Sunday, February 01, 2015

ஊற்றிக் கொடுக்கிற அரசாங்கம்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு பள்ளி மாணவன் மது  போதையில் மயங்கிக் கிடந்ததை காரணம் காட்டி அவனை பள்ளியில் இருந்தே விலக்கி இருக்கிறது பள்ளி நிர்வாகம். குடித்து போதையில் கிடந்த மாணவனுக்கு தண்டனை கொடுக்கும் சமூகம் ஊற்றிக் கொடுப்பதை, குடிப்பதை ஊக்குவித்து பண்டிகை நாட்களில் இலக்கு வைத்து சாராயம் விற்பதை ஒரு சமூகக் கடமையாகவே செய்து வரும் அரசாங்கங்களை என்ன செய்யப் போகிறது?.



முன்பும் அரசாங்கம் கள்ளுக்கடைகள் சாராயக் கடைகள் என்று நடத்தத்தான் செய்தது ஆனால் அது இப்போதிருப்பது போல தெருவுக்கு மூன்றாகவோ இல்லை எளிதில் சிறுவர்களால் எட்டப்படும் தூரத்திலோ இல்லை. நான் முதன் முதலாய் மது அதுவும் கிங்ஃபிஷர் பியர் அருந்தியது என் 19ம் வயதில். 1997 சென்னையில் கல்லூரி காலத்தில். இப்போதுபோல அப்போதும் மது கிடைக்கத்தான் செய்தது ஆனால் வளசரவாக்கத்தில் இருந்த நாங்கள் வடபழனி அல்லது சாலிகிராமம் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்கு முன்னால் இருக்கும் கடைக்குப் போனால்தான் கிடைக்கும். இதற்கு மலைத்தே அதை பல நாட்கள் தவிர்த்து வந்திருக்கிறோம். இப்போது நிலை அப்படியில்லை.

முன்பெல்லாம் சிறு நகரங்களில் மட்டுமே இருந்த ஒயின் ஷாப்புகள் டாஸ்மாக்கின் வருகைக்குப் பின்னால் பட்டி தொட்டியெங்கும் படையெடுத்து ஒரு தலைமுறை இளைஞர்களின் வாழ்வையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. என்னதான் குடிப்பதும் கும்மாளம் போடுவதும் தனிமனித சுதந்திரம் என்றாலும் எந்த வயதில் அதை அனுமதிப்பது என்ற ஒரு பெருங் கடமை அரசாங்கத்துக்கு உண்டு, சமூகத்துக்கும் உண்டு . கடந்த பத்தாண்டுகளில் அரசின் முக்கால் வாசி வருமானம் சாராயத்தில் இருந்தே வருகிறது. இலவசத் திட்டங்களை கொடுத்து ஒரு பக்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டே அரசாங்கம் இன்னொரு பக்கம் பல்லாயிரக் கணக்கான கோடிகளை நம் பாக்கெட்டில் இருந்து உருவிக்கொண்டிருக்கிறது.

குடியை ஊக்குவிக்கும் அரசாங்கம் மதுவிலக்குத் துறை என்ற ஒன்றை என்னவோ கள்ளச் சாராய சாவுகளை தடுக்கவென்றே உருவாக்கப்பட்ட ஒரு துறையாக மாற்றி வைத்திருக்கிறது. சிறார்கள் மத்தியில் குடியின் கேட்டை விளக்கும் எந்த செயல்பாடும் அரசாங்கம் செய்யவில்லை, செய்ய விருப்பமில்லை. பாட்டில் மேலும் கடையின் முகப்பிலும் "குடிப்பழக்கம் உடல் நலத்துக்குக் கேடு" என்று எழுதி வைப்பதோடு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. அரசு மதுக் கடைகள் இல்லாவிட்டால் கள்ளச் சாராய சாவுகள் அதிகரிக்கும் என்று அக்கரையோடு விபரம் சொல்லும் அரசாங்கம் கள்ளச் சாராயத்தால் இறந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையை விட நாள்தோறும் அரசாங்கத்தின் நல்ல சாராயத்தால் நடக்கும் சாவுகளை மூடி மறைக்கிறது.

போதைப் பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள் என்பதை நம் கண்முன்னே ஒரு சமூகம் மிக மோசமாக வளர்த்து வார்த்தெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து போகிறது அரசாங்கம். பத்தாவது தேர்வில் வெற்றி பெற்றதற்காக , தோல்வி அடைந்ததற்காக என்றெல்லாம் கும்பல் பார்ட்டிகள் நடத்துவது என்பது வெகு சாதாரணமாகப் போயிருக்கிறது இப்போது. 18 வயதுக்கும் மேல் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் வயதை கண்டிப்போடு கடை பிடிக்கும் நாம் தன் வாழ்கையின் பாதையை தேர்வுசெய்யும் படிப்பை இழக்கச் செய்யும் மதுவை எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் படி வைத்திருக்கிறது.  18 வயதுக்கு மேலா என்று சான்றிதழ் கேட்டு விற்பனை செய்ய முடியாதுதான் ஆனால் விற்பனையாளருக்கு ஆளைப் பார்த்தாலே வயதைக் கண்டுகொள்ளும் பக்குவம் இல்லாமலா போகும்?

மதுக்கடைகளை முறைப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை. பொன் முட்டையிடும் வாத்துதானே அது?. கண்டிக்கப் பட வேண்டியது அரசாங்கத்தை மட்டும் அல்ல இந்த சமூகத்தையும்தான். கூட்டம் சேர்க்க குவாட்டரும் கோழிபிரியாணியும் கிடைத்தால் போதும் என்று வண்டியேறிப் போய் கட்சிகளிடம் தங்களை அடகு வைப்பதில் ஆகட்டும் ஓட்டுக்கு பணம் என்று தங்கள் உரிமைகளை அடகு வைப்பதாகட்டும் நாம் தானே நம்பர் ஒன்?.

ஐந்தாம் வகுப்புக்கு மேலே மாணவர்களுக்கு மதுவின் தீமை குறித்தும் சமூகத்தில் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்தும் அப்படி ஒருவன் விரும்பும் பட்சத்தில் அவனின் 18 வயதுக்கும் மேல் அளவாக அதை அருந்துவது குறித்தும் பாடம் நடத்தலாம், அரசு சாரா தொண்டு நிறுவனங்களை விட சாராயக் கடைகளை நடத்தும் அரசுக்கே இதில் முழுப் பொறுப்பும் உண்டு. ஆனால் பரிதாபம் வாத்தியார்களே மாணவர்களை குவார்ட்டர் வாங்க அனுப்பிக் கொண்டிருக்கும் பள்ளிக் கூடங்கள் இருக்கும் மாநிலத்தில் எதுவுமே சாத்தியமில்லை.

கள்ளச்சாராய சாவுகளை விட அதிகமான மரணங்கள் போதையின் விளைவால் ஏற்படுகின்றன என்பது எவ்வளவு உண்மை?.  குடிக்கப் பணம் கொடுக்காத தாய், மகன், மகள், கணவன், என்று நாள் தோறும் நடக்கும் கொலைகள் மட்டுமே பல நூறுகள், இது மட்டுமில்லாமல் போதையில் அடித்துக்கொண்டு சாகிற ஆட்கள்தான் எத்தனை?  போதைக்கு அடிமையாய் உடல் நலம் பாதிக்கப் பட்டு நிகழ்கிற சாவுகள் கணக்கில் அடங்காதவை . சாராயத்தை அரசாங்கம் முறைப் படுத்தாதவரை இதெல்லாமே நடக்கும்.

இளம் சிறுவர்கள் போதைக்கு அடிமையாவதென்பது சமூகத்தால் மட்டுமோ இல்லை அரசாங்கத்தால் மட்டுமோ இல்லை, குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் அப்பன், அம்மாவிடம் குடித்துவிட்டு சண்டை பிடிக்கும் மகன், தந்தையிடம் குடித்துவிட்டு தகராறு செய்யும் மகன் என்று குடும்பத்துக்குள்ளேயேதான் எத்தனை குடிகாரர்கள்?  1997க்கு முன்னர் என் குடும்பத்தில் சாராயம் கள்ளு என்ற எந்த போதையின் வாசனை கூட அறிந்தவர்கள் இல்லை. என் தாத்தா, அப்பா உட்பட, நான் அவ்வப்போது கொண்டாட்ட மன நிலைகளில் மட்டும் அளவாக அல்லது யாருக்கும் தொந்தரவு இல்லாமல்.

நான் குடிக்கிறேன் என்பது என் வீட்டில் அப்பா,அம்மா,மனைவிக்கு மட்டும் தெரியும் ஆனால் ஒரு நாளும் அவர்கள் முன் நான் குடித்துவிட்டு நின்றதில்லை ஆனால் இப்போது சிறுவர்கள் அப்பனுக்கு வாங்கிக் கொடுப்பதும், அப்பன் ஆம்லேட் போட்டுக் கொடுப்பதும் சர்வ சாதாரணமாய் ஆகியிருக்கிறது. மகனுக்கும் மகளுக்கும் முன்னால் குடித்துவிட்டு போவதற்கும் பேசுவதற்கும் வெட்கப் பட்ட காலம் போயே போய் விட்டது போலும்.

டாஸ்மாக் விற்பனையில் சக்கை போடு போடும் தமிழக அரசாங்கமே தொழில் துறை வளர்ச்சி முடங்கிப் போய் இரண்டு லட்சம் கோடி கடனில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இது எதுவும் தெரியாமல் நாமும் தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறோம். இளம் சிறார்களின் மதுப் பழக்கத்தை காரணம் காட்டி அவனை பள்ளியில் இருந்து விலக்கும் பள்ளிக் கூடம் என்பது சமூகக் கேடு ஒரு இளம் குற்றவாளியைத்தான் அது உருவாக்க முடியும்!. மாறாக அவனுக்கான மது பற்றிய புரிதல்களை ஏற்படுத்தி அவனுக்கான கல்வியை சரிவரக் கொடுப்பதே நல்ல பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் அழகு.  ஊருக்கு ஊர் பள்ளிக் கூடங்களில் வாத்தியார் வருகிறாரா இல்லை பள்ளிக் கூடம் நடைபெறுகிறதா என்பதைக் கவனிக்கத் தவறும் அரசாங்கம் டாஸ்மாக்கில் மட்டும் விற்பனை சரிந்தால் உடனடி நடவடிக்கை எடுப்பதென்பது வெட்கக் கேடு.

சாராயக் கடைகளை மூடுவதென்பது சாத்தியமில்லாத ஒன்று என்கிற அளவுக்கு மது அடிமைகளை உண்டாக்கி வைத்திருக்கிறோம் நாம், குடிக்கட்டும் அவன் அவன் சம்பாத்தியத்தில் அவன் அவன் சுய முடிவெடுக்கும் வயதில் குடிக்கட்டும் யாருக்கும் தொந்தரவில்லாத குடியை.
கல்யாணத்துக்கும், காதலுக்கும் வயது வேண்டும், சாதி, மதம் வேண்டும் என்கிற ஆட்கள் எல்லாம் ஒன்று கூடம் இடம் டாஸ்மாக்தான் அங்கேதான் சாதிச் சண்டைகள் இல்லை. அதற்காக ருசியாக இருக்கிறதே என்று விஷத்தையா குடிக்க முடியும்?

மதுவை, குடியை முறைப்படுத்துங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் அரசுகளே இந்த சமூகத்துக்கு குறைந்தபட்சம் ஏதேனும் நல்லது செய்ய விரும்பினால். மாணவர்களிடையே விழிப்புணர்வைத் தொடங்குங்கள், எதிர்காலச் சமூகத்தையே குடியில் ஆழ்த்தி கொலை செய்துவிட்டு நீங்கள் யாரைத்தான் ஆளப் போகிறீர்கள்?

குடிக்கிற எல்லா அப்பன்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் நீங்கள் குடிப்பதை குறைந்தபட்சம் உங்கள் குழந்தைகளுக்குத் தெரியாத அளவிலாவது பார்த்துக் கொள்ளுங்கள்.




No comments: