Tuesday, May 08, 2007

தீராநதி III

Part 1
Part 2
டெல்லியை அடைந்த இந்தியச் சிப்பாய்களும் டெல்லியில் இருந்த இஸ்லாமியச் சிப்பாய்களும் (தீவிரவாத இஸ்லாமைப் போதித்தவர்கள் உட்பட) இந்த எழுச்சிக்கு ஜாபர் தலைமை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். வாழ்நாள் முழுக்கக் கவிதைகளிலும், ஆடம்பர வாழ்க்கையில் மட்டுமே காலங்களை கழித்ததோடு, வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு யுத்த களத்தைக்கூட கண்டிராத அந்த 80 வயது கிழவனை தலைமை தாங்க, பலவந்தமாகச் சம்மதிக்க வைத்தார்கள். இதற்குப் பிறகு நடந்ததை நாம் 1947_ல் அரங்கேற்றப்பட்ட மதக் கலவரத்தோடும் 2002_ல் குஜராத்தில் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளோடும் நினைவுகூர வேண்டும். இந்துச் சிப்பாய்களும், இஸ்லாமியச் சிப்பாய்களும், ஆங்கிலேய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஈவு இரக்கம் இன்றிக் கொன்று குவித்தார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் அதிகாரத்திற்கு எதிரான எழுச்சியா? அல்லது ஜாதி மற்றும் மதத்தைக் காப்பாற்றுவதற்கான எழுச்சியா? என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு நிராயுதபாணியான ஆங்கிலேயர்களும் கொன்று குவிக்கப்பட்டார்கள். பேராசிரியர் இர்பான் ஹபிர் மதம் சார்ந்த அடையாளத்தில் இயங்கும் ஒரு சமூகம், அதன் வடிவத்தில்தானே காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தன்னை வெளிப்படுத்த முடியும் என்று கேட்கிறார். மதம் அடையாளத்துள் ஒன்றாகத் திகழ்வது தவறில்லைதான். ஆனால், எதற்காக என்ற கேள்வியும் நாம் கேட்க வேண்டியுள்ளது. ஒற்றைப்பரிமாண அதிகாரத்திற்குள் இறுகிக் கொண்டிருக்கும் ஜாதியமைப்பின் தூய்மையைக் காப்பாற்றவும், பிற்போக்கான மத அடிப்படைவாதத்தை உயர்த்திப்பிடிக்க மட்டும் அல்லாமல், பல்வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்களால் துன்பப்பட்டிருந்தாலும் இவ்விரண்டின் பங்கை நாம் மறுதலிக்க முடியாது. இந்த எழுச்சியின் போதும் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஆங்கிலேயர்கள் தாக்கப்படவில்லை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய முசல்மான்களும் இந்துக்களும் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், சிப்பாய்களின் இந்த எழுச்சிக்கு சரியான தலைமையும் யுத்த தந்திரமும் இருந்திருந்தால், கிழக்கிந்திய கம்பெனி மிகப்பெரிய தோல்வியைக் கண்டிருக்கும். வகாபிகளின் அடிப்படை மதவாதம் எதுவாக இருந்தாலும், இந்த எழுச்சியில் அவர்கள் ஆற்றிய பங்கு மரியாதைக்குரியது. எழுச்சியில் பங்கெடுத்த சிப்பாய்களின் வருணிக்க இயலாத தியாகங்களுக்கு இடையே, கிழக்கிந்திய கம்பெனியின் சீக்கிய கூலிப்படைகளால் இந்த எழுச்சியும் முறியடிக்கப்பட்டது. இதில் மிக மிக முக்கியமான விஷயம், பல ஆங்கிலேயப் பெண்மணிகள் கொல்லப்பட்டாலும் ஒரே ஒரு ஆங்கிலேயப் பெண்மணி கூட பாலியல் பலாத்காரத்துக்குப் பழியாகவில்லை. ஆனால், உலகநாடுகளுக்கு இடையே ஆங்கிலேய அரசு திரும்பத் திரும்ப அவர்களுடைய பெண்கள் காட்டுமிராண்டித்தனமாய்ச் சூறையாடப்பட்டார்கள் என்ற செய்தியைப் பரப்பியது. கைப்பற்றப்பட்ட டெல்லியில் ஆங்கிலேயர்களின் பழிக்குப் பழி தாக்குதல் என்பது எல்லா வரம்புகளையும் மீறி அரங்கேற்றப்பட்டது. டெல்லி மாநகர் என்ற நகரமே உலக வரைபடத்தில் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு அழிக்கப்பட்டது. இன்று நாம் காணும் செங்கோட்டை என்பது 1857_ல் இருந்ததில் ஒரு கால் பகுதிதான் என்பது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. மற்ற பகுதிகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது. டெல்லி நகரத்து மக்கள் மதவேறுபாடு இல்லாமல், ஆண் பெண் குழந்தைகள் என்ற பாகுபாடு இல்லாமல் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆங்கிலேயரோடு உறவை ஏற்படுத்திக் கொண்ட சில இந்து கந்து வட்டிக்காரர்களைத் தவிர, மற்ற அனைவரும் ஈவு இரக்கம் இன்றித் தாக்கப்பட்டார்கள்.அவர்களுடைய சொத்து பறிமுதல் செய்யப்பட்டது. குழந்தைகளும் பெண்களும் வயோதிகர்களும் இருக்க இடமின்றி வெட்ட வெளிக்கு விரட்டப்பட்டார்கள். (மூன்று வருடம் கழித்து டெல்லிக்குள் நுழைய அனுமதி கேட்டு ஆங்கிலேயப் பேரரசிடம் இஸ்லாமியர்கள் மனு கொடுத்தார்கள் என்றால், நிலைமையின் துயரத்தை நம்மால் உணர முடியும்) இன்று நமக்கு எஞ்சியுள்ள டெல்லி என்பது அந்த நகரத்தின் அழகில் மனதைப் பறிகொடுத்து, அதை எவ்வளவு காப்பாற்ற முடியுமோ அவ்வளவையும் முயற்சித்த சில ஆங்கிலேயர்கள்தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உயிரோடு இருந்தவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அப்படி அழைக்கப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். விசாரணைக்கு அழைக்கப்பட்ட காலிப் விசாரணையின்போது, ''நீ முசல்மானா?'' என்று கேட்கப்பட்டதற்கு, ''பாதி'' என்று பதில் தந்தான். ''இதற்கு என்ன அர்த்தம்?'' என்று விசாரணை அதிகாரி வினாவிய போது, ''நான் மது அருந்துவேன். ஆனால், பன்றிக்கறி திங்கமாட்டேன்'' என்று தந்தான். ''டெல்லிக் கோட்டையை ஆங்கிலேயர்கள் பிடித்த பிறகு நீ ஏன், அறிவித்த பொது இடத்தில் ஆஜராகவில்லை'' என்று கேட்கப்பட்டதற்கு, ''என்னுடைய அந்தஸ்திற்கு என்னை அழைத்து வர நான்கு பல்லக்குத் தூக்கிகள் தேவைப்படுகிறார்கள். ஆனால், அந்த நால்வருமே என்னைத் தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அதனால்தான் வரமுடியவில்லை'' என்று பதில் தந்தான். (காலிப் உயிர் பிழைத்ததற்குக் காரணம், ஒருமுறை இங்கிலாந்துஅரசியை அவன் புகழ்ந்து எழுதிய கவிதையினால்தான்) காலிப் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில், ''நான் அனுபவிக்காத வேதனை ஏதேனும் உண்டா? மரணத்தின் வேதனை, பிரிவின் வேதனை, வருமானத்தில் இழப்பு, கண்ணியத்தின் இழப்பு இவற்றோடு செங்கோட்டையில் நடந்த துயரமான சம்பவங்கள். என்னுடைய பல டெல்லி நண்பர்கள் கொல்லப்பட்டார்கள்... நான் எவ்வாறு அவர்களை மறப்பேன். எவ்வாறு நான் அவர்களைத் திரும்பக் கொண்டுவர இயலும்... உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், காதலர்கள் _ இப்போது எல்லோரும் போய்விட்டார்கள். ஒரு நண்பனுக்காகவோ, ஒரு உறவினருக்காகவோ துயரப்படுவது என்பதே மிக மிகக் கடினமானது. என் நிலையை நினைத்துப் பார். நான் பலருக்காகத் துயரப்படவேண்டும். ஐயோ கடவுளே! என்னுடைய பல நண்பர்களை உறவினர்களை இழந்துவிட்டேன். நான் இப்போது இறந்தால் எனக்காகத் துயரப்பட ஒரு ஆன்மாகூட இல்லையே'' என்று தன் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளான்.

