சில திரைப்படங்கள் காணும் போது உங்களை வெறும் நெகிழ்வுக்குள் ஆழ்த்தி விட்டு வேறெந்த கேள்விகளையும் கிளப்பாமல் சும்மா இருந்துவிடும், சில படங்கள் புதிய புதிய கதவுகளை திறந்துகொண்டே இருக்கும். சில படங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் கதையைச் சொல்கிறேன் என்று கிளம்பி அவர்களை கழிவிறக்கத்துக்குள்ளான மனிதர்களாய் சித்தரிப்பதோடு முடிந்து விடும். இல்லை நகைச்சுவையாக்கி பழி வாங்கி இருக்கும்.
ஆனால் சில படங்கள் மட்டும்தான் விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வுகளை நமக்கு உணர்த்துவதோடு சமுதாயத்தின் மீதான மதிப்பீட்டின் மீது நாம் கட்டி வைத்திருக்கும் பிம்பங்களை கேள்விக்குள்ளாக்கி அதன் மேல் தன் தாக்கத்தையும் விட்டுவிட்டுப் போகும். அப்படியான ஒரு படம்தான் இது.
The Tin Drum (1979)
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் டான்சிங் (Danzing) என்னும் நகரத்தில் நடக்கிறது கதை, ஆஸ்கார் என்னும் சிறுவன் முதலில் போலந்தில் இருந்து வந்து ஜெர்மானியர்களால் தேடப்பட்டு தன் பாட்டியை தாத்தா மணந்து கொண்ட கதையைச் சொல்லி பின் தன் தாயின் (அக்னெஸ்) இரண்டு பேர் (ஜான் ப்ரொன்ஸ்கி, ஆல்ஃபிரட் மாட்செரத்) மீதான காதலையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது வயிற்றில்தான் இருக்கிறான் .
ஆஸ்காரின் மூன்றாவது வயதில் தன் தந்தைகளுள் ஒருவரான (?) ஜான் ப்ரொன்ஸ்கி (ஆம் ஆஸ்காரின் தந்தை யார் என்பது கடைசி வரை சொல்லப் படவே இல்லை. ஆஸ்காரின் தாய் இரண்டுபேரையுமே காதலிக்கிறாள்.ஆனால் ஆல்ஃபிரட் மாட்செரத்தை மணம் முடிக்கிறாள் ) ஆஸ்காருக்கு ஒரு ட்ரம்மை பரிசாகக் கொடுக்கிறார். ஆஸ்காரின் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தன்னைச் சுற்றி நடக்கும் முறை தவறிய பெரிய மனிதர்களின் நடவடிக்கைகளால் மனம் வெறுத்த ஆஸ்கார் தான் பெரிய மனிதனாகவே ஆகக் கூடாதென்ற முடிவை எடுக்கிறான்.
பெரியவனாகவே ஆகாமல் இருக்கவேண்டும் என்பதற்காக நிலவரை ஒயின் செல்லரை கீழே தள்ளி விட்டு தானும் விழுகிறான் அதுவும் அந்த ட்ரம்மை மிகப் பத்திரமாக வைத்துவிட்டு. பின்னர் மருத்துவர்களால் காப்பாற்றப் பட்டாலும் தன் வளர்ச்சியை அவன் உடல் நிறுத்திவிடுகிறது. (Dwarf).
பின்னர் அவனின் உலகமே அந்த ட்ரம் மட்டும்தான். தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை பெரிய மனிதர்களின் சின்னத்தனங்களை காணும் போதெல்லாம் பறையடிப்பது போல தன் எதிர்ப்பை அந்த டரம்மின் மூலமாகவே தெரிவித்துக் கொண்டிருக்கிறான். ஆஸ்காரின் ட்ரம்மைப் பிடுங்க முயற்சி செய்யும் போது அவனிடம் இருந்து வெளிப்படும் உச்ச சத்தம் கண்ணாடிகளை உடைக்கும் வலுக் கொண்டது என்று ஒரு நாள் தெரிய வருகிறது.
ஆஸ்காருக்கு வயதாகிக் கொண்டே போனாலும் அவன் வளர்சியில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்காரின் தாய் தன் இன்னொரு காதலனை (ஜான் ப்ரொன்ஸ்கி) காண்பதற்காக போலந்தின் (?) ஒரு நகருக்கு ஆஸ்காருடன் போய் அங்கே இருங்கும் ஒரு பொம்மைக் கடையில் விட்டுவிட்டு போகும் போது தன் தாயின் இன்னொரு காதலை தெரிந்துகொள்ளும் ஆஸ்கார் மணிக்கூண்டின் உச்சியில் இருந்து ட்ரம்மை ஒலிக்கச் செய்து தன் எதிர்ப்பை தெரிவிக்கிறான்.
இதன் பின் தான் கற்பம் ஆனதால் இன்னொரு குழந்தை வேண்டாம் என்றோ இல்லை தன் காதல்களால் விளைந்த மோசங்களாலோ ஆஸ்காரின் தாய் வெறும் பச்சை மீன்களை தொடர்சியாகச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள ஆஸ்காரின் தந்தை(?) தன் உறவுக்கார பெண்ணான மரியாவைக் கொண்டு வந்து தன்னோடு வைத்துக் கொள்கிறார். ஆனால் ஆஸ்காருக்கும் அந்தப் பெண்ணுக்கும் , ஆஸ்காரின் தந்தைக்குமே ஒரு காதல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே மரியாவுடன் ( வேறு வேறு நேரத்தில் ) உடலுறவு கொள்ள அதன் பின் மரியா கர்பமாக குழந்தைக்கு யார் தந்தை என்ற குழப்பம் வேறு.
இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் போரில் பங்கெடுக்க இயலாத குள்ளர்களின் சர்கஸ் கூடாரத்தில் தான் முன்பே பார்த்த ஆட்களோடு சேர்ந்து போர் முனைக்குச் சென்று வீரர்களை மகிழ்வாக்கும் வேலை செய்யப் போகும் ஆஸ்கார் அங்கே தன்னைப் போல ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பிக்கிறான். அந்தக் காதலும் போரின் முடிவில் புட்டுக் கொண்டு போகிறது குண்டு வீச்சில் கொல்லப் பட்டுகிறாள் அந்த பெண்.
போர் என்பதும் அதன் பின்னால் ஆன தோல்விக்குப் பின்னரும் தன் தந்தைகளுள் ஒரு ஆளான ஜான் ப்ரோன்ஸ்கியின் தபால் ஆஃபீஸில் சண்டைகளுக்கு நடுவே தன் இருப்பை நிலை நிறுத்த போராடுகிறான் ஆஸ்கார்.
தனக்குப்( ? ) பிறந்த மரியாவின் குழந்தைக்கு மூன்று வயதில் நானும் ஒரு ட்ரம் கொடுப்பேன் அதன் பின் வளராமல் இருக்க வேண்டிய ரகசியமும் சொல்லிக் கொடுப்பேன் என்று சொல்லும் ஆஸ்கார் (?)ஆல்ஃபிரட்டின் (?) குழந்தை குர்ட்ஸ் வீசிய கல்லில் மரணமடைந்த ஜான் ப்ரோன்ஸ்கியின் சவக் குழியில் மூன்று வயதில் தொட்ட ட்ரம்மை வீசி வளர விரும்பி ஆஸ்கார் வளர ஆரம்பிப்பதோடு முடிகிறது படம்.
இதில் நெகிழ என்றோ அழுகைக்கு என்றோ எந்த காட்சியும் இல்லை ஆனால் எல்லா காட்சிகளிலும் தன் இருப்பை வெளிப்படுத்தவென்றே ஒரு ட்ரம் இருக்கிறது. பறை என்றோ முரசு என்றோ சொல்லிக் கொள்வோம் ஆனால் 2007ல் இந்த படம் பார்க்கும் போது உலகப் படங்கள் மேல் இத்தனை ஆர்வம் இல்லாமல் இருந்ததாலோ என்னவோ இத்தனை பாதிக்கவில்லை இப்படம்.
இந்த தொடரை ஆரம்பித்த பின்னால் எந்த படங்களை எல்லாம் நான் கண்டு நெகிழ்ந்து அழுது கிடந்திருக்கிறேன் என்று பார்கையில் இந்தப் படமும் வந்தது நினைவில். மீண்டும் பார்க்கும் போது ஆஸ்காரின் எல்லா நடவடிக்கைகளுக்கும் பின்னால் இருக்கும் சமூக அவலங்களின் மேலான பறை அறிவித்தல் எல்லா சமூக விளிம்பு மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறதது. உடல் ரீதியாக ஒடுக்கப் பட்ட குள்ளர்கள், ஜெர்மனியை சுத்தம் செய்கிறோம் என்று கொன்றொழிக்கப் பட்ட இன சுத்திகரிப்பின் பெயரால் நாட்ஜிக்களின் வரலாறில் இடம் பெறாமல் போன பல்லாயிரம் பேர்களின் ஒற்றை சாட்சியாக படம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கிறது ஆஸ்காரின் டின் ட்ரம்.