Showing posts with label மீள் பதிவு. Show all posts
Showing posts with label மீள் பதிவு. Show all posts

Wednesday, January 14, 2015

பதவிக்காக..


சுஜாதாவின் பதவிக்காக நாவலை ஒரே மூச்சில் இரண்டாவது முறையாக இன்று படித்து முடித்தேன். தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த அரசியல் நாவல்களுள் ஒன்றான இது எத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை..

தன்ராஜின் இடைத்தேர்தல் வெற்றியிலும் சின்னப்பனின் தோல்வியிலும் தொடங்கும் நாவல் எத்தனை சித்துவிளையாட்டுகள், சாதுர்யங்கள், சதிகள், திடீர் திருப்பங்கள் அரசியலில் சாத்தியமோ அத்தனையும் தொட்டுச் செல்கிறது. 1987-88 அரசியல் காலத்தைக் கொண்டு பார்கையில் இது அப்போதைக்கு ஒரு துணிச்சலான நாவலாக இருந்திருக்கலாம்.

நாவலில் எங்குமே தன்ராஜின் வேகம் குறையவில்லை. மாறாக ஆறுமுகனாருக்கும் அரங்கராமானுஜத்துக்கும் நடக்கும் பதவிப் போட்டியில் பலிகடா ஆக்கப் படாமல் சாதுர்யமான வழி நகர்த்தல்கள்,

திலகவதியோடு திருமணம், ஜமுனாவோடு இன்னொரு வாழ்கை என்று கதைதான் ஆனால் சுஜாதாவின் எல்லா நாவல்களின் கதாநாயகன்களிலும் , அவன் கொலைத் தொழில் திருட்டுத் தொழில் செய்பவனாக இருந்தால் கூட (உதா: என்றாவது ஒரு நாள், மேகத்தை துரத்தினவன்) இருக்கும் அதே ஒரு துளி நேர்மை ஒட்டிக் கொண்டிருக்கும் காதாநாயகன் நம் தன்ராஜ்.

காவல்துறையின் அசுர பலம் அரசாங்கத்தின் உளவுக் கண்கள், மத்திய அரசு மாநில அரசின் மேல் செலுத்தும் அழுத்தம், வெறுப்பு விருப்புகளுக்காக மட்டுமே மாநிலத்தில் அரசியல் தலையீடு அதற்கு வர்மா என்ற ஒரு புத்திசாலித்தனமான குள்ளநரி கவர்னர் என்று கதை எல்லா தளங்களிலும் தட தடக்கிறது. சென்னையிலும் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் பதவிக்கு வரத் துடிக்கும் அரசியலை அழுத்தமாக பதிவு செய்கிறது நாவல்.

பாலியல் தொழிலாளி கம் நடிகை கௌரியின் கொலையில் ஒரு சாட்சியாக நுழையும் சாவித்திரி, ஐபிஎஸ் கோகுல் போலீஸின் நேர்மை அநியாயங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சியாக கூடவே வருகிறது. சாவித்திரியின் சக பத்திரிகையாளனின் செல்லக் காதல் இளமை , நட்புக்கு ஒரு சாட்சி.

ஒரு மாநில அரசை மத்திய அரசு என்னவெல்லாம் செய்யலாம் ஒரு முதல்வர் , மாநிலத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்று அதன் உச்சம் வரை சென்று பார்க்கிறது நாவல். கவர்னர்கள் நினைத்தால் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசின் துணைகொண்டு ஆட்டிப் படைக்கலாம் என்பதை விரிவாகவும் தெளிவாகவும் சொல்கிறது நாவல். நமக்கும்தான் வந்து வாய்க்கிறார்களே ஆட்டுக்குத் தாடி போன்ற கவர்னர்கள் என்று நமக்குத் தோன்றுவதை தவிற்க முடியவில்லை.

இதெல்லாவற்றையும் விட ஜமுனாவின் கணவனாக வரும் கோவிந்தராவ்..... எமகாதகன். சாருவின் வார்த்தைகளில் சொன்னால் பெட்டிஷ் பெட்டிஷ். ஜமுனாவுக்கும் தன்ராஜுக்கும் இடையில் இருக்கும் காதலை கண்டு கொண்ட பின்னரும் அதை மனதுக்குள் வைத்துக்கொண்டே ஒன்றுமே தெரியாதவன் போல ஜமுனாவை அன்பாலேயே அடித்து துவைத்து கொல்லும் கிராதகன். அவன் செய்வதை அவன் அளவில் அது நியாயமாகத்தான் படுகிறது. 

ஜமுனாவும் பிறந்து இருபதே நிமிடத்தில் இறந்த குழந்தையும் பொட்டில் அறைய தன்ராஜ் விரக்தியின் உச்சியில் முதல்வர் பதவி வேண்டாம் என்க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத அரங்கராரும், ஆட்சிக்கு வந்த ஆறுமுகமும் அதையும் காப்பாற்ற முடியாத நிலையில் தேர்தலுக்குள் தள்ளி விடுகிறார் கவர்னர்.

இதை அப்போது நாவலாக இல்லாமல் தொடராக படித்தவர்களுக்கு வாரா வாரம் கண்டிப்பாக காத்திருப்பது ஒரு தண்டனை போல் இருந்திருக்கலாம். ஒவ்வொரு அத்தியாயமும் தடக் படக்கென்று நகர்வதை படிக்கும் போது உணரமுடிகிறது. 

ஒரு அரசியல் சினிமா ஆவதற்க்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கும் நாவலை இதுவரை யாரும் சினிமாவாக்காமல் இருப்பதற்க்காக பல கோடி நன்றிகள், இதில் இருந்து கொஞ்சமாய் எடுத்து முதல்வன் ஆக்கியிருக்கிறார் ஷங்கர். அந்த யாருக்கும் அடங்காத ஒரு நாள் முதல்வர். ஒரு கருதான். 

சந்தேகமே இல்லாமல் எந்த இலக்கிய தகுதிகளையும் விட்டுவிட்டுப் பார்த்தால், சுஜாதா ஜனரஞ்சக எழுத்தாளர்களில் முதலிடம் பெற வேண்டிய ஆள்தான்.

Saturday, May 05, 2007

சாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும்


சாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும்
பின் நவீனம், முன் நவீனம் கட்டுடைத்தல், நான் லீனியர், ரியலிஸம், சர்ரியலிசம், புதுக்கவிதை, புண்ணாக்கு, புல், பூண்டு,மலை,மழை,இலை,தழை,காடு,கருப்பு,காதல்,கன்றாவி.கஞ்சன் கருமி,கவிதை.புறநானூறு,புத்தம்புதுசு..........

என்ன ஒன்னும் புரியலையா? இப்படித்தான் இருந்தது அவரின் ஜீரோ டிகிரி....ஒரு வேற்றுகிரகவாசி நாவல்?!..
முதலில் ஏதோ எழுத்துப் பிழை அல்லது பக்கம் தவறு என்று நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது நாவல் அப்படித்தான் இருக்குமாம். அதுகூட என்னமோ நான் லினியரோ நீலினியரோ போட்டிருந்தாங்க இப்டி எழுதறது இப்ப ஸ்டைலாம். அப்பறம் அடுத்த பக்கம் பொறட்டுனா.... அங்கதான் வச்சிருந்தார் குண்டு..

நிசமாச் சொல்லுரன் நானும் சின்ன வயசில (ஒரு பதினஞ்சு வயசு?) ஊட்டுக்கு தெரியாத மைசூர் பதிப்பகத்தோட சரோசாதேவி கதையெல்லாம் படிச்சிருக்க்னுங்க.. அதுல கூட இம்மா விசயம் மில்லிங்க. தலிவரு சும்மா பச்ச மஞ்ச செவப்பு நீலம்னு உட்டு பேனாவுல இன்க்குக்கு பதிலா வேற எதையோ ஊத்தி எழுதிருந்தாருங்க..
அப்பத்தான் வந்துது கோவம் அவருமேல யில்லிங்க அந்த புக்க வாங்க சொல்லி தினந்தினம் அரிச்ச எம்பிரண்டு விசயன் மேல நேரா வூட்டுக்கு போயி கேட்டங்க ஒரு கேள்வி ....." நூறு ரூவா போட்டு இத வாங்குனத ஒரு பொட்டிக்கடையில பத்துருவாய்க்கி வாங்கிற்கிலாமேன்னு" அதுக்கு அவன் "போடா டுபுக்கு நீஏண்டா இங்கிலீஸ் படத்த பாத்தவனாட்டம் டைட்டில்ல இருந்து பாத்த ஒரு பத்து பக்கம் கழிச்சு பாருடான்னான்" நானும் பாத்தங்க ஆங் இப்பகொஞ்சம் பரவால்ல ஏதோ ஒன்னு ரண்டு பத்தி புரிஞ்சதுங்க ஆனா மொத்தமா யோசிச்சா ஒரு எழவும் புரியிலங்க. என்னடா இது " அந்தோன் சேகவ், லேவ் தல்ஸ்தோய். அலக்ஸாந்தர் குப்ரின், அலக்ஸேய் தல்ஸ்த்தோய் வல்லி கண்ணன், சுசாதா.....பாலகொமாரு எல்லாரும் புரிஞ்சாங்க இவரு மட்டும் புரியிலயான்னு எனக்கு ஒரே கொழப்பமுங்க சரி நம்புளுக்குத்தான் புரிலன்னு எங்க மாமா ஒருத்தரு இஞ்ஜினீரு அவரு இந்த இலக்கியம்லாம் படிப்பாரு அவருகிட்ட தந்தனுங்க. அவரும் சரி படிக்கிரேன்னு வாங்குனாருங்க மறுநா பாத்து கேட்டதுக்கு சொன்னாரு" ஒங்க அக்காகாரி அந்த புத்தகத்த பாத்துட்டு இந்த வயசில இந்தமாரி புத்தகம் படிக்கிரியான்னு சொல்லி வாங்கி கிழிச்சு போட்டுட்டா மாப்ள நீ வேற வாங்கிக்கோன்னாறு. ஆஹா இவரு முதலுக்கே வேட்டு வக்கிறாறேன்னு போயி விசயங் கிட்ட சொன்னன்னுங்க அதுக்கு அவன் மலிவு வெலையில அதே புக்க ஜீ.ஏ. (அதாங்க க்ரைம் நாவல் அசோகன்) போடுராரு அத வாங்குவோம்னான். சரின்னு அப்ப எங்க ஊருக்கு பக்கத்தில பெரம்பலூர்ல புத்தக கண்காட்சி போட்டுருந்துது அங்க போயி தேடிப்புடிச்சி சீரோ டிகிரியும் அப்பறம் கோனல் பக்கமும் வாங்கியாந்தமுங்க சரி மின்னயே சீரோ டிகிரி புரில இப்ப கோனல் பக்கத்த படிப்பமுன்னு எடுத்தா பூராம் அவுரோட காதல் வெளையாட்டு அனுபவங்க. என்னடா இதுன்னு அப்ப அப்ப கொஞ்சம் நல்ல கட்டுரையும் எழுதிர்ந்தாரு ஆனா எனக்கு ஒன்னும் புரிலிங்க.அதுல தான் இந்த கும்போனத்துல புள்ளைங்க நெருப்புல செத்து போச்சே அதபத்தி எழுதிர்ந்தாருங்க அதுல ஒருஎடத்தில ஒரு சினிமா ஹன்னிபால் பத்தி எழுதிருந்தாருங்க ஆனா நடிச்சவ்ரு பேர தப்பா போட்டுட்டாரு. அவ்ரு பேரு அந்தோனி ஹாப்கின்ஸுங்க இவருதான் மாத்தி போட்டாரு. அத ஏம்பிரண்டுகிட்ட காட்டுனதுக்கு அட போடா ஏதோ ஒரு தப்பு நடந்துபோச்சி அத சொல்ல வந்துட்ட மத்தது நல்லாருக்கான்னான் நாஞ்சொன்னன் "அடே கோவத்த கிண்டாதடா எனக்கு அவுரு எழுதுனதுல இதான்டா புரிஞ்சுதுன்னு" சொன்னனுங்க.. அவன் ஒரு வார்த்த பேசலியே..இப்பயும் என்னமோ சாருஆன்லைனுன்னு ஒன்னுல எழுதுராரு இப்பவும் அதே ரஸ லீலா பாகம் இருவதுன்னு தொடர்ச்சியா அதே சொந்தக்கதைங்க ...இப்பலாம் அந்த வலைக்கே போரதில்லீங்க எதுக்கு வம்பு நம்பளே துபாய்ல இருக்கம் எதாவது ஒன்னுகெடக்க ஒன்னு ஆயிடிச்சின்னா என்ன பன்றது

அப்பறம் எம் பிரண்டு இப்பவும் அவர படிக்கிரானுங்க.....
அவரு நம்ப கமலகாசன பத்திஎழுதிருக்காரு பார்ரான்னு சொன்னான் எனக்கு கமல்னா புடிக்குமுங்க நம்ப ரசினி ராம்கிக்கு ரசினி மாறி எனக்கு கமலுங்க

சரின்னு பாத்தா விருமாண்டியை முன்வைத்துன்னு ஒரு கட்டுரங்க அதுல நெரயா லத்தீனு, பெரான்ஸு, ஈரானு இப்படி பலநாட்டு படத்தியும் போட்டு விமர்சனமுங்க. என்ன பன்றது அவரு நிலம அப்பிடி எனக்கு எப்பிடி சாருவ புரிலியோ அதே மாறி சாருவுக்கு கமல் படம் புரிலங்க,
சரி கொரியாகாரன் எதோ தப்பான படத்துக்கு விருது கொடுத்துட்டான்னு விட்டுட்டனுங்க
இப்பிடிதாங்க அவுருக்கும் நமக்கும் ஒத்தே வர்ல. இதுல இவரு இந்தியவுல இருக்க எல்லா எழுத்தாளர். நடிகர்,கவிஞர்.பத்தியும் விமர்சணம் பன்னி எழுதுவாருங்க ஆனா அவரப்பத்தி எழுத ஆருமில்லீங்க. நானே எனக்கு அவரு எழுதறது புரிலன்னுதாங்க எழுதுரன் அவர ஒன்னும் சொல்லலீங்க.
இதுவேற அனானிமசூ ,ஈ,கொசுன்னு பின்னூட்டம் போட்டா என்னாபன்றது.சரி இம்பூட்டு நாளா சும்மா இருந்துட்டு இப்ப ஏன்டா எழுதுரண்னு கேக்கரீங்களா.... நான் இப்பதாங்க சும்மா இருக்கன் படிச்சுட்டு எழுதுங்க......