சென்னை: ""தி.மு.க.,வை என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன். இந்த வீர சபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம்,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் ஏற்பாட்டின்படி அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 2ம் தேதி ஒரு கடிதம் வந்துள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்க ஒரு உத்தரவு கருணாநிதி அரசால் பிறப்பிக்கப் பட்டுள்ளது. இப்படி ஒரு மாபாதகத்தை செய்கிறோமே? நாளை அண்ணா அறிவாலயத்திற்கு என்ன கதி ஏற்படும்? தனது, மனைவி, துணைவி மற்றும் தன் பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் கட்டியுள்ள மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்ன கதி அடையும் என்பதை கருணாநிதி புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
விரைவில் காட்சிகள் மாறும், கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கு தெரியாவிட்டாலும், அவர் உடன் இருப்பவர்களுக்காவது தெரிய வேண்டாமா? ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, பிறகு மனிதரையே கடிப்பது போல அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை இடிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய் இருக்கிறது. அ.தி.மு.க., மாபெரும் இயக்கம் என்பதும், அதன் தொண்டர்கள் மாபெரும் உறுதி படைத்தவர்கள் என்பதும் கருணாநிதிக்கு தெரியாது.
வன்முறை கலாசாரம் என்பது ஒரு மனிதர் இன்னொரு மனிதரை வெட்டுவது மாத்திரம் அல்ல. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையறாது தொல்லை கொடுப்பதும் வன்முறை கலாசாரம் தான். பொன்விழா, பிறந்த நாள் விழா கொண்டாடி என்ன பிரயோஜனம்? நாட்டுக்கும், நாலுபேருக்கும் நல்லது செய்யாதவர்கள் என்றைக்கும் பூமிக்கு பாரம், நாட்டிற்கும் சாபக்கேடு. சரித்திரம் சந்தித்த எத்தனையோ கெடுமதியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.
எம்.ஜி.ஆர்., உருவாக்கிய கட்சியின் பொதுச் செயலர் என்ற முறையில், கட்சியை கட்டிக் காப்பேன் என அவரது தாய் படத்தின் மீது செய்து கொடுத்த சத்தியத்தின் பேரில், அ.தி.மு.க., கட்சியை, கட்சி கொடியை காக்கும் கடமை எனக்கு உள்ளது. அதற்காக ஒரு சபதத்தை இன்றைக்கு எடுக்கிறேன். தி.மு.க.,வை "என் வாழ்நாளில் பூண்டோடு அழிப்பேன்' என சபதம் எடுக்கிறேன். எத்தனை இடைஞ்சல்கள் வந்தாலும், எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும், அதனை கடந்து அ.தி.மு.க., வின் லட்சக்கணக்கான தொண்டர் கள் துணையோடு, தமிழக மக்களின் ஆதரவோடு தி.மு.க.,வை கூண்டோடு அழிப் பேன். இந்த வீரசபதத்தை நான் முடித்தே தீருவேன். இது சத்தியம். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
திருமண விழாவில் "திடுக்' தகவல்: ""அ.தி.மு.க., கட்சி அலுவலக கட்டடத்தை இடிக்க மைனாரிட்டி தி.மு.க., அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது,'' என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாமலை இல்லத் திருமண விழா சென்னையில் நேற்று நடந்தது. மணமக்களை அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வாழ்த்தி பேசியதாவது: நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தானும் வாழ வேண்டும், தன்னைச் சார்ந்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பர். அ.தி.மு.க., தொண்டர்கள் சிறந்த பண்பு நலன் கொண்டவர்களாக திகழ்கின்றனர். அண்ணாமலை, அ.தி.மு.க.,வின் கிளை செயலராகவும், என் பெயரில் இயங்கி வரும் பேரவைக்கு மாவட்ட செயலராகவும் பணியாற்றியுள்ளார். தென்காசி தொகுதிக்கு 2001ம் ஆண்டில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்கள் பணியை ஆற்றியுள்ளார். திருமண விழாவில் நல்ல வார்த்தைகளை பேச வேண்டும். மங்களகரமான வார்த்தைகளை பேச வேண்டும். இன்றைய சூழ்நிலை வேறுவிதமாக உள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நேரத்தில் நான் அது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போல மனிதநேயம் பொருந்திய எம்.ஜி.ஆர்., 1972ம் ஆண்டு நிறுவிய அ.தி.மு.க., தலைமை அலுவலக கட்டடத்தை இடிக்க, மைனாரிட்டி தி.மு.க., அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கே அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மணமக்கள் இல்லற வாழ்க்கையை துவங்குகிற நேரத்தில், மைனாரிட்டி தி.மு.க., அரசை நடத்திவரும் கருணாநிதி கட்சியின் கதை முடியப் போகிறது என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லி மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
நான் நினைக்கிறேன் இந்தம்மாவுக்கு வயசாக ஆக ஞாபக மறதி அதிகமாவுதுன்னு பின்னே அதிமுகன்னு சொல்றதுக்கு பதிலா திமுக திமுகன்னு சொல்றாங்க? பின்னே இப்படி பேசினாக்க அதிமுக வாழுமா தற்கொலையில்ல செஞ்சுகொள்ளும்?
(கிராபிக்ஸ் நல்லா இருக்கான்னு சொல்லுங்க)