Tuesday, September 25, 2007

தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

தந்தை பெரியார், பார்ப்பனர்களை, வைதீகப் பார்ப்பனர் என்றும், லௌகீகப் பார்ப்பனர் என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பார். ஞாநி ஒரு லௌகீகப் பார்ப்பனர். அவர் அரசியலை அலசுவார், சமூகநீதி பேசுவார், அறிந்தும் அறியாமலும் இருக்கும் பாலியல் உணர்வுகளைப் பாடமாய் நடத்துவார், எங்கு சென்றாலும், தன் முற்போக்கு முகத்தை மறக்காமல் எடுத்துச் செல்வார்.

ஆனால், அவருக்குள் புதைந்து கிடந்த திராவிட இயக்க எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு போன்றவை பூனைக்குட்டி வெளியே வருவது போல் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.

முரசொலி மாறனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டது பற்றி எழுதுகையில், தேசிய விலங்குகளுக்கு எல்லாம் கூட அஞ்சல்தலை வெளியிடப்படும்போது மாறனுக்கும் வெளியிட்டால் என்ன என்பது போல் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சு நிறைய அப்பிக்கிடக்கும் பகையும், வன்மமும் அந்த வரிகளில் அப்படியே வெளிப்பட்டன.

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையோடு ஒப்பிட்டுத் தன் மேதாவித் தனத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார் என்பது போன்ற வெற்று அறிக்கைகள் விடுவதைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தலித் முதலமைச்சராக்கப்படுகிறார் என்று கலைஞர் அறிக்கைவிட வேண்டுமாம், ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஞாநி கனவு காண்கிறாராம். அடடா, தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

அண்மையில் அவருக்கு ஆனந்தவிகடனில் ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம், யாராவது ஒரு தலித் நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. கனவெல்லாம், கலைஞரைப் பற்றி மட்டும்தான் போலும். குறைந்த பட்சம் ஜெயலலிதாவிடம் இருந்தும் அப்படி ஓர் அறிக்கை வர வேண்டுமென்று அவர் கனவு கண்டிருக்கலாம்.

தங்கள் நெஞ்சில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் முரடர்கள்தான் நாமெல்லாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பக்குவமெல்லாம் நம்மில் பலருக்கு இன்னும் கைவரவில்லை. பாருங்கள். அது ஞாநிக்கு எவ்வளவு அழகாய்க் கைவருகிறது என்று!

தி.மு.க. விற்குள் உட்கட்சி சண்டையும், குழப்பமும் வரவேண்டும் என்னும் தன் ஆசையை நேரடியாகச் சொல்லும் முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. பரிதி முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு காண்பதாகச் சொல்லிவிட்டால், பிறகு அதை எதிர்ப்பது கடினம். எதிர்ப்பவர்களைத் தலித் விரோதி என்று சொல்லிவிடலாம், ஞாநியின் கனவு பலிக்கும் வரையில், தி.மு.க.விற்கும் தலித் விரோதக் கட்சி என்று முத்திரை குத்திவிடலாம்.

இப்படிப் பல்வேறு சித்து விளையாட்டுகளை ஞாநி அந்தக் கட்டுரையில் செய்து பார்த்திருக்கிறார்.

ஆனாலும், வரலாறு நமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில் தலித் தோழர்களுக்கு எப்போதும் இடம் இருந்திருக்கிறது என்பதே அந்த உண்மை. மீனாம்பாள், சிவராஜ், தொண்டு வீராசாமி, சத்தியவாணி முத்து தொடங்கி இன்று வரை அதன் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும். அண்மையில் கூட தன் பேரனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர். தமிழக அரசிலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமின்றி, பால்வளத்துறைக்கும் ஒரு தலித் நண்பரே அமைச்சராக உள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, தலித் மக்களின் முன்னேற்றத்தில் தி.மு.க. அக்கறை காட்ட வேண்டும் என்பது போல் அறிவுரை சொல்வதும், கனவு காண்பதாய்க் கதைவிடுவதும், கிழிந்துதொங்கும் அவரது முற்போக்கு முகமூடியையே நமக்கு அடையாளம் காட்டுகிறது.

பரிதிஇளம்வழுதியின் மீது நமக்கெல்லாம் இல்லாத பாசம், திடீரென்று அவருக்கு எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? இதுவரை பரிதியின் திறமையைப் பாராட்டி அவர் எத்தனை இடங்களில் எழுதியும் பேசியுமிருக்கிறார்? எந்தெந்த வகைகளில் ஸ்டாலின் மற்றும் பரிதியின் திறமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்? பொத்தாம் பொதுவில். போகிற போக்கில், ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டுப் போவதென்பது, எவ்வளவு உள்நோக்கமுடையது என்பதை நாம் உணரவேண்டும்.

தந்தை பெரியார் ஓர் இடத்தில் சொல்லுவார், வைதீகப் பார்ப்பனர்களைவிட லௌகீகப் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள் என்று!

-சுபவீ -

5 comments:

Anonymous said...

//இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.//
அதெல்லாம் வுடு கிழுமத்தூர். 1966-லே பரிதிக்கு மந்திரி பதவி தராம வெறுமே இதயத்துல இடம் கொடுத்ததாத்தானே சொன்னாரு மஞ்சத் துண்டு?

மஞ்ச மாக்கான்

Anonymous said...

//அதெல்லாம் வுடு கிழுமத்தூர். 1966-லே பரிதிக்கு மந்திரி பதவி தராம வெறுமே இதயத்துல இடம் கொடுத்ததாத்தானே சொன்னாரு மஞ்சத் துண்டு?
ஆகா மற்றுமொரு லௌகீகப் பார்ப்பனர்

maruthan said...

மகன் பேரனின் அலுவலகத்தை எரித்தது தான் பேரனை மந்திரி பதவியிலிருந்து நீக்கியதன் காரணம் என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்

Anonymous said...

//அண்மையில் கூட தன் பேரனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர்//
மகன் பேரனின் அலுவலகத்தை எரித்தது தான் பேரனை மந்திரி பதவியிலிருந்து நீக்கியதன் காரணம் என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்

Anonymous said...

Satyavani Muthu was sidelined after MK became chief minister.
She was never given the recognition she deserved after the death of Annadurai. Veerapandian tries to prove his loyalty to MK by writing like this. Even if Jnani has written something wrong or incorrect cant he be criticised without invoking
caste. Petty minds cant think beyond caste.