நான் பேச்சாளனுமில்லை, எழுத்தாளனுமில்லை.
உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்கும் கருத்தாளன்!
-பெரியார்
மாநாட்டின் அத்தனை கண்களும் ஈ.வெ.ராமசாமியார் மீதே நிலைகுத்தி நின்றன!
தனது கனவாக இருந்த வகுப்புவாரித் தீர்மானம், சூழ்ச்சியாலும் பகையாலும் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட துரோகம், ராமசாமி யாரின் நாடி நரம்புகள் அனைத்தையும் புடைத்தெழச் செய்தது. மேடையில், மாநாட்டின் தலைவராக வீற்றிருந்த திரு.வி.க, ராமசாமியாரின் திடீர் ஆவேசம் கண்டு திகைத்து நின்றார். மூன்று முறை தனது கைத்தடியால் நிலம் அதிரச் செய்த ராமசாமியார், தனது மஞ்சள் சால்வையை இழுத்துத் தோளில் போட்டபடி திரு.வி.கவைப் பார்த்து, ''முதலியார் அவர்களே! காங்கிரஸால் இனி என்னைப் போன்ற பிராமணர் அல்லாதாருக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. நான் காங்கிரஸைவிட்டு இப்போதே வெளியேறுகிறேன். இனி தமிழ்நாட்டில் சாதியையும், அதைத் தாங்கிப் பிடிக்கும் வர்ணாசிரமதர்மத்தையும், அதனை ஆதரிக்கும் காங்கிரஸையும் ஒழித்துக்கட்டுவதுதான் என் முதல் வேலை!'' எனக் கர்ஜித்தபடி மாநாட்டுப் பந்தலைவிட்டுப் பெருங்கூட்டத்தினர் புடைசூழ விறுவிறுவென வெளியேறினார். புயல் கடந்த பூமி யாக மாநாட்டுப் பந்தல் வெறுமைகொண்டது.
ராமசாமியார் அன்று எடுத்த முடிவு, சாதியம் எனும் மனித குல விரோதியின் தலைக்கு அவர் முதன்முதலாக இறக்கிய பேரிடி! உலக வரைபடத்தில் தமிழர்கள் தங்களை எவற்றோடும் பொருந்தாத தனி இனமாக அடையாளம் காணுமளவுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் முதல் படி!
வரலாற்றில் இதுவரை நடந்த அனைத்து மாற்றங்களுக்கும் புரட்சிகளுக்கும் இரண்டு பேர் அடிப் படைக் காரணங்களாக இருந்து வந்திருக்கின்றனர். ஒருவர் சிந்தனையாளர்; இன்னொருவர் செயல்படுத்துபவர். சொல்லப்போனால் சிந்தனையாளர் பிறந்து எத்தனையோ ஆண்டுகள் கழித்துதான் அதனைச் செயல்படுத்துபவர் பிறப்பார். ரூஸோவுக்கும் பிரெஞ்சுப் புரட்சிக்கும், மார்க்சுக்கும் லெனினுக்கும் இடையில் உள்ள கால வித்தியாசங்கள் அதனை நமக்கு மெய்ப்பிக்கின்றன. ஆனால், வரலாற்றில் வேறெங்கும் இல்லாத அதிசயமாக, ஒரு சிந்த னையாளரே செயல் வீரராகக் களத்தில் இறங்கிப் போராடி வாகை சூடிய கதைகள் அபூர்வத்திலும் அபூர்வம்! அன்று மாநாட்டுப் பந்தலைவிட்டு ராமசாமியார் ஆவேசத்துடன் வெளியேறியது அந்தப் போராட்டத்தின் முதல் பொறி!
ஒரு வேகத்தில் வார்த்தைகளை வீசி வெளியே வந்துவிட்டாரே தவிர, காங்கிரஸ் எனும் பிரமாண்ட விருட்சத்துக்கு எதிரே தான் ஒரு தனி ஆளாக நிற்பதாகவே உணர்ந்தார். தன்னால் வளர்க்கப்பட்ட அதே விருட்சத்தை இப்போது தானே வெட்டி வீழ்த்த வேண்டிய நெருக்கடியும் கட்டாயமும் அவருக்கு. நினைப்பதற்கே மலைப்பாக இருந்த அந்த விருட்சத்தை நான்கே வருடங்களில் அவர் வெட்டி வீழ்த்தி வரலாறு படைத்ததுதான் ராமசாமியாரின் ஈடு இணையற்ற சாதனை! அந்தச் சாதனையை அவருக்கு ஈட்டிக்கொடுத்தது ஒரு கோடரி. அந்தக் கோடரியின் பெயர்... சுயமரியாதை இயக்கம்.
காங்கிரஸைவிட்டு வெளியேறினாலும், காந்தியையும் கதரையும் ராமசாமியாரால் அவரது உள்ளத்திலிருந்து முழுவதுமாகத் தூக்கி வீசியெறிய முடியவில்லை. ஆனாலும், 'முதலில் இந்தச் சாதியை ஒழிக்காமல் தேச விடுதலைக்குப் போராடுவது என்பது, கோழி முட்டைக்கு மயிர் நீக்கும் வேலை' என்பதில் உறுதியாக இருந்தார். மதத்தையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்காமல், சாதிய ஒழிப்பு என்பது ஆகாத காரியம் என்பதையும் அறிந்திருந்தார். மதம், யாரை உயர்ந்த குலத்தவராக அடையாளம் காட்டியதோ, அவர் கள் தொடர்ந்து எல்லா வகைகளிலும் உயர்ந்துகொண்டே இருக்க, மதம் கீழானவர்களாகச் சித்திரித்தவர்களெல்லாம் மேலும் கீழான நிலைக்கே சென்றுகொண்டு இருப்பதுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஆணிவேர் என்பதில் தெளிவாக இருந்தார். இந்த நிலை மாறி, அனைவரும் சாதி எனும் மேலாதிக்கம் இல்லாதவர்களாக, எந்த அதிகாரத்துக்கும் கட்டுப்படாதவர்களாகச் சம நிலையில் வாழ வேண்டுமானால், முதலில் அந்த வரிசையை உருவாக்கிய வர்ணாசிரமதர்மத்தையும் அதற்குக் காரணமான மத நம்பிக்கைகளையும் ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்த அடிமைத்தனத்திலிருந்து மக்கள் முழுமையாக விடுதலை பெற வேண்டுமானால் முதலில் தேவை, அனைத்தையும் ஏன், எதற்கு என காரணகாரியங்களை அலசி ஆராயும் பகுத்தறிவு. அடுத்து, 'நாமும் மனிதன்; மற்றவர்களும் மனிதர்; பின் என்ன காரணத்துக்காக ஒருவரைக் கண்டதும் பயப்பட்டுக் குனிந்து கூழைக் கும்பிடு போட வேண்டும்?' எனத் தனக்குள் கேள்வி கேட்கும் தன்மான உணர்ச்சி. இந்த இரண்டையும் மக்களின் உள்ளத்தில், பேச்சாலும் எழுத்தாலும் ஊட்டினால் போதும்... இந்தச் சாதிய அடுக்கு நிலையில் ஓரளவு மாற்றம் நிகழும். பிராமணரல்லாத இதர சாதியினரும் கல்வியும் அறிவும் பெற்று, அவர்க ளுக்கு ஈடாக வாழ்க்கையில் உயர்ந்த நிலைகளை அடைய முடியும் என நம்பினார். நாளைய சமூகம் புத்தொளியும், அறிவெழுச்சியும், சமநீதியும் கொண்ட புதிய சமூகமாக மலரும் எனப் புறப்பட்டார் ராமசாமியார்.
எழுத்திலும், பேச்சிலுமாக ராமசாமியார் வீறுகொண்டு எழுந்து தமிழகம் முழுக்கச் செய்த பிரசாரங்கள், காங்கிரஸ் கூடாரத்தையே ஆட்டம் காணவைத்தன. ராமசாமியாரின் கூட்டங்களுக்கு மக்கள் அலையெனத் திரண்டுவந்தது, உயர் சாதியினருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. மேடைகளில் அவர் பேசிக்கொண்டு இருக்கும்போது செருப்புகள் பறந்தன. அழுகின முட்டைகள், சாணி உருண்டைகள், கற்கள் பறந்தன. தண்ணீர்ப் பாம்பு விட்டுக் கூட்டத்தைக் கலைத்தனர். இந்த எதிர்ப்புகள் அனைத்தையும் கண்டு கலங்காமல், ராமசாமியார் நெருப்புச் சூறாவளியாக நிமிர்ந்து நின்றார். தன் கருத்துக்களால் மக்களின் முதுகில் சம்மட்டி கொண்டு அடித்து எழுப்பினார். சாதி, சம்பிரதாயம், பெண் அடிமை, தேவதாசி முறை என எதையும் விட்டுவைக்காமல் அனைத்துக்கும் அதிரடியாக வேட்டுவைத்தார்.
ஈரோட்டில் அவர் துவக்கியிருந்த 'குடியரசு' எனும் பத்திரிகை அவரது சுயமரியாதைக் கருத்துக்களை நாடு முழுக்க எடுத்துச் செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டது. விளைவு, 1928ல் எஸ்.முத்தையா முதலியார் போன்றவர்களின் பெரும் முயற்சியால், அப்போதிருந்த ஆங்கிலேயே அரசாங்கம் வகுப்புவாரி உரிமையை நடைமுறைக்குக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நிகழ்வு தொண்டர்களிடையேயும் மக்களிடையேயும் பெரும் உணர்ச்சி அலைகளைத் தோற்றுவிக்க, 1929 பிப்ரவரி மாதத்தில் 18, 19, தேதிகளில் செங்கல்பட்டு ராட்டினங்கிணறு அருகே முதலா வது சுயமரியாதை மாநாடு நடந்தது.
தமிழகம் முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இனி, அனைவரும் தங்களது சாதிப் பட்டங்களைத் துறக்க வேண்டும் என்பது மாநாட்டின் முக்கியத் தீர்மானமாக அனைவராலும் வரவேற்கப்பட்டது. அறிவுரீதியாக இந்தியாவின் இதர மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் பெற்ற முதல் பெருமை மிக்க விடுதலை இது!
மாநாட்டைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க பெரும் எழுச்சி ஏற்பட்டது. ஆர்.கே.சண்முகம், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் போன்ற நீதிக் கட்சித் தலைவர்கள் சுயமரியாதைக் கூட்டங்களில் நாடு முழுக்கக் கலந்துகொண்டு கொள்கைப் பிரசாரம் செய்தனர். பின்னாட்களில் குத்தூசி என அழைக்கப்பட்ட குருசாமி, சாமி சிதம்பரனார், சிங்காரவேலர், ஜீவா, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், பொன்னம்பலானார், கோவை சி.அய்யாமுத்து எனப் பெரும் படையே பிரசாரப் பீரங்கிகளாக சுயமரியாதைக் கருத்துக்களை மக்களிடையே கொண்டுசென்றனர். புரட்சி என்பது வார்த்தையாக இல்லாமல், நாடு முழுக்கத் தொண்டர்கள் பலர் சுயமரியாதைத் திருமணங் களை ராமசாமியாரின் தலைமையில் நடத்தினர். அதுவரை பிராமணர்களால் மட்டுமே தீர்மானிக்கப்பட்டு வந்த தமிழகத்தின் கலை, இலக்கியம், சிந்தனை, வரலாறு, மொழி போன்றவை மறு பரீசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.
தமிழகம் முழுக்க ஏற்பட்ட இந்தத் திடீர் எழுச்சியும் மாறுதல்களும் உலகின் இதர தமிழர்களின் காதுகளில் தேனெனப் பாய்ந்தது. இந்த மாறுதல்களுக்குத் தலைவரான ராமசாமியாரைக் காணவும் அவரது கருத்து மழையில் நனையவும் விரும்பி தங்களது நாடுகளுக்கு வருமாறு அழைத்தனர். 1929 டிசம்பரில் நாகப்பட்டினம் துறைமுகத் திலிருந்து மலேயாவுக் குப் புறப்பட்ட கப்ப லில், ராமசாமியார் தன் மனைவி நாகம்மையாருடன் ஏறினார்.
1930 ஜனவரியில் அவர் தமிழ்நாடு திரும்பியபோது, அவரை வரவேற்க ஆவலுடன் சென்ற தொண்டர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது!
-சரித்திரம் தொடரும்
No comments:
Post a Comment