இனி வரும் காலங்களில் உருவத்தைத் தந்தியில்
அனுப்பும்படியான சாதனம் மலிந்து ஆளுக்கு ஆள் உருவம்
காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்!
-1943-ல் பெரியார்
சரித்திரம் கண்ட முதலாவது மொழிப் போர் தமிழகத்தில் அநேக மாறுதல்களை உருவாக்கிவிட்டுக் கடந்தது. இனி பெரியாரால் மட்டுமே தமிழகத்துக்கு விடிவுக்காலம் என்கிற உண்மை நீதிக் கட்சியினருக்குத் தெளிவாகப் புரிந்தது.
விளைவு... 1938 டிசம்பரில், சென்னையில் நடைபெற்ற நீதிக் கட்சியின் 14வது மாநாட்டில் அப்போதைய தலைவரான சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ''இன்று முதல் நீதிக் கட்சி பெரியார் வசம் முழுமையாக ஒப்படைக் கப்படுகிறது. இக்கட்சிக்கு இனி அவரே தலைவராகச் செயல் படுவார்'' என அறிவிக்க, தொண்டர்கள் எழுப்பிய கரவொலியால் மாநாட்டின் பந்தல் கூரையே படபடத்தது. முன்னமே பெரியாரிடம் இதற்கு ஒப்புதலும் பெற்றிருந்த பன்னீர்செல்வம், பெரியார் கைப்பட எழுதிய எழுச்சிமிகு உரையை வாசித்து, கூட்டத் தினரை உணர்ச்சி அலைகளால் கொந்தளிக்கச் செய்தார். எங்கோ கண்காணாத தொலை வில் சிறையில் இருக்கும் ஒரு தலைவனுக்கு தமிழகத்தில் நடந்த இந்த மகத்தான மரியாதையைக் கேள்விப்பட்ட தேசத் தலைவர்களின் பார்வை பெரியாரை நோக்கித் திரும்பி யது. அப்படிப்பட்ட தலைவர் களில் ஒருவர்... டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். இந்திய அரசியல் சாசனச் சட்டத்தை வடிவமைத்த பெருமைமிகு தலைவர். தென்னாட்டில் பெரியார் என்றால், வடநாட்டில் அம்பேத்கர்.
அதுவரை இந்த இரண்டு சூரியன்களும் நேரில் சந்தித்ததில்லை. அதற்கான வாய்ப்பு, முகம்மது அலி ஜின்னா மூலம் உருவானது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து விவாதிக்கும் பொருட்டு, ஜின்னா தேநீர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அழைப்பை ஏற்று, மகாராஷ்டிராவுக்குப் புறப் பட்ட பெரியாரின் ரயில் பயணத் தில், அவருடன் அறிஞர் அண்ணா வும் இருந்தார்.
மகாராஷ்டிராவில் பெரியாரைக் கண்டதும் அம்பேத்கர் கட்டிஅணைத்து வரவேற்றார். காங்கிர ஸின் சனாதன தர்மத்துக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அந்தச் சந்திப்பு, வரலாற் றின் முக்கிய பதிவேடு. அடுத்தடுத்த ஆண்டுகளில், பெரியாரும் அண்ணாவும் தொடர்ந்து வடநாடுகளுக்குப் பயணித்துப் பல அதிர்வுகளை உரு வாக்கிவிட்டுத் தமிழகம் திரும்பினர்.
இங்கே தமிழகத்தில், திராவிடப் புயல் முழுவீச்சில் இருந்தது. கல்வி அறிவு பெற்ற இடைநிலைச் சாதி மக்களின் முதல் தலைமுறைக்கு பெரியாரும் அண்ணாவும் இதய நாயகர்களாக மாறினர். எண்ணற்ற கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச் சாளர்கள், மேடை நாடகக் கலைஞர் கள், திரைப்பட நடிகர்கள் எனப் பலரும் திராவிட எழுச்சிக்காக மேடைகளில் அணி திரண்டனர். பிற்பாடு திராவிட இலக்கியம் எனத் தனியாக அடையாளப்படுத்தப்படும் அளவுக்கு சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் எழுதப்பட்டன. அதே சமயம், பெரியாரின் மனம் கொண்டி ருந்த வேகத்துக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. அடிக்கடி மருத்துவமனையில் சேர வேண்டிய அவசியம் நேர்ந்தது.
முதுமையில் எல்லா மனித ரும் மீண்டும் குழந்தைகளாகிவிடுகின்றனர். கிட்டத்தட்ட 70 வயதை நெருங்கிவிட்டிருந்த பெரியாரும் இயற்கையின் விதிகளில் இருந்து தப்ப முடிய வில்லை. உற்ற ஒரே துணையாக இருந்த நாகம்மையாரும் இறந்த சூழலில் தன்னைத்தானே நிர்வ கித்துக்கொள்ள முடியாமல் தவித்தார். அவரை அருகிலி ருந்து கவனித்துக்கொள்ளவும், தேவையான நேரத்தில் உணவு மற்றும் மருந்து கொடுத்துப் பராமரிக்கவும் தாயுள்ளம் கொண்ட ஒரு தாதியின் சேவை தேவையாக இருந்தது.
அந்தத் தேவையைத் தக்க சமயத்தில் தீர்த்தார் அண்ணல் தங்கோ. சுயமரியாதைப் படை யின் மற்றுமொரு சிங்கம்.அவரால் அறிமுகப்படுத்தப் பட்ட இளம் பெண்ணுக்கு, அரசியல் ஆர்வமும் தொண் டுள்ளமும் இருந்தது ஆச்சர்ய மான ஒத்திசைவு.
காந்திமதி என்ற அந்தப் பெண், வேலூரில் விறகுத் தொட்டி நடத்திவந்த கனக சபை என்பவரின் மகள். இயக்கப் பற்று காரணமாக, தன் பெயரை அரசியல் மணி எனத் திருத்திக்கொண்டார். எவரிடமும் அத்தனைச் சீக்கிரம் பொறுப்புகளை ஒப்படைக்காத பெரியாரிடமே குறுகிய காலத் தில் நன்மதிப்பைப் பெற்றவர் அரசியல் மணி. கூட்டங்களில் புத்தகம் விற்ற காசை கணக்குச் சுத்தமாகத் திரும்ப ஒப்படைக்கும் அவரது நேர்மை, பெரியாருக்குப் பிடித்திருந்தது. இதன் காரணமாக பெரியாரே கூட்டங்களில் மணி யம்மையார் என மதிப்புடன் அழைக்கத் துவங்க, அந்தப் பெயரே அவருக்கு நிலைத்தது.
அதுவரை தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வந்த நீதிக் கட்சி, பெரியாரின் தலைமைக்குக் கீழ் வந்த பிறகு, பல மாறுதல்களைச் சந்தித்தது. இந்த மாறுதல்களை நீதிக் கட்சியில் இருந்த சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. பதவி, பணபலம், ஆட்சி, அதிகாரம் எனத் தேர்தல் அரசியலால் பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த அந்தக் கூட்டம், பெரியா ருக்கு எதிராகச் சதிகள் செய்யத் துவங்க, அதை முளையிலேயே கிள்ளியெறியும் பொறுப்பை அண்ணாவிடம் ஒப்படைத்தார் பெரியார்.
1944, ஆகஸ்ட் 27 அன்று சேலத்தில் நடந்த மாநாட்டில் அண்ணா வாசித்த தீர்மானம் வரலாற்றை மாற்றி எழுதியது. 'இதுவரை, பணக்காரர்களுக் கெனவே இயங்கி வந்த நீதிக் கட்சி, இனி 'திராவிடர் கழகம்' எனும் பெயரில் பாட்டாளி மக்க ளுக்காகவும் ஏழை எளியவர்க ளுக்காகவும் மட்டுமே பாடுபடும்!' என அண்ணா தனது எழுச்சி உரையை வாசித்தார். பின்னாட் களில் பல நூறு கட்சிகளின் தலைக்காவிரியாக விளங்கி இன்றுவரை எண்ணற்ற தொண்டர் களுடன் பகுத்தறிவுப் பிரசாரத்தில் ஈடுபடும் திராவிடர் கழகம் உதயமானது.
கட்சியின் பெயர் மாற்றப்பட்ட கையோடு, அதுவரையிலான நீதிக் கட்சியின் கொடி குறித்தும் ஆட்சேபங்கள் எழுந்தன. கட்சித் தொண்டரும் பெரியாரின் சகோதரருமான ஈ.வெ.கிருஷ்ண சாமி அவர்களின் மூத்த மகள் மிராண்டா கஜேந்திரன் முதன் முதலாக தராசு சின்னம் பொறித்த நீதிக் கட்சியின் கொடி குறித்துக் கேள்விகளை எழுப்பினார். 'தராசு, நமது சின்னமல்ல! அதில் புரட்சி யும் இல்லை; எந்த எதிர்ப்பும் இல்லை. நமது கொடி, நமது உணர்வைப் பிரதிபலிக்க வேண்டு மானால், முதலில் இந்தத் தராசு கொடிக்கு முடிவுகட்டிவிட்டு, புதிய கொடியை வடிவமைக்க வேண்டும்' என திருச்சி மாநாட்டில் முழங்கினார். புதிய கொடியை உருவாக்கப் பலரும் முனைந்தனர். கறுப்பு சிவப்பு இரண்டு வண்ணங்களில் கொடி அமைக்கப்பட வேண்டும் என்பது ஏகமனதாகத் தீர்மானம் செய்யப்பட்டது. கறுப்பு என்பது தமிழரின் இழிநிலை என்றும், அதை வேர றுக்கும் புரட்சியைச் சிவப்பு நிற வட்டமாகவும் கருத்தில்கொண்டு ஷண்முக வேலாயுதம் என்பவர் கொடியை வடிவமைத்தார்.
ஈரோடு குருகுலத்தில் கூடியிருந்த தொண்டர்களின் மத்தியில் கொடியை வடிவமைத்துப் பார்க்கும் ஆவல் எழுந்தது. கறுப்பு மை கொண்டு கொடியின் சதுர வடிவம் உருவாக்கப்பட, சட்டென அங்கு சிவப்பு மை கிடைக்காமல் தொண்டர்கள் தடுமாறினர். ஆளுக்கொரு பக்க மாகச் சிவப்பு மை தேடிய போது, குடியரசில் உதவியாளராக இருந்த ஒரு தொண்டர் குண்டூசி யால் தனது கட்டை விரலைக் குத்திக்கொண்டார். ரத்தம் துளிர்த்த விரலை கறுப்பு மையின் மேல் தடவ, உதிரத்தால் உருவானது சிவப்பு வட்டம். அந்தத் தொண்டர் கலைஞர் மு.கருணாநிதி!
திருவாரூரில் முரசொலி எனும் சிற்றேட்டைத் துவக்கி, பெரி யாரின் கொள்கைகளை எழுதி வந்த கருணாநிதி, அப்போது அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு இதழிலும் தொடர்ந்து கதை, கவிதைகளை எழுதி அண்ணாவின் கவனத்தை ஈர்த் தார். தனது இதழில் பணிபுரியும் பொருட்டு, ஈரோட்டுக்கு அண்ணாவால் வரவழைக்கப்பட் டார். பெரியாரின் கைகள் எப்படி அண்ணாவின் தோளில் வீழ்ந்ததோ, அப்படியே அண்ணா வின் கைகளைக் கருணாநிதியின் தோள் தாங்கியது.
திராவிடக் கொள்கை சார்ந்த கவிதைகளாலும், திரைப்பட வசனங்களாலும், அலங்கார மொழிநடையுடன் கூடிய மேடைப் பேச்சாலும் மக்களின் இதயங்களில் தனக்கெனத் தனி இடம் தேடிக்கொண்ட கருணாநிதியின் ஆட்சியில்தான் பெரியாரின் கொள்கைகள் பல சட்டமாக இயற்றப்பட்டன!
-சரித்திரம் தொடரும்
No comments:
Post a Comment