Tuesday, August 12, 2014

அம்மான்னா சும்மா இல்லடா!!!

எங்கள் இதயமே,
குருதியில் ஓடும் ரத்தமே,
நடுவில் இருக்கும் சென்டரே,
ஓரத்தில் இருக்கும் சைடே,
நதியில் ஓடும் ஆறே,
கடலில் இருக்கும் ஆழியே,
காற்றில் மிதக்கும் வாயுவே,
மூச்சில் இருக்கும் சுவாசமே,
கண்ணில் தெரியும் பார்வையே
இப்படி எல்லாவற்றிலும்
இரண்டிரண்டாக இருக்கும்
இரட்டை இலையின்
இயற்கை காட்சியே.
குதிரைக்கு ரெக்கை முளைக்க
வைத்த கோமகள் ஆட்சியே
எங்கள் தங்கத் தலைவியே
தன்னிகரற்ற முதல்வியே
மாண்புமிகு இதய தெய்வமே
எங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும்
பயமே....17 ஆண்டுகளாய் வாய்தா
வாங்கி சாதனை படைக்கப் போகும்
எங்கள் பெண் கஜினியே.

ஃப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பஆ ஆ ஆ மூச்சு விட்டுக்கொள்கிறேன். ஒரு முறை எழுதுவதற்கே நாக்கு தள்ளி விடுகிறது ஆனால் சலிக்காமல் மலைக்காமல் சட்டமன்றத்தில் எல்லா எதிர் கட்சிகளையும் கவனமாக கலாட்டா என்ற பெயரில் வெளியேற்றிவிட்டு ஆளுங்கட்சி நடத்தும் காமெடி தர்பார் மேலே நீங்கள் படித்த கவிதையை (?) விட மரண மொக்கையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

110 விதி என்பதே இன்னொரு நாள் அவகாசம் இல்லாத அப்போதே அவையில் சொல்லிவிட வேண்டிய அறிவிப்புகளை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்ற என்றே ஆட்சியாளார்களுக்கு ஒரு அவசரத் தேவைகளுக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது.

அம்மையார் ஆட்சியில் 110 விதி என்பதை எப்படி எல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு நகைச்சுவையாக ஒரு உதாரணம் சொல்ல ஆசைதான் ஆனால் அம்மையாரின் 100க்கும் மேற்பட்ட 110 அறிவிப்புகள் எல்லாம் நகைச்சுவைதானே? ஒரு அறிவிப்பு, இன்று முதலமைச்சர் ஆணைப்படி

//Statement No.036 of the  Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 on new schemes for the development of Courts - 11.8.2014:

"ஜனநாயகத்தின் தூண்களுள் முக்கியத் தூணாக விளங்கிக் கொண்டிருக்கின்ற நீதித் துறை நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதிமன்றங்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், நீதிபதிகளுக்கு தேவையான குடியிருப்பு வசதிகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தித் தருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் புதிய நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்காக, 225 கோடியே 19 லட்சம் ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.//


மனசாட்சி இருப்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு மாநில முதல்வர் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாக தன் மேல் நடக்கும் வழக்குகளை எப்படியெல்லாம் இழுத்து வளைத்து ஒடித்து வாய்தா மேல் வாய்தாக்களை வாங்கி இன்று வரை சட்டத்தை தன் கைப்பாவையாக்கி வைத்திருக்கிறார்.? அவர் ஆணைப்படி ஒதுக்கப் பட்ட தொகை குறித்தோ நீதி பாதிகளுக்கு ( எழுத்துப் பிழை இல்லை) வழங்கப் படும் சலுகைகள் குறித்தோ எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை.

ஆனால் சட்டத்தை தன் போக்கில் வளைத்து ஒரு மாமாங்கமாக நீதியில் இருந்து தப்பித்துக் கொண்டே இருக்கும் ஒரு முதல்வர் இருக்கும் மாநிலத்தில் ஏழைகள் நீதி என்பது எட்டாக் கனியாக அல்லவா இருக்கிறது?

மனல் கொள்ளையை தடுக்கப் போகும் காவலர், கொல்லப் படுகிறார். அரசு அறிவிப்பு இப்படி வருகிறது கடமையை செய்ய டிராக்டர் வண்டியில் ஏறிய காவலர் தவறி விழுந்து வண்டி ஏறியதில் அதே இடத்தில் மரணமடைந்தார். காவலரின் குடும்பத்துக்கு சில லட்சங்கள் உதவி.

