Sunday, June 26, 2011

அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது சற்றேறக்குறைய இரண்டு மூன்று ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களால் தாழ்த்தப்பட்டு அடக்கப்பட்டு, தலைநிமிராமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட கழகமாகும்.

தி.மு.க. தோன்றுவதற்கான வரலாறு

அது தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் திராவிடர் என்ற சொல் சூத்திரர் என்ற சொல்லுக்குப் பிரதிச் சொல்லாகக் கருதப்படும் சொல்லாக இருப்பதாய்க் கருதப்பட்டு வந்ததால், அப்பெயரைக் கழகத்திற்கு வைக்க ஆந்திரர்கள் ஆட்சேபித்ததால் அக்கழகத்திற்கு தென் இந்தியர் விடுதலைக் கழகம் என்பதாகப் பெயரிட்டுத் (South Indian Liberal Federation) துவக்கினார்கள்.

என்றாலும், துவக்க காலத்தில் ஜமீன்தார்கள், செல்வவான்கள், படித்த கூட்டத்தினர் ஆகியவர்களே முன்னின்று முக்கியமானவர்களாக இருந்து துவக்கப்பட்டதால் இம்மூன்று குழுவினர்களின் நலனே அதற்கு முக்கியக் கொள்கையாக இருக்கவேண்டி வந்தது. ஆட்சியையும், பதவியையும் கைப்பற்றுவதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய தாயிற்று.

ஆரம்பத்திலேயே பார்ப்பனர்களின் தொல்லை

இந்த முயற்சி பார்ப்பானுக்குப் பெருங்கேடாய் முடியக்கூடியதாயிருந்ததால் இம்முயற்சிக்குப் பார்ப்பனர்கள் கூண்டோடு எதிரிகளாய் இருந்து இந்த ஸ்தாபனம் வெற்றிகரமாய்த் தொண்டாற்ற முடியாமல் தொல்லைக்குள்ளாக் கப்பட்டு தக்கபலன் ஏற்படச் செய்யாமல் தடுக்கப்பட்டு வந்தது.

என்றாலும், இந்த ஸ்தாபனம் ஏற்பட்டதன் பயனாய் பார்ப்பனர் வேறு நாம் வேறு என்பதையும், பார்ப்பனர் தென்னிந்தியர்களுக்கு, திராவிடர்களுக்கு அரசியல், சமுதாய நல்வாழ்வுத் துறைக்கு பரம்பரை எதிரிகளும், தடங்கல்களுமாவார்கள் என்பதையும் திராவிட மக்கள் ஒவ்வொருவருக்கும் விளங்கும்படிச் செய்துவிட்டது.

திராவிடர்களின் நிலை

ஆனால் திராவிடர்கள் பாமரர்களாகவும், பகுத்தறிவற்றவர்களாகவும், 100க்கு 100 பேரும் இருந்து வந்ததால் தாங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணரமுடியாமல் இருக்கும்படி ஆரியர்களின் கடவுள், மதம் சாஸ்திரம் பாரத ராமாயணப் பற்று, முதலியவைகள் செய்துவிட்டபடியால் வெறும் பதவி உத்தியோகம், தனிப்பெருமை ஆகியவற்றி லேயே பற்றுக்கொண்டு சமுதாய வளர்ச்சியை முக்கியமாய்க் கருதாமல் போய்விட்டது.

அண்ணாவின் தலைமை

பிறகு அந்த ஸ்தாபனம் அரசியலில் பெருந்தோல்வியுற்றதன் பயனாய் சமுதாயத் தொண்டுக்கு என்றே துவக்கி நல்ல நிலையில் நடந்துவந்த சுயமரியாதை இயக்கத்துடன் அந்த ஸ்தாபனம் இணையும்படியான நிலைக்கு வந்ததன் பயனாய் தென்னிந்தியர் விடுதலை ஸ்தாபனம் என்கின்ற பெயர் மாற்றமடைந்து திராவிடர் கழகம் என்கின்ற பெயருடன் நடந்து வந்தது. இதில் பிளவு ஏற்பட்டதன் காரணமாய் திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் பெயரால் மேற்சொன்ன தென்இந்தியர் விடுதலை ஸ்தாபனம் (ஜஸ்டிஸ் கட்சி) அண்ணாவின் தலைமையில் சுமார் 18 ஆண்டு பொறுத்து தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றி சமுதாயத்தின் முன்னேற்றத் தொண்டையே முக்கியமாய்க் கொண்டு இன்று தமிழர்களுக்கு ஆரியர் - பார்ப்பனர் அல்லாத தமிழர் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது.

தி.மு.கழகத்தின் அரும்பெரும் சிறப்பு

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவிலேயே பார்ப்பனர் தவிர்த்த மற்ற திராவிடர் சமுதாயத்திற்கு, சிறப்பாக சமூகத் துறையில் அரசியல் மூலம் தொண்டாற்றும் ஸ்தாபனம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றே ஒன்றுதான் என்று சொல்லும்படியான நிலையில் இருந்து வருகிறது.

இதன் தொண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால், முதலில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இரண்டாவது, அரசியல் பதவிகளில் எல்லாவற்றிலும் தமிழர்கள் (விகிதாசாரம் பெறாவிட்டாலும்) அமரும் நிலை ஏற்பட்டது.

மூன்றாவதாக, கல்வித்துறையில் கல்வி பெற்ற மக்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

நாலாவது, இன்றைய ஆட்சி தனித்தமிழர் - திராவிடர் ஆட்சி என்று சொல்லும்படி இருப்பது.

அய்ந்தாவது பார்ப்பனன் என்றால் நமக்கு, தமிழனுக்கு சமமான பிறவியே அல்லாமல் எந்த விதத்திலும் உயர்ந்த பிறவி அல்ல என்பதை தமிழனின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் விளங்கி இருப்பது முதலியவைகளாகும்.

அடிப்படைக் கொள்கையில் வெற்றி

ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகத்தைப் போலவே சமுதாயத்துறையில், அதன் அடிப்படைக் கொள்கையில் வெற்றிப்பாதையில் மாபெரும் வெற்றிப் பாதையில் செல்லுகிறது என்று சொல்லத்தக்க வண்ணம் இருந்து வருகிறது.

ஆகவே, திராவிடர் கழகமோ, திராவிடர் முன்னேற்றக் கழகமோ தனது இலட்சியத்தை - கொள்கையைச் சிறிதும் குற்றம் குறையின்றி வெற்றி வழியில் பின்பற்றித் தொண்டாற்றி வருகிறது.

இதை உலகிற்கு ஒரு புதுமை என்றுதான் சொல்லவேண்டும்.

உலகில், குறிப்பாக இந்தியாவில் - சமுதாயத் துறையில் இதுபோல் தொண்டாற்றிய - தொண்டாற்றும் வெற்றி ஸ்தாபனம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக இந்த ஸ்தாபனத்தின் தொண்டால் தமிழர்கள் பார்ப்பனர்களை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்றும் சொல்லலாம்.

------------------------ தந்தை பெரியார் - "விடுதலை" - 11.03.1971

No comments: