Monday, December 29, 2014

நெகிழ வைத்த திரைப்படங்கள் -4 The Boy in the Striped Pajamas


ஜெர்மனியை ஹிட்லர் ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் காலத்தில் நடக்கிற கதை.

The Boy in the Striped Pajamas (2008)




சீக்ரட் சர்வீசஸ் அல்லது சுருக்கமாக எஸ்.எஸ் என அழைக்கப் பட்ட ஹிட்லரின் நாட்ஜி ராணுவத்தில் கமாண்டராக இருக்கும் தன் தந்தையின் பணி உயர்வின் காரணமாக தன் தாய் , சகோதரி, வேலைக்காரி சகிதமாக  யூதர்களை இன ஒழிப்பு செய்யவென்றே உண்டாக்கப் பட்ட கான்ஸன்ட்ரேஷன் கேம்புகளுக்கு அருகிலேயே ராணுவம் ஒதுக்கித் தந்த ஒரு வீட்டில் குடியேறுகிறான் எட்டு வயது சிறுவன் (ப்ரூனோ). கேம்பில்  தன் வேலை என்னவென்று குடும்பத்தில் யாரும் அறிந்து விடாமல் ரகசியம் காக்கிறார் தந்தை,

கேம்பில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் போது ப்ரூனோ சும்மா சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் கேம்பில் இருக்கும் ஒரு யூதச் சிறுவனோடு (ஷ்யூல்ட்ஸ்)  யாருக்கும் தெரியாமலேயே நட்பு கொண்டு விடுகிறான். நடுவில் இரண்டு பேரையும் பிரித்து வைத்திருக்கும் மின் வேலியின் அர்த்தம் தெரியாமலேயே. தினசரி வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ப்ரூனோ வீட்டுக்குத் தெரியாமல் தின்பண்டங்கள் கொண்டு வந்து கொடுக்கிறான்.

இதனிடையே ப்ரூனோவின் தாய் தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு லெப்டினென்ட் மூலம் கேம்பில் இருந்து வரும் புகையும் அதன் துர் நாற்றம் குறித்தும் கேட்கப் போய் அங்கே நடைபெற்று வரும் படுகொலைகளை குறித்து தெரிந்து கொண்டு தன் கணவனோடு சண்டை பிடிக்கிறாள். இதை சொன்னதற்காக லெப்டினென்ட் போர் முனைக்கு அனுப்பப் படுகிறான். லெப்டினென்ட்டுக்கும் ப்ரூனோவின் அக்காவுக்கும் ஒரு ரகசிய காதல் வேறு ஓடுகிறது.

போர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் ப்ரூனோவின் தாத்தாவும் பாட்டியும் குண்டுவீச்சில் இறந்து விட குடும்பத்தோடு அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பிவிட முடிவு செய்கிறார் தந்தை. கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள் யூதச் சிறுவனின் தந்தை கேம்பில் காணாமல் போய்விட நானும் நாளை வந்து உன்னோடு தேடுகிறேன் என்று சொல்லும் ப்ரூனோ கிளம்பும் நாளில் கேம்புக்குள் யூதர்களின் உடை அணிந்துகொண்டு யூதச் சிறுவனின் தந்தையை கண்டு பிடிக்க உதவுவதற்க்காக கேம்புக்குள் செல்லும் இடத்தில் கூட்டத்தோடு கூட்டமாக விஷ வாயுக் குளியலில் மரணமடைந்துவிடுவதோடு படம் முடிகிறது.

ஜெர்மனியின் நாட்ஜிக்களுக்கு, யூதர்களின் மேல் இருந்த வெறுப்பை எந்த காட்சிப் படுத்துதலும் இன்றி வசனங்கள் மூலமே சொல்லியிருப்பது படத்தின் பெரும் பலம். சிறுவன் ப்ரூனோ பள்ளிக் கூடத்தில் இருந்து மகிழ்ச்சியோடு வெளிப்பட்டு நண்பர்களோடு ஓடி வரும் போது சடக்கென தன் வீட்டைக் கண்டதும் சோகமே உருப்பெற்று படக்கென முகம் சோர்வதாக இருக்கட்டும், புதிதாகப் போன இடத்தில் வீட்டு வேலை, தோட்ட வேலை  செய்யும் முன்னாள் டாக்டரான யூதக் கிழவர் பாவெலைப் பார்த்து வருத்தப் படுவதாக இருக்கட்டும் ,  கேம்பின் உள்ளே இருக்கும் ஷ்யூல்ட்ஸ்சை கண்டதும் சந்தோசப் படுவதாகட்டும் ப்ரூனோவாக நடித்திருக்கும் ஆஷா பட்டர்ஃபீல்டு அட்டகாசம் செய்கிறான்.

கேம்பில் இருக்கும் சிறுவன் ஷ்யூல்ட்ஸ் ஆக நடித்திருக்கும் பெல்லா ஃபெச்ட்ஸ்பம்க்கு   மிக அழுத்தமான பாத்திரம், எளிதில் உணர்வுகளைக் காட்டாத முகம் என்று ஒரு யூதச் சிறுவனாகவே மாறியிருக்கிறான் லெப்டினன்டால் முகத்தில் அடிபட்டு ப்ரூனோவை பார்க்காமலேயே தலை கவிழ்ந்து பேசும் இடங்கள் அற்புதமான நடிப்பு. உண்மையில் இந்த யூதச் சிறுவன் தான் படத்தின் கதாநாயகன்.

படம் முழுக்கவே மிகச் சில கதாபாத்திரங்களே என்றாலும் படத்தின் காட்சிகளும் வசனங்களும் இசையும் படத்தோடு நம்மை ஒன்ற வைக்கின்றன. ஜெர்மனியின் யூத வெறுப்பை முன்பே புரிந்து கொண்டு படம் பார்ப்பவர்களுக்கு படத்தின் சில இடங்கள் நுணுக்கமாக புரியும் உதாரணமாக கேம்பின் புகைக் கூண்டில் இருந்து புகை வரும் போது ஏன் துர் நாற்றம் வருகிறது என்று ப்ரூனோ தன் தந்தையிடம் கேட்கும் போதும் , துர் நாற்றம் குறித்து லெப்டினன்ட் ப்ரூனோவின் தாயிடம் சொல்லும் போதும் வரலாற்றின் காலகட்டம் தண்டியும் நாம்  ஒரு இன ஒழிப்பைப் பற்றி சிந்திக்கத் தொடங்கி விடுகிறோம்.

இரண்டு சிறுவர்களுக்குள் இருக்கும் அன்பும் நட்பும், வளர்ந்த மனிதர்களிடையே சமூகத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை எள்ளி நகையாடும் விதமாக குழந்தைகளின் இன்னொரு உலகத்தை நமக்குள் கொண்டு வருகிறது.

படம் முடிகையில் இரண்டு சிறுவர்களுமே கேம்பின் உள்ளே மாட்டிக் கொண்டு உயிர் விடப் போகும் நேரத்தில் கைகளை ஒன்று சேர்த்துக் கொள்கிற இடம் ஒரு கவிதை. கடைசியில் வழக்கமான சினிமாக்களில் காட்டுவது போல் இறந்தவர்களின் உடல்களைக் காட்டாமல் வரிசையாக தொங்கிக் கொண்டும் இறைந்தும் கிடக்கும் கோடிட்ட நீல நிற பைஜாமாக்களை காட்டியதற்காகவே, ஜான் பாயினின் நாவலை படமாக்கிய இயக்குனர் மார்க் ஹெர்மனுக்கு ஒரு பூங்கொத்து.

மேல்ஜாதிகளால் கீழ் ஜாதிகள் ஒடுக்கப் படுவதன் வலி உணர்ந்த, இனத்தின் பெயரால் கொத்துக் கொத்துக்களாக கொல்லப்பட்ட மனிதர்களை கண்டுணர்ந்த அதற்காக வருத்தப் படும் எல்லாருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்.

படம் குறித்த தகவல்களுக்கு 

முழு படத்தையும் காண 

2 comments:

tamilnews24x7 said...

இந்தப் படத்தை அறிமுகப்படுத்தியதற்காக... தங்களுக்கு ஒரு பூங்கொத்து தரலாம்...

bala said...

படம் பார்த்த உணர்வை தருகிறது .விமர்சனத்தை படித்தவுடன்.
வாழ்த்துக்கள்