'தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று எம்மை தற்காத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்த பூமிப்பந்திலே வாழமுடியாது. குறிப்பாக எங்கள் தாயகத்தை நாங்கள் இழந்து அழிந்துவிடுவோம்' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் 'கணிநுட்பம்' மாத மலர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டுவைத்த பின்னர் சிறப்புரையாற்றுகையிலேயே தமிழ்ச்செல்வன் இவ்வாறு தெரிவித்தார்.
'இந்த உலகப்பந்தில் வாழவேண்டுமாக இருந்தால் உலகப்பந்தில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் உலகத்தின் அசைவியக்கத்தோடு நாங்களும் எங்களை உட்புகுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் இன்று தொழில்நுட்பத்தை பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணினி யுகம் என்பது இன்று எல்லாவற்றுக்குள்ளும் உட்புகுந்துள்ளதால் கணினி தொடர்பான அறிவை நாங்கள் எங்களுக்குள் ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.' எனவும் அவர் தனது சிறப்புரையில் தெரிவித்துள்ளார்.
'கணிநுட்பம்' மாத மலர் நூல் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கணிநுட்பக்கூட்டு நிறுவனமும்இ ரி.ஆர் ரெக் நிறுவனமும் இணைந்து இந்த இதழை வெளியிட்டன.
பொதுச்சுடரை தமிழீழ மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் கண்ணன் ஏற்றினார். தமிழீழ தேசியக்கொடியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.
மாவீரர் பொதுக்கல்லறைக்கு ஈகச்சுடரை அன்னை இல்லம் பணிப்பாளர் அருட்திரு எட்மண்ட் றெஜினோல்ட் ஏற்றினார். தொடர்ந்து கருத்துரையை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார். வெளியீட்டுரையை இதழாசிரியர் லலிதாமதி நிகழ்த்தினார். முதல் படியை சு.ப.தமிழ்ச்செல்வன் வெளியிட்டு வைக்கஇ தமிழீழ கல்விக்கழக துணைப்பொறுப்பாளர் அருள் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்.
நூலின் ஆய்வுரையை விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பிரிவுப்பொறுப்பாளர் யோ.செ.யோகி நிகழ்த்தினார்.
சு.ப.தமிழ்ச்செல்வன் இங்கு உரையாற்றுகையில் மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
'அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்துகொண்டு அசைந்து போக வேண்டிய தேவைக்குள் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் அதனைச் சாத்தியமாக்கியிருக்கின்றார். எங்களுடைய தேசத்தில் புதிய தலைமுறை அறிவியல்துறையில் தொழில்நுட்பத்துறையில் மேம்பட்ட சமூகமாக வளர்த்தெடுக்கப்படவேண்டும் என்ற தமிழீழத் தேசியாத்தலைவர் அவர்களின் எண்ணத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் வடிவம் கொடுக்கும் வகையில் கணிநுட்பப்பிரிவு எழுத்துள்ளது. அதன் ஒரு வெளிப்பாடாக எமது தாய்மொழியில் கணிநுட்பம் தொடர்பான ஒர் அறிவியல் சஞ்சிகையை அவர்கள் தொடக்கியுள்ளனர். இதனை மிகவும் மகிழ்ச்சிக்குரிய நம்பிக்கை தரும் முயற்சியாக நாங்கள் பார்க்கின்றோம்.
மனிதனின் அசைவியக்கத்தின் ஓர் உறுப்பாக இன்று கணினி மாறிவிட்டது கணினி யுகத்திற்குள் நாங்கள் புகுந்து கொள்ளாவிட்டால் இந்த உலகப்பந்தில் எங்களை நிலைப்படுத்திக் கொள்ளமுடியாத ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுவிடுவோம். அடுத்தது இந்த உலகப்பந்தில் வாழவேண்டுமாக இருந்தால் உலகப்பந்தில் நிலைக்க வேண்டுமாக இருந்தால் உலகத்தின் அசைவியக்கத்தோடு நாங்களும் எங்களை உட்புகுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் இன்று தொழில்நுட்பத்தை பார்க்கவேண்டும். அதிலும் குறிப்பாக கணினி யுகம் என்பது இன்று எல்லாவற்றுக்குள்ளும் உட்புகுந்துள்ளதால் கணினி தொடர்பான அறிவை நாங்கள் எங்களுக்குள் ஆழமாக கற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்குள் நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
போர்ச் சூழலுக்குள் அது சாத்தியமாகுமா என்பது கேள்வி. போர் திணிக்கப்படும் போது எங்களுக்கு எல்லாமே தடுக்கப்படும்இ தடைசெய்யப்டும். அதற்கான வாய்புகள் மறுக்கப்படும். ஆகவே இந்தக்கட்டத்தில் நாம் நின்று கொண்டு உலகப்பந்திலே அறிவியல் வளர்ச்சியுடன் சேர்ந்துகொண்டு அசைந்து போக வேண்டிய தேவைக்குள் நாங்கள் இருக்கின்றோம். அது சாத்தியமாகுமா என்பதுதான் கேள்வி இதனையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் சாத்தியமாக்கியிருக்கின்றார்.
எல்லாருக்கும் அதுதான் அதிசயம். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது உலகில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களிற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. எல்லாவற்றையும் அதிசயமாக பார்க்கிறார்கள். அதற்கு காரணம் தேசியத் தலைவர் அவர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் வழிநடத்தல்களும்தான். இன்று எதிரி எல்லாவிதமான தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்து எங்களின் தேசத்தை அழிப்பதற்கு தமிழினத்தின் விடுதலைப் போரை இல்லாமல் செய்வதற்கு முயன்று கொண்டிருக்கின்றான். அதற்குள் எதிர்நீச்சல் போட்டு அதை எதிர்கொண்டு அதை முறியடித்து எங்களுடைய விடுதலைப் போராட்டம் முன்னகர்த்தப்படுகின்றது என்றால் எமது தலைவர் அவர்களின் சிந்தனைதான்.
எதிரியிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்டு மலரப்போகும் எங்களுடைய தமிழீழம் இந்தஉலகப்பந்தில் உயர்ந்து நிற்கும் என்ற உன்னதமான நம்பிக்கையை இன்று ஏற்படுத்தியுள்ளது அதனுடைய உயர்ச்சியும் தொடர்ச்சியுமாகத்தான் இச்சஞ்சிகையின் வெளியீடு அமைந்துள்ளது' எனவும் சு.ப.தமிழ்ச்செல்வன் தனது சிறப்புரையில் தெரிவித்தார்.
1 comment:
‘அழிந்தே போ
விமானங்களையும் அழித்து’
என ஏவியவர்களும்
அழிந்தார்கள்
விமானத்தால்
பாசிசம்
ஒரு நீர்க்குமிழி
- செ.குணரத்தினம்
Post a Comment