Sunday, June 26, 2011

அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு அடக்கப்பட்டு, தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும்.

தி.மு.க. தோன்றுவதற்கான வரலாறு

அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் திராவிடர் என்ற சொல் சூத்திரர் என்ற சொல்லுக்குப் பிரதிச் சொல்லாகக் கருதப்படும் சொல்லாக இருப்பதாய்க் கருதப்பட்டு வந்ததால், அப்பெயரைக் கழகத்திற்கு வைக்க ஆந்திரர்கள் ஆட்சேபித்ததால் அக்கழகத்திற்கு தென் இந்தியர் விடுதலைக் கழகம் என்பதாகப் பெயரிட்டுத் (South Indian Liberal Federation) துவக்கினார்கள்.

என்றாலும், துவக்க காலத்தில் ஜமீன்தார்கள், செல்வவான்கள், படித்த கூட்டத்தினர் ஆகியவர்களே முன்னின்று முக்கியமானவர்களாக இருந்து துவக்கப்பட்டதால் இம்மூன்று குழுவினர்களின் நலனே அதற்கு முக்கியக் கொள்கையாக இருக்கவேண்டி வந்தது. ஆட்சியையும், பதவியையும் கைப்பற்றுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தாயிற்று.

ஆரம்பத்திலேயே பார்ப்பனர்களின் தொல்லை

இந்த முயற்சி பார்ப்பானுக்குப் பெருங்கேடாய் முடியக்கூடியதாயிருந்ததால் இம்முயற்சிக்குப் பார்ப்பனர்கள் கூண்டோடு எதிரிகளாய் இருந்து இந்த ஸ்தாபனம் வெற்றிகரமாய்த் தொண்டாற்ற முடியாமல் தொல்லைக்குள்ளாக் கப்பட்டு தக்கபலன் ஏற்படச் செய்யாமல் தடுக்கப்பட்டு வந்தது.

என்றாலும், இந்த ஸ்தாபனம் ஏற்பட்டதன் பயனாய் பார்ப்பனர் வேறு நாம் வேறு என்பதையும், பார்ப்பனர் தென்னிந்தியர்களுக்கு, திராவிடர்களுக்கு அரசியல், சமுதாய நல்வாழ்வுத் துறைக்கு பரம்பரை எதிரிகளும், தடங்கல்களுமாவார்கள் என்பதையும் திராவிட மக்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கும்படிச் செய்துவிட்டது.

திராவிடர்களின் நிலை

ஆனால் திராவிடர்கள் பாமரர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும், 100க்கு 100 பேரும் இருந்து வந்ததால் தாங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியாமல் இருக்கும்படி ஆரியர்களின் கடவுள், மதம் சாஸ்திரம் பாரத ராமாயணப் பற்று, முதலியவைகள் செய்துவிட்டபடியால் வெறும் பதவி உத்தியோகம், தனிப்பெருமை ஆகியவற்றி லேயே பற்றுக்கொண்டு சமுதாய வளர்ச்சியை முக்கியமாய்க் கருதாமல் போய்விட்டது.

அண்ணாவின் தலைமை

பிறகு அந்த ஸ்தாபனம் அரசியலில் பெருந்தோல்வியுற்றதன் பயனாய் சமுதாயத் தொண்டுக்கு என்றே துவக்கி நல்ல நிலையில் நடந்துவந்த சுயமரியாதை இயக்கத்துடன் அந்த ஸ்தாபனம் இணையும்படியான நிலைக்கு வந்ததன் பயனாய் தென்னிந்தியர் விடுதலை ஸ்தாபனம் என்கின்ற பெயர் மாற்றமடைந்து திராவிடர் கழகம் என்கின்ற பெயருடன் நடந்து வந்தது. இதில் பிளவு ஏற்பட்டதன் காரணமாய் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரால் மேற்சொன்ன தென்இந்தியர் விடுதலை ஸ்தாபனம் (ஜஸ்டிஸ் கட்சி) அண்ணாவின் தலைமையில் சுமார் 18 ஆண்டு பொறுத்து தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றி சமுதாயத்தின் முன்னேற்றத் தொண்டையே முக்கியமாய்க் கொண்டு இன்று தமிழர்களுக்கு ஆரியர் - பார்ப்பனர் அல்லாத தமிழர் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது.

தி.மு.கழகத்தின் அரும்பெரும் சிறப்பு

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலேயே பார்ப்பனர் தவிர்த்த மற்ற திராவிடர் சமுதாயத்திற்கு, சிறப்பாக சமூகத் துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும்படியான நிலையில் இருந்து வருகிறது.

இதன் தொண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இரண்டாவது, அரசியல் பதவிகளில் எல்லாவற்றிலும் தமிழர்கள் (விகிதாசாரம் பெறாவிட்டாலும்) அமரும் நிலை ஏற்பட்டது.

மூன்றாவதாக, கல்வித்துறையில் கல்வி பெற்ற மக்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

நாலாவது, இன்றைய ஆட்சி தனித்தமிழர் - திராவிடர் ஆட்சி என்று சொல்லும்படி இருப்பது.

அய்ந்தாவது பார்ப்பனன் என்றால் நமக்கு, தமிழனுக்கு சமமான பிறவியே அல்லாமல் எந்த விதத்திலும் உயர்ந்த பிறவி அல்ல என்பதை தமிழனின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் விளங்கி இருப்பது முதலியவைகளாகும்.

அடிப்படைக் கொள்கையில் வெற்றி

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகத்தைப் போலவே சமுதாயத்துறையில், அதன் அடிப்படைக் கொள்கையில் வெற்றிப்பாதையில் மாபெரும் வெற்றிப் பாதையில் செல்லுகிறது என்று சொல்லத்தக்க வண்ணம் இருந்து வருகிறது.

ஆகவே, திராவிடர் கழகமோ, திராவிடர் முன்னேற்றக் கழகமோ தனது இலட்சியத்தை - கொள்கையைச் சிறிதும் குற்றம் குறையின்றி வெற்றி வழியில் பின்பற்றித் தொண்டாற்றி வருகிறது.

இதை உலகிற்கு ஒரு புதுமை என்றுதான் சொல்லவேண்டும்.

உலகில், குறிப்பாக இந்தியாவில் - சமுதாயத் துறையில் இதுபோல் தொண்டாற்றிய - தொண்டாற்றும் வெற்றி ஸ்தாபனம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக இந்த ஸ்தாபனத்தின் தொண்டால் தமிழர்கள் பார்ப்பனர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்றும் சொல்லலாம்.

------------------------ தந்தை பெரியார் - "விடுதலை" - 11.03.1971

Saturday, June 18, 2011

அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி

இந்தியா முழுவதிலும் 2011இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன்முடிவின் முதல் கட்டமாக மொத்த மக்கள் தொகை 120 கோடிக்கும் அதிகம் என அரசினால் அறிவிக்கப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பின்போதே உள்சாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் சங்கங்களும், அரசியல் கட்சிகளும், மேல்சாதியினரும் கோரினர். அதை ஏற்கெனவே செய்திருந்தால், மீண்டும் ஆயிரக்கணக்கான கோடி உருபாவைச் செலவு செய்து, இரட்டிப்பு வேலையை மேற்கொள்ள வேண்டிய பணிச்சுமை ஏற்பட்டிருக்காது. ஆட்சியிலிருப்பவர்களில் மேல்சாதியினர் - பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினரின் உயர்கல்வி முன்னேற்ற அளவு, அரசுப் பணிகளில் பெற்ற பங்கின் அளவு இவற்றைத் தெளிவாக அறிந்திடவும். அவர்களுக்குச் சரியான பங்கு கிடைக்கவில்லை என்று அறிந்தால் - அதை அடைய அவர்கள் போராடுவார்கள் என்பதையும் கருதியே - முதல் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கை எடுக்க முடியாது என்று மறுத்தனர்.

இப்போது, 19.05.2011இல் கூடிய இந்திய அமைச்சரவை - சாதி, மதம், ஏழ்மை யை அளக்கும் அளவுகோல் இவற்றைப் பற்றிய விவரங்களை அறிவதற்கு, 2011 சூன் முதல் திசம்பர் முடிவுக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்புச் செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளது.

அதன்படி கணக்குப் பதிவு செய்கிற பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுச் செய்ய வேண்டும் என்றும்; அவர்கள் ஊராட்சிப் பணியில் உள்ளவர்கள், கணக்குப் (கர்ணம்) பிள்ளைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு அமர்த்தப்படுவோர் ஆகி யோரைக் கொண்டு வீடுதோறும் கணக்கு எடுக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருக் கிறார்கள்.

கணக்கெடுப்பில் எதை எதைப் பற்றி அறிய முயற்சிப்பார்கள்?

1. மண்சுவர்களை வைத்து வைக்கோல் கூரைபோட்ட வீடுகளில் குடியிருப்போர்;

2. 16 வயதுக்கு மேல் 59 வயது வரை உள்ள சம்பாதிக்கும் வயதினர் இல்லாத குடும்பங்கள்;

3. வயதுவந்த ஆண் இல்லாத - பெண்கள் தலைமையில் இயங்கும் குடும்பங்கள்;

4. ஊனமுற்றவரைக் கொண்ட குடும்பங்கள்;

5. வயதுவந்த - சம்பாதிக்கத் தகுந்த உடல்நலத்தோடு உள்ள குடும்பங்கள்;

6. 25 வயதுக்கு மேற்பட்ட - படிப்பறிவு அற்றவர்களைக் கொண்ட பட்டியல் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள்; மற்றும்

7. சொந்த நிலம் இல்லாத - அற்றைக் கூலிக்கு உடலுழைப்பு வேலை செய்வோர் குடும்பங்கள் என்பவைதான் இப்போது ஏழ்மையை அளப்பதற்கான அளவுகோல் களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள எழுத்தறிவு இல்லாதவர், உயர் கல்வி பெற்றவர்-பெறாதவர், அரசு அல்லது தனியார் துறையில் உத்தரவாதமுள்ள வேலை பெற்ற ஆண்-பெண் விவரம், அவரவர்களின் உள்சாதி கல்வியிலும் அரசு வேலையிலும்; ஆட்சி மன்றங்களிலும், சட்ட அவை களிலும் பெற்றுள்ள இடப்பங்கின் அளவு ஆகியவற்றை அறிய முடியாது; முடியாது. அவற்றையெல்லாம் அறியவும் பதிவு செய்யவும் கூடாது என்பதுதான், இந்திய உயர்சாதி ஆளும் வகுப்பினரின் நோக்கம். ஏனென்றால், அரசே அப்புள்ளி விவரங்களைத் தந்து விட்டால், அவையே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கையில் கிடைத்த போராட்டக் கருவிகளாக ஆகிவிடும். அக்கருவிகளைக் கொண்டு அவர்கள் போராடினால், எந்த முகத்தைக் காட்டி இந்திய அரசோ, மாநில அரசுகளோ ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களைப் புறக் கணிக்க முடியும்? முடியாது. எனவே தான், இந்த “ஏழ்மையை அளந்தறியும்” கணக்கெடுப்பு ஊர்ப்புற அளவில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது நகர்ப்புறத்திலும் “ஏழ்மைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின்” கணக்கை எடுப்பது மட்டும்தான் முதல் தடவையாக மேற்கொள்ளப்படுகிறது.

உள்சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு என்பது - 1931க்குப் பிறகு முதன்முதலாக இப்போதுதான் எடுக்கப் படுகிறது. அது ஏன் 1951இல் எடுக்கப்படவில்லை? அதில்தான் இந்திய ஆளும் வகுப்பின் சூழ்ச்சி அடங்கி யிருக்கிறது.

என்ன சூழ்ச்சி அது?

1941 போர்க்காலம். எனவே சரிவரக் கணக்கு எடுக்கப் படவில்லை.

1941 வரையில் இந்திய அரசும், மாகாண அரசுகளும் “பதிவு பெற்ற அரசு அலுவலர்களின் காலாண்டுப் பட்டியல்” என ஒன்றைக் காலாண்டுதோறும் வெளியிட்டனர். அதில் அலுவலரின் பெயர், படிப்பு, பதவியின் பெயர், வயது இவற்றுடன் கூட, அவரவர் உள்சாதியின் பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.

1920 வரையில், “பிராமணன்”, “சூத்திரன்” என்ற இரண்டு வகுப்புப் பிரிவுகளையும் அத்தகைய பட்டியலில் அச்சிட்டனர்; அத் துடன் அந்தந்த வகுப்பில் உள்ள உள் சாதியையும் அச்சிட்டனர். அதைப் பார்த்தவுடன் பார்ப்பனரும், மேல்சாதிக்காரரும்மட்டுமே - எழுத்தர் பதவிக்கு மேல் உள்ள எல்லாப் பதவிகளிலும் பெரிய எண்ணிக்கையில் இருப்பதை உணர முடிந்தது. இத்தகைய பட்டியலை 1950 வரையில் நான் பார்த்தேன்.

இந்த மேல்சாதி ஆதிக்கம் தெரியாமல் இருக்க வேண்டித்தான், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 1951 முதல் உள்சாதியைப் பதிவு செய்வதைக் கைவிட்டார்கள், இந்திய ஆட்சியில் ஆதிக்கம் செய்த பார்ப்பனர்கள். இதுவே உண்மை.

இப்போது, ஊரகப்புறங்களில் -

1. தொலைபேசி இணைப்பு வைத்திருக்கிற - குளிரூட்டிப் பெட்டி வைத்திருக்கிற - (வேளாண் செய்பவர்) ரூபா 50 ஆயிரம் பணம் வைத்திருக் கிறவர் ஒரு பிரிவாகவும்;

2. திக்கற்றவர்கள், தோட்டி வேலை செய்வோர், ஒரு பிரிவாகவும்; ஆதிப்பழங்குடிகள் ஒரு பிரிவாகவும் கொள்ளப்பட்டு, இவர்களில் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் கணக்கு எடுக்கப்படும்.

மற்றும் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட ஏழு அளவு கோல்களைக் கொண்டு ஏழ்மையின் அளவு அறியப் படும்.

வரப்போகும் 12ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் (1912-1913 முதல் 2016-2017) இப்புள்ளி விவரங்களைப் பயன்படுத்தித் தீட்டப்படும்.

ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே இருப்போர் அளவு 46 விழுக்காட்டுக்குமேல் இருக்கக்கூடாது என்று ஓர் உச்ச அளவை அரசே வைத்துக் கொண்டது. இது 50 விழுக்காடு வரை இருக்கலாம் என்று சேக்சானா குழு கூறுகிறது.

‘விளக்கெண்ணெய் செலவானது தான் மிச்சம் - பிள்ளை பிழைத்தபாடு இல்லை’ என்கிற பழமொழிக்கு ஒப்ப, 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011 சூன் முதல் எடுக்கப்படப் போகும் உள்சாதிவாரிக் கணக்கு, இந்திய மேல்சாதி ஆளும் வகுப்பினர் - ஒடுக்கப்பட்ட வகுப்பி னரின் வாயில் மண்ணைத் திணிப்பதற்கே பயன் படும்.

ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சாதி வேறுபாடு - கட்சி வேறுபாடு பாராமல் இந்திய அரசின் மோசடியான, பாதி கிணறு தாண்டும் சூதைப் புரிந்து கொள்ளுங்கள்.

- வே.ஆனைமுத்து--சிந்தனையாளன்

Saturday, June 11, 2011

ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு,

மாணவர்களுக்குப் படிப்பும் பரீட்சையும் முடிந்து கோடை கால விடுமுறை கிடைத்திருக்கிறது. இவ் விடுமுறையில் திராவிட மாணவர்கள் மகத்தான இன எழுச்சி சேவை செய்ய வேண்டியிருக்கிறது. படிக்கும் வேளையில் அரசியல் விவகாரங்களில் தலையிட்டு, தீவிரமாகக் கலந்து தொண்டாற்றுவதென்பது மாணவர்களின் உடனடியான லட்சியமாகிய தேர்வு என்பதைப் பாதிக்குமாதலால், கல்லூரியிலுள்ள காலத்தில் நம் மாணவர்கள் படிப்பிலேயே கவனமாயிருந்து வந்தனர். அவ்வப்போது ஓய்வு கிடைத்த சமயங்களில் சமுதாய வளர்ச்சிக்கான சிறுசிறு சேவைகளை மட்டுமே சிலர் செய்துவந்தனர்.

இப்போது பல மாணவர்களுக்கு மூன்று மாத ஓய்வும், பலருக்கு இரண்டு மாத ஓய்வும் கிடைத்திருக்கிறது. இந்த ஒய்வை நமது திராவிட சமுதாயத்தின் உரிமைப் போராட்டக் கிளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டியது மாணவர்களின் கடமையாகும்.

கோடை விடுமுறையின்போது தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் மட்டும் பல ஊர்களுக்குப் பிரசாரத்திற்காக அனுப்பப்படுவர். ஆனால் இவர்களே எல்லாக் கிராமங்களிலும் சென்று பிரசாரம் செய்து விட முடியாதாகையால், இதர திராவிட மாணவர்கள் அவரவர் ஊர்களைச் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்குச் சென்று நம் இயக்கத்தின் லட்சியங்களையும், சமுதாயத்தில் நமக்குள்ள சீர்கேடான நிலையையும் விளக்கிக் கூற வேண்டியது அவசியம் எனக் கருதுகிறோம். அத்துடன் இயக்கப் பத்திரிகைகளையும், வெளியீடு களையும் ஒவ்வொரு கிராமத்திலும் பரப்ப வேண்டியது இன்றியமையாத வேலையாகும்.

இறுதிக் கட்டத்தையடைந்திருக்கும் ஒரு அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, இனி எக்காலத்திற்குமே நம்மை நசுக்கக்கூடிய மற்றொரு ஆபத்தான அடிமைத்தனத்தில் சிக்கிக் கொள்வதும், நம் நேஷனுக்கு உரிய பரம்பரைப் பெருமையையும் சுயேச்சையையும் இழப்பதுமே நம் கதியானால், மாணவர்களாகிய உங்களுடைய கல்வியும், பட்டங்களும் என்ன பலனைத் தரப் போகின்றன?

இது 10ஆம் தேதி நடைபெற்ற லாகூர் இஸ்லாமியர் கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது இடைக்கால சுகாதார இலாகா மந்திரியான தோழர் கஜ்னாபர் அலிகான் கூறியிருப்பது.

இவ்வார்த்தைகளை திராவிட மாணவர்களும் தங்களுக்குப் பொருத்தமாக அமைத்துக் கொள்ளலாம். இதே கேள்வியை நம் மாணவர்களும் தம்மைத்தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

நம் இனம் எல்லாத் துறைகளிலும் பின்னணியில் கிடக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்கின்றோம்; நாள்தோறும் அனுபவிக்கின்றோம்; சங்கடப்படுகின்றோம். பணச் செருக்கினாலும், அறிவு விளக்கமில்லாத காரணத்தினாலும், சுய நலத்தினாலும், நம்மவர்களில் ஒரு சிலர் இந்த இழி நிலையை உணராமலிருக்கலாம். அவர்கள் கிடக்கட்டும்; நாளடைவில் உணர்வார்கள்; உணருமாறு செய்வோம்.

