணங்கிய தலைவ ரான காந்தியா இப்படிச் செய்தது என்று ராமசாமியாருக்கு வேதனை. ஆனால், திரு.வி.கவின் வழியாக வரலாறு அவருக்கு 'வைக்கம் வீரர்' என்ற மகத்தான பெயரைச் சூட்டி மகிழ்ந்தது. .

காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் வைத்த நம்பிக்கைகளை இழக்க ராமசாமியார் தயாராக இல்லை. இருந்தாலும் அன்று காங்கிரஸில் பெரும் தலைவர்களாகக் கருதப்பட்ட பலரும் தீண்டாமையைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தனர். அதில் ஒரு சம்பவம் ராமசாமியாரின் நெஞ்சில் நெருஞ்சியாகத் துளைத்தது. 1923ல் ராமசாமியார், காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். திண்டுக் கல்லில் பிரசாரத்துக்காகச் சென்ற போது ஒரு பிராமணத் தலைவரின் வீட்டில் உணவுக்கு ஏற்பாடாகிஇருந்தது. தொண்டர்களுக்கு வெளியில் பந்தி நடக்க, தலைவ ரானபடியால் ராமசாமியாருக்குத் தனியாக நடையில் இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவுக்கும் அதே வீடு, அதே இடம். காலையில் அவர் சாப்பிட்ட அந்த இலை எடுக்கப்படாமல் அங்கேயே கிடக்க, புதிய இலை போட்டு மீண்டும் உணவு பரிமாறப்பட்டது. 'சேர்த்து எடுத்துவிடுகிறோம்' எனச் சமாளித்தார்கள். இரவும் அதே வீடு, அதே இடம். இப் போதும் மதியம் சாப் பிட்ட இலை எடுக்கப் படாமல் அங்கேயே ஈ மொய்த்தபடி சுருங்கிக்கிடக்க, ராமசாமியாரின் மனம் அவமானத்தால் துவண்டது. உச்சகட்டமாக வந்தது சேரன் மாதேவி குருகுலப் பிரச்னை.

அக்காலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் நிதியில் இந்தியா முழுக்க குருகுலங்கள் நடத்தப்பட்டு வந்தன. தீண்டாமைக்கு எதிராக ஊர் உலகத்துக்கு எல்லாம் பிரசாரம் செய்துவந்த காங்கிரஸ் நடத்தி வந்த குருகுலங்களிலேயே, பிராமணர்களுக்கெனத் தனியாக உணவு, குடிநீர் போன்றவை கடைப் பிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று சேரன்மாதேவி குருகுலம். அதை நடத்தி வந்தவர் வ.வே.சு. ஐயர்.

குருகுலத்தில் பிராமணர்களுக்கென வைக்கப்பட்ட குடிநீர்ப் பானையில் ஒரு சிறுவன் நீர் அருந்த, இதர பிராமணச் சிறுவர்களும் ஊழியர்களும் அவனை அடித்துவிட்டனர். அடிபட்ட சிறுவன், பின்னாளில் தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஓமந் தூர் ராமசாமி ரெட்டியாரின் மகன். ஓமந்தூரார் இந்தப் பிரச் னையை ராமசாமியாரிடத்தில் கொண்டுசெல்ல, அதுநாள் வரை தன் உள்ளத்துள் ஊறிக்கொண்டு இருந்த பிரச்னைகளை எல்லாம் ஒன்று திரட்டி, இதற்கு முடிவு கட்டியே தீருவதெனக் களத்தில் இறங்கினார்.திரு.வி.க., டாக்டர் நாயுடு, எஸ்.ராமநாதன், தண்டபாணிப் பிள்ளை என அனைவரும் ஒன்று திரண்டு, காந்தியிடம் பிரச்னை யைக் கொண்டுசென்றனர். குரு குலங்களில் சம பந்தி உணவுதான் தரப்பட வேண்டும் என உத்தரவிட் டார் காந்தி. ஆனால், வ.வே.சு. ஐயர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதற்கு இதர பிராமணர்களி டமிருந்தும் ஆதரவு பெருக, தான் மிகவும் நம்பிய பல பிராமணர்களின் சுயரூபம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டதை அறிந்து ராமசாமியார் அதிர்ச்சியடைந் தார். இத்தனை நாள் இந்தக் கட்சிக்காக தான் உழைத்த உழைப் பெல்லாம் வீண்தானோ எனும் ஐயம் அவர் உள்ளத்தை ஊட றுத்தது.

இதனிடையேதான், 1925ல் தமிழர் வாழ்வின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் மாநாடு வந்தது. வகுப்புவாரி தீர்மானத்தை முன்வைத்து ராமசாமியார் பேசத் துவங்க, அதற்குப் பொதுக்குழுவில் பிராமணர்கள் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்தனர். வகுப்புவாரித் தீர்மானம் கொண்டுவந்தால் ஒட்டுமொத்தமாக காங்கிரஸை விட்டு வெளியேறுவோம் எனும் கடும் அஸ்திரத்தை அவர்கள் கையில் வைத்திருந்தனர். இதனால் பயந்த திரு.வி.க., ராமசாமியாரின் கோரிக்கையை நிராகரித்தார்.

சக மனிதருக்கு எதிராகச் சாதியின் பேராலும் மதத்தின் பேராலும் காலம்காலமாக நடந்து வரும் அட்டூழியங்களுக்கு முடிவுரை எழுத இதுவே சரியான தருணம் என ராமசாமியார் ஒரு சிங்கம் போல் எழுந்தார். மேடையில் இருந்த தலைவரைப் பார்த்து மூன்று முறை தன் கைத் தடியால் தரையை ஓங்கி ஆவேசத்துடன் தட்டினார். தமிழகமே அதிர்ந்தது. தமிழர்களின் அடிவானத்தி லிருந்து சூரியன் எழுந்தது!.....

அஜயன் பாலா...