.எங்களூரின் தேர் சுமார் நூற்றைம்பது ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுமார் எழுபது முறைகளுக்கு மேல் ஊரை வலம்வந்திருக்கிறது சராசரியாக இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை. நான் சிறியவயது முதலே கடவுள் நம்பிக்கை யில்லாமல் இருந்த போதிலும் ஊரின் இதுபோன்ற நிகழ்வுகளில் அதிக ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொள்வதுண்டு. நிறைய விருந்தினர்கள் வருகைதரும் பெரிய குடும்பவிழா அது.
அதுவும் எனது சொந்தங்களை பொருத்தவரை இதுபோல ஏதாவது சந்தோஷமான தருணம் மற்றும் துயர் சம்பவங்களில் பார்த்தால் தான் உண்டு. இல்லாவிட்டால் தேர்தான் அல்லது தைக்கூத்து எனப்படும் ஒருவிழா. இரவின் நேரம் குளிரில் ஊரைச்சுற்றி வருவதே ஒரு தனி அனுபவம். அது ஒரு அழகியகனாக்காலமானது இப்போது.
நான் இப்போது இருப்பது துபை இங்கே வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த இரண்டு ஆண்டுகளுமே தொடர்ந்து தேர் திருவிழா நடைபெறுகிறது. நாந்தான் இல்லை. ஆனாலும் அங்கிருந்து அனுப்பப்படும் ஒளிநாடாக்களை காண்பதுண்டு. என்னதான் விடியோவில் பார்த்தபோதும் நேரில் இருக்கும் சந்தோஷம் கிடைப்பதில்லை.
வண்ண பலூண்தாங்கிய வியாபாரிகள் தெருவெங்கும் இறைந்து கிடந்தாலும் மனசை அள்ளும் மாக்கோலம் அந்த மாக்கோலம் போட்டாலும் அதை விட அழகாய் இருக்கும் எங்களூர் அழகிகள் தோழிகள் இவர்களை பார்க்கவே அதிகாலை நேரம் தெருவை வலம்வருவதுண்டு தேருக்கு போட்டியாக. ஆனால் விடியோவில் இதெல்லாம் கிடைக்காது.
தேர் விழா என்பது எங்களூரை பொருத்தவரை ஒன்பது நாட்கள் நடக்கும் ஒருவிழா. முதல்நாள் காப்புகட்டுவது என்பார்கள் அதன் பின் ஊரில் இருக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒருநாள் வீதம் மண்டகப்படி எனப்படும் சிறப்பு செய்து வழிபடும் நிகழ்ச்சிகள். அதாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும் கிராமங்களில் வகையராக்கள் அதுபோல் எங்கள் வகையறா பூசாரி வகையரா( ஆனா நாங்க சாமி கும்பிடமாட்டோம்)எங்களதே ,முதல்நாள் நிகழ்ச்சி.
நாங்கள் சாமியை வணங்குவதில்லை என்றாலும் வகையராவில் மூத்தவர்கள் என்பதால் எனதுகுடும்பமே முதல் நாள் தொடங்கிவைக்கவேண்டிய நிலை. ஊரிலிருக்கும் ஒரு நல்ல மரியாதைக்காக அதை செய்கிறோம். (எங்கள் வீட்டை பெரியவர் வீடு என்றுதான் இன்றும் அழைப்பார்கள்) எங்களின் தாத்தா மறைந்த திரு.செல்லமுத்து படையாட்சி அவர்களால் இந்த பெயர். அவர் எனதூருக்கு இரண்டுமுறை தலைவராக இருந்தார் அவரின் பக்திகாரணமாகவே நானும் என் தந்தையும் கடவுள் நம்பிக்கை யற்றுப்போனோம் என நிணைக்கிறேன்.
சரி அது எதற்கு தேருக்கு வருவோம் சமீபகாலங்களில் ஒவ்வொரு முறையும் கண்டதேவி தேர்சம்பவங்கள் புயலை கிளப்புவதை அறிவோம் ஆனால் எங்களூரில் அப்படியில்லை. எங்கள் ஊரின் தாழ்த்தப்படவர்களுக்கு ஒருநாள் மண்டகப்படியும் தேரிழுக்கும் நாட்களில் அவர்களும் முன்னிருந்து வேலைகளை பார்ப்பதும் இயல்பானது. எனக்கு தெரிந்தவரை இதுவரை எந்த முட்டலும் மோதலுமில்லை.
தேர் நாட்கள் முடிந்து தேரிழுக்கும் நாள் ஊரில் நிறையும் கூட்டம் சொல்லவியலாது. ஏனென்றால் பெரம்பலூர் மாவட்டத்தை பொருத்தவரை கிழுமத்தூர் தேர்தான் அளவில் பெரியது. மேலும் பொதுவாக தேர்த்திருவிழா விடுமுறை நாட்களில் வ்ருவதால் நிறைய சொந்தங்களின் வருகையும் இருக்கும். இந்த தேர் விழாவால் ஊருக்கு ஒருசில நன்மைகளும் உண்டு, கிராமங்களை பொறுத்தவரை தெருவில் ஆக்கிரமிப்புகளை நீங்கள் பார்த்திருக்கலாம் ஆனால் இங்கே அப்படியில்லை.தேர் வருவதற்க்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் எவரும் எதையும் ஆக்கிரமிப்பதில்லை. ஒரே நேரான மூன்று தெருக்கள்மட்டுமே. ஆனால் நீளமும் அகலமும் கொண்டவை .
இதுபோல் ஒவொரு வருட தேரிலும் சில வேலைகளை நண்பர்களுடன் இழுத்துப்போட்டு செய்வதால் பத்து நாட்கள் போவது தெரியாமல் போகும். தேர் முடிந்த மூன்றாம் நாளில் மஞ்சள் தண்ணீர் விழா ஒன்றுண்டு( பதினாறு வயதினிலே படத்தில் வருமே ) இதற்க்காகவே நாங்கள் சிலபேர் அன்றுதான் வெள்ளை வேட்டி சட்டைகளில் வலம் வருவதுண்டு. (சும்மா யார்யாருண்னு தெரிஞ்சுக்கலாமில்ல:)) அந்த நாட்களை மறக்கவே முடியாது. இதுபோல இன்னும் எத்தனையோ சம்பவங்களை மகிழ்வுகளை அரபுதேசம் வந்தபிறகு இழந்தாயிற்று.
(பின் குறிப்பு): இப்பதிவை நான் எழுதுவது ஏனென்றால் நேற்று எங்கள் ஊரில் தேர் மனசு கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது. நானில்லாத மூன்றாம் ஆண்டு இது.
3 comments:
//நேற்று எங்கள் ஊரில் தேர் மனசு கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது//
முழுவதும் இருமுறை படித்தேன். தேர் நிலையை விட்டு சென்று விட்டது. உங்கள் மனசு மட்டும் அங்கேயே நிற்கிறது. அடுத்த வருடம் தேர் திருவிழாவில் கலந்து கொள்வீர்கள் என வாழ்த்துகிறேன்
கவலைப் படாதீங்க! தேர் வருசாவருசம் இருக்கும்; வரும் வருசம் ,விடுமுறையைத் தேரோடு எடுத்துட்டால் போச்சு கவலை;
தாழ்த்தப் பட்டவங்களையும் மதிக்கும் மனுசங்களா??? நீங்க ;படிக்க சந்தோசமா இருக்குது. உங்க ஊர் என்றும் இப்படி ஒற்றுமையாவும்;முன்மாதிரியாவும் இருக்க வேண்டும்.
யோகன் பாரிஸ்
//தேர் நிலைக்கு சென்றுவிட்டது.......//
ஆம் அது நிஜம்தான் என்மனசு இன்னும் அங்கேயே நிற்கிறது.
// அடுத்த தேருக்கு செல்ல வாழ்த்து//
நன்றி நண்பரே. அதுவே என்விருப்பமும்.
//ஒற்றுமையாய் இருக்க//
கண்டிப்பாய் இருப்போம்.. நன்றி
Post a Comment