Friday, April 18, 2008

பெரியார் 4

பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.இவை தமிழ்ச் சொற்களும் அல்ல!

-பெரியார் (451973, விடுதலை)

எல்லாக் காலத்திலும் இழப்புகள்தான் ஞானத்தின் பிறப்பிடம். எதுபற்றியும் கவலைப்படாமல் சலங்கை பூட்டிய காளை போல் உல்லாசமாய் குதித்தோடிக்கொண்டிருந்த ராமசாமியின் வாழ்வில், பிறந்து ஐந்தே மாதத்தில் இறந்துபோன அவரது பெண் குழந்தையின் இழப்பு சொல்ல முடியாத துக்கமாக அவரது தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டது. கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி போன்ற குணங்கள் சட்டென அவரை விட்டு விலகி நின்றன. சோகம் அவரைச் சூழ்ந்து கொண்டது. துக்கம் அவரது தூக்கத்தைப் பறித்தது. பின்னாளில் தந்தை இறந்தபோதும், தாய் இறந்தபோதும் தன் இணைநிழலாக வாழ்ந்த மனைவி நாகம்மை இறந்த போதும், அதுகுறித்துக் கடுகளவும் சோர்ந்துபோகாமல் அடுத்த நிமிடமே இடுப்பில் வேட்டியை இறுக்கிக்கொண்டு தொண்டு செய்யப் புயலெனப் புறப்பட்டுச் சென்ற அதே ராமசாமிதான், தன் இளம் வயதில் எதிர்கொண்ட முதல் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனையில் துவண்டார்.

முந்தைய பகுதிகள்

சென்ற இதழ்...







காலங்கள் நகர்ந்தன. வழக்கம் போலக் காலையும் மாலையும் மண்டிக்கும் வீட்டுக்குமாக கால்கள் தூரத்தை அளந்துகொண்டு இருந்தாலும், மனம் என்னவோ சோகத்தில் தோய்ந்திருந்தது. மகனது இந்த மனநிலையை வெங்கட்ட நாயக்கரால் சரியானபடி புரிந்துகொள்ள முடியவில்லை. ராமசாமி முன்பு போல வேலையில் அத்தனைச் சுறுசுறுப்பாக இல்லாதது கண்டு அவருக்கு அடிக்கடி கோபம் தலைக்கேறியது. பலர் முன்னிலையில் மகனைத் திட்டினார். கல்யாணமான 25 வயது வாலிபன் என்றுகூடப் பாராமல், வெற்றிலைச் சாற்றை ராமசாமியின் முகத்தில் துப்பி அவமானப்படுத்தினார். ''தறுதலை... தறுதலை..! உன்னால எனக்கு என்ன புண்ணியம்!'' என்றுஆத்தி ரத்தோடு தன் செருப்பைக்கழற்றிப் பலர் முன்னிலையில் மகன் மீது வீசும் அளவுக்கு வெங்கட்ட நாயக்கரின் கோபம் கட்டுக் கடங்காத நிலைக்குச் சென் றது. ஏற்கெனவே குழந்தை இறந்த சோகத்தில் தடு மாறிக்கொண்டு இருந்த ராமசாமிக்குத் தந்தையால் ஏற்பட்டு வந்த இந்தத் தொடர் அவமானங்களைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வீடு வெறுத்தது; வாழ்க்கையும் வெறுத்தது. எங்காவது கண்காணாத தேசத்துக்குப் போய் பிச்சை எடுத்தாவது வாழலாமே தவிர, இனி இந்த வெங்கட்ட நாயக்கரின் முகத்தில் விழிக்கவே கூடாது என முடிவெடுத்தார் ராமசாமி.



நாயக்கரின் வீடு அன்றைய இரவுப்பொழுதில், மறுநாளின் களேபரத்தை முன் கூட்டி அறிந்துவைத்திருந்தது போல அமைதியாக உறங்கிக்கிடந்தது. மறுநாள் காலையில் நாகம்மை அழுதுகொண்டே மாமியாரை எழுப்பி, தன் கணவனைக் காணாத விவ ரத்தைச் சொல்ல, அடுத்த நொடி நாயக்கர் வீடே அல்லோல கல்லோலப்பட்டது. வேலைக்காரார்கள் கூச்சலும் குழப்பமுமாக ஆளுக்கொரு திசையில் ஓடினர். வெங்கட்ட நாயக்கர் தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்தார். அதே நேரம், வடக்கு நோக்கிப் பயணித்த ரயில் ஒன்றின் ஒரு கூபேயில், பயணிகள் தங்களுடன் பயணிக்கும் ஒரு சாமியாரை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். இத்தனை சின்ன வயதில் சாமியார் கோலமா? இதுதான் அவர்களின் ஆச்சர்யப் பார்வைக்குக் காரணம். அந்தப் பயணி களுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இந்தச் சாமியார்தான் பின்னாளில் சாமியார் களையும் அவர்களது போலி கூடாரங்களையும் விரட்டியடிக்கும் பெரும் புரட்சியாளராகவும் தமிழ்நாட்டின் விடிவெள்ளியாகவும் மாறப் போகிறார் என்று!

காசி. எங்கு பார்த்தாலும் மடங்கள், கோபுரங்கள், மணியோசைகள், வேத உச்சாடனங்கள் என 24 மணி நேரமும் பக்தி பூசிய நகரம். தங்களது பாவங்களைப் போக்க, இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் வந்து குவியும் பக்தர்களும், அந்த அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் போலிச் சாமியார்களுமாக நிறைந்து வழியும் நகரம். கொலை, கொள்ளை செய்யும் கொடூர மனம் படைத்தவர்களும், நர மாமிச பட்சிணிகளும் கூட அங்கே மலிந்திருந்தனர். மதமும் மனிதர்களும் ஒரு சேரக் கைகோத்து சீரழித்துக்கொண்டிருந்த அந்த நகரின் வீதிகளில் சாமியார் கோலத்தில் வந்திறங்கினார் ராமசாமி. அங்கே அவருடன் இரண்டு பிராமண நண்பர்களும் வந்திறங்கினர்.

வழியில், பெஜவாடாவில் சில காலம் தங்கியிருக்க நேரிட்டபோது, அவர்கள் ராமசாமிக்குப் பழக்கமாகியிருந்தனர். பெஜவாடாவில் முருகேச முதலியார் என்பவர் அப்போது இவர்கள் மூவருக்கும் அடைக்கலம் தந்து உதவியிருந்தார். இப்படி மற்றவர் நிழலில் அண்டிப் பிழைப்பதைவிட, காசிக்குச் சென்றால் காலாட்டிக்கொண்டே மடங்களில் பிழைப்பு நடத்தலாம் என பிராமண நண்பர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் ராமசாமி அவர்களுடன் புறப்பட்டுக் காசிக்கு வந்திறங்கினார். ஆனால், காசியிலோ கதை வேறு மாதிரியாகத் திரும்பியது. நல்ல பசி நேரம்! ராமசாமி ஏக எதிர்பார்ப்போடு உற்சாகமாக நண்பர்களுடன் வேகமாக மடத்தினுள் நுழைந்தார். ஆனால், மடம் அவரை மட்டும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஒரு கை அவரை வலுக்கட்டாயமாக வெளியே பிடித்துத் தள்ளியது. ''நீ பிராமணன் இல்லை. அதனால் உன்னை அனுமதிக்க முடியாது'' என்று மடத்து நிர்வாகிகள் திட்டவட்டமாகக் கூறினர். அப்போதுதான் ராமசாமி உணர்ந்தார், தன்னைப் பிடித்து வெளியே தள்ளிய கை மனிதனுடையது அல்ல; மதத்தினுடையது என்று! இத்தனைக்கும் அது ஒரு செட்டியாரின் மடம். பிராமணர்கள் சாப்பிட்டால் மட்டும்தான் தனக்குப் புண்ணியம் என்பது அந்தச் செட்டியாரின் மூட நம்பிக்கை. ராமசாமிக்கோ வயிற்றில் பசித் தீ! கண்களிலோ நீர். ஆத்திரமும் ஆவேசமும் உள்ளுக்குள் புரண் டது. அதைவிட பசி அவரை அதிகமாகப் புரட்டி எடுத்துக்கொண்டு இருந்தது. வேறு வழியில்லை. திரும்பிப் பார்த்தார். மடத்து வாசலில் குவியலாக எச்சில் இலைகள். இனி, மான அவமானம் பற்றி யோசிக்க அவகாசம் இல்லை என முடிவு செய்தார். ஆம்... இன்று எத்தனையோ தமிழர்கள் வயிறார உண்பதற்குக் காரணமான பெரியார் எனப்படும் ஈ.வெ.ராமசாமி, அன்று எச்சில் இலைகளின் முன் கண்ணீரோடு அமர்ந்தார். 'மனிதனை மனிதன் ஏன் வெறுக்க வேண்டும்? எது அவர்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்துகிறது?' என உள்ளுக்குள் ஓராயிரம் கேள்விகள் பிறந்தன. அன்று அவருடைய வயிறு நிறைந்தது. ஆனால், மனம் பள்ளத்தாக்காக வெறுமையில் உழன்றது.

காசியில் இனி பிழைப்பு ஓட வேண்டுமானால் பிராமணனாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டார் ராமசாமி. மொட்டை அடித்துக்கொண்டார். தாடி, மீசையை மழித்துக்கொண்டார். நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்தார். ஏற்கெனவே செக்கச் சிவந்த மேனி. கேட்கவா வேண்டும்..! பூணூல் அணிந்ததும் அசல் பிராமணனாகவே மாறிவிட்டார் ராமசாமி. வழியில் தென்பட்ட ஆசாமிகளெல்லாம் சாமி எனக் கையெடுத்துக் கும்பிட்டனர். கச்சிதமான வேஷத்துக் கேற்ப ஒரு சைவ மடத்தில் வேலையும் கிடைத்தது. கருக்கலிலேயே எழுந்து குளித்து முடித்து பூ பறிக்கும் வேலை. பூ பறிப்பது சுலபமான வேலைதான்; ஆனால், விடிகாலையிலேயே குளித்தாக வேண்டுமே, அதுதான் பிரச்னை! ஒரு நாள் நம்மவர் கங்கைக் கரையில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் தலைக்குத் தண்ணீர் தெளித்துக்கொண்டு, குளித்ததாகப் பேர்பண்ணிவிட்டுக் கிளம்பியபோது கையும் மெய்யுமாகப் பிடிபட்டார். அவர் பிராமணர் இல்லை எனத் தெரிய வர, அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டார். தொடர்ந்து பசியும் பட்டினியுமாகக் காசி வீதிகளில் தெருத்தெருவாக அலைந்தார். பிச்சை எடுத்தார். முன்னோர் கடன் கழிப்பதற்காக கங்கைக் கரையில் பிண்டம் வைக்கப்பட்ட உணவை எடுத்து உண்டார்.

'சாதாரண மனிதர்களுக்கு இங்கே மரியாதை இல்லை; வஞ்சகர்களும், பித்தலாட்டக்காரர்களும், காம வியாபாரிகளும், போதைப்பொருள் கடத்து பவர்களும் மட்டுமே இங்கு குப்பை கொட்ட முடியும்' என் பதை உணர்ந்தார் ராமசாமி. ஒருகட்டத்தில் காசியை விட்டுப் புறப்பட்டு ஆந்திரா வந்து, ஒரு நண்பரின் வீட்டில் தங்கினார். வீட்டு நினைவு ஒருபுறம், மனைவி நாகம்மையின் நினைவு ஒருபுறம் என மனதை அலைக்கழிக்க, தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்த ஓர் இரவில், வாசல்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. வீட்டுக்காரரானசுப்பிரமணிய பிள்ளை எழுந்துபோய்க் கதவைத் திறந்தார். வந்தவரின் குரல் ராமசாமியின் காதுகளில் விழுந்து, முதுகுத்தண்டை சில்லிட வைத்தது. சட்டென எழுந்து கதவருகே சென்றார் ராமசாமி. வாசலில் நின்றுகொண்டு இருந்தவர் அப்பா வெங்கட்ட நாயக்கர். சட்டென அவருக்குத் தன் மகனை அடையாளம் தெரியாவிட்டாலும், அடுத்த நொடியே சுதாரித்துப் புரிந்துகொண்டு, ''ராமா, என்னை மன்னிச்சுடுடா! இனிமே உன்னைத் திட்ட மாட்டேன்டா!'' எனக் கதறியபடி தன் மகனை ஆவேசமாக இழுத்து அணைத்துக் கொண்டு குலுங்கினார் வெங்கட்ட நாயக்கர்.



-(சரித்திரம் தொடரும்)

2 comments:

Great said...

நன்றி. தொடரட்டும் உங்கள் பணி...

bala said...

//பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.இவை தமிழ்ச் சொற்களும் அல்ல!//

மூண்டம் கிழமத்தூர் அய்யா,
ஆமாங்கய்யா.திராவிட தமிழ்ப் பெண்கள் இப்படி இருக்கக்கூடாதங்கய்யா.பொறிக்கி,தெவடியா ஆகியவை தூய தமிழ் வார்த்தைகள்.இப்படித்தாங்க திராவிட தமிழ் பெண்கள் நல்ல நெறியோட நடந்து தமிழ் நாடு பூரா எய்ட்ஸ் நோயை பரப்பி அய்யா கண்ட கனவை நினைவாக்கணும்.மஞ்ச துண்டு ஆட்சியில இது நிறைவேறுங்கய்யா.கவலைப் படாதீங்க.

பாலா