பின்னணியிலுள்ள நம் இனம் முன்னேறாவிட்டால் அதன் விளைவுகளுக்குத் தலை கொடுக்க வேண்டியவர்கள் யார்? வயது சென்ற வைதீகர்களல்லர். ஏட்டிக்குப் போட்டி பேசி பொழுது போக்கும் சுகவாசிகளல்லர். பிற்காலக் குடிமக்களான, இப்போதைய மாணவர்களே யாவர். நம் எதிர்ப்பு சக்திகளோ பலம் பொருந்தியவை. பழைமை, வழக்கம், கடவுள், சாஸ்திரம், ஜாதி ஆசாரம், புண்ணியம், ஆகிய உயர்ந்த மதில் சுவர்களைத் தற்காப்புக் கோட்டைகளாகக் கொண்டவை. நம் இழிவை நீக்கிக் கொள்ளும் முயற்சியில் இக்கோட்டைகளைத் தாண்டியோ, தகர்த்தெறிந்தோ செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த வேலைக்கு ஏற்ற கல்வி, அறிவு, துணிவு, சுயநலமின்மை, மாசற்ற மனம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவர்கள்தாம், மாணவர்கள். எனவே, இப்போது கிடைக்கும் கோடை விடுமுறையை வீணாக் காமல் திராவிட மாணவர்கள் கிராமந்தோறும் அணி அணியாகச் சென்று, நம் கழகக் கொள்கைகளை அமைதியான முறையில் விளக்கிக்கூறி, ஒவ்வொரு பெரிய கிராமத்திலும், ஒரு கழகத்தை நிறுவுவதற்கான வழிகளைச் செய்ய வேண்டுமெனக் கோருகிறோம்.

மாணவர்கள் படித்துத் தெரிந்து கொண்ட சரித்திரம், விஞ்ஞானம், பொருள் நூல், தத்துவம் ஆகிய எல்லாம் தங்கள் பிறப்புரிமையைப் பெறுவதற்குக் கூட துணை செய்யாவிடில், அவைகளைக் சுற்றதனால் ஆய பயன் என்ன?

நம் கழகத்தில் லட்சக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். நூற்றுக்கணக்கான புதிய கிளைச் சங்கங்களை அமைக்க வேண்டும். திக்கெட்டும் நமது சீரிய கொள்கைகள் தூவப்பட வேண்டும். பல்வேறு இயக்கங்களில் சிதறிக் கிடக்கும் திராவிட சக்தியை ஒன்று திரட்ட வேண்டும். ஹிந்து மதம் என்ற ஆரிய இருட்டறைக்குள் தடுமாறிக் கொண்டு கிடக்கும் பாமர மக்களை, ஜாதி - மத, உணர்வற்ற வெறும் மனிதனான திராவிடன் என்ற சூரிய வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும். இக்காரியங்களைச் செய்வதில் திராவிட மாணவர்கள் தாம் சோர்வோ, அலட்சியமோ, மன வெறுப்போ இல்லாமல் தொண்டாற்ற முடியும். இவைகளைச் செய்வது, தம் தம் குடும்பத்திற்காகவே என்ற உண்மையை உணர வேண்டும்.

நம் முன்பு உள்ள வேலைகளையோ, எழுத்தால், பேச்சால், அளவிட்டுக் கூற முடியாது. நமக்குள்ள பிரசார இயந்திரமோ, மிக மிகச் சிறிது. நமது பொறுப்பும் லட்சியமுமோ மிகப் பெரிது. ஆதலால் திராவிட மாணவர்கள் இந்த 2-3 மாதங்களுக்குச் செய்யும் சிறு சேவைகூட நல்ல பலனைத் தரும் என்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு.--------------------------- தந்தை பெரியார் - "விடுதலை" 15.4.1947

Wednesday, June 01, 2011

நாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை.


நாம் பதவியை மறுத்தது பெருமைக்காகவோ பதவி பெறுவது கூடவே கூடாது என்கின்ற வீம்புக்காகவோ அல்ல. மற்றெதற்காக வென்றால் நம் கட்சி எதை உத்தேசித்துப் பதவிகளைக் கைப்பற்ற வேண்டியது அவசியமானது என்ற கொள்கை கொண்டிருக்கிறதோ அதற்கு அப்பதவி பயன்படுமா என்று கருதிப் பார்த்துப் பயன்படாது என்று அன்று கண்டதாலேயே ஆகும். அதே நிலைமை இன்றும் இருக்குமானால் நாம் கண்டிப்பாகப் பதவிகளை வெறுத்தே ஆக வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். (விடுதலை 23.8.1940)

பதவியில் இருப்பது என்பது, எப்போதும் பதவியில் இல்லாமல் இருப்பவர்களைவிட இருப்பவர்களுக்குச் சற்றுப் பலம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பதவியில் இல்லாதவர்கள் கட்டுப்பாடற்றவர்களாய், கோழை களாய், தனிப்பட்ட சுயநலக்காரர்களாய் இருப்பார்களானால் பதவியில் இருப்பவர்களுக்குத்தான் அதிகப் பலம் என்று சொல்ல வேண்டும். ஆதலால் நம் எதிரிகள் பதவியில் இருக்கும் போது நாம் கட்டுப்பாடும் மான உணர்ச்சியும் கொண்டு வீரர்களாக, தன்னலமற்றவர்களாக இருப்போமானால் எதிரிகளை வீழ்த்துவது வெகு எளிதான காரியமாகும். (விடுதலை 19.1.1946)

நாட்டில் ஒரே ஒரு கட்சியைத் தவிர வேறு கட்சி இல்லவே இல்லை. வேறு கட்சி முளைக்கவும் இடம் இல்லை. பல கட்சிகள் இருக்கின்றன என்று சொல்லப்பட்டாலும் அவை எல்லாம் ஒரே கொள்கையும் ஒரே நோக்கமும் கொண்டவைகளாகவே மக்களை ஏய்க்கப் பல பெயர்களால் இருந்து வருகின்றன. அதாவது பொறுக்கித் தின்று வயிறு வளர்க்க வேண்டும்; பதவி வேட்டையாடிப் பெரு வாழ்வு வாழ வேண்டும் - இவை இரண்டும்தான் கொள்கையும் நோக்கமுமாக இருந்து வருகின்றன. அரசியல் சடடத்தையோ ஆட்சி முறையையோ தவறு என்று சொல்ல அரசியலின் பேரால் கட்சியே இல்லாமல் போய்விட்டது. இது மாத்திர மல்லாமல் நடப்புத் திட்டத்தைக் குறை கூறக்கூட நம் நாட்டில் கட்சிகள் கிடையாது. இதனால் அரசாங்கம் எதேச் சாதிகார அரசாங்கமாக இருக்க நேரிட்டுவிட்டது. (விடுதலை 15.9.1957)

முன்பெல்லாம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களைக் கொல்லத் தேவர்கள், பார்ப்பனர் களுக்கு ஆபத்து என்றால் உடனே மோகினியை விடுவார்கள். அதே மோகினிகள்தான் எம்.எல்.ஏ., எம்.பி. பதவியும் பர்மிட் வழங்கும் அதிகாரமும்; வேறொன்றுமே இல்லை. (விடுதலை 4.10.1958)

யார் ஒருவன் நல்லவன் ஒழுக்கசீலன் யோக்கியன் என்று போற்றப்படுகிறானோ, அவனை அயோக்கியனாக்க வேண்டுமென்றால் அவனைச் சட்டசபைக்கு அல்லது லோக்சபைக்கு அனுப்பினால் போதும். அவன் எப்பேர்ப்பட்ட அறிவாளியாகவோ புத்திசாலியாகவோ யோக்கியனாகவோ இருந்தாலும் தேர்தலில் பிரவேசித்தவுடனேயே அவன் அயோக்கியத்தனங்களுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. தேர்தல் ஆசை வந்து விட்டால் அன்று முதல் அவன் பித்தலாட்டத்தைக் கற்றுக் கொள்கிறான். போக்கிரித்தனம், மகாபித்தலாட்டம் இவைகளைக் கற்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் நம் நாட்டு அரசாங்க முறை அப்படி அமைந்து விட்டது. (விடுதலை, 25.12.1955)

அரசியலும், பொருளாதாரமும் சமூக அமைப்பு பெற்ற பிள்ளைகளே தவிரத் தனித்தனி விசயங்களல்ல. சமூக அமைப்பை எப்படி மாற்றி அமைக்கின்றோமோ, எப்படி உடைத்தெறிகின்றோமோ அதைப் பொறுத்தே அரசியலும் பொருளாதாரமும் தானாகவே மாறுபாடு அடைந்துவிடும். (குடிஅரசு 29.12.1935)

இந்தியாவின் அரசியல் கொள்கை சரியானபடி வளராதிருப்பதற்கு மூலக் காரணம் சமுதாயத்திலிருந்து வரும் கோளாறு என்றே கூறுவோம். சமுதாயத்திலிருந்து வரும் தாரதன்மை, வித்தியாசம் ஒழியாதவரை இந்நாட்டில் எத்தகைய அரசியல் கொள்கையும் நிலைத்திருக்க முடியாது. (குடிஅரசு 8.8.1937)

Saturday, May 28, 2011

மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்


தற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?

நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான்.

வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.

ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.
24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில்பெரியார் பேசியது

Thursday, May 26, 2011

பாலியல் படமெடுக்கும் “பயந்தாங்கொள்ளி” இயக்குனர்


இவ்வாண்டின் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அதிக ரசிகர்களை ‘கிறங்கடித்த படம்’ அல்லது திகிலூட்டிய படமென்றால் அதை லார்ஸ் வான் ட்ரையரின் ‘ஏன்ட்டி கிரைஸ்ட்’ என்று சொல்லலாம். கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோதே எழுந்த சர்ச்சைகள் வெவ்வேறு நாடுகளில் திரையிடப்பட்ட போதும் தொடர்ந்தன. ஏகமாய் கூட்டங்களை இப்படத்திற்குச் சேர்த்தது. ஒரு பெண் கணவனுக்கு செய்யும் சித்ரவதைகளின் உச்சத்தைக் கண்ட சில ஆண்கள் மயக்கமுற்று விழுந்தனர். திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் என் அருகினில் அமர்ந்திருந்தவர் ஒருவர் மயக்கமுற்றார். திரையரங்கில் பல சமயங்களில் அமளியும், சலசலப்பும் இருந்தன.

லார்ஸ் எப்போதும் சர்ச்சைக்குரிய இயக்குனராகத்தான் இருந்து வந்திருக்கிறார். 1995ல் ‘டாக்மே’ படங்கள் என்ற தலைப்பில் அவரும் சில இயக்குனர்களும் பாலியல் சம்பந்தமான படங்களை ஹாலிவுட் படங்களுக்கு எதிரானவைகளாக எடுக்க ஆரம்பித்தனர். அது ஒரு இயக்கமாகவே வளர்ந்தது. பெள் ரசிகர்களுக்காகவே “போர்னோ” படங்களை 1998ல் எடுத்திருக்கிறார். படுக்கை அறை கதைகள், அதீத சிருங்கார கதைகள் என அவை வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன. அவை வெகுஜனப்படங்களாகவும் அமைந்திருக்கின்றன. தன்னுடைய படங்கள் பற்றியப் பெருமிதத்தில் எப்போதும் இருப்பவர். சில்மிஷ குணம் கொண்ட அவரின் இயல்புகளை அவரின் படங்களில் காணலாம். உதவியோ, குரூரமோ, மகிழ்ச்சியோடு வெகு துள்ளலாகி வெளிப்படும் அவரிடம். கடவுள் முன்கூட தலைவணங்கத் தேவையில்லை. கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை. இருந்தாலும் அவனிடம் தலைவணங்கத் தேவையில்லாததால் அகங்காரத்துடன் நிற்கிறேன் என்பவர்.

‘டாக்மே’ வகைப்படங்கள் வறட்டு வாதப் படங்களாய், பரிசோதனை அம்சங்களைக் கொண்டு கிண்டல் தொனியில் வெளியிடப்பட்டவை. ஓரின பாலுணர்வு இயக்குனர் என்று அவரின் சில படங்களை முன்வைத்து அவர் பட்டம் சூட்டப் பெற்றிருக்கிறார். பத்து ஆண்டுகள் ‘டாக்மே’ வகைப்படங்களை ‘ஒரு போக்காக’ஹாலிவுட் படங்களுக்கு எதிராக நிறுவியவர். அவை பெரும்பாலும் வெளிப்புறப்படப்பிடிப்புகள் இல்லாமல், கட்டிடங்களுக்குள் நிகழும் சம்பவங்களாகவே அமைந்திருக்கும்.

படப்பிடிப்புற்கு ஒளி அமைப்போ, ஒலி வகையோ முறையாக இல்லாமல் இயற்கையில் கிடைப்பதை பயன்படுத்தினார். அந்த வகையில் 18 படங்கள் வெளிவந்தன. 2005க்குப் பின்னர் அவ்வகைப் படங்களை அவரே நிராகரிக்க ஆரம்பித்தார். ‘போர்னோ’ படங்கள் எடுக்க தனி நிறுவனமொன்றை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தவர் 1998ல் தாஸ்தாவிஸ்கியின் ‘இடியட்’டை எடுத்து சர்வதேச அரங்கில் பேசப்பட்டார். 2008ல் ‘டான்சர் இன் த டார்க்’ படத்தின் பாடல்கள் அவரின் வேறு உச்சங்களுக்குக் கொண்டு சென்றன. 2003ல் வெளிவந்த “டாக் வில்லே” அமெரிக்கச் சமூகத்தின் குரூரங்களை தோலுரிப்பதாக இருந்தது. தரையில் வரையப்பட்ட ‘செட்டுகள்’ என்பது அதன் சிறப்பம்சமாக அமைந்தது.

‘ஏன்டி கிரைஸ்ட்’ அவரின் ‘போர்னோ’ பிம்பத்தை உடைக்கவில்லை. அதிலிருந்து அவர் மீளவில்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டாலும் வியாபார நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்படவில்லை என்கிறார். குளியல் அறையில் தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களின் நாலாவது மாடி ஜன்னலைத் திறந்து விளையாடும் சிறு வயது மகன் தப்பி விழுந்து சாகிறான். அப்பெண்ணிற்கு அது உறுத்தலாக அமைகிறது. ஒருவகையான பய உணர்ச்சியும், எதிர்பார்ப்புமான நோய் அவளைப் பீடிக்கிறது. அவளின் கணவன் ஒரு மருத்துவ நிபுணன். அவளின் பயத்தையும் தவிப்பையும் போக்குவதற்காய் சிகிச்சையைத் தொடங்குகிறான். குடும்ப உறுப்பினர்களுக்கு உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை தருவது தவறானது என்று சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். பயத்திலிருந்து அவள் விடுபட உடலுறவு என்பதை அவள் திரும்பத் திரும்ப கையாள்கிறாள். அதுவே அவளை ஆசுவாசப்படுத்துகிறது. பாலியல் நடவடிக்கைக்குள்ளேயே மருத்துவ கணவனும் அமிழ்ந்து போகிறான்.

அவளை ஒரு காட்டு மரபங்களாவிற்கு கூட்டி வருகிறான். இயற்கை அவளை சாந்தப்படுத்தவில்லை. “இயற்கை சாத்தானின் தேவாலயம்” என்கிற அவள் அது தரும் சலனங்களுக்க எதிராய் உடலுறவே தீர்வு என்று நினைக்கிறாள். கணவனைத் துன்புறுத்துகிறாள். அவனால் உடலுறவு முடியாதபோது சித்ரவரதை செய்கிறாள். அவனை அடித்து காயப்படுத்துபவள் காலில் துளையிட்டு கல் சக்கரத்தை மாட்டித் துன்புறுத்துகிறாள். அவன் தப்பித்து நரிக்குகையில் ஒளிந்தாலும் கண்டுபிடித்து சித்ரவதை செய்கிறாள். பிளவுண்ட அவளின் மனம் சில சமயம் அதிலிருந்து மீண்டு ஆறுதல் தருகிறது. ஆனால் மீண்டும் சித்ரவதை. கணவன் அவளை அடித்து தீயிட்டுக் கொளுத்துகிறான். இயற்கை சூழ்ந்த பகுதியின் குரூர செயல்கள் அவனைத் திகைப்படையச் செய்கின்றன. ட்ரையரின் டென்மார்க் நாட்டில் இப்படத்திற்கு எதிர்ப்பு அலை. ஆனால் பல நாடுகளில் திரையிட தயக்கம் காட்டி எதிர்ப்புணர்வைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் அப்பெண்ணுள் நிறைந்திருக்கிற பய உணர்ச்சியை லார்ஸின் உள்மன உறைவாகச் சொல்லலாம். நிஜத்தில் பய உணர்ச்சியில் மூழ்கிப் போகிறவர்தான் இயக்குனர் லார்ஸ். எல்லாவற்றையும் கண்டு பயம் கொள்கிற மனோபாவம் கொண்டவர். விமானம் ஏறி பயணம் செய்வது மிகுந்த பயத்தை அவருக்குத் தந்திருக்கிறது. விமானப் பயணம் என்பதாலேயே அமெரிக்கா சென்றதில்லை. பெரும்பாலும் தரை மார்க்கமாகவே பயணம் செய்பவர் விமானப் பயணங்களை உயிர்பயம் காரணமாக தவிர்த்து வந்திருக்கிறார்.

இப்படம் நான்கு பாகங்களைக் கொண்டிருக்கிறது. துக்கம் என்ற பிரிவில் பையனின் மரண சடங்குகள் நடைபெறுகின்றன. வலி என்ற பிரிவில் நடைபாலத்தில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. நரிவாழும் குகையில் அடுத்த பாகம் அமைந்திருக்கிறது. மூன்று பிச்சைக்காரர்கள் என்ற கடைசி பாகத்தில் மரபங்களாக் கூரைமீது பயமூட்டுகிற காகம், நரி, வந்து போகும் மான் ஆகியவற்றைக் குறியீட்டாகக் கொண்டு நடக்கும் மன சித்ரவதைகள் அமைந்திருக்கின்றன.

“இயற்கை சாத்தானின் தேவாலயம்” என்ற அவளின் எண்ணம் நிறுவப் படுகிறது. இரண்டு நடிகர்கள் மட்டுமே படம் முழுக்க இடம் பெற்றிருக்கிற கருப்பு வெள்ளைப்படம் இது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலியல் வன்முறை குறித்த விஷயங்களுக்கான “எதிர் விருது” பெற்றிருக்கிறது. “படம் இயக்குவதைத் தவிர எல்லாமும் எனக்கு பயம் தருபவை” என்கிறார் லார்ஸ். “காலணியில் நுழைந்துவிட்ட சிறு கல் போல உறுத்திக் கொண்டிருக்க வேண்டும் திரைப்படங்கள்”

நாத்திக வழிக் குடும்பம் அவருடையது. 1995ல் மரணப்படுக்கையில் இருந்த அம்மா அவனின் அப்பா என்று அறியப்பட்டவர் அப்பா அல்ல; இசைஞானம் மிக்கவரின் வாரிசாக தன் மகன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு இசைஞானமுள்ளவரிடமிருந்து குழந்தைப் பேற்றைப் பெற்றதாகச் சொல்கிறாள். லார்ஸ் அப்பாவைத் தேடிப்போய்க் கண்டடைகிறான். ஆனால் திரும்பத் திரும்ப மகன் தன்னைச் சந்திக்க வருவதை விரும்பவில்லை. தொடர்ந்து தன்னை சந்திக்க வந்தால் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன் என்று மிரட்டி அனுப்பி விடுகிறார். அவர் தந்த மிரட்டல் பயமாகி அவரை தூர விலகி இருக்கச் செய்திருக்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்துமஸின் போதும் 3 நிமிடங்கள் மட்டும் படமெடுத்து அவற்றை தொகுத்து படமாக்கும் முயற்சியே தனது புதிய சோதனை முயற்சி என்கிறார். 1991 முதல் 2014 வரை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு பரிசோதனை முயற்சியாக அமையும் என்கிறார் “பயந்தாங்கொள்ளி” லார்ஸ்.

Wednesday, May 25, 2011

சுஜாலம் சஃபாலம்**குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை


2002 ஆம் ஆண்டில் இஸ்லாமிய இனப் படுகொலையை நடத்தியவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்போது, அவர், இந்தியாவிலேயே நல்லாசி நடத்தி, சாதனை படைப்பதாக பார்ப்பன ஏடுகளும், ‘இந்துத்துவா’ சக்திகளும் புகழ் மாலை சூட்டத் தொடங்கியிருக்கின்றன. தமிழின உரிமை பேசும் நமது தோழர்களும்கூட இந்த பிரச்சார மாயை உண்மையென நம்பி மோடிகளின் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கதை என்ன? அதையும் பார்ப்போம்.

பிரபல இந்தி நடிகையான ஷெர்லின் சாப்ரா என்பவர், குஜராத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, நரேந்திர மோடியைத் தூக்கி வைத்துப் புகழ்ந்து, தான் அவரை சந்தித்ததே இல்லை என்றும், அவரிடம் உதவியாளராகப் பணியாற்றக் கூட தயாராக இருப்பதாகவும் பேசினார். அவர் பேசிய இடம் குஜராத் தொழிலதிபர்கள் நடத்திய நிகழ்ச்சி.

அடுத்ததாக ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்கியுள்ள அன்னா அசாரேயிடமிருந்து, பாராட்டு மாலை வந்து விழுந்தது. மோடி - குஜராத் மாநிலத்தை வெகுவேகமாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போகிறார் என்று. தமிழ்நாட்டில், குருமூர்த்திகளும் சோ இராமசாமிகளும் தீவிரப் பரப்புரை செய்து வருகிறார்கள். இந்தியாவின் பிரதமர் பதவி வேட்பாளருக்கு மோடியை முன்னிறுத்துவதே, இந்தப் பரப்புரையின் உள்நோக்கம். இந்த நாடகங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மோடியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் மற்றொரு நிகழ்வும் நடந்தது. அதுதான் சஞ்சீவ் ராஜேந்திரபத் என்ற குஜராத்தின் முன்னாள் அய்.பி.எஸ். போலீஸ் அதிகாரி தாமாகவே முன்வந்து உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள வழக்கு. குஜராத் கலவரத்தைப் பற்ற வைத்தவரே மோடி தான் என்பது இவரது குற்றச்சாட்டு.

கலவரத்தின்போது உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய மோடி, ‘முஸ்லீம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார் என்பதே வழக்கு. அந்த உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில், இருந்தவர், இந்த அதிகாரி. கொடூரமான குஜராத் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து கரை சேர்ந்து விட்டதாக நம்பிக் கொண்டிருந்த மோடிக்கு, இது ஒரு பேரிடி. இந்த அதிகாரி, பிரமாண வாக்குமூலமாக வழக்கை தாக்கல் செய்துள்ளார். வாக்குமூலத்தில் தவறான தகவல் இடம் பெற்றிருந்தால் - அது கடுமையான குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சபர்மதியில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத் கலவர பூமியானது. அப்படி ஒரு கலவரம் இந்தியாவில் நடந்ததே இல்லை. மூன்றே நாட்களில் குஜராத்தின் 19 மாவட்டங்களில் 2500 முஸ்லீம்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர். மோடி அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தவர் ஹேரன் பாண்டி. இவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்தவர்தான். அவராலேயே இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தப் படுகொலைகள் பற்றி சிறப்பு புலனாய்வுக்குழு உச்சநீதிமன்ற ஆணையின் கீழ் நியமிக்கப்பட்டு விசாரித்தது. ஆனால், ஆட்சி நிர்வாகம் மோடியிடம் இருந்ததால் உயர் அதிகாரிகள் உண்மையை வெளிப்படையாகக் கூறத் தயாராக இல்லை. சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நேர்மையாக செயல்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை சிறப்பு புலனாய்வுக் குழுவே பதிவு செய்ய மறுத்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.பி.சவந்த் மற்றும் ஹோஸ்பர்ட் சுரேஷ் ஆகியோரைக் கொண்ட ‘குடிமக்கள் பேராயம்’ என்ற சுயேச்சையான விசாரணை மையம் பல உண்மைகளைப் பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவிடம் அளித்தது.

இந்த நீதிபதிகள் முன் தோன்றி மோடிக்கு எதிராக சாட்சியளித்தவர்களில் ஒருவர் வருவாய்த் துறை அமைச்சர் ஹிரேன் பாண்டியா, பிப். 27 ஆம் தேதி மோடி தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் தானும் கலந்து கொண்டதாகவும், அப்போது இந்துக்கள் நடத்தும் தாக்குதல் நடவடிக்கைகளை காவல்துறை தடுக்க வேண்டாம் என்று - மோடி உத்தரவிட்டதாகவும் கூறினார். பின்னர் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டார். மோடிக்கு ஆதரவாக உண்மைகளை மறைத்த காவல்துறை அதிகாரிகளான பி.சி. பாண்டே, பி.கே. மிஸ்ரா, அசோக் நாராயணன் போன்ற பார்ப்பன அதிகாரிகளுக்கு அவர்கள் பதவி ஓய்வுக்குப் பிறகு, வேறு பதவிகளை பரிசாக வழங்கினார் மோடி. இப்போது மனுதாக்கல் செய்துள்ள காவல்துறை அதிகாரி சஞ்சீவ் ராஜேந்திரபத், மோடி நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று அரசு தரப்பில் மறுக்கப்பட்டது.

அப்போது உளவுத் துறையில் துணை ஆணையாளர் என்ற நிலையில் தான் அவர் இருந்தார். எனவே உயர்அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்துக்கு அவர் எப்படி வந்திருப்பார் என்பது, அரசு தரப்பு எழுப்பும் மறுப்பு. அப்போது உளவுத் துறையின் தலைமை ஆணையர் ஜி.சி. ராஜ்கர் விடுப்பில் இருந்தார். எனவே தன் சார்பாக இராஜேந்திர பத்தை, கலந்து கொள்ளுமாறு அவர் பணித்ததால், பத், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மோடியின் கட்டுப்பாட்டில் இருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு இராஜேந்திர பத் அக்கூட்டத்தில் பங்கேற்கவே இல்லை என்று தடாலடியாகக் கூறிவிட்ட பிறகு, நீதிமன்றமும் அதை ஏற்றுக் கொண்ட பிறகு, இப்போது நேரடியாகவே இராஜேந்திர பத் மோடிக்கு எதிரான வலிமையான சான்றுகளுடன் நீதிமன்றம் வந்து விட்டார். இந்த அதிகாரியின் வாகன ஓட்டுனரும், மோடி கூட்டிய கூட்டத்தில், அவர் பங்கேற்றதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத்தில் போராடி வரும், மனித உரிமைப் போராளியும், பெண் பத்திரிகையாளருமான தீஸ்த்தா செட்டால் வத், மோடிக்கு எதிராக நேரடியான குற்றச்சாட்டு, இப்போது தான் முதன்முதலாக வந்துள்ளது. உண்மைகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன என்று கூறியுள்ளார்.

மோடி நிர்வாகத்தில் பணிபுரிந்த சிறீகுமார், ராகுல் சர்மா போன்ற நேர்மையான அதிகாரிகள், கலவரங்கள் பற்றி சிறப்பு புலனாய்வில் பதிவு செய்த உண்மையான தகவல்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. உண்மையைப் பேசியதற்காக, மோடி ஆட்சியில், இந்த அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் தனது குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் ராஜேந்திர தத்துக்கு ஏற்படுவது நியாயம் தானே! அந்த தயக்கமே, அவரை காலம் கடந்து, நீதிமன்றம் வரக் காரணமாக இருந்துள்ளது. இப்போது உச்சநீதி மன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கையை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை; சுதந்திரமான அமைப்புகள் நடத்திய விசாரணை களையும் பரிசீலிக்கலாம் என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

மோடி - குஜராத் கலவரத்துக்குப் பிறகு இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுவிட்டார். அவர் நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதே அவரது வெற்றிக்கான காரணம் என்ற பிரச்சாரம் பார்ப்பன வட்டாரங்களில் தீவிரமாக முடுக்கி விடப்படுகிறது!

பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலுக்கு தாராளமாகக் கதவு திறந்து விட்டுள்ள மோடியை அவர்கள் நடத்தும் ஊடகங்கள் புகழ் பாடுவதில் வியப்பு எதும் இல்லை.

• ‘என்.சி.ஏ.பி.ஆர்.’ என்ற பொருளாதார ஆய்வு மய்யம் அண்மையில் குஜராத்தில் சிறுபான்மையினர் நிலை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஏழ்மை, வறுமை, கல்வியின்மை, பாதுகாப்பற்ற நிலையில் - இந்தியாவிலேயே ஒரிசா, பீகார் மாநிலங்களைப்போல் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குஜராத்தில் வாழும் முஸ்லீம்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

• குஜராத்தில் முஸ்லீம்களின் வறுமையின் அளவு உயர்சாதி இந்துக்களைவிட 50 சதவீதம் அதிகம். வங்கிக் கணக்கு வைத்துள்ள முஸ்லீம்கள் எண்ணிக்கை 12 சதவீதம் மட்டுமே. வங்கிக் கடன் வாங்கியவர்கள் 2.6 சதவீதம்.

• தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் முஸ்லீம்கள் புறக்கணிப்பு பெருமளவில் உள்ளது.

• 2002 கலவரத்தால் பாதிக்கப்பட்ட 23000 முஸ்லீம்கள் இப்போதும் தற்காலிக முகாம்களிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். நிரந்தர முகாம்கள்கூட அமைக்கப்படவில்லை. பல லட்சம் மதிப்புள்ள வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு தரும் இழப்பு ஈடு ரூ.10,000 அல்லது ரூ.15,000 மட்டுமே.

• கிராம சாலைகள்; வீடுகளுக்கு மின் இணைப்பு; குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும், மனித சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவாகவே உள்ளது. காரணம், ஊழல்கள் பெருகி நிற்பது தான்.

• கடந்த 2 ஆண்டுகளில் மூன்று பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. 17000 கோடி செலவில் குளங்களை வெட்டும் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் பெயர் ‘சுஜாலம் சஃபாலம்’; இதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு, உள்நாட்டு சந்தையில் கோதுமைக்கான விலை நிர்ணய அடிப்படையில் கூலி வழங்கப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை மொத்தமாக முன் கூட்டியே ஒப்பந்தக்காரர்களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால் தொழிலாளர்களுக்கு அரிசி விலைக்கான கூலியே தரப்படுகிறது. பல குளங்கள் காகிதத்தில் மட்டுமே வெட்டப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்காக வழங்கப்பட வேண்டிய அரிசி - பெருமளவில் மகாராஷ்டிராவுக்கு கடத்தப்படுகிறது.

• 2009 இல் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்காக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலை நடப்பதாக கணக்கு எழுதப்பட்டு, பணம் ஒப்பந்தக்காரர்களால் சுருட்டப்பட்டு விட்டது.

• 2010 இல் உருவாக்கப்பட்ட மீன் வளர்ப்புத் திட்ட ஊழல்களால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.600 கோடி. இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல்கள் நடந்தன.

• பெருமளவில் அன்னிய தொழில் முதலீடுகளுக்கு குஜராத்தில் மோடி கதவு திறந்து விட்டுள்ளார். அன்னிய முதலீட்டை எதிர்ப்பதாக கட்டுரைகள் எழுதும் பார்ப்பன குருமூர்த்திகள், மோடி அதே வேலையை செய்யும்போது தொழில் வளர்ச்சி என்று பாராட்டுகிறார்கள். குஜராத்தில் 2003 இல் மோடி அன்னிய முதலீடுகளை வரவேற்கும் திட்டத்தைத் தொடங்கியபோது, ரூ.69 கோடி முதலீடு வந்தது. 2005 இல் ஒரு லட்சம் கோடி; 2007 இல் 4 லட்சம் கோடி; 2009 இல் 12 லட்சம் கோடி; 2011 இல் 21 இலட்சம் கோடியாக பன்னாட்டு மூலதனம் அதிகரித்து நிற்கிறது.

• இந்த பன்னாட்டு பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்புகிற இடங்களில் நிலம் தாராளமாக ஒதுக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு எந்த வரி விதிப்பும் கிடையாது. தொழிலாளர் நல சட்டங்களிலிருந்தும் விதி விலக்கு. விவசாய நிலங்கள், பழங்குடியினருக்கானவனப் பகுதிகள், பெரும் தொழில் நிறுவனங்களின் வசமாகி விட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்றமே தலையிட்டு, பல தொழிற்சாலை களை மூட உத்தரவிட்டுள்ளது. உடனே - மோடி ஆட்சி, அவர்களுக்கு வேறு இடங்களை ஒதுக்கித் தருகிறது. இந்த பெரும் தொழில் நிறுவனங்கள் வரத் தொடங்கிய பிறகு, மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், கல்விச் சேவைகள் மிகவும் குறைந்துவிட்டன. பெண்கள், குழந்தைகள், மைனாரிட்டியினர் வாழ்நிலை மிகவும் பின்னுக்குப் போய்விட்டன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

• பெரும் தொழில் நிறுவனங்கள் வந்த பிறகும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. படித்த வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக சேவையாளர் தீஸ்கா செடல்வாட் ஆய்வு வழியாக அம்பலப்படுத்தியுள்ளார்.

• குஜராத்தில் மகுவா பகுதியில் விவசாயிகள் மோடி அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் பாசன வசதிக்காக அணைகட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தை மோடி பூமிக்கடியில் உள்ள சுண்ணாம்புக் கல்லைத் தோண்டி எடுத்து சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து விட்டதால், அப்பகுதி மக்கள் உள்ளூர் பா.ஜ.க. ஆதரவுடன், மோடியை எதிர்த்து போராடி வருகின்றனர். குண்டர்களை வைத்து போராடும் மக்களை ஒடுக்குகிறது மோடி ஆட்சி. 1400 கோடி செலவில் 214 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாகும் இந்தத் தொழிற்சாலைக்காக, 5000 குடும்பங்களைச் சேர்ந்த 30,000 மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்.

• சவுராஷ்டிரா பகுதியில் வாங்கனர் மாவட்டத்தில் ‘ஒர்பட்’ நிறுவனத்துக்கான 40 ஹெக்டர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் ரூ.40 என்ற விலையில் வழங்கினார் மோடி. அந்தப் பகுதி மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் ஆதரமான இந்த ஒரே இடத்தை பெரும் தொழில் நிறுவனத்துக்கு ‘தாரை’ வார்த்ததை எதிர்த்து உள்ளூர் மக்கள் கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்றம் போய் தடை வாங்கியுள்ளனர்.

• உதோராவில் உள்ள ‘கலாச்சாரம் மற்றும் மேம்பாடு ஆய்வு நிறுவனம்’, அரசு ஆவணங்களைக் கொண்டு நடத்திய ஆய்வில், 1947-லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை குஜராத் மக்கள் தொகையில் வளர்ச்சித் திட்டங்களினால் 5 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் 33 லட்சம் ஹெக்டர் நிலம் பெரும் தொழில் நிறுவனங்களுக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறுகிறது.

• “சர்வாதிகாரமும் வளர்ச்சியும் கைகோர்த்துக் கொண்டு வரும்போது மக்களுக்கு அத்தகைய ஒரு வளர்ச்சியே தேவை இல்லை. ஜனநாயகம் வாழும் ஒரு சமூகத்தில் வளர்ச்சி சற்று குறைவாக இருப்பினும் அதுவே நன்மை பயக்கும்” என்கிறார் மதச் சார்பற்ற எழுத்தாளரும், சிந்தனையாளருமான ராம் புனியானி.

• மோடிக்கு எதிராக அங்கே எவரும் பேச முடியாது. சட்டமன்றங்கள் அவர் புகழ் பாடும் மன்றங்களாகவே செயல்படுகின்றன.

• தலித் சமூகத்தின் மீதான அடக்குமுறை தலைவிரித்தாடுகிறது. தலித் மாணவர்களையும் பிறசாதி குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து ஒற்றுமை பற்றி பேசியதற்காக ஒரு ஆசிரியை உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார். ‘இந்துத்துவாவின் பரிசோதனைக் களம்’ என்று அறிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் அச்சத்தின் பிடியில் மைனாரிட்டிகளும் தலித் மக்களும் வாடும் நிலையில், பார்ப்பனர்களும், பட்டேல்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் சுரண்டி கொழுத்து வரும்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடுகிறது என்று பேசுவது என்ன நியாயம்? கருவுற்ற தாய்மார்களின் இரத்தத்தில் இருக்க வேண்டிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை குஜராத் மாநிலப் பெண்களிடம் தான் மிகக் குறைவாக இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முறையான இட ஒதுக்கீடோ, இலவசக் கல்வியோ, அங்கே இருக்கிறதா? என்ற கேள்விக்கு, இவர்களிடமிருந்து பதில் இல்லை. இதுதான் மோடி ஆட்சியின் சாதனைகளா?

தகவல்கள்: ‘பிரன்ட்லைன்’ மே 20, 2011

Monday, May 23, 2011

ஊழல் ஒழிப்பும் ஒரு திடீர் மகாத்மாவும்!!


ஊடகங்கள் நினைத்தால், ஒரே வாரத்தில் ஒருவரை மகாத்மா ஆக்கிவிட முடியும் எனபதற்கான சான்றுதான், அன்னா ஹசாரே !

அடேயப்பா... 4 நாள் உண்ணாவிரதம், ஒரு சட்ட முன்வடிவம்... இவை போதும் நாட்டை விட்டே லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு! இப்படித்தான் ஊடகங்கள் நம்மை நம்ப வைக்க முயல்கின்றன. நடுத்தட்டு வர்க்கத்தினர் பலர் இதனை நம்பவும் செய்கின்றனர்.

70 வயதுக்காரரான அன்னா ஹசாரே, மராத்திய மாநிலத்தைச் சேர்ந்தவர். காந்தி குல்லாய் வைத்திருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். கோட்பாடுகளில் ஈடுபாடுடையவர். இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து உடையவர். ஊடகங்கள் ஒருவரைத் தோளில் வைத்துத் தூக்கி ஆடுவதற்கு இவை போதாவா?

‘ ராலேகான் சித்தி ’ என்னும் ஊரில், நிலத்தடி நீரை உயர்த்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்றுள்ளன என்னும் செய்தியை இணையத்தளம் தெரிவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் மழை கொட்டித் தீர்த்துவிடும் அந்த ஊரில், தேவையான குளங்களையும், குட்டைகளையும், மக்களைக் கொண்டே உருவாக்கி, நீரைத் தேக்கி வைப்பதற்கான வழியை ஹசாரே செய்துள்ளார். அதனால் நிலத்தடி நீர்மட்டம் கூடியுள்ளது. பிறகு, ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கும்படி அந்தக் கிராம மக்களைத் தூண்டியுள்ளார். அவர்களின் பொருளாதார நிலையை அந்தக் கருத்துரை உயர்த்தியுள்ளது.

இவைகளெல்லாம் பாராட்டப்பட வேண்டிய செயல்கள்தாம். இதிலிருந்து அவர் புகழ் பரவத் தொடங்கியிருக்கிறது. இப்போது,

‘லோக்பால் ’ சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஏப்ரல் 4ஆம் தேதி, தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.

அவ்வளவுதான்... ஆங்கிலத் தொலைக்காட்சிகள், இந்தியா முழுவதும் உள்ள பன்மொழி நாளேடுகள் அனைத்தும், ஒரே நாளில், ‘ இதோ காந்தி மறுபடியும் பிறந்து வந்துவிட்டார் ’ என அறிவிக்காத குறையாய், அச்செய்திக்கு அவ்வளவு பெரிய விளம்பரம் கொடுத்தன. லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கான இறுதிப்போர் தொடங்கிவிட்டது போன்ற ஒரு மாயை, அனைத்து மக்களின் ஆழ் மனங்களிலும் விதைக்கப்பட்டது.

மேதா பட்கர், கிரண்பேடி, பாலிவுட் நடிகர் அமீர்கான், ரஜினிகாந்த் என்று பிரபலங்கள் பலர் வரிசையாய்த் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். சோனியா காந்தி ஆதரித்தார். ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ள ஹசாரேக்கு, நம் ஊர் ஜெயலலிதாவும் ஆதரவு தெரிவித்துவிட்டார்.

(ஊழலை ஒழிக்க ஜெயலலிதாவும், போதையை ஒழிக்க விஜயகாந்தும் தனி இயக்கமே கூடத் தொடங்கலாம்). தமிழ்நாட்டில் உள்ள தமிழருவி மணியன் போன்ற வறட்டுக் காந்தியவாதிகளும் கூடத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இவ்வளவு பேர் ஆதரிக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருக்கலாமா என்று கருதி, கொலை வழக்கு ஒன்றில் வாழ்நாள் தண்டனையை அனுபவித்து வரும், பீகாரைச் சேர்ந்த பப்பு யாதவும், தன் ஆதரவை வழங்கினார். ஆதரவுகளில் எல்லாம் சிறந்த மணிமகுடமாய் அது ஆகிவிட்டது.

இனிமேல் லோக்பால் சட்டத்தைக் கொண்டுவந்து, ஊழலை ஒழிக்க வேண்டியது ஒன்று மட்டும்தான் மீதமுள்ளது.

அந்த லோக்பால் சட்ட முன்வடிவம், அப்படியயான்றும் புத்தம் புதிதன்று. 1969ஆம் ஆண்டு, முதன் முதலாக அது அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் ஏற்கப்படவில்லை. மீண்டும் மீண்டும், சில திருத்தங்களுடன் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை, 10 முறை அதே சட்ட முன்வடிவம், நாடாளுமன்றத்திற்கு வந்து போய்விட்டது. இப்போது 11ஆவது முறை கொண்டுவரப்பட்டவுடன், அனைத்து ஊழல்களும் ஓடி ஒளிந்து விடும் என்பது போல, ஊடகங்கள் நமக்குப் படம் காட்டுகின்றன.

பழைய லோக்பால் சட்டமுன்வடிவம், சில மாற்றங்களுடன், ‘ ஜன லோக்பால் ’ என்னும் பெயரில் வரைவு (Draft) செய்யப்பட்டுள்ளது. இதனை, மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் யஹக்டே உருவாக்கியுள்ளார். இந்த ஜனலோக்பால் திட்டத்தைச் சட்டமாக ஆக்கவேண்டும் என்பதற்குத்தான் ஹசாரேயின் உண்ணாவிரதம்.

ஜனலோக்பால் சட்டம் நடைமுறைக்கு வருமானால், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் விசாரிக்கும் உரிமை லோக்பால் குழுவிற்கு உண்டு. அக்குழுவின் பரிந்துரையையயாட்டி, உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து, ஓராண்டிற்குள் தீர்ப்பு சொல்ல வேண்டும். குற்றவாளிகள் என மெய்ப்பிக்கப்பட்டால், அவர்களின் தண்டனைக் காலத்தில், அவர்களிடமிருந்து நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புத் தொகை திரும்பப் பெறப்படும். இவைகளே அச்சட்ட முன் வடிவின் அடிப்படைச் செய்திகள். இதற்காக, மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், மாநிலங்களில் லோகாயுக்தா என்ற அமைப்பும் நிறுவப்படும்.

அன்னா ஹசாரேயின் கோரிக்கையை மத்திய அரசும் உடனே உள்வாங்கிக் கொண்டு, அதற்கான 10 பேர் கொண்ட குழுவை உடனடியாக நியமித்துவிட்டது. ஊழலை ஒழிப்பதில், அரசு உட்பட, அனைவரும் காட்டும் விரைவு நடவடிக்கைகள் நம்மை மலைக்க வைக்கின்றன. அதனாலேயே அது குறித்த ஐயங்களும் நமக்கு எழுகின்றன.

ஜனலோக்பால் வரைவு அறிக்கையை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அந்த 10 பேர் கொண்ட குழுவில், ஐவர் அரசு சார்ந்தவர்கள் ; ஐவர் பொதுநல விரும்பிகள். பொதுநல விரும்பிகளில் ஹசாரேயும் ஒருவர். போகட்டும், உண்ணாவிரதம் இருந்ததற்கு ஏதேனும் பலன் வேண்டாமா? பிறகு, தந்தையும், மகனுமான சாந்தி பூ­ன், பிரசாந்த் பூ­ன் ஆகியோரும் உறுப்பினர்கள்.

இங்கெல்லாம் வாரிசுச் சிக்கல் எழவில்லை என்றாலும், ஏன் ஒரே குடும்பத்திலிருந்து இருவர் என்ற கேள்வி சிலரிடம் எழுந்த போது, “ அவர்களைத் தனி மனிதர்களாகவும், அவர்களிடையே என்ன உறவு என்ற அடிப்படையிலும் பார்க்கக்கூடாது. அவர்களின் தகுதி, திறமையை மட்டுமே பார்க்க வேண்டும்” என்று ஹசாரே கூற, அதனைக் கிரண்பேடி வழிமொழிய, அரசும் ஏற்றுக்கொண்டுவிட்டது. அடடா, எவ்வளவு எளிய விளக்கம் ! 120 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில், தகுதி, திறமை உடைய வேறு யாரும், வேறு குடும்பங்களில் இல்லாமல் போய்விட்டார்கள் !

இனிமேல் அந்த வரைவு அறிக்கை, சட்டமுன் வடிவமாக மக்களவையிலும் மேலவையிலும் வைக்கப்படும். ஆயிரம் விவாதங்களுக்குப் பிறகு அவை ஏற்கப்பட்டுச் சட்டமாகலாம். அல்லது, வேறு சில திருத்தங்களுக்காக வழக்கம்போலத் திருப்பி அனுப்பப்படலாம். சட்டமாகவே ஆனாலும், அதில் உள்ள ஓட்டைகளைத் தகுதி, திறமை உள்ள வழக்கறிஞர்கள கண்டுபிடித்துக் கொள்வார்கள். கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்து நடைபெறும். இதற்குத்தான் இவ்வளவு தடபுடல் !

ஒரு சமூகத்தை அப்படியே வைத்துக்கொண்டு, ஊழலை மட்டும் எப்படி ஒழித்து விட முடியும்? ஏற்றத் தாழ்வுகள், ஆதிக்கங்கள், சுரண்டல்கள், உலகமயமாதல் என்னும் பெயரில் பன்னாட்டு நிறுனங்கள் நடத்தும் பகற்கொள்ளைகள் எல்லாம் அப்படியே இருக்குமாம். ஊழலை மட்டும் ஒழித்துவிடுவார்களாம்.

தோலிருக்கச் சுளைவிழுங்கும் இந்தக் கனவு நாடகத்தின், கற்பனா வாதத்திற்குத்தான் எவ்வளவு வரவேற்பு!

-சுப.வீரபாண்டியன்

Sunday, May 22, 2011

பெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்?


பெரியார் ஈ.வெ.ரா., திருச்சியில், 30-09-1945 இல் அறிவித்தபடி, அவர் காணவிரும்பியது வெள்ளையன் ஆட்சியிலிருந்து விடுபட்ட - வட நாட்டான் சுரண்டலி லிருந்து விடுபட்ட ஒரு தனிச் சுதந்தர திராவிட நாடு!

அதற்கு முன்பு, 28-10-1942இல், அருப்புக் கோட்டையில் அவர் ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இந்த நாடு நல்ல நிலைமையில் பொருளாதாரம், கல்வி, நாகரிகம் முதலியன ஏற்பட வேண்டுமானால், திராவிட நாடு பிரிந்தே தீர வேண்டும். அப்படி நாட்டைப் பிரிக்க வேண்டுமானால், காங்கிரஸ், அச்சு நாடு(கள்) ஆகிய எதிரிகளின் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும். தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமானால், இந்தச் சண்டையில் வெள்ளைக் காரனுக்கு எல்லா உதவியும் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விதச் சண்டை நின்ற பின்பு, நம்முடைய நாட்டைக் கொடுக்க வேண்டும் என்று நாம் வெள்ளைக்காரனைக் கேட்க வேண்டும். அவன் நாட்டைப் பிரித்துக் கொடுக்க மறுப்பானாகில் அவனிடமிருந்து நாட்டைப் பெறுவதற்கு இலட்சக் கணக்கான வாலிபர்களைப் பலி கொடுக்க நேர்ந்தாலும் நேரிடும். நாம் எந்தவிதமான யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.”

பெரியார் குறிப்பிட்டுள்ளது இரண்டாவது உலகப் போர். அது 1945 ஆகஸ்டு 14ல் முடிவுற்றது. அப்படி உரையாற்றிய அவர், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, 30-03-1942இல், பிரிட்டிஷ் அமைச்சர வைத் தூதுக்குழுவின் தலைவர் சர். ஸ்டாஃபோர்டு கிரிப்சை அவரும் மற்றும் மூவரும் சந்தித்தனர். அவர்கள் தமிழ் நாட்டின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவர் என்பதாலும் - பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாமலிருக்கச் சென்னை மாகாணத்தைப் பிரித்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் வைக்க வேண்டும் என்று மட்டுமே அவர்கள் கோரியதாலும், பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கிற வகுப்பின் பேரில் அரசியல் உரிமை வழங்கப்பட முடியாது என்று, 1945இல், கிரிப்ஸ் குழு மறுத்ததாலும், உடனடியாகத் தனிச் சுதந்தரத் திராவிட நாடு வேண்டும் என்று 30-09-1945 இல் கோரினார் ஈ.வெ.ரா.

இவ்வளவு இக்கட்டான நிலை ஏற்பட்ட பிறகும், சென்னை மாகாணத்தின் மற்ற திராவிட மொழிகளைப் பேசும் பகுதிகளில் திராவிடர் இயக்கம் கால் பதிக்க வில்லை. தமிழ் நாட்டில் உயிரைப் பணையம் வைக்கும் போருக்கு ஏற்ற மறவர் கூட்டமாகத் தமிழர்கள் உருவாக்கப்பட வில்லை.

திராவிடர் இயக்கத்தில், 1942க்குப் பிறகு எண் ணற்ற படித்த இளைஞர்களும் திறமை வாய்ந்த பரப்புரையாளர்களும் எழுத்தாளர்களும் இருந்த போதிலும், ஓர் அரசு அமைப்புக்கு முன்னர் நடை பெற வேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ற போரிடும் படை எதையும் உருவாக்கவில்லை.

இந்நிலையில் கருத்தியல் அளவில் பெரியாரை மூர்க்கமாக எதிர்த்த காங்கிரஸ் தேசிய வாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தக்க மறு மொழி தருவதிலும், தன் நிலையை விளக்குவதிலுமே பெரியார் முனைப்புக் காட்ட வேண்டி நேரிட்டது. அது இன்றியமையாத தாகவும் இருந்தது.

வெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக 1946 சூனிலேயே அறிவித்தான். வெள்ளை யனிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட காங்கிரசுக்கட்சி, 1946 திசம்பர் 9 தொடங்கி, சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தொடங்கியது. அதற்குத் தக்க முகம் கொடுத்து 1946 தொடங்கி எதிர்த்திட்ட பெரியார், 21-07-1947 இல், மக்களுக்குத் தெளிவானதொரு வேண்டு கோளை விடுத்தார். அது யாது?

“இந்துஸ்தான் அரசமைப்புச் சபையில் வகுக்கப் பட்டுவரும் அரசியல் முறை, சென்னை மாகாணத் தைப் பழங்காலப் பஞ்சாயத்து ஆக்கவே தயாராகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக நம் மீது ஆட்சி புரிந்து ஆதிக்கப்படுத்தி வந்த சுயநலக் கும்பலைக் கொழுக்க வைக்க, திராவிடஸ்தான், இந்திய யூனியனில் இணைந் திருப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மிக்க கேவலான முறையில், திராவிடஸ்தான், அக்கும்ப லுக்கு உழைத்துக் கொட்ட வேண்டும். திராவிடஸ்தான் சுதந்தரம் பெறாத வரையில் அதிகாரம் என்பது வெறுங்கற்பனையே” என்று தெளிவுபடக் கூறினார்.

அத்துடன், நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை ஏளனம் செய்த கம்யூனிஸ்டுக் கட்சியினருக்கு, 1947 சூலையில் பெரியார் தக்க விடை பகர்ந்தார்.

“திராவிடர் கழகம் கேட்கும் சுதந்தரம் கம்யூனிஸ்ட்டுக் கட்சி கேட்கும் சுதந்தரத்தை விட மேலானது”.

“கம்யூனிஸ்ட்டுக் கட்சி - முதல் வைத்துப் பேரம் செய்யும் முதலாளித்துவம் ஒழிந்த சுதந்தரம் கேட்கிறது. திராவிடர் இயக்கமானது அம்முதலாளிகளுடன், அம் முதலாளிகளை உற்பத்தி செய்வதற்கு மூல காரண மாயுள்ள - அதுவும் முதல் வைத்துக் கூட பேரம் செய்ய யோக்கியதை இல்லாத கல் முதலாளிகளையும் - பிறவி முதலாளிகளாயிருந்து யாதொரு முதலு மின்றி, சோம்பேறித் தனத்தையும், ஏமாற்றுதலையும் ஈடாகவைத்து, மக்களை மாக்களாக்கி வரும் பார்ப்பனி யத்தையும் சேர்த்து ஒழித்துச் சுதந்தரம் கேட்கிறது”. என விளக்கமளித்தார்.

மேலும், “இன்றைய கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கோ, கொள்கைக்கோ நாங்கள் விரோதிகளாக இருந்த தில்லை; விரோதிகளாகப் பாவித்ததுமில்லை” என்று தோழமை உணர்வுடன் கூறினார்.

சுதந்தர திராவிட நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சி இருக்கும் என்பது பற்றித் தெளிவான ஒரு விளக்கத்தை, 06-01-1948இல் செயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) சொற்பொழிவில் அளித்தார்.

“... என் உயிருள்ள அளவும் சமூகத்தில் சூத்திரர் களாகவும், பொருளாதாரத்தில் ஏழைகளாகவும், அரசி யலில் அடிமைகளாகவும் வாழ்ந்து வரும் பண்டைச் சிறப்பு வாய்ந்த திராவிட மக்களை மனிதர்களாக ஆக்கும் பணியில் ஈடுபட்டிருக்கத் துணிந்து நிற்கிறேன்.

“நாடு தன்னாட்சி பெற்றால், திராவிட நாட்டில் சூத்திரன், பிராமணன் என்கிற வேறுபாடு இருக்காது”

“திராவிட நாட்டில் ஓரிரண்டு ஆண்டிற்குள் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்”.

“திராவிட நாட்டிற்குள் அந்நியர் ஒருவர் கூட அநுமதிச் சீட்டின்றி உள்ளே வர அநுமதிக்கப்பட மாட்டாகள்”

“திராவிட நாட்டில் அந்நியர்களோ அல்லது தனிப்பட்ட முதலாளிகளோ பிறரைச் சுரண்டி வாழ வசதி இருக்காது.”

“எல்லாவற்றிற்கும் மேலாக திராவிட நாட்டு ஆட்சி வரி இல்லாமலே ஆட்சி புரிந்து வரும். போக்குவரத்து இலாகாவையும், தந்தி தபால் இலாகாவையும் அரசாங்கமே ஏற்று நடத்தி வருவது போல, மற்ற எல்லா வியாபாரங்களையும் திராவிட நாட்டு அரசாங்கமே ஏற்று நடத்தும்”

“திராவிட நாட்டில் எந்த விவசாயிக்கும் அய்ந்து ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை புஞ்சை இருக்காது. அவனுடைய விளைபொருளை அவனுடைய கொள்முதலை அறிந்து ஓரளவு இலாபத்தைக் கூட்டிக்கொடுத்து, அரசாங்கமே வாங்கிக் கொள்ளும். அவனுக்கு நிலவரி இருக் காது. அவ்விளைபொருள்களைத் திருப்பி மக்களுக்கு விற்கும் போது ஓரளவுக்கு இலாபம் வைத்து, அரசாங்கமே தனது சொந்தப் பண்ட சாலைகள் மூலம் விற்பனை செய்யும்”என மாதிரி சமதர்ம ஆட்சித் திட்டம் ஒன்றையே முன்வைத்தார்.

20-01-1948இல் ஆம்பூரில் பேசிய பெரியார், “லேவா தேவி முறை (தனியார் வட்டிக்குக் கடன் தரும் முறை) சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட வேண்டும். அரசாங்கமே லேவாதேவி செய்து வருமானால் கடன் வாங்குவதால் உள்ள வேதனை கள் பொது மக்களுக்கு இருக்காது.”

“வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை வழங் கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

மதம், சமயம், இனம் பற்றிய குழப்பங்களுக்கும், ஏற்கெனவேயே 25-07-1947இல் பறங்கிப்பேட்டை சொற்பொழிவில், பின் வருமாறு தெளிவுரை தந்தார்.

“திராவிட ஸ்தானில் முஸ்லீம்களின் நிலை என்ன என்று கேட்கப்படுகிறது. இனி இக்கேள்விக்கே இட மில்லை. திராவிடர் ஆட்சியில் முஸ்லீம் என்றோ, கிறித்துவர் என்றோ ஆதித்திராவிடர் என்றோ பிரிவி னைகள் ஒரு நாளும் இருக்க முடியாது. எல்லோரும் ஒரே இனமாக - திராவிடர்களாக வாழ்வோம். சைவன், வைணவன், பௌத்தன் என்ற பிரிவுகள் போல, இஸ்லாமியத் தத்துவத்தைப் போற்றும் முறையில் அவர்களுக்கும் உரிமை தரப்படுமே அன்றிப், பிரிவினைக்கு இடமே இருக்க முடியாது. அதேபோன்று, ‘ஆதித்திராவிடர்’ என்ற இழிவுப்பட்டத்தையும் ஒழித்துத் திராவிடனாக வாழ, சட்டப்படிச் செய்வோம்” எனத் தெளிவுபடுத்தினார்.

தந்தை பெரியாரால் மேலே சொல்லப்பட்ட வை தான், அவர் காணவிரும்பிய ஓர் அரசின் இலக்கணம்; “அரசு” என்பது பற்றிய அவர்தம் விளக்கம்.

அது “தனிச் சுதந்தர அரசா”? “தன்னாட்சி அல்லது தன்னுரிமை அரசா”? என்பதை இன்றைய உலகச் சூழல் இந்தியச் சூழல் மற்றும் தமிழராகிய நாம் பெற்றுள்ள வலிமை - இந்திய ஏகாதிபத்திய அரசு பெற்றுள்ள வலிமை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் - மானிட சமத்துவ உரிமைக்கும் எதிரான கேடு கெட்ட கூறுகள் - இவற்றை உடைத்து நொறுக்கத் தமிழகத் தமிழர்கள் - குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க தமிழர்கள் ஒன்று கூடிச் சிந்திக்க ஆயத்தமாவோம், தந்தை பெரியார் காணவிரும்பிய வடிவிலான சமதர்ம - தன்னாட்சி அரசைத் தமிழகத்திலும் மற்ற அடிமைப்பட்ட மொழி வழி மாநிலங்களிலும் அமைக்கப்பட வழி காண்போம் வாருங்கள்! வாருங்கள்! இது முதலாவது பணி.

- வே. ஆனைமுத்து