சில காவலர்களால் சில பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப் படுகிறார்கள், அரசு அறிவிக்கிறது, சில லட்சங்கள் உதவி, இங்கே உயிருக்கும் மானத்துக்கும் நீதிக்கும் நீதிபாதிகளுக்குமே சில லட்சங்கள்தானே மதிப்பு?
இல்லையென்றால் ஒரு வங்கிக் கொள்ளையில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கைது செய்வதற்குப் பதிலாக இரவோடு இரவாக போட்டுத் தள்ளி புகழ் பெற்ற அமையார் காவல் துறையை கைய்யில் வைத்திருப்பது வெறும் வேடிக்கை விளையாட்டுக்காகவா என்ன? இந்த அழகில் எல்லா கொள்ளையர்களும் ஆந்திர மாநிலத்துக்கு தப்பி ஓடிவிட்டார்கள் என்று அறிக்கை விட்டிருப்பாரா? கொள்ளையர்களை கோட்டை விட்டதைத்தான் எத்தனை நாசூக்காக சொல்கிறார் பாருங்கள்.

ஆனால் ஆட்சியில் அமர்ந்தது முதல் ஆயிரத்தை நெருங்கும் கொலைகள், சில ஆயிரங்களை நெருங்கும் பாலியல் வன்முறைகள் பல்லாயிரங்களை தொட்ட பகல் கொள்ளைகள், என்று சட்டமும் ஒழுங்கும் சந்தியல்லவா சிரிக்கிறது?, யாரைப் பார்த்து வாக்களித்து சொந்த செலவில் வாய்க்கு அரிசியும் போட்டுக் கொண்ட அப்பாவி வாக்காளர்களான நம்மைப் பார்த்து.

1200த்தி சொச்சம் பள்ளிக் கூடங்களை மாணவர் எண்ணிக்கை குறைவால் அம்மையார் மூடப் போவதாக ஒரு செய்தி வந்தது. நமக்கு அதெல்லாம் எதற்க்கு அம்மா திரையரங்குகள் திறந்தால் அதில் எஜிஆர் படம் பார்த்தால் போதுமல்லவா? மக்கள் பயனுற அம்மா மருந்தகங்கள். ஆரம்பித்த நாளில் கேள்விப் பட்டதோடு சரி இப்போதும் அதில் மருந்துகள் கிடைத்தால் ஒரு நல்ல தலைவலி மாத்திரை வாங்கி போட்டுக் கொண்டு உறங்கி விடுங்கள்.

அரசன் எவ்வழி மக்களும் அவ்வழி என்று முட்டாள் தனமாக எவனோ சொல்லி வைத்தான் டாஸ்மாக்கை தெருவுக்குத் தெரு திறந்து வைக்கும் அரசாங்கம் ஆண்டுக்கு 20000 கோடிகளுக்கும் மேல் லாபமாக ஈட்டுகிரதாம் கேட்டால் நலத்திட்ட உதவிகளை இதன் மூலம் தான் நிறைவேற்றுகிறதாம். இதைவிட ஒரு நல்ல தொழில் இருக்கிறது , ஆணுறைகளை மட்டும் இலவசமாகக் கொடுத்து ஆட்களை வெளிநாட்டில் இருந்து தருவித்து விட்டால் போதும் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்.

அதில் கிடைக்கும் லாபத்தில் அம்மா எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டுக் கழகம் என்று ஒன்றை 110 விதியின் கீழ் ஆரம்பித்து விட்டால் போகிறது.

எத்தனையோ திட்டங்கள் அறிவிப்போடு கிடக்கின்றன பள்ளித் திட்டம் எதுவும் இல்லை , சட்டம் ஒழுங்கு சரியில்லை, ரேஷன் அரிசிகள் அளவை குறைக்கிறார்கள், பஸ் கட்டணம் பால் விலை உயர்கிறது. பள்ளிக் கூடங்கள் மூடப் படுகின்றன லாப் டாப் கிடைக்கிறது மின் வெட்டு உயர்கிறது பேனும் மிக்ஸியும் பரண் ,மேல் பூணைக் குட்டிகளோடு உறங்கிக் கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் தமிழன் ஒரு க்வாட்டரும் அம்மா இட்லி கடையும் இருந்தால் போதுமென்று முழு போதையில் வெயிலுக்கு இதமாக மரத்தடியில் மல்லாந்து கிடக்கிறான்.

பின் குறிப்பு : இனையக் குற்றங்களை குண்டர்கள் சட்டத்தின் கீழ் கொண்டுவருகிறார்களாம். இப்போது தெரிகிறதா? ஆரம்பத்திலேயே ஏன் அபிராமி அந்தாதி பாடினேன் என்று?

No comments: