Saturday, September 04, 2010

கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

சாதி, மதம், மூட நம்பிக்கைகள், சடங்குகள், ஆணாதிக்கம், பொருளாதாரச் சுரண்டல் என அனைத்து வித இழிவுகளிலும் புதையுண்டு கிடந்த சமூகத்தை அவை அனைத்திலிருந்தும் மீட்டெடுத்து தன்மதிப்பு, சகோதரத்துவம், சமத்துவமுடைய ஒரு சமூகமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்த ஒரு மனிதர் பெரியார். தனது 95 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணியில் ஈடுபட்டிருந்தவர் அவர்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கராக பொது வாழ்வில் நுழைந்து, அனைவராலும் வேறுபாடின்றி 'பெரியார்' என்று ஏற்றுக் கொள்ளப்படும் நிலைக்கு அவர் உயர்ந்தது ஓரிரவில் நடந்த மாயம் அல்ல.

ஆதிக்க சாதியை சேர்ந்ததாக அறியப்பட்ட ஒரு குடும்பத்தில் ஆணாகப் பிறந்து தன் நேர்மையான பார்வையாலும் சுயசிந்தனையாலும் சாதி ஆதிக்கத்திற்கும் ஆணாதிக்கத்திற்கும் எதிராக இறுதி வரை அவர் உறுதியாக நின்று போராடினார் எனில் அவர் கடந்து வந்த பாதை நிச்சயம் அத்தனை எளிமையானதாக இருந்திருக்க முடியாது. இன்றைய சமூகத்தில் எளிதாக உள்வாங்கப்படுகிற எத்தனையோ முற்போக்கான செயல்களுக்கு வித்திட்டவர் அவரே. இன்றளவிலும் சமூகத்தால் சகித்துக் கொள்ள முடியாத முற்போக்கான சிந்தனைகளை ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே பழமையில் ஊறிப் போன அன்றைய சமூகத்தின் முன் துணிச்சலுடன் வைத்தவரும் அவரே.

பெரியார் ஒரு சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; இன்று இச்சமூகம் ஓரளவேனும் சுயசிந்தனையும் சுயமரியாதையும் உள்ள ஒரு சமூகமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது எனில் அதற்கு அவரது அயராத உழைப்பே முக்கிய காரணம்.

தனது சிந்தனைகளை அவர் பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார்.

பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. இதுவும் பெரியாரின் வாழ்க்கை வரலாறுதான். ஆனால் சம்பவ‌ங்களால் கோர்க்கப்பட்ட வரலாறு அல்ல; கருத்துக்களால் கோர்க்கப்பட்ட வரலாறு.

அந்த வரலாற்றைத் தொகுத்து 1925 முதல் 1938 வரையிலான குடி அரசு இதழ்களை 27 தொகுதிகளாக வெளியிட்டு ஒரு பெரும் பணியை பெரியார் திராவிடர் கழகம் செவ்வனே செய்து முடித்து விட்டது. அதை மக்களிடம் கொண்டு செல்லும் பணி பெரியார் திராவிடர் கழகத்திற்கு மட்டுமே உரியதல்ல. அந்தப் பெரும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. ஏனெனில் பெரியார் மக்களுக்கு உரியவரே அன்றி எந்த ஒரு தனி கட்சிக்கு மட்டும் உரியவரல்ல. இதனை வலியுறுத்தியே பெரியார் திராவிடர் கழகம் பெரும் சட்டப் போராட்டத்தை நடத்தி இந்நூல்களை வெளிக் கொணர்ந்துள்ளது.

வெறும் நோக்கு நூலாகவோ, அலங்காரமாக அடுக்கி வைக்கவோ அல்லது இதன் மூலம் பணம் சம்பாதிக்கவோ இந்நூல்கள் வெளியிடப்படவில்லை. இன்றைய சமூகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள சாதி, மத இழிவுகளை ஒழிக்க மீண்டும் மீண்டும் பெரியார் தேவைப்படுகிறார் என்ற பேருண்மையை உணர்ந்து இன்றைய தலைமுறையினருக்கு அவரை, அவரது கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன; இலவசமாக இணையத்தில் தரப்பட்டுள்ளன.

10,000 பக்கங்களுக்கு மேலாக இருக்கக் கூடிய குடிஅரசு தொகுப்புகள் முழுவதையும் படிக்க பலருக்கு மலைப்பாகத் தோன்றக் கூடும். அந்த பணியை எளிதாக்கவே கீற்று 'பெரியாருடன் ஒரு பயணம்' நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஐந்து தோழர்கள் நம்மை பெரியாருடன் பயணிக்க வைக்க இருக்கின்றனர். சாதி, மதம், பாலினம், வறுமை என அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடிய பெரியாருடனான பயணத்தில் நம்மை அழைத்துச் செல்லக் கூடியவர்களாக அந்த ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூகத்தின் தோழர்களே வருகின்றனர்.

தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் அனைவரையும் குழந்தை போல நேசித்த அந்த கிழவனின் கைபிடித்து பயணிக்க வாருங்கள் தோழர்களே!

பெரியாருடன் ஒரு பயணம்
(1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே)

நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 4 மணி
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: பாஸ்கர், கீற்று ஆசிரியர் குழு

குடிஅரசு இதழ் தொகுப்பு:

1925 -‍ 1926: ச.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
1927 ‍- 1929: எழுத்தாளர் ஓவியா
1930 - 1932: எழுத்தாளர் அழகிய பெரியவன்
1933 - 1935: எழுத்தாளர் பூங்குழலி
1936 - 1938: பேராசிரியர் ஹாஜா கனி, பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

ரிவோல்ட் ஆங்கில இதழ் தொகுப்பு: விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

தொகுப்புரை: கொளத்தூர் மணி, தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

நன்றியுரை: பிரபாகரன், கீற்று ஆசிரியர் குழு

அனைவரும் வருக!!

தொடர்புக்கு: பாஸ்கர் - 9884499357

Sunday, August 22, 2010

முழு அப்பம் கேட்கும் பார்ப்பன குரங்குகள்

AIIMS, IIT, IIM ல் எல்லாம் எப்படி இடஒதுக்கீடு அளிக்க முடியும்’ என்று சமீபத்தில் பத்திரிகைகளை கரைத்து குடிக்கும் சுபாவம் உடைய ஒருவர் என்னிடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தார். விவாதம் நடக்கும் பொழுது தான் புலப்பட்டது. அவருடைய புரிதலில், அந்த உயர்கல்வி நிறுவனங்கள் எல்லாம் பிராமனர் சங்கத்தால் நடத்தப்படுபவை என அவர் அதுகாறும் நம்பி வந்தது. மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு என்ற மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் அறிவிப்பு மனிதவள மேம்பாட்டு துறையிலிருந்து வந்தது தான் நாடு முழுக்க தீப்பற்றியது போலான தோற்றத்திற்கும், தில்லியிலுள்ள அஐஐஙந ல் மட்டும் தீ பிடித்ததற்கும் காரணம்.



அர்ஜுன் சிங் தனது அறிக்கையை வெளியிட்டு இரண்டு வாரங்கள் வரை இது ஏதோ அவரது சொந்த பிரச்சனை அல்லது வீட்டு விவகாரம் போலத்தான் அரசியலாகவும், மீடியாவிலும் கையாளப்பட்டது. இந்த தேசத்தின் பூர்வகுடிகளான கோடானு கோடி ஜனங்களின் அடிமை வரலாறு தொடர்புடைய பிரச்சனையாக இதை மீடியாக்கள் மாற்றத் தவறியது. அதை விடுத்து ஆங்கில சேனல்கள் சர்ச்சையை தலைகீழாக மாற்ற முயற்சி செய்தது. நுனி நாக்கில் ஆங்கிலம் ‘உள்ளவா‘ தான் பெரும்பகுதி ஆங்கில சேனல்களில் பணிபுரிவதால் அவர்கள் அஐஐஙந டாக்டர்களின் போராட்டங்களை சுதந்திர போராட்டத்தை விட ஒரு படி மேலாக சித்தரிக்க ஒவ்வொரு நிமிடமும் பாடு பட்டார்கள். பார்ப்பன மனசாட்சி துடிதுடித்தது. இந்த துடிப்புகளுக்கு பின் உள்ள சுயநலத்தையும், இடஒதுக்கீட்டால் ஏற்படும் தேச பொது நலத்தையும் ஒரு பார்வை பார்க்கலாம்.


2000 ஆண்டுகளுக்கு மேலாக பார்ப்பனியத்தின் நிழலில், அடிமை சமுதாயமாகவே இந்திய சமூகம் இருந்து வருகிறது. ஆங்கிலேயர்களுடன் 400 ஆண்டுகால கூடாநட்பையும் நாம் வரலாறு நெடுகிலும் காணலாம். இந்த தேசத்தின் பூர்வகுடிகளை வந்தேறிகள் அடிமையாய் வைக்க இன்றளவும் துடித்துக் கொண்டிருப்பதை உணர்த்துகிறது இங்கு நடக்கும் ஒவ்வொரு செயலும். சுதந்திர இந்தியாவில் மூச்சு திணறாமல் கொஞ்சம் சுவாசித்துக் கொள்ள அம்பேத்கரின் அரசியல் சாசனம் வழிவகை செய்தது. அரசு வேலைவாய்ப்புகளில், கல்வி நிறுவனங்களில் என யாவற்றிலும் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தை வெளிக் கொணர்ந்து அவர்கள் உலகை ஸ்பரிசிக்கும் முயற்சிகள் துவங்கின. அதிகார வர்க்கத்தின் சகல தளங்களிலும இயங்கும் பார்ப்பனியம் முனைப்புடன் பல முயற்சிகளை மழுங்கடித்தது.


1955ல் நாடாளுமன்ற உறுப்பினர் கலேகர் (Kalekar) தலைமையிலான குழுவை மத்திய அரசாங்கம் நியமிக்கிறது. தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டபிறகு அந்த அறிக்கை 70% இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்கிறது. முழி பிதுங்கிய மத்திய அரசாங்கம் அந்த அறிக்கையை கண்டு கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்துக்குள் இயங்கும் பார்ப்பனியம் எந்த ஒதுக்கீடாக இருந்தாலும் அது மொத்தத்தில் 50%க்குள்தான் இருக்க வேண்டும் என தனது கடிவாளத்தைக் கட்டுகிறது. தொடர் போராட்டங்களின் விளைவாக 1978ல் பி.பி.மண்டல் (B.P.MANDAL) தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. 49.5% இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்யும் தனது அறிக்கையை அந்த குழு 1980 டிசம்பரில் சமர்ப்பிக்கிறது.


பத்தாண்டுகளுக்குப் பிறகு 1990ல் அந்த அறிக்கையை தூசி தட்டி எடுத்தார் வி.பி.சிங். மண்டல் கமிஷன் என்ற சொல் ஊடாக புழக்கத்திற்கு அப்பொழுது தான் வந்தது. மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது. காங்கிரஸ் கூட அதை எதிர்த்து பி.ஜே.பியுடன் களமிறங்கியது. இந்த இரு கட்சிகளின் ஆதரவு இல்லையெனில், போராட்டம் எதுவும் அன்று நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை. தங்களின் சுயநல அரசியல் பொய்களுக்காகவே, இதை அன்று பூதாகரமாக மாற்றினார்கள். (இன்று நிலைமை மாறி காங்கிரஸ் - பி.ஜே.பி. இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.) பி.ஜே.பி இந்திய அரசியலில் வேரிட்டது இரண்டு தளங்களில் - மண்டல் அறிக்கை மற்றும் பாபர் மசூதி விவகாரம்.


மண்டல் அறிக்கை இடஒதுக்கீட்டை மட்டும் பரிந்துரைக்கவில்லை. அது “பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உகந்த கல்வி சூழல் இன்றைய அரசு கல்வி நிறுவனங்களில் இல்லை, அதனால் அவர்களுக்கான பிரத்யேக தொழில் கல்வி மையங்கள், மேற்படிப்பிற்கான சிறப்பு வகுப்புகள், என புதிய கல்வி மற்றும் கலாச்சார சூழலை உருவாக்கவும் உத்தரவிட்டது. நடப்பில் உள்ள கல்வி மையங்களை சீர்திருத்தாமல் அங்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை அனுமதித்தால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று மிக நுணுக்கமான அணுகுமுறைகளையும் கொண்டிருந்தது அந்த அறிக்கை.
மண்டல் பரிந்துரையை மிஞ்சுகிற வகையிலான 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் மட்டுமே அமலில் உள்ளது. தென் இந்திய மாநிலங்களில் ஏறக்குறைய 49 - 50% இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.


தென் இந்திய சமூகம் மனம் உகந்து இந்த பரிந்துரைகளை அமல்படுத்தியது. நாராயண குரு, பெரியார், அயோத்திதாசர் வாழ்ந்த மண்ணுக்கான சான்றுகளே. இவை மத்திய அரசால் நடத்தப்படும் உயர் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட சாதியினர் / பழங்குடியினருக்கான 22.5% இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இப்பொழுது அதே நிறுவனங்களில் 27% ஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்க வேண்டும் என்பது மண்டல் அறிக்கையின் மற்றொரு பரிந்துரை. 22.5% இடஒதுக்கீட்டால் அந்த நிறுவனங்களின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதை வரலாறு எடுத்துரைக்கிறது. ஆனால் 27% ஒதுக்கீட்டால் அந்த நிறுவனங்களின் தரம் கெட்டு விடுமாம். பொது பிரிவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பது தான் அவர்களின் மறைமுகக் கவலையே.


உயர்கல்வி நிறுவனங்களுக்கான நுழைவு தேர்வு வகுப்புகளை FIIT, JEE நடத்துகிறது. வருடாந்திர கட்டணம் ரூபாய் நாற்பதாயிரம். இந்த தொகையை கொடுத்து மேட்டுக் குடியினர், பொருளாதார வசதி படைத்தோர் தான் சேர இயலும். இங்கு படிப்பவர்கள் தான் வருடந்தோறும் 30% இடங்களை கைப்பற்றுகிறார்கள்.


இவர்களை போலவே அனைவரும் நுழைவு தேர்வை எழுதுகிறார்கள். மதிப்பெண்கள் பெறுகிறார்கள். எல்லா நடைமுறைகளும் பின்பற்றித்தான் மற்ற வகுப்பினர் அனுமதிக்கப்படுகிறார்கள். நம் பத்திரிக்கைகள் எழுதுவதையும் அந்த தில்லி மருத்துவர்கள் பேசுவதையும் பார்த்தால் ஏதோ மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள். தங்கள் ஜாதி சான்றுகளுடன் வந்தால் அனுமதிக்கப் படுவார்கள் என்பது போல் உள்ளது. உதாரணத்திற்கு, 3000 மாணவர்களை இந்த ஆண்டு இந்தியா முழுவதிலுமுள்ள IIT களில் அனுமதிக்கலாம் என்றால், அதில் 27% - 810 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அனுமதிக்கப் படுவார்கள். 810 இடங்களை கைப்பற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களின் கூற்றுப்படி இந்த இரண்டு லட்சம் மாணவர்களுமே முட்டாள்கள் இவர்கள் அனுமதிக்கப்பட்டால் தரம் கெட்டுவிடும்.


தனியார் மருத்துவ கல்லூரிகள், மற்றும் பல அரசு மருத்துவ கல்லூரிகள் மாணவர்களை பெரும் தொகை பெற்று கொண்டு சேர்த்துக் கொள்வதை நாம் நன்கு அறிவோம். கடந்த ஆண்டு கூட என்.டி.டி.வி ரகசிய காமிராவுடன் இந்த பேரங்களை அம்பலப்படுத்தியது. பட்ட மேற்படிப்பு அதை விட தறிகெட்டு கிடக்கிறது. M.Ch -80 லட்சம், M.S -60 லட்சம், M.D. -45 லட்சம் என தேசமெங்கும் கூவி விற்கப்படுகிற மருத்துவ படிப்புகளால் தரம் கெட்டு விடவில்லையாம். இதை எல்லாம் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்களாம்.


மருத்துவத்தை படித்தவுடன் இவர்களில் 99% பேர் தங்களின் சுயநல கொள்ளைக்கு மட்டுமே தொழிலை அர்ப்பணிக்கிறார்கள். மருத்துவ தொழிலின் எல்லா அறங்களையும், இந்துமகா சமுத்திரத்தில் கரைத்தாகி விட்டது. அரசாங்கம் ஆயிரம் கோடிகளை இவர்களுக்காக செலவிடும் பட்சத்தில், சில புதிய நடைமுறைகளை அமுல்படுத்தலாம். பயிற்சிக்கால மருத்துவர்களின் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். அரசு தலைமை மருத்துவ மனைகளில் ஓராண்டும், அடுத்த இரண்டு ஆண்டுகள் மலைவாழ் மக்களிடம், மருத்துவம் இன்னும் எட்டிப்பார்க்காத கிராமப் புறங்களில் சிகிச்சையளிப்பதை நடைமுறையாக்கலாம். இந்த மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு தான் பட்டங்கள் வழங்க வேண்டும். கிராமப்புறங்களில் பணியாற்றும் காலத்தில், புறக்கணிக்கப்பட்ட மக்களின் மூச்சுக்காற்று மருத்துவர்களின் கொள்ளை வெறிகளைத் தணிக்கக் கூடும்.


AIIMS உள்பட அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அரசு பணியிலிருந்து கொண்டே விதிகளுக்கு மாறாக தனியார் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார்கள். அவர்களின் சொந்த மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அரசு மருத்துவமனைகளிலிருந்து தான் கடத்தி செல்கிறார்கள். அந்த தரகர் வேலைக்கு அவர்கள் பயன்படுத்துவது இந்த பயிற்சி மருத்துவர்களையே. பயிற்சி காலத்திலேயே பணம் சம்பாதிக்கும் வழி. மொத்த நாட்டின் மருத்துவத்துறையை சீரழித்துவிட்டு, தரம், தரம் என யாரை ஏமாற்றுகிறார்கள்.


21 சதவிகித இந்தியர்கள் தங்கள் உடல் உபாதைகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. மருத்துவச் செலவுகள் கிராமப்புறங்கள் கடன் வலையில் சிக்குவதற்கான மிக முக்கிய காரணம். தனியார் மருத்துவமனைகள் கந்துவட்டிக் கடைகள் போல் மாறிவிட்டது.


IIT, IIM, AIIM, படித்து வெளியேறுகிற மாணவர்களில் 70% பேர் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள். இந்த உண்மையை மறைக்கும் விதமாக பலர் கட்டுரைகளை தீட்டுகிறார்கள். கோர்வையுடன் பல பச்சை பொய்கள் IIT படித்து விட்டு மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்கு அம்பிகள் இந்தியா முன்னேற வேண்டும் என்கிற நோக்கத்துடன் மென்பொருள் குமாஸ்தாக்களாக பணிபுரிகிறார்களாம். அரசு செலவில் படித்து வெளிநாடு சென்றுவிடுகிறார்கள் என புலம்பிக் கொண்டேயிருப்பதில் பிரயோசனம் இல்லை. இந்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும் தருவாயில் இவர்களது கடவுசீட்டுகள் (பாஸ்போர்ட்) 10 ஆண்டுகளுக்கு முடக்கப்பட வேண்டும். MLA, MP, அமைச்சர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் (அதில் வரம்புகளை நியமித்துக் கொள்ளலாம்) என இந்த மேட்டுக் குடியினரை மொத்த ஒதுக்கீட்டிலிருந்து விலக்க வேண்டும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான (NRI) ஒதுக்கீடு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். தனியார் தொழிற்சாலைகளின் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் கடுமையான சட்டங்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்.



ஏற்கெனவே இந்த சலுகையை அனுபவித்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர் கூட போராட்டங்களில் களமிறங்காமல் வேடிக்கை பார்ப்பது அபத்தமானது. இது ஒரு வகையான மேனிலையாக்கம். நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட ஜனத்திரளை கல்வி வாய்ப்பளித்து, அரசு உத்யோகங்களில் அமர்த்தினால் தான் அவர்களுக்கு இது தங்கள் சொந்த நாடு, தங்களுக்கு இந்த நாட்டில் உரிமை இருக்கிறது என்கிற உணர்வு பிறக்கும் என திட்டமிடப்பட்டது தான் இந்த ஒதுக்கீட்டின் நோக்கம். 20 ஆண்டுகளுக்கு இந்த ஒதுக்கீடு அமலில் இருக்க வேண்டும் என்பது மண்டல் பரிந்துரை. பின்பு குழு அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பு பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு, அந்த முடிவுகளின் அடிப்படையில் தேவைப்பட்டால் இந்த இட ஒதுக்கீடு மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும் எனத் தெளிவாக எடுத்துரைக்கிறது மண்டல் பரிந்துரை. நூறு சதவிகித எழுத்தறிவை (அரசு பதிவேடுகளில் அல்ல) நாட்டு மக்கள் மெய்யாக பெற வேண்டும், இடஒதுக்கீடு மட்டுமே சமூக ஏற்றத்தாழ்வுகளை நீக்க உதவும் கருவி.


கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நிலப்பரப்புகளைச் சார்ந்த, சாதிகளைச் சார்ந்த, பொருளாதார நிலை சார்ந்த, மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணையும் பொழுது தான் அங்கே கற்கும் சூழல் உருவாகிறது. அங்குதான் மிகப் பெரும் அனுபவப் பகிர்வு பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நோக்கி, தீர்வுகள் நோக்கி பயணிக்கிறதென உலகளவிலான கல்வி ஆய்வாளர்கள் தெரிவித்துவருகிறார்கள். அதுபோலவே இங்கும் பன்முகத் தன்மை வாய்ந்த கல்வி நிறுவனங்கள் உருவாக இடஒதுக்கீடு தவிர்க்க முடியாத கருவியாகிறது.


பொதுப்பிரிவில் உள்ள இடங்களை குறைக்காமல், அந்த கல்லூரிகளின் மொத்த இருக்கைகளை கூட்டுகிறதாம் மத்திய அரசு. போகிற போக்கை பார்த்தால் IIT, IIMல் இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு தனி வகுப்பறைகள் அமைக்க கூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். (பல உயர்கல்வி நிறுவனங்களில் தம்பி நல்ல படிக்கனும் டா, என பெருந்தன்மையாக கூறி சபாஷ் என முதுகில் தட்டி பூணூல் உள்ளதா என்பதை சோதிக்கும் பேராசிரியர்கள் இன்றளவும் சுதந்திரமாக உலவுகிறார்கள்).


தகுதி என்றால் என்ன. மனப்பாடம் செய்து அப்படியே வாந்தி எடுக்கும் கலையைத்தான் தகுதி என்கிறது இன்றைய தேர்வு முறை. அறிவியல் பூர்வமான அணுகுமுறைகள் வளர்ந்து வரும் 21ஆம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட காலாவதியான தேர்வு முறைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். சொந்தமாக சிந்திக்கும் திறன் வளர்க்கப்பட வேண்டும். முடிவெடுக்கும் திறனின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். நடைமுறையில் உள்ளது கல்வி கற்பதல்ல பயிற்சி அளிப்பதே.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் ஜனத்தொகை ஒரு கோடியைத் தாண்டுகிறது. இதில் பிராமணர்கள் 70%. குடியுரிமை பெற்று அமெரிக்காவைத் தங்கள் தாய்நாடாக பாவித்தவர்களுக்கும், அடுத்து பாவிக்கவிருக்கும் இந்த அடிமைக் கூட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் வரிப்பணம் ஏன் விரையம் செய்யப்பட வேண்டும். சென்னை மவுண்ட்ரோடில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விசாவுக்காக நாள் கணக்கில் இந்த கூட்டம் காத்துக் கிடக்கிறது. இவர்கள் அமெரிக்கா சென்ற பிறகு அங்கும் இதுபோலவே அமெரிக்க குடியுரிமை பெற காத்துக் கிடக்கிறார்கள்.


தாழ்த்தப்பட்டவர்கள் நுழைந்தால் கோவில் தீட்டு பட்டுவிடும் என்பதற்கும் IIT, IIM ல் பிற்படுத்தப்பட்டவர்கள் நுழைந்தால் தரம் கெட்டுவிடும் என்பதற்கு எவ்வகையிலும் வேறுபாடு அல்ல. அடுத்து அர்ச்சகர்களாக அனைத்து சாதியினரும் வரலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. சென்னை IITல் மொத்த பேராசிரியர்கள் 400 அதில் பிராமணர்கள் 282 பேர், இதை எப்பொழுது மாற்றப் போகிறோம்.


1830கள் வரை பிரிட்டிஷ் நிர்வாகத்தில் மராட்டிய (தஞ்சாவூர்) பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. அந்த காலத்தில் தான் சில சீர்திருத்தங்கள் அமுலாயின, அதில் மிகவும் முக்கியமானது வட்டார மொழிகளில் எல்லா அரசாங்க தொடர்புகளும் இருக்க வேண்டும் என்பது. இதனால் நவாபுகள் முதல் எல்லா உயர் பதவிகளில் உள்ளவர்கள் வரை அனைவரும் வட்டார மொழிகளை கற்க துவங்கினார்கள். அதன் தொடர்ச்சிதான் இப்பொழுதும் மாவட்ட ஆட்சியர்கள் வெளி மாநிலத்தவராக இருந்தால், அவர்கள் தமிழ் கற்கத் துவங்கி, தக்க புக்க என தொகைக்காட்சிகளுக்கு பேட்டி அளிப்பது, சமயத்தில் சன் டிவி தமிழையும் (டமில்) விஞ்சி விடுகிறார்கள்.



மிஷனரிகள் பள்ளிகள் நடத்தி வந்தார்கள், 1838 முதல் அரசாங்கப் பள்ளிக் கூடம் துவக்கப்பட்டது. 1838ல் ரேவ். ஆண்டர்சன், கிறித்துவ மேல்நிலைப்பள்ளியை துவக்கினார். அதில் சில தலித் மாணவர்களை அவர் அனுமதித்தார். அனுமதித்த அடுத்த நாள் அந்த பள்ளியில் படித்த பிராமண மற்றும் வெள்ளாள மாணவர்களை ஒட்டு மொத்தமாக அவர்களின் பெற்றோர் விலக்கிக் கொண்டார்கள். உடன் அவசர அவசரமாக நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த பச்சையப்பா அறக்கட்டளை வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, பச்சையப்பா பள்ளி துவக்கப்பட்டது. ஏறக்குறைய 1840-1940 வரை ஒரு நூற்றாண்டு காலம் பச்சையப்பா பள்ளியில் தலித் மாணவர்களே அனுமதிக்கப்படவில்லை.


கேம்ப்ரிட்ஜில் படித்த பவேல் அரசு பள்ளியை சென்னையில் துவக்குகிறார், ப்ரோபிசியன்சி படிப்பு துவக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூபாய் நான்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கட்டணமே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை பள்ளியில் நெருங்கவிடாமல் தடுக்கிறது. மிகச் சிலருக்கே அந்த வாய்ப்புக் கிடைக்கிறது. 33 மாணவர்களில் ஏறக்குறைய 30 பேர் பிராமணர், உயர்சாதியினர்களே. இவர்கள் தான் இந்தியா முழுவதும் திவான்களாக, உதவி கலெக்டர்களாக பல சமஸ்தானங்களில் நியமிக்கப்படுகிறார்கள். முழுக்க முழுக்க அரசு எந்திரத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இவர்களில் சமூக மாற்று அல்லது சீர்திருத்தம் என்ற வார்த்தைகளைக் கூட எவரும் உச்சரித்ததில்லை.


1890 - 91ல் செங்கல்பட்டு கலெக்டர் ட்ரேமன்ஹீர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறார். அந்த அறிக்கை, தமிழக சமூக வாழ்வில் தலித்துகளின் புறக்கணிக்கப்பட்ட நிலையை எடுத்துரைக்கிறது. அயோத்திதாசர் தனது குரலை, கேள்விகளை உரக்கப் பதிவு செய்கிறார். அந்த காலகட்டத்தில்தான் பிரம்மஞான சபை துவக்கப்படுகிறது.


1880ல் பல சமூகங்கள் அரசு கட்டமைப்புக்குள் ஊடுருவ முனையும் காலம். நாயக்கர்கள் காவல்துறை இராணுவம் ஆகிய துறைகளில் பெரும் பகுதியாக சேர்க்கப்படுகிறார்கள். இராணுவத்தில் நாயக் ரெஜிமென்ட்கள் உருவாக்கப்படுகிறது. இன்றளவும் அது தொடர்கிறது.


அடையாறில் ஆள்காட் பள்ளி துவக்கப்படுகிறது. அதுவே தலித் மாணவர்களுக்காக பிரத்யேகமாக துவக்கப்பட்ட முதல் பள்ளி. நீதிக்கட்சி துவக்கப்படுகிறது. சர்.பிட்டி. தியாகராய செட்டி, சர். சங்கரன் நாயர் என புதிய சமூக மாற்றத்திற்கான அலை வீசத்துவங்குகிறது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் துவக்கப்படுகிறது. ஜஸ்டிஸ், திராவிடன் இதழ்கள் துவக்கப்படுகிறது. காங்கிரஸ் பிராமணர்களால் நிரம்பி வழிவதை உணர்ந்து காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேறுகிறார்.


1911ல் கல்கத்தாவில் இருந்து நாட்டின் தலைநகரம் தில்லிக்கு மாற்றப்படுகிறது. அம்பிகளின் (பார்ப்பனர்களின்) இடப் பெயர்வும் துவங்குகிறது. தில்லி, மும்பை என பெருநகரங்களை நோக்கி, அவர்களின் உறவினர்கள், சொந்தம், சுற்றாருடன் மொத்தமாக மூட்டை முடிச்சுக்களுடன் இடம் பெயர்ந்தனர். அங்கே தமிழ் சங்கங்கள் துவங்கப்படுகின்றது. புதிய தலைமை செயலகங்கள், அமைச்சக வளாகங்கள் என எதையும் விட்டுவைக்காமல் ஆக்கிரமிக்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை அவர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் தான் உள்ளது அதிகார வர்க்க (Bureaucratic) செயல்பாடு. அந்த வளாகங்களின் உள்கட்டமைப்பை அவர்களுக்குத் இசைவாக மாற்றிக் கொண்டு இன்றளவும் நிழலாட்சிப் புரிகிறார்கள். இவர்களைப் போலவே வங்கத்திலிருந்து சட்டர்ஜி, பானர்ஜிக்கள், கேரளாவிலிருந்து நாயர்கள், நம்பூதிரிகள், மகாராஷ்டிரத்திலிருந்து ராவ், தேஷ்முக்கள் என இந்த உயர்சாதி கூட்டத்தின் பிடியில், மூச்சுத் திணறுகிறது தேசம். வட மாநிலங்களில் இந்த பிராமணர்கள் செலுத்தத் துவங்கிய ஆதிக்கத்தை பொறுக்க முடியாமல்தான் பின்னாட்களில் சிவசேனா போன்ற இயக்கங்கள் உருவாக ஒரு காரணமாகயிருந்தது. மதராசி என தென் மாநிலத்தவர்களை அழைக்கவும் கேலி செய்யவும் துவங்கினார்கள். இன்றளவும் ஹிந்தி, மராத்தி சினிமாக்களில் மதராசிக்கள் நகைச்சுவை கதாப்பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

Thursday, August 12, 2010

ஒருவன் ஒருத்தி என்றால் - பரத்தை எதற்கு?


‘போகும் பொன்னி ஆறும் - இனி ஆகும் காலம் நூறும் - போவோமா - ஊர்கோலம்’ - என்று சின்னத்தம்பியில் பாடினவர் குசுபு. வருஷம் 16இல் - கார்த்திக்குடன் - முதல்படம். தளதள இளமையில் - எதுவும் அறியாப் பருவத்தில் - அவர் பேச்சும் நடிப்பும் படத்துக்குப் புதுமை சேர்த்தன. அதற்கேற்ப - ஒரு பணக்காரக் கேரளத்து நாயர் வீட்டில் சூட்டிங். ஓடி ஒளிய - கொஞ்ச - கெஞ்ச - நிறைய இடம் உண்டு.

கற்பு என்பது

மாமேதை குசுபு ஒரு கருத்து சொன்னார் - கற்பு என்பது திருமணத்துக்குப் பிறகு இருந்தால் போதும் என்று - தமிழகம் கொந்தளித்தது. தமிழ் மக்கள் திருடர்கள் - பொய்யர்கள் - என்பது என் கருத்து. வெளிப்படையாக பல கணவர் வாழ்க்கை வாழும் கேரளப் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள். ஒருவன் ஒருத்தி என்று நாடக மாடும் தமிழர்கள் பற்றி எனக்கு மரியாதை குறைவுதான். திருவள்ளுவர் கூட - ஒருவன் ஒருத்தி கொள்கையைப் பெரிதுபடுத்துகிறார். அதே சமயம் பரத்தை கலாச்சாரம் இருப்பதையும் ஒப்புக்கொள்கிறார். ஒருவன் ஒருத்தி என்றால் - பரத்தை எதற்கு?

விதைப்பதே ஆண்வேலை

பரிணாமத்தின் உச்சியில் இருக்கும் ஆணுக்கு விதைப்பதும், பெண்ணுக்குக் கருவுருவதும் வேலை. பெண் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொண்டு கருவுறலாம். ஆண் - பெண் ஒன்று - இரண்டு எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் கருவுறச் செய்யலாம். திருவள்ளுவர் - ஒருவன் ஒருத்தி உறவை உயர்த்திப் பேசுவது 1. குழந்தைகளின் பாதுகாப்புக்காக, 2. பெண்களின் பாதுகாப்புக்காக எல்லோருக்கும் பெண்டாட்டி என்பதுதான். யாருக்கும் பெண்டாட்டி இல்லை என்பது - ஒது பாதுகாப்பற்ற நிலை. குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பாதுகாப்பான சூழல்தான் முதல் தேவை. இதில் திருவள்ளுவர் - பெண்களின் கடமையை அதிகமாக்குகிறார். ஆண் எப்படியாவது ஒழியட்டும் பெண்ணாகிய நீ கற்போடு இரு; அதுதான் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு என்று. ‘தற்காத்துத் - தற் கொண்டான் பேணி’ தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்கிறார். 1. உன்னைக் காப்பாத்திக்கோ, 2. உன் கணவனைப் பராமரி,

3. நல்ல பெயரை எடு, 4. எதற்கும் எப்பவும் கலங்காதே. இதை நோண்டிப்பார்த்தால் - புருஷன் காரன் - எப்படியும் திரிவான். நீதான் குடும்பத்தின் விளக்கு. உன் குழந்தைகள் வளர வீடு என்று ஒன்று இருக்க - நீ தான் முதன்மை என்பதாகும். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இது மனுநீதிக் கருத்துதான்.

மதர் இந்தியா - முதல் - கண்ணகி வரை

மதர் இந்தியா - என்று சினிமா கணவன் - வயல் வேலையில் கால் நொண்டியாகி ஊரைவிட்டு ஓடிவிடுகிறான். அம்மாதான் - தன் நிலத்தை, தன் இரண்டு குழந்தைகளை உருவாக்கிக் கொண்டு வருகிறாள். ஒரு மகன் - பெண்களைக் கெடுப்பவனாக மாறும்போது அவனைச் சுட்டுத்தள்ளவும் தவறுவதில்லை. தேவடியாள் கூட ஓடிப்போகும் கோவலனை - என்ன ஆனாலும் என் கணவன் என்று கண்ணகி ஏற்கிறாள். ‘தேரா மன்னா’ என்று அரச சபையில் தன் வழக்கில் தானே வாதிடுகிறார். மதுரையை அழிக்கிறார். இதில் எல்லாம் கணவனைப் புறக்கணிக்காத - பெண்டிரே குடும்பத்தின் அடித்தளம் என்பது தெளிவாகிறது.

சின்ன தம்பி’யின் பிரம்மாண்ட வெற்றி

சின்ன தம்பியில் குசுபுவும், பிரபுவும் - அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினார்கள். தமிழ்த் திரைப்படங்களில் - சின்னதம்பி ஒரு மைல்கல் என்றால் அது மிகை இல்லை. இந்தப்பட வெற்றிக்குப் பிறகு குசுபு - சிவாஜி கணேசன் வீட்டுக்கு போகவும் அனைத்துப் பிரபு உறவினர்களுடன் பழகவும் செய்தார். சிவாஜி கூட ‘குச்பு குச்பு’ என்று இந்த அம்மையாரைக் கொஞ்சினார்.

பிரபு மட்டுமே

சில பத்திரிகையாளர்கள் ‘சின்னத்தம்பி’க்குப் பிறகு குசுபுவைப் பேட்டி கண்டார்கள். 1. உங்கள் வாழ்வில் முக்கிய ஆண் யார்? 2. நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா? 3. யாரைத் திருமணம் செய்து கொள்வீர்கள் - என்று இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் குசுபு ஒரே விடைதான் தந்தார் - பிரபு - என்று. இதுதான் பிரபுவின் மனைவியை உசுப்பி இருக்கவேண்டும். முன்பே மனைவியாக வாழ்ந்து ஒன்றிரண்டு குழந்தைகளைத் தந்த தன் கணவனை - இன்னொருத்தி சொந்தம் கொண்டாடினால் எப்படி இருக்கும்? நடிப்பு வேறு. வாழ்க்கை வேறு.

உண்மையைச் சொன்னார்

‘கற்பு’ பற்றிய பேட்டியில் - தன் வாழ்க்கை அனுபவத்தை வைத்து - ‘திருமணத்துக்குப் பின் பெண் கற்போடு இருந்தால் போதும்’. முன்னால் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் என்கிற மாதிரி ஒரு கருத்தைச் சொன்னார். சுகாசினி கூட - இந்தக் கருத்தை ஆதரித்தார். சினிமா உலகில் இது சர்வ சாதாரணம். பொய்யே வாழ்வாக - இரட்டை வாழ்க்கை வாழும் - பார்ப்பனத் தலைமை - தமிழ்மக்கள் - ஆகா எம் கற்பை - இப்படி சிரிப்புச் செய்தி ஆக்கலாமா - என்று தாண்டிக் குதித்தார்கள். குசுபு - இதைப்பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. சில தீவிரத் தமிழர்கள் குசுபு மீது வழக்கும் போட்டார்கள். வழக்கில் - குசுபு நிலைப் பாட்டில் தப்பில்லை - என்று தீர்ப்பு வந்தது. தமிழ் மாவீரர்கள் - மேலும் கீழும் மூடிக் கொண்டார்கள்.

தி.மு.க.-வில் குசுபு

இப்ப செய்தி குசுபு தி.மு.க.வில் சேர்ந்தார் - என்பது, அதாவது மிக வெற்றிகரமான தொடர்களை ‘ஜெயா டிவி’யில் செய்து கொண்டிருக்கும்போதே, இந்த முடிவு. தொடர்களைச் செய்யும்போதே - குசுபுவின் மிகப்பெரிய பங்களிப்பு - இன்று என்ன சோளி அணிந்தார் என்பதே இவருடைய பேச்சு - கருத்து பற்றியாரும் கவலைப்படவில்லை. ரவிக்கை பற்றியே ஆண்களும் பெண்களும் பேசி மாய்ந்து போனார்கள். குசுபுவுக்கு அரசியல் தெரியுமா? குசுபு - எம்பி - ஆவாரா? அமைச்சர் ஆவாரா? யார் யார் எல்லாம் குசுபுக்குத் தலைவர்கள் - இப்படி எல்லாம் கேள்விகள், விவாதங்கள்.

மனு நீதிக் காட்டுமிராண்டிகள்

பெண்ணுக்கென்று உடம்பு இருக்கிறது; அறிவு இருக்கிறது; தன் உடம்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது அவள் செய்ய வேண்டிய முடிவு; தன் அறிவை எப்படி உபயோகிப்பது என்பது அவளுடைய முடிவு; அவள் ஒரு மனித சென்மம். அவளுடைய ஆசைக்கும் திட்டத்துக்கும், செயலுக்கும் விளைவுக்கும் அவள்தான் பொறுப்பு. அதில் மூக்கை நுழைத்துக் கருத்துச் சொல்வது அநாகரிகம். ‘குழந்தையாகத் தந்தையை - குமரியாகக் கணவனை - கிழவியாக மகனைச் சார்ந்து வாழப் பெண் கடமைப் பட்டவள்’ என்கிறது மனுநீதி. நீ யாரடா - அதைச் சொல்ல?

- சங்கமித்ரா

Thursday, March 04, 2010

பிரேமானந்தா முதல் நித்தியானந்தம் வரை

பிரேமானந்தா ஆரம்பித்து வைத்த போலிச் சாமியார் டைட்டில் மெகா சீரியலில் லேட்டஸ்ட் வரவு நித்தியானந்தம் என்பதை தவிர இந்த விசயத்தில் என்ன கருமாந்திரப் புதுச்செய்தி இருந்துவிடப் போகிறது? பிரேமானந்தா, காஞ்சி காம கேடி, குலுக்கிய கலுக்கி பகவான் அம்மா சாமி காஞ்சி காமதேவன் தேவநாதன், சத்திய சாய்பாபா, இன்னும் இன்னும் தொடரப்போகும் காம சாமிகளின் வரிசையில் நித்தியானந்தமும் ஒருவர்.

நடிகை ஒருவரோடு படுத்திருந்ததற்காக நித்தியை கைதுசெய்ய வேண்டும் எனச் சொல்லும் மக்களை முதலில் கைது செய்து உள்ளே தள்ளுங்கள், இந்த மானம் கெட்ட மடையர்களின் மூட நம்பிக்கைகளால் தானே இந்த காலி சாமியார்கள் பெருத்து கொழுத்து கிடக்கிறார்கள். தவறு செய்தவனை விட தூண்டியவனுக்கு தான் அதிக தண்டனையாமே? மக்களே உங்களுக்கு என்ன கருமத்திற்காக தண்டனை தரலாம்?

Saturday, February 27, 2010

பெரியார் 25


தந்தை பெரியார் - வஞ்சிக்கப்பட்ட மக்களின் வாய்தா வாங்காத வக்கீல். ஆயிரமாண்டு ஆதிக்க மலையை அடித்து நொறுக்கியது அவரது கைத்தடி. அடங்கியிருந்தவர்கள் எழுந்து நிற்க ஊன்றுகோலாக இருந்ததும் அதுவே. 95 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக்கொண்டு சளைக்காமல் போராடியவரின் சரித்திரத்தில் இருந்து...

ராமசாமி என்பது அவரது பெற்றோர் வைத்த பெயர்.பெண்ணடிமைத்தனம் குறித்துப் பெரும் பிரசாரம் செய்ததற்காக, மாநாடு கூட்டிய பெண்கள் அமைப்பினர் சூட்டிய பட்டம்தான் பெரியார். அதுவே அவரது பெயராக மாறிப் போனது!

பெரியார் - நாகம்மை இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்து 5-வது மாதமே இறந்து போனது. அதன்பிறகு குழந்தைகள் இல்லை. ஆனால் 20-க்கும் மேற்பட்ட அநாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். படிக்கவைத்துத் திருமணம் செய்தது வரை இவரது செலவுதான். இவர்களுக்கு ஈ.வெ.ரா.ம. என்பது இனிஷியல்!

தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் எடைக்கு எடை பொருட்கள் தரப்பட்டது இவருக்குத்தான். வெள்ளி, நெல் மூட்டைகள், பேரீச்சம்பழம், பெட்ஷீட் தொடங்கி வெங்காயம் வரை தரப்பட்டுள்ளது!

தான் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது யாராவது மாற்றுக் கருத்து இருந்தால் உடனே எழுந்து சொல்லலாம் என அறிவித்திருந்தார். ''நான் இல்லாத இடத்தில் என்னைப்பற்றிப் பேசாதே, காணாத இடத்தில் குரைக்காதே'' என்பார்!

வால்மீகி ராமாயணம், அபிதான சிந்தாமணி, தமிழ்ப் பேரகராதி ஆகிய மூன்று புத்தகங்களையும் எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார். சர்ச்சைக்குரிய புத்தகங்களின் அடுத்தடுத்த பதிப்புகளையும் விடாமல் வாங்குவார்!

பதினைந்துக்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தார். பிரெஞ்சு தொடங்கி ராஜபாளையம் வரை பல வகைகள் இருக்கும். வெளியூர் பயணத்தின்போதும் அவை வேனில் ஏறி வந்து மேடைக்குக் கீழே உட்கார்ந்திருக்கும்!

தான் செய்யும் சிறு செலவுக்குக்கூட கணக்கு வழக்கு வைத்திருந்தார். அதைச் சின்ன டைரியில் குறித்துவைத்திருந்தார். வருமானவரி பிரச்னை ஒன்று வந்தபோது, இந்த டைரிகளைப் பார்த்து நீதிபதிகளே ஆச்சர்யப்பட்டார்கள்!

வாரம் ஒருமுறை, பத்து நாளைக்கு ஒருமுறைதான் குளிப்பார். ''குளிக்கணும்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்ல. அதை ஒரு தொந்தரவாக நினைக்கிறேன்'' என்பார்!

தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தவர் பெரியார்தான். ணா, லை என்றெல்லாம் 75 ஆண்டுகளுக்கு முன்னால் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவர் அவர்தான்!

இளமைக் காலத்தில் தான் செய்த சேஷ்டைகளைப் பகிரங்கமாகச் சொன்னவர். ''மைனர் வாழ்க்கை நடத்தியவன்தான். ஆனால், இதுநாள் வரை மது அருந்தியதே இல்லை. ஆனால், பலருக்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நான் வியாபாரியாக இருந்தபோது பொய் பேசி இருப்பேன். பொதுவாழ்க்கைக்கு வந்தபிறகு ஒரு பொய்கூடச் சொன்னதில்லை. ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்ததில்லை'' என்று அறிவித்தவர்!

உங்களுடைய அரசியல் வாரிசு யார் என்று கேட்டபோது, ''எனக்கு அரசியல் வாரிசு என்று யாரும் கிடையாது. என்னுடைய கொள்கைகளும் கருத்தும்தான் வாரிசு'' என்றார்!

தன்னுடைய மனைவி நாகம்மை, அம்மா சின்னத் தாய் ஆகியோர் இறந்தபோது, தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பகிரங்கமாக அறிவித்தார். 'எனக்குஇருந்த குடும்பத் தொல்லைகள் ஒழிந்தன' என்று காரணம் சொன்னார்!

இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் செல்போன், கம்யூட்டர், வாக்மேன், வெப்கேமரா, டெஸ்ட்டியூப் பேபி, உணவு கேப்சூல்கள், குடும்பக் கட்டுப்பாடு... அனைத்தைப் பற்றியும் 65 ஆண்டுகளுக்கு முன்னால் 'இனிவரும் உலகம்' என்ற கட்டுரையில் எழுதி தன்னுடைய விஞ்ஞான அறிவை வெளிப்படுத் தியவர் பெரியார்!

இரண்டு கவர்னர் ஜெனரல்கள் நேரில் வந்து சந்தித்து 1940, 42 ஆண்டுகளின் சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது மறுத்தார். ''நெருப்புகூடக் குளிர்ச்சி ஆகலாம், வேப்பெண்ணெய் தேன்ஆகலாம். ஆனால், பதவியேற்றவன் யோக்கியனாக இருக்கவே முடியாது'' என்றார்!

தனது மனதில் பட்டதைத் தயவு தாட்சண்யம் பார்க்காமல் சொல்லிவிடுவார். வெற்றிலை பாக்கு கடை வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவுக்கு பேசப் போனவர், ''உங்களால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை, எனவே, கடைகளைக் மூடி விட்டு, மக்களுக்குப் பயன்படக்கூடிய வேலையைப் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு வந்தார்!

தன்னுடைய குடும்பச் சொத்தை எடுத்து வந்து பொதுவாழ்க்கையில் செலவு செய்தார். பொதுவாழ்க்கையில் கிடைத் ததை அனைவருக்கும் பயன்படுவது மாதிரி டிரஸ்ட் ஆக்கினார். அவரதுசேகரிப் பில் நயாபைசாகூடத் தனது குடும்பத்தினர் யாருக்கும் தரப்படவில்லை!

முக்கியமானவர்கள் யார் வந்தாலும் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். இளைஞராக இருந்தாலும் 'வாங்க, போங்க' என்பார். பொது நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்து பாடினாலும் எழுந்து நிற்பார். யாராவது திருநீறு கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார்!

உலகம் முழுவதும் பெண்ணியவாதிகள் தங்களது வேதப்புத்தகமாகச் சொல்லும் 'செகண்ட் செக்ஸ்' வெளிவருவதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே இவர் எழுதிய 'பெண் ஏன் அடிமையானாள்?' புத்தகம் வெளியாகிவிட்டது!

'நான் சொன்னதை அப்படியே நம்பாதீர்கள். உங்களுக்குச் சரி என்றுபட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள். நான் கொள்கையை மாற்றிக்கொண்டே இருப்பேன். எப்போது மாறுவேன் என்று எனக்கே தெரியாது'' என்று எல்லாக் கூட்டத்திலும் மறக்காமல் சொல்வார்!

அவருடைய நண்பர்களில் எட்டுப் பேர் 42 வயதில் இறந்துவிட்டார்களாம். தானும் 42 வயதில் இறந்து போவோம் என்று நினைத்தாராம். ஆனால், அதன்பிறகுதான் தீவிரப் பொது வாழ்க்கையில் இறங்கினார்!

'தோழர்' என்று கூப்பிடுங்கள் என்று முதன் முதலாக தமிழ்நாட்டில் அறிவித்தவர் இவர்தான்!

புத்துலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டுப் பத்திரம் கொடுத்தபோது, ''இந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வெட்கப்படுகிறேன்'' என்றார்!

பெரியார் அதிகமாக உச்சரித்த வார்த்தை-வெங்காயம். ''வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்'' என்றார்!

நேரடி விவாதங்களின்போது, ''சொல்றதுக்காக என்னை மன்னிக்கணும்'' என்று சொல்லிவிட்டுத்தான் பதில் சொல்வார்!

95 வயது வயதில் மொத்தம் 98 நாட்கள் வாழ்ந்தார். அதில் 35 நாட்கள் வெளியூர் பயணம் சென்று 42 கூட்டம் பேசினார். கடைசியாக அவர் பேசிய இடம் சென்னை தியாகராயர் நகர். அந்த இடத்தில்தான் பெரியார் சிலை கம்பீரமாக நிற்கிறது!

-ப.திருமாவேலன்

Monday, February 15, 2010

வன்னியர்கள் மீது பாய்ந்த கைவிரல் ரேகைப் பதிவு ஆணை

விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆணை, கள்ளர் சமூகத்தினருக்கு மட்டுமல்லாது, வன்னியர் சமூகத்தினருக்கும் இருந்தது. குறிப்பாக தென்னாற்காடு மாவட்டத்தில் ‘படையாட்சி’ என்று அழைக்கப்பட்ட வன்னியர் சமூகத்தினர் காவல் நிலையங்களில், அன்றாடம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று சில பார்ப்பன போலீஸ் அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்ற அவசர தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதை காங்கிரசார், தங்களின் சாதனைபோல அப்போதே பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த வரலாற்றுச் செய்திகளை 1935 ஆம் ஆண்டு ‘விடுதலை’ ஏட்டிலும், ‘குடிஅரசு’ இதழிலும், ‘தென்னாற்காடு ஜில்லா படையாட்சிகள்’ எனும் தலைப்பிலும் பதிவாகியுள்ளது. செய்தியை இங்கு வெளியிடுகிறோம்.

சமீபத்தில் நடக்கப் போகும் தென்னாற்காடு ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள், மற்ற இடங்களில் உண்மையை மறைத்தும், உள்ளதைக் குறைத்தும் கூறிப் பொய்ப் பிரச்சாரம் செய்த மாதிரி, தங்களுடைய ஒழுங்கீனமான சுயநலப் பிரச்சாரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் செய்த சூழ்ச்சிகளைக் குறித்து நமது நிருபர் எழுதிய விவரங்களை வேறொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். அவற்றால், சுயநலக் கூட்டத்தார் ஜஸ்டிஸ் கட்சியினரைத் தோற்கடிக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்கிறார்களென்பது விளங்கும். தம்முடைய பிரச்சாரத்திற்காக, எவ்வளவு கேவலமான முறைகளையும் அனுசரிப்பார்களென்பது, அவர்களுடைய முழுப் பொய்ப் பிரச்சாரத்தினால் புலப்படுகின்றது. சில வாரங்களுக்கு முன், படையாட்சி வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் குற்ற பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசாங்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

க்ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களான படையாட்சிகள் ஏன் குற்றஞ் செய்யும் வகுப்பினரோடு சேர்க்கப்பட்டார்கள்? அதற்குக் காரணமென்ன? காரணம் சில பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்கள். அவர்களுடைய ‘ரிப்போர்ட்டு’களில் அவ்வகுப்பினரை குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் மிக அவசியம் என்று எழுதியதனால், அரசாங்கத்தார், தவறாக அப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டார்கள். அந்த உத்தரவு படையாட்சி வகுப்பினரிடையே பெருத்த பரபரப்பை உண்டு பண்ணியது. அவர்களுடைய சுயமரியாதைக்கும், கௌரவத்திற்கும், அரசாங்க உத்தரவு இடையூறு செய்ததைக் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் கண்டிக்கப்பட்டது. அந்த அவமரியாதையான உத்தரவை ரத்து செய்வதற்குத் தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர், ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பிரயாசைப்பட்டு வெற்றி பெற்ற விஷயம் அந்த ஜில்லாவாசியான படையாட்சிகளுக்குத் தெரிந்திருக்குமென்று நம்புகின்றோம்.

சென்னை சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியினர் ஒருவரால் அவசரத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவ்வுத்தரவை ரத்து செய்யும் விஷயமாக அரசாங்கத்தார் கவனிப்பதாக வாக்குறுதியளித்ததின் பேரில், தீர்மானம் ‘வாப்பீஸ்’ வாங்கிக் கொள்ளப்பட்டது. பின்னர், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களின் முயற்சியால், அரசாங்கத்தார் பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்களுடைய ‘ரிப்போர்ட்’டுகளின் மேல் தாங்கள் அம்மாதிரி உத்தரவிட்டது தவறென்று உணர்ந்து, படையாட்சிகளின் கிளர்ச்சியின் உண்மையை அறிந்து, உத்தரவை ரத்து செய்தார்கள்.

இவ்வுத்தரவு ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது. காங்கிரஸ்காரர்கள் தான் சட்டசபையில் இதை விவாதித்து ரத ்து செய்வதற்கு உதவி செய்தார்கள் என்று சுயநலக் கூட்டப் பத்திரிகைகள் சில கூறுவது எவ்வளவு பொய்யான விஷயம் என்பதை படையாட்சிகள் அறிவார்கள் என்று நம்புகிறோம். படையாட்சிகள் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களில் மிகப் பழங்குடி மக்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் பரிந்து பேசுவதும், அவர்களுடைய நன்மைக்காகப் பாடுபடுவது போலப் பாசாங்கு செய்வதும், மக்களை ஏமாற்றி ‘ஓட்’டுப் பறிப்பதற்கேயாகும். காங்கிரஸ் என்ற போர்வையை மேல் போர்த்திக் கொண்டால், படையாட்சிகளை ஏமாற்றிவிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

சதாகாலமும் பொய், ஏமாற்றுதல், மானக்கேடான செயல்களைச் செய்து, வேலை சம்பாதித்தல், புல்லிய செய்கைகளின் மூலம் வயிறு வளர்த்தல் முதலிய குற்றங்களை இரவு பகலாகச் செய்து வரும் பார்ப்பனர்களை, குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டியிருக்க, தமிழ்நாட்டின் விவசாய விருத்திக்குக் கற்றூண் போல் விளங்கி, பழமையும் பெருமையும் பொருந்திய க்ஷத்திரிய வீரத்தையும், தேக பலத்தையும் நாட்டின் செழுமைக்கு உபயோகிக்கும் படையாட்சிகளைக் குற்ற பரம்பரை வகுப்பினராகச் சேர்த்தது எவ்வளவு தவறான விஷயம். இத்தவறுதலுக்குக் காரணம் பார்ப்பனர்கள் என்பதை யுணர்ந்து, அவ்வுத்தரவு ரத்து செய்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்பதறிந்து, சமீபத்தில் நடைபெறப் போகும் தேர்தலில் சுயநலக் காங்கிரஸ் கூட்டத்தை முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம்.

‘விடுதலை’

‘குடி அரசு’ மறு பிரசுரம் - 08.12.1935

Saturday, February 13, 2010

தங்கர்பச்சான்,சீமான்:தமிழ்ப்பாசிஸ்ட்கள்



தமிழ் நடிகைகள் குறித்த தங்கர்பச்சானின் ‘அரிய’ கருத்து, திருமணத்திற்கு முன்னான பாலுறவு குறித்த குஷ்புவின் கருத்து போன்றவைகளுக்கு அடுத்தபடியாக ஜெயராமின் பேச்சு இப்போது தமிழ் ‘இன உணர்வைக்’ கிளப்பியிருக்கிறது. இன்று காலையில் ஒரு தமிழ்த்தேசிய நண்பரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது, ‘ஜெயராமுக்கு மன்னிப்பு, சீமானுக்குக் கைது - இதுதான் திராவிட நீதியா?’ என்று. ஜெய்ராம் பேசிய கருத்துக்காக தமிழகக் காவல்துறை அவரைக் கைதுசெய்யமுடியாது, ஜெய்ராம் மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் (தொடரப்பட்டிருக்கிறது). ஆனால் நாம் தமிழர் இயக்கம் ஜெய்ராம் வீடு புகுந்து நிகழ்த்திய வன்முறைக்கு நிச்சயம் காவல்துறை கைதுநடவடிக்கை எடுத்துத்தானாக வேண்டும். ஆனால் இந்த வித்தியாசங்களைக் கூட உணர முடியாதளவு நிதானத்தை இழந்துள்ளனர் தமிழ்த்தேசியவாதிகள். நிதானம் இழப்பதும் எதார்த்தங்களைப் பரிசீலிக்கத் தவறுவதும் அவர்களுக்கு ஒன்றும் புதியதல்லவே!

'தாக்கரே பெருமகன்' என்று மும்பையில் சீமான் பேசியதற்கு மேலும் அர்த்தத்தின் அடர்த்தியைக் கூட்டியிருக்கின்றனர் அவரது தம்பிமார்கள். ஜெயராமின் கருத்திற்கு எதிரான கண்டனப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று எதுவுமேயில்லாது எடுத்தவுடனே வீடு புகுந்து அடிப்பது ஒன்றுதான் வழி என்றால் அந்த வன்முறை யார் மீது வேண்டுமானாலும் திரும்ப முடியும் என்பதை நாம் உணரவேண்டும். பெரியாரைக் கைவிட்ட சீமான் சிவசேனாவின் வழி நோக்கி அடியெடுத்து வைப்பது கருத்தியல் இயல்புதான்.

நிச்சயமாக இந்த கட்டுரை ஜெயராமின் கருத்துக்களை நியாயப்படுத்தவில்லை; ஆனால் ஜெயராமின் சொற்களுக்குப் பின்னாலிருந்தது வெறுமனே இனவாதத் திமிரல்ல என்பதை அடையாளப்படுத்த முனைகிறது. மேலும் ஜெயராமுக்கு எதிராய்க் குரலுயர்த்தும் இனவாதிகள் மற்றும் ஊடகங்களின் அறிவுநாணயம் மற்றும் அரசியல் யோக்கியதை குறித்துக் கேள்வி எழுப்ப விரும்புகிறது.

ஜெய்ராம் மலையாளச் சேனலில் அளித்த நேர்காணலை வைத்து முதன்முதலாகப் பரபரப்பைக் கிளப்பியது குமுதம்தான். வேலைக்காரிகள் குறித்த ஜோக்குகளையும் படங்களுக்கான கமெண்டில் நடிகைகள் குறித்த அருவெறுப்பான வார்த்தைகளையும் உதிர்க்கும் குமுதத்திற்கு இதுகுறித்து எழுதுவதற்கு ஏதாவது யோக்கியதை உண்டா? குமுதம் திடீரென்று பேசும் இனவாதத்தின் பின்னுள்ள லாபம் என்ன?

ஜெய்ராம் குறித்து முதலில் கண்டனத்தைத் தெரிவித்தவர் வழக்கம் போல், ‘என்ன சார் நடக்குது இங்க?’ தங்கர்பச்சான்தான். ஆனால் இதே தங்கர்பச்சான்தான் ‘நடிகைகள் விபச்சாரிகள்’ என்ற ‘முற்போக்குக் கருத்தை’ச் சொன்னவர். அவர் சொன்னது நவ்யா நாயர் என்னும் மலையாள நடிகை குறித்துத்தான். ‘எம்மினப் பெண்ணை எப்படி வேசி என்று சொல்லலாம்?’ என்று கேரளா அன்று கொதித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? குமுதத்தின் வேலைக்காரி ஜோக்குகளில் அவமானப்படுத்தப்படுபவர்கள் எல்லாம் ‘தமிழ் வேலைக்காரிகள்’தானே? சீமான், பச்சான் மாதிரியான தமிழ்த்தேசிய இயக்குனர்களின் படங்களில் தமிழ்ப்பெண்களுக்கான இடமென்ன? எப்போதாவது பெண்களின் உரிமைகள் குறித்தும் சுயமரியாதை குறித்தும் அங்கீகாரம் குறித்தும் அவர்களின் படங்கள் பேசியிருக்கின்றனவா? ‘என் சேலைக்கு அவிழ்ந்து விழ நேரம் என்னைக்கு?’ என்பதுதானே அதிகபட்சம் இவர்கள் படத்துப் பெண்கள் ஆண்களை நோக்கி கேட்ட கேள்வி?

தமிழ்த்திரைப்படங்கள் தமிழ்ப்பெண்களைச் சித்தரித்தது ஒருபுறமிருக்கட்டும். தமிழ்ச்சினிமா மலையாளப் பெண்களை எப்படி சித்தரித்திருக்கிறது? இடுப்பு வரை முண்டு கட்டிய பாலுணர்வு தீனிப்பண்டங்களாகத்தானே அவர்களைச் சித்தரித்திருக்கிறது. ‘தாராளமா மனசு இருந்தா கேரளான்னு தெரிஞ்சுக்கோ’ (ரன் படப் பாடல்) என்ற வரிகள் மலையாளப் பெண்களை இழிவுபடுத்தவில்லையா? எத்தனை படங்களில் மலையாளப் பெண்களுக்கான கேரக்டர்களில் ஷகீலாவும் மும்தாஜிம் வந்து ‘கவர்ச்சி விருந்து’ படைத்திருக்கிறார்கள்? இதற்குப் பெயர் இனவாதமில்லையா? மலையாள சினிமா எப்படி தமிழர்களையும் தமிழ்ப்பெண்களையும் இழிவாகப் பார்க்கிறதோ அதேபோல்தான் தமிழ்ச் சினிமாவும். ‘மற்றமை’ குறித்த வெறுப்புணர்ச்சியும் இனவாத அடிப்படைவாதமுமே இதற்குக் காரணம்.

அரசியல் தெளிவும் அறிவுநாணயமும் உடைய யாரும் தங்கர்பச்சான், சீமான் வகையறாக்களோடு கைகோர்த்து ஜெயராமை எதிர்க்க முடியாது. இப்படி ஒரு கேள்வியை எழுப்பிப் பார்ப்போம். ‘ஜக்குபாய் திருட்டு விசிடியாக வெளியானதை ஒட்டி நடந்த கண்டனக்கூட்டத்தில்’ கமல்ஹாசன் இப்படிப் பேசினார், "திருட்டு விசிடி மூலம் கிடைக்கும் பணம்தான் மும்பை குண்டுவெடிப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது". ஏன் ‘நாம் தமிழர்’ இயக்கம் முஸ்லீம்களை இழிவுபடுத்தியதைக் கண்டித்து கமல்ஹாசனுக்கு எதிராகப் போராடவில்லை? 'முஸ்லீம்கள் நாம் தமிழர் இல்லை' என்கிறாரா சீமான்?

இப்போது ஜெயராமின் கருத்துக்கு வருவோம். ஜெயராமின் கருத்துக்களில் நிச்சயம் இனவாதம் இருந்தது. ‘கேரளப்பெண்களின் தாராள மனசைச் சொன்ன’ தமிழ் இனவாதத்தைப் போன்றதொரு மலையாள இனவாதம்; மேலும் பெண்களைப் பாலியல் நுகர்வுப்பண்டமாய்ப் பார்க்கும் ஆணாதிக்கத் திமிர்; உழைக்கும் பெண்களை இழிவாய்க் கருதும் வர்க்கத்திமிர் - இவையெல்லாம் சேர்ந்துதான் ஜெயராமின் வார்த்தைகளாக உருமாறின. ஆனால் தமிழினவாதிகள் மற்ற இரண்டு திமிர் குறித்துப் பேசமாட்டார்கள். ஏனென்றால் அந்த திமிர் அவர்களுக்கும் சொந்தமானது. ஜெய்ராம் வேலைக்காரிகளை அவமானப்படுத்தினார் என்றால் ஹேர்டிரஸ்ஸர் என்னும் உழைக்கும் பெண்ணிற்கான பேட்டா பிரச்சினையை முன்வைத்த நடிகையை ‘விபச்சாரி’ என்றவர்தானே தங்கர்பச்சான்?

ஜெய்ராம் வீட்டின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கும் சிவசேனாவின் பாசிச நடவடிக்கைகளுக்கும் இடையேயான ஒப்புமைகள் என்ன? மராட்டியத்தில் சிவசேனாவின் வன்முறைகள் தமிழர்கள், தொழிலாளிகள், முஸ்லீம்கள் என்று தொடர்ந்து விரிந்து இப்போது மராட்டியர் அல்லாதோரான வட இந்திய கூலித் தொழிலாளர்கள் வரை வந்து நின்றிருக்கின்றது. இந்தப் பாசிசத்தின் அடிப்படை, தொடர்ச்சியாக எதிரிகளைக் கட்டமைப்பதும், அவர்களின் மீதான வன்முறையை உணர்ச்சிகரமான வெகுமக்கள் அரசியலாக்குவதும்தான். அதற்கு இடையூறான மாற்றுக்குரல்கள் தமது சொந்தப் பிரிவினரிடம் இருந்து வந்தால் கூட (உதாரணம் சச்சின் டெண்டுல்கர்) அவர்களின் மீதான வன்முறையாகக் கூட மாறக்கூடும்.

இரண்டாவதாக இந்தப் பாசிசத்திற்கு எப்போதும் கருத்தியல் பலம் இருப்பதில்லை. மாறாக உணர்ச்சிவயப்பட்ட சொல்லாடல்களும், வெறுப்பின் அரசியல் மட்டுமே இவற்றின் நடவடிக்கைகளுக்கு பலம் கூட்டும்; மார்க்சியம், பெரியாரியம் மாதிரியான எல்லாவிதக் கருத்தியல் அடிப்படைகளை நீக்கம் செய்த தூய இனவாதத்தை இந்தப் பாசிசம் ‘வெற்றிகரமாக’ முன்வைக்கும். மேலும் பாசிசம் ஒரு சில கருத்தியல் அடிப்படைகள் இருப்பதாக பாவனை செய்தபோதும் கூட, தன் வன்முறைக்கு நியாயம் சேர்க்கும் கூறுகள் தனக்கு முற்றிலும் எதிரான ஒரு தளத்தில் இருப்பதாக நம்பினால் கொஞ்சமும் வெட்கமின்றி அதை உயர்த்திப் பிடிக்கும். பால்தாக்கரே புலிகளை ஆதரித்ததையும், சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத்தை ஆதரித்ததையும் இங்கு ஒப்பு நோக்கலாம். மேலும் பாசிசத்தின் பிரதான கூறு ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று மனித குலப்போராட்டங்கள் இதுவரை கண்டடைந்த எல்லா வழிமுறைகளையும் புறங்கையால் நிராகரித்துவிட்டு, நேரடி வன்முறைக்கு முன்னுரிமை அளிப்பதுதான். இதுதான் ஜெய்ராம் வீட்டின் மீதும் நிகழ்ந்தது.

ஆனால் இங்கே இன்னொரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இதேநாட்களில் சென்னையில் நடைபெற்ற ‘அனைத்து இந்திய வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்களுக்கான மாநாட்டில்’ ஜெயராமின் கருத்துக்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன. ஜெயராமுக்கான கண்டனமும் தெரிவிக்கப்பட்டன. நமது குரல் இந்த கண்டனங்களோடு இணையவேண்டுமே தவிர, நமது கைகள் உழைத்துச் சோர்ந்த இந்த கரங்களோடு இணைய வேண்டுமே தவிர தங்கர்பச்சான், சீமான் மாதிரியான தமிழ்ப்பாசிஸ்ட்களோடு அல்ல.
- அங்குலிமாலா

Monday, January 11, 2010

ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?

எனக்கு, ‘ஏதாவது எழுதலாமா’ என்ற உணர்ச்சி வந்தது. உடனே,‘என்ன எழுதலாம்?’ என்று யோசித்தேன். காகிதம், பேனா எடுத்து எழுத ஆரம்பித்தேன்.“ ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?” என்பது பற்றி எழுதத் தோன்றிற்று.

“ஏன் காங்கிரசிலிருந்து விலகினேன்?” என்று எழுதுகின்ற நான், ‘நான், ஏன் காங்கிரசில் சேர்ந்தேன்?’ என்பதைத் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும். அதற்குமுன், எனது சரித்திரத்தையும் ஒரு சிறிது எடுத்துக்காட்டுவது அவசியமாகும்.
நான் 1879-இல் பிறந்தவன். 1887 வரையில், நான் ஒரு வீட்டுக்கு குழந்தைப் பருவத்திலேயே சுவீகாரமாய், வாய்ப் பேச்சில் கொடுக்கப்பட்டு, அங்கு வளர்ந்து வந்தவன். காரணம் என்னவென்றால், என் தமையனார் பெரியவர்; அவர் காயலாக் குழந்தை; தபசு செய்து வரம் இருந்து பெற்ற பிள்ளை; அதைக் காப்பாற்ற, என்னைக் கொடுத்துவிட்டார்கள். என்னை சுவீகாரம் பெற்றவள், என் தகப்பனாருக்கு - சிறிய தகப்பனார் மனைவி; சிறிது பூமியும், ஒரு வீடும், கொஞ்சம் பணமும் உடையவள்; அன்றியும், அவள் ஒரு விதவை. அந்தஅம்மாள் என்னை வெகு செல்லமாய் வளர்த்து வந்தாள்.

நான், சிறிது ‘சுறுசுறுப்பான சுபாவமுள்ள’ சிறுவன்; அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள், சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம். ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்; மற்றொன்று, மானாவமானமில்லாமல் சங்கதிகளை கீழ்த்தரத்தில் பேசுவதில் சிரிக்க நேருவது மற்றொரு விதம். நான்அதிகமாக, வேடிக்கைக் குறும்புத்தனமாய் சங்கதி பேசுவது வழக்கம். ஆதலால், அது இரண்டாம் தரத்தைச் சேர்ந்தது. வெகு தாராளமாக, கொச்சையாக சங்கதிகளை, பச்சையாகப் பிரயோகம் செய்யும் பழக்கம் என்னிடம் உண்டு. இதை ரசிக்கிறவர்களே கூட்டமாக என் சுவீகார வீட்டில் காணப்படுவார்கள்.
சுவீகாரத் தாய் என்னை அடக்கினாலும், மற்றவர்கள், ‘சிறு குழந்தைகள், அப்படித்தான் இருக்கும்; அடிக்காதே’ என்பார்கள். நான் செல்லமாக வளர்க்கப்படுகிறேன். ஆதலால், அதிகமாக அடிக்கமாட்டார்கள். என்னைப் பார்க்க என் தகப்பனார் அடிக்கடி வீட்டிற்கு வருவார். அவரிடம் இதைச் சொல்லுவார்கள். அவருக்கு கோபமும், சிரிப்பும் வரும். ஏனென்றால், என் பேச்சு ஆபாசமாயிருந்தாலும், அதில் சிறிது அதிசயம், அர்த்தபுஷ்டி என்பதும் இருக்குமாம். அதனால், உள்ளே சிரித்துக்கொண்டே என்னைக் கண்டித்துவிட்டுப் போய்விடுவார்.

இந்த நிலையில் என்னை படிக்கப் போட்ட பள்ளிக்கூடம், ஒரு ஓலைச்சாலைக் குடிசு. 16 அடி நீளம், 8 அடிஅகலம் இருக்கும். அதில் சுமார் 50 பிள்ளைகள் படிப்பார்கள். 5 வயது முதல் 13 வயதுவரை வயதுள்ளவர்கள். வீட்டில் காலித்தனம், தெருவில்வம்பளப்பு - கலகம், பள்ளியில் சுட்டித்தனம், வளர்ப்பில் செல்லம் (செல்வம்) இவைகளால் நான் கற்றது, வாயாடித் தனம்தான் என்று சொல்வார்கள். இந்த வாயாடித்தனம், வெட்கமில்லாமல் - பயம் இல்லாமல் - செல்ல வழி கிடைத்துவிட்டால், அது எங்கு போய் நிற்கும். . . ? சொல்ல வேண்டுமா. . . ? என் தமையனார் நல்ல வளப்பம் பெற்று, உடல் நலம் அடைந்த உடன் என் தாயார் பிடிவாதத்தால், என் சுவீகாரம் ரத்தாக்கப்பட்டு, நான் தகப்பனார் வீட்டிற்கே அழைத்துக்கொள்ளப்பட்டு - அங்கு சென்றதும் இரண்டொரு வருடம் முனிசிபல் ஆரம்பப் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டு - அங்கும் வாத்தியாரால் என்னை வைத்து சமாளிக்க முடியாமல் - நாலாவது வகுப்பு ‘ப்ரைமரி பரீட்சை’ அதாவது, ஒரு ரூபாய் பணம் கட்டி, அம்மை குத்திக்கொண்டு பரீட்சை எழுதுவது, பெரிதும் சிலேட்டிலேயே, பரீட்சை எழுதிக் காட்டவேண்டும். இந்த பரீட்சை பாசானால் கணக்கு மணியம், அட்டெண்டர் முதலிய வேலைக்குப் போகலாம்.

நான் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்ததால் அங்கு எனக்கு செவுடிப் (தமிழ்க் கணக்கு) பாடமிருந்தாலும் முனிசிபாலிடி பள்ளியில் 4-வது பரீட்சை பாசாகி (என் பேர், செயிண்ட் ஜார்ஜ் கெஜட்டில் வந்து) விட்டதாலும், வாத்தியாருக்கு என்னைப் பள்ளியில் வைத்து சமாளிக்க முடியாமற் போனதாலும், என் தகப்பனாருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க முடியாமல், ‘இதுவே போதும்’ என்று கருதி எனது 10 அல்லது 11-வது வயதில் பள்ளியை நிறுத்தி, தன் மண்டிக் கடைக்கு - மூட்டைகளுக்கு விலாசம் போடவும், வண்டிச் சரக்குகளுக்கு விலை ஏலம் கூறவுமான வேலையில் போட்டுவிட்டார்கள்.

எங்கள் கடைக்கு, அந்தக் காலத்தில் “குறைந்தது தினம் 50 வண்டி சரக்குகளுக்குக் குறையாமல் 100 வண்டி வரையில் மஞ்சள், மிளகாய், தானியப்பயிர் வகைகள், எண்ணெய், கைராட்டை நூல், வெல்லம், கருப்புக்கட்டி (பனை வெல்லம்) முதலியவைகள் வரும். இந்த வண்டிகளுக்கு வண்டிக்கு இரண்டு பேருக்குக் குறையாமல் வருவார்கள். வியாபாரத்திற்கு, வாங்குவதற்கும் பலர் வருவார்கள். எனக்கு இந்த வெளியூரிலிருந்து வருகிறவர்களிடம் பேசுவதும், அவர்களுக்கு வேண்டிய சில்லரைச் சவுகரியம் செய்து கொடுப்பதும் எனது வேலையாக இருந்தது.

‘நான் மண்டி முதலாளி மகன்’ ஆகிவிட்டதால், என்னிடம் அவர்களுக்கு ஒரு பற்றுதல் ஏற்படுவது இயற்கை; ஆதலால், நேரப்போக்காகவும் இருந்ததால் அங்கும் பேச்சு வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. இந்தப் பேச்சு வளர்ச்சியடைய, அடைய, தர்க்கவாதமும் கூடவே வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. ‘இயற்கை வாயாடிக்கு சிறிது சட்ட ஞானமும் இருந்தால், அவன்தான் கெட்டிக்கார வக்கீல்’ என்று சொல்லப்படுவது வழக்கம். அதிலும், கொஞ்சம் பகுத்தறிவு உணர்ச்சியிருந்தால், உண்மையிலேயே கெட்டிக்காரனாவான். யோக்கியமானவனா, அயோக்கியமானவனா என்பது வேறு விஷயம்; அவன் நிச்சயமாக கெட்டிக்காரப் பேச்சாளியாவான். எனக்கு, எப்படியோ பேசுவதில் ஆசை ஏற்பட்டு, இந்தப்படி கெட்டிக்காரப் பேச்சாளியாக நான் ஆகவேண்டுமென்பதற்காக, ‘வேண்டுமென்றே’ குயுக்தி, தர்க்கம், மனதறிந்து எதிர்ப்பு பேசுவது இந்த மாதிரியாக பேச ஆரம்பித்து, பிறகு இப்படிப் பேசுவது என்பது எனக்குச் சுபாவமாக ஆகிவிட்டது.

எங்கள் கடையில் நான் இப்படிப் பேசுவது தவிர, எங்கள் வீடு அந்தக் காலத்தில் அதாவது 1890-இல் சிறிது பணக்கார வீடு என்று ஆகி இருந்ததால், வைணவ மத விஸ்வாசமுள்ள பாகவதர் வீடாகவும் இருந்ததால், கோயில், உற்சவம் முதலியவைகளில் சிறிது சிரத்தை எடுத்து செலவு செய்யும் வீடாகவும் இருந்ததால், சதா சந்நியாசிகள், மத பக்தர்கள், பாகவதர்கள், புராணீகர்கள், வித்வான்கள், சொந்தமாக வந்து பயன்பெற்றுப்போகவும், 4 நாள், 8 நாள் தங்கிப் போகவுமான வீடாகவும் ஆகிவிட்டதால், இவர்களிடமும் வம்பளத்தல், தர்க்கம் பேசுதல் ஆகிய வசதி அதிகமாகிவிட்டது. எனவே, கடையில் கிராமத்தாரிடமும், சந்தை வியாபாரிகளிடமும் பேசுவது மாத்திரமல்லாமல், வீட்டில் மத பக்தர்கள், வித்வான்களிடமும் பேசுவதுமாக நேரிட்டுவிட்டதால் பின்கண்ட இவர்களிடம் பேசுவது மத எதிர்ப்பு, சாஸ்திர எதிர்ப்பு, புராண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு என்கிற அளவுக்குப் போய்விட்டது. இதுவே, என்னை ஜாதி, மதம், கடவுள் என்கின்ற விஷயங்களில் நல்ல முடிவு ஏற்படும்படி செய்துவிட்டது.

இதன் காரணமாக எனக்குப் பார்ப்பனீயத்தில் ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பார்ப்பனர் உயர் வாழ்வில் எனக்கொரு பொறாமையும் ஏற்பட்டுவிட்டது; என்றாலும், பார்ப்பனருடன் நெருங்கிப் பழகுவதில் சிறிதும் எனக்கு அசவுகர்யமோ, பார்ப்பனர் என்னைப்பற்றி தவறாக நினைக்கும் தன்மையோ ஏற்பட்டதில்லை என்றே சொல்வேன்.

சாதாரணமாக எனக்கு 1900 - த்திலேயே ‘பார்ப்பனர் - தமிழர்’ என்ற உணர்ச்சியுண்டு. பேசும்போது, இந்தப் பிரிவு எனக்கு அடிக்கடி ஏற்படும்; என்றாலும், நான் பார்ப்பனருக்கு நல்ல பிள்ளையாகவே இருந்தேன். என் தகப்பனார், பார்ப்பனருக்கு ரொம்பவும் தர்மம் செய்வார்; அடிக்கடி சமாராதனை செய்வார். இது எனக்கு வருத்தமாக இருக்குமென்றாலும், பார்ப்பனர்கள் நான் பேசுவதைக் குற்றமாக எண்ணமாட்டார்கள்.

----------------

நூல்:- ”தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை” பக்கம் 1-4

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா

Friday, January 08, 2010

புரட்சியின் நிறம் கறுப்பு


'சீர்திருத்தம் என்பது ஓட்டை, உடைசலை அடைக்கிற வேலை. எல்லாவற்றையுமே தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் உண்மையான புரட்சி!'- புரட்சியின் நிறம் சிவப்பு என்பதைக் கறுப்பு என்று மாற்றிக் காட்டிய கலகப் பேராசான் பெரியாரின் வார்த்தைகள் இவை. சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, சமத்துவப் பொதுவுடமைச் சமுதாயம் ஆகியவைதான் பெரியாரின் செயல்பாட்டு அடிப்படைகள். இந்தியாவில் எத்தனையோ பேர் இந்த அநீதியான சாதி அமைப்புக்கு எதிராகப் போராடினார்கள் என்றபோதிலும், முதன்முதலாக பெயருக்குப் பின்னால் சாதி போட்டுக்கொள்ளும் பழக்கத்தை ஒழித்த பெருமிதத்தை தமிழ்நாட்டுக்கு உருவாக்கித் தந்தவர் பெரியார். இன்று திருமணப் பத்திரிகைகள் தவிர, பொதுவெளியில் சாதிப் பெயர்கள் இல்லை என்றால், அதற்குக் காரணம் பெரியார்.


சுய மரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அழைப்பிதழே புரட்சிகரமாக இருந்தது. 'தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபசாரிகள் என்று தங்களைக் கருதிக்கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார். திருமணம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதால், 'திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும்' என்றார். 'தாலியும் நீண்ட கூந்தலும் பெண் அடிமைச் சின்னங்கள்' என்றவர், கிராப் வெட்டிக்கொள்கிற பெண்களுக்குப் பரிசு வழங்கு வதாகவும் அறிவித்தார்.

ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பொதுவான பெயர் இட வேண்டும். கற்பு என்பது எவ்வளவு அயோக்கியத்தனமோ அதேபோல் விபசாரம் என்பதும் அயோக்கியத்தனம் என்றெல்லாம் எழுதியதும் பேசியதும் அவருக்கே மட்டுமான தைரியம். கலகத்தின் உச்சிக்கே போனவர், 'பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்கள் இல்லை. அவர்களுடைய கர்ப்பப் பைகளை அகற்ற வேண்டும்' என்றார். தன் முதல் மனைவி நாகம்மாள் இறந்தபோது வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், 'நாகம்மை தான் நம்பிய ஆணாதிக்கத்துக்கு 100 சதவிகிதம் உண்மையாக இருந்தார். ஆனால், நான் பேசிய முற்போக்குக்கு அந்தளவு உண்மையாக இருந்ததில்லை' என்று தன்னை வெளிப்படையாகத் தமிழ்ச் சமூகத்தின் முன் விமர்சனத்துக்காகக் கிடத்தினார்.

சாதி, மதம், கடவுள், காதல், திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு, ஒழுக்கம், தேசியம், மொழிப்பற்று என இதுவரை கட்டியமைக்கப்பட்ட புனிதங்கள் அனைத்தையும் போட்டு உடைத்தார். தேசியக் கொடி, அரசியல் சட்டம், காந்தி சிலை, பிள்ளையார் சிலை, ராமன் படம் என யாரும் கைவைக்கத் தயங்குகிற புனிதங்களைக் கொளுத்தினார், செருப்பால் அடித்தார். 'நமது மொழி, சாதி காப்பாற்றும் மொழி'யாக இருக்கிறது என்று சொன்ன பெரியார், அதனாலேயே 'தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி' என்றார். 'அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்' என கடுமையாக விமர்சித்தார்.

இறுதிக் காலத்தில் உடல்நிலை வாட்டியபோதும் மூத்திரப் பையுடன் தமிழனின் சூத்திர இழிவுபோக்க தமிழ்நாடு முழுக்கச் சுற்றிவந்தார். 'இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈ.வே.ராமசாமி என்னும் பிற்போக்குக்காரன் இருந்தான் என்று உலகம் பேசும். ஏனெனில், உலகம் அந்த அளவுக்கு முற்போக்காகச் செல்லும்' என்றார். ஆனால், அந்தக் கலகக்காரருக்கு முன்னும் பின்னும் அப்படியானதொரு நெருப்பு கிளர்ந்தெழவே இல்லை. பெரியார் ஆசைப்பட்டபடி, பெரியாரைத் தாண்டிச் செல்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்கும்!

- ரீ.சிவக்குமார்