Friday, May 30, 2008

நாயகன் பெரியார் 8


பொதுவுடைமை என்பதன் தத்துவமே, மனிதன்
கவலையற்று வாழ்வதுதான். சொந்த உடைமை என்பது
கவலை சூழ்ந்த வாழ்வேயாகும்!

-பெரியார்

1922, திருப்பூர் மாநாடு... காங்கிரஸின் சமீபத்திய எழுச்சி காரணமாக கடந்த மாநாடுகளைக் காட்டிலும் இம்முறை கூட்டம் களைகட்டியிருந்தது. மாநாட்டில் வெடிக்கப்போகும் பிரச்னை குறித்து தொண்டர்களிடம் பதற்ற மும் எதிர்பார்ப்பும் கூடியிருந்தது.

ராமசாமியார் வகுப்புவாரி தீர்மானத்தை முன்மொழிந்த போது, கூட்டத்தில் பெரும்பான்மையினராக இருந்த பிராமண சமூகத்தினர் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, கடும் ஆட்சேபக் குரலெழுப்பி, அவரைப் பேசவிடாமல் தடுத்தனர். ராஜாஜியும், 'இம்முறை எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்த மாநாட்டில் பார்த்துக்கொள்ளலாம்' எனக் கைவிரித்துவிட, ராமசாமியாரின் உள்ளத்து உணர்வுகள் கொதிநிலையின் உச்சத்தை அடைந்தன. 'இப்போது கோபப்பட்டு ஏதேனும் முடிவெடுத்தால், தொண்டர்கள் மத்தியில் தேவை இல்லாமல் கலவரம் ஏற்பட்டுவிடும்' என சேலம் விஜயராகவாச்சாரி, திரு.வி.க., வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப் போன்றவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால், அவரது இதயமோ குமுறிக்கொண்டு இருந்தது. அவரது முறை வந்தபோது, மேடையில் ஏறினார்.



எரிமலையிலிருந்து வெடித்துச் சிதறும் நெருப்புத் துண்டங்களாக வார்த்தைகள் தெறித்தன. மாநாட்டுப் பந்தலில் பெரும் சூறாவளி நுழைந்தது போல், அவரது உணர்ச்சி மிக்க உரை கூட்டத்தை அதிரவைத்தது. 'இந்தச் சாதி ஒழிய வேணுமானால், முதலில் சாதியத்தை இறுக்கப் பற்றிக்கொண்டு இருக்கும் வருணாசிரம தர்மத்தின் இரண்டு முக்கிய தூண்களான ராமாயணம், மனுதர்ம சாஸ்திரம் இரண்டையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் உருப்படும்!' என ஆவேசத்துடன் தன் எதிர்ப்பை எதிரிகளுக்கு அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தினார்.

காங்கிரஸைவிட்டு அப்போதே வெளியேற அவரது மனம் துடித்தாலும், மகாத்மா காந்தியும் அவரது கொள்கைகளும் அவரைக் கட்டிப்போட்டன. இனி, தேச விடுதலையைக் காட்டிலும் சாதிய விடுதலையில்தான் தீவிரமாகக் கவனம் செலுத்தவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டார் அதற்கேற்றாற்போல், மதுரையில் சுற்றுப் பயணம் செய்துகொண்டு இருந்தபோது ஒரு கடிதம் வந்தது. அடுத்த நொடியே தன் வயிற்றுவலி யைக்கூடப் பொருட்படுத்தாமல், திட்டமிட்டு இருந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் உதறித் தள்ளிவிட்டுக் கேரளாவுக்குப் புறப்பட்டார்.



வைக்கம்... கேரளத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அழகிய நகரம். ஆனால், அங்கிருந்த உயர்சாதி மனிதர்களின் மனங்களிலோ அழுக்கு நிறைந்திருந்தது. அவர்கள், குறிப்பிட்ட கோயில் வீதிகளில் நடந்து செல்ல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்கள் போராட் டத்தில் இறங்க, சமஸ்தானத்துக் காவலர்கள் அவர்களைச் சிறையில் அடைத்தனர். இந்தச் சமயத்தில்தான் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் போன்றோர் ராமசாமியாருக்குத் தகவல் கொடுக்க, வரலாறு வைக்கம் நகரத்தை நோக்கி மையம்கொண்டது. ராமசாமியாருடன் அவரின் மனைவி நாகம்மை, தங்கை கண்ணம்மாள், கோவை அய்யா முத்து, மாயூரம் ராமநாதன் ஆகியோரும் போராட்டத்தில் குதித்தனர்.

திருவிதாங்கூர் ராஜாவுக்கு பெரும் தலைவலி! ஈரோட்டுக்குச் சென்றபோதெல்லாம் தனக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கும் ராமசாமியை உபசரிக்க அரண்மனையிலிருந்து ஆட்களை அனுப்பினார். ''நான் விருந்தாளி இல்லை, போராளி! என் மேல் மதிப்பிருந்தால் தடையை விலக் கித் தீண்டாமைக்கு முடிவு கட்டுங்கள். இல்லாவிட்டால், என் னைச் சிறையில் அடையுங்கள்'' என்றார் ராமசாமியார். காவலர்கள் அவரைச் சிறைப்பிடித்தனர். ஆறு மாதத் தண்டனையாக திருவனந் தபுரம் அருவிகுத்திச் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், மன்னர் நினைத்தது போல் போராட்டம் ஓயவில்லை. நாகம்மையும் கண்ணம்மாளும் திருவிதாங்கூர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். மக்களின் எழுச்சி, மன்னரை அசைத்தது.

இந்தச் சூழலில் வேடிக்கையான ஒரு சம்பவமும் நிகழ்ந்தது. அருவி குத்திச் சிறையில் சில நம்பூதிரி களால் 'சத்ரு சம்ஹார யாகம்' என்ற யாகம் நடத்தப்பட்டது. அவர்களது எதிரியான பெரியா ரைத் தீர்த்துக்கட்டுவதுதான் யாகத்தின் பிரதான நோக்கம். ஆனால், மறுநாள் சிறைக்கு வந்த செய்தியோ தலைகீழாக இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் திருநாடு அடைந்துவிட்டார் என்பதுதான் அந்தச் செய்தி! மன்னர் மரணம்அடைந்ததை மரியாதையாக அப்படிக் குறிப்பிடுவது வழக்கம். இந்தச் செய்தி, நம்பூதிரிகளின் வயிற்றைப் புரட்டியது. மன்னரின் மரணம் காரணமாக, சிறையில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட, ராமசாமியாரும் சகாக்களும் கூட விடுதலையாகினர். ராணி ஒரு வழியாகத் தடையை விலக்கிக் கொள்ள முடிவெடுத்தார். எனினும், ராமசாமியாருக்குக் கடிதம் எழுதப் பிடிக்காமல் காந்திக்கு எழுதினார். காந்தி நேரடியாகப் புறப்பட்டு வைக்கம் வந்து ராணியுடனும் ராமசாமியாருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். இறுதியில் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றது.

ஆனால், வட நாட்டுப் பத்திரிகை ஒன்றில் இந்த வைக்கம் போராட்டம் குறித்து மகாத்மா காந்தி எழுதிய எந்தக் குறிப்பிலும் ராமசாமியாரின் பெயர் இடம்பெறவில்லை. தன் இதயத் தில் வைத்து வணங்கிய தலைவ ரான காந்தியா இப்படிச் செய்தது என்று ராமசாமியாருக்கு வேதனை. ஆனால், திரு.வி.கவின் வழியாக வரலாறு அவருக்கு 'வைக்கம் வீரர்' என்ற மகத்தான பெயரைச் சூட்டி மகிழ்ந்தது. .

காந்தியின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் வைத்த நம்பிக்கைகளை இழக்க ராமசாமியார் தயாராக இல்லை. இருந்தாலும் அன்று காங்கிரஸில் பெரும் தலைவர்களாகக் கருதப்பட்ட பலரும் தீண்டாமையைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தனர். அதில் ஒரு சம்பவம் ராமசாமியாரின் நெஞ்சில் நெருஞ்சியாகத் துளைத்தது. 1923ல் ராமசாமியார், காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். திண்டுக் கல்லில் பிரசாரத்துக்காகச் சென்ற போது ஒரு பிராமணத் தலைவரின் வீட்டில் உணவுக்கு ஏற்பாடாகிஇருந்தது. தொண்டர்களுக்கு வெளியில் பந்தி நடக்க, தலைவ ரானபடியால் ராமசாமியாருக்குத் தனியாக நடையில் இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. மதிய உணவுக்கும் அதே வீடு, அதே இடம். காலையில் அவர் சாப்பிட்ட அந்த இலை எடுக்கப்படாமல் அங்கேயே கிடக்க, புதிய இலை போட்டு மீண்டும் உணவு பரிமாறப்பட்டது. 'சேர்த்து எடுத்துவிடுகிறோம்' எனச் சமாளித்தார்கள். இரவும் அதே வீடு, அதே இடம். இப் போதும் மதியம் சாப் பிட்ட இலை எடுக்கப் படாமல் அங்கேயே ஈ மொய்த்தபடி சுருங்கிக்கிடக்க, ராமசாமியாரின் மனம் அவமானத்தால் துவண்டது. உச்சகட்டமாக வந்தது சேரன் மாதேவி குருகுலப் பிரச்னை.

அக்காலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் நிதியில் இந்தியா முழுக்க குருகுலங்கள் நடத்தப்பட்டு வந்தன. தீண்டாமைக்கு எதிராக ஊர் உலகத்துக்கு எல்லாம் பிரசாரம் செய்துவந்த காங்கிரஸ் நடத்தி வந்த குருகுலங்களிலேயே, பிராமணர்களுக்கெனத் தனியாக உணவு, குடிநீர் போன்றவை கடைப் பிடிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்று சேரன்மாதேவி குருகுலம். அதை நடத்தி வந்தவர் வ.வே.சு. ஐயர்.

குருகுலத்தில் பிராமணர்களுக்கென வைக்கப்பட்ட குடிநீர்ப் பானையில் ஒரு சிறுவன் நீர் அருந்த, இதர பிராமணச் சிறுவர்களும் ஊழியர்களும் அவனை அடித்துவிட்டனர். அடிபட்ட சிறுவன், பின்னாளில் தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஓமந் தூர் ராமசாமி ரெட்டியாரின் மகன். ஓமந்தூரார் இந்தப் பிரச் னையை ராமசாமியாரிடத்தில் கொண்டுசெல்ல, அதுநாள் வரை தன் உள்ளத்துள் ஊறிக்கொண்டு இருந்த பிரச்னைகளை எல்லாம் ஒன்று திரட்டி, இதற்கு முடிவு கட்டியே தீருவதெனக் களத்தில் இறங்கினார்.



திரு.வி.க., டாக்டர் நாயுடு, எஸ்.ராமநாதன், தண்டபாணிப் பிள்ளை என அனைவரும் ஒன்று திரண்டு, காந்தியிடம் பிரச்னை யைக் கொண்டுசென்றனர். குரு குலங்களில் சம பந்தி உணவுதான் தரப்பட வேண்டும் என உத்தரவிட் டார் காந்தி. ஆனால், வ.வே.சு. ஐயர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதற்கு இதர பிராமணர்களி டமிருந்தும் ஆதரவு பெருக, தான் மிகவும் நம்பிய பல பிராமணர்களின் சுயரூபம் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டதை அறிந்து ராமசாமியார் அதிர்ச்சியடைந் தார். இத்தனை நாள் இந்தக் கட்சிக்காக தான் உழைத்த உழைப் பெல்லாம் வீண்தானோ எனும் ஐயம் அவர் உள்ளத்தை ஊட றுத்தது.

இதனிடையேதான், 1925ல் தமிழர் வாழ்வின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் மாநாடு வந்தது. வகுப்புவாரி தீர்மானத்தை முன்வைத்து ராமசாமியார் பேசத் துவங்க, அதற்குப் பொதுக்குழுவில் பிராமணர்கள் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்தனர். வகுப்புவாரித் தீர்மானம் கொண்டுவந்தால் ஒட்டுமொத்தமாக காங்கிரஸை விட்டு வெளியேறுவோம் எனும் கடும் அஸ்திரத்தை அவர்கள் கையில் வைத்திருந்தனர். இதனால் பயந்த திரு.வி.க., ராமசாமியாரின் கோரிக்கையை நிராகரித்தார்.

சக மனிதருக்கு எதிராகச் சாதியின் பேராலும் மதத்தின் பேராலும் காலம்காலமாக நடந்து வரும் அட்டூழியங்களுக்கு முடிவுரை எழுத இதுவே சரியான தருணம் என ராமசாமியார் ஒரு சிங்கம் போல் எழுந்தார். மேடையில் இருந்த தலைவரைப் பார்த்து மூன்று முறை தன் கைத் தடியால் தரையை ஓங்கி ஆவேசத்துடன் தட்டினார். தமிழகமே அதிர்ந்தது. தமிழர்களின் அடிவானத்தி லிருந்து சூரியன் எழுந்தது!.....

அஜயன் பாலா...

No comments: