நான் சாதாரணமானவன். என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்றுகூறவில்லை.ஏற்கக்கூடிய கருத்தை உங்கள் அறிவைக்கொண்டுஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளிவிடுங்கள்!
-பெரியார்
18 ஆண்டுகளுக்குப் பின், திராவிட முன்னேற்றக் கழகம் 1967&ல் ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் வெற்றி பெற்றதும், புதிதாகப் பதவி ஏற்கப்போகும் தனது அமைச்சரவையின் முக்கிய சகாக்களுடன் திருச்சிக்குச் சென்று, தன் ஆசானைச் சந்தித்தார் அண்ணா.
அண்ணாவின் வருகை பெரியாருக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. காரணம், முந்தைய இரு தேர்தல்களிலும், பச்சைத் தமிழன் என்ற காரணத்தால், காங்கிரஸ்காரர் என்றும் பாராமல் காமராஜரை முதலமைச்சர் பதவியில் அமரவைக்க முடிவு செய்து, பெரியார் தி.மு.க&வை எதிர்த்துக் கடுமையான பிரசாரம் மேற்கொண்டிருந்தார். ராஜாஜி யின் சுதந்திரா கட்சியோடு தி.மு.க கூட்டு வைத்திருந்ததும்கூட பெரியாரின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.
பெரியாரின் தீவிர ஆதரவினால், 1962 தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவி ஏற்ற காமராஜர், 1967 தேர்தலில் தி.மு.க&விடம் படுதோல்வி அடைந் தார். இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறியிருந்ததற்கு தி.மு.க&வின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம் போன்றவை மிக முக்கியக் காரணங்களாக இருந் தன. தேர்தல் முடிவு காமராஜ ரைப் போலவே பெரியாருக்கும் அதிர்ச்சியூட்டியது. காங்கிரஸின் தோல்வி தனது தோல்வியே என பெரியார் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இந்தத் தர்மசங்கடமான சூழலில், முதல்வராகப் பதவியேற் கும் முன் அண்ணா தன்னைத் தேடி வந்திருக்கும் சேதியைக் கேட்டதும் பெரியாரின் உள்ளம் நெகிழ்ச்சியால் நிலைகுலைந்தது. 'அண்ணா மணமகனைப் போல வந்தார். நான் மணமகளைப் போல வெட்கித் தலைகுனிந்தேன்' எனப் பெருந்தன்மையுடன், தம் சீடரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் பெரியார்.
ஆனால், அண்ணாவுக்குத் தெரியும்... அன்று அவருக்கும் அவரது கழகத்தாருக்கும் கிடைத்த வெற்றியின் மூல வித்தே, திராவிட எழுச்சிக்காகத் தன்னலம் பாராமல், கடந்த 40 ஆண்டு காலமா கப் பெரியார் சிந்திய வியர்வைத் துளிகள்தான் என்பது!
அதன் காரணமாகத்தான், திருச்சியில் நடைபெற்ற பெரியாரின் 89&வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட அண்ணா, ''இரு நூற்றாண்டுகளில் ஏற்பட வேண்டிய சமூகமாற்றத்தை இருபதே ஆண்டுகளில் மாற்றிக்காட்டியவர் நம் அய்யா!'' எனப் புகழ்ந்துரைத்தார்.
ஒரு குருவுக்கும் சீடனுக்குமான உறவு, ஆழமான உணர்ச்சி களால் நிரம்பியது. அந்த உணர்ச்சிக்கு விளக்கம் சொல்வது போல் வந்தது, 1969 பிப்ரவரி 2&ம் தேதி. அண்ணாவின் திடீர் மறைவு! நள்ளிரவில் தகவல் கேள்விப்பட்டதும், தள்ளாத வயதிலும் கைகளால் சுவரை மாறி மாறி அறைந்தபடி பெரியார் அழுத காட்சி, அண்ணாவின் மேல் அவருக்கு இருந்த அன்புக் கான சாட்சி!
அதே போலத்தான் தன்னை ஆக்கியவரும், அரசியல் எதிரியும், ஆருயிர் நண்பருமான ராஜகோபா லாச்சாரியார் 72&ல் இறந்தபோது, அவரது சிதையின் முன் நின்று, உடல் குலுங்க தேம்பித்தேம்பி ஒரு குழந்தையைப் போல அழுது தீர்த்தார் பெரியார்.
மாற்றுக் கருத்துடையோரை அவர் மதிக்கும் பண்பு, பொது வாழ்வில் ஈடுபடுவோர் ஒவ்வொரு வரும் கற்க வேண்டிய பாடம். திரு.வி.க&வுக்காக விபூதி பூசிக்கொண்டபோதும், தன் வீட்டில் தங்க நேர்ந்த சுத்தானந்த பாரதிக் காக அவரது வழக்கப்படி மந்தி ரம் ஓதி பூஜை செய்ய அனும தித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தபோதும், தனது நண்பரான ரசிகமணி டி.கே.சி& யின் 60&ம் கல்யாணத்துக்காக முருகன் கோயிலுக்குள் வந்த போதும்... என, ஒரு தலைசிறந்த பண்பாளருக்கான வரலாற்று உதாரணங்களை நிகழ்த்திக் காட்டியவர் பெரியார்.
பெரியாரின் சிக்கனம் உலகப் பிரசித்தம். அடிப்படையில் அவர் திறமையான வியாபாரியாக இருந்ததால், பணத்தைச் சேர்ப்ப திலும் செலவழிப்பதிலும் தீவிர மானதொரு கவனம் அவரிடம் எப்போதும் இருந்தது. தன்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள, கையெழுத்து வாங்க விரும்புகிற வர்களுக்கு அதற்கென ஒரு தொகை நிர்ணயித்து, கட்சிக்கு நிதி சேர்ப்பார். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இந்த நிபந்தனை இல்லை.
பெரியார் ஒரு சிறந்த எழுத் தாளரும்கூட! தனது சுயசரிதையில் அவர் கையாண்ட நடை தமிழின் எல்லா சிறந்த எழுத்தாளர்களோடு எல்லாம் ஒப்பிடக்கூடிய சிறப்பு வாய்ந்தது.
பெரியாரின் பகுத்தறிவுப் பிரசாரம் என்பது, வெறுமனே சாதிய எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. அறிவியலின்பால் அவருக்கிருந்த ஈர்ப்பும் ஒரு காரணம். 1942& லேயே 'இனி வரும் காலம்' எனும் தலைப்பில், இந்த உலகம் சந்திக்க இருக்கும் அறிவியல் மாற்றங்களை முன்கூட்டியே உலகுக்குத் தெரிவித்த தீர்க்கதரிசி அவர். அறிவியல் உலகம் பிற்பாடு கண்டுபிடித்த சோதனைக்குழாய் கருவுறுதல் முறையை அப்போதே படம் போட்டு விளக்கிக் காட்டி னார் பெரியார். அவரது அறிவின் தீட்சண்யத்தை உணர்ந்த யுனெஸ்கோ நிறுவனம் 1970&ல் 'புதிய உலகின் தொலை நோக் காளர், தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என புகழ்ந்து, விருது அளித்து கௌரவித்தது.
94 வருடங்கள், 3 மாதங்கள், 7 நாட்கள் என இந்தப் பூமியில் பெருவாழ்வு வாழ்ந்த பெரியார், தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட மொத்தம் 10,700 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மொத்தம் 8,20,000 மைல்கள் மக்கள் பணிக்காகப் பயணித்திருக்கிறார். கிட்டத்தட்ட 33 முறை உலகைச் சுற்றி வருவதற்கும், மூன்று முறை பூமியிலிருந்து நிலவுக்குச் சென்றுவருவதற்கும் ஒப்பான தொலைவு இது!
தமிழ்நாட்டில் அவர் கால் படாத மண்ணே இல்லை எனும் அளவுக்கு இடைவிடாத பிரசாரத்தைத் தள்ளாத வயதிலும் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக வெளியில் எங்கு சென்றாலும் மூத்திரச்சட்டியைக் கையில் தாங்கி யபடியே செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டானபோதும், பொதுவாழ்வில் ஒருவன் சொந்த கௌரவங்களைப் பார்க்கக் கூடாது எனும் தனது கூற்றுக்கு ஏற்ப மேடைகளிலேயே மூத்திரச் சட்டியுடன் ஏறி அமர்வார்.
தமிழகத்தின் ஈடு இணையற்ற துருவ நட்சத்திரமாகப் பிரகாசித்து, வாழ்ந்த கடைசிக் கணம் வரை தொண்டு செய்தே பழுத்த பழமான பெரியார், தன் 95&ம் வயதின் இறுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டார். சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் எதிரே நடந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய தீரமிக்க உரையினூடே இரண்டு முறை குடலிறக்க நோயினால் அவரது பேச்சு தடைப்பட்டது. அதையும் மீறி அம்மா, அம்மா என வலியால் முனகியபடியே, தன் இறுதி நிமிடத்தையும் மக்களுக்காக நல்லது சொல்லும் பணியில் வலிந்து தன்னை உட்படுத்திக்கொண்டார். உடல்நலம் கெட, மறுநாள் அவசரமாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
24-12-1973-ல் பெரியார் தன் உடலுக்கு முழுவதுமாக ஓய்வு கொடுத்தார். அவரது உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, ராஜாஜி ஹாலில் வைக்கப் பட்டது. அன்றைய முதல்வரான மு.கருணாநிதி, முன்னாள் முதல் வர் காமராஜர், பின்னாள் முதல் வரான எம்.ஜி.ஆர். போன்றவர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அரசாங்கத்தின் சிறுசுவடுகூடக் கண்டிராத பெரியாருக்கு முழு அரசு மரி யாதையுடன் கூடிய அடக்கத் துக்கு உத்தரவிட்டார் கருணாநிதி.
இன்றும்கூட இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும்தான் சாதிப் பெயரை பின்னால் போட்டுக்கொள்வது அவமானகரமான காரியமாக இருந்து வருகிறது. அந்தப் பெருமைக்கு முழு முதற் காரணம் பெரியார் மட்டுமே!
இன்றைய நவீன உலகில், சாலைகளில் நறுவிசான ஆடைகளுடனும், முகம் நிறைய களிப்புடனும் உற்சாகமாக நடந்து செல்லும் ஒவ்வொரு தமிழனின், தமிழச்சியின் களிப்பூறும் முகங் களுக்குப் பின்னால் அந்தச் சாமான்யரது வியர்வையின் ஈரம் படிந்துகிடப்பதை தமிழ் வானும் மண்ணும் அறியும். இதோ, இந்தக் கடைசி வரியை வசிக்கும் இந்தத் தருணத்திலும் ஏதோ ஒருவிதத்தில் பெரியார் உங்களைத் தொட்டுக்கொண்டு இருப்பதைச் சற்று யோசித்தால் உணர முடியும். ஏனென்றால், 'பெரியார்' & சரித்திரத்தில் ஒரு தொடர் நிகழ்வு; தொடர் செயல். அதில் முற்றுப்புள்ளிகளுக்கே இடமில்லை!
No comments:
Post a Comment