Tuesday, August 05, 2014

ஆப் கி பார்..... அரசாங்கமா இல்லை ஆர்.எஸ்.எஸ் சாங்கமா?

மோடியின் அரசாங்கம் பதவியேற்ற இத்தனை நாட்களில் குறைந்த பட்சம் மக்கள் நலத் திட்டங்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட ஒரு திட்டத்தை வகுக்கும் அளவுக்கு வக்கில்லாமல் மோடி தர்பாரில் காற்றாடிக் கிடக்கிறது.

சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் அளவுக்கு மோடியை, ஆஞ்சநேயர் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்களும் பாஜக தலைவர்களும் வாயைத் திறந்தாலே முத்துக்களை உதிர்க்கும் மோடிகளும் கூட மூடிக்கொண்டு கிடப்பது காலத்தின் கோலம் மட்டுமல்ல அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?

தேர்தலுக்கு முதல் நாள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதே தெரிந்து விட்டது மோடியின் அரசாங்கம் எப்படி இருக்கப் போகிறது என்பது. இத்தனை நாட்களில் மோடியின் குஜராத் மாடல் ஃபேக் அரசாங்கம் கிழித்ததெல்லாம் காங்கிரசின் கொள்கைகளை இவர்கள் காப்பி அடித்தது மட்டுமல்லாமல் அதை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், ஈழ விவகாரம் முதல் கட்சத் தீவு வரை, சுவிஸ் வங்கியின் கருப்புப் பணம் முதல் ரயில்வே கட்டணம் வரை, பெட்ரோல் முதல் மரபணு மாற்றப் பயிர் வரை என்று ஏகபோகமாய் விளையாடிக் கொண்டே ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.

அன்னிய முதலீட்டில் அவர்கள் படிப்படியாக உள்ளே விட்டார்கள் என்றால் பாஜக ஒட்டு மொத்தமாக கதவைத் திறந்து விட்டிருக்கிறது. ராணுவம் முதல் இன்ஸூரன்ஸ் வரை, ரயில்வே தொடங்கி, கக்கூஸ் கழுவுவது வரை, ரீடெய்ல் மார்கெட்டிங்கில் 100 சதவீதத்துக்கு பொங்கிய பாஜக இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறது?

இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை அமீரக திர்ஹம் 1= ரூ14+ ல் இருந்தது இப்போது அது 16+க்கு எகிறி இருக்கிறது என்ன ஒரு முன்னேற்றம்?

கம்யூனிஸ்டுகள் பேசுவதற்கும் வழியில்லை காங்கிரஸ் பேசவே பேசாது.

அரசாங்கம் நஷ்டப் பட்டால் மக்களைத்தானே பாதிக்கும் என்ற பாஜக சொல்வதில் ஒரு கார்ப்பொரேட் தனம் இருக்கிறது. கார்பொரேட் முதலாளிகளின் அரசாங்கமாகத்தானே இது வரை மோடியின் அரசு இருக்கிறது?, அதானிகளும் அம்பானிகளும் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதை மோடி காட்டிக் கொண்டிருப்பது மட்டும் தான் உண்மை.. இது கார்பொரேட்களின் அரசாங்கம் என்பதை வாரா வாரம் உயர்த்தப் படும் பெட்ரோல் டீசல் விலையேற்றம் காட்ட வில்லையா?

வெளியுறவுக் கொள்கைகளில் அகன்ற 56 " மார்பு கொண்டவரின் கொள்கைகளைத்தான் பார்த்தோமே. இலங்கை விவகாரத்தில் மோடி வந்தால் எல்லாம் சுபிட்சம் ஆகும் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை முட்டாளாக்கி பாஜகவின் வாக்கு வங்கி கூடிப் போனதாக பேசிய தரகர் தமிழருவி மணியன் 45 ஆண்டுகால (?) அரசியல் வாழ்வில் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகள் கூட தெரியாத அளவுக்கு மதி மயங்கிப் போனது உச்ச கட்ட காமெடி.

மக்களாட்சி என்பது அதிகாரம் ஒருவரிடம் குவிந்து போகாமல் பரவலாக்கப் பட வேண்டுமே தவிர இப்படி ஒட்டு மொத்தமாக எல்லா மட்டத்திலும் ஒரு கட்சியே ஆட்சியில் இருப்பதனால் ஏற்படப் போகும் விளைவுகளை இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

அதற்கான அறிகுறிகள் தான் ஹிந்தியை அலுவல் மொழியாக்க முயற்சி சமஸ்கிருத வாரம் என்று ஆர் எஸ் எஸ் ன் அகண்ட பாரதம் என்ற கொள்கையை சத்தமே இல்லாமல் நிறைவேற்ற தயார் ஆகிறது மோடியின் அரசு. அதை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் படிப்படியாகச் செய்யும் படேலுக்கு சிலை வைக்க பல நூறு கோடிகளை ஒதுக்கும் அரசாங்கம் கழிவரை வசதிகளுக்கும் கல்விக்கும் ஒதுக்கும் தொகை என்பது மிகச் சொற்பம்.

 காங்கிரஸ், அதிமுக. இரண்டுமே மக்களுக்காக இனி நாடாளு மன்றங்களில் பேசப் போவது இல்லை. அதிமுகவுக்கு நாடாளு மன்றத்தில் நரேந்திர மோடியை காய்ச்சி எடுப்பதை விட அம்மா புராணம் பாடினாலே போதும். அதைத்தான் அவர்கள் செய்யப் போகிறார்கள்

காங்கிரசுக்கு உள்ளுக்குள் மகிழ்வாகக் கூட இருக்கும்! அது பாஜக செய்யப் போகும் தவறுகளை சுட்டிக் காட்டாமல் காத்திருந்து அடுத்த தேர்தலின் போது கூடாரம் கலகலக்கும் நேரத்தில் உள்ளே புகுந்து கொள்ளலாம் என்று காத்திருக்கிறது அதற்குள் இருக்கிற குட்டி குட்டி மாநில கட்சிகளை மறுபடியும் ஓரணியில் திரட்ட வேண்டிய அவசியமும் தேவையும் அதற்கு இருப்பதால் மக்கள் பிரச்சினைகளை பேசும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இல்லை.

மக்கள் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான் ஓட்டுப் போடும் முன்பாவது ஒரு நிடம் சிந்தித்து பார்க்க வேண்டும் இல்லையென்றால் இப்போதும் இன்னும் வரப் போகும் 4 ஆண்டுகளிலும் அனுபவிக்கப் போவதை அனுபவிக்க தயாராய் இருக்க வேண்டும்.

#ஆப் கி பார்.......ஆர்.எஸ்.எஸ் சர்கார்

No comments: