Wednesday, December 17, 2014

வினையூக்கி சிறுகதைகள்- ஆண்களின் மறைக்கப் படாத உலகம்.

செல்வகுமார் ராமச்சந்திரன் என்கிற செல்வகுமார் வினையூக்கிக்கும் எனக்கும் அத்தனை ஒன்றும் பூர்வஜென்ம பந்தம் இல்லை, இரண்டு பேரும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து கொஞ்சமாவது இந்த இணைய கடலில் ஒரு சிறு கல்லையாவது வீசி, சிற்றலைகளை உண்டாக்கிவிட முடியாதா என்ற பல ஆயிரம் பேர்களின் கனவுகளின் பிரதிநிதிகளாக எங்களை நாங்களே முன்னிறுத்திக் கொள்ள முயன்றதைத் தவிர.

சமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, பெரியார், திராவிடம் என்று கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இணைக்கப் பட்ட இணைய உலகம் எங்களுக்கானது என்று இருவரும், தனித் தனியே தங்களின் பாதையை வகுத்துக் கொண்டு இரண்டு பேருமே பத்தாண்டுகளில் என்ன என்னவோ செய்து தொலைத்திருக்கிறோம். அவரும் நானும் ஒரே பாதையில் பயணப் பட்டவர்கள் என்பதை தவிற அதிகம் நான் ப்ளாகுகளில் எல்லாம் உரையாடிக் கொண்டது கூடக் கிடையாது.

செல்வாவின் கதைகள் எல்லாம் கார்த்திக், அம்மு, அஞ்சலி பாப்பா என்கிற மூன்று பேருக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஒவ்வொரு கதையும் படிக்கும் போதும் நாம் கார்த்திக்கையும் அம்முவையும் வேறு வேறு கார்த்திக் அம்மு அஞ்சலிகளியும் பார்க்கிறோம். அது வெறோனிக்கா ஆகட்டும் இல்லை வேறெந்த ஐரோப்பிய பெண்ணாகட்டும் எல்லாமே அம்முதான். தனித் தனி சிறுகதைகளை எல்லாம் ஒரு நாவல் போலவே படிக்க முடிவதற்கு காரணம் இதுதான் வேறு வேறு ஆட்கள் பெயர்கள் மட்டும் ஒன்றே.

இடையிடையே சில விஞ்ஞானக் கதைகளும் உண்டு. போகிற போக்கில் அப்பாவி கணேசனை அத்தனை எளிதாக கடந்து செல்ல கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் வேண்டும், ஆனால் ஒட்டு மொத்த கதைகளையும் படிக்கையில் கார்த்திக் மேல் பொறாமையே வரும் அளவுக்கு திகட்டத் திகட்ட பெண்கள், காதல் , காதல். பிரிதல் என்ற ஒன்றைக்கூட வெகு எளிதாக கடந்து வந்த என் போன்ற ஆட்களுக்குள் இருக்கும் கார்த்திக்குகளை நிச்சயம் படிக்கிற எல்லோருக்கும் பிடிக்காமல் இருக்காது.

ஆண்கள் எல்லாம் உத்தமர்களாகவோ இல்லை கேடு கெட்ட பொறுக்கிகளாகவோ மட்டும் கதை செய்யத் தெரிந்த ஆட்களுக்கு நடுவே ஆண்களின் இன்னொரு உலகத்தை ஒவ்வொரு கதையிலும் ஜன்னல் ஜன்னலாக திறந்து கொண்டே போகிறார். சமூக நீதி பேசும் இடங்களில் எல்லாம் கிளிமூக்கு அரக்கனும் எட்டிப் பார்க்கிறார். விஞ்ஞானக் கதைகளில் வினையூக்கி எட்டிப் பார்க்கிறார். இப்படி ஆங்காங்கே கதாசிரியர் தன் முகத்தை காட்டிக் கொண்டே இருப்பதால் படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

நிறைய பயணங்களும் அதில் சந்திக்கும் பெண்களும் என்று சில இடங்கள் இழுவை போட்டாலும் ஐரோப்பிய அம்முகளுக்காகவே படிக்கத் தூண்டும் கதைகள் பக்கம் பக்கமாய் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் கடவுளை காணும் கதை இன்னொரு அன்பே சிவம்.

ஒவ்வொரு கதையுமே ஒரு குறும்படத்துக்குண்டான நிகழ்வுகளை கொண்டவை, யாராவது குறும்பட இயக்குனர் இதைப் படித்தால் செல்வாவிடம் முன் அனுமதி பெற்று படமாக்க முயலலாம்.

"தேவதைகளை பெற்றெடுத்தவுடன் மனைவிகள் பிசாசுகள் ஆகி விடுகின்றனர், தேவதைகளுக்காகவே பிசாசுகளை பொறுத்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது"

இது போல ஏகப்பட்ட சுவாரஸ்யம் மிகுந்த வரிகள் நூல் முழுதும் காணக் கிடைக்கிறது.

பிடிஎஃப் கோப்பாக முழு நூலையும் தரவிறக்கம் செய்ய
http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/No comments: