Monday, February 26, 2007

தமிழச்சிகள் ஏன் வெற்றி பெறுவதில்லை

"இப்பத்தான் தலைப்பிலேயே தமிழ் வந்திருக்குது. அதிலேயே ஆயிரத்தெட்டு பிக்கல் பிடுங்கல். அதுக்குள்ளே உங்க ஆராய்ச்சியை ஆரம்பிச்சிட்டீங்களா? நடிக்கிற பொம்பள தமிழா இருந்தா என்ன, மலையாளமா இருந்தா என்ன, மும்பையிலிருந்து இறக்குமதியானதா இருந்தா எங்களுக்கென்ன? நாங்க நடிப்பையா பார்க்குறோம். பார்க்குறதுக்கு எத்தனையோ சமாச்சாரங்கள் இருக்கு. அதைப் பார்ப்பீங்களா, அதை விட்டுப்புட்டு அந்த நடிகை தமிழ்நாடா, இந்த நடிகை தமிழச்சியான்னு எதுக்காக வேலை மெனக்கெட்ட ஆராய்ச்சி?" -இப்படித்தான் கேட்டார் நண்பர். அதற்கு முன் அவரிடம் நாம் கேட்டது இதுதான்: "அசின், த்ரிஷா, நயன்தாரா, ஜோதிகா, சிம்ரன், பாவனா, மீராஜாஸ்மின்னு தமிழ்ப் படங்களில் ஏராளமான நடிகைகள் இருக்காங்களே... இவங்களில் எத்தனை பேர் தமிழச்சிங்க?" மைசூர் போண்டாவுக்குள்ளே மைசூர் இருக்குமான்னு சாப்பாட்டு ராமன்கள் கேட்பாங்க. அதுமாதிரி, தமிழ்ப்படத்திலே தமிழும்.... என்ன தான் தேடினாலும் தென்படாது.
ஏதோ பாட்டு கட்டுற கவிஞருங்க இருக்குறாங்க. அவங்க தயவிலேதான் இங்கிலிபீசுக்கு நடுவிலே தமிழு கொஞ்சம் தலையைக் காட்டுது. படம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டா, தியேட்டருக்குப் போயி டிக்கெட் வாங்கணும், இல்லைன்னா திருட்டு வி.சி.டி வாங்கி டெக்கிலே போட்டுப் பார்க்கணும். படம் நல்லாயிருந்தா ரசிக்கணும்.
குப்பையா இருந்தா, மெட்ராஸ் பாஷையிலே திட்டணும். அதுக்கப்புறம் நம்ம பொழைப்பைப் பார்க்கணும். அதை விட்டுப்போட்டு நடிக்கிற பொம்பள தமிழச்சியா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணிப் பொழுதை வீணடிக்கக் கூடாது"-நண்பர் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனார். திருட்டுக் குறுந்தகடுகளுக்கு நடுவிலும் தமிழ்த் திரையுலகத்தை இன்னமும் வாழவைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் மனநிலையைத்தான் நண்பர் பிரதிபலித்திருக்கிறார். ஆராயும் மனமோ, அதற்கான நேரமோ இல்லாத ரசிப்புப் பித்தர்கள் பெருகியுள்ள திருநாட்டில், சினிமாவின் ஆதிகால சூப்பர் ஸ்டாரினி டி.ஆர்.ராஜகுமாரியில் தொடங்கி அண்மைக்கால சூப்பர் ஸ்டாரினி அசின் வரை பச்சைத் தமிழச்சிகளை அரிது அரிது காண்பது அரிது. அதற்கான விளக்கத்தையும் நண்பரே சொன்னார்.
"பச்சைத் தமிழனான ரசிகனுக்கு எப்போதும் அக்கரைப் பச்சையில் ஆசை அதிகம். உள்ளூர் கருவாச்சியைவிட, வெளியூர் வெள்ளைத்தோல்காரி மீது ஒரு மயக்கம் உண்டு. அதைச் சினிமாக்காரங்க ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சிட்டாங்க. அதனாலதான் பானுமதி, பத்மினி, அஞ்சலிதேவி, சாவித்திரி, சரோஜாதேவி, ஜெயலலிதா, வாணிஷ்ரீ, மஞ்சுளா, சுஜாதா, அம்பிகா, ராதா, ரேவதி, நதியா, குஷ்பு, கௌதமி, மீனா, நக்மா, ரம்பா, சிம்ரன், ஜோதிகா, சினேகா, த்ரிஷா, நயன்தாரா, அசின், ஸ்ரேயான்னு பட்டியல் போட்டால் வெளி மாநிலத்து நடிகைகள்தான் அதிகமா கொடி நாட்டியிருப்பாங்க. எப்போதாவது ஒரு ஷ்ரீப்ரியா, ராதிகான்னு தமிழ்த் திரையுலகத்தில் தமிழச்சிகளுக்கும் கொஞ்சம் இடம் கிடைத்திருக்கும்.
ஷ்ரீதேவி மாதிரி தமிழ்நாட்டில் பொறந்திருந்தும் வீட்டிலேயும் விருந்தாளிகள்கிட்டேயும் வேற மொழி பேசுறவங்களும், தமிழைவிட சமஸ்கிருதம் தான் பெருசுன்னு சொல்ற கூட்டத்தைச் சேர்ந்த பொண்ணுங்களும்தான் தமிழ்ச் சினிமாவில் நிறைய சாதிச்சிருக்காங்க. அவங்களையெல்லாம் தமிழச்சிங்க கணக்குல சேர்க்கிறதும் சேர்க்காததும் உங்க விருப்பம். ஆனா, ஒட்டுமொத்தமா பார்த்தா, 90% வெளிமாநிலப் பொண்ணுங்கதான் தமிழ் பீல்டில் நிலைக்கும். அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் இதுதான் நிலைமை" என்றார் நண்பர். அப்படின்னா, தமிழ்ப்படத்தில் தமிழ் நடிகைகள் கொடி நாட்டுறதுக்கு வாய்ப்பேயில்லையா என்றோம். நண்பர் நம்மை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் பேச ஆரம்பித்தார். "தமிழ்ப் பொண்ணுங்களுக்கும் சினிமாவுக்கும் ரொம்பத் தூரம்.
நீ நயன்தாரா மாதிரி இருக்கேன்னு எந்தப் பொண்ணுகிட்டேயாவது சொன்னா ரொம்ப உற்சாகமாயிடும். தன்னோட அழகு, ஒரு சினிமா நடிகை அளவுக்கு இருக்குன்னு பெருமைப்படும். அதே நேரத்தில், சினிமாவிலே நடிக்க வர்றியான்னு கேட்டா, சட்டுன்னு முகத்தைக் காட்டும். சில நேரங்களில் செருப்பைக் கூடக் காட்டலாம். ஏன்னா, சினிமா நடிகைன்னா மக்கள்கிட்டே ஒரு தவறான எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கு. ஆம்பளைக்கு ஒரு நியாயம், பொம்பளைக்கு ஒரு நியாயம்னு இருக்கிற நாட்டிலே ஆணாதிக்கம் அதிகமாகத்தான் இருக்கும். சினிமாத் துறையிலும் அந்த ஆதிக்கம் இருக்கு. அதனால நடிகைகளை வேற கோணத்தில் அணுகும் ஆண்களுக்குச் சினிமாத்துறையில் பஞ்சமில்லை. இதற்காகவே படத்தயாரிப்பாளர்ங்கிற பேரிலே வெங்காய வியாபாரி, வெள்ளை வேட்டி-சட்டை அரசியல்வாதி, பங்கு மார்க்கெட் பணக்காரன், பல்லுப்போன கிழட்டுப்பயல் இப்படிப் பலபேரும் பணத்தை மூட்டை கட்டிக்கிட்டு வந்திடுறாங்க. அவங்க நோக்கம் படம் எடுக்கிறதில்லை. நடிகைகளைப் பார்க்குறதுதான். இதுக்கெல்லாம் பயந்துதான் தமிழ்நாட்டுப் பொண்ணுங்க சினிமாவில் நடிக்க வருவதற்கு தயங்குதுங்க.
திறமையிருந்தாலும் முதலிடத்துக்கு வர முடியாது. ஆச்சி மனோரமாவுக்கு இல்லாத திறமையா? ஆனா, பத்மினியையும் சரோஜாதேவியையும் கதாநாயகிகளா ஆக்கிட்டு, மனோரமாவைக் காமெடி நடிகையாக்கிட்டோமே! தமிழ்ப் பொண்ணுதான் கோவை சரளா. அந்த நடிகைகிட்டே எவ்வளவு திறமை இருக்குங்கிறது கமலஹாசனுக்கு ஜோடியா சதிலீலாவதியிலே நடிக்கும்போதுதான் தெரிஞ்சுது. ஆனாலும், அதற்கு முன்னாடியும் பின்னாடியும் கோவை சரளா நகைச்சுவை நடிகைதானே! தமிழச்சி தமிழச்சின்னு பேசி என்ன பிரயோஜனம்? நம்ம சீமான்கூட தாகம் 15ஆம் ஆண்டு விழா மேடையிலே, தமிழ்நாட்டுப் பொண்ணுங்க நடிக்க வரத் தயங்குவதைப் பற்றி பேசினாரு. இப்படிப்பட்ட நிலைமை இருக்கிறதாலதான் அவரு பூஜாவை நாயகியாக்கி அந்த நடிகைக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டியதாயிடிச்சி. பாரதிராஜா, சீமான், சேரன், தங்கர்பச்சான் போலத் தமிழ் மண்ணைத், திரைப்படத்தில் அடையாளம் காட்ட நினைக்கிறவங்களுக்கே இந்த நிலைமை. தமிழ்நாட்டு மக்களுக்கு, நல்ல சினிமாவையும் சரியா கொடுக்கலை. சினிமா வுலகத்தின் நிலைமையைும் சரியா புரிய வைக்கலை.
ஆனா,வெளிமாநிலத்திலிருந்து வாய்ப்புத் தேடி வரும் பொண்ணுங்க, நம்ம தமிழ் சினிமாவுலகத்தைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்குங்க. எதை எதை எதிர் பார்க்குறாங்கங்கிறதையும், அதற்கு எப்படி எப்படி நடந்துக்க வேண்டுங்கிறதையும் புரிஞ்சு வச்சிருக்குங்க. இப்ப நடிக்க வரும் வெளிமாநிலத்து பெண்களெல்லாம் நல்லா படிச்சிருக்கிறதாலே சினிமாவுலக ஆண்கள்கிட்டே சுலபமா ஏமாறுவதில்லை. நடிப்பு, அதற்கான பணம், தொடர்ச்சியான வாய்ப்பு, அதற்குரிய சிபாரிசு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தொழிலதிபருடன் புது வாழ்க்கைன்னு தெளிவா இருக்காங்க. தமிழ்நாட்டைப் பற்றி அவங்களுக்கு இருக்கும் தெளிவு நம்மகிட்டே இல்லை.
இதையெல்லாம் கவனிக்காம, தமிழ்ச் சினிமாவில் தமிழச்சிகளே இல்லைன்னு அழுதா மட்டும் போதுமா?" -போட்டுத் தாக்கிவிட்டுப் போனார் நண்பர். அதுவுஞ் சரிதானே!
- கோவி.லெனின்

1 comment:

Anonymous said...

அப்புறம், சாப்டீங்களா ? இப்போ துபாய்ல என்ன நேரம் ?