Tuesday, May 23, 2006

தி டாவின்சி கோடு திரைப்படமும் அரசியலும்





தி டாவின்சி கோடு திரைப்படமும் அரசியலும்


இந்த சினிமா ஏன் இன்று இத்தனை சர்ச்சைகளுக்கு ஆளாகிறது என்பது அல்ல இந்த பதிவின் நோக்கம். சினிமா குறித்த அரசியலின் தாக்கம் பற்றியே அலசவிரும்புகிறேன். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு திரைப்படம், காமசூத்ரா புகழ் தீபா மேத்தாவின் வாட்டர்- இது காசியில் படமாக்கப்பட முயலும் போது ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து பரிவார் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின, படப்பிடிப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அவரும் வேறு வழியின்றி சில சிரமங்களுடன் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு எடுத்து முடித்தார். ஆனால் இந்தியாவில் இன்னும் திரையிடப்படவில்லை. படம் வெளியாகி மேலை மற்றும் ஐரோப்பிய நாடுகளில் திரையிடப் படுகிறது. அதே போல் ஹேராம் ஆனால் அது எப்படியோ வெளியாகியது. மேலும் இதில் ஒரு கூத்தும் நடந்தேரியது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் காந்தியை தவராக சித்தரிப்பதாக கூறி படத்தை தடை செய்ய கோரினர் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே.

சினிமாவும் அரசியலும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பினைந்து கிடக்கும் இந்தியாவில் தான் இந்த நிலை இதே டாவின்சி கோட் திரைப்படம் மேலை நாடுகளில் வெளியாகி ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அங்கே எவறும் படத்தை வெளியிடவே கூடாது என தடைகோரவில்லை. இதுவே இந்தியாவில் மதகுருமார்கள் அரசை சந்தித்து படம் வெளியிட தடை கோரினர், பிறகு ஆட்சேபகரமாண சில பகுதிகளை வெட்டிய பிறகு அனுமதியளிக்கப்பட்டது. அவர்களாவது பரவாயில்லை அரசிடம் தான் முறையிட்டனர் ஆனால் இந்துத்துவ வாதிகளோ நேராக இயக்குனர்களைத்தான் தாக்குகின்றனர்.

இது அரசியல்வாதிகளை வேண்டுமானால் ஊடகங்களில் வைத்திருக்க உதவும். வெகுசன ஊடகம் என்பது அரசியல் வாதிகளையோ அல்லது மத சாதி அமைப்புக்களையோ சார்ந்ததாக இல்லை. அது எப்போதும் மக்களையே நம்பி இருக்கிறது, செய்திப்பதிப்புகள் வேண்டுமானால் மக்களிடையே ஒரு பெரிய குழப்பத்தையோ அல்லது எதிர்மறையான கருத்துக்களையோ உருவாக்கி விடும் என்று கூறலாம் ஆனால் சினிமா எனும் மீடியா மக்களிடையே எந்த வரவேற்பை பெரும் என்பது தெரிந்த விஷயமே. காரணம் மீடியாக்கள் பெரிதாக ஊதிப் பெருக்க வைத்த சில திரைப்படங்கள் வெற்றிபெறாமல் போனதுண்டு, அதே நேரம் மீடியாக்கள் படு மோசம் என விமர்சித்த திரைப்படங்கள் பெரு வெற்றியை பெற்றதும் உண்டு, இப்படி இருக்கையில் அரசியல் கட்சிகள் அதன் கொள்கைகளில் இருந்து மாறி இது எனக்கு ஒவ்வாது எனவே இது நீக்கப்பட வேண்டும் என்கின்றனர். இதே அரசியல் வாதிகளும் தலைவர்களும் சிலவேளை சிலவிஷயங்களுக்காக கைது செய்யப்படும் போது தங்களின் உரிமைக் குரல்வளை நெரிக்கப்படுவதாக கதறுகின்றனர். அவர்களும் அதே வேலையை செய்ததை மறந்து. ஒன்று செய்யலாம் தனிக்கை குழுவை தடைசெய்துவிட்டு ஒவ்வொரு கட்சி மற்றும் சாதி தலைவர்களையும் சந்தித்து படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்து அனுமதி கடிதம் வாங்கினால் போதும் என அறிவித்து விடலாம்.

அதுபோலவே விருமாண்டி மற்றும் தேவர் மகனை முன்வைத்து இன்றும் சில விமர்சணங்கள் காணக் கிடைக்கின்றன. என்னவோ தேவர் மகன் படம் வந்த பிறகுதான் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் பற்றி எறிவதுபோல் ஒரு மாயத்தோற்றத்தினை வலை நண்பர்களும் பதிவுசெய்கின்றனர். அதற்கு முன்பு அங்கே சாதிக்கலவரமே இல்லையா என்ன? அப்படி தேவர் மகன் படத்தை பார்த்துதான் வெட்டிக் கொல்(ள்)கிறார்கள் என்றால் அன்பே சிவம் படத்தை பார்த்தாவது திருந்தினால் என்ன? அரசியல் வாதிகளுக்கு மீடியாவில் இருக்கவேண்டும் ஆனால் அதே மீடியாவின் பெரியண்ணன் சினிமாவின் கருத்துக்களுக்கு தடை வேண்டும். இவர்களுக்கு இன்னும் ஒன்று மட்டும் தெரியவில்லை அது " எந்த மீடியாவையும் மக்கள் நம்புவதில்லை அப்படி நம்பினால் எந்த ஆளுங்கட்சியும் மறுமுறை தேர்தலில் நின்றால் டெப்பாசிட் கிடைக்காது"

சரி இந்தபதிவின் தலைப்புக்காவது தொடர்புடைய கட்டுரை விகடனில் உள்ளது அது இங்கே: (நன்றி ஜீனியர் விகடன் விகடன்.காம்)முன்று வருடங்களுக்கு முன்பு புத்தகமாக வந்தபோதே பெரும் சர்ச்சையைக் கிளப்பிய ‘தி டா வின்சி கோட்’ இப்போது சினிமாவாக வந்து மறுபடியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கிறிஸ்தவ திருச்சபைகளும் சுமார் 500 கிறிஸ்தவ அமைப்புகளும் எதிர்ப்பு காட்ட, படத்துக்கு தடை விழும் அளவுக்கு ஏக பரபரப்பு! படத்துக்குத் தடை என்பது உலகம் முழுக்கவே பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. தாய்லாந்தில் கடைசி பத்து நிமிடங்களை மட்டும் வெட்டினால் போதும் என்று திருச்சபை சொல்லியிருக்கிறது. அதற்கு சென்சார் ஒப்புக் கொண்ட போதும், தயாரிப்பாளர்கள் சம்மதிக்கவில்லை. அதனால் அங்கே இன்னமும் படம் திரையிடப்படவில்லை. அதேசமயம், எந்த வெட்டும் இல்லாமல் அனுமதித்திருக்கிறது சீனா.
படம், நாவல் இரண்டைப் பற்றிய சர்சைக்கும் அடிப்படை ஒன்றுதான். ஏசு கிறிஸ்து திருமணமானவர். அவருக்குக் குழந்தைகள் உண்டு. அவருடைய வாரிசுகள் இன்னமும் பிரான்ஸில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் அவர்களுடைய ரகசிய ஆதரவாளர்களையும் ஒழித்துக்கட்ட வாடிகன் திருச்சபை 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கதையின் சாராம்சம். ஏசுவுக்குப் பணிவிடை செய்த பாலியல் தொழிலாளியான மேரி மக்தலீன்தான் ஏசுவின் மனைவி என்கிறது கதை.

இந்த நாவல், கிறிஸ்துவையும் கிறிஸ்தவத்தையும் இழிவு செய்வதாக மூன்றாண்டுகளுக்கு முன்பு புத்தகம் வந்தபோது திருச்சபைகள் சொன்னபோதும், புத்தகம் இந்தியா உட்பட எந்த பெரிய நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. இதுவரை 44 மொழிகளில் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. ஆங்கிலத்தில் மட்டும் மொத்தம் இதுவரை ஆறு கோடி பிரதிகள் விற்றிருக் கின்றன.
இந்த நாவலை எழுதி யவர் டான் பிரவுன். Ôஎங்களுடைய புத்தகத்தின் அடிப்படையில்தான் இந்த நாவலை டான் பிரவுன்Õ எழுதினார் என்று அவர்மீது ‘கதைத் திருட்டு’ வழக்குத் தொடுத்தார்கள் இரண்டு எழுத்தாளர்கள். - தி ஹோலி பிளட் அண்ட் தி ஹோலி கிரெய்ல் என்ற அந்தப் புத்தகத்தை எழுதிய ரிச்சர்ட் லேய், மைக்கேல் பைகாண்ட் இருவரும் கிறிஸ்தவ மத சித்தாந்தத் துறையில் அறிஞர்கள். காப்பிரைட் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு, சென்ற மாதம் தரப்பட்டது. ‘இரு புத்தகங்களுக்கும் பல தகவல் அடிப்படைகள் ஒன்றானபோதும், டான் பிரவுன் திருடவில்லை’ என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்த சர்ச்சையால் மூன்று எழுத்தாளர்களுக்கும் லாபம். இரண்டு புத்தகங்களும் மறுபடியும் ஆயிரக்கணக்கில் விற்றன. இரண்டு விற்பனையிலும் லாபமடைந்த இன்னொருவர்& பதிப்பாளர். இரண்டுக்கும் ஒரே பதிப்பாளர்தான்!

டான் பிரவுனின் வெற்றி நாவலை சினிமா ஆக்கும் உரிமைக்காக அவருக்கு சோனி நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை 60 லட்சம் டாலர்கள் (சுமார் முப்பது கோடி ரூபாய்)).
Ôஎ பியூட்டிபுல் மைண்ட் படத்தை இயக்கிய ரான் ஹோவர்ட் இயக்கியிருக்கும் டா வின்சி கோட் படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் நடித்திருக்கிறார். கதையில் அவர் குறியீட்டு இயல் நிபுணர் ராபர்ட் லாங்டன் என்ற கேரக்டரில் வருகிறார். பிரான்ஸின் புகழ்பெற்ற ‘லூவே' என்ற அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் மர்மமாக இறந்ததையடுத்து, சில மர்மக் குறியீடுகளைத் துப்புத்துலக்க அழைக்கப்படுகிறார் ராபர்ட் லாங்டன். அங்கே அவர் சந்திக்கும் சங்கேத முடிச்சு அவிழ்ப்பு நிபுணி சோஷபி பாத்திரத்தில் ஆட் ரே டாவ்டாவ் நடித்திருக்கிறார். இருவரும் துப்புத் துலக்கும்போது ஏசு கிறிஸ்துவின் வாரிசுகள் பற்றிய மர்மங்கள் வெளிப்பட தொடங்குகின்றன. அதனால் இருவருக்கும் ஆபத்து. ஒரு மர்மப்பட தொனியில் சினிமா எடுக்கப்பட்டிருக்கிறது.

புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சியின் கலைப்படைப்புகளுக்குள் ஏசுவின் வாரிசுகள் பற்றிய ரகசிய சங்கேதக் குறிப்புகள் அடங்கியிருக்கின்றன என்பதுதான் டான் பிரவுன் கட்டியிருக்கும் கதை. ஏசுவின் வாரிசுகளை ஆதரிக்கும் ரகசியக் குழுவில் டா வின்சியும் உறுப்பினராம். யூதாஸால் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்பு தன் சீடர்களுடன் கடைசியாக ஏசு கிறிஸ்து உணவருந்திய காட்சியை டா வின்சி ஓவியமாக தீட்டியிருக்கிறார். அதில் ஏசுவுக்கு அருகே உட்கார்ந்திருப்பது சீடர் ஜான் அல்ல. அது மேரி மக்தலீன் என்பது டான் பிரவுனின் கருத்து. கடைசி விருந்தில் ஏசு பயன்படுத்திய கோப்பை, கிறிஸ்தவர்கள் மத்தியில் புனிதமாகக் கருதப்படுகிறது. அதில் கடவுளின் ரத்தம் இருப்பதாகக் கருதப்படுகிறது. டா வின்சியின் ஓவியத்தில் கோப்பையே கிடையாது. காரணம், கோப்பை என்பது ஒரு குறியீடுதான். ஏசுவின் ரத்தத்தைத் தன் வயிற்றில் உள்ள குழந்தை வடிவத்தில் தனக்குள் வைத்திருக்கும் மேரி மக்தலீன்தான் அந்தக் கோப்பை என்பது டான் பிரவுனின் வியாக்யானம்.
டா வின்சியின் புகழ்பெற்ற மோன லிசா ஓவியமும் படத்தில் வருகிறது. மோன லிசா பெண்ணே அல்ல. டா வின்சி தன்னைத்தானே ஓவியமாக தீட்டிக் கொண்டிருக்கிறார் என்பது டான் பிரவுனின் இன்னொரு வியாக்யானம்.
நாவலாகப் படிக்கும்போது சுவாரஸ்யமாக இருந்த கதை, சினிமாவாக எப்படி இருக்கும்? இந்த வாரம் நடந்த சர்வதேசப் பத்திரிகையாளர் பிரிவியூவுக்குப் பின் பல பத்திரிகையாளர்கள், படம் செம போர் என்று சொல்லி விட்டார்கள். மர்மப் படத் துக்கு சரிப்பட்டுவராத விதத்தில் வளவள என்று நிறைய பேச்சு, சாதாரண பார்வையாளர்களுக்கு விளங்காத கிறிஸ்தவ மதக் கோட் பாடுகள்-& குறியீடுகள், டாம் ஹாங்க்ஸின் உணர்ச்சியற்ற நடிப்பு எல்லாம் சேர்ந்து ஒரே போர் என்று சொல்லப்பட்டுள்ளது.
எதிர்ப்பாளர்களின் சர்ச்சையை மீறி நாவல் பெரும் வெற்றியடைந்தது போல, விமர்சகர்களின் கருத்தை மீறி படமும் வெற்றி பெறுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.மதம், கடவுள் தொடர்பான விஷயங்களில் ஒரு படைப்பாளிக்கு எந்த அளவுக்குக் கற்பனைச் சுதந்திரம் அனுமதிக்கப்படும் என்பது எல்லா சமூகங்களிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் விவாதமாகிறது. அதில் இன்னொரு மைல் கல்... டா வின்சி கோட்.
இந்தியாவைப் பொறுத்தவரை படத்தைப் பார்த்துவிட்டுத் தானே முடிவு செய்யப் போவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி அறிவித்தார். இதற்கு முன் அமீர்கானின் ரங் தே பசந்தி படம் பற்றியும் சர்ச்சை வந்தபோது தானே ஐந்து முறை படத்தைப் பார்த்துவிட்டு அனுமதித்ததாக சொல்லியிருக்கும் தாஸ் முன்ஷி, தற்போது தி டா வின்சி கோட்’ படத்தைப் பார்த்திருக்கிறார். ஆரம் பத்தில் கடுமையாக எதிர்ப்புக் காட்டிய கிறிஸ்தவ அமைப்புகளும், ஆட்சேபகரமான காட்சிகளை வெட்டிவிட்டுப் படத்தைத் திரையிட லாம் என்று இறங்கிவர, ஏ சர்டிபிகேட்டுடன் படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

(நன்றி ஜீனியர் விகடன், விகடன்.காம்)

1 comment:

Anonymous said...

இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம் படத்தினை வெளியிட்டதுஇந்துத்துவம் இல்லை. அமெரி்க்க தூதரகத்தினை தற்போது வரை தாக்கி கொண்டிருக்கும் கூட்டமும் இந்துத்துவம் இல்லை.

நான்கு பேரை கொன்று வெறிதீ்ர்த்துக் கொல்லும் கூட்டத்திற்கு எதிராக பேனாபிடிக்க துணியுமாஉங்கள் கைகள்.