ஆங்கிலேயர் வெற்றிக்குப் பிறகு, இன்று சதாம் ஹ§சேன் தூக்கிலிடப்பட்டது போலவே ஜாபர் நாடு கடத்தப்பட்டார். இது ஒன்றும் பெரிய துயரம் இல்லைதான். (அவரே துயரப்படவில்லை. ஒரு சூஃபி ஞானியைப் போல் அவர் தன் முன் உள்ள வாழ்க்கையைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். சிறு குழந்தையைப் போல டெல்லிமாநகரத்தை விட்டு முதல் முறையாக வெளியே வந்து கப்பல், ரயில் போன்றவற்றைப் பார்த்து சந்தோஷப்பட்டார். உயிரோடு இருக்கும் அவருடைய ஒரே மகன் ஆங்கிலக் கல்வி படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.) ஆனால், எத்தகைய மரபு இந்த மண்ணிலிருந்து நாடு கடத்தப்பட்டது என்பதுதான் துயரமான விஷயம். சிப்பாய்களின் எழுச்சியின் போது தன்னுடைய மாளிகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று 52 ஆங்கிலேயர்களைத் தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்தார். சிப்பாய்கள் இவர்களைக் கண்டுபிடித்து எல்லோரையும் வெளியே இழுத்து வந்தார்கள். சிப்பாய்களின் இந்த செய்கையால் ஜாபர் திகைத்துப் போய் நின்றார். சிப்பாய்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளார்கள் என்பதை உணர்ந்த உடன், சிப்பாய்களை இந்து மற்றும் முசல்மான் என்று தனித்தனியே நிற்க உத்தரவிட்டார். பிறகு இரு சாரார்களிடமும், நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொல்வதற்கு உங்கள் மதம் அனுமதி தருகிறதா என்று அவரவர் மதகுருமார்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு வேண்டினார். ''இவர்கள் கொல்லப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது'' என்றார். சிப்பாய்களின் மனம் இரங்கா நிலையைக் கண்டு ஜாபர் அழத்தொடங்கினார். அப்பாவிகளான இவர்களுடைய உயிரைப் பறிக்க வேண்டாம் என்று வேண்டிக்கொண்டார். ''எச்சரிக்கையாய் இருங்கள். இந்தக் கொடூரமானச் செயலைச் செய்து முடித்தால் கடவுளின் சாபம் நம் எல்லோர் மீதும் விழும். இந்த நிராயுதபாணிகளை எதற்காகக் கொல்லவேண்டும்'' என்று கெஞ்சினார். ஆனால், அவர்கள் கொல்லப்பட்டார்கள். இத்தகைய மரபுதான் ஆங்கிலேயர் களால் நாடு கடத்தப்பட்டது. காலிப்பின் கண்ணீர் மட்டுமே இங்கு மிஞ்சியிருந்தது..

No comments: