Friday, April 18, 2008

பெரியார் 5

என்னைப் பொறுத்தவரையில் ஒரு மனிதர் யாராக இருந்தாலும், அவர் தமிழ்ப் பற்று உடையவர் என்று கருதினால், நான் அவருக்கு அடிமையே ஆவேன்!

- பெரியார்

சந்தடிகள் மெள்ள ஓய்ந்துகொண்டு இருந்த ஈரோடு நகர சந்தையின் இரவு நேரம்.

கடைகள் ஒவ்வொன்றாக அடைக்கப்பட, கணக்குப் பிள்ளைகளுடன் வியாபாரிகள் வெளியேற, சாவிக்கொத்துடன் வெளியே வந்தார் வெங்கட்ட நாயக்கர். மனசு முழுக்கக் கலக்கம்.

'சே... எப்பேர்ப்பட்ட அவமானம்! மண்டி நாயக்கர் மகன் கடன் வாங்குவதா?'

விஷயம் வேறொன்றுமில்லை. சித்த வைத்தியம் படித்துக்கொண்டு இருந்த அவரது மூத்த மகன் கிருஷ்ணசாமி யாரிடமோ ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதைத் திருப்பித் தரவில்லையாம். கடன் கொடுத்தவர்கள் நாயக்கரிடம் புகார் கொடுத்துவிட்டர்கள். இதுதான் அவரது உளைச்சலுக்குக் காரணம்.

ஆனால், அதேசமயம் இளைய மகன் ராமசாமியை நினைத்தபோது, அவருக்கு ஆச்சர் யம்! என்ன சிக்கனம்! என்ன சாமர்த்தியம்! காசியில் சோறு தண்ணி இல்லாமல் தெருவில் பிச்சை எடுத்துச் சாப்பிட்ட போதுகூட, ராமசாமி கையோடு எடுத்துச் சென்ற நகை நட்டில் ஒரு குண்டுமணிகூட விற்கவில்லை. அவனது புத்தி சாதுர்யத்தை நினைத்துப் பார்த்தால், அவருக்கு ஒருபக்கம் சிரிப்பாகவும், இன்னொரு பக்கம்சந்தோஷமாகவும் இருந்தது.அதனால்தான் ராமசாமியை திரும்ப ஈரோடுக்கு அழைத்து வந்தபோது, அவன் துணி மூட்டையில் பொத்திவைத்திருந்த அத்தனை நகைகளையும் பேருந்து நிலையத்தில் வைத்தே உடம்பு முழுக்கப் போட்டுக்கொள்ளச் செய்து, 'பார், என் மகனை! ஓடிப்போனாலும் ஊதாரித்தனமாக இல்லாமல் போட்ட நகைகளுடன் திரும்ப வந்திருக்கிறான்!' என ஊருக்குச் சொல்லும்விதமாக வீதியில் பெருமையுடன் நடத்திக் கூட்டி வந்தார்.

'ஒரு மகன் சிக்கனத்தின் சிகர மாக இருக்க, இன்னொருவனோ ஊரில் கடன் வாங்கித் தன் மானத்தை வாங்கிவிட்டானே... நாளைக்கு அவனுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!' என யோசித்தபடியே கால்களை வீசி நடை போட்டார்.

மறுநாள், வீட்டில் வெங்கட்ட நாயக்கர் நாற்காலியில் வீற்றிருக்க, அவரைச் சுற்றிப் பெரும் கூட்டம். ஒருபுறம் மூத்த மகன் கிருஷ்ணசாமி வெட்கத்துடன் தலை குனிந்து நின்றிருக்க, வேலைக்காரர்கள் ஒற்றை ரூபாய் நாணயங்களை வரிசையாக நீளமாக அடுக்குவதில் மும்முரமாக இருந்தனர். கிருஷ்ண சாமிக்குக் கடன் கொடுத்த நபர், இந்தக் காட்சியை ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.நாணயங்கள் முழுவதுமாக அடுக்கி முடிக்கப்பட்டபோது, அந்த வரிசை கூடத்தைத் தாண்டி, வாசலைத் தாண்டி, தெரு வரை நீண்டிருந்தது.

வெங்கட்ட நாயக்கர் கிருஷ்ண சாமியை அழைத்து, ''மகனே... நீ கடன் வாங்கிச் செலவழித்த தொகை எத்தனை பெரியது என் பதை உணர்த்தத்தான் இப்படி வரிசையாக அடுக்கச் சொன்னேன். இனியாவது, பணத்தின் அருமையை உணர்ந்துகொள்!'' என அறிவுறுத்தினார். பின்பு,கடன் கொடுத்தவரிடம் அந்த நாணயங்களை மொத்தமாக அள்ளிச் செல்லும்படி உத்தரவிட்டார். அன்று முழுக்க அவருக்கு நிம்மதி இல்லை. இனியும் இந்தக் கதை தொடர்ந் தால், மண்டி நாயக்கர் மற்றவர் களிடம் மண்டியிட வேண்டி வந்துவிடுமோ எனும் கவலை அவரைப் பீடித்திருந்தது.

அன்று இரவே அதிரடியாக ஒரு முடிவு எடுத்தார் நாயக்கர். மைனர் மகாதேவனாக வலம்வந்து கொண்டு இருந்த ராமசாமியை ஈரோட்டின் மதிப்பு மிக்க மனித னாக மாற்றிய முடிவு அது.

தன் வியாபாரம், தனது வெளிவட்டாரப் பழக்கவழக்கம், வகித்துவந்த ஊர்ப் பதவிகள் அனைத்துக்கும் ராமசாமிதான் வாரிசு என சம்பந்தப்பட்ட ஆட்களிடம் தெரிவித்தார் நாயக்கர். தந்தை தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து ராமசாமிக்குப் பெரும் வியப்பு. கூடவே உள்ளத் தில் உறுதியும் பொறுப்பு உணர்வும் சேர்ந்துகொண்டன.

''மகனே, துட்டுதான் வாழ்க்கை. கையில் காலணா காசு இல்லைன்னா, ஒரு பய உன்னை மதிக்க மாட்டான். அதே போல, உன்னை நம்பி யாராவது பொறுப்பு கொடுத்தால், அதை உயிரைக் கொடுத்தாவது செய்து முடி. மத்தபடி எல்லாம் உன் இஷ்டம்!''

அந்த வார்த்தைகள் ராம சாமியின் இதயத்தில் கல்வெட்டுகளாகப் பதிந்தன.

அடுத்த நாளே, ஈரோடு பலசரக்குச் சந்தையில் பரபரப்பு! அதுவரை வெங்கட்ட நாயக்கர் மண்டி என இருந்த பெயர்ப் பலகை, 'ராமசாமி நாயக்கர் மண்டி'யாக மாறியது. கூடவே ராமசாமியின் வேஷமும் மாறியது. கணக்குப்பிள்ளை, பட்டாமணியக்காரர், ரெவின்யூ இன்ஸ்பெக்டர், டாக்டர், வக்கீல், டெபுடி கலெக்டர், முன்சீப்,மாஜிஸ்திரேட் போன்ற பதவியாளர்கள் இப்போது ராமசாமிக்கு வணக்கம் போட ஆரம்பித்தனர். வெள்ளைக்கார அதிகாரிகளின் பழக்கமும் ஏற்பட்டது. அவர்களைப் பார்க்க போகும்போதெல்லாம் வெங்கட்ட நாயக்கர் தன் மேல் சட்டையைக் கழற்றிச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், ராமசாமிக்கு அது எதுவும் பிடிக் காதே! ஒருமுறை வெங்கட்ட நாயக்கரே பதற்றத்துடன் வெள்ளை அதிகாரிகள் முன்பு ராமசாமியின் சட்டையைக் கழற்றும்படிசொல்ல, ''நீ வண்டி நாயக்கர் மகனாப் பிறந்ததால், இவனுங்களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடலாம். நான் ஈரோடு மண்டி நாயக்கர் மகன். எவனுக்கும் பயப்பட வேண்டிய அவசியம் எனக்கில்லை!'' என அழுத்தமாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராமசாமி.

1911-ல் ஒரு நாள், வெங்கட்ட நாயக்கர் தனது உலக வாழ்க்கை யைத் துறந்தபோது, ஈரோட்டின் சகல காரியங்களையும் தீர்மானிக் கும் மகத்தான சக்தியாக மாறி யிருந்தார் ராமசாமி.

மக்களிடத்திலும் அதிகாரிகளிடத்திலும் அவரது மதிப்பும் செல்வாக்கும் பன்மடங்கு உயர்ந்திருந்தது. அவரது சிக்கன குணமும் நேர்மையும் வியாபாரத்தில் அவரைச் சிகரத்துக்கு இட்டுச் சென்றன. பிளேக் நோய் வந்து ஈரோடு நகரமே மரண பயத்தில் திணறியபோது, பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தமது தோளில் சுமந்து மருத்துவமனைகளுக்கு அவர் ஓடிய காட்சி, மக்கள் மனங் களில் ராமசாமியை ஒப்பற்ற நாயகனாக மாற்றியது.

''முதல்ல நாயக்கர் வரட்டும், அதுக்கப்புறம்தான் எல்லாம்!'' என நகரத்தில் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் ராமசாமியை எதிர்பார்த்தனர். கோர்ட் வழக்கு களிலும் தீர்ப்பு சொல்வதற்கு முன், 'எதுக்கும் ராமசாமிகிட்ட ஒரு தடவை கேட்டுட்டுத் தீர்ப்பு சொல்வோம்' என மாஜிஸ்திரேட் டுகளே மண்டிக்கு ஆள் அனுப்பிய அதிசயமும் நடந்தது.

ஈரோடு மாவட்ட தேவஸ்தான கமிட்டிக்கு ராமசாமி தலைவரான போது, ''ஏற்கெனவே சாஸ்திர சம்பிரதாயத்தை எல்லாம் ராம சாமி மதிக்க மாட்டான். இவன் பதவிக்கு வந்தா, கோயிலெல்லாம் என்ன கதிக்குள்ளாகப் போகுதோ?'' என ஆத்திகர்கள் பதறினர். ஆனால், அதே ஆத்திகர்கள் வாயடைத்து நிற்கும்விதமாக, கடனில் தவித்த கமிட்டியை மீட்டு, கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடத்தி, 45,000 ரூபாய் லாபத்துக்கு மாற்றி, தனது தனிப் பட்ட கொள்கைகளுக்கும் பொது நலச் செயல்பாட்டுக்கும் இடையி லான வித்தியாசத்தை உலகுக்குத் தெரியப்படுத்தினார் ராமசாமி.இப்படியாக மக்கள் சேவை, மண்டி வியாபாரம் என ஈரோடு நகரத்தையே எண்ணமும் உடலு மாகச் சுற்றிச் சுழன்றவருக்கு, புதிதாக ஒரு பெரும் பதவி தேடி வந்தது. ஈரோடு நகராட்சி மன்றத் தலைவராக ராமசாமி பொறுப்பேற்றுக்கொண்டதும், நகரம் துரிதமாகப் புதுப்பொலிவு பெற ஆரம்பித்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிர மிப்புக் கட்டடங்கள் இடிக்கப் பட்டன. பணக்கார வியாபாரிகள் சிலர் வயிற்றெரிச்சலில் புலம்ப, நகரத்து மக்கள் ராமசாமியின் புகழை வாயாரப் பாடியபடி சுதந் திரமாகச் சாலையைக் கடந்தனர். குடிநீர்க் குழாய்கள் இணைக்கப்பட்டு, வீடுகளுக்குள் முதன்முறையாகத் தண்ணீர் கொட்டத் தொடங் கியது.

இந்த மகிழ்ச்சியின் அலை பக்கத்து நகரான சேலத்தை எட்டியது. அப்போதைய சேலம் நகராட்சிக்குத் தலைவராக இருந்த காங்கிரஸ் தலைவர் ஒருவருக்குப் பயங்கர ஆச்சர்யம்! 'யார் இந்த ராமசாமி? சொல், செயல், தொண் டுள்ளம் என எல்லா விஷயங்களி லும் இப்படியரு நிகரற்ற தனித் தன்மையுடன் நின்று விளையாடு கிறாரே... ஆளை எப்படியாவது இழுத்து காங்கிரசுக்குள் போட்டால் காந்திஜி சந்தோஷப் படுவாரே!' என நினைத்தபடி தனது நண்பர் டாக்டர் வரத ராஜுலு நாயுடுவிடம் விசாரிக்க, அவரும் ராமசாமியின் ரசிகராக இருந்தார்.

அடுத்த நாளே, ஏதோ கோர்ட் விஷயமாகக் காரியம் பண்ணிக் கொண்டு இருவரும் ராமசாமியைச் சந்திக்க, ஈரோடு புறப்பட்டுச் சென்றனர்.

ராஜாஜி என்றும் ராஜகோபா லாச்சாரியார் என்றும் பிற்காலத் தில் மக்களால் அறியப்பட்ட அந்த சேலம் நகராட்சி மன்றத் தலைவர், தன் நண்பரோடு புறப் பட்ட அந்தப் பயணம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாற்றின் பிரமாண்டமான மாற்றங்களை உள்ளடக்கியது என்பதை நிச்சயமாக அவர்களாலும் அப்போது ஊகித்திருக்க முடியாது!

No comments: