Friday, July 28, 2006

உணர்ச்சிகள்

தமிழ் வலைபூக்களில் எழுத ஆரம்பித்து மூன்று மாதம் ஆகிறது. சில நல்லவையும் சில அல்லவையும் எழுதியாயிற்று. இப்போது எழுதிய பதிவுகள் அத்தனையும் முற்றாக திரும்பி ஒரு பார்வை பார்த்தால் சில பதிவுகள் எழுதியிருக்கவே வேண்டாமே எனத் தோன்றுகிறது.

பதிவுகள் என்பவை நான் எனது எண்ணங்களாக ஒரு விஷயத்தில் எடுக்கும் நிலைப்பாடு அல்லது அவ்விஷயம் மீதான எனது விமர்சனம் இது இரண்டும் ஒருசேர அதாவது நடுநிலை பதிவுகளாக வெளிக்காட்டிக் கொள்ள என எழுதப் படும் சில பதிவுகள். சிலவற்றில் எனது உணர்வுகள் அப்படியே வெளிப்பட்டிருக்கின்றன. சிலவற்றில் நான் கொஞ்சம் அதை அப்படியே எழுதாமல் மாற்றி யிருக்கிறேன்.

உணர்சிகரமாக எழுதும் சில பதிவுகள் படிப்பதற்கும் அதன் மீதான விமர்சனங்களை வைப்பதற்கும் படிப்பவர்களை சக பதிவர்களை யோசிக்க வைக்கும். இப்படி சில பதிவுகள்.

மிகச் சூடான ஒருவிவாதத்தில் அதே வேகம் மற்றும் உணர்ச்சிகரமான பதிவுகள் எழுதப் படும் பொழுது இரண்டு சம்பவங்கள் நடக்கின்றன. ஒன்று எனது உணர்வுக்கு தூபம் காட்டி பின்னிடப் படுபவை, இரண்டு எனது எழுத்தில் மற்றவர்கள் கொள்ளும் அவ நம்பிக்கை. அதாவது உணர்ச்சி கரமான வேளைகளில் எழுதப்படும் பதிவுகள் படிப்பவர்களை கோபமூட்டவும் அதன் மீதான விமர்சனத்தை வைக்க தயக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. இரண்டாவது.

நாம் எழுதும் பொருளுக்கு ஒத்த கருத்தை கொண்டவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.மகிழ்ச்சி அடைபவர்கள் எழுதிஅனுப்பும் பின்னூட்டங்கள் போதை தருவதாக அமைகிற வேளையில் ஒரு குரூரமான தர்க்க சிந்தனை மனதில் எழுவதை தவிர்க்க முடியாமல் போகிறது. அதே வேளை எனது கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் கேட்கும் கேள்விகளும் அதன் நியாயமான வாதங்களும் சரியெனப் பட்டாலும் அதை முற்றாக ஏற்றுக்கொள்ளவியலாத கட்டாயத்துக்கு உள்ளாகிறது.

அதாவது எதிராளி சொல்லும் விஷயம் சரியாக ஆனால் எனது கருத்துக்கு எதிராக இருக்கும் வேளையில் அதை முற்றாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அப்படி ஏற்றுக் கொண்டாலும் அதற்கு பின்னூட்டம் இடுபவர்களின் பெருந்தன்மை சொல்லவியலாது " என்ன தலை அவரு வந்து சொன்னதும் ஜகா வாங்கிட்ட?" இல்லாவிட்டால் தனது பதிவுகளில் "அவரை பின்னங்கால் பிடரியில் பட விரட்டி அடித்தேன்"என்கிற ரீதியில் எழுதுவது.

இவ்விரண்டுமே சரியானதாக எனக்கு தோன்றவில்லை. இவ்விரண்டும் ஒரு பொய்யான கருத்தை சம்மந்தப் பட்ட பதிவர் மீது உண்டாக்கும் வல்லமை கொண்டவை. " யாருப்பா எழுதுனது ஓ இவரா சரி படிக்க வேண்டாம் பின்னால போயி சும்மா எதுனா எதிர்கேள்வி கேட்டு வருவோம். " எனும் சுயத்தில் மறைந்தே கிடக்கும் ஒரு கற்பனை கருத்தை உண்டாக்கும். இதனால் சில நல்ல பதிவுகள் எழுதப்படும் போது கவனத்தில் வராமல் போக வாய்ப்புண்டு.

இன்னொன்று வலைப்பூ நண்பர்களுக்கிடையே புதைந்து கிடக்கும் சுயத்தை நிரூபிக்கும் தன்மை. அதாவது. நீங்கள் சொல்லும் விஷயத்தில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் அதை நீ சொல்ல அனுமதியும் இல்லை. அதை விடக் கொடுமையானது பதிவர்களின் எழுத்துக்கள் மேல் வைக்கப் படும் நேரடித் தாக்குதல். "பின்னூட்டம் பெருவதற்க்காகத் தானே நீ இப்படி எழுதினாய்? என்றோ அல்லது நீயெல்லாம் நேற்று முளைத்த காளான் என்றோ பின்னூட்டம் இடுவது"

இதுபோல் பல கருத்துக்கள் தெரிவிக்கப் படும் ஒரு பதிவரிடம் இருந்து அதன் பின் இரண்டு வகைகளில் நாம் பதிவுகளை எதிபார்க்கலாம்.

1. நகைச்சுவை பதிவுகள். உள்ளூர இருக்கும் ஒரு நையாண்டியும் கிண்டலும் பொதுவாக ஒரு சார்பானவை

2. மிகச்சூடான உணர்சிக் கொந்தளிப்பில் எழுதப்படும் கருத்து வன்முறைப் பதிவுகள்.

இவ்விரண்டு தவிற வேறு பதிவுகளை எழுத அவ்வலைஞர் அதன்பின் முயல்வாரா என்பது சந்தேகமே. இது போன்ற நேரங்களில் எழுதுவது மிகக் கடினமானதும் கூட.

இதுபற்றி எனக்கு இரண்டு கேள்விகள் உண்டு எனக்கு.

1.புதிதாக எழுத வருபவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இப்படியென்றால் அதன் பின் அவர் எப்படி நன்றாக எழுத தன்னை தயார் செய்வார்?

2.வலையுலகில் அனுபவம் மிக்க ஒருவர் எழுதுவதால் மட்டும் அவரின் எழுத்துக்கள் எல்லாமே சரியானதாக இருக்குமா.

அதேபோல பின்னூட்டம் பெறுவதை ஏதோ ஒரு பாவச்செயல்/அல்லது புண்ணியச் செயல் எனக் கருதும் அளவுக்கு எழுத்தரின் நேர்மை கிண்டலிடப் படுவது எழுதுபவரை எந்த வகையில் பாதிக்கும்?

இங்கே வலைப்பக்கத்தில் எழுதும் பெரும்பாலானவர்கள் "இக் கருத்தின் மீதான எனது விமர்சனம் இது என்பதை விட உன் மீதான என் விமர்சனம் இது" என்ற தொனியில் எழுதுவது அல்லது.பின்னூட்டம் இடுவது.

இது ஒரு இழிவையும் அதை எழுதியவர் மேல் ஒரு வெறுப்பையும் உண்டாக்குகிறது. இதுபோன்ற பின்னூட்டங்கள் இடப் படாமலேயே போகலாம். பொதுவாக எழுதும் எல்லோருமே மற்றவர்கள் படிக்கவேண்டும் அவற்றின் விமர்சனங்கள் என்னவென்று அறியவேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்போம்.

நான் எழுதுவது பின்னூட்டம் பெறுவதற்க்காகவென்றால் நீங்களும் அதற்க்காவே எழுதுகிறார்கள். இலாவிடின் நமது கருத்துக்களை வலையில் எழுதவேண்டிய அவசியம் என்ன? ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி நாம் மட்டுமே படித்துக் கொள்ளலாம்.

மேலும் பதிவர்கள் பெரும்பாலும் நமது கருத்துக்கள் ஒலிக்கவேண்டுமென்றால் பிரபலமாகவேண்டும் என நினைப்பதில் தவறெதுவுமில்லை. ஆனால் இது பிரபலமாக இருப்பவர்களுக்கு ஏன் எரிச்சலை தருகிறது என்பதில் வியப்பேதும் இல்லை.

தான் சரியென நினைக்கும் ஒரு கருத்தை தனது வலையில் பதிவிடும் போது அதில் பிடிவாதத்துடன் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்க்கான சரியான மாற்றுக் கருத்துக்கள் வரும் வேளையில் அதையும் ஏறுக்கொள்ளும் ஒரு நிலையை நாம் சக வலைப்பதிவாளர்களுக்கு உருவாக்கிடவில்லை.

அப்படி மாறுபட்ட கருத்துக்கள் சரியாக இருக்கும் போது அதை ஏற்றுக்கொள்ளும் வலைஞர் பயந்தாங்கொள்ளி எனச் சித்தரிக்கப் படுகிறார். சக பதிவர்கள் சொல்வது சரியெனப் பட்டபோது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இன்னும் நம்மிடையே வரவில்லை அல்லது அதற்கு நாம் தயாராக இல்லை.

கவனிக்கப் படவேண்டும் என்பதற்க்காகவே இங்கே பெரும்பாலும் எழுதுகிறோம் என்பதில் எனக்கு பெருத்த நம்பிக்கை உண்டு. அதே வேளை கவனிப்படைந்தவர்களின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதுதான் உண்மை.

இதற்கு இரண்டு வழிகளில் தீர்வுகாணலாம்.

1.உணர்சிவயப்படாமல் எழுதுவது.

2.அப்படி எழுதப்படும் பதிவுகள் ஏற்படுத்தும் விளைவுகளை சந்திக்க தயாராக இருப்பது.


5 comments:

குழலி / Kuzhali said...

என்னாச்சிங்க?

Unknown said...

சுய பரிசோதணையும் அதன் விமர்சனமும் சில வெளிப்பாடுகளும் :)
நன்றி குழலி

Anonymous said...

இதுபோல பதிவெழுதும் அனைவரும் - ஒருமுறை திரும்பி பார்த்துக்கொண்டால் நல்லது...

நல்ல முயற்ச்சி மகேந்திரன்..

Unknown said...

நன்றி அனானி சில நாட்களாகவே திரும்பிப் பார்க்கவேண்டும் எனத் தோன்றியது இப்போது அந்த நேரம் இருப்பதாக உணர்கிறேன்

Anonymous said...

சுய பரிசோதனை செய்வதெல்லாம் வேஸ்ட். அடிக்கு அடியும் அவமானத்துக்கு அவமானமும் இருந்தால்தான் வலைப்பூவில் படிப்பார்கள்
கருத்துக்கள் சரியே பாராட்டுக்கள்.