Tuesday, January 13, 2015

மாதொருபாகனுக்கு முன் மஹாபாரதத்தை கொளுத்துவோம்.!

பெருமாள் முருகன்  நான்காண்டுகளுக்கு முன்னால் எழுதி காலச் சுவடு பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட மாதொருபாகன் நாவலைக் கொளுத்தியதில் ஆரம்பித்த சர்ச்சை இன்று பெருமாள் முருகனின் வாயாலேயே இனி நான் எழுத மாட்டேன் என்று சொல்லவைத்து இந்து சனாதனம் காக்கும் கோழைகள் தங்கள் கோர முகத்தை காண்பித்திருக்கிறார்கள். இந்த கட்டுரை பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலைப் பற்றியதும் இல்லை.

படைப்பை அதன் தளத்தில் இருந்து உணராமல் அதில் இருக்கும் வார்த்தைகளை பிடித்து தொங்கிக்கொண்டே கலைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் பழமைவாதிகள் இந்து மதத்தில் மட்டும் இல்லை என்பது எத்தனையோ முறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.

தங்கள் கடவுள்களை மத நம்பிக்கைகளை கொச்சைப் படுத்துவதாகக் கூறி கிருஸ்துவர்கள் டாவின்ஸி கோடு திரைப்படத்தையும், முஸ்லிம்கள் விஸ்வரூபம் படத்தையும் தடைசெய்தது எல்லாம் மறந்து போகக் கூடியவை இல்லை.  புனைவுகளின் வழியே கதை சொல்லுதல் என்பது மனிதனின் கலாச்சார மரபுகளில் ஊறிப்போன ஒன்று.  கீதை, மகாபாரதம் ராமாயணம் என்று எழுதப் பட்ட எல்லாவற்றிலும் இவர்கள் இன்று எதிர்ப்பு தெரிவிக்கும் மாதொருபாகனை விடவும் ஆபாசம் நிறைந்த , பிறன் மனைவி கலத்தல், முறையற்ற உறவுகள், பல தார மணம் என்று இந்தியப் பழமைவாதிகள் கொண்டாடிக் கொன்டிருக்கும் பல படைப்புக்கள் இன்று மதங்களின் வேதங்களாக ஏற்றுக்கொண்டவர்கள்தான் நாம்.

மனுதர்மத்தை ஏற்றுக் கொண்டு அதன்படிதான் காலம் காலமாய் ஆட்சியும் அதிகாரமும் ஆளுக்கொரு நீதி, குலத்துக்கொரு நீதி என்று நடக்கும் இந்த நாட்டில் கருத்துரிமையை எதிர்பார்ப்பதெல்லாம் நமது முட்டாள்தனம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. மகாபாரத பாஞ்சாலி முதல் ராமாயணத்து தசரதன் வரை புனைவுகள் எல்லாம் ஆபாசம்தானே?  இவர்கள் ஆபாசம், கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கக் கூடியவை என்றால் முதலில் மஹாபாரதத்தையும் ராமாயணத்தையும் அல்லவா கொளுத்தியிருக்கவேண்டும். எனக்கு ஆபாசமாகத் தெரியும் புத்தகம் அவர்களுக்கு புனித நூலாகத் தெரிவதில் தான் இருக்கிறது சூட்சுமம்,

கொஞ்சம் கொஞ்சமாக மனிதன் தன் சகிப்புத் தன்மையை இழந்துவருவதன் வெளிப்பாடுகள்தான் புத்தகங்களை, நாடகங்களை, கலையை, தன் கவைக்கு உதவாத கலாச்சார கோட்பாடுகளைக் கொண்டு எதிர்ப்பதும், தடைகோருவதும் என்பவை எல்லாம் நமக்கு வெளிப்படுத்தும் செய்திகள். இலக்கியம் முதல் ஈழம் வரை இன்று எதை எழுதினாலும் ஒரு கும்பல் தங்களின் கலாச்சாரக் கேடயங்களை தூக்கிக் கொண்டு சண்டைக்கு வந்து விடுகிறார்கள். யாருக்குத்தான் இல்லை கலாச்சாரம்?



ஒவ்வொரு மனிதனும் தன் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் பேசுவதற்கும், எழுதுவதற்கும் அடிப்படை மனித உரிமை என்று நம் அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் நமக்கு நாமே கொண்டாடிக் கொள்கிறோம்.  ஆம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது ஆனால் யாருக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அது ஆட்சியில், அதிகாரத்தில், மக்கள் பலத்தில் ஆதிக்கம் உள்ளவர்களுக்கே ஆதரவாக இருக்கிறது என்பது உலகம் எங்கும் நடைபெறுகிற ஒன்று.

பழமைவாதிகள் இப்படி காலம் காலமாய் கொலைமிரட்டல், வியாபார மிரட்டல், கருத்துச் சுதந்திர அச்சுறுத்தல் என தங்களை ஆதிக்கசக்திகளாக்கிக் கொண்டே போகையில் இவற்றை எல்லாம் கண்டு முகம் சுளிக்க வேண்டிய முற்போக்காளர்கள், பத்திரிகையாளர்களில் பலர், திராவிட இயக்கங்கள் வெற்று அறிக்கைகளை மட்டும் கொடுத்துவிட்டு நமக்கென்ன வேலை முடிந்தது என்று முகம் திருப்பிக் கொண்டிருப்பது சமூகத்துக்கும் , பின் வரும் புது படைப்பாளிகளுக்கும், முற்போக்கு எழுத்தாளர்களுக்கும் நல்லதல்ல. யார் கண்டது பிற் காலங்களில் வரப்போகும் முற்போக்கு படைப்பாளிகள் பிற்போக்குத் தனங்களுக்கு ஆதரவாகக் கூட எழுதித் தள்ளலாம்.

அரசியல் அமைப்பைக் காக்கவேண்டிய அரசாங்கமே இதில் எல்லாம் தலையிட வேண்டும் என்றாலும் ஆளும் அரசாங்கத்தின் சில அங்கத்தினர்களே இத்தனை சிக்கல்களையும், படைப்பாளிகளுக்கு எதிரான கருத்தையும் உருவாக்குகிற ஆட்களாகவும் இருக்கிறார்கள்.

பாஜக எம்பிக்கள் இந்தியாவின் எம்பிக்கள் என்ற நிலையெல்லாம் தாண்டி இந்து எம்பிக்கள் என்று இந்துப் பெண்கள், 4,குழந்தைகள், 5 குழந்தைகள் என்று பெற்றுக் கொள்ளுங்கள் கோமியத்தை பினாயிலுக்கு பதிலாக பயன்படுத்துங்கள், சமஸ்கிருதத்தை தேவ பாஷை ஆக்குங்கள் என்று தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு குழந்தைகள் போதும் என்று கருத்தடை செய்துகொண்ட கணவன் மனைவிக்கு  3 வதாக குழந்தை பிறந்தால் சந்தேகப்பட மாட்டானா என்று கேட்கிறார் அப்பாவி நண்பர் ஒருவர். இதை விட பயங்கரமாக ஒரு பதில் சொன்னேன் "முதலில் மோடியை பொண்டாட்டியோடு இருந்து வாழச் சொல்லுங்கள் பின்னர் குழந்தை குட்டியெல்லாம் பற்றி யோசிக்கலாம்".  என் கருத்துக்கான விளக்கம் என்னிடம் கேட்கலாம், இல்லை எதிர்த்து எழுதலாம் ஆனால் இதெல்லாம் நீ சொல்லக் கூடாது ஊரில் இருக்கக் கூடாது இனி சாப்பிடுவதைத் தவிற வேறெதற்கும் வாயே திறக்கக்கூடாது என்பது அரசியல் சட்டம் நமக்குத் தந்திருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

பாலியல் பலாத்காரக் கொலைகள், முறை தவறிய உறவுகளால் நடைபெறும் கொலைகள், என்பதெல்லாம் என்னவோ நம் கலாச்சாரத்திலேயே ஊறிப்போனவை போல தினசரி செய்திகள் வெளியாகும் நாட்டில்தான் புத்தகத்தில் எழுதப் படும் புனைவுகளுக்காக போராட்டம் நடக்கிறது. பாரிஸில் பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப் பட்ட கொலைகளை கண்டிக்கும் மக்கள்தான் பெருமாள் சல்மான் ருஷ்டி, தாஸ்லிமா நஸ் ரீன், பெருமாள் முருகன், எழுதியதையும் அவற்றை தடைசெய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுப்பதும் உச்சகட்ட நகை முரண்.

பாலியல் கொலைகளுக்காக கடற்கரையோரம் ஒன்றாகக் கூடி மெழுகுவர்த்திகளைக் கொளுத்தி பலியான உயிருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் . ஆனால் பாலியல் குற்றங்களுக்கு எதிராக இதுவரை எந்த ஒரு அமைப்பும், இயக்கமும் மக்கள் விழிப்புணர்வை உண்டாக்கும் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை, அப்படி எடுப்பவர்கள் கூட அரங்கச் செயல்பாடுகள் கட்டுரைகள் என்பவற்றோடு முடித்துக் கொள்கிறோம்.

பழமைவாதிகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை  நிறைய இருக்கிறன. வீதிக்கு இறங்கிப் போராடி மிரட்டல் விடுத்து இல்லை ஏதாவது செய்தாவாது மாற்றுக் கருத்தாளார்களை அடக்கும் நாட்டில், மாற்றுக் கருத்துக்களை தொடர்ந்து எழுதியும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் வளர்க்கும் விதமாக படைப்புக்களை தொடர்ந்து எழுதியும் வெளியிடுவதையும் தவிற வேறு வழியில்லை. இல்லையென்றால் ஊர் பெயரை, தெருப்பெயரை, ஆட்கள் பெயரையெல்லாம்,

" அந்த ஊரில் அந்த தெருவில், அவனும் அவளும் அவர்களுக்கு அவன் அவள் என்று ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள், அவர்களுக்கு பக்கத்துவீட்டில் அவன் இருந்தான் அவனுக்கு ஒரு அவள் காதலியாய் இருந்தாள் " 

என்று படிக்கவே முடியாத கதைகளை எழுதி சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

எழுத்தும் பேச்சும் நமது உரிமைகள்!





4 comments:

ப.கந்தசாமி said...

கருத்துகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் இவைகளை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம்?

புனைவு : கற்பனை

புணைவு = எந்த மொழி? என்ன பொருள்?

Anonymous said...

//" அந்த ஊரில் அந்த தெருவில், அவனும் அவளும் அவர்களுக்கு அவன் அவள் என்று ஆணும் பெண்ணுமாய் இரண்டு குழந்தைகள், அவர்களுக்கு பக்கத்துவீட்டில் அவன் இருந்தான் அவனுக்கு ஒரு அவள் காதலியாய் இருந்தாள் " //
ஏன் இதற்கு வருத்தப் படுறீங்க? உங்க ஊர் பேர், உங்க தெரு பேர், உங்க அப்பா அம்மா பேர் உங்க பேர் போட்டு கதை எழுதுங்க, எல்லாரும் படிக்கிறோம், யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க. என்ன உங்க அப்பா அப்பா அம்மா செருப்பால அடிப்பாங்க, அவ்வளவு தான்.

Unknown said...

நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே! மாற்றிவிட்டேன்

Unknown said...

அனானியாக வந்து பின்னூட்டம் இடும் நபருக்கு ஏதும் பெயரோ இல்லை வேறெதுவுமோ இல்லை என்பதால் இப்படி கதை எழுதினால் அது நம்மை குறிக்குமே என்ற கோபம் போலும்!