Monday, December 01, 2014

பா.ஜ.க எனும் பாசிச நச்சு.

ஆர்.எஸ்.எஸ், பாஜக என்னும் பாசிஸ்டுகள் ஆட்சியில் அமரும் போதெல்லாம் இந்தியா என்ற துண்டுகளால் ஒருங்கமைக்கப் பட்ட தேசம் மத, சாதி விரோதங்களால் அழிவையும், நிலையற்ற தன்மையும் சந்தித்தே வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்றும் சிவ சேனா என்றும் பாஜக என்றும் பெயர்கள் மட்டும்தான் வேறு வேறு மற்றபடி இவர்களின் கொள்கை எல்லாம் இந்தியாவை ஒரு இந்துக்களின் நாடாக, பாகிஸ்தான் முஸ்லிம்களின் நாடாக ஆனது போல மத்திய கிழக்கு நாடுகளில் மதத்தின் பெயரால் துண்டாடப் பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வன்முறை வெறியாட்டங்களால் மக்கள் ஒரு அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது போல இந்தியாவையும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நிலையில் இருந்து ஒற்றுமை என்கிற பெயரால் வேற்றுமை விரோதங்களால் துண்டாடிவிட வேண்டும் என்பதே.

ஆர் எஸ் எஸ் காலத்திலேயே தொடங்கப் பட்ட இவர்களின் செயல் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களுக்குள் ஒற்றுமை எனும் ஒரே முழக்கத்தோடு திட்டம் போட்டு தங்கள் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற ஆரம்பித்த பின் முழு வீச்சில் இப்போது செயல் படுத்த தொடங்கி விட்டனர். பாபர் மசூதி இடிப்பு தொடங்கி சேது சமுத்திர திட்டத்தை முடக்கியது வரை, இவர்கள் மதத்தாலும் தேச நலனாலும் தங்களுக்கு, தங்கள் மதத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதையே இப்படி புதுப் புது திட்டங்களாலும் அறிக்கைகளாலும் மிரட்டல்களாலும் செயல் படுத்த துணிகின்றனர்.

சமஸ்கிருத தினிப்பு, பள்ளியில் சரஸ்வதி வணக்கம், எங்கே  சென்றாலும் ஹிந்தியில் உரையாற்றும் பிரதமர், என்று தங்களின் பாசிச கொள்கைகளை தினிக்க ஆரம்பித்து விட்டனர். பெரும்பான்மை இல்லாத காலங்களில் அடுத்தவர் தயவில் ஆட்சியை ஓட்டிய காலங்களில் கொஞ்சமாவது கூட்டணி கட்சிகளின் தயவு வேண்டும் என்பதற்காக கடிவாளம் இட்ட குதிரையாக இருந்த இவர்கள் இப்போது  மிருக பலத்தோடு எதிர்கட்சிகளே இல்லாத நிலையை அடைந்ததும் தங்கள் முகமூடிகளை எல்லாம் கழட்டி தூர வைத்துவிட்டு கோர முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டனர்.

ஆட்சியில் அமரும் முன்னர் வானளாவி மோடி புராணம் பாடிய ஊடகங்கள் இன்னும் மயக்கத்தில் இருந்து விடுபடவில்லை.  இதற்கெல்லாம் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதுதான் ஹெச்.ராஜா என்னும் பாஜக போர்வையில் பதுங்கிக் கொண்டு பகிரங்க மிரட்டல்களை கூட்டணிக் கட்சியின் தலைவர்களுக்கே விடுக்கும் அரசியல் ரவுடி. எந்த இன ஒழிப்புக்கு ஆதரவாக இருந்தது என்ற ஒரு காரணத்துக்காக ஒட்டு மொத்த தமிழகமும் திரண்டு நின்றதோ அதை ஒட்டு மொத்தமாக நடத்திய ராஜபக்‌ஷே மீண்டும் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்து சொல்லும் ஊடகங்களால் ஊதிப் பெருத்த ஊர்சுற்றி அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கும் மிஸ்டர் 56 அங்குல மோடி என்று தங்களின் காவி அடையாளத்தை காட்டத் தொடங்கி விட்டனர்.முன்னரே ஒரு முறை பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று ஹெச்.ராஜா கூறியபோதும் சரி இப்போது வைகோவுக்கு பகிரங்க மிரட்டல் விடும் போதும் சரி, பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மாறிப் போன சுப்பிரமணியன் ஸ்வாமி ஒட்டுமொத்த தமிழர்களையும் எலிகள் பொறுக்கிகள் என்று திட்டி வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக் கொண்டிருக்கும் போதும் சரி ஊடகங்களோ, எதிர்கட்சிகளோ அப்படி ஒன்றும் பெரிய எதிர் விணை ஆற்றிடவில்லை என்பதுதான் உண்மை. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஹெச்.ராஜா சு.ஸ்வாமியின் பேச்சுக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் அரசியல் நாகரீகம் குறித்தும் வைகோ ராமதாஸ் போன்றவர்கள் அடக்கமாக இருப்பது நல்லது என்று பாடம் எடுக்கிறார்.

முன்பே வைகோ, ராமதாஸ்  போன்றவர்களை சு.ஸ்வாமி கூட்டணி கட்சியென்றும் பாராமல் டிவிட்டரில் திட்டிய போதே தங்களின் கண்டனத்தை தெரிவித்திருந்தாலாவது கொஞ்சம் அடக்கி இருக்கலாம். ஆனால் இவர்கள் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவு இன்று ஹெச் ராஜா வைகோவுக்கு மிரட்டல் விடுப்பதும், ஸ்வாமி கூட்டணியை விட்டு அவர்களே வெளியேறி விடுவது நல்லது என்றும் கூறும் அளவுக்கு வளர்ந்து போய் இருக்கிறது.

பாசிசம் என்பது படுகொலைகளால் மட்டும் வளர்வதில்லை. மதத்தின் பெயரால் மட்டுமே மக்களை ஒன்று திரட்டி இனக் குழுக்களின் அரசியலை அதிகாரத்தை, அவர்களின் கைகளில் இருந்து பிடுங்கி ஒரு பெரும்பாண்மை மக்களின் கைய்யில் கொடுத்தால் அவர்களே தங்களின் அதிகாரங்களை நிறுவிக் கொண்டு சட்டத்தையும் மனித நேயத்தையும் கால்களில் போட்டு மிதிப்பார்கள் என்பதற்கு ஜெர்மனியின் ஹிட்லர், உகாண்டாவின் இடி அமீன், ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள், குஜராத்தில் மோடி, இலங்கையின் ராஜபக்‌ஷே என்று வரலாற்றின் அடுக்கு தோறும் சாட்சிகள் கொட்டிக் கிடக்கின்றன.

நாம்தான் வரலாற்றை அதன் மகிழ்வான பக்கங்களை மதிப்பெண்களுக்காக மட்டுமே படித்துவிட்டு மறந்தும் போகிறோமே? அதனால்தான் அம்பேத்கரும் பெரியாரும் சிங்காரவேலரும் வாழ்ந்த மண்ணில் காவிக் கொடியும் பறக்க அனுமதித்துவிட்டு இன்று அரசியல் மிரட்டல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேம்.

இந்த காவிக் களைகளை இப்போதே ஒழிக்கும் பணிகளை தொடங்காவிட்டால் இந்தியாவில் இருந்து எங்களை நாங்களே துண்டித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை குறைந்த பட்ச அரசியல், மத நல்லிணக்கம் விரும்பும் கட்சிகள் மக்களுக்கு தெரிவித்து காவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து தங்களின் செயல்பாட்டை தொடங்காவிட்டால் எதிர்காலத்தில் வரலாறு உங்களை மன்னிக்கப் போவதில்லை.

முடிவு நம் கையில்.
3 comments:

வரவனையான் said...

நச்!

Unknown said...

நன்று

Unknown said...

வரலாறு கட்சிகளை பார்ப்பது இருக்கட்டும் நம்மையும் பார்க்கிறது.. என்ன செய்ய ??