Sunday, April 13, 2008

பெரியார்


''ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான்
என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன்
துவக்கிய காரியங்களும் செத்துப்போய்விடுவதில்லை!''

-தந்தை பெரியார்

உலகமே அறிவியல் மற்றும் தொழில் துறைகளில் பத்து குதிரை சாரட்டுகளில் பறந்துகொண்டு இருந்த 19ம் நூற்றாண்டின் இறுதிக் காலம்! மார்க்சும் ஏங்கல்சும் தங்களது நெருப்புரைகளால் அறிவுலகில் பெரும் தீயை ஏற்படுத்தி, ஐரோப்பாவையே அதிர வைத்துக்கொண்டு இருந்த நேரம். இதன் எந்தச் சலனமும் இல்லாமல், உலக வரைபடத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் தென்கோடியில், தாங்கள் யாரென்றே அறியாத பெருங்கூட்டமொன்று இருந்தது. அறியாமை அவர்களின் கண்களைக் கட்டியிருந்தது. மதம் அவர்களது மூளையை அடைத்திருந்தது. சாதி முதுகில் அமர்ந்து அவர்களை முழுவதுமாகக் குனியவைத்திருந்தது. அவர்களது இந்த நிலை, அப்போது ஆட்சியிலிருந்த ஆங்கிலேயர்களுக்கும் சில ஆதிக்கச் சக்திகளுக்கும் வசதியாக இருந்தது. வீதிகளில் அரசர்களைப் போலக் கை வீசி நடந்து வரும் அவர்களைக் கண்டதும், இவர்கள் தங்கள் தலையில் கட்டிய துண்டை அவசரமாக அவிழ்த்துக் கக்கத்தில் சுருட்டிவைத்துக்கொண்டு 'எசமான்' எனக் குனிந்து கும்பிடு போடுவார்கள். ஆனால் எந்தச் சூரியனும் வீதி பார்த்து உதிப்பதில்லை; எந்தக் காற்றும் சாதி பார்த்து வீசுவதில்லை. சாதியின் பெயரால் உலகில் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு, மனிதனை மனிதன் இழிவு செய்யும் போக்கு மட்டும் இங்கே தொடர்ந்துகொண்டு இருந்தது. அது மட்டுமா... பெண்ணடிமை, பால்ய விவாகம் மற்றும் இன்ன பிற மூட நம்பிக்கைகளும் மக்களைப் பிடித்து ஆட்டிக்கொண்டு இருந்தன. இம்மக்களை மீட்டு சாதி, மதம் என்னும் நோய்களை விரட்டி, மானமும் அறிவும் ஊட்டி, தன்னுணர்வுமிக்க தமிழர்களாக மாற்ற யாரேனும் தோன்றிட மாட்டார்களா எனப் படித்த பண்பாளர்கள் பலர் உள்ளூரக் கொந்தளித்துக்கொண்டு இருந்தனர். சாதாரண ஒரு மனிதரால் இது சாத்தியமாகாது. துணிச்சல், அதிகாரம், செல்வாக்கு, அந்தஸ்து, பண பலம் இவற்றுடன் தன்னிகரற்ற சிந்தனை ஆற்றல், அதனை வெளிப்படுத்தும் சொல்வன்மை, வாதங்களை அடித்து நொறுக்கும் தர்க்க ஞானம், எல்லாவற்றுக்கும் மேலாக சமூகத்தின் மீதான பேரன்பு, எந்தச் சந்தர்ப்பத்திலும் எதையும் இழக்கத் துணியும் தியாக உள்ளம், தொண்டு மனப்பான்மை என இவை அத்தனையும் ஒருங்கே அமையப்பெற்ற ஒரு மகத்தான மாமனிதராக அவர் இருந்தால் மட்டுமே தமிழர்களின் வாழ்வைச் சீர்படுத்த இயலும் என்கிற நிலை.



இந்தச் சூழலில்தான், ஈரோடு எனும் வணிக நகரத்தில், 1879 செப்டம்பர் 17ம் தேதியன்று, தமிழர் தம் வாழ்வில் விடிவெள்ளி ஒன்று உதித்தது. அவர்தாம் 'பெரியார்' எனத் தமிழரால் அன்புடன் அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி!

பெரியாரின் தந்தையார் பெயர் வெங்கட்ட நாயக்கர். ஈரோட்டில், வெறும் வெங்கட்ட நாயக்கர் என்றால் பலருக்கு அப்போது தெரியாது. கல்தச்சு நாயக்கர் என்றால், உடனே சொல்லிவிடுவார்கள். ஏனென்றால், அவரது தொழில் அப்படி. கற்களில் சித்திர வேலைப்பாடுகள் செய்வதில்தான் அவருக்கு அப்போது பிழைப்பு.

வெங்கட்ட நாயக்கரின் பூர்வ கதை, கொடுமையானது. அவருக்குச் சிறு வயதிலேயே அப்பா இல்லை. யாரோ குழந்தை பாக்கியம் இல்லாத ஓர் ஏழைப் பெண்ணால் எடுத்து வளர்க்கப்பட்டவர்.மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்கியது கிடையாது. தன் சிறு வயதிலிருந்து 18 வயது வரை கல் உடைக்கும் கூலித் தொழிலாளியாகவே பிழைப்பு நடத்தி வந்தவர் அவர். கல்யாணத்துக்குப் பின், வாழ்க்கையில் கொஞ்சம் வசதி கூடியது. மனைவியாக வாய்த்த சின்னத்தாயம்மாள், சேலம் தாதம்பட்டியைச் சேர்ந்தவர். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கல்யாணத்துக்குப் பின்பு கணவருடன் அவரும் கூலிவேலைக்குப் போகவேண்டி வந்தது. தினமும் 6 அணாவுக்கும், 8 அணாவுக்கும் உயிரை வருத்தி வேலை செய்யும் இந்தப் பிழைப்புக்குப் பதிலாக, சொந்தமாக கட்டை வண்டி ஒன்று வாங்கி ஓட்டினால் என்ன என்று யோசித்தார் வெங்கட்ட நாயக்கர்.

ஆசைப்பட்டபடியே அதுவும் நடந்தது. ஆனால், ராவெல்லாம் புருஷன் வண்டி ஓட்டப் போய்விட, வீட்டில் சின்னத்தாயம்மாள் மட்டும் தனியாக இருக்கவேண்டி வந்தது. இது அவரின் அப்பாவுக்கு மிகுந்த மனக் கஷ்டத்தை ஏற்படுத்த, உடனே மாப்பிள்ளையைக் கூப்பிட்டு, சொந்தமாக ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்குமாறு சொல்லி, கொஞ்சம் பணமும் கொடுத்தார்.

அடுத்த நாளே, வெங்கட்ட நாயக்கர் சிறிய தட்டுக்கடை முதலாளியாக மாறிவிட்டார். கடை போட்ட சில நாட்களிலேயே வெங்கட்ட நாயக்கருக்கு வியாபாரத் தந்திரங்கள் அத்துபடியாகின. சீக்கிரமே அந்தக் கடையை ஒரு நல்ல விலைக்குக் கைமாற்றிக் கொடுத்துவிட்டு, ஈரோடு பஜாரில் மிகப் பெரிய மளிகைக்கடையை வாங்கினார். ஈரோடு பஜாரில் மளிகைக் கடை வெங்கட்ட நாயக்கர் என்றால், படுபிரசித்தம் என்கிற அளவுக்கு வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தார்.

அங்கவஸ்திரம், பட்டு ஜிப்பா, விரல்களில் மின்னலடிக்கும் மோதிரங்கள், பெரிய கல் வீடு, இரண்டு ஏக்கர் நிலம் என கடும் உழைப்பும் புத்தி சாதுர்யமும் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிவிட்டன.

வாழ்க்கை வசதியாக மாறினாலும், சின்னத்தாயம்மாளுக்குக் குழந்தை இல்லாத பாரம் மனசை அழுத்திக்கொண்டு இருந்தது. மூன்று குழந்தைகள் பிறந்து, அடுத்தடுத்து இறந்து போய்விட, குழந்தை வரம் வேண்டி, கோயில், குளம் எனத் தீவிரமாக ஏறி, இறங்க ஆரம்பித்துவிட்டார். இந்தச் சமயத்தில், அவர் ஓர் ஆண் குழந்தைக்குத் தாயானார். அந்தக் குழந்தை தனக்குச் சாமி தந்த வரம்தான் என மெய்சிலிர்த்து, குழந்தைக்குக் கிருஷ்ணசாமி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். அதன் பிறகு கேட்க வேண்டுமா..? சின்னத் தாயம்மாளுக்கு 24 மணி நேரமும் கோயில், குளம், அர்ச்சனை, மடி, ஆசாரம், பூஜை, புனஸ்காரம் இவையே வாழ்க்கையாகிப்போனது. இந்தச் சமயத்தில்தான், அவருக்கு இரண்டாவதாகவும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. பக்திப் பரவசம் மேலிட, அந்தக் குழந்தைக்கு ராமசாமி என்று பெயர் சூட்டினார். அவர்தான் நம் பெரியார்!

எந்தச் சாமியை அவர் பின்னாளில் தன் வாழ்நாள் முழுக்க மறுத்துப் போராடினாரோ, அந்தச் சாமியின் பெயரையே அவர் வாழ்நாள் பூராவும் சுமக்க நேர்ந்ததுதான் வாழ்க்கையின் விசித்திரம்!

பின்னாளில் இந்த மகன் தனது ஆசார அனுஷ்டானங்களையும் பக்தி நெறிகளையும் முழுவதுமாக அடித்து நொறுக்கப் போகிறான் என்பதை சின்னத்தாயம்மாள் முன் கூட்டியே உணர்ந்துதானோ என்னவோ, சிறு வயதிலிருந்தே தன் இளைய மகன் ராமசாமியிடம் அவ்வளவாக அன்பு பாராட்டாமல், மூத்த மகனையே கொண்டாடிக் கொஞ்சினார். ஏனோ, ஒரு கட்டத்தில், இனி இந்தப் பிள்ளையே தனக்குத் தேவையில்லை என்று, தன் உறவுக்கார விதவைப் பெண் ஒருத்திக்குத் தத்து கொடுத்துவிட்டார்.

சிறு வயதிலேயே தாய் தந்தையரைப் பிரிந்து வாழ நேரிட்டதன் விளைவாக, சிறுவன் ராமசாமிக்குள் தீராத ஒரு வெறுப்பு உணர்ச்சி நெஞ்சில் குடி கொள்ள ஆரம்பித்தது. அதன் பலனாக, கடும் போக்கிரியாக வளர ஆரம்பித்தார்.



அவரை வளர்த்த அந்த விதவைத் தாயின் குடும்பச் சூழல் மிகவும் வறுமை என்பதால், பசிக்கு உணவின்றித் தெருத்தெருவாக அலைந்து, கிடைப்பதைத் தின்று, கண்டவரிடம் வம்பு வளர்த்து, காட்டுச்செடியாக வளர்ந்தார். என்னதான் ராமசாமி ஊர் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்தாலும், அந்த வளர்ப்புத் தாய்க்கு மகனென்றால், அத்தனை பாசம்! யாரேனும் ''ராமசாமி என் பிள்ளையை அடித்துவிட்டான். அவனைக் கண்டித்து வளர்க்கக் கூடாதா?'' எனப் புகார் செய்தால், ''அவன் அப்படித்தான் அடிப்பான். வேண்டுமானால், உன் பிள்ளையை வீட்டிலேயே பூட்டிவைக்க வேண்டியதுதானே!'' எனப் பதில் கேள்வி கேட்டு விரட்டியடிப்பார். அம்மாவுக்கும் பிள்ளைக்கும் அப்படி ஓர் அன்னியோன்யம். ராமசாமிக்கு யாராவது கையில் சிக்கிவிட்டால் தீர்ந்தது கதை. தன் பேச்சைக் கைதட்டி ரசிக்கத் தோதாக ஆளும் கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். வயது வித்தியாசமில்லாமல் அவர்களை கிண்டல் செய்து ஓட ஓட விரட்ட ஆரம்பிப்பான். பேச்சு வெறும் வேடிக்கையாக இல்லாமல், அதில் அதிசயிக்கத்தக்க புதிய கருத்துக்களும் இருக்கும் என்பதால் எப்போதும் ஒரு கூட்டம் அவனுடன் கூடியிருக்கும். வளர்ப்புத் தாய்க்கு அது சற்று பெருமையாக இருந்தாலும், நாளை இவன் எப்படி ஆவானோ என்ற கவலையும் எழும்.

அன்று காலை... வாசலில் நிழலாட, வெளியே வந்து பார்த்தார் அந்தத் தாய். வீட்டு வாசலில் வெங்கட்ட நாயக்கர் நின்றிருந்தார்!


Thanks to vikatan.com
-(சரித்திரம் தொடரும்)

2 comments:

TBCD said...

மகேந்திரன்,

இந்த

//Blogger Tygogal said...

See Please Here

Sunday, April 13, 2008 4:19:00 PM
Blogger Tygogal said...

See Please Here

Sunday, April 13, 2008 4:19:00 PM
Blogger Salar said...

See Please Here//


கிருமி தளங்களுக்கு இட்டுட்டுப் போகுதாமே.

நீக்கிவிடப்பா..

(உரையாடியில் வர முடியல்லையா...?)

Anonymous said...

பெரியாரின் சரித்திரம் மட்டுமில்லே, அவரோடே கொள்கைகளை பற்றியும் எழுதுங்க. நாலு பேருக்கு சொல்லுங்க.

Kalaiyagam
http://kalaiy.blogspot.com