Thursday, June 21, 2007

கற்பழிப்பு - பெண்கள் மீது நடத்தப்படும் ஆபாச தாக்குதல்.



மேலிருந்து
கீழாக
என்
யோனி வரை
கீறி
போர்க்களம்
நோக்கி
பயணிக்கிறது
உன் பார்வை
போர்வாள்

ஒரு பெண் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டால் அதை எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் 'கற்பழிப்பு' என்கிறார்கள். ஆணாதிக்க சிந்தனையில் விளைந்த வக்ரமே இந்த 'கற்பு' என்னும் சொல். ஒரு பெண் பாலியல் வன்முறையில் பாதிக்கப்படுவதை கற்பழிப்பு என்று சொல்ல முடியுமா ? சொல்கிறார்களே.

பத்து வயது பெண் குழந்தை உடலுறவே என்றால் என்னவென்று தெரியாத சிறுமி வன்புணர்வுக்குள்ளானாலும் இதே கேடுகெட்ட வார்த்தையை வைத்து 'சிறுமி கற்பழிக்கப்பட்டாள்' என்கிறார்கள். திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் பாலியல் வன்முறைக்கு பாதிக்கப்பட்டால் 'கற்பழிப்பு' என்கிறார்கள். ஒருவேளை அது ஒன்று இருந்ததாக வைத்துக் கொண்டாலும் அந்த கற்பை கணவன் அழித்துவிட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, இல்லாத கற்பை எவனோ அழித்ததாக அதே கற்பழிப்பு வார்த்தையை அங்கும் சொல்கிறார்கள். கள்ள உறவைக்கூட தகாத உறவு என்று தானே வகைப்படுத்த முடியும்.

கற்பில் சிறந்தவள் கண்ணகியா ? மாதவியா ? என்ற பட்டி மன்றங்களில் மாதவி பற்றி பேசுவது பலருக்கும் வியப்பாக இருக்கும். இதன் மூலம் இவர்கள் கண்ணகியை புகழ்கிறார்களா ? மாதவியை புகழ்கிறார்களா ? என்று பார்த்தால் ஒரு புடலங்காயும் இல்லை. இவர்கள் சொல்லவருவது ஒரு பெண் தாசியாக இருந்தாலும் அவள் ஒருவனையே நினைத்திருந்தால் அவள் கற்புகரசி என்பதுதான்.

உடல் உறுப்புக்களில் கற்பு என்ற உறுப்பு எங்கே இருக்கிறது. யோனியின் பெயர் கற்பா ? அது பாலியல் வன்முறைக்கு பாதிக்கப்பட்டால் அதுதான் கற்பழிப்பா ?

ஆண் என்ன ? பெண் என்ன ? அனைவரும் ஒழுக்க சீலர்களாக இருப்பது அவசியம். ஒழுக்க சீலர்களாக பெண்கள் இருந்தும் அவர்கள் பாலியல் வண்முறையால் பாதிக்கப்பட்டல் அதை எப்படி 'கற்பழிப்பு' என்று சொல்வது ? கற்பழிப்பு என்ற சொல் தமிழ் அகராதியில் இருந்து அகற்றப்பட வேண்டும். கற்பு என்ற சொல் இருக்கும் வரை பெண்களின் நிலையை உயர்வடைய வைக்க முடியாது.


கற்பழிக்கப்பட்டவள் என்று காட்டபடும் பெண் தீக்குளிப்பதாக திரைப்படங்களில் காட்டுவது அபத்தத்தின் உச்சம். அணைவரும் வாருங்காலத்தில் அத்தகைய காட்சிகளை கண்டிக்க வேண்டும். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மேலும் அதுகுறித்து விழிப்புணர்வற்றவர்களை அவ்வாறே செய்ய தூண்டும். ஏனென்றால் விபத்தாக நடந்திருந்தாலும் அந்த பெண் வாழ அருகதை அற்றவள் என்ற கொடூரமான தவறான தகவலை அது தருகிறது.


விவாதிப்போம் இன்னும்....

2 comments:

Anonymous said...

tell me how to use tamil fonts-
senthil, dubai

லக்ஷ்மி said...

நல்ல கருத்துக்கள் மகேந்திரன். நீங்கள் சொல்வது போல சினிமாக்களில் இந்த பாலியல் வன்முறைக்கு தரப்படும் தீர்வு இருக்கிறதே, குமட்ட வைக்குமளவு அருவெறுப்பு. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்தவனுக்கே திருமணம் செய்து வைத்துவிடுவது - அதாவது ஒரு பெண்ணை அவளது கணவன் மட்டுமே தொடலாம். வேறு எவனாவது தொட்டால், அவனையே அவளது கணவனாக்கி தங்களது சமன்பாட்டை காப்பாற்றிக்கொள்வது. திருமணம் ஆன பெண்ணை வேறு ஒருவன் தொட்டால்?? அவளை அனாதையாக்கி விரட்டி பின் விபச்சாரியாக்கி விடுவது. விதிவிலக்காக சில படங்களும் இருக்கத்தான் செய்கின்றன. தேவயானி - லிவிங்ஸ்டன் நடித்த ஒரு படம். படம் பெயர் நினைவில்லை. லிவிங்ஸ்டன் பஞ்சாயத்து செய்யும் பொறுப்பிலிருப்பார். அவரும் வடிவேலுவுமாக சேர்ந்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவளை துன்புறுத்தியவனுக்கே திருமணம் செய்து வைத்துவிடச் சொல்லுவார்கள், வழக்கம் போல. அங்கே வருவார் பட்டணம் சென்று படித்து வந்த தேவயானி. இந்த தீர்ப்பை கேட்டு காறி உமிழ்ந்து விட்டு, ஒரு புது தீர்வு சொல்லுவார் - அந்த பெண்ணுக்கு ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டிருந்த பையனை அழைத்து அவளை ஒரு வெறி நாய் கடித்திருந்தால் எப்படி எடுத்துக்கொள்வாயோ அது போலவே இதையும் எடுத்துக்கொண்டு அவளை மணந்து கொள் என்று சொல்லுவார். பின் அவளை பலாத்காரம் செய்தவனை போலீஸில் ஒப்படைத்து தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லுவார். இத்தனை வருடங்களில் நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் ஒரு ஆக்கபூர்வமான விதத்தில் இந்த பிரச்சனை அலசப்பட்டதென்றால் அது இந்த ஒரு படத்தில்தான். மற்ற எல்லாக் குப்பைகளும் அந்த பெண் கெட்டுப்போய் விட்டதாகத்தான் புலம்பும் - பெண் என்ன உணவுப் பொருளா, கெட்டுப்போக? அபத்தம்தான் போங்க.