Sunday, February 01, 2015

உமாசங்கர். IAS or ISIS ?

அரசுப் பதவியில் இருப்பவர்கள் மத மாற்றங்களில் ஈடுபடுவது என்பது இன்றோ நேற்றோ தொடங்கியது இல்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்துவரும் ஒரு சமூக அயோக்கியத்தனம். இதில் கட்டாய மத மாற்றம், தானே விரும்பி ஏற்றுக் கொண்ட மத மாற்றம் இல்லை வேறென்ன பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைத்துக் கொள்வோம்.

ஈரானில் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமியர்களின் கட்டாய மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ஸிக்களின் வெளியேற்றத்தில் இருந்து இன்று ISIS இன் மத்திய கிழக்கில் தாங்கள் வென்ற இடங்களில் தொடரும் மத மாற்றம் வரை தொடர்ந்த அயோக்கியத் தனமான வரலாறு.  சைவர்களால் கழுவில் ஏற்றப்பட்ட சமனர்கள் தொட்டு இந்துக்கள் அல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்ற பாஜக/ஆர்.எஸ்.எஸ்/பெருந்தலைகளின் அரைகூவல் என்று  இன்றும் தொடர்கிறது அந்த அவலம்.

மதத்தின் பெயரால் மனிதம் இழப்பவர்கள் மத்தியில் கல்விக்கொடுக்கிறோம் என்று வணிகம் செய்யவந்த கிருஸ்துவம் ஆண்ட சமூகத்தில் இருந்து அடிமைப் பட்டவர்கள் என்றும் தாழ்த்தப் பட்டவர்கள் என்றும் மீட்கவந்த மேய்ப்பர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் செய்த மத மாற்றம் இன்று வேர்விட்டு ஒரு குறிப்பிட்ட வெற்றியும் பெற்றிருக்கிறது.

கல்வியும் பதவியும் மட்டுமே ஒரு மனிதனின் மத விருப்பு வெறுப்புகளையோ இல்லை அவனின் மதம் குறித்த முட்டாள் தனங்களையோ தெளிவுபடுத்துவதில்லை என்பதற்கு அரசியல்வாதிகள் முதற்கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை ஏகப் பட்ட உதாரணங்கள் கிடைக்கின்றன.

காஞ்சி சங்க்கராச்சாரியாரை ஆட்சிக்கு வந்ததும் பதவிக்கு வந்ததும் பார்க்காத ஆட்களே இல்லை அது ஜெயலலிதாவோ அப்துல் கலாமோ இல்லை டி.என் ஷேசனோ. அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியாது. பதவியில் இல்லாத போது அவர்கள் பரதேசிக் கோலத்தோடு பரமனை தரிசிக்கப் போனாலும் இல்லை நிர்வாண கோலம் கொண்டு சன்யாசம் போனாலும் நமக்கு அது குறித்த கவலை இல்லை.ஆனால் மக்களுக்கான சேவை செய்யப் போகிறோம் என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டும், மக்களாட்சியின் பெயரால் பதவியை ஏற்றுக் கொண்டும் செயல் படும் ஆட்கள் மதத்தின் பின்னால் போவதென்பது பைத்தியக்காரத்தனம் இல்லையா?


பாஜக ஆட்சியில் இந்துத்துவாக்கள் ஆடுகிற ஆட்டத்தை கண்டிக்கும் நாமே இந்த இஸ்லாமியத்தின் பெயரால், கிருஸ்துவத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை மக்களிடையே பரப்பும் ஆட்களின் முகத்திரையையும் கிழிக்கவேண்டி இருக்கிறது. உமாசங்கர் விவகாரமும் அப்படியான ஒன்றே. தந்தி தொலைக்காட்சியில் பேட்டியின் போது உமா சங்கரின் பேச்சு உளரல்களின் உச்சம் விட்டால் சாத்தானே அப்பால் போ என்று ரங்கராஜ் பாண்டே என்ற பாஜக அடி வருடியை அடித்து துரத்தி விடுவாரோ என்று பயந்து போகிற அளவு.

ஏன் உமா சங்கரை மட்டும் கண்டிக்க வேண்டும்? அரசாங்க அலுவலகங்களில் இருக்கும் ஆயுத பூஜைக் கடவுள்களை வழிபடும் ஆட்கள் மட்டும் என்ன யோக்கியம்? படு விமரிசையாக ஆயுத பூஜையில் தங்களின் ரைஃபில்களை பூஜையில் வைத்து விட்டு இஸ்லாமியத்தில் பிறந்த குற்றத்துக்காக முஸ்லிம்  தீவிரவாதிகளை தேடுகிறோம் என்ற பேரில் அப்பாவிகளை  காவல் நிலையத்துக்குள்ளேயே  சையது முகமதுக்களை சுட்டுக் கொன்றொழிக்கும் காளிதாஸ்கள் இருக்கும் நாடுதானே இது?

அரசு அலுவலகங்களில் அரசுத்துறை வளாகங்களில் எந்த மதக் கடவுளின் படமும் சிலையும் கோவிலும் இருக்கக் கூடாதென்பதெல்லாம் வெறும் ஏட்டளவில் மட்டும்தானே இருக்கிறது? ஆயுத பூஜை தீபாவளி பொங்கல் கிருஷ்ணஜெயந்தி கொண்டாடும் காவல் நிலையங்கள் ஏகப்பட்டது உண்டு இந்தியாவில். ஏன் எந்த காவல் நிலையத்திலும் ரம்ஜான், கிருஸ்துமஸ் கொண்டாடப் படுவதில்லை? நாம் தான் மத சார்பற்ற இந்தியா ஆயிற்றே? ஆனால் செய்தி அது அல்ல.

தங்களின் பதவிக்காலத்திலேயே ஃபயர், ஃபயர் ஃபயர் என்று கிருஸ்த்துக்களை பயமுண்டாக்கி மயங்கி விழச் செய்யும் எல்லை வரை மெத்தப் படித்த மேதாவிகள் போய்விடக் கூடாது என்பதே நம் கவலை. பாஜக மந்திரிகள் ஆளுக்கு 15 லட்சம் என்ற கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டுவரும் திட்டத்தை எல்லாம் கைவிட்டு ஆளுக்கு ஐந்து குழந்தைகள் என்ற இந்து ராஸ்டிரீய திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் மக்களுக்கான ஆட்சிப் பணியில் இருக்கும் ஒருவரிடம் இப்படி ஏசு கிருஸ்து நேரடியாக இறங்குவார் என்று நான் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லைதான்.

பதவியில் இருக்கும் ஆட்கள் மதம் இனம் சார்ந்த பற்றோடு இருப்பதென்பது உலகமெங்கும் இருக்கும் நச்சு, இஸ்ரவேலர்கள் முதல் இசிஸ் வரை உதாரணங்கள் கோடி உண்டு.கூன்பாண்டியன், மோடி, ராஜபக்‌ஷே, ஹிட்லர், இடி அமீன், சதாம் ஹூசேன்,  என்று வரலாறு ஏகப்பட்ட அத்தியாயங்களை நமக்குமுன் விரித்தே வைத்திருக்கிறது. நாம்தான் மதத்தின் மேல் இருக்கும் பற்றால் கண்களை குருடாக்கிக் கொள்கிறோம்.

மக்களுக்கான பதவியில் இருக்கும் ஆட்களின் மதச் சார்பு என்பது ஒரு வித மறைமுக மிரட்டல் என்று சொன்னால் அது எத்தனை உண்மை?. பாஜகவை விமர்சிக்கும் ஆட்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது என்பது சிறுபான்மை மக்களின் ஓட்டுவங்கியை மட்டும் குறிவைத்து என்பது வெட்கக் கேடு இல்லையா?

உதாரணத்துக்கு தான் சார்ந்த மதத்தின் மேல் இத்தனை பற்று வைத்திருக்கும் ஒரு ஆள் நாளெயே ஒரு மதம் சார்ந்த கிருஸ்துவ மதத்துக்கு எதிரான நிலையில் இருக்கும் ஒரு நபர் ஏதாவது மனுகொடுத்தால் என்ன ஆகும் இந்த கேள்வி உமாசங்கருக்கு மட்டும் இல்லை, காஞ்சி சங்கராச்சாரியாரை தரிசிக்கப் போகும் அப்துல்கலாம்களுக்கும் பொருந்தும்.

58 வயதுக்கும் மேல் நீங்கள் உங்கள் பதவிகளைத் துறந்தபின் செத்தவனைப் பிழைக்க வைய்யுங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் இல் சேருங்கள் இல்லை ஜெயேந்திரருக்கு வாழை இலை எடுக்கவோ நித்தியானந்தாவின் படுக்கை அறையில் ஸ்பை கேமரா செட் செய்யவோ போங்கள்.

கொஞ்சமாவது மக்கள் பணியாற்ற விரும்பும் ஆட்கள் மதத்தில் இருந்து தள்ளி இருங்கள். இல்லை மதப் பணியாற்றப் போங்கள். மக்கள் பிழைத்துப் போகட்டும்.





No comments: