அப்போது நான் காதலில் விழுந்து கவிழ்ந்து என் கல்லூரிப் படிப்பை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு விவசாயிக்கு கைய்யும் காலும் போதுமடா கல்லூரிப் படிப்பு ஏதுக்கடா என்று படு தீவிரமாய் விவசாயம் பார்க்க ஆரம்பித்திருந்தேன். பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் வரும் ஓன் ஒதட்டோர சிவப்பஏஏ... அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும் என்று மதுபாலாவின் இடைத் தேர்தலில் டெப்பாசிட்டுகளை இழந்துகொண்டிருந்தேன் அப்போதெல்லாம் இந்த சீமானை யாரென்று யாருக்குமே தெரிந்திருக்காத போது எனக்கு மட்டும் என்ன தெரிந்திருக்கவாப் போகிறது? இருந்தாலும் அந்த பாடலை அப்போதைய உச்ச கட்ட தொழில் நுட்பமான டிடிகே 90 கேசட்டு ஒன்றில் இரண்டு பக்கமும் இந்த ஒதட்டோர சிவப்பை மட்டுமே பதிவு செய்து ஓடவிட்டு என் பிபிஎல் ஆடியோ சிஸ்டத்தை அலறவிட்டு தனிமையில் காதலித்துக் கொண்டிருந்தேன்.
நம்பினால் நம்புங்கள் அதற்குப் பின் சீமானை தம்பி படத்தில் இயக்குனராக கண்ட போதுதான் அவர் ஒரு ஈழப் போராளி என்றும் சாக்லேட் பாய் மாதவனை சண்டைக் கார மாதவனாக சைலண்டைக் கூட வயலண்டாகக் காட்டித்தான் சாதிக்க முடியும் என்ற உலகப் புகழ் பெற்ற காவியத்தில் நடிக்கவைத்து காணாமல் போக வைத்தவர் என்றும் கண்டுகொண்டேன்... என் சிங்களத்து கண்ணுக்குட்டீ பூஜா என்று வலையுலகம் எல்லாம் கொண்டாடும் பூஜாவுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டும் இருந்தேனோ என்னவோ.
ஆனால் அந்த செபஸ்டியன் சீமான், பகுத்தறிவாளார். (விக்கி பீடியா இப்படித்தான் சொல்கிறது அய்யன்மீர்) அப்போதும் அதன் பிறகும் கவிஞர் அறிவுமதியின் நிழலில் நின்று கொண்டு திராவிட இயக்க மேடைகளில் பேராசான் பெரியாரின் படம் தாங்கிய தேனீர் ஆடைகளில் (அட டீ சர்ட்டுதான் மக்களே) தோன்றி உங்க ராமன் எங்கடா பொறந்தான் என்று பொங்கிப் பொங்கிப் பேசியபோது அடடா எங்கேயப்பா இருந்தாய் என் பகுத்தறிவு போராளியே இத்தனை நாளாய் உன்னை ஒரு சாதாரண சினிமாக்காரன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்துவிட்டேன் என்று என்னை நானே குட்டிக் கொண்டேன். வந்தாலும் வந்தது ஈழப் போரின் இறுதிக் காட்சிகள்.
அதற்கு முன்போ அதற்கு பின்போ சந்தித்தோ சந்திக்காமலோ போட்டோ ஷாப்போ இல்லை ஒரிஜினல் ஷாட்டோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு எடுத்துக் கொண்டதாக ஒரு ஒற்றைப் புகைப்படத்தை வைத்தே தமிழ் தேசியப் போராளிகளின் ( அப்படித்தானே?) ஒற்றைத் தலைவனாய் தன்னை முன்னிறுத்திக் கொள்ள பட்ட பாடென்ன உயர்த்திய கைகள் என்ன? 2009ன் ஜனவரி மாதத்தில் தீக்குளித்த முத்துக்குமார் கொளுத்திப் போட்ட தீக்குச்சியின் நெருப்புக்களால் உண்டான சிறு துளிகளை ஒன்றாக்கி இயக்கமாக்கி கைதாகி சிறை சென்று கலைஞரை துரோகியாக்கி மகிழ்ந்து கொண்டிருந்த சீமான் உண்மையில் ஒரு கும்பலை தனக்குப் பின்னால் இழுக்கத்தான் செய்தார்.
சாதி, திராவிட அரசியலைத் தாண்டி வெளிவராத அரியலூர் மாவட்டம் செந்துறையில் என் அக்கா வீட்டுக்குப் போகும் போதுதான் கண்டேன் ஒரு பயங்கர பதாகையை. அவர் நாம் தமிழர் என்றொரு இயக்கத்தை தொடங்கியிருப்பதையையும் அதை வைத்து அவர் மற்றும் ஒரு அரசியலை அல்ல மாற்று அரசியலை தொடங்கி வைத்து அதில் குதிக்கவும் போகிறார் என்பதையும். இருப்போம் தமிழாய் நெருப்பாய் என்ற எல்லா தமிழ் படங்களுக்குக் கீழும் வரும் அந்த ஒன்றரைச் சொல் அடிவரி போல. அப்போது பல பேருக்கு என் நண்பர்களைப் போலவே இந்திய அரசியலும், சாதி அரசியலும், தேசியம் பற்றிய புரிதலும் இல்லாதிருந்தது. தமிழ் தேசியம் என்பதும் நாம் தமிழர் என்பதும் ஏதோ வானத்தில் இருந்து வல்லூரு தூக்கி வந்து போட்ட குயில் குஞ்சின் கீதம் என்றே நம்பிக் கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு சி.பா ஆதித்தனாரையோ நாம் தமிழர் இயக்கத்தையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் 2009க்குப் பின் அரசியல் பால பாடத்தை சீமானின் அடிச்சுவட்டில் தேடிய பிள்ளைகள்.
ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி தூக்குத் தண்டணைக்காய் காத்திருக்கும் மூன்று பேர் விடுதலைக்காக பிணமான செங்கொடியின் பிணத்தின் மேல் தங்கள் அடித்தளைத்தை அதி தீவிரமாய் கட்டத் தொட்டங்கிய கட்சியின் தலைவர் அல்லவா எம்மான் சீமான்?. பாவம் அதற்குப் பின் கலைஞர் ஆட்சிக்கு வராமல் போனது எம் மக்கள் செய்த புண்ணியம், இல்லையென்றால் இன்னும் இன்னும் நெஞ்சடைக்கப் பேசி பல உயிர்களை பலி வாங்கி மக்கள் முதல்வருக்காய் மாண்டு போன மக்களின் ஓரங்க கின்னஸ் ரெக்கார்டுகளில் கை வைத்திருப்பார்.
2011 தேர்தலில் தமிழகத்தில் பல பத்தாண்டுகளாய் மாற்றம் வேண்டிய மக்கள் அய்யாவையும் அம்மாவையும் தேடிய அலையில் வாகாய் வந்து வண்டிக்குள் ஏறி என் தொப்புள் கொடி ஒறவுகளை கொன்றழித்த கயவர்களே என்று ஆக்ஸ், பாண்ட்ஸ், ரெக்ஸோனா பாடி ஸ்ப்ரே விளம்பர அம்பாசிடர்களுக்கு போட்டியாய் காங்கிரஸை கருவறுப்போம் என்றெல்லாம் பஞ்ச் டயலாக்குகள் பேசி காக்காய் உட்கார பணம் பழம்(பணம் -எழுத்துப் பிழை இல்லை) விழுந்ததில் பார்த்தீர்களா மக்களே என் பராக்கிரமத்தை என்று கதறியவாரே அம்மையாரின் பாதம் தொட்டு வணங்கி தன் அரசியல் பயணத்தை 2016ல் துவக்கி பாய்வோம் அதுவரை பதுங்குவோம் என்ற ஸ்பார்டகஸின் தத்துவத்தை தமிழுக்கு பெயர்த்து ஈழத்தாய் அம்மையார் பொரட்சி தலைவி வாழ்க, போரென்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் அதற்காக அம்மையாருக்கு எதிராக என் அரசியல் இருந்துவிடுமா என்று உலகமே இதுவரை கண்டிடாத ஒரு அரசியல் அரிச்சுவட்டியை கண்டெடுத்தார்.
பாவம் பிடித்தது பாம்பை அல்ல அந்த பாம்புகளை ஆட்டி வைக்கும் பிடாரியை என்று அறிந்த உடன் பழைய ஓய்வு பெற்ற ஈழப் போராளிகளான வைகோ, பழைய நெடுமாறன் ஆகியோரோடு சேர்ந்து முள்ளி வாய்க்கால் முற்றத்திலாவது கலந்து கொண்டு மீண்டும் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கலாம் என்று பார்த்தால் அண்ணன் வைகோ அவருக்கும் முந்தி "அங்க ராஜபக்ஷே கொல்றான் இங்க இவ கொல்றாளா ஜனநாயகத்த" என்று அம்மையாரை ஒருமையில் அழைத்து கன்னி வெடியை காலடியில் கொளுத்திப் போட்டதில் காளிமுத்துவின் மருமகனுக்கு சகல நாடிகளும் நொருங்கிப் போயின. பாவம் என்னதான் செய்வார் என் அன்பான ஒறவுகளே? கலைஞர் ஆட்சியாய் இருந்திருந்தால் கடற்கரை ஓரம் ஒரு கண்ணீர் அஞ்சலிக் கூட்டம் போட்டு கலைஞர் ஒழிக என்று கொள்கைப் பிரச்சாரமாவது செய்திருக்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலில் அம்மையாருக்கு ஆதரவாகவெல்லாம் இல்லை காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் எதிர் என்ற போர்வையில் மோடி அலையில் நாடே தத்தளித்து பல இடங்களில் பல் பிடுங்கப் பட்ட காங்கிரஸை ஒழிக்கக் கிளம்பி அதிமுக செலவில் சில பல பொதுக்கூட்டங்கள் பேசி ஒறவுகளை உசுப்பி விட்டதாக தனக்குத்தானே கதையளந்துகொண்ட சீமானின் அட்ராசிட்டிகளை அண்ணனின் தம்பியான அய்யநாதன் சொன்ன கதைகளை எல்லாம் தமிழ் கூறும் நல் உலகம் பார்த்து வாயாலா சிரித்தது? பாவம் பங்காளிச் சண்டை என்பது மஹாபாரதத்துக்கு பட்டும் சொந்தமா என்ன?
நமக்குத்தான் இருக்கவே இருக்கிறதே இலங்கை தமிழர்கள் (வாய்லயே போடுவேன் ஈழத் தமிழர்கள் என்று சொல்லுடா என்கிற ஆட்கள் அம்மையார் பற்றிய பயம் இல்லாத ஆட்களாய் இருக்கவேண்டும்) என்கிற பொன் முட்டையிடும் வாத்துக்கள் அவர்களை வைத்து பிழைப்பு நடத்தலாம் என்றால் யாரோ விக்னேஸ்வரனாம் இலங்கை வடக்கு மாநில முதல்வராகி "தமிழக அரசியல் வாதிகள் எங்கள் விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டாமல் இருப்பதே நல்லது " என்கிற ரீதியில் ஒரு வார்தை சொல்ல அதெப்படி அவர் என்னைக் கேட்காமல் சொல்லலாம் என்று தந்தி டீவியின் ரங்கராஜ் பாண்டேவின் மைக்கைக் கடிக்காத குறையாய் ஈழத் தமிழர்களின் அடுத்த தேசியத் தலைமையேற்க இருக்கும் சீமான் குமைந்ததை நாடே அறியும்.
சரி அதுதான் போகட்டும் என்றால் பொங்கலுக்கு முன் இலங்கையில் தேர்தல் வைத்து ஈழத் தமிழர்களை ஏமாற்றப் பார்கிறார்கள் தமிழினமே தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சீமான், வைகோக்கள் சொன்னதைக் கேட்காமல் குத்துங்க எஜமான் குத்துங்க என்று வடக்கும் கிழக்கும் சேர்ந்து குத்தியதில் மைத்திரி பால சிறி சேன மகிந்த ராஜபக்ஷேவை தோற்கடித்து தேர்தலில் ஜெயித்துவிட மைத்திரிபால அம்மையார் வெற்றி பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்களை வடை போச்சே என்று வருந்தியஆட்களை பேஸ்புக்கில் நாம் காண நேர்ந்தது மார்க் ஸுக்கர்பெர்க்கின் புண்ணியம், இன்றுவரை நாம் தமிழர்களின் பல அதி தீவிர தொண்டர்களுக்கு மைத்திரி என்ற பெயர் கொண்ட ஒரு ஆள் எப்படி ஆணாக இருக்க முடியும் எனற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
மகிந்த, பசில்,கோத்தபாய ராஜபக்ஷேக்களை ஒழித்தாயிற்று இனி நமக்கென்னடா வேலை அடுத்தது தமிழ் மண் விடுதலைதான் அதற்கு ஒரே வழி வெற்றிவேல் வீரவேல் என்று கிளம்பி கோவனாண்டியாய் குன்றத்தில் குத்துக்காலிடாமல் நிற்கும் பழனி முருகனை கவணிப்போம் என்று பச்சை சட்டையில் கிளம்பிவிட்டார் அண்ணன் சீமான்.
பெரியாரியக்க மேடைகளில் முழங்கி சேகுவேரா படம் கொண்ட உடைகள் அணிந்து பிரபாகரனுக்கு அடுத்த தேசியத் தலைவராய் வந்திருக்க வேண்டிய ஒரு ஆள் வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கி குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் அங்கே குவிந்ததம்மா கண்கள் எல்லாம் வண்டாட்டம் வண்டாட்டம் என்று குத்துப் பாடலுக்கு நடனம் ஆடி வரப் போகும் பகுத்தறிவாளன் சீமானைக் காண கண் கோடி வேண்டும்.
#இரண்டு பகுதிகளில் முதல் பகுதி முற்றும்.
(தொடரும்)