Tuesday, March 24, 2015

வெற்றிவேல் வீரவேல். சீமானின் தமிழ் தேசியப் புரட்டுக்கள். 2/2

முதல் பாகம் படிக்காமல் தவற விட்ட முப்பாட்டனின் பேரன்கள் இங்கே சொடுக்கவும்.

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சீமான் தன் கருப்புச் சட்டையோடு திராவிட இயக்க மேடைகளை வெறுத்து அதிமுக மேடைகளில் அதிகாரபூர்வமில்லா பேச்சாளராய் கோலோச்சிக் கொண்டே, " இனிமே எவனாச்சும் திராவிடம், தமிழ்னு பேசிகிட்டு கோபாலபுரம் கேட்டுக்கு அந்த பக்கம் போனீங்க? எல்லா பயலையும் கத்தியால குத்துவேன் என்று மார்க்ஸ், லெனின், சேகுவேரா, முப்பாட்டன் முருகன் எல்லாம் சிந்திக்காத ஒரு சித்தாந்தத்த முன் வைத்தபோது கூடவே இருந்த செவ்வாழைகள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று துள்ளிக் குதித்து ஓடிப்போன விவகாரம் எல்லாம் நாம் அறிந்ததுதான்.

ஒரு பக்கம் ஈழ ஆதரவு, இன்னோர் பக்கம் ஈழத்துக்கு எதிரான ஜெயலலிதா ஆதரவு, என்று ரெட்டைக் குதிரையில் எந்தப் பக்கம் போவதென்று தெரியாமல் சவாரி செய்துகொண்டிருக்கும் சீமான், கொஞ்சம் அல்ல அதிகமே முற்றிய நிலையில் கைய்யில் எடுத்திருக்கும் விவகாரம் தமிழ் தேசியம், ஆசிவகம், முப்பாட்டன் முருகன். வரலாற்றின் முன் தங்களுக்கான இடத்தை தங்களின் முயற்சியால், உழைப்பால், வீரத்தால் தியாகத்தால் தங்களை தாங்களே கட்டமைத்துக் கொண்ட மாவீரர்களை, எல்லாம் இவன் என் பாட்டன், இவன் என் கொள்ளுப் பாட்டன், இவன் என் அண்ணன் என்று சொல்லிச் சொல்லியே தனக்கான இடத்தை அடைந்து விடலாம் என்ற மனோபாவம் எல்லோருக்கும் உரிய ஒன்றுதான் ஆனால், புராணங்களால் கட்டமைக்கப் பட்ட மொட்டை முருகனை முப்பாட்டன் என்பதில் என்ன விதமான தமிழ் தேசியத்தை சீமான் உண்டாக்க விரும்புகிறார் என்பதில்தான் குழப்பம்.

டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த பண்பாட்டுப் புரட்சி மீட்டெடுப்பு இல்லாமல் சமூகப் புரட்சி சாத்தியமில்லை என்ற கோட்பாட்டு முழக்கத்தை இவர்கள் தங்களுக்கு வேண்டியபடி மடித்தும் ஒடித்தும் பாண்பாட்டை மீட்டெடுக்க பச்சை சட்டையணிந்து வெற்றி வேல் வீர வேல் என்று பழனி முருகனுக்கு பால் காவடி எடுக்கச் சென்றிருப்பதற்கு விளக்கம் சொல்கிறார்கள், நமக்கு காதெல்லாம் ரத்தம் வழிகிறது.

சீமானின் அடிப்பொடிகள் மட்டும் என்ன சீமானைப் போலவே ஒரு பக்கம் சாதியவாதம் பேசிக் கொண்டே இன்னொருபக்கம் ஈழத்தை வென்றெடுப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்தவாரே கிடைத்த இடைவெளியில் கிடா வெட்டுகிறார்கள் தமிழ் தேசியத்தை.

பெரியார், அண்ணா போன்ற அரசியல் மேதைகள் எல்லாம் கண்டெடுக்க முடியாத ஒரு சமூகக் கட்டமைப்பை தங்களின் அரசியல் ஆசைகளுக்காக அம்மையாரிடமும், இன்ன பிற குஞ்சுக் குளுவான் சாதி தேசியம் பேசும் ஆட்களுக்கும் நேர்ந்து விடப்பட்ட ஆடுகளைப் போலவே எந்த பக்கம் பாயச் சொன்னாலும் பாயத் தயாராக இருக்கும் பள்ளிக் கூடச் சிறுவர்களை வைத்துக் கொண்டே 2016 ல் பாய்வோம் முதல்வர் வேட்பாளருக்கு தயார் என்கிற சீமானின் தமிழ் தேசிய முயற்சி முதல்வர் வேட்பாளர் என்பதோடு முடிவடைந்து போகிறது.

இந்திய அரசாங்கத்துடன் ஒரு அங்கமாக ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழகத்து முதல்வர் ஆகிவிட்டாலே தமிழ் தேசியம் வென்றெடுத்துவிட்டதாக ஆகுமென்றால் பச்சைத் தமிழன் பன்னீர்செல்வம் ஆட்சிகூட இவர்கள் அகராதியில் தமிழ் தேசியத்தின் ஆட்சிதான்.

முருகனுக்கு ஒரு விளக்கம் சொன்னதற்கே சமூக வலைத்தளங்கள் எல்லாம் கழுவி ஊற்றியதில் நாரதரை பார்ப்பனராக்கி, சிவனையும் பார்வதியையும் முருகனையும் முப்பாட்டன்கள் ஆக்கியதில் ஆற்றங்கரைப் பிள்ளையார் கதிதான் அதோகதியாகிப் போனது.

சாதிய வாதம், மொழிவாதம் இரண்டை மட்டுமே கொண்டு உண்டாக்கப் படும் தேசிய இனக் கொள்கைகள் மூலம் எந்த ஒரு தேசியத்தையும் ஒரு இம்மியளவுகூட முன்னெடுத்துச் சென்றுவிட முடியாதென்பது தெள்ளத் தெளிவு. அரசியலில் அரிச் சுவடி தெரியாத ஆட்களே சீமானின் பலம் என்பதால் கொள்கை ரீதியான விளக்கங்களையோ இல்லை அதற்கான மறுப்புகளை முன்வைப்போரின் கருத்துக்களையோ எதிர்கொள்ளும் ஆட்களோ இன்றி திருவிழாவில் காணாமல் போன குழந்தைகளைப் போல, திராவிடத்தையும், பெரியாரையும், கலைஞரையும் திட்டுவதும், தமிழ் தேசியத் தலைவர் என்று பிரபாகரனைக் கொண்டாடிக் கொண்டு வீரத்தமிழன் வீரப்பனுக்கு வீர வணக்கம் போஸ்டர் அடிப்பதிலும் மட்டுமே தங்கள் தேசியத்தை வென்றெடுக்க முடியும் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

சீமானைத் தவிற யாரையுமே தமிழர்கள் பட்டியலில் ஏற்றுக் கொள்ளாத, தமிழ் தேசியம் பேசும் ஆட்கள் வசதியாக யாரையெல்லாம் சேர்க்கிறார்கள் என்று பார்த்தால் தாய்மொழி தமிழாக இருந்தால் மட்டுமே போதாது அவர்கள் சாதியாலும் தமிழர்களாக இருக்கவேண்டும் என்கிற ஒற்றைக் கொள்கை கிட்டத் தட்ட அவர்கள் வரையரையில் ஒட்டுமொத்த தமிழகமுமே வந்தேறிக் கூட்டம்தான்.

வந்தேறிக் கூட்டம் தமிழகத்தில் மட்டுமா வந்தேறியது? உலகமெங்கும் இருக்கும் இந்திய, ஈழத் தமிழர்கள் எண்ணிக்கை பல கோடியைத் தாண்டுகிறது, அவர்களையெல்லாம் வந்தேறிகளே ஓடுங்கள் உங்கள் நாட்டுக்கு என்று சொல்லாதவரை சீமான் போன்ற அரசியல் தெளிவற்ற தமிழன் ஆளனும், என் மண், என் மக்கள், முப்பாட்டன்கள், ஆண்ட பரம்பரை பேசும் சாதிய மனோபாவம் விட்டு வெளியேற மறுக்கும் ஆட்களுக்கு கொண்டாட்டம்தான்.

அதுவரை வெற்றிவேல் வீரவேல் என்ற முழக்கத்தோடு பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம் வாங்கி சப்புக் கொட்டிக் கொண்டே நாக்கிலும் கொஞ்சம் நக்கிக் கொள்வோம். பழனியில் அவாள்கள் மணியாட்ட சிதம்பரத்தில் ஆறுமுகச் சாமியார் வெளியேற்றப் பட, அணைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டங்களுக்கு அவாள்கள் முழு வேகத்தோடு எதிர்க்க முப்பாட்டன் முருகனுக்கு இடையில் இருக்கும் பூநூல் போட்ட புரோக்கர்கள் துணையோடு தமிழ் தேசியத்தை வென்றெடுப்போம்.





2 comments:

taruada said...

Super. Currently, I don't see any parties with good principles. BJP may be one exception but that also is threatened byanti Modi group

Anonymous said...

Thelivana unmai ai uraikka vaitha arumai aana katturai.....nandri